தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 31, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்



2011
-----
அனைத்துப் பதிவர்களுக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

அன்பன்
சென்னைபித்தன்

செவ்வாய், டிசம்பர் 28, 2010

பரல்கள்

பண்டித நேரு ஒரு முறை சொன்னார்.”இந்திய தொழில் நுட்பக் கழகங்கள் கல்வியின் கோவில்கள்; நாட்டை முன்னேறச் செய்வதற்கான சிறந்த திறமைகளை உருவாக்குகின்றன” என்று.ஆனால் அவர் சொல்லவில்ல எந்த நாட்டை என்று.ஏனென்றால்,அமெரிக்காவில் படிக்கும்,பணிபுரியும் இ.தொ.க. பட்டதாரிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது,நேரு, நாடு என்று சொன்னது இந்தியாவை அல்ல அமெரிக்காவை என்றே எண்ணத்தோன்றுகிறது! இவ்வாறு சொன்னவர்,சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குனர் திரு.MS அனந்த் அவர்கள் ! சுடும் உண்மை!
நன்றி:இந்தியாவின் நேரங்கள்(டைம்ஸ் ஆஃப் இந்தியா!)
------------------------

நேற்று மாலை நாரதகானசபா செல்வதற்காகப் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன்.மந்தைவெளியில் ஒரு கோவிலைப் பேருந்து கடக்கும்போது, ஒரு கோவில் வாசலில் ஒருகாட்சி!ஒரு புது வண்டி-ஸ்கார்ப்பியோ என்று நினைக்கிறேன்.அதற்குப் பூசை போடப்பட்டுக் கொண்டிருந்தது.சந்தனம் ,குங்குமம் இடப்பட்டு, பூச்சூட்டப்பட்டு, மங்களகரமாய் நின்று கொண்டிருந்தது வண்டி.சுற்றிலும் சிலர் நிற்கக் கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டது.

எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது-அதன் பானெட்டில்
ஒளி வீசிக் கொண்டிருந்த ஒரு கொடி! திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருப்பு சிவப்புக் கொடி.கட்சிக்காரர் யாரோ ஒருவர் தன் காருக்குப் பய பக்தியுடன் பூசை போட்டிருக்கிறார்!

இதை அவர்கள் தலைவர் பார்த்திருந்தால்,முரசொலியில் உடன் பிறப்பே என்று விளித்து ஒரு கடிதம் எழுதி,பக்தியுள்ள இந்துக்களின் மனதை வழக்கம் போல் புண்படுத்தியிருப்பார்.

எழுதட்டும்!எழுதட்டும்!
ஆனால் எதுவும் மாறாது! இந்த நாட்டில் மட்டுமல்ல!
அவர் வீட்டிலும்தான்.!

--------------------
குசேலர்.எம்.பி.ஏ.!
---------------
குசேலர்!
பெற்றது இருபத்தேழு
கற்றது எம்.பி.ஏ.மார்க்கெட்டிங்கா?
விற்றது என்னவோ ஒரு பிடி அவல்தான்-விலையாய்ப்
பெற்றதோ பெருஞ்செல்வம்!

திங்கள், டிசம்பர் 27, 2010

இசைவிழா

யாருமே எதிர்பாராத ஒரு கச்சேரிக்கு இன்று விமரிசனம் எழுதுகிறேன்.உடல்நிலை சிறிது சரியில்லாத காரணத்தால் கடந்த இரு நாட்களாகக் கச்சேரிக்குச் செல்ல முடியவில்லை.தவற விட்டவை-ரஞ்சனி,காயத்ரி & பிரியா சகோதரிகள்.

இன்று மாலை 4.15க்கு நான் நாரதகானசபா வளாகத்துள் நுழையும்போது கூட்டமே இல்லை.சில நாட்களுக்குமுன் அருணா சாயிராம் கச்சேரியின்போது கேட் வரை வரிசை நின்றது நினைவுக்கு வந்தது.அரங்கினுள் நுழைந்தேன்.1200 பேர் அமரக் கூடிய அரங்கில் ஒரு நூறு பேருக்கு மேல் இல்லை!எனக்கே ஏமாற்றம் என்றால் பாடுபவர்களுக்கு எப்படியிருக்கும்?

சரியாக 4.30க்குத் திரை தூக்கப்பட்டுக் கச்சேரி ஆரம்பமாயிற்று. முதலில் பேகடா ராக வர்ணம்-இந்தசல.நல்ல ஆரம்பம். விறுவிறுப்பான தொடக்கம்.தொடர்ந்து பங்காள ராகத்தில் கிரிராஜ சுதா தனய,கலாவதியில் ஒக பாரி ஜூடக.compact.
அடுத்து வந்தது கமாஸில் ’சீதாபதே நாமனஸு”ஸ்வரப் பிரஸ்தாரத்திலிருவரும் மாற்றி மாற்றிப் பாடும் போது நல்ல விறுவிறுப்பு.ஒவ்வொரு ஸ்வரக்கோவை முடியும்போதும் அந்த ‘பநிதபத’ பிரயோகம் அருமை.இதைத்தொடர்ந்து மதுரை மணி பிரபலமாக்கிய மார்க்க ஹிந்தோளக் கீர்த்தனை-சலமேலர.-சுகம்.
அடுத்து கீரவாணி-ஆலாபனையில்,சேஷாச்சாரி அவர்கள்,சந்தேகமே இல்லாத கீரவாணியைக் கொண்டு வந்து உலவ விட்டார்.வரமுலொசகி கீர்த்தனை ஏமாற்றவில்லை.முடிந்ததும் ஒரு குட்டித் தனி ஆவர்த்தனம்.

அடுத்தது.piece-de resistance of the concert-பூர்விகல்யாணி-ராகம்,தானம், பல்லவி.ஆலாபனையில் ராகத்தின் முழு அழகும் வெளி வந்தது.குழப்பம் இல்லாத ராக லட்சண வெளிப்பாடு.(சில நாட்களுக்கு முன் என் முன்னால் இருந்த இருவர்,பந்துவராளியா,பூர்விகல்யாணியா என்ற சர்ச்சையில் இருந்தனர்! ஆனால் பாடகரைக் குறை கூற முடியாது! ).கச்சிதமான தானம் முடிந்ததும், பல்லவி-சங்கரன்கருள் மீனாட்சி-ராகமாலிகை.பூர்விகல்யாணியைத்தொடர்ந்து.பிலஹரி,சாவேரி.ஹம்சா
நந்தி,ரேவதி.சேஷாச்சாரியின் கம்பீரமான குரலும்,ராகவாச்சாரியின் மென்மையான குரலும் ஒவ்வொரு ராகத்திலும் ஸ்வரம் பாடும் போது அந்த காம்பினேஷன்!—சூப்பர்.ஹம்சாநந்தியில் ஸ்வரம் பாடும்போது,ராகவச்சாரி’ம,நி’ என்ற ஸ்வரம் பாடும்போது,ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் அவர்கள் கைக் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்து money முத்திரை காட்ட மேடையில் ஒரு ஜாலி கூட்டணி உருவானது! RTP முடிவில் தனி ஆவர்தனம்.

ஆனால் எந்தக் கச்சேரியிலும் நான் 6.30க்கு மேல் இருக்க முடியாத நிலையில் இருப்பதால்,ஒரு நல்ல கச்சேரி கேட்ட மனநிறைவோடு புறப்பட்டு விட்டேன்.

நினைவில் நிற்கும் நிகழ்ச்சி.

(இந்த விமரிசனத்தில் ஆழம் இல்லை என்று எனக்குத் தெரியும்.ஆனால் நான் ஒரு இசை ரசிகன் மட்டுமே.நிபுணன் அல்ல.)
.கச்சேரி: ஹைதராபாத் சகோதரர்கள்-வாய்ப்பாட்டு
v.v.ரவி-வயலின்
ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-மிருதங்கம்
கோவை மோகன்-கடம்.

சனி, டிசம்பர் 25, 2010

மார்கழிப்பொங்கல்-6-(வைகுண்ட ஏகாதசி)

எனது முந்தைய மார்கழிப் பொங்கல் பதிவில்,திருப்பாவை, திருவெம்பாவை,திருவாதிரை என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.அதைப் படித்த என் வைணவ நண்பர்கள் சிலர்,திருப்பாவை,திருவெம்பாவை இரண்டு பற்றியும் எழுதியது சரி,ஆனால் திருவாதிரை பற்றி எழுதிய நீ எப்படி மிக முக்கியமான வைகுண்ட ஏகாதசி பற்றி எழுதாமல் விடலாம் என்று என்னுடன் சண்டைக்கு வந்தனர்.எனவே இப்பதிவில் வைகுண்ட ஏகாதசி பற்றி எழுதுகிறேன்.ஏகாதசி என்பது அமாவாசை/பௌர்ணமிக்குப் பின் வரும் 11வது நாள்.(எல்லோருக்கும் தெரிந்த செய்தியைப் பெரிசா எழுத வந்துட்டியா?)மார்கழி மாதத்தில்,வளர் பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவது,வைகுண்ட பலன் தரும் என்பார்கள்(விரதம் என்றால் என்ன?-பட்டினிதான்.! மற்ற சில நியமங்களும் உண்டு.)ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும்.அக்காலத்தில் பெரியவர்கள் சொல்வார்கள்”தினம் இரண்டு;வாரம் இரண்டு;மாதம் இரண்டு;வருஷம் இரண்டு என்று.மாதம் இரண்டு என்றால்,இரண்டு ஏகாதசிகளிலும் உண்ணா நோன்பை மேற்கொள்வது. (மற்றவை என்ன என்பது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாதது;எனவே தெரியாவிடில் நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)ஏகாதசிக்கு மறுநாள்,துவாதசியன்று காலை சீக்கிரமே உணவு அருந்த வேண்டும்.(பின்னே ஒரு நாள் பட்டினி என்றால் சும்மாவா?)இதைப் பாரணை என்பார்கள்.பட்டினியை விட்டாலும் பாரணையை விடக் கூடாது என்பர்.இதை நான் தவறாமல் கடைப் பிடிக்கிறேன்.பட்டினியை விட்டு விடுகிறேன்;பாரணையை விடுவதில்லை!பாதிப் புண்ணியம் உண்டோ|? துவாதசி அன்று உணவில் அகத்திக் கீரையும்,நெல்லிக்காயும்,,சுண்டைக்காயும் இருக்க வேண்டும்.!இதற்கு விஞான ரீதியான காரணம் இருக்க வேண்டும்.


இப்போது வைகுண்ட ஏகாதசிக்கு வருவோம்.ஆண்டு முழுவதும் விரதம் இருக்க முடியா விட்டாலும்,வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் அது மூன்று கோடி ஏகாதசி விரதத்துக்கு சமம் என்று சொல்கிறார்கள்.அதனால் இது முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப் படுகிறது.

