தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜனவரி 30, 2009

அன்புள்ள அப்பா-இறுதிக் கடிதங்கள்

14-4-1984

அன்புள்ள அப்பா,
19 வருடங்களுக்குப் பின் சக்தியை,டாக்டர்.சக்திவேலைப் பார்த்தேன்.நியூயார்க்குக்கு ஏதோ வேலையாக வந்தவன் நம்மாத்துக்கும் வந்திருந்தான்.விசுவும்,குழந்தைகளும் ரொம்ப சந்தோஷமாக அவனை வரவேற்றனர்.அவர்களுக்கு அவனை ரொம்பப் பிடித்து விட்டது.பேசிக் கொண்டே இருந்தனர்.அவன் எனக்காக புத்தகங்கள்,கேசட்டுகள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு,இன்னும் என்னென்னவோ வாங்கி வந்தான்.ரொம்ப சந்தோஷமான ஒரு நாள்!

இப்படிக்கு
உங்கள் அன்புள்ள
கல்யாணி.


20-1-1990
அன்புள்ள அப்பா,
என்னுடைய பீரோ லாக்கரில் கிடந்த இந்தக் கடிதங்களை யெல்லாம் இன்று எடுத்துப் படித்தேன்.உங்களுக்கென்று எழுதி அனுப்பாமல் விட்ட கடிதங்கள். ஏன் அனுப்பவில்லை என்று தெரியுமா?சக்தி பற்றி உங்களுக்கு எழுத முடியாது.காரணம் நீங்கள் கோபிப்பீர்கள் என்ற பயமல்ல.உங்களை நான் காயப்படுத்த விரும்பவில்லை.எனக்குத்தெரியும்,சக்தி நல்லவன்,வாழ்க்கையில் முன்னேறக் கூடியவன் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள்.ஆனால்,இந்த சமுதாயத்துக்குப் பயந்து,குடும்பத்தின் நல்ல பெயருக்காக,நீங்கள் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.இந்தக் கடிதங்கள் உங்களை மேலும் காயப் படுத்தியிருக்கும்.இன்று,உங்கள் மறைவுக்கு இரண்டு வருடத்துக்குப்பின்,ஒரு சாலை விபத்தில் டாக்டர்.சக்திவேல் அகால மரணம் அடைந்து 6 மாதங்களுக்குப்பின்,இக் கடிதங்களைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது.இந்த அனுப்பப்படாத,தபால் தலை ஒட்டாத கடிதங்கள் மாறியிருக்கக் கூடிய என் வாழ்க்கையின் பிரதிபலிப்பே!

இப்படிக்கு

கல்யாணி விஸ்வநாதன்.

அன்புள்ள அப்பா-கடிதம்-4

14-8-1978

அன்புள்ள அப்பா,
கலிஃபோர்னியாவிலிருந்து இன்றுதான் திரும்பினோம்.அங்கே எடுத்த ஃபோட்டோக்கள் மற்றும் படக் கார்டுகள் அனுப்பியிருக்கிறேன்.எல்லோரும் பார்த்த பின்,என் மாமனார் வீட்டில் கொடுத்து விடவும்.இந்த டூர் ஒரு மிக நல்ல மாற்றமாக இருந்தது.ஆனால் நான் என் பாட்டு க்ளாஸை விட்டு விட்டுப் போனது கஷ்டமாகத்தான் இருந்தது.இன்று திரும்பி வந்து சாயந்திரமே வகுப்பை ஆரம்பித்து விட்டேன்.சில ஃபோட்டோக்கள் சக்திக்கும் அனுப்பியிருக்கிறேன்.
கொஞ்ச காலம் முன் சக்தி சில கேசட்டுகளும், இசைத்தட்டுகளும் அனுப்பியிருந்தான்.கேட்கக் கேட்க திகட்டவில்லை.ஆகாஷ்வாணி கேட்பது போல் உணர்ந்தேன்.என் மாணவிகளுக்கெல்லாம் போட்டுக் காட்டினேன்.திருச்சியிலிருந்து வந்த ஒரு தமிழ்ப்பெண் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னட,மராத்தி,பெங்காலி மாணவிகளுக்கு சம்ஸ்கிருத,தெலுங்குக் கீர்த்தனைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்!!
அப்பா!இந்த சங்கீதம் என்னை மீண்டும் பிறக்க வைத்திருக்கிறது.புது உற்சாகம் அளித்திருக்கிறது.இதற்கு நான் சக்திக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அவன் தூண்டுதல் இல்லையென்றால் இது நடந்திருக்காது.அவனைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தால் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்காமலிருக்க முடியவில்லை.உங்களை, .அம்மாவை, நம் குடும்பத்தின் உறவை இழந்திருப்பேன்.இப்போது என்ன வாழ்கிறது?நீங்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்க,நான் விசுவுடன் அமெரிக்காவில் வாழும் இந்த வாழ்க்கையில் என்ன அடைந்து விட்டேன்?எனக்கே பதில் தெரியவில்லை.பதில் என்றாவது கிடைக்கும் என்றும் தோன்றவில்லை.

அப்பா நான் மறுபடியும் சொல்கிறேன்.விசு மிக நல்லவர். எந்தக் குறையும் இல்லை.நீங்கள் எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளை.அமெரிக்காவில் பெரிய படிப்புப் படித்தவர், நல்லவேலையில் இருப்பவர்.நிறைய சம்பாதிப்பவர்,கடமை தவறாத கணவர்,தந்தை.இதற்கு மேல் வேறு என்ன எதிர்பார்ப்பது?அதெல்லாம் நான் முன்பே தொலைத்துவிட்ட ஒரு கனவு.-வெகு நாட்களுக்கு முன் திருச்சியில்,வேறு ஒருவரை நினைத்திருந்தபோது.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி.
-----------------------------
(கடிதம் தொடரும்)

வியாழன், ஜனவரி 29, 2009

அன்புள்ள அப்பா-கடிதம்-3

3-6-1974.

அன்புள்ள அப்பா,

நாங்கள் சௌக்கியமாக வந்து சேர்ந்தோம்.இரண்டு மாதங்கள் இந்தியாவில் கழித்துவிட்டு இங்கு வந்தவுடன்,இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது சிரமமாகத்தான் இருக்கிறது.கௌதமும் ரஞ்சனாவும் வடை பாயசத்தோடு வாழை இலையில் சாப்பாடு கேட்கிறார்கள்,இந்த ஊரில்!அமெரிக்காவுக்குத் திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர் விசுதான்.


நான் இந்தியாவில் சில புத்தகங்களை விட்டுவிட்டேன்.அவை என் மாமியாராத்தில்தான் இருக்கவேண்டும்.அவை கிடைத்தால் பத்திரமாக வைத்திருங்கள்,நான் அடுத்த முறை வரும் வரை.அவை எனக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை;ஏனென்றால்,அவை சக்தி எனக்களித்த பரிசு.அப்பா,சக்தியின் விலாசத்தை நான் சாரதா மாமியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.அப்பா,உங்களுக்குத் தெரியுமா,சக்தி இப்போது மெட்ராஸில் ஒரு பிரசித்தமான இதய நோய் நிபுணர்;எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன்.அதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.அவன் பெண்களுக்கு என்ன பெயர் தெரியுமா அப்பா?-கல்யாணி,ராகமாலிகா.அவன் என்னுடன் ஃபோனில் பேசினான்.அவன் இன்னும் மாமிசம் சாப்பிடுவதில்லை;நான் கிடைக்கவில்லை என்பதனால் அவன் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.அவன் இன்னும் பாடுகிறாயா என்று கேட்டபோதுதான் எனக்கே நினைவு வந்தது,நான் ஒரு காலத்தில் பாடிக்கொண்டிருந்தேன் என்பது.ஆனால் நான் திருச்சியையும்,என் சிறந்த ரசிகனான சக்தியையும் பிரிந்து வந்தபின் அதை மறந்தே போனேன்.

அவன் ஃபோன் வந்தபின் நான் பாட முயன்றேன் ‘குறையொன்றும் இல்லை’ என்று.ஆனால் குறை இருந்தது.நீண்டநாள் பாடாததனால் மட்டுமல்ல;என் கண்களில் நீர் நிறைந்து தொண்டை அடைத்துக் கொண்டதாலும்தான்.ஒருநாள் விசு,குழந்தைகளின் முன் பாடினேன்.கௌதம் ரசித்துக் கேட்டான்;ஆனால் அப்பாவும் பெண்ணும் பாட்டு முடியும் வரை பொறுமையின்றித் தவித்தார்கள்.

அப்பா,அடுத்தமுறை யாராவது இந்தியா வந்து திரும்பும்போது மறக்காமல் ஒரு சுருதிப் பெட்டி அனுப்பவும்.நான் மீண்டும் பாட ஆரம்பிக்கப் போகிறேன்.

இப்படிக்கு

உங்கள் அன்புள்ள
கல்யாணி.

புதன், ஜனவரி 28, 2009

அன்புள்ள அப்பா-கடிதம்-2

அன்புள்ள அப்பா, 20-10-1968

நாங்கள் சௌக்கியம்
கௌதம் பேச ஆரம்பித்துவிட்டான்.அவன் ’தோசை’ என்று சொல்வதுபோல் எனக்குக் கேட்டது.ஆனால்,விசு அது வெறும் உளறல்தான் என்கிறார்.

உங்கள் முந்திய கடிதத்திலிருந்து பக்கத்தாத்து ராஜிக்குக் கல்யாணம் நடந்து ஜாம்ஷெட்பூரில் இருக்கிறாள் என அறிந்து கொண்டேன்.சந்தோஷம்.சாரதா மாமியிடம் கேட்டு அவள் விலாசத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.அவளுடன் தொடர்பு கொள்கிறேன்.

ராஜி கணவருடன் மெட்ராசில் சந்தோஷமாக இருப்பாள் என நம்புகிறேன்.சென்ற மாதம் அவளுடன் ஃபோனில் பேச ரொம்ப சந்தோஷமாக இருந்தது.சீனுவைப் பரிட்சைக்கு நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள்.சக்திக்குக் கல்யாணம் ஆகி விட்டதாக ராஜி சொன்னாள். அவனுக்கு என் வாழ்த்துக்களை மானசீகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனென்றால் ராஜி என் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டாள்.என் காரணமாக நீங்கள் உங்கள் நீண்ட நாள் நண்பரான,சங்கரவேலுடன்(சக்தியின் அப்பா) உங்கள் நட்பைத்துண்டித்து விட்டீர்கள் என்று எனக்குத்தெரியும்.சக்தி அவன் அம்மா விருப்பப்படி மாமா மகளை கல்யாணம் செய்துகொண்டதாக அறிகிறேன்.


ஆவணி அவிட்டம் வழக்கம் போல் சிறப்பாக நடந்ததா? விசுவின் அம்மா ஒரு கட்டுப் பூணல் கொடுத்திருந்தார்கள், ஆவணி அவிட்டத்துக்காக.ஆனால் அன்று அவர் பாஸ்டனில் இருந்தார்.இங்கே இருந்திருந்தாலும் பூணலை உபயோகித்திருக்க மாட்டார்.சென்ற மூன்று வருடங்களில் அவர் பூணல் அணிந்து நான் பார்த்ததே இல்லை.கௌதம் இப்போது அந்த நூல் சுருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.அது வெறும் நூல்தான்,வேறென்ன சொல்ல.அதன் முக்கியத்துவம் அவனுக்கு என்றாவது தெரியுமா என்பது சந்தேகமே.விசு அவன் ஆங்கிலத்தை மட்டுமே கேட்கும்படி செய்து வருகிறார்.அதுவே அவனுக்கு நல்லது செய்யும் என்கிறார்.ஆனல் நான் தனியாக இருக்கும்போது பொன்னியின் செல்வனையும்,பாரதியார் கவிதைகளையும் படித்துக் காட்டுகிறேன்.அந்த கவிதைப் புத்தகம்,சக்தி எனக்கு பரிசளித்தது.அவன் கையெழுத்து அதன் முதல் பக்கத்தில் இருக்கிறது.அப்புத்தகத்தைப் பார்த்த விசு ஒரு முறை சக்தி பற்றி என்னிடம் கேட்டார்.பயப்படாதீர்கள்,அப்பா.விசு ரொம்ப நல்லவர்.அதை சாதாரணமாக எடுத்துகொண்டார்.பின் அவர் அவரது அமெரிக்க நண்பி பற்றிக்கூறினார்.அவருடன் பணி புரிந்த அவளுடன் மூன்று மாதம் சேர்ந்து வாழ்ந்தது பற்றியும் சொன்னார்.அவள் ஒரு நாள் வந்திருந்தாள்.நல்லவள்தான்.


அம்மாவை ஒரு வருஷத்துக்குப் போதுமான சாம்பார் பொடி அனுப்பச் சொல்லுங்கள்.என் ஃபிரண்ட் சுதா அடுத்த வாரம் மெட்ராஸ் வருகிறாள்,சீனுவை சென்னைக்கு அனுப்பி அவளிடம் பொடியைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி

(இன்னும் வரும்)

அன்புள்ள அப்பா!

(நேற்று என் உறவினர் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார்-திண்டிவனத்தில் ஒரு பள்ளியில் நடந்த ஒரு சிறுகதை,கடிதம் எழுதும் போட்டியில் பரிசு பெற்ற ஒரு கதையை இணைத்திருந்தார்.சுஜாதா பாணியில் எழுதப்பட்ட அக் கதையின் தமிழாக்கம் கீழே;படியுங்கள்,ரசியுங்கள்)

அன்புள்ள அப்பா, 27-01-1965

நீங்கள்,அம்மா,ராஜி,சீனு எல்லாரும் சௌக்கியமென்று நம்புகிறேன்.இங்கே,நியூயார்க்கில்,குளிர் நடுக்குகிறது;ஆனால் அவர் சொல்கிறார்,நான் கடுங்குளிரிலிருந்து தப்பி விட்டேன் என்று.

கொட்டுகின்ற பனியை பார்க்காமல் போய் விட்டேனே என்று வருந்துகிறேன்.அதே சமயம் திருச்சியை விட்டு வந்ததும் வருத்தமாகத்தான் இருக்கிறது.திருச்சி மற்றும் அதனுடன் இணைந்த மற்றவை-நீங்கள்,அம்மா,ராஜி, சீனு,பக்கத்தாத்து ரமா,உச்சிப்பிள்ளையார் கோயில், விகடன், ஃபில்டர் காஃபி,ஹோலி க்ராஸ் கல்லூரி,ஃபிசிக்ஸ் துறை, அனைத்துக்கும் மேலாய் சக்தி-இந்த நினைவாகவே இருக்கிறேன்.

இக்கடிதத்தில் சக்தி பற்றி எழுதியது உங்களுக்குப் பிடிக்காதுதான்.கவலைப் படாதீர்கள் அப்பா.நீங்கள் என் நன்மைக்காகவே என்னை விசுவுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தீர்கள் என்பது எனக்குத்தெரியும்.நான் சக்தி பற்றி உங்களிடம் சொன்ன அன்று,நீங்கள் கோபத்தில் கத்தியதும்,அம்மா தன் கண்ணீரை மடிசார் தலைப்பினால் மௌனமாகத் துடைத்துக் கொண்டதும் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.அதன் பின் பொறுமையாக நான் ஏன் சக்தியை மணக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விவரித்தீர்கள்.20 என்பது வாழ்க்கை பற்றித் தீர்மானிக்க மிகவும் சிறிய வயது என்பதையும் ,குடும்பத்துக்கும், ராஜிக்கும் இதனால் பாதிப்பு எற்படுவதையும், அக்ரஹாரத்தில் நமக்கு ஏற்படும் தலைகுனிவையும்,ஒரு மாமிசம் சாப்பிடும் ஆண், வெங்காயம் கூடச் சாப்பிடாத ஒரு பெண்ணுக்கு சரியான துணையாக முடியாது என்பதையும் இன்னும் எத்தனையோ காரணங்களயும் எடுத்துரைத்தீர்கள்.சக்தி ஒரு சமணமுனிவராக மாறினாலும் கூட உங்களால் வேறு பல காரணங்கள் சொல்லியிருக்க முடியும்.ஆனால் இதற்கு எதிராக,விசு,பூணல் அணிந்தவர், நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை,அமெரிக்காவில் கம்ப்யூடர் துறையில் உயர்ந்த வேலையில் இருப்பவர்,இப்படி எத்தனையோ காரணங்கள் உங்களுக்கு இருந்தன ,விசுவைத் தேர்ந்தெடுப்பதற்கு..அப்பா,நான் குறை கூறவில்லை,விசுவும் ரொம்ப நல்லவர்தான்.

