தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 31, 2015

சந்திப்பும்,பிரிவும்!




தயங்கி நிற்கின்றாய் அங்கே

இருவருக்கும் தெரியும் நம் பிரிவு நிச்சயம் என்று

எஞ்சி நிற்கப் போகின்றவை உன் நினைவுகள் மட்டுமே!

எத்தனை உணர்ச்சிகளின் கலவை அந்த நாட்கள்

உற்சாகமாய்ச் சில,உயிரற்றவையாய் சில

இன்பத்தின் எல்லையைத் தொட்டவை சில

துன்பத்தில் அழுந்தித் துவண்டவை சில

ஆறுதல் அளித்தவை சில

ஆதரவற்றுத் தவித்தவை சில

இலாப நட்டக் கணக்குப் பார்த்தால்

இருப்பு என்னவோ பூச்சியம்தான்!

போ!

அடுத்தவள் உள் நுழையக்காத்திருக்கிறாள்

வரட்டும் அவள்.

என்ன வெல்லாம் சுமந்து வருவாளோ அவள்?

எதிர்பார்ப்பதுதானே என்னால் முடியும்?!

பழையன கழிதலும் 

புதியன புகுதலும்

நிகழ்வுதுதானே !

ஆனால் 

உன் சந்திப்பும் பிரிவும்

என் வயதைக் கூட்டி விட்டனவே! 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!



                                              வருக 2016



புதன், டிசம்பர் 30, 2015

உணவும் உணவு சார்ந்த இடமும்- அடையாரில் ஒரு புதிய விலாசம்!



வாடா!ஓட்டலுக்குப் போய் டிஃபன் சாப்பிட்டு விட்டு வரலாம்

போடா! திரும்பத் திரும்ப அதே மூன்று,நான்கு ஓட்டல்-வசந்த பவன், ஸ்ரீபவன் ,தம்மாத் தூண்டு லக்ஷ்மிசாகர், சங்கீதா;இதை விட்டா டிஃபன் சாப்பிட ,ஏன் சாப்பாட்டுக்குக் கூட நல்ல ஓட்டல் இருக்கா இந்த அடையாரில்!

மாறி விட்டது இந்நிலை.

இன்று முதல் சுவையான  சைவ உணவுக்கு ஒரு புதிய விலாசம் கிடைத்து விட்டது 

ஆம் விலாசம்

கிருஷ்ண விலாசம்!



இன்று கோலாகல ஆரம்பம்

ஆனால் ஏற்கனவே நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில்  ஒரு கிளை இயங்கிக் கொண்டிருக்கிறது

உங்களில் பலர் அங்கு சாப்பிட்டிருக்கக் கூடும்;

எனவே சுவை பற்றி நான் சொல்வது தேவையில்லை என எண்ணுகிறேன்.

விலை சிறிது அதிகம்தான்.






அவர்களின் பிரபல சிந்தாமணி ரவா இட்லி ரூ.    75
                                மசாலா தோசை                155
                                ஃபில்டர் காஃபி                 75
வரிகள் தனி!

அடையார் கிளையின் பொறுப்பாளராக இருக்கும் திலிப்பைச் சந்தித்துப் பேசினேன்.

அடிக்கடி வாருங்கள் என்றார்.

சரிதான்!

இந்த ஓய்வூதியக்கரனுக்கு கட்டுப்படியாகுமா?

பாக்கெட் மட்டுமல்ல,வயிறும்தான்!

டிஸ்கி:நான் மாலை 5 மணிக்குப் போனேன்;மாலை உணவு எதுவும் இல்லை. காலை,மதிய உணவுகள் ஓடியதாகவும்,இனி 6.30க்கு மேல் இரவு உணவு என்றும் சொன்னார்!   அப்படியானால் படங்கள்?....   நான் சாப்பிட நினைத்தவை!அவர்கள் இணையயப் பக்கத்திலிருந்து! 

ஒட்டலை அடுத்து தெரு,அதை அடுத்து புஹாரிஸ்!

உணவு சமத்துவம்!


கண்டிப்பாக இது ஒரு விளம்பரம் அல்ல!இன்றைக்கு ஏதாவது எழுத வேண்டுமே!



செவ்வாய், டிசம்பர் 29, 2015

நான் மகான் அல்ல!

(நானும் ரவுடிதான் தொடர்ச்சி....)


