தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012

வீடு திரும்பல்!



வீடு என்பது என்ன?

நான்கு சுவர்கள்,நடுவில் சில அறைகள் கொண்ட ஒரு கட்டிடமா?

காலை எழுந்து கடன் கழித்து, குளித்து,உண்டு,உடை அணிந்து, பணியிலிருந்து திரும்பி ஓய்வெடுத்து,உண்டு, விளக்கணைத்துப் புணர்ந்து,பின் உறங்கும் ஓர் இடமா?

இதையெல்லாம் ஓர் ஓட்டல் அறையிலும் செய்யலாம்.

அது வீடாகுமா?

வீடு என்பது என்ன?

னித உறவுகள்,உணர்வுகள் உறையும் இடம்.

அன்பு,பாசம் ,காதல்,மோதல்,வருத்தம்,புரிதல்,விட்டுக் கொடுத்தல்,பகிர்ந்து கொள்ளல், என்ற பலவற்றின் சங்கமம் அல்லவா வீடு?

வீட்டின் அருமை அங்கிருக்கும்போது தெரிவதில்லை.

பிரிந்திருந்து பின் திரும்பும்போது புரிகிறது.

நான் முதல் வகுப்பு முதல்,பட்டப்படிப்பு முடியும் வரை,வீட்டிலிருந்தே பள்ளி/கல்லூரி சென்று படித்தவன்.

முதன் முறையாகப் பட்ட மேற்படிப்புக்குச் சென்னை வந்து விடுதியில் தங்க நேர்ந்தது.

அது வரை பெரிய நகரையே பார்த்திராத ஒரு இளைஞன் ,வீட்டை விட்டு வெளியே சென்று தங்கியிராத ஒருவன்,சென்னை போன்ற நகரில் விடுதியில் தங்க நேர்ந்தால் எப்படி உணர்வான்?

பாருங்கள்---

சென்னை மீது நான் காதல் கொண்டாலும்,விடுமுறைநாட்களை மனம் எப்போதும் எதிர்நோக்கியே காத்திருக்கும்.உடனே வீடு சென்று அம்மா கையால் சாப்பிட்டு. உடன் பிறப்புகளுடன் அளவளாவி,பாதி நேரம் தூங்கிக் கழித்து—அந்த சுகத்துக்கு ஈடு இணையுண்டா?

அதுதான் வீடு.

பதி பக்தித்தில் ஒரு பாடல்.

பட்டுக்கோட்டையார் இயற்றியது.

ராணுவத்தில் பணி புரிபவர்கள்,விடுப்பில் வீடு திரும்பும்போது பாடும் உணர்ச்சி பூர்வமான ஒரு பாட்டு.

"வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அனேக நன்மையே - உண்மையே
 

தேடுகின்ற தந்தை தாயை நேரிலே - கண்டு
சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று
அருமையான பருவம் கொண்டு
அன்புமீறி ஆடிப்பாட காணலாம் - பலர்
ஜோடியாக மாறினாலும் மாறலாம் - சிலர்
தாடிக்கார ஞானிபோலும் வாழலாம்
 

நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே
பல....விந்தையான வார்த்தை வீழும் காதிலே
விட்டுப்போனபோது அழுதவள்ளி
புதுமையான நிலையில் - அல்லி
பூவைப்போல அழகை அள்ளிப் போடலாம் - தொட்டுத்

தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் - கண்ணில்
சேற்றை வாரி வீசினாலும் வீசலாம்.

விட்டுப்போனவையெல்லாம் இப்போது எப்படியிருக்குமோ என்றெண்ணிப் பாடும் பாட்டு.

கல்விக்காகச் சென்னையில் தங்கும் ஒரு வாலிபனுக்கே வீடு திரும்பல் என்பது ஒரு இனிய எதிர்பார்க்கும் நிகழ்வாக இருக்கையில். பல்லாயிரம் மைலுக்கப்பால்,பனிமலையின் உச்சியிலே,கொல்லாமல் கொல்லுகின்ற கொடுங்குளிரின் மத்தியிலே,பொல்லாத எதிரியிடமிருந்து நாட்டை காத்து நிற்கும் அந்த வீரர்களுக்கு வீடு திரும்பல் என்பது எவ்வளவு விசேடமானது?

