தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 28, 2012

அவள் என்ன செய்யப் போகிறாள்?!


ஃபாதர் ஜெபராஜ் பாவ மன்னிப்புக் கூண்டுக்குள் வந்து அமர்ந்தார். 

பாவமன்னிப்புக் கேட்க வந்த பெண் பேச ஆரம்பித்தாள்.

“ஃபாதர்!நான் உயிர்களைக் காக்கும் புனிதமான மருத்துவத் தொழிலில் இருப்பவள்.ஆனால் உயிரை எடுப்பவளாக ஆகி விட்டேன்.எனக்கு மன்னிப்பு உண்டா?”

“மகளே!உன் மனப் பாரத்தை இங்கு இறக்கி வைத்து விடு.நீ மன்னிக்கப் படுவாய்.”என்றார் ஃபாதர்

”நான் படிப்பை முடித்துஎன் பணியைத் தொடங்கியபோது எண்ணற்ற கனவுகள் ஃபாதர். மிகப்பெரிய மருத்துவராக வேண்டும்.தேவைப்படுவோருக்கு இலவச சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம் மனக்கோட்டைகள்.  ஆனால் தொடக்கத்தில் நான் கவனித்த சில நோயாளிகள் உடல் நலம் பெறாத காரணத்தால் கைராசி இல்லாத டாக்டர் என்ற பெயர் வந்து விட்டது. நோயாளிகள்  வருகையே குறைந்து விட்டது.”

“அந்நிலையில்தான் எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்மணி,பெரிய இடத்தைச் சேர்ந்தவள்,தன் மகளுடன் வந்தாள்.மகள் யாரையோ நம்பி ஏமாந்து விட்டதாகவும்,அதனால்  கர்ப்பமாகி விட்டதாகவும்,யாருக்கும் தெரியாமல் அதைக் கலைக்க வேண்டும் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டாள். கொஞ்சம் யோசித்தேன்.இதுவும் ஒரு வகை உதவிதானோ,நமக்கோ வேறு நோயாளிகள் அதிகம் வரவில்லையே என்பதால் ஒப்புக் கொண்டேன். கொஞ்சம் நாள் கூட ஆகி விட்ட சிக்கலான் கேஸ்தான்.ஆனால் அதை வெற்றிகரமாக முடித்தேன்.நிறையப்பணமும் கிடைத்தது.”

“அதுதான் ஃபாதர்,தொடக்கம்.அதில் என் கைராசி மிகவும் பிரசித்தமாகி விட்டது.பிறந்து வாழும் உயிர்களைக் காக்க வேண்டிய நான்,பிறவா உயிர்களைச் சிதைக்கும் பணியை மேற்கொண்டுவிட்டேன்.நல்ல வருமானம்,வசதிகள் பெருகி விட்டன.இப்போது சில நாட்களாக என் மனம் உறுத்துகிறது.இந்தப் பாவத்தொழிலைத் தொடர்வதா என்ற கேள்வி எழுகிறது. என்னைக் கர்த்தர் மன்னிப்பாரா என்ற பயம் ஏற்படுகிறது.எனவேதான் இங்கு இருக்கிறேன். எனக்குப் பாவ மன்னிப்புக் கிடைக்குமா?”அவள்


ஃபாதர் சொன்னார்”எப்போது உன் பாவங்களுக்காக நீ வருந்தினாயோ அப்போதே நீ மன்னிக்கப் பட்டாய்.இனி அப்பாவத்தைத் தொடராமல் கவனமாக இரு.பாவம் செய்யத்தூண்டும் சந்தர்ப்பங்களைச்  சாத்தான் உருவாக்குவான்.கவனமாக இரு.கர்த்தர் துணையிருப்பார்”


அவள் போய் விட்டாள்.அன்று முதல் அத் தொழில் செய்வதை நிறுத்தி விட்டாள். ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் செய்ய ஆரம்பித்தாள். அவர்களிடத்தில் அவளுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இப்படி ஒரு ஆண்டு கடந்த பின் ஒரு நாள்---

இரவு மணி 9 இருக்கும்.அவள் வீட்டில் படித்துக் கொண்டிருந்தாள்.அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தாள்.ஃபாதர்  ஜெபராஜ் நின்று கொண்டிருந்தார். அவள் பரபரப்பாக, “வாங்க, ஃபாதர்,உள்ள வாங்க.சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே,நீங்க இந்த நேரத்தில் வந்திருக்க வேண்டாமே” என்றாள்.