அம்மன் கோவில் விபூதி குங்குமத்தை இட்டுக் கொண்டு கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுத் தூங்க முயற்சித்தான். தான் செய்த பாவங்களை கழுவ ஒரே மார்க்கம் கஷ்டப் படும் மக்களுக்கு உதவி செய்ய பணம் சேர்த்து  தன்னை,தான தர்மங்களில் ஈடுபடுத்திக் கொள்வது தான் என்று தீர்மானித்தான். நள்ளிரவுக்குப் பிறகு தூக்கம் கண்களைத் தழுவியது.

மறுநாளே நீதிபதி மாரியிடம் மீதி இருந்த ரூபாயை முதலாகப் போட்டு மாரியை தொழில் செய்யத் தூண்டினார். கணக்கு வழக்குகளை பார்க்க மற்றும் மாரிக்கு சரளமாக எழுதப்படிக்க, இவற்றை கற்பிக்க ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியரை மாதம்  500 ரூபாய்  சம்பளத்தில் நியமித்தார்.

சமயபுரம் மாரியம்மன் தன் ஊர் மாரி மீது  கருணை மும்மாரி பொழிந்தாள்.உறவினர் அவனை மதிக்கத் தொடங்கினார். விரைவில் கல்யாணம் ஆகிவிடும். தினமும் தீபம் ஏற்றி மலர் வைத்து சமயயுரம் மாரியம்மன் ,தாய் தந்தையரை வணங்குவான்.



”நானும் ரௌடி தான்என்று உள்ளமுருகி மன்னிப்பு கேட்பான்.

(தொடரின் தலைப்பு வந்து விட்டதா?-செ.பி.)

இன்ஸ்பெக்டர் ராஜவேலுவின் வரவு சாதாரணமானது அல்ல. மீண்டும் மாரியான ரிஷி, தற்சமயம் போலீஸ் வட்டத்தில் கண்காணிப்பதற்கு உள்ளாகியுள்ள ஒரு நபர். சாட்சி களே இல்லாத குற்றத் தைச்  செய்த ஒருவனை, அளவில்லாத மன அழுத்தத்தை கொடுத்து, உண்மையை அவன்   வாயி லிருந்தே வரவழைப்பது தானே ராஜவேலுவிற்கு மேலதிகாரிகள் இட்ட பணி. அவர் அதை எப்படி கொண்டு செல்வார்?

மாரி ராஜவேலு உறவு வினோதமானது. ராஜவேலு பாயடியில் புகுந்தால், கோலத் திற்கடியில் சென்று ஒளிந்து கொள்ளும் திறமை படைத்தவன் மாரி தற்பொழுது மாரியின் நம்பிக்கை உச்சியில் உள்ளது.

மாரிக்கு சமயபுரத்தாள் அருள் உண்டு. நீதிதேவனின் துணை உண்டு. ராஜவேலுவிற்கு மாரியின் மீது துளிகூட சந்தேகம் எழ எந்தவிதமான சாட்சிகளும் இல்லை. வங்கியின் கணக்கில் ஐம்ப தாயிரம் ரூபாய் ரொக்கம் போட்டது ஒரு பெரிய விஷயமல்ல. துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று இலட்ச இலட்சமாக வங்கியில் ரெமிட் செய்பவர் பலர், திருச்சியை சுற்றி வாழ்ந்தனர். அவர்களோடு ஒப்பிடும்போது மாரியின் முதலீடு ஒரு ஜஜூபி. வங்கியிலும் மாரியை சந்தேகிக் கவில்லை. அவன் முன்னேறுவது குறித்துப் பொதுவாக சந்தோஷப்படுபவர்களே அதிகம்.

மாரியின் முக்கியமான பிளஸ் பாயிண்ட் ,போலீஸ் பதிவுகளில் அவன் பெயர் இதுவரை ஏறியதில்லை சட்ட ரீதியில் அவன் ஒரு நல்ல பிரஜை. நீதி நின்று கொல்லும் என்பது உண்மையெனில் மாரி மாட்டிக்கொள்ளக்கூடும். இப்போது மாரிக்கு நல்லநேரம்.

எதிர்காலம் மாரியை என்ன பண்ணுமோ?

அதுவரை மாரி சந்தோஷமாக இருந்து விட்டு போகட்டுமே?

ஆக்கம் பார்த்தசாரதி

(முடிவா?தொடக்கமா?)

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

விடுமுறை,சிரிமுறை!

ஓர் ஊரில் ஒரு புதிய மருத்துவர் தொழில் தொடங்கினார்.

தன்னால் குணமாக்க முடியவில்லை எனில் 1000 உரூபாய் தருவதாகவும்,குணமானால் தனது கட்டணம் 500 என்றும் விளம்பரம் செய்தார்.

