தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜனவரி 30, 2015

சாமியார்களின் சாபம்!உனக்கேன் இந்த வேலை?

பதிவு எழுத வேண்டும் என்றால் எவ்வளவோ இருக்கிறது

சினிமா பற்றி எழுதலாம்.

சாப்பாடு பற்றி எழுதலாம்-அந்த மாதிரி எழுதுவதுதான் மிகப் பிரபலம்.

அந்தக்கால மெட்ராஸ் பற்றி எழுதலாம்,ஒரு நண்பர் முன்பே உன்னிடம் கேட்டுக் கொண்டது போல்

கதை, உனக்குத் தெரிந்த அளவில் கவிதை என்று ஏதாவது எழுதலாம்.

படித்த புத்தகங்கள் பற்றி எழுதலாம்-படித்தால்தானே எழுதுவதற்கு!

இலக்கியம் பற்றி எழுதலாம்.

இப்படி எழுத எத்தனையோ செய்தி கொட்டிக்கிடக்க,நீ ஏன் பெரிய சீர்திருத்தவாதி போல் சாமியார்கள் பற்றி எழுதினாய்?

அதனால் என்ன சாதித்தாய்?

நித்தியும் கல்கியும் மாகான்கள்,பகவான்கள்(ஜி அல்ல!)

அவர்களைப் பற்றியெல்லாம் எழுதலாமா?

இப்போது பார் சபித்து விட்டார்கள்.

இத்தனை ஆண்டுகளாகத் தலை வலி,காய்ச்சல் என்று வந்தது உண்டா உனக்கு?

நேற்று என்ன ஆயிற்று?மாலை உடல்வலி தொடக்கம்;பின் தலைவலி;தொடர்ந்து காய்ச்சல்.

இரவு நல்ல காய்ச்சல்!

ஒரு டோலோ 650 போட்டுக் கொண்டு படுத்தாய்.

காலை காய்ச்சல் குறைந்திருந்தாலும் உடல் வலியும் தலைவலியும் குறையவில்ல அல்லவா?

மருத்துவரிடம் சென்று மாத்திரைகள் வாங்கி வர வேண்டியதாகி விட்டது!

எளிமையாக ஒரு மிளகு ரசம் சாதம் காலையில்.சூடாக ருசியாக(நீயே சமைத்துச் சாப்பிட்டால் ருசியாகத்தான் இருக்கும்!)

 இனி இரவு ரொட்டி,பால்தான்.

ஏன் இந்தச் சங்கடம் மகான்கள் சாபம் கொடுத்து விட்டார்கள்

அதுதான் இத் தண்டனை

இனியாவது திருந்து!

டிஸ்கி:இன்று டான்ஸ் சாமியார் பற்றி எழுத எண்ணியிருந்தேன்.
உடல் வலி,உட்கார்ந்து இதற்கு மேலும் எழுத முடியாது.
இனி திங்கள் கிழமைதான்!

இது ஒரு அங்கதப் பதிவே என்பதைத் தெளிவு படுத்தி விடுகிறேன்!

வியாழன், ஜனவரி 29, 2015

கல்கி பகவான்-ஓர் அனுபவம்!ஆண்டு 1996-97 ஆக இருக்கலாம்.

எங்கள் கிளை வாடிக்கையாளரின் அலுவலகத்துக்குக் கடன் வசூல் சம்பந்தமாகப் போயிருந்தேன்
அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கவனித்தேன் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு 
படத்தை.

அதில் ஒரு சாமியார்,தாடி மீசையுடன், உடல் முழுவதும் மறைத்து மஞ்சள் உடையணிந்து, தலையிலும் துணியைக்கட்டிக் கொண்டு இரு கைகளையும் ஏந்தியவாறு நின்றிருந்தார்.
(இப்போது தோற்றம் மாறி விட்டது.தம்பதி சமேதராகக் காட்சியளிக்கிறார் அம்மா பகவான்!)

பேச்சு முடிந்ததும் நான் கேட்டேன் படத்தில் இருப்பவர் யார் என்று.

அவர் சொன்னார் அவர்தான் கல்கி பகவான்.சென்னையை ஒட்டிய நேமத்தில் இருக்கிறார் என்றும் தன் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய அற்புதம் பற்றி எல்லாம்!(கடன் தொல்லை தீர அற்புதம் ஒன்றும் செய்யவில்லை போலும்!)

எனக்கு எப்போதுமே இந்த மாதிரிச் சாமியார்கள் விசயத்தில் ஒரு உந்துதல்,ஆராயுங்குணம் உண்டு.

அடுத்த முறை அவர் வங்கிக்கு வந்தபோது மேலும் அவர் பற்றி வினவினேன்.

அப்போதுதான் அவர் என்னை ஒரு வீட்டில் இருக்கும் கல்கி பகவான் கோவிலில் நடக்கும் பஜனுக்கு அழைத்தார்.

குறிப்பிட்ட நாளன்று போனேன்.

ஒரு பெரிய கூடத்தில் கல்கியின் மிகப்பெரிய படம்,முதன்முதலில் நான் பார்த்த அதே படம்,பெரிய அளவில்.

அந்த வாடிக்கையாளரும் வந்து விட்டார்.

மொத்தம் ஆறே பேர்-ஐந்து ஆண்கள்,ஒரு பெண்.-அந்த வீட்டைச் சேர்ந்தவள்.

பஜன் துவங்கியது.

அதில் லயிக்கவில்லை என் மனம்;ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை

அவரிடம் செல்பவர்களை மூளைச் சலவை செய்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன்

ஆனால் அது பற்றி என்னால் கூற இயலாது,ஏனெனில் எனக்கு நேரடி அனுபவம் இல்லை.

ஆனால் அந்த பக்தர்கள் ஒரு சிறிய மூளைச்சலவையில் ஈடுபட்டனர் என்பது போல் உணர்ந்தேன்.

அந்தப்பெண் பஜன் நடக்கையில் சிறிது நேரம் அழுவதும்,சிறிது நேரம் சிரிப்பதுமாயிருந்தாள்.
அந்த வீட்டுச் சொந்தக்காரர் என்னிட ம் சொன்னார்”அந்தப் பெண் மாதிரி ஒரு நிலை உங்களுக்கும்  வரும் பகவானையே உற்றுப் பார்த்தபடி இருங்கள்”

வேறு ஒருவர் வந்து சொன்னார்”பகவனையே பார்த்தபடி இருங்கள் அவர் உங்களை நோக்கி வருவார்:

அப்பா!வாய்நாற்றம் தாங்க முடியவில்லை.

பகவானின் பக்திமயக்கத்தில் ஆழ்வேனோ என்னவோ இந்த ஆள் இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தால் அந்த நாற்றமே என்னை மயக்கமடையச் செய்து விடும்!பகவானிடம் இந்த நாற்றத்தை நீக்கக் கோரிக்கை வைக்கவில்லையோ?

நானும் படத்தை உற்றுப் பார்த்தபடியே இருந்தேன்.

ஒரு பக்தியோ பரவசமோ ஏற்படவில்லை.

நான் ஒரு  துரதிருஷ்டசாலிதான்.

 இது போன்ற சாமியார்கள் முன்அது மாதிரி நிலையெல்லாம் வருவதில்லை!

பஜன் முடிந்தது.

நான் வாடிக்கையாளரிடமும் மற்றவர்களிடமும் சொன்னேன்”பகவானைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.அதில் அவர் மறைந்து கழுத்தில் ஆடும் பாம்புடன் சிவன் தெரிந்தார்”(ச்சும்மா!)

அவர்களுக்கு மகிழ்ச்சி(பாவம்)

உங்களுக்கு ”ஆவிர்பாவம்” வந்து விட்டது என்றனர்(அப்படியென்றால் என்ன?)

கிளம்புமுன் ஒருவர் சொன்னார் “ஞாயிறன்று என் வீட்டில் இண்டென்சிவ் இருக்கிறது கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்”

தலையசைத்து விட்டு நடந்தேன்

பின் அந்தப்பக்கமே போகவில்லை!

டிஸ்கி:இதையெல்லாம் கேள்விப்பட்ட என்னுடன் பணி புரிந்த சில இளைஞர்கள் நேமம் சென்று என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் ஏனோ அது நடக்கவில்லை,பகவானின் அனுக்கிரகம் இல்லை போலும்!புதன், ஜனவரி 28, 2015

கணபதி சச்சிதானந்த ஸ்வாமியை சந்தித்தேன்!ஆண்டு 1981-82.

சென்னை பிராந்திய ஆய்வு அலுவலகத்தில் ஓராண்டு பணி செய்த காலம்.