ஃபாதரின் முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது”உன்னிடம் ஒரு உதவிக்காக வந்திருக்கிறேன். செய்வாயா?”

“என்ன ஃபாதர் இப்படிக் கேட்கிறீர்கள்.செய் என்று சொல்லுங்கள். செய்கிறேன்.”

ஃபாதர்  கதவுப்பக்கம் பார்த்தழைத்தார்”ராணி ,உள்ளே வா”

உள்ளே வந்த அப்பெண்ணை அவள் சர்ச்சில் பார்த்திருக்கிறாள்,

“இவள் சர்ச்சில் பணி புரிபவள் அல்லவா/”

“ஆம்.இவள் விஷயத்தில்தான் உன் உதவிதேவை.நான் உன்னைத்தேடி ஏன் வந்தேனென்றால், இதில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன்.ஒரு பலவீனமான நேரத்தில் தவறு நடந்து விட்டதுஅதன் பலனை இவள் சுமக்கிறாள்.இது எவ்வளவு தீவிரமான ஒரு சிக்கல் என்பது உனக்குத் தெரியும். இவள் தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்கிறாள்.இவள் உயிரையும் இருவர் மானத்தையும் காப்பாற்ற, பிறவா உயிரைப் பலியிடத்தான் வேண்டும். எனவேதான்……..”

அவள் ஓராண்டாக நிறுத்தி விட்ட ஒரு பாவத்தை,நிறுத்தச் சொன்னவருக் காகவே மீண்டும் செய்ய வேண்டும்!

அழுவதா அல்லது சிரிப்பதா என்றே அவளுக்குத் தெரியவில்லை.

என்ன செய்யப் போகிறாள் அவள்?

புதன், ஜூன் 27, 2012

மனிதனும் மிருகமும்!


                        
                    அரிமாக்களை அடைத்து வைத்து
                   ஆனந்தமாய் நாம் பார்த்ததுண்டு
                   ஆனால்,
                   அடைபட்டு நாம் நிற்பதை
                   அரிமாக்கள் ரசிக்கின்றனவோ!

இன்றைய முக்கிய செய்தி:
           
//வலையுலகத் தோழமைகளுக்கு, வணக்கம். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்தத் தேதியில் அரங்கம் கிடைக்காத காரணத்தால் ஆகஸ்ட் 19ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவர் சந்திப்பு மாற்றப்பட்டுள்ளது. கவிரயங்கம், கருத்த  ரங்கம், சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலம் என்பது உள்ளிட்ட பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப் பட்டு வருகிறது. அவை பற்றிய விரிவான அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும். கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற விருப்ப முள்ள நட்புகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 19.08.2012 (ஞாயிற்றுக்கிழமை)  இடம் : மாணவர் மன்றம், சென்னை.//

நன்றி: கணேஷ்

திங்கள், ஜூன் 25, 2012

புரிந்து கொள்ளலும்,புரிய வைத்தலும்!


ஒருவரது எண்ணத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வது எப்படி?

நமது கருத்துக்களைத் தெரிவிக்க மொழி உதவுகிறது.

ஆனால் நான் சொல்வதை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நான் பேசும் மொழியை அவரும் அறிந்திருக்க வேண்டும்.இல்லையெனில் நான் சொல்வதெல்லாம் அவருக்கு வெறும் ஓசைதான்.

மொழி தெரிந்தவராகவே இருப்பினும் ,நான் சொல்வதை அவர் புரிந்து கொள்ளுமாறு சொல்லுதல் அவசியம்.

’பூடகமாக’ச் சொல்லுதல் என்பார்கள்.அதாவது சொல்ல நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லாமல்,வேறு விதமாக மறைத்துச் சொல்லுதல். அப்படிச் சொல்கையில் அக்கருத்தை மற்றவர் அதே பொருளில் புரிந்து கொள்ளலாம்;என்னவென்று புரிந்து கொள்ளாமல் குழம்பலாம்;அல்லது அதற்கு நேர்மாறான பொருளையும் கொள்ளலாம்.அதுதான் ஆபத்தே!