அவரை ஏமாற்ற நினைத்த ஒரு வழக்கறிஞர் அவரிடம் வந்தார்

எனக்கு சுவையே தெரிவதில்லை என்றார்.

மருத்துவர் அவரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டார்.

தாதியிடம் மருந்து  எண் 210 எடுத்து வந்து இவர் நாவில் தடவு என்றார்

அவள் வந்து எதையோ தடவினாள்

உடனே வக்கீல் கேட்டார்”என்ன இது மருந்து என்று சொல்லி மண்ணெண்ணெயைத் தடவுகிறீர்கள்? ”


உடன் மருத்துவர்”ஆகா! உங்ககளுக்கு சுவை வந்து விட்டது 500 கொடுங்கள்” என்று வாங்கிக் கொண்டார்.

எரிச்சலுடன் திரும்பிய வக்கீல் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய வந்தார்”எனக்கு நினைவாற்றலே இல்லை;எல்லாம் மறந்து போய் விடுகிறது”என்றார்

மருத்துவர் தாதியிடம்”மருந்து  எண்.169 ஐ அவர் நாவில் தடவு என்றார்”


தடவியதும் வக்கீல்  கோபமாகக் கேட்டார்”என்ன 210உம் 169உம் ஒன்றாகவே இருக்கின்றனவே?”

“ஆகா!உங்கள் நினைவாற்றல் திரும்பிவிட்டது பார்த்தீர்களா?எடுங்கள் 500 ”என்றார்!

வழக்கறிஞர் தலை குனிந்தவாறு திரும்பினார்.

(நன்பர் பார்த்தசாரதி சொன்ன ஜோக்!)






சனி, டிசம்பர் 26, 2015

ஆருத்ரா தரிசனம்.





மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக் கப்படும்,சிவனுக்கு உகந்த நாள்.

பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள். “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர் களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை.

அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

அன்று,சிதம்பரத்தில் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் செய்யப் படும் (கேட்டதுதான்.பார்த்ததில்லை)

எங்கள் வீடுகளில் செய்யப்படும் களியும் ஏழு கறிக்கூட்டும் மிகவும் சுவையானவை. ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது. இனிப்பான களியையும், உப்பு,காரம் நிறைந்த கூட்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது –சுகம்!

செய்முறை தெரிய வேண்டுமா?ஜெயஸ்ரீயைத் தவிர வேறு யாரைக் கேட்க முடியும்?

இன்று திருவாதிரை.தில்லை நடராஜரை வணங்கி எல்லா நலமும் பெறுவோம்.

(மீள்பதிவு)


டிஸ்கி:இந்த ஆண்டு எங்கள் வீட்டில் எந்தப் பண்டிகையும் கிடையாது;வழக்கமாகக் கொடுக்கும் எதிர் வீட்டுக்காரர்களும்  மாற்றலில் போய் விட்டார்கள்;எனவே களி கூட்டு கிடையாது!

வெள்ளி, டிசம்பர் 25, 2015

எங்கே நிம்மதி?

நானும் ரவுடிதான் தொடர்ச்சி( ஆக்கம் பார்த்தசாரதி)



இந்தத் தருணத்தில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேலு வீட்டின் உள்ளே நுழைந்தார். மாரிக்கு தூக்கி வாரிப் போட்டது.

ரொம்ப வருஷமாகப் பூட்டியிருந்த வீட்டிலே மேளச் சத்தம் கேட்கிறதே என்ற வியப்பி்ல் உளளே நுழைந்தேன்என்றார்.

நீதிபதி விவரத்தைச் சொன்னவுடன் மாரியைப் பாராட்டி விட்டு, “உங்கப்பா தான் எனக்கு தமிழ் வாத்தியார். சின்ன வயதில் அவர் விபத்தில் இறந்த போது கண்ணீர் விட்டு அழுதேன்.மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் என்ற குறளை நாலாவது வகுப்பில் அவர் தான் எனக்குக் கற்பித்தார்.  அந்தக் குறளைமெய்ப்பிக்கும் வகையில் இந்த இல்லத்தில் வாழ்ந்து அவர் புகழை நிலைநாட்டுஎந்த உதவியும் செய்யக் காத்திருப்பதாகச் சொல்லி விடை பெற்றார். மாரி சுய நினைவிற்கு வந்தான்.

விருந்தினர் ஆசி கூறி விடை பெற்றனர். நீதிபதயும் மாரியை மனதார வாழ்த்தி ஆசிகளை அள்ளி வழங்கினார்.

