பதிவுலகம் எனக்குத் தந்த நண்பர்களான இளைஞர்கள்
பலர் தற்போது குறும்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.மிகவும்
பெருமையாக இருக்கிறது.தங்கள் அன்றாடப் பணிகளின் மத்தியில் இதற்கும் நேரம் ஒதுக்கி எவ்வாறு
இவர்களால் சாதிக்க முடிகிறது என வியப்பாக இருக்கிறது.
ஒரு காலத்தில் நானும் சினிமாவில் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்,குறிப்பாக இணை சினிமா.மதுரையில் பணிபுரிந்த
காலத்தில்—1970-77-அங்கு இயங்கிக் கொண்டிருந்த ரே ஃபிலிம் சொசைட்டியில் சேர்ந்து பல
ஞாயிற்றுக்கிழமை காலைகளில் சத்யஜித் ரே படம்
மட்டுமன்றி வேறு இணை சினிமாக்களும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.அபுர்சன்சார்,பதேர்
பாஞ்சாலி,அபராஜிதோ,சாருலதா தவிர வேறு சில படங்களும் பார்த்த நினைவு.அடூரின் சுயம்வரம்,பெனகல்லின்
அங்கூர்,நிஷாந்த்,இவை அவற்றில் அடங்கும்.
அந்தக்காலகட்டத்தில்தான் எழுத்தாளர்
ஜெயபாரதியும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து படம் எடுக்கத்
திட்டமிட்டனர்.இவர்களைப் பற்றிச் சொல்லும்போது சுஜாதா சொன்னார்”ஒரே விதமான ஆசையும்
மீசையும் உள்ள இளைஞர்கள்” என்று.அந்த முயற்சிக்கு உதவ எண்ணி என்னால் இயன்றை ஒரு மிகச்சிறு
தொகையை அனுப்பினேன். அவர்களிடமிருந்து ஒரு கடிதமும்,ஒரு சிறப்பு மலரும் வந்தன”கடிதத்தில்
குறிப்பிட்டி ருந்தார்”எங்களைக் கொஞ்சம் உயரே பறக்க விட்டிருக்கிறீர்கள் ”
என்று.ஆனால் படம் அப்போது வெளிவரவில்லை.
1979 இல் தான் ஜெயபாரதியின் “குடிசை” படம்
வெளி வந்த்து.
மதுரைக்குப்பின் ஊர் ஊராகப் பணி இட மாற்றத்தில் சுற்றி வந்ததில்,இந்த
ஆசையெல்லாம் பின்னிருக்கைக்குத் தள்ளப்பட்டது.சினிமா இயக்கத்திலும் அதை விட
நடிப்பிலும் ஆர்வம் இருந்தபோதும்//(என் நடிப்பு அனுபவங்களைப் பற்றி அறிய,இங்கேயும்,இங்கேயும் க்ளிக்கவும்//
நான் முயலாததற்குக் காரணம்.
1)நான் சென்னையில் இல்லை
2)துணிந்து இறங்கும் தைரியம் இல்லாத
மத்திய தர வர்க்க மனப்பாங்கு.
படம் பார்ப்பதே குறைந்து போன நிலையில்
மீண்டும் நான் பார்த்த இணை சினிமா அரவிந்தனின் “சிதம்பரம்”-1986.
இப்போது திரை அரங்குக்குப் போவதே இல்லை.
ஒரு கூட்டுப் புழுவாய் என் கூட்டினுள்
ஒடுங்கி விட்டேன்
எனக்கு ஒரே வடிகால் அவ்வப்போது பதிவுலகம் மட்டுமே..