சரியான புரிதல் இல்லாதபோது மன வருத்தம் ஏற்படுகிறது.அவ்வாறு வருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதைச், சொன்னவர் உடனே தெரிந்து கொண்டால் தன் உண்மையான கருத்தைச் சொல்லி அதை மாற்ற முயலலாம்.ஆனால் மற்றவர் காயப்பட்டிருக்கிறார் எனத் தெரியாமலே போகும் போது, அறியாமலே விரிசல் ஏற்பட்டு விடுகிறது.

எனவே எப்போதுமே கருத்தை எந்த விதமான ஐயத்துக்கும் இடமின்றித் தெளிவான மொழியில் வெளிப்படுத்த வேண்டும். நான் சொல்வது இதுதான் என ஐயமின்றி மற்றவர் உணர வேண்டும். இல்லையேல் குழப்பம்தான்

பிறிது மொழிதல் அணி,வேற்றுப் பொருள்வைப்பணி எல்லாம் இலக்கியத்தில் நயமாக இருக்கலாம்;ஆனால் அன்றாட வாழ்வில், குழப்பத்தையும், வருத்தத்தையுமே ஏற்படுத்தும். சொல்வதை நேரடியாகச் சொல்லி விட்டால் குழப்பமில்லை,வருத்தமில்லை!எனவே பேச்சில் அணிகளே வேண்டாம்!

சொல்வதைச் சுருக்கமாக ஆனால் நன்கு புரியம்படிச் சொல்வது என்பது ஒரு கலை.இக்கலையில் தேர்ந்தவன் அனுமன்.

சீதையைத்தேடிச் சென்று திரும்பியவுடன்,இராமனும்,மற்றவரும் எத்தனை ஆவலுடன் செய்திக்காகக் காத்திருப்பர் என்பதை அவன் அறிவான். ”சீதையை” எனத் தொடங்கினால், பார்த்தானா,பார்க்கவில்லையா என்ற பதட்டம் மிகும்.எனவே சொல்கிறான் பாருங்கள்
   
கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்;
 தெண்டிரை யலைகடல் இலங்கைத் தென்னகர்
 அண்டர் நாயக! இனித் துறத்தி; ஐயமும்
  பண்டுள துயரும் என்று அநுமன் பன்னுவான்.”

எனவே முதலில் ’கண்டனன்’ என்று சொல்லி விடுகிறான்.பின் அவள் இலங்கையில் எப்படியிருக்கிறாள் ,இராவணனின் அந்தப்புரத்தில் சுகமாக வாழ்கிறாளோ என்ற ஐயம் இராமனுக்கில்லாவிடினும் பிறர்க்கு எழலாம்.  எனவே சொல்கிறான்”கற்பினுக்கு அணியை” . ஒரு வேளை இவன் கனவில் கண்டிருக்கலாம், அல்லது பிரமையாக இருக்கும் என்ற ஐயத்தைத் தவிர்ப்பதற்காகச் சொல்கிறான்”கண்களால்

எனவேதான் அவன் சொல்லின் செல்வன்.

நான் சொல்லின் மற்றவர் செல்வர்!

ஆனால் இதே அனுமன் அதிகம்பேசிப் புலம்புவும் செய்யும் ஒரு நேரம் வருகிறது,மாயா சீதைப் படலத்தில்-இந்திரசித்து,ஒரு மாய சீதையை அனுமன் முன் கொல்ல அதைக்கண்டு அனுமன் பலவாறு புலம்புகிறான்.அதில் ஒரு பாடல்  

”கல்விக்கு நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதனாகிச்
சொல்விக்க வந்துபோனேன் நோவுறு துயர்செய்தாரை
வெல்விக்க வந்துநின்னை மீட்பிக்க அன்றுவெய்தின்
கொல்விக்க வந்தேன் உன்னைக் கொடும்பழி கூட்டிக் கொண்டேன்”

அதிகமான சோகம் ஏற்படும்போது   பேச்சு,புலம்பல் அதிகமாகிறது.(அக்கால ஒப்பாரிப் பாடல்கள் எல்லாம் இந்த ரகம்தான்)

சோகம் மட்டுமல்ல,குழப்பம் ஏற்படும்போதும் தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல் அதிகமாகிறது.