அன்று மாலை ஐந்து மணி அளவில் மாரி சொந்த வீட்டில் தன் வாழ்க்கையை தொடங் கினான். இறந்த காலம் சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை. எதிர்காலமோ புதிராக இருந்தது. அதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டான்.

சிறிது இளைப்பாறி, பின் நன்றாக குளித்துவிட்டு தூய்மையான மனதுடன் தன் தாய் தந்தையரை பிரிந்த பிறகு முதன் முதலாக சமயபுரத்தாளை தரிசிக்கச் சென்றான்.

சுமார் 2 மணி நேரம் தனக்குத் தெரிந்த படி ஒர் அமைதியான இடத்தை தெரிவு செய்து தியானத் தில் ஆழ்ந்தான். தன் வாழ்க்கையில் தற்சமயம் நடக்கும் அதிசயங்கள் அவனை வியப்பில் ஆழ்த்தின.  தாய் தந்தையின்  நினைவுகள் அவனை முழுவதும் ஆட் கொண் டன. இரவு சுமார் 07.30 மணிக்கு கோவிலில் விநியோகிக்கப்பட்ட பிரசாதங்களை வயிறார உண்டு பின் கோவில் தர்ம கர்த்தாவை சந்தித்து அடுத்த வெள்ளியன்று அன்ன தானத்திற்காக தாய் தந்தையர் பெயரில் ஒரு சீட்டை ரூ.2.000/- ரூபாய் செலுத்தி பெற்றுக்  கொண்டான். அழகான சமயபுரம் மாரியம்மன் வர்ணப்படம் அவனுக்கு வழங்கப்பட்டது. அதுவும் பூஜை அறையை அலங்கரிக்கப் போகிறது. மனதில் உள்ள சுமை சற்று குறைந்தது.

சுமார் 9 மணிக்கு தூங்கப் போனான். தூக்கம் வராமல் யோசனையில் ஆழ்ந்தான்.தான் கொண்டு வந்த ஒரு லட்சம் ரூபாயை கங்காராம் வாங்கி துரிதமாக பட்டுவாடா செய்து முடித்தது அவனை சிந்திக்கவைத்தது.இனிமேல் எங்களை சந்திக்க முயற்சிக்காதே, நாங்கள் உடனடியாக வேறு ஊர் போகப் போகிறோம். எங்களை முழுவதுமாக மறந்து விடு. உடனே டெல்லியை விட்டு போய்விடு. எங்களுடன் எடுத்த போட்டோக்கள் எதுவாக இருந்தாலும் உடனே கொளுத்திவிடுஎன்று கங்காராம் அன்று பரிதவித்ததை நினைத்து இன்று பயந்தான்.

நல்ல வேளை, முஸ்லீம் பெரியவரும் உடனே கணக்கை முடித்து அனுப்பிவிட்டார். அவர் 20 ஆயிரம் கொடுத்தது. இன்னும் அவனுக்கு திகைப்பாகவே இருந்தது.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?

பாங்கில் கீழே கிடந்த பணத்தை அபேஸ் பண்ணியது அவனை மிகவும் வருத்தியது. இதைச் செய்யாமல் வீட்டை மீட்டிருந்தால் நன்றாக இருக்குமே என்று கலங்கினான். ஒரு இலட்சம் ரொக்கம் காணாமல், பேங்கில் உள்ளவர்கள் எவ்வளவு அவஸ்தைப் பட்டார் களோ என்ற திக்கு முக்காடி போனான்.

அன்று போலீஸ் வந்தது. தன்னை கைது செய்யத்தான் என நினைத்து வெலவெலத்துத் தான்  போனான்.  வங்கியில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வந்திருக்கக் கூடாது என்று மனமுருகி பிரார்த்தித்தான்.

பண்ணுவதெல்லாம் பண்ணிவிட்டு பிரார்த்தனை செய்வதில் என்று பயன் என்பதையும் உணர்ந்தான். குற்ற உணர்வு தான் கூடியது. பாங்கில் கிடைத்த பணத்தை பற்றி எந்தத் தருணத்திலும் யாரிடமும் மூச்சுவிடக்கூடாது என்று மனதை திடப்படுத்திக் கொண்டான்.

(தொடரும்)

டிஸ்கி:ஆய்வாளர் ராஜவேலுவுக்கு ஏதோ சந்தேகம் வந்திருக்க  வேண்டும்.இனித் தொடர்ந்து வரலாம்  ஞான ஒளி மேஜர் மாதிரி;ஏழை படும்பாடு ஜாவர் மாதிரி!