இத்தினம் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் மிக விசேஷமாக் கொண்டாடப் படுகிறது.இந்நாளில் மிக முக்கியமான நிகழ்ச்சி சொர்க்க வாசல் திறப்புதான்.அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப் பட்டவுடன்,அவ்வழியாகச் செல்வதற்கு மக்கள் வரிசையில் காத்திருப்பர்.மது கைடவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி,அன்று அவ்வாசல் வழியாக வருபவர்களுக்கு, அவர்கள் எப்படிப்பட்ட பாவம் செய்தவர்களாயினும் முக்தி அளிப்பதாக பகவான் வாக்களித்தார்.எனவேதான் இச்சொர்க்கவாசல் திறப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நான் திருவாதிரை அன்றும் கோவிலுக்குப் போகவில்லை;வைகுண்ட ஏகாதசி அன்றும் கோவிலுக்குப் போகவில்லை.கூட்டமில்லாத சாதாரண நாட்களில்தான் நான் பெரும்பாலும் கோவிலுக்குச் சென்று அமைதியாக வழி பட்டு விட்டு வருவேன்.இப்போது சில ஆண்டுகளாக மகா சிவராத்திரியன்று மருந்தீச்வரர் கோவில் போகிறேன்.அங்கு எங்கள் வேதக்குழு ருத்ரம்,சமகம் ஜபித்தபின்,சிறப்பு வழிபாட்டுக்கு அனுமதிக்கப் படுவோம்..எனவேதான் செல்கிறேன்.


கைலாயநாதன்,வைகுண்டநாதன் இருவர் அருளாலும் எல்லாரும் எல்லா நலமும் பெற்று வாழப் பிரார்த்திக்கிறேன்

வெள்ளி, டிசம்பர் 24, 2010

அறம்

அவர்கள் காத்திருந்தனர்,ஞானியார் தியானத்தினின்று விழிப்பதற்கு.இப்போதெல்லாம் இதே வாடிக்கையாகப்போய் விட்டது.-அவர் தியானம் கலைந்து விழித்தவுடன் தங்கள் குறைகளை,கேள்விகளை அவர்முன் வைத்து, அவரது பதிலைப்பெற்று அமைதி அடைவது.ஏனென்றால் கண் விழித்த சிறிது நேரத்திலேயே ஞானி மீண்டும் ஞானத்தில் ஆழ்ந்து விடுவார்.அந்த சில மணித்துளிகளுக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர்.

ஞானி கண் விழித்தார்.அனைவரையும் ஒரு முறை கனிவோடு நோக்கினார்.அவர் பார்வை ஒருவன் மீது நின்றது.அவன் அவரை வணங்கிக் கேட்டான்"சாமி,கடவுளை எப்படி வழிபடுவதுன்னே எனக்குத் தெரியலை.பெரிசா பூசை செய்யவோ படையல் வைக்கவோ என்னால முடியாது.நான் என்ன செய்யணும் சாமி?"

"இறைவனை வழிபடுவதற்கு எந்த நியதியும் இல்லையப்பா.இதில் ஆடம்பரம் தேவையில்லை.நான் என்ற சிந்தையற்று ஆழ்ந்த பக்தியுடன்,உள்ளம் நிறை அன்புடன் ஒரு இலையைப்போட்டு வணங்கு.வில்வமோ,துளசியோ ஏதாவது ஒன்று.அவன் திருப்தி அடைவான்.உன் பூசையை ஏற்றுக்கொள்வான்"-ஞானி பதிலளித்தார்.

அவர் அடுத்தவனைப் பார்த்தார்.அவன் கேட்டான்"சாமி, நான் அதிக வசதியில்லாதவன்.தருமம் செய்யணுன்னு ஆசை இருக்கு.ஆனால் கொஞ்சமா ஏதாவது செஞ்சா எல்லாம் கேலி செய்வாங்களோன்னு பயமா இருக்கு. நான் என்ன செய்ய சாமி?"

அவர் பதில் அளித்தார்"உனக்கு நல்ல மனது இருக்கிறது.ஈதல் என்பது பெரிதாக இருக்க வேண்டியதில்லை.நேற்று நீ இங்கு வரும்போது எதிர்ப்பட்ட ஒரு பசுவுக்கு ஒரு வாய் புல் அளித்தாயே அதுவும் ஒரு தருமம்தான்.நீ உண்ணும் உணவில் சிறிது பசித்தவருக்குவழங்கினால் அது அறம்.உண்ணும் முன் காக்கைக்குச் சிறிது அன்னமிட்டால் அதுவும் தருமம்தான்."

அவர் பார்வை பட்ட அடுத்தவன் கேட்டான்"இதெல்லாம் கூட முடியலென்ன என்ன செய்ய"கொஞ்சம் இடக்குப் பிடித்த அவனது கேள்வியைச் செவியுற்று அவர் புன்னகைத்தார்."ஊரில எல்லோரும் உன்னை மிகவும் கோபக்காரன் என்று சொல்கிறார்கள்.பல நேரங்களில் நானே கவனித்திருக்கிறேன்,இனிமையாகப் பேசாமல் சுடு சொற்களையே பேசுவதை.அதை விடுத்து அனைவரிடமும் இன்சொற்கள் பேசுவாயாகில் அதுவே சிறந்த அறம்தான்-முகத்தானமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன் சொலினதே அறம்."

இதைச் சொல்லிவிட்டு ஞானி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.
"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே"-----(திருமூலர்)

பொருள்: இறைவனை ஒரு பச்சிலையிட்டு வணங்குதல் அனைவர்க்கும் இயலும் அறமாகும்.அது போலவே,பசுவுக்கு ஒரு வாயளவு புல் அளித்தலும்,தாம் உண்ணும்போது பசித்தவர்க்கு ஒரு பிடி உணவளித்தலும்,பிறரிடம் இனிய சொற்களைப் பேசுதலும் யாவரும் எளிதில் இயற்றக் கூடிய அறங்களாகும்.
(என் மற்ற பதிவிலிருந்து,சிறு சேர்க்கையுடன் இறக்குமதி)

செவ்வாய், டிசம்பர் 21, 2010

மார்கழிப்பொங்கல்-5(திருப்பாவை,திருவெம்பாவை மற்றும் திருவாதிரை)

மார்கழி மாதத்தின் காலைப் பொழுதுகளை இனிமையாக்குவது சர்க்கரைப் பொங்கல் மட்டுமல்ல,இதமான திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களும்தான்.

நான் 7வது வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கோவில்பட்டியில் படித்தேன்.மார்கழி மாதம் முழுவதும்,அந்த ஊர் செண்பகவல்லி அம்மன் கோவிலில், காலை எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் பாடிய திருப்பாவைப் பாடல்கள்,ஒலிபரப்பப்படும்.அந்த சமயத்தில் தான் அந்த இசைத்தட்டுகள் புதிதாக வெளி வந்திருந்தன.ஆரம்ப நாட்களில் அதைக் கேட்பதே ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.ஆனால் அந்த மாதம் முடியும்முன் அந்த இசைத்தட்டும் கீறல் விழுந்துவிட எனக்கும் அதன் மீது இருந்த மோகம் விலகிவிட்டது.ஆனால் அது காலத்தை வென்ற ஓர் இசைத்தட்டு என்பது இப்போதும் எம்.எல்.வி.யின் அதே பாவைப் பாடலகள் ஒலிபரப்பப்படுவதைப் பார்க்கும்(கேட்கும்!)போது உணர்கிறேன்.

என் அத்திம்பேர் ஒருவர் இருந்தார்.அவர் மார்கழி மாதத்தின் 27 ஆம் நாளை மறக்கவே மாட்டார்.திருப்பாவையின் 27ஆம் பாடலும் அவருக்கு நன்குதெரியும்.குறிப்பாகக் கீழ்க்கண்ட பகுதி
” பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார” (!)

முதல் நாளே என அக்காவிடம் கூறிவிடுவார்”நாளைக்குக் கூடார வல்லி.சர்க்கரைப் பொங்கல் பண்ணிவிடு” என்று.
எனக்கு வேதம் கற்பித்த குருஜி ஒருவர்.சாப்பாட்டில் ரசிகர்.அடிக்கடி சொல்வார்.”சர்க்கரைப் பொங்கல் என்றால் அந்தப் பாத்திரத்தை லேசாச் சாய்த்து வைத்தால் நெய் அதிலிருந்து வடிய வேண்டும்” என்று!


திருப்பாவை,திருவெம்பாவை பற்றி விரிவாக,விளக்கமாக எழுத ஆசைதான்;ஆனால் அது என் சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட விஷயம்.அதற்கென்றே சில வல்லுநர்கள் இருக்கிறார்கள்.அவர்களைத் துணைக்கழைப்போம்—
http://sivamgss.blogspot.com
http://mozhi.blogspot.com/2007/12/1_19.html
http://margazhipaavai.blogspot.com/
இரண்டாவது சுட்டிக்கு நன்றி, திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு.









மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை.ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும்,சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள். “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை.
அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

அன்று,சிதம்பரத்தில் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும் (கேட்டதுதான்.பார்த்ததில்லை)எங்கள் வீடுகளில் செய்யப்படும் களியும் ஏழு கறிக்கூட்டும் மிகவும் சுவையானவை. ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது. இனிப்பான களியையும்,உப்பு,காரம் நிறைந்த கூட்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது –சுகம்!
செய்முறை தெரிய வேண்டுமா?ஜெயஸ்ரீயைத் தவிர வேறு யாரைக் கேட்க முடியும்? பாருங்கள்—
http://mykitchenpitch.wordpress.com/2007/01/04/thiruvaadhirai-kali/

நாளை திருவாதிரை.தில்லை நடராஜரை வணங்கி எல்லா நலமும் பெறுவோம்.

(நாளை எங்கள் காலனி பிள்ளையார் கோவிலில் காலை வெண் பொங்கல் பிரசாதத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.
வாங்க சாப்பிடலாம்!)

திங்கள், டிசம்பர் 20, 2010

பரல்கள்

நிதி நிறைந்த மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு. காக்கும் தெய்வத்தின் அருளால்,’அறிவும்’,’கலை’’ யும் நிறைந்த தமிழ்நாட்டில், ’கருணை’யும்,’தயை’யும்,’உதய’மாகிச் செழிக்கின்றன.
வாழ்க தமிழ்நாடு.
--*-*-*-*-*-*-*-*-*-*-*
’அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்’.இது சிலப்பதிகார நீதி.
இதில் சொன்ன பிழைப்பு,பிழை செய்தல் என்பது-பாண்டியனின் நீதி போல.
ஆனால் இன்றோ அரசியலையே தங்கள் பிழைப்பாக்கிக் கொண்டு பிழைக்கு மேல் பிழை செய்து வருவோர்க்கு எந்த அறம் கூற்றாகப் போகிறது?
-*-*-*-*-*-*-*-*-*-*-*
நெல்லைப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னைக்கு வந்தார்.பேருந்தில் பயணம் செய்யும்போது சீட்டு வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.நடத்துனர்,சில்லறை இல்லை,அப்புறம் தருகிறேன் என்று சொல்ல,நெல்லைக்காரர்,”பையக் கொடுங்க”.என்று சொல்லியிருக்கிறார்.,”ஏய்யா,நாந்தான் தரேன் என்று சொன்னேனே,உன்னோட சில்லறைக் காசுக்கு என் பையையே கேக்குரியே” என்று சத்தம் போட,பயணி மிக சிரமப்பட்டு ’பைய’ என்பதை விளக்கினார்.
பைய என்பது ஒரு தூய தமிழ்ச் சொல்.
”பஞ்சு கொண்டு ஒற்றினும் பைய,பைய என
அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”
என்று கண்ணகியின் மென்மையான பாதங்கள் பற்றி சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது.
ஆனால் இப்போது இத்தகைய சொற்களை நமது பேச்சிலே உபயோகித்தால்,--நாம் பைத்தியக்காரர்கள்தான்.
-*-*-*-*-*-*-*-*-*-*
கவுஜ
-------

சின்னக் கல்லெடுத்து குளத்தின் நடுவெறிந்தேன்
கல் பட்ட இடம் சுற்றி வட்டங்கள்,வட்டங்கள்
சின்னச் சொல்லெடுத்து அவள் மீது நான் எறிந்தேன்
சொல் பட்ட நெஞ்சத்தில் வாட்டங்கள், வாட்டங்கள்
வட்டங்கள் போய் விடலாம்;வாட்டங்கள் போய் விடுமோ?