ஆண்டு,.மாதம், நாள் எல்லாம் சரியாக நினைவில் இல்லை.

நினைத்துப்பார்த்து எழுதும் என் நண்பர் போல் எனக்கு நினைவாற்றல் இல்லை!

அந்தக்காலம்,வாழ்க்கையின் குறுக்குச் சாலையில் குழம்பிப்போய் நின்ற காலம்.

ஆந்திராவில் ப்ரோத்தடூர் கிளையில் ஆய்வு நடந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் கிலை மேலாளர் “நம்ம ஊருக்கு ஒரு சாமியார் வந்திருக்கிறார் ;போய்ப்பார்த்து வரலாம் வாங்க” என அழைத்தார்.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் எனக்கிடந்த நேரம்.

எனவே உடன் அவருடன் சென்றேன்.

மிகச்சிறியகூடம்.பத்துப் பதினைந்து பேர்தான் இருப்பர்.

ஏற்கனவே சாமியார் வந்து விட்டார்.

தாடி,மீசையுடன் காணப்பட்டார்.

கண்களில் ஒரு தீட்சணியம் இருப்பதாகத் தோன்றியது

நாங்கள் சென்று அவரை வணங்கினோம்.தள்ளி நின்றோம்.

ஒவ்வொருவராக வந்து மரியாதை செலுத்தினர்.

பழங்கள் கொண்டு வந்தவரிடம் “கால்ல வச்சிடு” என்றார்.

கையில் அணியும் செம்பு வளையங்களை வேண்டிக்கேட்டவர்களுக்கு அணிவித்தார்—விலை ரூபாய் இரண்டுதான்.

நானும் ஒன்று அணிந்துகொண்டேன்.

மேலாளர் என்னை அறிமுகம் செய்ய புன் முறுவலோடு கேட்டு கை உயர்த்தி ஆசிர்வதித்தார்.

அவ்வளவு அருகில் நின்று அவருடன் பேசி ஆசி பெற்றது மகிழ்ச்சிதான்.

அதன் பின் அவரைப்பற்றி நான் நினைக்கவேஇல்லை.

ஆண்டுகள் பல கடந்தன.

ஒருநாள் நாரதகான சபா அரங்கில் சாமி வருவதாகக் கேள்விப்பட்டுப் போனேன்.

அரங்கு நிரம்பி வெளியில் எல்லாம் கூட்டம்.

அவர் அருகில் நெருங்கவே முடியாது.

எல்லோரும் என் கண்களைப் பாருங்கள் என்று சொல்லிக் கண்கள் விழித்து அவற்றில் டார்ச் வெளிச்சம் அடித்தபடி கூட்டத்தின் நடுவில் வலம் வந்தார்.mass hypnosis செய்கிறாரோ என எண்ணினேன்.

கூட்டம் முடிந்து திரும்பினேன்.

நம்நாட்டில் சாமியார்கள் எவ்வளவு வேகமாகப் பிரபலமாகி விடுகிறார்கள்என்று 
எண்ணியபடியே வீடு திரும்பினேன்.

அவர்தான் கணபதி சச்சிதானந்த ஸ்வாமி!

டிஸ்கி:அவரிடம் ஏதோ பிளஸ் இருக்கிறது என்றே தோன்றுகிறது!

செவ்வாய், ஜனவரி 27, 2015

பரமஹம்ஸ நித்யானந்தாவுடன் ஒரு சந்திப்பு!அந்தக் கட்டுரையைப் படித்து முடித்துக் குமுதத்தைக் கீழே வைத்தேன்.

நல்ல கருத்தைப் படித்த மன நிறைவு.

இது இரண்டாவது வாரம்.

இரண்டு வாரமும் சொல்லப்பட்ட கருத்தும்,சொல்லிய விதமும் என்னைக் கவர்ந்தன.

ஒரு புதிய காற்று வந்து என் மனக்கதவைத் திறந்தது போல் உணர்ந்தேன்..

இத்தொடரின் படைப்பாளியான சாமியாரைப் பற்றி அறிய ஆவல் பிறந்தது.

குமுதம் பத்திரிகைக்குத் தொலைபேசினேன்.

அக்கட்டுரை என்னைக் கவர்ந்ததைப் பற்றிச் சொல்லி அந்த சாமியாரைப் பற்றிய தகவல் கேட்டேன்.

சம்பந்தப்பட்ட நிருபருக்கு இணைப்புக் கொடுத்தார்கள்.

அவர்கேட்டார்”அவரைச் சந்திக்க விருப்பமா?”

ஆம் என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?

”அடுத்த ஞாயிறன்று அடையாறு சாஸ்திரி நகரில் ஒரு வீட்டிற்கு அவர் வரும்போது சந்திக்கலாம்.காலை 7 மணிக்கு வந்து விடுங்கள்.நானும் அங்கு இருப்பேன்” அவர் சொன்னார்.

காத்திருந்தேன் ஞாயிற்றுக் கிழமைக்காக.

அன்று காலை 6.45க்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு 7மணி அளவில் அந்த விலாசத்தை அடைந்தேன்

பெரிய பங்களா

உயர்ந்த சுற்றுப்புறச் சுவரும் இரும்புக்கதவும்.

கதவு லேசாகத் திறந்தே இருந்தது.

நாய்கள் ஜாக்கிரதை எச்சரிக்கைப் பலகை எதுவும் இல்லாததால் தைரியமாக நுழைந்தேன்.

தோட்டக்காரன் ஒருவன் இருந்தான்

“சாமியைப் பாக்க வந்தீங்களா.உக்காருங்க” என்றான்

வீட்டுக் கதவு மூடியிருந்தது.

திண்ணையில் அமர்ந்தேன்.

சொந்தக்காரர் செட்டிநாட்டவர் என்று தெரிந்தது.

அரை மணிநேரக் காத்திருப்புக்குப் பின் மணிக்கதவம் தாள் திறந்தது!

”உள்ளே வாருங்கள்,”

உள்ளே சென்று ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்.

இன்னும் ஒருவரும் வெளியிலிருந்து வந்து சேர்ந்தார்

சிறிது நேரத்துக்குப் பின் கழுத்தில் காமிரா மாலையுடன் ஒருவர் உள்ளே வந்தார்.

என்னைப் பார்த்து”சந்திரசேகரன்?”என்று வினவினார்.

அவர்தான் குமுதம் நிருபர்

அறிமுகம் முடிந்தது.

“சாமி மாடியிலிருக்கிறார்.நான் போய்ப் பார்த்து வருகிறேன்” என்று சொல்லிச் சென்றார்.

ஒரு நாகரிக இளம்பெண் உள்ளே வந்தார் .நேராக மாடிக்குச் சென்று விட்டார்.

ஒரு மனிதர் வந்து சொன்னர்”நான் சாமியின் செயலர்.சாமி இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்”

ஓர் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்.சாமி பற்றி சொல்லி விட்டு”27 ஆம்தேதி முதல் மூன்று நாட்கள் சாமியின் பயிற்சி முகாம் இருக்கிறது....ஓட்டலில்.ரூபாய் 3000 தான் கட்டணம்.பெயரைப் பதிவு செய்து கொள்கிறீர்களா?” என கேட்டார்.

“என்னிடம் இப்போது பணம் இல்லை.பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்.வீட்டுக்குப் போய்க் காசோலை அனுப்பி வைக்கிறேன்”  என்று நழுவினேன்.

சாமி வருவது தெரிந்து கூடத்துக்கு வந்தோம்

மொத்தம் பத்துப் பேர்தான் இருப்போம்.வந்து கொண்டிருக்கும் அவரைப் பார்த்தேன்.

எழுத்து ஈர்த்த அளவுக்கு அவர் ஈர்க்கவில்லை.

மகான்களைப் பார்த்தால் உடலில் ஒரு பரவசம் ஏற்படும்.

அது இல்லை

ஒரு வேளை அவர் அலை வரிசையில் என் மனஅலைவரிசை இணையவில்லையோ?

செயலர் என்னை அறிமுகம் செய்தார்”நம்ம முகாமுக்குப் பேர் கொடுத்திருக்கிறார்”

வணங்கினேன்.

ஆசீர்வாதம் செய்தார்

ஒரு ஆப்பிள் கொடுத்தார்.

சிறிது நேரம் இருந்தேன்.

சாமி மாடிக்குச் சென்ற பின் திரும்பினேன்.

நிறைய எதிர்பார்ப்புகளுடன் போனவன் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

அவரது தெய்வீகத்தைப் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் எனக்கில்லையோ?!