இன்னும் ஒரு படம்.’தாயே உனக்காக’,(1966)சிவாஜி கௌரவ வேடம் ஏற்றது.சிவகுமார் நடித்த படம்.காஷ்மீரில் ராணுவத்தில் பணி புரியும் மகன்.நீலகிரியில் எங்கோ வசிக்கும் தாய்.விடுப்பில் வரும் மகன் வழியில் பலருக்கு உதவி செய்தி ஊர் வந்து சேரும்போது,விடுப்பு முடிந்து உடன் திரும்ப நேர்கிறது.யோசித்துப் பாருங்கள் அந்தத்தாய்,மகன் இருவர் மனநிலையை? Ballad of a soldier  என்ற படத்தின் தழுவல்தான்.ஆனாலும் என் நெஞ்சில் நின்ற படம்.அதில் சீர்காழி அவர்களின் உணர்ச்சிக் குரலில் ஒரு பாட்டு-

”கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனி மலையில் மகனிருந்தான்
வர வேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்துப் பார்த்திருந்தாள்.”

கண்களில் கண்னீர் வரவழைக்கும் பாட்டு.

பெற்றோர்,மனைவி,மக்களைத் தாய்நாட்டில் விட்டுத் திரைகடலோடியும் திரவியம் தேடும் நம் பதிவுலகச் சொந்தங்களுக்குத் தெரியும், ஓராண்டு/ஈராண்டுக்கு ஒரு முறை விடுப்பில் வீடு திரும்பலின், எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும்,சுகமும்;விடுப்பு முடிந்து வீட்டிலிருந்து திரும்பலின் வேதனையும்.

வீடு திரும்பல் என்பது மிக மிக மகிழ்வான நிகழ்ச்சி.- 



வீட்டிலிருந்து திரும்பல் என்பதோ?







  

41 கருத்துகள்:

  1. சார் நம்ம ப்ளாக் பேரா இருக்கே என முதல் ஆளாய் ஓடி வந்தேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கூட மோகன் குமார் அவர்களின் பிளாக் பற்றிய தகவலோ என்று நினைத்தேன்...

      நீக்கு
    2. நானும் அப்படித்தான் நினைத்தேன் (TM 9)

      நீக்கு
    3. இதை,இதை,இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!
      நன்றி மோகன்குமார்

      நீக்கு
  2. ‘வீடு திரும்பல்’ என்பது மிக மிக மகிழ்வான நிகழ்ச்சி என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. நானும் 9 வது படிக்கும்போதே வீட்டில் இருந்து படிக்காமல் வெளியே இருந்து படித்தவன். பணியில் இருக்கும்போதும் 10 ஆண்டுகள் வெளி மாநிலங்களில் தனியாக இருந்கிருக்கிறேன். வீட்டுக்கு வரும் ஒவ்வொரு முறையும் ஏற்படுகின்ற சந்தோஷத்தை சொற்களில் வெளிபடுத்த இயலாது. பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. //வீடு திரும்பல் என்பது மிக மிக மகிழ்வான நிகழ்ச்சி.-

    வீட்டிலிருந்து திரும்பல் என்பதோ?//

    மிக மிகக் கடினமான விஷயம் தான் ஜி!

    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  4. அருமையா சொல்லி இருக்கீங்க...என்னதான் இருந்தாலும் வீட்டில் இருக்கிற சுகமே தனி

    பதிலளிநீக்கு
  5. /// வீட்டின் அருமை அங்கிருக்கும்போது தெரிவதில்லை... பிரிந்திருந்து பின் திரும்பும்போது புரிகிறது. /// உண்மை ஐயா...

    நன்றாக முடித்துள்ளீர்கள்... நன்றி... (T.M.4)

    பதிலளிநீக்கு
  6. //நான் முதல் வகுப்பு முதல்,பட்டப்படிப்பு முடியும் வரை,வீட்டிலிருந்தே பள்ளி/கல்லூரி சென்று படித்தவன்.///

    நீங்களும் என்னைப் போல உள்ள ஒரு அப்பாவியா?

    பதிலளிநீக்கு
  7. இன்னாபா பேஜார் பண்ணிக்கினுகீறே!
    ஆல்ரெடி, வெல்லிகெயமெ ஊரூக்கு போறதாலே தூக்கம் வராமே கீது.
    இதுலே நீ வேற பதிவு போட்டு ரப்சர் பண்ற.
    ஆனாங்காட்டியும் பதிவு அப்படியே நம்ம மன்ஸ டர்ராக்கிசிடுச்சி வாத்யாரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் மூணு நாள் கீதேப்பா?