-*-*-*-*-*-*-*-*-*-*-*-
எதையாவது எழுதி ஒரு பதிவு போடுவது என்பது இதுதான்!

சனி, டிசம்பர் 18, 2010

மார்கழிப் பொங்கல்-4-(கோலம்)

பொங்கலைத் தவிர மார்கழியின் மற்றோர் விசேஷம்-கோலம்.வீட்டு வாசலைத் தெளித்துப் பெருக்கி அழகான பெரிய பெரிய கோலங்களாக வரைந்து,நடுவில் ஒரு பூசணிப்பூவைச் சாணியில் செருகி வைத்த பின் அந்த வாசலே மிக அழகாகி விடும்.இன்று சென்னையில் குடியிருப்புகள் பெருகிப்போனபின்,பெரிய கோலங்கள் போட ஏது இடம்.?ஆயினும் மைலாப்பூர் மாதிரி சில இடங்களில்,சில வீடுகளில் இந்தப் பழக்கம் அழியாமல் காப்பாற்றுப்பட்டு வருகிறது.மைலாப்பூர் விழா நடக்கும்நேரத்தில்,மயிலையில் மாட வீதியில் கோலப் போட்டியே நடை பெறும்.அன்று அங்கு சென்று பார்க்க வேண்டும் அந்த அழகை!மாதிரிக்குச் சில கோலங்கள் கீழே--






மாக்கோலம்.விசேஷ நாள்களில் போடுவது.


புள்ளிக் கோலம்.வாசலில் போடும் கோலங்களில் ஒன்று








பூக்கோலம். ஓணத்தின்போது போடப்படுவது.




அந்த அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து,பெரிய கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும் கூட!

இந்தக் கோலம் போடும் கலை மறைந்து வருகிறதோ என எண்ணுகிறேன்.

நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில்,காலையில் படிக்கும் சாக்கில்,சீக்கிரம் எழுந்து,கையில் புத்தகத்துடன் வீட்டு வாசலில் நின்று. அந்தத் தெருவில் எல்லா வீட்டு வாசல்களிலும் போடப்படும் கோலத்தை(கோலத்தை மட்டுமா!) ரசித்ததுண்டு.

இந்நேரம் ஒரு புதுக்கவிதை நினைவுக்கு வருகிறது.கவிதை வரிகளும் நினைவில்லை;எழுதியவர் பெயரும் நினைவில்லை.என் வார்த்தைகளிலேயே அதன் கருத்தைத் தருகிறேன் –

குனிந்து நிமிர்ந்து,பெருக்கிக்
கோலம் போட்டுப் போனாள்!
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு!

வெள்ளி, டிசம்பர் 17, 2010

மார்கழிப் பொங்கல்-3(இசை விழா)

மார்கழி மாதம் என்றால் அதிகாலையில் கோவில் பூசைகளும்,பாசுர ஒலிகளும்,தவிர்க்கவே முடியாத பொங்கலும்(!),குளிரும் மட்டுமில்லை. சென்னையைப் பொறுத்த வரை டிசம்பர் இசைவிழாவும்தான்.நிறைய சபாக்கள் டிசம்பர் தொடக்கத்திலேயே இப்போதெல்லாம் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தாலும்,பழமையான பெரிய சபாக்களான மியூசிக் அகாடமி, நாரதகான சபா போன்றவை,டிசம்பர் 15 க்குத்தான் ஆரம்பிக்கின்றன தங்கள் விழாவை.

ஒரு காலத்தில் சில சபாக்களே இருந்த நிலை மாறி,இன்று நூற்றுக் கணக்கில் சபாக்கள் வந்துவிட்டன.இந்தப் பெருக்கம் சில வருந்தத்தக்க விளைவுகளையும் தோற்றுவித்திருக்கிறது.சில புதிய சபாக்கள்,வளரும் இளம் கலைஞர்களுக்கு,வாய்ப்பளிக்கப் பணம் கேட்டிருப்பதாக வரும் செய்திகள்.இது தொடரக்கூடாது.தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இந்த ஆண்டு சில பெரிய பாடகர்கள் தங்கள் கச்சேரிகளைக் குறைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கின்றனர் .இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை.இதன் மூலம் பல வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

ஒரு காலத்தில் சபாக்களில் தமிழ்ப்பாடல்கள் அதிகம் பாடப் படவில்லை.ஆனால் இப்போது நிறையத் தமிழ்ப்பாடல்களையும் கேட்க முடிகிறது.பாபனாசம் சிவன்,கோபாலகிருஷ்ண பாரதி ,பாரதியார், அருணசலக் கவிராயர்,பெரியசாமித்தூரன் ஆகியோரது பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுகின்றன.

இந்த இசை விழாவுக்காகவே,அநேக வெளிநாடு வாழ் தமிழர்கள் சென்னை வந்து பதினைந்து,இருபதுநாட்கள் தங்கி,எல்லா சபாக்களையும் ஒரு சுற்றுச் சுற்றி விட்டுச் செல்கின்றனர்.இரண்டு மாதங்களுக்கு முன்பே நியூ வுட்லாண்ட்ஸ்,மற்றும் மயிலை, ஆழ்வார்ப்பேட்டைப் பகுதிகளில் இருக்கும் சேவைக் குடியிருப்புகள் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.

சில சபாக்களில் இருக்கும் உணவகங்களில் சபாக்களின் உள்ளே இருப்பதை விட அதிகமான கூட்டம் இருக்கிறது!விலையெல்லாம் அதிகமாக இருந்தாலும் யாரும் சாப்பிட யோசிப்பதில்லை.புது உணவு வகைகள் எல்லாம் கிடைப்பது ஒரு காரணமோ?

இன்று இப்பதிவு எழுதக் காரணம் நானும் ஜோதியில் கலந்து விட்டதுதான்!ஆம்;இரண்டு நாட்களாக நாரத கான சபா கச்சேரிக்குப் போக ஆரம்பித்து விட்டேன்.சீசன் டிக்கட்.அடுத்த ஆண்டு 2 ஆம் தேதி வரை தொடரும். காண்டீன்?!--ஒரு காப்பியோடு சரி (ரூபாய்.15/=)

பயப்படாதீர்கள்!கேட்ட கச்சேரிகளைப் பற்றியெல்லாம் எழுதி உங்களைப் போரடிக்க மாட்டேன்!

வியாழன், டிசம்பர் 16, 2010

மார்கழிப் பொங்கல்-2-(பிள்ளையார்.)



இன்று மார்கழி முதல் நாள்.எங்கள் பிள்ளையாருக்கு வழக்கம் போல் காலை சிறப்புப் பூசை.இன்று பிரசாதம்-நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல்!

இப்போது நேற்று விட்ட இடத்தில் ஆரம்பிக்கலாம்.

”ஐந்து கரத்தனை”-ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.அவையாவன-படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல்.
கும்பம் ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும் மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,பாசம்
ஏந்திய கரம் மறைத்தலையும்,அபயகரம் அருளலையும் குறிக்கும். சிலர் பாசம் ஏந்திய கரம் படைத்தலையும்,மோதக கரம் மறைத்தலையும் உணர்த்தும் என்றும் கூறுவர்.

’யானை முகத்தனை’-விநாயகருக்கு,மனித உடல்,யானைத்தலை. பரமசிவன் கணபதியின் தலையைக் கொய்த பின்,பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்கி,பூத கணங்களை அனுப்பி,வடக்கே தலை வைத்து உறங்கும் உயிரின் தலையைக் கொய்து வரச் சொல்ல,அது ஒரு யானையின் தலையாக முடிந்தது என்பது ஒரு கதை.”யானை நாதத்திற்தோன்றியதாதல் போலப் பிள்ளையாரும் பர நாதத்திற்தோன்றிப் பிரணவ வடிவினராதலின் கூறினார்” என்பது ஓர் உரை.

காளமேகப் புலவரின் பாட்டொன்றில் இத்தலை பற்றி அவர் எழுதுவதாவது-

“சங்கரர்க்கு மாறு தலை சண்முகற்கு மாறு தலை
ஐங்கரர்க்கு மாறு தலை யானதே-சங்கைப்
பிடித்தோர்க்கு மாறு தலை பித்தா நின் பாதம்
படித்தோர்க்கு மாறு தலைப் பார்.”

சிவனுக்குத் தலயில் கங்கை ஆறு; முருகனுக்குத் தலைகள் ஆறு.;பிள்ளையார்க்கு மாறிய தலை;.ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதருக்கு,தலைப் பக்கம் ஆறு.;பித்தன் ஆகிய சிவனின் பாதத்தை நினைத்துப் போற்றுபவர்களுக்கு,நிச்சயம் ஆறுதல் கிடைக்கும். இதுவே பாடலின் பொருள்.

’இந்து இளம் பிறை போலும் எயிற்றனை’-பரஞானம்,அபர ஞானம் இரண்டுமே கணபதிக்குத் தந்தங்கள்;ஒரு தந்தம் ஒடித்து எழுதியதால் மற்ற முழு தந்தம் பார்ப்பதற்கு,இளம் பிறை நிலாவைப் போல்,வளைந்து,வெண்மையாய்,ஒளி விடுகிறது.

’நந்தி மகன்றனை’-இங்கு நந்தி என்றது சிவ பெருமானை.பிள்ளையார் சிவனின் முதற் பிள்ளை.

‘ஞானக் கொழுந்தினை’-ஞானத்தின் உச்சம்.தீ எரியும்போது,கொழுந்து விட்டெரியும் தீ என்று சொல்வோம்.அதே போல் விநாயகர் ஞானக் கொழுந்து.சிவன் ஞானமே வடிவானவன் ;அவ்ன் பிள்ளை ஞானக் கொழுந்து என்றுரைப்போரும் உளர்.

‘புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே’- புந்தி என்றது புத்தி.பிள்ளையாரை சிந்தையில் இருத்திப் போற்றுகின்றேன் என்பதாகும்.

வாருங்கள்,நாமும்,விநாயகப்பெருமானைப், ’புந்தியில் வைத்தடி போற்றுவோம்’

புதன், டிசம்பர் 15, 2010

மார்கழிப் பொங்கல்!

நாளை மார்கழி மாதம் பிறக்கிறது.தட்சிணாயத்தின் கடைசி மாதம்.மாதங்களில் நான் மார்கழி(மாஸானாம் மார்கசீர்ஷ:) என்று கீதையில் கண்ணன் சொல்கிறான்.நாளை முதல் கோவில்கள் அதிகாலையில் களை கட்டி விடும்.தனுர்மாத பூசைகள் ஆராதனைகள் நடைபெறும். திருப்பாவை,திருவெம்பாவை ஒலி எங்கும் நிறைந்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாலை குளிருக்கு இதமாகச் சுடசுடப் பொங்கல் கிடைக்கும்!

எங்கள் குடியிருப்பின் நுழை வாயிலிலேயே ஒரு பிள்ளையார் கோவில் அமைத்திருக்கிறோம்.




