தொலைபேசி மணி ஒலித்தது.
எடுத்தேன்.
“ஹலோ!சென்னை பித்தன் பேசுகிறேன்”
மறுமுனையிலிருந்து குரல்”ஹலோ!நான் ஏபிசி ஃபில்ம்ஸிலிருந்து மாக்கான் பேசுகிறேன்.நான் தயாரிப்பாளர்.நம்ம டைரக்டர் உங்க “அங்கதன் காத்திருக்கிறான்” படிச்சுட்டு ,அதை டெவலப் பண்ணி ஒரு நல்ல திரைப் படமாக்கலாம்னு நினைக்கிறார்.பழி வாங்கும் மெயின் லைனுடன்,காதல்,சென்டிமெண்ட்,சண்டை எல்லாம் சேர்த்து ஒரு ஸ்க்ரீன்ப்ளே அவுட்லைன் ரெடி பண்ணி நாளை மாலை 4 மணிக்கு எங்க ஆஃபீசுக்கு வாங்க.முடிச்சுடலாம்.”
“சரி” சொல்லி விட்டுத் தொலை பேசியை வைத்தேன்.தலைகால் புரியவில்லை.நமக்கு இப்படி ஒரு ஆஃபரா? இப்பவே தொடங்கிடலாம்.
தனியாக உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன்.5 மணி நேர வேதனைக்குப் பின், பிறந்தது ஒரு அவுட்லைன்!
மறுநாள் போனேன்.மாக்கான்,இயக்குனர் பள்ளம் மண்டு ,இரண்டு உதவியாளர்கள் இருந்தனர்.
நேரத்தை வீணாக்காமல் தொடங்கினேன்.
//ஒரு கிராமம்.அங்கு கோவில் திரு விழா.பெண்கள் பொங்கல் வைக்கிறார்கள். குலவையிடுகிறார்கள்.ஆட்டம் ஆரம்பம்.ஒரு வாலிபன் பாடுகிறான் அய்யனார் சாமி வந்து எங்களைக் காப்பாத்து நீ” என்று,தொகையறாவாக”.
இப்போ ஹீரோ எண்ட்ரி.”நான் ஜெயிக்கப் பிறந்தவண்டா ”என்று பாடியபடி.
பாட்டு முடியும்போது சில ரவுடிகள் வந்து கலாட்டா செய்ய,ஹீரோ எல்லாரையும் உதைத்து அனுப்புகிறார்.
கோவிலில் கிராமத் தலைவனான சித்தப்பாவுக்கு முதல் மரியாதை நடக்க,ஹீரோ மனம் புழுங்குகிறார்.
வீட்டுக்குத் திரும்பிய பின் அம்மாவிடம் பொருமுகிறான்.நான் நடந்ததை யெல்லாம் மறக்கவில்லை. என்று சொல்ல ஃப்ளாஷ் பேக்கில் அவன் சிறுவனாயிருந்தபோது,ஒரு நகர அரசியல்வாதி துணையுடன் சித்தப்பா அவன் தந்தையைக்கொன்று தலைவைனான காட்சி மனதில் விரிகிறது.
இது முடிந்ததும்,ஹீரோவுக்கு சென்னை அப்போலோ மருத்துவ மனையிலிருந்து பணி நியமன உத்தரவு வருகிறது.
ஆம் .ஹீரோ ஒரு டாக்டர்.லண்டனில் போய்ப் படித்தவர்.
அவர் அம்மா முறுக்கு சுட்டு விற்று பணம் சம்பாதித்து அவரைப் படிக்க வைத்தார்.ஹீரோவும் இந்தியாவிலேயும்,பின் லண்டனிலும் பகுதி நேர ஊழியம் செய்து சம்பாதித்தார்---(இதுவும் ஃப்ளாஷ் பேக்.)
லண்டனில் ஒரு சக தமிழ் மாணவியுடன் காதல் ஏற்படுகிறது.