செகப்பிரியரின் ஒத்தெல்லோவில் இயாகோவின் தனிப்பேச்சுகள் அத்தன்மையவை. கோல்ரிட்ஜ் அழகாகச் சொல்வார்”காரணம் இல்லாத   கெட்ட எண்ணத்தின் காரணம் தேடுதல் ”—motive hunting of  motiveless malignity-என்று .

ஹேம்லெட்டின் பிரபலமான தனிப்பேச்சும் –இருப்பதா,இறப்பதா,அதுதான் கேள்வி(to be or not to be ,that is the question) இத்தன்மையதுதான்.

என் பேச்சு இன்று சிறிது அதிமாகி விட்து;

எனக்குச் சோகமும் இல்லை;குழப்பமும் இல்லை!

பின் ஏன்?

வேறு வேலை இல்லை!!

வெள்ளி, ஜூன் 22, 2012

தலையிருக்க ஆடலாமோ வால்?


கனியிருப்பக் காய் கவர்தல் நன்றோ-வெள்ளிக்

காசிருக்கப் பித்தளைக்கு  மதிப்போ?-சுவைச்

சோறிருக்க நெல்   உண்பார் எவரோ-தங்கத்

தேரிருக்க   உலா வர  வண்டியோ-ஆடற்

கலையிருக்க ரசிப்பரோ  குத்தாட்டம்-பலாச்

சுளையிருக்கத் தோல் தின்பார் உண்டோ -வாழ்வில்

தலையிருக்க  ஆடலாமோ  வால்?


ஒரு சிறு விளக்கம்: இக்கவிதை பலர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதாக அறிகிறேன்.மன்னிக்கவும். இங்கு ”வால் ”என என்னைப் பற்றியே குறிப்பிட்டிருக்கிறேன் .நிச்சயமாக எந்த உள்குத்தும் இல்லைஒரு வரலாறு(தொடர்)-சென்னையில் ராஜியின் பள்ளி நாட்கள்


இதைப் படித்து விட்டீர்களா? 
மேலே.............


இன்று—

ராஜிக்குத் தள்ளாமை அதிகமாகி விட்டாலும் கூட இப்போதும் காலை 5.30க்கு எழுந்து விடுகிறாள்.குளியலில் ஒரு மாற்றம். முன்பெல்லாம் முதலில் குளித்து விட்டுச் சமையல் வேலை களைத்  தொடங்கி விடுவாள்.இப்போது அவள் பையன் முதலில் குளித்துவிட்டு ராஜிக்குக் குளிக்க வென்னீர் போட்டுக் குளியலறையில் உட்கார்ந்து குளிப்பதற்காக நாற்காலியும் போட்டபின் குளிக்கப் போகிறாள்.குளித்து வந்த பின் ஸ்லோகங்களைச் சொல்லியபடி அமர்ந்திருக்கிறாள்.அந்த நேரத்தில் காலனியிலிருந்து பள்ளி செல்லும் பெண்களை பார்க்கும் போது ,அவர்களின் சீருடைகளை,அவர்கள் பேசிக்கொண்டு செல்வதையெல்லாம் காணும்போது அவள் மனம் தன் சென்னைப் பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கிறது!

********
அன்று!

“டீ என்ன டீ”
அந்தப்பெண்ணின் கோபம் நிறைந்த சீறலில் ராஜி நடுங்கிப் போனாள்.
அந்த நடுக்கத்துடனே அப்பெண்ணை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தாள்.
”வான்னா,போன்னா- இப்படித்தான் சொல்லணும். அநாகரிகமா  ’டீ’ன்னெல்லாம்
சொல்லக்  கூடாது” .

இது ராஜிக்குப் புதிதாய் இருந்தது.
அவள் முன்பு இருந்த சிற்றூரில் அவர்கள் ஒருவருக்கொருவர் வாடீ போடீ
என்றழைத்துதான் பழக்கம்.