ஒவ்வொரு கோவிலிலும் பிள்ளயாருக்கு ஒரு பெயர் உண்டல்லவா?எங்கள் குடியிருப்புப் பிள்ளையார் “லட்சுமி கணபதி” என்றழைக்கப் படுகிறார்.உண்மையிலேயே குடியிருப்பு வாசிகளுக்கு,லட்சுமி கடாட்சத்தை நல்கி வருபவர்.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தினம் அதிகாலை எங்கள் பிள்ளையாருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

மார்கழி பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே காலனி அறிவிப்புப் பலகையில் அறிவிப்பு செய்யப்படும்.தினமும் நைவேத்தியப் ப்ரசாதம் செய்பவர்கள்,பெயர்களைப் பதிவு செய்து கொள்வர்.மாதம் முழுவதும், காலையில் சர்க்கரைப் பொங்கல்,வெண்பொங்கல்,கேசரி,சுண்டல் என்று
தினம் ஒரு பிரசாதம் கிடைக்கும்.(சர்க்கரைப் பொங்கலில் இனிப்புக் கூடும்,குறையும்;வெண்பொங்கலில் உப்புக் கூடும் குறையும் –அதெல்லாம் அவரவர் திறமையைப் பொறுத்தது!,பக்தியைப் பொறுத்ததல்ல!)

இந்த ஆண்டும் பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டு ,நான்கு நாட்களுக்குப் பதிவாகிவிட்டது.பொங்கலுக்காகக் காத்திருக்கும்
இவ்வேளையில்,(!),திருமந்திரத்தின் பாயிரப்பாடலில் பிள்ளையார் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதை பார்ப்போமா?
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”

பொருள்:ஐந்து கரங்களையுடையவரும்,யானை முகத்தை யுடையவரும், இளம்பிறைச்சந்திரனையொத்த ஒற்றைத் தந்தத்தைஉடையவரும்,சிவனுடைய குமாரரும்,ஞானச்சிகரமாக விளங்குபவரும் ஆகிய விநாயக் கடவுளது திருவடிகளைச் சித்தத்துள் வைத்து வணங்குகிறேன்.
இப்பாடலின் விளக்கத்தை நாளை,மார்கழி முதல் நாள், பொங்கல் சாப்பிட்டு விட்டுப் பிறகு பார்ப்போம்!!

திங்கள், டிசம்பர் 13, 2010

ராதாகிருஷ்ணனின் கடிதம்!

இன்று ராதாகிருஷ்ணனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.அதில் இப்பதிவுக்குக் காரணமான பகுதி கீழே--
“இன்றோடு 44 ஆண்டுகள் ஓடிவிட்டன.ஆனால் நினைவுகள் இன்னும் மறையவில்லை.அதற்கு ஒரு அஞ்சலியாக அந்நிகழ்வு சம்பந்தமான உங்கள் பதிவை ஒரு மீள் பதிவாக மீண்டும் வெளியிட வேண்டுகிறேன்.
எங்கிருந்தாலும் வாழ்க;அவள் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க;அவள் மங்கலக் குங்குமம் வாழ்க”

அவன் வேண்டுகோளுக்கு இணங்கி இதோ ஒரு மீள் பதிவு:-

எங்கிருந்தாலும் வாழ்க
---------------------

பெண்ணே!(கண்ணே என்றழைக்க மனம் விழைந்தாலும்,நாகரிகம் தடுக்கிறது);நீ எங்கே இருக்கிறாய்?இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் என் நெஞ்சில் நிற்கும் நீயும்,உன் நினைவுகளும் அவை தரும் சுகமும்,அதோடு கூடிய வலியும் மறையவேயில்லை.

அந்த நாள்,உனக்கு நினைவிருக்கிறதா ?நாம் சந்தித்த நாள்.என்னைப் போல் நீயும் அந்த நாளை நினைத்துப் பார்ப்பதுண்டா.(மறந்தாலன்றோ நினைப்பதற்கு)

திருச்சி இரயில் நிலைய்த்தில் திருவனந்தபுரம்-சென்னை பகல் நேர விரைவு வண்டியில், சென்னை செல்வதற்காக நான் ஏறிய போது நினைக்கவேயில்லை,என் உள்ளத்தைத் தொலைக்கப்போகிறேன் என்று.

இரயிலில் ஒரே கூட்டம்.நான் ஏறிய பெட்டியிலும் கூட்டம்.உட்கார இடம் இல்லை.என் பார்வையை மெதுவாக பெட்டி முழுவதும் செலுத்தினேன்.சுழன்று வந்த என் பார்வை உன்னிடத்தில் வந்ததும் நிலை குத்தி நின்றது.அந்தக் கூட்டத்தில் நீ “பளிச்” என்று தனித்துத் தெரிந்தாய்-எனக்கு.

சராசரி உயரம்,ஆண்களைச்சுண்டி இழுக்கும் கவர்ச்சி ஏதுமில்லாத தோற்றம் பகட்டில்லாத புடவை,குறைவான அணிகலன்கள் ,மாநிறம்.ஆனால் என்னை ஈர்த்தது எது தெரியுமா?உன் முகம்.சாந்தம் தவழும் அந்தத் தெய்வீக அழகு.மற்ற நாகரிக மங்கையர் போலன்றி மூக்கின் இரு புறமும் நீ அணிந்திருந்த மூக்குத்திகள் .லட்சுமி கரமான தோற்றம்.எனக்கு ரவி வர்மாவின் லட்சுமியைப் பார்ப்பது போலிருந்தது.அந்த வினாடியிலேயே நான் வீழ்ந்து விட்டேன்.

நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் நீயும் என்னைப் பார்த்தாய்.நம் கண்கள் கலந்த அந்த நொடியில் என் நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின் அதிர்ச்சி ஏற்பட்டது.விவரிக்க இயலாத ஒரு உணர்வு.நெஞ்சு ‘பட,பட’ என வேகமாக அடிக்கத்துவங்கிய்து.உன் கண்கள் என்னும் கடலில் முழ்கி மூச்சுத் திணற ஆரம்பித்தேன்.பலவந்தமாக என் கண்களை உன் மீதிருந்து பிடுங்கி வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தேன்.யோசித்தேன்” என்ன ஆயிற்று எனக்கு?இது வரை எந்தப்பெண்ணும் பாதிக்காத அளவு இந்தப்பெண் ஏன் என்னைப் பாதிக்கிறாள்”.

மீண்டும் என் பார்வை பெட்டியைச் சுற்றி வந்தது.எங்கும் இருக்கை இல்லாத நிலையில் சாமான்கள் வைக்கும் மேல் பலகை மேல் உட்கார முடிவு செய்தேன்.ஒரு துள்ளலில் மேலே ஏறி அமர்ந்தேன்.இளமையின் வேகம்.நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்ற எண்ணம் தந்த எழுச்சி.மேலேறி அமர்ந்த பின் உன்னைப் பார்த்தேன்.நீ அவசரமாக உன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாய்.நான் தெரிந்துகொண்டேன்-நீயும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய் என்று.புரிந்துகொண்டேன்-உனக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளை.

மேலேறி அமர்ந்த பின் கையில் வைத்திருந்த’இந்து’ பத்திரிகையைப் பிரித்தேன்.படிப்பது போன்ற பாவனையில் அடிக்கடி உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன். உன் பார்வையும் அவ்வப்போது என் மீது விழுந்தது.நான் உன்னைப்பார்க்கும் போதெல்லாம். அவசரமாக உன் பார்வையைத் திருப்பிக் கொண்டாய் .(”யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்”). சிறிது நேரம் சென்று உன்னுடன் வந்த சிறுமியிடம் நீ சொன்னாய் ” இன்னைக்கு பேப்பரே பார்க்கவில்லை”.

நான் என் கையில் இருந்த பத்திரிக்கையை மடித்து அதன் மேல் பகுதியில் என் பெயரை எழுதி அந்தச்சிறுமியிடம் கொடுத்தேன்”படிச்சிட்டுக் கொடுக்கலாம்” என்றவாறே .நீ அதை வாங்கிப் பிரிக்காமலே மேலே எழுதியிருந்த என் பெயரைப் படித்தாய் .உன் செவ்வாய் அசைவையே நான் கவனித்தேன் “ராதாகிருஷ்ணன்,M.A.”கொஞ்ச நேரம் பேப்பரைப் புரட்டி விட்டு அந்த சிறுமியிடம் நீ என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னாய் “மெட்ராசில் பெரியம்மா இப்ப சொல்லிட்டிருப்பா-’ராதா ரயில்ல வந்திட்டிருப்பா’ என்று”.உன் பெயரை மிக நாகரிகமாக எனக்குத் தெரிவித்து விட்டாய். என்னில் பாதி நீ என்பதைத் தெரிந்து கொண்டேன்.இது நம் இருவர் வாழ்வின் முக்கியமான நாள் என உணர்ந்தேன்.நம் பார்வைகள் மீண்டும் கலந்தன, பிரிந்தன,மீண்டும் கலந்தன.இன்பமான ஒரு விளையாட்டு.

ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்ற போது பசியால் அழுத ஒரு குழந்தைக்குப் பால் வாங்கித் தர நான் சென்று திரும்புவதற்குள் வண்டி புறப்பட்டு விட ,நான் ஓடி வந்து ஏறும்போது சன்னல் வழியே தெரிந்த உன் முகத்தில் எத்தனை கவலை;உள்ளே வந்த என்னைப் பார்த்தபின் எத்தனை நிம்மதி;என்ன கனிவு; என்ன பாராட்டு .இது போதுமே ஒருவாலிபனுக்கு, சாதனைகள் படைக்க.

சென்னை நெருங்கிக்கொண்டிருந்தது.நாம் பிரிய வேண்டிய நேரமும்தான்.இருவருமே அமைதி இழந்திருந்தோம்.பார்வைகள் பிரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம் .

சென்னை வந்து விட்டது.எல்லோரும் பரபரப்பாக இறங்க ஆரம்பித்தனர்.அந்த நெரிசலில் இற்ங்கும் வழியில் அருகருகே நின்ற நம் கைகள் கலந்தன.மெல்லக்கேட்டேன்”மெட்ராஸில் எங்க?” நீ மெல்லிய குரலில் உன் பெரியப்பா பற்றிய விவரங்களைக் கூறும்போது பிளாட்பாரத்திலிருந்து எப்படியோ உன்னைப் பார்த்து விட்ட உன் உறவினர் உன்னைப் பெயர் சொல்லி அழைக்க நம் பேச்சு நின்றது.இறங்கிய பின் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு நீ சென்று விட்டாய்,என் மனதையும் எடுத்துக்கொண்டு.

நீ சொன்ன தகவலில் சைதாப்பேட்டை என்பது தவிர ஏதும் காதில் விழாத நான் மறு நாள் சைதாப்பேட்டை முழுவதும் தேடி அலைந்து சோர்ந்து போனேன்.உன்னைப் பார்க்க முடியாமலே ஊர் திரும்பினேன்.பல நாட்கள் பைத்தியம் பிடித்தது போல் இருந்தேன்.காலம் என்னும் மருத்துவன் என்னைச் சரியாக்கினான்.ஆனால் உள்ளே அந்த சோகம் புதைந்துதான் கிடக்கிறது,இன்று வரை.