(லண்டன் பாரிஸ்,ஸ்விட்சர்லாந்து இங்கெல்லாம் டூயட் பாட்டு).எல்லாம் ஃப்ளாஷ்பேக்.
சென்னை செல்லும்முன் சித்தப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், ஹீரோ போய்ப் பார்த்து ஒரு ஊசியும் போடுகிறான்.
பின் சென்னைப் பயணம்.அங்கு காதலி கொடுத்த விலாசத்தில் போய்ப் பார்த்தால் அவள் அப்பாதான் ஹீரோவின் தந்தையைக் கொன்றவர். காதலா?கடமையா?
(இங்கே ஒரு பாட்டு வச்சிக்கலாம்)
ஹீரோ ஒரு முடிவுடன் காதலைத் தொடர்கிறான்.
ஒரு முறை பீச்சில் காதலியுடன் இருக்கும்போது,ரவுடிகளுடன் ஒரு சண்டை!
ஒரு சமயம் காதலி அவள் அப்பா இருவருக்கும் டெங்கு வந்து விட,ஹீரோ வந்து ஊசி போடுகிறான்.
இதற்கிடையில் சித்தப்பா மாரடைப்பால் மரணம் என்று செய்தி வர ஹீரோ ஊருக்குப் போகிறார்.அங்கு அவர் தலைவராகிறார். இனிக் கிராமத்திலேயே பணி புரிவேன் எனச் சொல்லிச் சென்னை திரும்புகிறார்,வேலையை ராஜினாமா செய்ய.
சென்னைக்கு வந்து பணியிலிருந்து விலகக் கடிதம் கொடுத்துச் சில நாட்கள் இருக்கும்போது காதலியின் தந்தை மாரடைப்பால் இறந்து விடுகிறார். காதலியைத் தேற்றி ஊருக்குச் சென்று அன்னையிடம் பேசி விட்டு வருவதாகச் சொல்லிப் போய்,அன்னையைக் கண்டு.தான் கண்டுபிடித்த மருந்தால் இருவரையும் கொன்ற விஷயத்தைச் சொல்கிறார்அந்த மருந்து மெல்ல வேலை செய்து ஒரு மாதம் கழித்து மாரடைப்பை ஏற்படுத்தும், எதுவும் கண்டு பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார்.
அவரைத்தேடி வந்த காதலி அதைக் கேட்டு விட்டு,அவரைக் கொலை காரன் என்று சொல்லி அழ.ஹீரோவின் தாய் அவளிடம் பழைய நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லிச் சமாதானப்படுத்தி இருவர் கைகளையும் இணைத்து வைக்கிறார்!
டாக்டர் தொழிலை பயன்படுத்தி இரு கொலைகள் செய்த தான் இனி அத் தொழிலைச் செய்யப்போவதில்லை என்றும்,விவசாயத்தில் ஈடுபடப் போவதாகவும் ஹீரோ சொல்கிறார்.
முடிவில் அவர் தந்தை பெயரில் ஒரு மருத்துவ மனை நிறுவி அதை ஹீரோயின் கவனித்துக் கொண்டிருக்க,ஹீரோ டிராக்டர் ஒட்டி வயலை உழுதிடும் காட்சியோடு படம் முடிகிறது.
சுபம்----//
எல்லோரும் பாராட்டுகிறார்கள்.
“படத்துக்கு டைட்டில் “அங்கதன் F.R.C.S” என்று வைக்கலாம்” நான்.
அதுவும் பிடித்துப் போகிறது.
”பதிவர்கள் கவிதை வீதிசௌந்தரையும்,அம்பாளடியாளையும் பாட்டெழுதச் சொல்லலாம்”நான்.
எந்த ரோல் யார் யார் என்பதும் முடிவாகிறது.
ஹீரோயின் த்ரிஷா!(செங்கோவி மன்னிக்க)ஹீரோ?
இயக்குனர் பள்ளம் சொல்கிறார்” யோசிக்கலாம், அஜீத் அல்லது விஜய்--யார்?”
”அதுதான் கேள்வி!!”