என்னிடம் இருக்கும் செல்வங்கள் ஏராளம்
அடைந்தவை சில,அபகரித்தவை சில
அனைத்துமே விலை மதிப்பற்றவை
பார்த்தால் நீங்கள் சிரிப்பீர்கள்
அதன் மதிப்புத் தெரியாத காரணத்தால்
பார்க்கலாம் வாருங்கள்.
இதோ இப்பெட்டியில் பட்டுத்துணியில்
படுத்திருக்கும் இந்த ஸ்பூன்.
ஐஸ்க்ரீம் பார்லரில் ஆட்டையைப் போட்டது.
ஐஸ்க்ரீமைத் துளிதுளியாய் அவளெடுத்து
செம்பவள இதழ் திறந்து உண்ணும்போது
அவள் உதட்டில் உரசும் பாக்கியம் பெற்றது.
இன்றைக்கும் அவள் இதழின் இனிமை
இதை விட்டு நீங்கவில்லை!
இந்த டம்ப்ளரில் எழுதியிருக்கிறது
”சாந்தி விஹாரில் திருடப்பட்டதெ’ன்று
சாயம் பூசாமலே சிவந்திருக்கும்
அவள் உதடுகள் தழுவிய சுகம் கண்டவை.
வேறு யார் உதடும் இதில் படக்கூடாது.
எனவே நான் எடுத்து வந்து விட்டேன்.
அந்தக் கசங்கிய டிஷ்யூக் காகிதம்!
சாப்பிட்ட பின் நளினமாய் அவள்
இதழொற்றிக் கசக்கியெறிந்த காகிதம்
சட்டைப் பையில் வைத்து எடுத்து வரும்போது
அவள் இதழ் என் மார்பில் பதிவதாய் உணர்ந்த நாள்.
சாந்தோம் சந்திப்பில் ஒரு நாள்
கன்னத்தில் ஏதோ கறையென்று நான் சொல்ல
அவள் துடைத்தும் போகாத காரணத்தால்
நான் துடைக்க உதவிய இக்கைக்குட்டை!
பட்டுக் கன்னத்தின் ஸ்பரிச சுகம் பெற்றதன்றோ!
அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்த மலர்
அவள் கைகள் அளைந்த கடல் மணல்
அவள் பொறுக்கிப் போட்ட சிப்பி
அவள் பல் பதிந்த என் பேனா
பிரியும் முன் ஒரு நிமிடம் என் நெஞ்சில் சாய்ந்து
கண்ணிர் உதிர்த்தபோது கரைந்த மையால்
கறையான என் சட்டை
இவையெல்லாமே என் சொத்துக்கள்!
என்னுடன் அவள் இல்லை இன்று
ஆனால் அவள் நினைவுகளும்
அவள் காதலின் குறியீடாய் இவையும்
என்றுமே இருக்கும் என்னுடன்!