நீ எங்காவது கணவன்,பிள்ளைகள்,பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பாய்.நீ இருக்கும் இடத்தைச் சிறப்படையச் செய்து கொண்டிருப்பாய் என்பதில் ஐயம் இல்லை.

ஒரு கவிஞன் பாடினான்”சந்தனக் காடுகள் பற்றி எரிகையில் சந்தனமே மணக்கும்;என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில் ‘சக்கு’ என்றே ஒலிக்கும்”என்று.அது போல என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்தான் என் நெஞ்சோடு சேர்ந்து உன் நினைவும் வேகும்.

பின்னூட்டங்கள்

1) ராதா said;

அன்புள்ள ராதாகிருஷ்ணன்,தற்செயலாக உங்கள் பதிவைப்படித்தேன்.என்னைப் போலவே நீங்களும் அந்த நாளை இன்னும் மறக்காதிருக்கிறீர்கள் என்றறியும் போது உள்ளம் நிறைந்து போனது.நமது சந்திப்பு பற்றி என் கல்லூரித்தோழிகளிடம் சொன்னபோது அவர்கள் இதெல்லாம் உங்களுக்கு பொழுது போக்குக்காக செய்திருப்பீர்கள் என்றுசொல்ல நான் அவர்களிடம் சண்டையிட்டேன்.எனக்குத் தெரியும் ஏதோ வலுவான காரணங்களால்தான் நீங்கள் என்னைத் தேடி வரவில்லையென்று.இப்போது ஆண்டுகள் பல கடந்து விட்டன.நானும் ஒரு பொறுப்பான குடும்பத்தலைவியாய்,அன்பான கணவன்,ஆதரவான குழந்தைகள்,என்று மகிழ்ச்சியாய் வாழ்கிறேன்.நீங்களும் அதே போல் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பது நிச்சயம்.அடுத்த இடுகையில் உங்கள் மகிழ்ச்சியான குடும்பம் பற்றி எழுதுங்களேன்.

உங்கள் அன்புள்ள

ராதா விச்வனாதன்

2) கடவுள் said:

இந்தப் பின்னூட்டம் ராதாகிருஷ்ணன்,ராதா இவர்களுக்குத் தெரியாது.மற்றவர்களுக்கு மட்டுமே தெரியும் .

ராதா பொய் சொல்கிறாள்.அவள் மகிழ்ச்சியாக இல்லை.அன்பில்லாத முரட்டுக் கணவன்,அடங்காத பிள்ளைகள்.அவள் வாழ்க்கையே நரகம்தான். ராதாகிருஷ்ணன் எழுதுவான்,தன் சந்தோஷமான வாழ்க்கை பற்றி. அதுவும் பொய்தான்.அவன் வாழ்க்கையும் சோகமயமானதுதான்.இருவரும் அடுத்தவர் மகிழ்வுக்காகப் பொய் சொல்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்க்கை சொர்க்கமாக இருந்திருக்கும்.ஆனால் நான் அப்படி(விதி) எழுதவில்லையே.

[(பி.கு) மேலே கண்ட பின்னூட்டங்கள் இடுகையின் பகுதியே தவிர உண்மையான பின்னூட்டங்கள் அல்ல.கடவுள் என்பது உண்மையான கடவுளையே குறிக்கும். let there not be any confusion.

வெள்ளி, டிசம்பர் 10, 2010

சிறு பதிவர் சந்திப்பு!

( தலைப்பைப் பார்த்தவுடன் தோன்றும் ஒரு சந்தேகம்—சிறு பதிவர்களின் சந்திப்பா அல்லது பதிவர்களின் சிறு சந்திப்பா என்பதே!சுத்தமான பசுவின் பால் என்றால் பசு சுத்தமானதா அல்லது பால் சுத்தமானதா என்பது போல.இங்கு சிறு என்ற அடை மொழி எங்கு பொருந்தும் என்றால் இரண்டுக்கும்தான்.வந்த பதிவர்களும் சிறு பதிவர்களே(வயதில் அல்ல;பதிவுலக அனுபவத்தில்.சந்திப்பும் சின்னஞ்சிறிய சந்திப்பே!)

எனது பேருந்து வள்ளுவர் கோட்டத்தை அடைந்தபோது மணி சரியாக 9.13.40.போகும்போது யார் வந்திருப்பார்கள் என்று லிஸ்ட் போட வேண்டிய அவ்சியமே எனக்கில்லை.ஏனெனில் யார் வருவார்கள் என்று எனக்குத் தெரியும்!(இந்த ஆரம்பம் ஒரு பிரபல,மூத்த பதிவரின் பாணி!அவரளவுக்கு எழுத முடியா விட்டாலும் அவரின் ஆரம்பத்தையாவது காப்பி அடிப்போமே!)

வள்ளுவர்கோட்டம் நிறுத்தத்தில் யாராவது பதிவர்கள் நிற்கிறார்களா என்று பார்த்தேன்.ஒருவரும் இல்லை.அங்கிருந்து பொடி நடையாக நடந்து எம்.எல்.எம்.திருமண மண்டபத்தை அடைந்தேன்.மணி 9:30.வாசலில் என்னை வரவேற்க சக பதிவர் யாரும் நிற்கவில்ல.உள்ளே சென்றேன்.நல்ல கூட்டம்.சரசக்கும் பட்டுப் புடவைகள்.பள பளபளக்கும் தங்க நகைகள்.மணமணக்கும் மல்லிகைப் பூச்சரங்கள்.(யோவ்! அங்க ஆண்களே இல்லையா? –இருந்தார்கள்.ஆனால் இந்த மாதிரி இடங்களில் பெண்கள்தானே தனித்துத் தெரிகிறார்கள்!)-சரி புது வேட்டிகள்,சட்டைகள்!

என் பார்வை சுழன்று வந்தது.பின்னாலிருந்து என் தோளில் ஒரு கை விழுந்தது.திரும்பிப் பார்த்தேன்.சக பதிவர் வே.நடனசபாபதி (நினைத்துப்பார்க்கிறேன்).அவர் மனைவியுடன் வந்திருந்தார்.அறிமுகம் செய்து வைத்தார்.சிற்து நேரம் நானும் சபாபதியும் பேசிக் கொண்டிருந்தோம்.”நேற்று முன் தினம் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டு விட்டு ரயில் ஏறினேன்.மதுரையில் ஒரு திருமணம்.இன்று காலைதான் திரும்பினேன்.” என்றார்.

அப்போது கையில் ஒரு கோப்பை காப்பியுடன் எங்களைக் கடந்து சென்றார் பதிவர் வாசு.
”வாசு”-கூப்பிட்டேன்.காதில் விழவில்லை
”nighthawk”-(அவர் பதிவின் பெயர்)
திரும்பிப் பார்த்தார்..
அமர்ந்தார்.பேச ஆரம்பித்தோம்.
சமீபத்திய அவரவர் பதிவு பற்றிப் பேசினோம்.முதுகு சொறிந்து கொண்டோம்!
இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்தித்தோம்
வேறு சில நண்பர்கள் வந்தார்கள்.அவர்களுக்குப் பதிவு ஆரம்பிப்பது பற்றி விளக்கினோம்.(ஆமாம்—நம்ம சந்தேகத்தையே தீர்த்துக்க முடியவில்லை.இதில் அடுத்தவர் சந்தேகத்தை தீர்க்கிறோமாம்!)

”அங்க பாருங்க’—வாசு
டி.வி.யில் தாலியைக் க்ளோசப்பில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
தாலி கட்டியாயிற்று..

”அப்புறம் என்ன?கவரைக் கொடுத்துவிட்டுச் சாப்பிடப் போக வேண்டியதுதானே?”(பசிக்க ஆரம்பித்து விட்டதே!)

எழுந்தோம்.மேடை சென்றோம்.நண்பரிடம் கவர் கொடுத்தோம்.

”சாப்பிட்டு விட்டுப் போங்க.”
(எவனாவது சாப்பிடாமப் போவானா என்ன?)

சாப்பாட்டுக் கூடம் நோக்கி விரைந்தோம்.
”யார் கேடரிங்க்?” வழக்கம் போல் என் கேள்வி.
“செல்லப்பா,சார்”
“குட் .நன்னாருக்கும்”
சாப்பிட்டோம்.பீடாவை வாயில் திணித்தோம்.தாம்பூலப் பை வாங்கிக் கொண்டோம்.
”சரி அடுத்த பதிவர் சந்திப்பு எப்போ?”
”பார்க்கலாம்!”
கல்யாணமோ,காதுகுத்தோ வராதா என்ன?!

செவ்வாய், டிசம்பர் 07, 2010

யாக்கை நிலையாமை!

அந்த வீட்டுப் பெரியவர் வாழ்வின் கடைசிக்கட்டத்தில் இருந்தார்.மருத்துவர்கள் கூறி விட்டனர்,இன்றிரவோ, நாளையோ,என்று.பெரியவரின் மகன்கள்,மகள்கள்,மற்றும் நெருங்கிய உறவினர்கள் வந்து விட்டனர்.வீடு முழுவதும் சோகம் நிறைந்திருந்தது.தவிர்க்க முடியாத ஒரு முடிவை எதிர் நோக்கிஅனைவரும் காத்திருந்தனர்.

மறு நாள் விடிந்தது.பெரியவர் வாழ்வும் முடிந்தது.வீட்டிலிருந்து உரத்த அழு குரல்கள் எழுந்தன.ஓலமும் ஒப்பாரியும் வெளிப்பட்டது.இறுதி யாத்திரைக்கான எற்பாடுகள் செய்யப்பட்டன.சில காரணங்களால்எற்பாடுகள் தாமதமாகின.அந்த வீதியில் வசிக்கும் ஒரு முக்கிய நபர் பொறுமை இழந்தவராக விசாரித்துக் கொண்டிருந்தார்."நேரமாகுதில்லே. பொணத்த எப்ப எடுக்கப்போறாங்க?"இதே நபர் முன் தினம் விசாரித்துக் கொண்டிருந்தார்"முருகேசன்(பெரியவரின் பெயர்) எப்படிப்பா இருக்கான்.ரொம்ப நல்லவன்."

சிறிது நேரம் சென்று இறுதி யாத்திரை தொடங்கியது.ஆண்கள் சுடுகாட்டுக்குச் சென்றனர்.உடல் தகனம் செய்யப்பட்டது.அனைவரும் குளித்து வீடு திரும்பினர்.வீட்டில் இருந்த பெண்கள் குளித்து முடித்தனர்.வீடு கழுவி விடப்பட்டது.

மாலை வந்தது.மெள்ள மெள்ள அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.சூழ்நிலையை இயல்பாக்க யாரோ தொலைக்காட்சிப்பெட்டியை உயிர்ப்பித்தனர்.ஆரம்பமாயிற்று அவரவர் இயல்பு வாழ்க்கை.

"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே."--(திருமூலர்)

(உடல் விழுந்தபின் ஊரார் எல்லோரும் ஒன்று கூடி,ஓலமிட்டு அழுது,அதுவரையிருந்த பேரை மாற்றி,பிணம் என்று பேர் சூட்டி,சூரைமுள் நிறைந்த சுடுகாட்டிலே கொண்டு
போய்க் கொளுத்தி விட்டு,நீராடி,இவ்வண்ணம் ஒருவரிருந்தார் என்ற நினைப்பும் நீங்கினார்கள்.)

( என் மற்ற பதிவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது-சிறு சேர்க்கையுடன்)

சனி, டிசம்பர் 04, 2010

குறள் சொல்லாக் கதை!

"குறை ஒன்றும் இல்லை-----”--கைபேசி-
"சொல்லு காயத்ரி,என்ன விஷயம்?"
"இன்னிக்கு சாயந்திரம் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவே அஷ்வின்?"
"எங்க எம்.டி.என்னைக் கூப்பிட்டு ரொம்ப முக்கியமான வேலை ஒண்ணைக் குடுத்திருக்காரு.இன்னைக்கு லேட்டா உக்காந்தாவது முடிச்சாகணும்.ஏன் கேட்ட?"
"இல்லே,இன்னைக்கு நான் கொஞ்சம் சீக்கிரமே வந்துடுவேன்.எங்கேயாவது வெளியே போயிட்டு டின்னரையும் முடிச்சுட்டு வந்துடலாம்னு நெனச்சேன்."
"ரொம்ப வருந்துகிறேன்,என் இனிய இதயமே!மற்றொரு நாள்?"
"அதை அப்போப் பார்த்துக்கலாம்.இன்று நான் வேறு ஏதாவது செய்து கொள்கிறேன்."


இரவு.வெளியே எங்கும் செல்ல மனமின்றி பீட்சா வரவழைத்துச் சாப்பிட்டு விட்டு,சிறிது நேரம் டி.வி.பார்த்துவிட்டு ,படுக்கையில் படுத்தபடியே புத்தகத்தைப் புரட்டிவிட்டுத் தூங்கிப் போனாள் காயத்ரி. தன்னிடம் இருக்கும் சாவியை உபயோகப்படுத்தி அஷ்வின் கதவைத் திறக்கும்போது விழிப்பு வந்தது.கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி இரண்டு.அஷ்வின் உள்ளே வந்து உடை மாற்றிக் கொண்டு படுக்கையில் அவளருகில் படுத்தான்.அவள் அவனை அணைத்து அவன் உதடுகளைத் தன் உதடுகளால் ஒற்றினாள்.
"காயத்ரி,நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்"சொல்லிய படியே அவன் தூங்கிப் போனான்.

மறு நாள்.
"யே தில் யே பாகல் தில் மேரா--------"அலைபேசி
"ஹலோஅஷ்வின்,சொல்லு."
"ஹை,காயத்ரி,ஒரு மகிழ்வான செய்தி.இந்த மாதத்திலிருந்து எனக்கு ரூ.10000/= சம்பள உயர்வு.இதை இன்று மாலை கொண்டாடலாம்,சரியா"



"வருந்திகிறேன், அஷ்வின்.இன்று எங்கள் அலுவலகக்கணினி செயல்பாட்டில் கொஞ்சம் பெரிய சிக்கல்.சரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்ல முடியாது.எப்படியாயினும்,வாழ்த்துகள், அஷ்வின்"

"எனக்கு ஏமாற்றம்தான்;உடன் பணி புரியும் யாரையாவது அழைத்துச் சென்று கொண்டாடி விடுகிறேன்"

"யே தில் யே பாகல் தில் மேரா--------"அலைபேசி-
"ஹல்ல்லோ,என்ன காயத்ரி?'
"எங்க இருக்கே அஷ்வின்?"
"பார்க் ஷெரடன்.மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்"
"உடன் யார்?வழக்கமான நண்பர்களா?எதுவும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்."
"இல்லை,இல்லை,நீ நினைப்பது போல் இல்லை.ஒரு நண்பியுடன் இருக்கிறேன்."
"யார்?"
"உனக்குத் தெரியாது.புதிதாகச் சேர்ந்தவள்.என் கீழ் பணி புரிகிறாள்.சுமிதா என்று பெயர்."
"ஒகே.நான் வீட்டுக்குக் கிளம்புகிறேன்.நீ சும்மா இருந்தால் வந்து அழைத்துப் போக இயலுமா என்று கேட்பதற்காகத்தான் பேசினேன்.நான் ராஜேஷை வீட்டில் கொண்டு போய் விடச் சொல்லி விடுகிறேன்."

இப்படித்தான் பலஇரவுகள் இவர்களுக்குக் கழிகின்றன.வேலைப் பளு,மாறுகின்ற இரவு நேர வேலை,வேலையில் இருக்கும் இறுக்கம்,அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் இவற்றின் காரணமாகப் பாதி இயந்திரங்கள் ஆகிப் போனார்கள்.ஒருவருக்கு மற்றவர் துணை தேவைப் படும் போது அது கிடைப்பதில்லை.

இவர்கள் காதலித்து மணந்தவர்கள். அப்போதாவது விடுமுறை நாட்களில் சந்தித்து மனம் விட்டுப் பேசி ஒருவர் அண்மையில் மற்றவர் மகிழ்ந்ததுண்டு.பார்க்காத இடைவெளியில் மனம் ஏங்கியதுண்டு.அப்போது இருவர் ரசனையும் ஒன்று போலத் தோன்றியது. ஒருவருக்காகவே மற்றவர் படைக்கப் பட்டவர் எனத்தோன்றியது. இப்போதோ--?அவள் ஒவியக் கண்காட்சிக்கு என்று சொன்னால் அவன் முகம் சுளிக்கிறான்.சினிமா போகலாம் எனச் சொல்கிறான்.அவள் கர்னாடக சங்கீதம் என்றால் அவன் மெல்லிசை என்கிறான். அப்போது காதலும் இருந்தது;காமமும் இருந்தது.
இப்போது,காதலிக்க நேரமில்லை;காமத்துக்கும் நேரமில்லை.என்றோ ஒரு நாள் முயக்கமும் வெறும் உடல்களின் கூடலாகத்தான் இருக்கிறது.

ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது-அதிகமான மண முறிவுகள்(மன முறிவுகளால் வந்தவை) மென் பொருள் துறையில் இருக்கும் தம்பதியரிடையேதான் எற்படுகின்றன என்று.

பணம் மட்டுமே வாழ்க்கையாகுமா?

இவர்களை ”இதுதான் காதல்,இதுவே காதல்” என்ற என் இடுகையின் (24-11-2010) நாயகனான இரவுக் காவல்காரருடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவர்கள் காதலித்து மணர்ந்தவர்கள்.

அந்த வயதான மனிதரும் ,இறந்து போன அவர் மனைவியும் மணந்தபின் காதலிக்கத் துவங்கியவர்கள்.

எது நின்றது? வென்றது?

வியாழன், டிசம்பர் 02, 2010

ஞானம்.

அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டான்.உணவுக்காக ஊருக்குள் செல்வது கூட குறைந்து போனது.அவனைத்தேடி அவன் இருப்பிடத்துக்கே உணவு வர ஆரம்பித்தது.மக்கள் அவன் தியானம் முடியும் வரை காத்திருந்து தங்கள் குறைகளை அவ்னிடம் சொல்ல ஆரம்பித்தனர்.அவனிடம் சொல்வதனாலேயே தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதாக நம்பினர்.அவனைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் அவன் அருட்பார்வைக்காகக் காத்திருந்தது.அனைவரும் அவனுக்காகத் தின் பண்டங்களும்,பழங்களும் மற்ற உணவுப்பொருட்களும் கொண்டு வந்தனர்.அவன் அனைத்தையும் அங்கு வரும் அவர்களுக்கே பிரசாதமாகக் கொடுத்தான்.

ஒரு நாய் உணவுக்காக அங்கு வந்து அவன் தரும் உணவைச்சாப்பிட்டு விட்டு அங்கேயே கிடக்க ஆரம்பித்தது.என்றாவது அந்த நாய் எங்காவது சென்று விட்டு திரும்புவதற்கு நேரமானால் அவன் கவலைப்பட ஆரம்பித்தான்.அவனையும் அறியாமலே அந்த நாயின் மீது அன்பு அதிகமாயிற்று.ஒரு நாள் காலை அவன் கண் விழித்தபோது அந்த நாய் இறந்து கிடக்கக் கண்டான்.துக்கம் மேலிடக்கண்ணீர் பெருக்கினான்.சிறிது நேரம் கழித்து துக்கம் குறைய அவன் யோசித்தான்"ஏனிந்தத் துக்கம் ?எதற்காக அழுதேன்? யாருக்காக அழுதேன்?இதற்குக்காரணம் தேவையற்று நான் வைத்த ஆசை;பற்று.இதுவன்றோ மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணம்?இனி இறைவனை வேண்டும்போது கூட ஆசைகளை அவன் முன் வைத்து வேண்டக்கூடாது.”

அவன் ஞானியானான்.

"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனொடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தமாமே."---(திருமூலர்)

(பொருள்:எவ்வகைப்பட்ட ஆசைகளையும் அறவே விட்டு விடுங்கள்.ஒருவன் எவ்வளவு ஆசையுடையவனோ அவ்வளவு துன்பங்கள் உறுவன்.அவன் ஆசையை எவ்வளவு விடுகின்றானோ அவ்வளவு இன்புறுவன்.ஆதலால்,ஈசனோடு வேண்டுவது எனினும் ஆசையின்றி,அவனை வழிபடுவதே அறிவுடமை ஆகும்.)

(எனது மற்ற பதிவிலிருந்து சில மாற்றங்களுடன் இறக்குமதி செய்யப் பட்டது)

புதன், டிசம்பர் 01, 2010

காதல்-திருக்குறள் கதை-நிறைவுப் பகுதி

அவர்கள் இருவரும் கைகோத்தபடி,ஹாலுக்குள் நுழைந்தனர். அவனுக்கும் ஓவியத்தில் விருப்பமும் சிறிது புரிதலும் இருந்தாலும்,அவள் ஒவ்வொரு ஒவியத்தின் முன் நின்று அதை விமரிசித்த பாங்கைக் கண்டு வியந்தான்.ஒரு ஓவியத்தின் முன் நின்று”வாவ்,இளங்கோவின் ஒவியம்;வண்ணங்களை அவர் கையாளும் விதத்தை பாருங்கள் அச்வின்!” என்று வியந்து பாராட்டும்போதே அருகில் வந்து நின்ற மனிதர் அவளைப் பார்த்து”ஹலோ காயத்ரி” என்றழைக்க,”மிஸ்டர் இளங்கோ!எப்படியிருக்கீங்க.! இவர் என் நண்பர் அச்வின் குமார்—அச்வின்,மிஸ்டர் இளங்கோ” என்று அறிமுகம் செய்து வைத்து விட்டு,”இப்போதுதான் உங்கள் ஒவியத்தின் சிறப்புப் பற்றி அச்வினிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்”என்றாள்.

”ஹலோ” என்றவாறு கைகுலுக்கிய அவர் காயத்ரியிடம் சொன்னார்”இன்றுதான் உங்களை ஒரு கண்காட்சியில், தனியாகவின்றி, ஒரு துணையுடன் பார்க்கிறேன்..மிக விசேஷமான நண்பர் என நினைக்கிறேன்”காயத்ரியின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது போல் குமாருக்குத் தோன்றியது.ஒவியங்களை ரசியுங்கள் என்று சொல்லி அவர் சென்று விட்டார்.

அவர்கள் கண்காட்சியை முழுதும் இரு முறை சுற்றி வந்தனர்.வெளியே வந்து மதிய உணவு அருந்தினர்.அப்போது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
”நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக்
குறுமுறுவல் பதித முகம்
தரளம் மிடைந்து ஒளி தவழக் குடைந்து இரு
பவளம் பதித இதழ் ”
என்ற நா.பா.வின் வரிகள் மனதில் ஓடின.
அவளது அழகு அவனைப் பேச்சற்றவனாக ஆக்கியது.அதே நேரம் ஒரு பெண் அவர்களைகடந்து செல்லும்போது அவனைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.காயத்ரி சிறிது பொய்க்கோபத்துடன் கேட்டாள்”என்ன, அவளைப் பார்த்ததும் பேச்சே வரவில்லையோ?’

” நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று ”

(அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்துநோகினாலும்,யாரை நினத்து ஒப்புமையாக என்னைப் பார்க்கிறீர் என்று சினம் கொள்வாள்). அவளிடம் கெஞ்சி,கொஞ்சி, தணிந்து, பணிந்து அவளது ஊடலை நீக்க வேண்டியதாயிற்று.


இப்படியாக அவர்கள் காதல் வளர்ந்தது.ஒரு கட்டத்தில் இனி திருமணத்தை தள்ளிப் போடக் கூடாது என்று முடிவு செய்தவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினர்.எந்த வித எதிர்ப்பும் இடையூறுமின்றி திருமணம் நடந்தேறியது.

முதல் இரவு—
அத்தனை நாட்கள் வெறும் கைகளின் தொடுகையில் மட்டுமே இருந்த அவர்களுக்கு உரிமம் வழங்கப் பட்டு விட்டது.
அவ்ர்கள் தழுவிக் கொண்டனர்.ஒருவருக்குள் ஒருவர் புதைந்து போக வேண்டும் என நினைப்பது போன்ற ஒரு தழுவல்.இதய உணர்வுகளுக்கு வடிகாலே போன்ற தழுவல்.அதில் வெறும் காமம் இல்லை.அளவற்ற காதல் இருந்தது.

“வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.”
(காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல்,ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும்)

அவள் முகத்தை அவன் முகம் நெருங்கியது.இதழ்களை இதழ்கள் நெருங்கின.

“ஆரஞ்சுத் தேன்சுளையா !
அங்கென்ன தத்தையொன்று
கூரலகால் கொத்திவந்த
கோவையா- யார்தான்
பவளத்தைக் கீறிவைத்தார்
பார்ப்போம் ! அடடா
அவளின் இதழா
அவை.
(நன்றி,சிவகுமாரன்)

கவிதையான
உன்னுதட்டில்
பொருள் தேடிக்குனிந்தேன் !
அர்த்தங்களை மறந்துவிட்டு
இப்போது
தேடுதலிலேயே
லயித்து விட்டேன் !(நன்றி,இனியவன்)

இணைந்தன...

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.”
(மென்மையான மொழிளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.)

இனி அங்கு இருப்பது நாகரிகமில்லை.
அவர்கள் இனிதே வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.

திங்கள், நவம்பர் 29, 2010

வரலாறு-அத்தியாயம்-4--ராஜியும் முதுமையும்

இது ஒரு தொடர்.2009 ஆம் ஆண்டில் எழுதத்தொடங்கி,நடுவில் தேக்கமடைந்து விட்ட தொடர்.
இந்தப் பதிவைப் படிக்கும் முன் பழைய இடுகைகளையும் தயவு செய்து படித்து விடுங்கள்அப்போதுதான் தொடர்ச்சி இருக்கும்.
பழைய இடுகைகள்—
http://chennaipithan.blogspot.com/2009/03/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_15.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_22.html
http://chennaipithan.blogspot.com/2009/05/3a.html
இனி வரலாற்றைத் தொடர்வோம்.
-*-*-*-*-*
ராஜிக்கு இந்த ஜூலையில் 92 வயது முடிந்துவிட்டது.திடீரென்று உடல் தளர்ந்து விட்டது.முன்பே தளர்ந்து விட்ட உடல்தான்.ஆனால் அவளது அசாத்திய மன உறுதி, தளர்ச்சியை வென்று முன் நின்றது.ஆனால் அந்த மன வலிமை ஒரே நாளில் அகன்று விட்டது.எனவே உடல் வென்று விட்டது.அவள் முன்பெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாள்”எங்காத்திலேயே என் சித்திதான் 92 வயது வாழ்ந்தாள்.நானும் அதே மாதிரி இருப்பேன் போலிருக்கு”என்று.எனவே அந்த 92 வயது என்பது மனோதத்துவ ரீதியாகவும் அவளைப் பாதித்திருக்கிறது.

இதுவரை,மெல்ல நடந்தாலும்,துணையின்றி நடந்த அவள்,இப்போது கம்பூன்றி நடக்கிறாள்.இரவில் பாத்ரூம் செல்லும்போது அவளது பிள்ளையின் அறிவுரைப்படி வாக்கர் உபயோக்கிறாள்.காது மந்தமாகி விட்டது.ஏதாவது படிக்க நினத்தாலும் நீண்ட நேரம் படிக்க முடிவதில்லை.ஆனாலும் காலையில் வழக்கம் போல் சீக்கிரம் குளித்து(நாற்காலியில் அமர்ந்துதான்), ஸ்லோகங்கள் சொல்கிறாள்.ராம ஜபம் செய்கிறாள்.அவளது பொழுது போக்கு கச்சேரி கேட்பது, ஓரிரண்டு தொலக்காட்சித்தொடர்கள் பார்ப்பது,பிடித்த் திரைப்படம் ஒளிபரப்பப் பட்டால் பார்ப்பது-(அதுவும் பார்க்கும்போதே உறக்கம் வந்து விடுகிறது.)அடிக்கடி சோர்ந்து படுக்க வேண்டி நேர்கிறது.இப்போதெல்லாம் அவள் இறைவனிடம் வேண்டுவது ஒன்றுதான்”ஆண்டவா,நானும் கஷ்டப்படாமல்,மத்தவாளையும் கஷ்டப் படுத்தாமல் என்னைக் கொண்டு போயிடு”

இத்தகைய முதியவர்களின் உபாதைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா?அவர்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் எத்தகைய சோதனை என்பதை உணர்கிறோமா?இந்த வயதில் அவர்களுக்குத் தேவை வெறும் மூன்று வேளை சோறில்லை. அன்பு;சுற்றத்தின் அன்பு;சூழலின் அன்பு.ஆதரவான பேச்சு. இதெல்லாம் எத்தனை வசதிகள் நிறைந்த முதியோர் இல்லமாக இருந்தாலும் அங்கு கிடைக்குமா?

இப்போதெல்லாம் ராஜி அடிக்கடி பழைய நினைவுகளில் ஆழ்ந்து விடுகிறாள்.

வாருங்கள்!நாமும் அவற்றில் பங்கு கொள்வோம்.

(தொடரும்)

வெள்ளி, நவம்பர் 26, 2010

இறைத்தத்துவம்

அவன் அந்த ஆற்றங்கரைக் கோவில் மண்டபத்திலேயே தங்க ஆரம்பித்தான்.அவனது பெரும்பகுதி நேரம் தியானத்திலேயே கழிந்தது.பசிக்கும்போது ஊருக்குள் சென்று யாரிடமாவது உணவு கேட்டுச் சாப்பிடுவான்.அந்த ஊரில் யாரும் அவனுக்கு உணவிட மறுப்பதில்லை.அனைவருக்கும் அவனிடம் ஒரு மரியாதை இருந்தது.

ஒரு நாள் அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒருவன் கையில் கற்களுடன் எதையோ தேடுவது போல்நின்று கொண்டிருந்தான்.

அவனைப்பார்த்ததும் அந்த ஒருவன் சொன்னான்"சாமி,ஒரு நாயி எப்பப்பார்த்தாலும் என்னைக் கண்டா கொலச்சுக்கிட்டே இருக்கு.அந்த சமயத்தில அத அடிக்கக் கல்லத் தேடினா கல்லு கெடைக்க மாட்டேங்குது.இப்ப கல்ல எடுத்து வச்சுக்கிட்டு நாயத் தேடினா அதக்காணும்.அந்தக்காலப் பெரியவங்க சரியாத்தான் சொன்னாங்க"நாயக்கண்டாக் கல்லக்காணும்,கல்லக்கண்டா நாயக்காணும்"அப்படின்னு.

அவன் சிரித்தான்."இந்த மக்கள் உண்மையான பொருளை விட்டு விட்டு வேறு ஏதோ பொருளைக்கற்பித்துக்கொள்கிறார்களே"என்று நினைத்தான்.
பின் சொன்னான். "அதற்குப்பொருள் அப்படியல்ல.கல்லில் செய்யப்பட்ட ஒரு நாயின் சிலையில் நாயின் உருவத்தை ரசித்துப்பார்க்கும்போது கல் கண்ணுக்குத்தெரிவ்தில்லை.அது என்ன கல்,செங்கல்லா,கருங்கல்லா என்று ஆராயும்போது நாய் தெரிவதில்லை.அதுதான் பொருள்."

மற்றவன் சொன்னான்"இதெல்லாம் எங்களுக்கு என்ன சாமி தெரியும்?நீங்க சொன்னாத் தெரிஞ்சுக்கறோம்."

அவன் நினைத்தான்."இறைத்தத்துவமும் இது போலத்தானே.ஐந்து பூதங்களாகிய நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் இவற்றை வியந்து அவற்றில் லயிக்கும் போது இறைவன் மறைந்து விடுகிறான்.பஞ்ச பூதங்களுக்கும் காரணமான பரம்பொருளை நினைக்கும் போது அவை மறைந்து இறைவனே நிற்கிறான்.'

அவன் கோவில் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.-(திருமூலர்)

(பொருள்:மரத்தால் செய்யப்பட்ட யானைச் சிற்பத்தைப் பார்க்கும்போது,மரத்தைப் பற்றிய உணர்வு அறிவு இருப்பதில்லை.மரம் எத்தன்மையது என்று பார்க்கும்போது,யானைக் காட்சி மறைந்து விடுகின்றது.அது போல்,பரத்தால் விளக்கம் பெற்ற பார் முதலிய பூதங்களைப் பார்க்கும் போது பரமானது உணர்வுக்கு வருவதில்லை.குருவருளால் பார்க்கும்போது பரமே காட்சி தந்து பார் முதலிய பூதங்கள் பரத்தில் மறைந்து விடும்.)

(பின் குறிப்பு:என் மற்ற பதிவில் 2007 ஆகஸ்ட் 7ஆம் தேதியிட்ட பதிவு,சிறிது விரிவாக்கப் பட்டு இங்கு இறக்குமதி செய்யப் பட்டிருக்கிறது.)

வியாழன், நவம்பர் 25, 2010

இரண்டல்ல(அத்வைதம்)

எனது மற்றோர் பதிவு இருக்கிறது.அது ஆன்மீகப் பதிவு.சில மாதங்களாக செயலற்று இருக்கிறது.அப்பதிவிலிருந்து,எனக்குப் பிடித்த சில இடுகைகளை இங்கே இறக்குமதி செய்து,இப் பதிவையே ஒரு பல்சுவைப் பதிவாக மாற்ற நினைத்துள்ளேன்.
படித்துப் பாருங்கள்.கருத்துக் கூறுங்கள்.இதோ,முதல் பதிவு---

அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும், தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும், சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால், இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம், ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு, ஒவ்வொரு ஊராய் அலைந்து, அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக, கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.

தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."

சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"

அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி"

"சீவன் எனச் சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சிவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)

(எளிய பொருள்-சீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு இல்லை.சீவாத்மா, பரமாத்மாவை அறிவதில்லை.அவ்வாறு சீவாத்மா பரமாத்மாவை அறிந்து கொண்டால்,சீவாத்மாவும் பரமாத்வாவும் ஒன்றாகி விளங்கும்.)