      ஈகைத்திருநாளைக் குடும்பத்துடன் மகிழ்வாகக் கொண்டாடப் போகிறீர்கள்.வாழ்த்துகள் அஜீஸ்

      நீக்கு
  8. என்ன சார் கூப்பிட்டீங்களா...?

    பதிலளிநீக்கு
  9. முதல் பாடல் முதலிரண்டு வரிகள் மட்டுமே நினைவில் இருந்தன. இரண்டாவது பாடல் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். சென்னையில் வேலை பார்த்து லீவில் மதுரை திரும்பிய நாட்களில் எனக்கும் இந்த உணர்வுகள் இருந்தன!

    பதிலளிநீக்கு
  10. தங்களது வீட்டின் மீது பற்று கொண்டவர் ' வீடுபேறையும் '
    எளிதில் பெறுபவராம். நல்லதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
  11. பள்ளிக்கல்வி வரை வீட்டிலிருந்தே படித்துவிட்டு, காந்தி கிராமம் சென்று ஒரு வருடம் பயின்றபோது எனக்கும் இந்த உணர்வுகள் ஏற்பட்டதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா!எல்லோருக்குமே இருக்கக்கூடிய உணர்வே.
      நன்றி.

      நீக்கு
  12. நல்லதொரு பதிவு.உர்வுகளால் கோர்க்கப்பட்டுள்ளது..அருமை ஐயா!வீடும் தாயும் என்றுமே திகட்டாதது தான்.வாழ்த்துக்கள் ஐயா!இன்று தான் சென்னைக்காதல் படிக்க்கிடைத்தது.அருமையான அனுபவப்பகிர்வு ஐயா!

    பதிலளிநீக்கு
  13. அண்ணே நெகிழ்ச்சியான பதிவு...நன்றி

    பதிலளிநீக்கு
  14. ஐயா, என்னுடைய பதின்ம வயதை ஞாபகப் படுத்திவிட்டீர்கள். நானும் பத்தாவது வரை எனது கிராமத்தில் படித்திவிட்டு +1-க்காக சென்னை வந்து சேர்ந்த போது, கிட்டத்தட்ட இந்த பதிவில் நீங்கள் பகிர்ந்துள்ள உணர்வுதான். பள்ளியில் சேர்ந்த முதல் நாள் அனத்து சக மாணவர்களும் என்னைக் கூர்ந்து கவனித்து என்ன்? என்று பார்த்தால் நான் மடூமே வேஷ்டி அனிந்திருந்தேன்... தலைமை ஆசிரியம் சீருடை( சட்டை பேண்ட்) தைத்து அணிய ஒரு வாரம் அவகாசம் அளித்தார். என்னிடம் தலமை ஆசிரியர்( அவர் பெயர் திரு. மோசஸ் சாமுவேல் செல்லையா) சொன்னது, நான் பள்ளி முடித்து செல்லும் போது உன்னை அழைத்து பார்ப்பேன், உன்னில் உடையில் மட்டுமே பட்டணத்து சாயலும்,சாயமும் இருக்க வேண்டும் மற்றபடி உள்ளத்தால் இதே பட்ட்காட்டானையே காண் வேண்டும் என்றார். அந்த நினைவுகள், உங்களின் இந்த பதிவை படித்தவுடன். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பட்டப்படிப்பு படிக்கும்போது கூட முதல் ஆண்டு நான்கு முழம் வேட்டிதான்!
      மிக அருமையாகச் சொன்னார் உங்கள் தலைமை ஆசிரியர்.காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றபடி புறம் மாறினாலும் அகத்தில் உள்ள அடிப்படை நல்ல குணங்கள் மாற்லாகாதுதானே!
      நன்றி ஜே.

      நீக்கு
    2. இப்போதெல்லாம் ஏன் எழுதுவதில்லை ஜெயகுமார்?

      நீக்கு
    3. இடையில் நண்பனின் மறைவு மற்றும் பணிச்சுமை காரணமாக எழுதவில்லை ஐயா, நாளை சென்னை பதிவர் சந்திப்புக்கான அழப்பிதல் பதிவுடன் தொடர்ந்து எழுத உத்தேசம் ஐயா.

      நீக்கு
  15. வீடு திரும்பல் என்றாலே பெண்களுக்கு தாய்வீட்டு நினைவு தானே வரும். அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  16. நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு, இன்று வேறு ஒருவர் கையில்!இறந்த காலத்தை எண்ணி ஏங்குகிறேன்

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு