தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

மன நிறைவுடன் விடை பெறுகிறேன்!


 
வாழ்க்கையில் சில நேரங்களில் சில தவிர்க்க முடியாத முடிவுகள் எடுக்க வேண்டியதாகிறது.

அலகாபாத்தில் நான் பணி புரிந்து வந்த நேரத்தில் ,அக்டோபர் 2000 இல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விடலாம் என அந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே முடிவு செய்து ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டேன். அதற்குக் காரணம் பணியில் ஏற்பட்ட சலிப்போ வெறுப்போ அல்ல.நான் எப்போதுமே என் வேலையை நேசித்தே வந்தேன்.பணியில் மன நிறைவுடன் தான் இருந்தேன். ஆனால் வட இந்தியாவின் கடுங்குளிர் என் அன்னைக்கு  ஒத்துக் கொள்ளவில்லை. உறவுகளைப் பிரிந்து தனிமையில் அங்கு இருப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது.எனவே பணி ஓய்வு என முடிவெடுத்தேன். என் நல்லூழ்,நான் அதைச் செயல் படுத்தும் முன்னரே,வங்கியில் ஒரு சிறப்பான விருப்ப ஓய்வுத்திட்டம் வரப்போகிறது என்ற தகவல் கிடைத்து விட்டது.எனவே அத்திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெற்று,மே 2001 இல் இனிய சென்னைக்குத் திரும்பினேன்.மன நிறைவுடன் தான்   ஓய்வு பெற்றேன் .நான் செய்ய எண்ணிய பல செயல்களை அதன் பின்தான் என்னால் செய்ய முடிந்தது.

அது போல் ஒரு கால கட்டம் இப்போது.ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்.இப்போதும் மிகுந்த மனநிறைவுடன் ஒரு முடிவு எடுத்துள்ளேன்.என் பதிவுலக வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான  ஒரு நாள் நேற்று.வெற்றிகரமாக நடந்து முடிந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததை நான் மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.அதையே என் பதிவு வாழ்க்கையின் உச்சமாக நினைக்கிறேன்.

           

அந்த மன நிறைவுடன் பதிவிலிருந்து ஓய்வு பெறுகிறேன்.இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல.. கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக யோசித்து எடுத்த முடிவு.சரியான நேரம் இப்போதுதான் வந்திருக்கிறது.

எனக்கு  ஆதரவு தந்து,என்னை ஊக்குவித்து,என்னைப் பாராட்டி,எனக்கு வாழ்த்துச் சொல்லி என்னை வளர்த்து விட்ட அனைத்துப் பதிவுலக உறவுகளுக்கும் நன்றி.

இனி எழுதப்போவதில்லையே தவிர,நிச்சயம் தொடர்பில் இருப்பேன்.உங்கள் பதிவுகளைப் படிப்பேன்;வாக்களிப்பேன். கருத்துச் சொல்வேன்.

ஒரு வேளை,சில காலம் கடந்தபின் மீண்டு வரலாம்;மீண்டும் வரலாம்.

அது அவன் கையில்.

நன்றி.

(விழா வெற்றிக்குப் பின் பலர் என்னிடம் பாரட்டுச் சொல்லி விட்டார்கள். எல்லோருக்கும் ஒன்று சொல்வேன்.என் பங்களிப்பு,இந்தியா உலகத்துக்கு என்ன கொடுத்ததோ அதுதான்—பூஜ்யம்.புலவர் இராமானுசம் என்ற மூத்த இளைஞரின்  எண்ணம்,அவரது உழைப்பு,ஆரம்ப முதல் அவருடன் இணைந்து உழைத்த மதுமதி,பாலகணேஷ்,பின்னர் கைகோத்த இளைஞர் படை, இவர்களது திட்டமிடல்,வாராந்திர ஆலோசனைக் கூட்டங்கள்,அயராத உழைப்பு இவையே வெற்றிக்குக் காரணம்.கடைசிக் கூட்டம் தவிர எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை;எனக்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்.ஆனால் இதுவே உண்மை. ஆயினும் இத்தகைய ஒரு விழாவின் ஒரு அங்கமாக இருந்தோம் என்பதே எனக்கு மகிழ்ச்சி, பெருமை,மனநிறைவு.இனி வரப்போகும் சந்திப்புகளுக்கெல்லாம் இதுவே ஒரு முன்னுதாரணமாக இருக்கப்போகிறது)

வாழ்த்துகளுடன்

சென்னை பித்தன்

சனி, ஆகஸ்ட் 25, 2012

உடன் பிறப்பே!உனக்கொரு கடிதம்!நாளை நமதே!


உடன் பிறப்பே!