இது புதுமையாகத்தோன்றியது.புதிய மக்கள்.அவர்களின் பழக்க வழக்கங்கள். இனி இங்கு எல்லாமே புதுமையாகத்தான் இருக்கும்,இந்தச்சூழலில் தான் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையும் எழுந்தது.

அக்காலத்தில் இன்று போல் சீருடை எல்லாம் கிடையாது. சூரிதார் வகையறா எல்லாம் கிடையாது.இவள் வகுப்பில்,ஓரிரு பெண்கள் தவிர எல்லாரும் புடவைதான்.ராஜியிடம் நல்ல புடவைகள் கிடையாது.இருந்த ஒன்பது கஜம் புடவையையே ஒரு மாதிரிச் சுற்றி அணிந்து கொள்வாள்.மற்ற பெண்கள் நல்ல நல்ல புடவைகள், நகைகள் அணிந்து வருவதைப் பார்த்து அவள் நாணிப் போவாள். அதிலும் சில பெண்கள் பட்டுப் புடவையும் வைரத்தோடும், மூக்குத்தியுமாக வருவார்கள். வகுப்பில் ஓரிரு மாணவிகளே அவளிடம் நெருங்கிப்பழகி னார்கள்.அவள் படித்த நான்காம் படிவத்தில் ஒரே ஒரு பிரிவுதான்.மொத்தம் 36 மாணவிகள் .5ஆம் படிவத்தில் 12 பேர்;6ஆம் படிவத்தில் 8 பேர்தான்.

அக்காலத்திலும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள்.அவள் வகுப்பில் 26 வயது நிறைந்த ஒரு மாணவி இருந்தாள்.மணமானவள்;இரண்டு குழந்தைகள் வேறு. பையன் ஆறாம் வகுப்புப் படித்து வந்தான்.அவள் கணவனுக்குச்  சொற்பச் சம்பளம். அவள் படித்து ஏதாவது வேலை பார்த்தால் நல்லது என்ற எண்ணத்தில் அவள் கணவனே அவளைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தான்.

ஆறாம் படிவத்தில் படித்து வந்த ஒரு பெண் கணவனை இழந்தவள்.அவளது எதிர்காலத்தை மனதில் கொண்டு அவள் பெற்றோர் அவளைப் படிக்க வைத்தனர்.(பின்னொரு காலத்தில் கல்லூரிப் பேராசிரியரான தன் கணவனின் கல்லூரிப் புகைப்படம் ஒன்றில் மாணவர்கள் வரிசையில் அவளை பார்த்த ராஜி மிகவும் ஆச்சரியப் பட்டுப் போனாள்)


அவள் வகுப்பில் இரு சகோதரிகள் படித்து வந்தனர். அவர்களில் ஒருத்தி ராஜிக்கு நெருங்கிய தோழியாக இருந்தாள். சகோதரிகள் பள்ளியில் பேசிக்கொண்டு அவள் பார்த்த தேயில்லை.ஒரு நாள் ராஜி அவர்கள் வீட்டுக்குப் போயிருந்த போது அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போனாள்.தோழியிடம் கேட்டாள் ”ஏன்னா,நீங்க ரெண்டு பேரும் பேசுவீங்களா? வகுப்பில பேசவே மாட்டீங்களே,அதான் கேட்டேன்”
அந்தத்தோழி கேட்டாள்”என்னன்னா இப்படிக் கேக்குறே? அக்கா,தங்கை எங்காவது பேசிக்காம இருப்பாங்களா? அங்கே பேச வெட்கமாக இருக்கும்,அதுதான்”

அந்த அளவுக்கு ராஜி அப்பாவியாய்,ஏதுமறியாதவளாய் இருந்தாள்


இன்னொரு பெண்.பெயர் நீலா.அவள் அப்பாவுக்கு அந்தக் காலத்திலேயே 2000 ரூபாய் சம்பளமாம்.அவர்கள் மயிலாப்பூரில் வசித்து வந்த வீட்டு வாடகையே 100 ரூபாய் என்று அறிந்த போது ராஜி ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.ராஜியின் வீட்டு வாடகை 14 ரூபாய்தான்!


அவள் அப்பா ஒவ்வொரு மாதமும் அவள் பெயரில் வீட்டு விலாசத்துக்குத்தான் பணக்கட்டளை மூலம் பணம் அனுப்புவார்.ஆனால் தபால்காரர் வரும் நேரத்தில் ராஜி பள்ளியில் இருப்பதால் அவர் பள்ளிக்கே வந்து பணத்தைக் கொடுத்து விடுவார்!

படிப்பைப் பொறுத்தவரை சமஸ்கிருதம்,ஆங்கிலம் இரண்டிலும் ராஜி வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று விடுவாள்.ஆனால் கணிதம்---சுமார்தான்!சமஸ்கிருதத்தில் வீட்டுப்பாடம் நிறைய இருக்கும் வேறெதையும் படிக்க நேரமே இருக்காது. வீட்டுப் பாடம் எல்லாம் முடித்துக் களைப்படைந்து புத்தகத்தைக் கையில் எடுத்தால் கண்கள் செருகும். புத்தகம் நழுவிக் கீழே விழும்!
*****
இன்று!

கையிலிருந்த ஜயமங்கள ஸ்தோத்திரம் புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது.ராஜி நிகழ்காலத்துக்கு வந்தாள்.விட்ட இடத்தி லிருந்து  படிக்க ஆரம்பித்தாள்”குண்டலீக்ருத குண்டலீச்வர குண்டலம் வ்ருஷ வாஹனம்…..”


வியாழன், ஜூன் 21, 2012

இதயத்தின் ரணம்!


                                           

என்னவென்று தெரியவில்லை சகி
என் மனத்தின் ரணம்  திறந்துகொண்டது
இன்று.

உன் மடியில் சிறிது தலை வைத்துப் படுக்க
உன் விழிக்கடலில் மூழ்கி என்னை இழக்க
என் தோளில்  உன்னைச் சாய்த்தணைத்து
உன் கூந்தல்  தடவி ,உச்சி முகர்ந்து முத்தமிட
என்ன இந்த ஆசைகள்
இத்தனை ஆண்டுக்குப் பின்?

காதலுக்குச் சாட்சியான இடங்கள் பல இன்றில்லை
காதல் மட்டும் சாகாமல் கனன்று எரிகிறதே.

நீயின்றி நானில்லை என்றே நாமுரைத்தோம்
பொய்யாக்கி விட்டு இருவரும் இன்னும் இருக்கிறோம்!
அங்கும் இங்குமாய்!

உன் காதல் தோற்றதா என நண்பன் கேட்டான்
உண்மைக் காதலுக்குத் தோல்வியும் உண்டோ?
காதலித்துப் பிரிந்த பின் காலம் பல கடந்த பின்னும் ,
காதலின் நினைவிலேயே வாழ்கின்ற நம்
காதல் வென்றதன்றோ!

என் நாடி நரம்புகளில் ரத்த நாளங்களில்
என் உயிரோடு உயிராய்க் கலந்தவளே
என்னை நீ விட்டு விட்டுப் போனாலும்
என் நெஞ்சை விட்டுப் போகவில்லையே
உன் நினைவு?

(இது  யாரோ ஒரு உண்மைக்காதலனின் உள்ளம் பேசும் பேச்சு.’என்’
என்று எழுதியதால் என்னை இதில் பார்க்காதீர்கள்)


வலையுலக நட்புகளுககு ஒரு மகிழ்வான அறிவிப்பு

ரும ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினத்தன்று சென்னையில பதிவர் சநதிப்புக்குத் திட்டமிடப்பட்டுளளது, புலவர் ச.இராமாநுசம் அவர்கள் தலைமையில் இந்தச் சந்திப்பு நிகழ இருககிறது, கவிதை பாடுபவர்கள் கவியரங்கத்தில் கவிதை படிக்கலாம், மற்றையோர் தங்களுக்குப பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் (சுவாரஸ்ய அனுபவம். நகைச்சுவைத் துணுக்கு போன்றவை) பேசலாம்.இவை பற்றிய விரிவான அறிவிப்பு இனி வரும் நாட்களில் வெளிவரும். 

முழுக்க முழுக்க நமக்கான இந்த நிகழ்ச்சிக்கு அவசியம் வருகை தரும்படி அனைவரையும வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்..

இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்..........(நன்றி:பா.கணேஷ்)