தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மார்ச் 31, 2013

ஹாலிடே ஜாலிடே!

ஓரிளைஞன் ஓர் அழகிய இளம் பெண்ணைக் காதலித்து வந்தான்.ஒரு நாள், மறுநாள் தன் 

பிறந்தநாள் என்று அவள் அவனுக்கு அறிவித்தாள்..அவன் அவளிடம் சொன்னான், மிக 

அழகிய ரோஜாப்பூங்கொத்து,அவள் வயதுக்கு இணையான எண்ணிக்கையில் ரோஜாக்கள்  

 அடங்கியது,அவளுக்கு அனுப்புவதாக.ஒரு பூக்கடைக்குச் சென்று 21 ரோஜாக்கள் அடங்கிய 

அழகிய பூங்கொத்தை அவள் விலாசத்துக்கு அனுப்பச் சொன்னான். அந்தக் கடைக்காரன், 

அவனுக்குப் பழக்கமானவன்,தன் அன்பளிப்பாக கூடவே பத்து ரோஜாக்கள் வைத்து 

அனுப்பினான்.

அந்த இளைஞனுக்கு ஏன் தன் காதலி அவ்வளவு அதிகக்கோபம் கொண்டு தன்னை விரட்டினாள் என்று தெரியவேயில்லை!  

பாவம்!:-)

....................................................................... சிவா ட்ரயாலஜியின் மூன்றாவது புத்தகமான”the oath of the vayuputras"இன்று கைக்கு வந்து விட்டது..முன்பே இப்புத்தகம் பற்றி என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.இதைப் படித்து முடிக்கும் வரை வலைப்பூவுக்கு விடுமுறை அளிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக் கிறேன்!

பார்க்கலாம்!


...............................................


சனி, மார்ச் 30, 2013

புனித சனி தெரியுமா?
புனித வெள்ளியன்று ஏசுநாதர் சிலுவையில் உயிர்நீத்த சோகத்தை நினைவு கூர்கிறோம்.

ஈஸ்டர் ஞாயிறன்று அவர் உயிர்த்தெழுந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறோம்.

இடையில் ஒரு நாள்,சனிக்கிழமை இருக்கிறதே அதன் முக்கியத்துவம் என்ன?

பெரும்பான்மையோர் என்ன செய்கிறார்கள்?

வெள்ளியன்று தேவாலயத்தில் சிறப்புத்தொழுகைகளுக்குச் சென்ற பின்,சனியன்று மறுநாள் ஈஸ்டருக்கான ஏற்பாடு செய்வதில்-சுத்தம் செய்தல்,விசேட உவு தயாரித்தல்,கடைசி நிமிட கடைக்குச் செல்லல்,உறவினர்களை எதிர்பார்த்தல்-என நாள் கழிகிறது.

அது சாதராண நாளல்ல;அது ஒரு நுழை வாயில் நாள்.நாளை நடக்கப்போவதைப் பற்றி நம்பிக்கை நிறைந்த நாள்

வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் தாங்கமுடியாத வலியில்,துன்பத்தில்,சோகத்தில் மூழ்கிப் போகிறோம்.அந்த நேரத்தில்,நாம் மீண்டும்  என்றாவது மகிழ்ச்சியாக இருப்போமா என்ற எண்ணம் ஏற்படுகிறது

வாழ்க்கையின் பல திருப்பு முனையான நேரங்களில்,நாம் பலவற்றை விட்டுக் கொடுக்க, விட்டு விலக நேரிடுகிறது---நமது அன்புக்குரியவர்களை,நம் உடமைகளை,நம் தாய் மண்ணை, நம் நம்பிக்கைகளை,நம் சுயத்தன்மையை,நம் பாதுகாப்பை, இவையெல்லாவற் றையும்-.அந்த நேரத்தில் எதிர் நிற்கும் பாதை இருண்தா நிச்சயமற்றதாக ,அவநம்பிக்கை அளிப்பதாத் தோன்றுகிறது .

புனித வெள்ளியன்று ஏசுநாதர் சிலுவையில் உயிர்நீத்தபின் அவரது சீடர்கள்,அவரைத் தொடர்பவர்கள்,அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள்,அவரை நேசித்தர்கள்
 அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் இருந்தனர்.என்ன செய்வதென்று தெரியாத நிலையில், அவருக்கு இது எப்படி நடந்து என்ற அவநம்பிக்கையில்.கேள்விகள் மட்டுமே நிறைந்த, பதில்கள் கிடைக்காத ஒரு நாள்தான் அவர்களுக்கு இந்த சனி.

ஆம் புனித சனி என்பதுஅப்படிப்பட்ட நாள்தான்.ஒரு இடைப்பட்ட நாள்;காத்திருப்பு நாள்;எதிர்காலம் பற்றி மௌனமாகச் சிந்திக்கும் நாள்;வழிகாட்டலுக்கும் ,ஒளிதருவதற்கும் பிரார்த்திக்கும் நாள்;ஏசு போதித்த மனித நேயத்தை.சக மனித அன்பை,ஒற்றுமையைப் பற்றிச் சிந்தித்து துன்பத்தில் இருக்கும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாகவும்,அன்புடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நாள்.அமைதியாக இறை நம்பிக்கையில் கழிக்க வேண்டிய நாள்.

எத்தனையோ இடர்களை இருண்ட பாதைகளைத்தாண்டி வர உதவிய,இறைவனுக்கு  நன்றி சொல்வோமாக.

(speakingtree)

வெள்ளி, மார்ச் 29, 2013

விஷக்கிருமிகள் பரவி விட்டன!”நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன”(virus has spread)

இது முன்னொரு காலத்தில் மிகப் பிரபலமான வாக்கியம்.

ஆண்டு 1967.

அது வரை தமிழ்நாட்டை ஆண்டு வந்தது காங்கிரஸ் கட்சி,இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல.முதல் காங்கிரஸ்

நல்லாட்சியைத் தூக்கி எறிந்து விட்டு,நாப்பறை கொட்டியவர்களை நாடாள அழைத்து விட்டார்கள்  மக்கள் .

பெருந்தலைவர் காமராசரே தேர்தலில் தோற்றுப்போனார்.

அப்போது முதலமைச்சராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள் தோல்வி பற்றித் தெரிவித்த கருத்து இது.

இப்போது இந்த வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நிலைமை எற்படுமோ என ஓர் அச்சம் !

உலகில்  புதிய விஷக்கிருமிகள் ,அதி நுண்ணுயிர்கள்(virus) பரவி விட்டன” என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படுமோ?

விஷக் கிருமி பரவி விட்டால் அது விளைவிக்கும் நாசம் அதிகம் .

அரிதான ஆனால் மிகக்கொடிய ”குவனாரிடோ” என்ற விஷக்கிருமிகள் அடங்கிய ஒரு குப்பி,,அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் மிகப் பாதுகாப்பான ஆய்வுக் கூடத்திலிருந்து காணாமல் போயிருக்கிறது .

வெனிசுலாவில் பிறந்த இந்த நுண்ணியிர் எலி,பெருச்சாளிகளின் மூலம் பரவக்கூடியது. மனிதர்களின் உள்ளுறுப்புகளில் குருதி வடியச் செய்யும். முப்பது விழுக்காடு மரணம் ஏற்படுத்தக்கூடியது.

யாராவது திட்டமிட்டு எடுத்துச் சென்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.பயங்கரவாதிகள் கையில் அது சிக்கியிருந்தால் உலகில் எத்தகைய அழிவை விளைவிக்கும் ஆயுதமாகும்! 

நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

விஞ்ஞானிகளிலேயே பலர் இந்த நுண்ணுயிர் பற்றி அறிய மாட்டார்களாம்,அத்தகைய அரிய
வகை.

என்ன நடக்கப் போகிறதோ!

இந்த ஆய்வுக்கூடத்தில் மேலும் பல நுண்ணுயிர்கள்எபோலா,ஆந்த்ராக்ஸ்,பிளேக்— இருக்கின்றனவாம்!

அவைகள் பாதுகாப்பாக இருக்கப் பிரார்த்திப்போம்!
......................................................

எத்தனையோ பறவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

யானைப் பறவை தெரியுமா?

அழிந்து விட்ட உயிரினங்களில் ஒன்று.

உலகிலேயே மிகப் பெரிய பறவையாக இருந்தது.

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இதன் புதை படிவமாகிய ஒரு முட்டையை ஏலம் போடப் போகிறார்கள்!

இது கோழி முட்டையைப் போல் 100 மடங்கு பெரியதாம்.

ஏலத்தில் எதிர்பார்க்கப்படும் தொகை என்ன தெரியுமா?

20000—30000!

ரூபாய் அல்ல!

பவுண்ட் ஸ்டெர்லிங்!

இன்றைய நிலவரப்படி 16.52 இலட்சத்திலிருந்து,24.79 இலட்சம் வரை!

அம்மாடியோ!

.................................................................

வியாழன், மார்ச் 28, 2013

யார் கவிஞன்?!கவிதை எது?!இறந்தகால இழப்புகளுக்காகவும்

எதிர்காலக் கனவுகளுக்காகவும்

வருத்தமும் கவலையும்........

இல்லாததற்காக ஏக்கம்.......

வாய் விட்டுச் சிரித்தாலும்

வலியின்றிப்போவதில்லை!

சோகமான நினைவுகளைச்

சுமந்தே வருகின்றன

நமது இனிமை மிக்க பாடல் எல்லாம்!
.................................................

குடதிசைக் காற்றே!

வருவதுரைக்கிறேன்

என் வார்த்தைகளை

எக்காள முழக்கமாய்

எடுத்துச் சொல்

விழிப்பில்லா உலகுக்கு!

 முன் வருங் கடுங் குளிரைப்

பின் தொடர்ந்து வாராதோ

வசந்த காலம்!
.......................................

ஆழ்கடலின் அடிமடியில்

ஒளிந்தே கிடக்கும் பல

ஒளி வீசும் ரத்தினங்கள்!

பாழ் வெளிப் பாலையிலும்

மலர்ந்து மணம் பரப்பிப்

பயனின்றி வாடி விடும்

இனிய மலர்கள் பல!
…………………………………….
இவை மூன்றும் பிரபலமான ஆங்கிலக்கவிதைகளின்  ஒரு பகுதியின் தமிழ் வடிவம்.

என்ன கவிதை,கவிஞன் யார் சொல்ல முடியுமா?!

.......................................................

பலர் என்னையே சொல்லச் சொல்லி விட்டார்கள்...
 இதோ.....

ode to a skylark--shelley
ode to the west wind-shelley
elegy written in a country churchyard-thomas gray