அம்மாவிடம் சொல்லுங்கள்,அம்மா சொன்னபடி நான் கொழுக்கட்டை செய்யவில்லையென்று,ஏனென்றால் இங்கே தேங்காய் விலை அதிகம்,அவருக்கு கொழுக்கட்டை பிடிக்காதாம்.

ஆனால் சங்கராந்தி அன்று,அவர் விருப்பப்படி வெளியில் போய் சாப்பிட்டோம்.ஒரு கடல் உணவு விடுதிக்குச் சென்றோம்.சாட்டர்ஜி குடும்பத்தையும் அவர் அழைத்திருந்தார்.அவர்கள் பேசிய அமெரிக்க ஆங்கிலம் எனக்குச் சரியாகப் புரியவில்லை.மெனு கார்டில் தலையைப் புதைத்துக் கொண்டேன்.மற்றவர்கள் என்னவெல்லாமோ ஆர்டர் செய்தனர்.நான் ஒரு சாண்ட்விச்சும் ஜூசும் கொண்டு வரச் சொன்னேன்.அன்றுதான் அப்பா நான் தெரிந்து கொண்டேன்,அவருக்கு மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும், மீனும் மிகவும் பிடிக்கும் என்று.

உங்களுக்குத் தெரியுமா அப்பா,எனக்காக சக்தி அசைவம் சாப்பிடுவதையே விட்டு விட்டாரென்று.அதுவும் நான் எதுவும் சொல்லாமல், அவராகவே.ஆனால் சக்தி நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை இல்லையே,அவரால் சுப்பிரமணிய ஐயரின் பெண்ணான கல்யாணியை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும்?

அவ்வப்போது,எங்கள் நலம் பற்றி எழுதுகிறேன். என்னால் சீனுவின் பூணலுக்கு வர முடியாது என நினைக்கிறேன். எனக்குப் பட்டுப் புடவை வாங்க வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லுங்கள்.இங்கே அதையெல்லாம் கட்டிக் கொள்ள முடியாது.கோமாளித்தனமாக இருக்கும்.

இப்படிக்கு,

உங்கள் அன்புள்ள

கல்யாணி


(இன்னும் வரும்)

வெள்ளி, ஜனவரி 16, 2009

கன்னிமை ஏலம் தொடர்கிறது!

முந்தைய இடுகையில் சொல்லப்பட்ட ஏலத்தில் மேலும் சில தகவல்கள்-

அதிக விலை கொடுக்க முன்வந்தவரின் நிபந்தனை--ஏலத்தில் அடைந்த வெற்றியின் விளைவாக நடக்கப்போகும் ‘அந்த’ முக்கிய நிகழ்ச்சி முழுவதும் வீடியோ படமாக எடுக்கப்பட வேண்டும்!! (அதை பின்னால் விலைக்கு விற்றுக் காசு பார்த்து விடுவாரோ மனிதன்?அல்லது அது அவரது பார்வைக்கு மட்டும்தானா?)

தற்போது ஒரு மிருகக் காட்சி சாலையின் காப்பாளர் ஒருவர்,அப்பெண்ணின் கன்னிமைக்கு விலையாக ஒரு உயிருள்ள புலியைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்!(புலி ஆணா,பெண்ணா என்று தெரியவில்லை! ஆங்கிலத்தில் ‘டைகர்’ என்று சொல்லியிருப்பதால் ஆண் புலியாகத்தான் இருக்க வேண்டும்).அந்தப் பெண் புலியை வைத்துக் கொண்டு என்ன செய்வாள்? சாலையில் நடந்து செல்லும்போது உடன் நாயை அழைத்துச் செல்வது போல் புலியைச் சங்கிலியில் பிணைத்து அழைத்துச் செல்வாளோ?(lady with a tiger?)