வந்திடும்,வந்திடும் என்று நாம் காத்திருந்த  நாள் வந்து விட்டது.

நாளை என்பதை என்றுமே நாம் எண்ணியிருந்திட்டதில்லை.

ஒன்றே செய்,அதை நன்றே செய் அதுவும் இன்றே செய் என்பதே நமது கொள்கையாய் இருந்திட்டது.

ஆயினும்  ஒரு மாநாட்டை நடத்திடுவதற்கு நாள் குறித்துத்தானே ஆயிடல் வேண்டும். 

நாம் நாள் குறிப்பது,திதி,நட்சத்திரம், ராகு காலம் பார்த்தல்ல.

உடன் பிறப்புகள் அனைவருக்கும் உகந்த நாள் எதுவெனப் பார்த்திடுதல்  அவசியமாகிறதல்லவா?

அனைவருக்கும் உகந்த நாளாய் இந்த ஆகசுடு திங்கள் 26 ஆம் நாள் தேர்வு 
செய்யப்பட்டது.

கண்மணிகள் பலர் இந்த விழா ஒரு வரலாறு காணாத நிகழ்வாக இருந்திடுதல் வேண்டும் என்னும் அவாவில் மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது உழைத்திட்டிருக்கிறார்கள்.

நாளை விழாவின் வெற்றி அவர்கள் வெற்றி!உடன் பிறப்பே, உன் வெற்றி. 

அண்ணா (புலவர்)வழி நடந்திட்ட நம் அனைவரின் வெற்றி!

விழா சிறப்பாக நடந்திட நம் கடமைகளை,கண்ணியத்தோடும் கட்டுப்பாட் டோடும்  செய்திடுவோம்!

படையெனத் திரண்டு வா!

புதிய வரலாறு படைக்கவா!

நாளை நமதே!

இனி  நாளைய விழா பற்றிய தகவல்கள்  வணக்கம் தோழமைகளே.. இன்றைய இரவு விடிந்தால் போதும் காலை சென்னையில் தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கிவிடும்.இந்த விழாவிற்கு அயல்நாடுகளில் இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின் வாழ்த்துகள் வந்த வண்ணமே இருக்கிறது. இந்த விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என்கிற வேட்கையை அது அதிகரிக்கிறது.

         இந்த மாபெரும் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத அயல்நாட்டு பதிவர்கள் கூட பதிவர் சந்திப்பை குறித்து நல்லவிதமாகவும் ஆதரவாகவும் எழுதி வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.நன்றி.

         பதிவர்களுக்கு உணவு உட்பட சில ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் எம்மை தொடர்பு   கொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்துமாறு கேட்டுக்கொண்டோம். அதன்படி பதிவர்கள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

மண்டபத்திற்கு வரும் வழி

      
       சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள்  அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் டவுன்) சென்று எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம்.5 வது ரயில் நிறுத்தம் மேற்கு மாம்பலம்.

         இதேபோல் செங்கல்பட்டு,தாம்பரத்திலிருந்து வரும் தோழர்கள் எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.
        சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள்    17 என்று குறியிட்டு வடபழனி,சாலிகிராமாம்,பூந்தமல்லி,ஐயப்பன் தாங்கல் போன்ற ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.

       இந்த நிறுத்தத்தில் இறங்கி  லிபர்டி தியேட்டர் செல்லும் வழியில் வந்தால் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரும். அதைத்தாண்டி வந்தால் ஐந்து விளக்குகளைக் கொண்ட மின்கம்பம் வரும். அதன் அருகிலேயே மணடபம் உள்ளது. 1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம்.

      தாம்பரத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் கோயம்பேடு மற்றும் அதன் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி வடபழனி (சிக்னல்)காவல் நிலையம் நிறுத்ததில் இறங்கி சாலையைக் கடந்து வடபழனி ஆண்டவர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வருகின்ற பேருந்துகளில் ஏறி லிபர்டி அல்லது மீனாட்சி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கலாம்.(நீங்கள் எலெக்ட்ரிக் ரயிலில் வருவதே சாலச் சிறந்தது)1 மணி நேரம் ஆகலாம்.

        பூந்தமல்லியிலிருந்து வருகை தரும் தோழர்கள் 25G,17E,17M என்று குறியிட்டு சென்ட்ரல் மற்றும் பிராட்வே செல்லும்  பேருந்துகளில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.(கோடம்பாக்கம் மூன்று பேருந்து நிறுத்தங்கள் கொண்டது)இந்த நிறுத்தத்திற்கு மீனாட்சி காலேஜ் என்ற பெயரும் உண்டு.1 மணி நேரம் ஆகலாம்.

        கோயம்பேட்டிலிருந்து வரும் தோழர்கள் 27சி என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கலாம்.சாலிகிராமம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து 12 சி என்ற பேருந்தில் ஏறினால் 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம்.15 நிமிடங்கள் ஆகும்.

          தி. நகரிலிருந்து பேருந்தில் வருபவர்கள் போத்தீஸ் துணிக்கடையின் எதிர்புறம் இருக்கும் நிறுத்தத்தில் 12சி என்ற பேருந்து ஏறி 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம். 10 நிமிடங்கள் ஆகும்.

      திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வருபவர்கள்  25G என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.

வழிகாட்டிபதிவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும்.

2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.

3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.

4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.


இந்த சந்திப்பில் முக்கிய நிகழ்வாக கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழாவும் இருக்கிறது.இந்த இரண்டுக்குமான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப் பட்டிருக்கிறது.இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை கீழே காணலாம்.

இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்


     

       இந்த சந்திப்பில் கலந்து கொள்ள இயலாத பதிவர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.தங்கள் வலைப்பக்கத்தில் இருந்த படியே நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். அதற்கான நிரலை எப்படி இணைப்பது என்பதை இங்கே சென்று பார்த்துக்கொள்ளவும்.

வருகை தரும் பதிவர்களின் பட்டியல்

சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு

நண்டு@நொரண்டு,ஈரோடு
சங்கவி,கோயம்புத்தூர
சுரேஷ் (வீடு)கோயம்புத்தூர்
பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)
கோவி(காதல்)கோயம்புத்தூர்
ஜீவா(கோவைநேரம்) கோயம்புத்தூர்
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
அகிலா,கோயம்புத்தூர்

சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
பிரகாஷ்(தமிழ்வாசி)மதுரை
ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
ராஜா(அடங்காத அக்கப்போரு)மதுரை
சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
கருண்(வேடந்தாங்கல்)திருவள்ளூர்
ரஹீம்கஸாலி,அரசர்குளம்
பிரகதீஸ்(பெரியகுளத்தான்)பெரியகுளம்
கதிரவன்(மழைச்சாரல்)சேலம்


ரேகா ராகவன்,சென்னை
 கேபிள் சங்கர்,சென்னை
சுரேகா,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
சசிகுமார்(வந்தேமாதரம்)சென்னை
சிவக்குமார்(மெட்ராஸ் பவன்)சென்னை
தத்துபித்துவங்கள்(பிரபாகரன்)சென்னை
மோகன்குமார்(வீடு திரும்பல்)சென்னை
ரிஷ்வன்,சென்னை
டி.என்.முரளிதரன்,சென்னை
வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை 
இக்பால் செல்வன்,சென்னை
ஆரூர் முனா செந்தில் சென்னை
சிராஜுதீன்(டீக்கடை)  சென்னை
செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை
சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
பால கணேஷ்(மின்னல் வரிகள்)சென்னை
சசிகலா(தென்றல்)சென்னை
மதுமதி(தூரிகையின் தூறல்)சென்னை
ஸ்ரவாணி(தமிழ்க்கவிதைகள் தங்கச்சுரங்கம்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
கணக்காயர்,சென்னை 
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை
போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை
ராசின்(நதிகள்) சென்னை
புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை 
அனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை
லதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை
தமிழ் அமுதன் (கண்ணாடி)  சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
காவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை 
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
மென்பொருள்பிரபு,சென்னை
அமைதி அப்பா,சென்னை
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
மாடசாமி(வானவில்)சென்னை
இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
இரா.தெ.முத்து(திசைச்சொல்)சென்னை
வில்லவன்கோதை(வேர்கள்)சென்னை
ரமேஷ்(சிரிப்புபோலீஸ்)சென்னை
குகன்(குகன் பக்கங்கள்)சென்னை
ஈகைவேந்தன்(என் மனவானில்)சென்னை
உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது?சென்னை
சுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை
கிராமத்து காக்கை ,சென்னை
சிவலிங்கம்(போட்டோசாப் பாடம்)சென்னை
சேட்டைக்காரன் ,சென்னை
ருக்மணி சேஷசாயி(பாட்டி சொல்லும் கதைகள்)சென்னை
மணி(ஆயிரத்தில் ஒருவன்) சென்னை
குருபிரசாத்(இந்தியன் குரல்)சென்னை 
பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
உளவாளி,சென்னை
ஷர்புதீன்(வெள்ளி நிலா )
கோகுல்(கோகுல் மனதில்)பாண்டிச்சேரி
சினேகன் அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
நா.சுரேஸ்குமார்(அறிவுக்கடல்)காஞ்சீபுரம்
சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்
கண்மணிராஜன்(கண்மணி அன்போடு)சிவகாசி
நிலவு நண்பன்,திருநெல்வேலி
ஆளுங்க , நெல்லை
மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
சாம் மார்த்தாண்டன்,மார்த்தாண்டம்
ராஜா(என் ராஜபாட்டை)  பூம்புகார்
நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
கௌதமன்(கரிசல்குளத்தானின் வயக்காடு) வத்திராயிருப்பு
அருணன் கோபால்(கவிவனம்)
எண்ணங்களுக்குள் நான்(ஃபாரூக் முகமது)மங்கள நாடு) 
லெனின்(கேணக்கிருக்கன்)கீரமங்கலம்
தஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்


மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
திண்டுக்கல் தனபாலன்,திண்டுக்கல் 
ஆர்.வி.சரவணன்(குடந்தையூர்)
அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
மணவை தேவாதிராஜன்,மணப்பாறை
சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
பலே பிரபு(கற்போம்)பெங்களூரு
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
சைத அஜீஸ்,துபாய்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
பாலராஜன்கீதா,சவூதி அரேபியா

தொடர்பு கொள்ள:          

                                 உங்களுக்கு மண்டபம் வருவதில் ஏதும் சிரமம் இருப்பின் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொண்டு பேசினால் நண்பர்கள் மண்டபம் வர உதவுவார்கள்/ வழி சொல்லுவார்கள் :


மெட்ராஸ் பவன் சிவகுமார் - 98416 11301
ஆரூர் மூனா செந்தில்            - 8883072993


வாருங்கள் தோழர்களே.. சென்னையில் சங்கமிப்போம்..

                                                                                                                                         அன்புடன்,

                                                                                                    சென்னை பித்தன்

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

மனிதன் கடித்து இறந்த பாம்பு!


எது செய்தியாகிறது?

நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தியாகாது.

மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி!

அது போலவே,பாம்பு மனிதனைக் கடித்தால் செய்தியாகாது.

மனிதன் பாம்பைக் கடித்தால் அது செய்தி.

அதுவே இன்றைய   சிறப்புச் செய்தி.

நேபாளத்தில் பாம்புகள் அதிகமாம்.

காத்மாண்டு வில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மியா என்ற விவசாயியை நல்ல பாம்பொன்று கடித்து விட்டது.

கடித்து விட்டு ஓடிய பாம்பைப் பிடித்து அவர் கடித்தே கொன்று விட்டார்.

“அது என்னைக் கடித்ததும் எனக்கு அதிகக் கோபம் வந்து விட்டது.அதைத் துரத்திச் சென்று பிடித்துப் பற்களால் கடித்தே கொன்று விட்டேன்.ஒரு தடியால் அடித்துக் கூடக் கொன்றி ருக்கலாம்.ஆனால் அது என்னைக் கடித்ததால், பழிவாங்க நான் அதைக் கடித்தே கொன்றேன்” என்று சொன்னார் அவர்..

மருத்துவ உதவிக்குப் பின் அவர் நலமாக உள்ளார்.

இனி இவரிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்தானே!

......................................................................

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் பிறன் மனையுடன் தொடர்பு கொண்டி ருந்த ஒருவரை, அப்பெண்ணின் உறவினர்கள் பிடித்து அவரது, மூக்கு, உதடு, நாக்கு ஆகியவற்றை அறுத்து விட்டார்களாம்!

நாட்டாமை!தீர்ப்பை மாத்திச் சொல்லு! 

 ................................................

போலீஸ் கட்டுப்பாட்டு அறை.

ஒரு போன்.

“சார்,ஒரு போன் வந்தது.ராத்திரி ஒரு மணிக்கும்  3 மணிக்கும் நடுவில் தூங்குபவர்கள் எல்லாம் இறந்து விடுவார்களாம்.ஒரு குழந்தை,பிறக்கும்போதே பேச ஆரம்பித்து விட்ட குழந்தை, இந்த செய்தியைச் சொல்லியிருக்கிறது.”

அதன் பின் நூற்றுகணக்கான கால்கள்.

இரவு ஒரு மணிக்குச் சாலைகளில்  மரண பயத்தில்   பதறும் மக்கள் கூட்டம்!

அது நடந்தது ஹைதராபாத்தில்.

இது போன்றே சூரத் அருகில் பல இடங்களிலும் நடந்துள்ளது!

//அஞ்சி யஞ்சிச் சாவார்- இவர்
அஞ்சாதபொருளில்லை அவனியிலே//---(பாரதி)

என்று மாறுவார் இம்மக்கள்?

------------------------------

இவைதாம் செய்திகள்!!

(செய்திகள் :டைம்ஸ் ஆஃப் இந்தியா 24-08-2012)