இதுவே தமிழில் புலியென்று சொல்லியிருந்தால்,வேறு ஒரு ஐயம் வந்திருக்கும்.ஒரு படத்தில் செந்தில் புலி வருது என்று சொல்ல,உடனே கவுண்டமணி துப்பாக்கியை எடுத்துக் கொண்டு புறப்படக் கடைசியில் ஒருவர் புளி விற்றுக்கொண்டு வருவார்.
அது போல இவர் புலி தருவதாகச் சொன்னாரா அல்லது ‘புளி’ தருவதாகச் சொன்னாரா எனச் சந்தேகம் வந்திருக்கும்!!

வியாழன், ஜனவரி 15, 2009

ஏலம்!ஏலம்!என் கன்னிமை ஏலம்!

அமெரிக்காவில்,கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருத்தி,தன் மேற்படிப்புச் செலவுக்காக ஆன்லைனில் தன் கன்னிமையை ஏலம் விட்டிருக்கிறாள்.(ஆதாரம்-டைம்ஸ் ஆஃப் இந்தியா 14-01-09) ஒரே ஒரு இரவு அவளுடன் இருந்து அவளைக் கன்னி கழிப்பதற்கு இது வரை அளிக்கப்படத் தயாராக இருக்கும் அதிக பட்சத் தொகை--25 லட்சம் டாலர்கள்!!.மிக மதிப்பு வாய்ந்த கன்னிமை தான்.யாருக்காவது அவள் கன்னிமை பற்றிச் சந்தேகம் இருக்குமானால்,அதற்காக மருத்துவச் சோதனைக்குத் தயார் என்றும் அந்தப் பெண் சொல்லியிருக்கிறாள்.அந்தப் பெண் மேலும் சொன்னதாவது,அவளது மூத்த சகோதரியும் தனது படிப்புச் செலவுக்காக மூன்று வாரங்கள் பாலியல் தொழில் செய்தாள் என்பது!.

இந்தப் பெண்ணுக்கு கிடைக்கும் தொகையைப் பார்த்து மேலும் பலர் இது் போன்ற ஏலத்தில் ஈடுபடக் கூடும் (ஆண்களும்?!)தேவையைப் பூர்த்தி செய்யும் பொருள்கள் அதிகமாகக் கிடைக்கும் போது அவற்றின் விலை குறையும்!சில காலம் சென்று வாங்க ஆளில்லாத நிலை ஏற்படும்!
இண்டெர்னெட் யுகத்தில் இதெல்லாம் சகஜமப்பா!

கன்னிமைக்கான மருத்துவ சோதனை பற்றி ஒரு சந்தேகம்.
ஹைமன் என்று சொல்லப்படும் சவ்வு கிழிந்திருந்தால் கன்னி இல்லை என்று கருதப்படுகிறது.

இந்த சவ்வு உடலுறவு இல்லாத வேறு காரணங்களாலும் கி்ழிய வாய்ப்பிருக்கிறது.அது போல உடலுறவின் காரணமாக இச்சவ்வு கிழிந்தாலும் அறுவை சிகிச்சை மூலம் புதிய சவ்வு பொருத்த முடியும் என்றும் சொல்லப் படுகிறது. எனவே ஒரு பெண் கன்னி்யா இல்லையா என்பதை அவளாலும்,அவள் கன்னியில்லாத பட்சத்தில் அவளைக் கன்னி கழித்தவனாலும் ,கடவுளாலும் மட்டுமே சொல்ல முடியும்.எனவே இந்தக் கன்னிமை என்பதற்கு அதிகமான முக்கியத்துவம் அளிப்பதுதான் இந்த ஏலத்தில் அளிக்கப் பட்டிருக்கும் அதிகமான தொகைக்குக் காரணம்.ஒரு பெண் கன்னியா இல்லையா என்று கவலைப் படுபவர்கள் ஆணின் கன்னிமை பற்றிக் கவலைப் படுவதே இல்லை.

“கற்பு நிலையென்று சொல்லவந்தார் ,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”(பாரதி)