புதன், நவம்பர் 24, 2010

இதுதான் காதல்!இதுவே காதல்!

நேற்று இரவு.
மணி ஒன்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது.
வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்து பார்த்தேன்.
எங்கள் குடியிருப்பின் இரவுக் காவல்காரர் நின்று கொண்டிருந்தார்,நெஞ்சை லேசாக அழுத்திப் பிடித்தபடி.முகத்தில் வேதனை.

பதறிப் போய்க் கேட்டேன்”.என்ன பெருமாள்,உடம்பு சரியில்லையா?”
அவர் இல்லை என்று தலையசைத்தவாறே கேட்டார்”குடிக்கக் கொஞ்சம் சுடு தண்ணி குடுங்க சார்”
ஃபிளாஸ்க்கில் வெந்நீர் இருந்தது.டம்ளரில் ஊற்றிக் குடிக்கும் சூடாகக் கொடுத்தேன்.
படியில் அமர்ந்து வெந்நீரை அருந்தினார்.தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.புறப்படத் தயாரானார்.

நான் கேட்டேன்”என்ன பெருமாள்,என்ன ஆச்சு?”
சிறிது தயங்கினார்.பின் சொன்னார்”என் சம்சாரம் போன வருஷம் காலமாயிட்டா.இன்னிக்குக் காலையிலேதான் வருஷத் திதி கொடுத்தேன்.இப்போ உட்காந்துக் கிட்டு இருக்கும்போது,அவ நெனைப்பு ரொம்ப அதிகமா வந்து.உடம்பெல்லாம் பட படன்னு வந்துடுச்சு.எல்லாமே ஒரே இருட்டான மாதிரி இருந்திச்சு.அதுதான் சார்”

அவரது வயது 65 என்பது எனக்கு முன்பே தெரியும்.
நான் கேட்டேன்”உங்களுக்கு எந்த வயசிலே கல்யாணமாச்சு?”
“22 வயசிலியே முடிச்சு வைச்சிட்டாங்க சார்”

நான் யோசித்தேன்.42 ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பின் பிரிந்து சென்ற மனைவியை நினத்து,அவளது பிரிவின் தாக்கத்தால்,அவர் உள்ள அளவில்,அதன் காரணமாக உடல் அளவில் பாதிக்கப் படுகிறார் என்றால்,அந்த அன்பு,அவர்களிடை இருந்த நெருக்கம்,அவர்களின் பரஸ்பரப் புரிதல் எத்தனை உயர்வானது?
அது வெறும் அன்பா?மண உறவா?நெருக்கமா?
அதற்கும் மேல்........
இதுதான் காதல்.உண்மைக் காதல்.

அவருக்குத் தொப்பியைத் தூக்கி வணக்கம் சொல்கிறேன்.

இந்தக் காதலுக்கு அவரின் உணர்வுகளே தாஜ் மஹால்!

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

திங்கள், நவம்பர் 22, 2010

காதல்-திருக்குறள் கதை-பகுதி-3

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவள், தோளில் தட்டி விட்டுச் சென்ற இடம் இனித்தது.தோளில் எப்படி இனிக்கும் என்று யோசிக்காதீர்கள்!இது நாவின் சுவையல்ல;நெஞ்சின் சுவை.அதே சமயம் அவள் செல்வது நெஞ்சில் ஒரு சுகமான வலியாகப் பரவியது.ஒரு வாரம்!ஒரு வாரம் அவளைப் பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறோம் என்று நினைத்தாலே நெஞ்சின் வலி கூடியது;ஆனால் அடுத்த ஞாயிறன்று அவளைக் கட்டாயம் பார்க்கப் போகிறோம் என்ற நம்பிக்கை உடல் முழுவதும் ஒரு பரவசமாய்ப் பரவியது.ஒரே ஒரு பிரச்சினை.இந்த ஏழு நாட்கள் தொலைபேசக் கூடாது என்று அவ்ள் கண்டிப்பாகச் சொல்லிச் சென்று விட்டாள்.கடவுளே!நாட்களை வேகமாக நகரச்செய் என்று வேண்டினான்.


அந்த ஞாயிறும் வந்தது.மறுநாள் அவளைச் சந்திக்கப் போவதை நினைத்து நினத்து முதள் நாள் இரவு நித்திரை போயிற்று.ஞாயிறு காலை எழுந்தது முதல் நிலை கொள்ளவில்லை

ஒரு லக்னோவி குர்த்தா பைஜாமா அணிந்தான்(போகும் இடம் ஒரு ஒவியக்கண்காட்சி அல்லவா?).’ஹ்யூகோ பாஸ்’ செண்ட்டைத் தெளித்துக் கொண்டான்.புறப்பட்டான்.தான் முதலில் சென்று அவளை வரவேற்க வேண்டும் என்று எண்ணினான்.ஆனால் அவள் முந்திக் கொண்டாள்.காலரியின் நுழை வாயிலிலேயே காத்திருந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.ஒரு வாரப் பிரிவு முடிந்து இன்று பார்க்கும்போது எத்தனையோ பேச வேண்டும் என்ற எண்ணியதெல்லாம் அந்தக் கணத்திலே மறந்து போனது.கண்கள் பார்த்துக் கொண்டே இருந்தன.ஆயிரம் செய்திகள் பேசின.இதயங்கள் உருகி ஓடிச் சங்கமித்தன.அங்கு பேச்சா முக்கியம்?

”கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”

(கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமல் போகின்றன.)

அவள் கைகளை மெல்லப் பற்றினான்.என்ன மென்மை!இன்னும் பார்வைகள் விலகவில்லை.சுற்றுப்புறத்தை மறந்து ஒரு தனி உலகில் நின்றனர்.அவர்களை தாண்டிச் சென்ற சிலர் அவர்களப் பார்த்துச் சிரித்தவாறு சென்றனர்.

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.

(யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால்,அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக் கண்டு நகைக்கின்றனர்.)

“இவள்தான்,இவள்தான் நான் தேடிக் கொண்டிருந்த என் துணை.இவளே என்னில் ஒரு பாதி.இவள் இல்லாமல் எனக்கு ஒரு வாழ்க்கையே இல்லை.இறைவா இவளை என்னிடம் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி”—அவன் எண்ண ஒட்டம்.

”இவர்தான்.எந்த ஆடவனைப் பார்க்கும்போதும்,எந்த ஆடவோனோடு பேசும்போதும் ஏற்படாத ஒரு மகிழ்ச்சி இவரைப் பார்க்கும்போது என்னில் அலையலையாய்ப் பரவுகிறதே.இவரே என் துணை. இவரே இனி என் வாழ்க்கை;வாழ்க்கையின் பொருள்.”-அவள் எண்ண ஓட்டம்

கொஞ்ச நேரத்தில், கனவுலகை விட்டு நினைவுலகுக்கு வந்தனர்.

இனிய பிதற்றல்கள் ஆரம்பித்தன.


அவர்களை அவர்கள் உலகத்திலே கொஞ்சம் தனியாய் இருக்க விடுவோமா?

(இன்னும் வரும்)

ஞாயிறு, நவம்பர் 21, 2010

உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும்?(பாகம்-2)

இத்தலைப்பில் வந்த என் முந்தைய பதிவுக்குப் பல நண்பர்கள் பின்னூட்டமிட்டுத் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். அவற்றின் மூலம் எனக்குக் கிடைத்த மிகத் தெளிவான செய்தி! என் பதிவில் பின்னுட்டம் வர வேண்டும் என்றால் நான் அடுத்தவர் பதிவுகளைப் படித்து(படிக்காமலும்!) பின்னூட்டம் இட வேண்டும்!
இந்த அடிப்படையில் நான் ஒரு பின்னூட்ட ஆராய்ச்சி செய்தேன் அதன் கண்டுபிடிப்புகள் கீழே---


1.)உங்கள் நோக்கம் பிரபல பதிவுகளைப் படித்து,ரசித்துப் பின்னூட்டம் இடுவது மட்டும்தான் என்றால்,அவ்வாறே செய்யுங்கள். ஆனால், அதற்குப் பதிலாக,அவர்கள் உங்கள் பதிவில் பின்னூட்டமிடுவார்கள் என்று எதிர் பார்த்துச் செய்யாதீர்கள்.கடமையைச் செய்யுங்கள்;பலனை எதிபாராதீர்கள்.பின்னூட்டம் வந்தால் அது ஒரு போனஸ்.


2)சில பதிவர்கள் குழுக்களாகச் செயல் படுகிறார்கள்.குழுவின் உறுப்பினர்கள் பதிவுகளில் மாற்றி,மாற்றி பின்னூட்டம் இடுகிறாரகள்
(உ-ம்) அ வின் பதிவில் ஆ,இ,.ஈ,உ ஆகியோர் பின்னூட்டம் இட்டிருந்தால்,ஆவின் பதிவில் அ,இ,ஈ,உ அவர்கள் பின்னூட்டம் கட்டாயம் இருக்கும்.இவ்வாறு மாற்றி மாற்றி நடக்கும்..


இப்படி ஒரு குழுவில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் .நீங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டால்,அது பல விதங்களில் சௌகரியம்.

அ).நீங்கள் எழுதுவது ஓட்டையாக இருப்பினும், பாராட்டுப் பின்னூட்டங்கள் வந்து சேரும்.

ஆ)கவிதை என்ற பெயரில் என்ன எழுதினாலும் அது கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும்.ஹைக்கூ இலக்கணத்தில் அடங்காதவையும் ஹைக்கூவாகப் போற்றப்படும்..

இ)படிக்கப் படாமலே கூடச் சில பின்னூட்டங்கள் வரக்கூடும்.அது மிக எளிது—super,nice என்ற ஒரே சொல்லில்.

ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணர்வதற்கு ஒரு சாதனமாக பதிவுலகை நாடியிருந்தால், பின்னூட்டங்கள் பற்றிக் கவலைப் படாதீர்கள்.எழுதுங்கள்.எழுதிக் கொண்டேயிருங்கள்.நீங்கள் எழுதியவற்றை வேண்டும் போதெல்லாம் நீங்களே படித்து ரசித்துக் கொள்ளலாம்—தன் அழகைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல! !

வாருங்கள்! பதிவுலகை நம் எழுத்துக்களால் நிரப்புவோம்!
(நண்பர்களே!இது முழுக்க முழுக்க ஒரு நகைச் சுவைப் பதிவு.லேபிலில் நானே குறிப்பிட்டிருக்கிறேன்—நகைச்சுவை,மொக்கை என்று)

(குமார்,காயத்ரி,உங்களைக் காக்க வைத்து விட்டேன்.{காதல்-திருக்குறள் கதை} அப்பாராவ் காலரியில்தானே இருக்கிறீர்கள்?இதோ வந்துவிட்டேன்.)

சனி, நவம்பர் 20, 2010

வெட்கமில்லை,வெட்கமில்லை!

நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்--(பாரதி)

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி-கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி!

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ? --(பாரதி)

வெட்கமில்லை ,வெட்கமில்லை-இதில் யாருக்கும் வெட்கமில்லை
--(பாரதி தாசன்)

(புதிய இந்தியாவை படைக்கப்போகும் சிறுவர்களே!உங்களுக்காக)

அச்சம் தவிர்.
ரௌத்திரம் பழகு.
உலுத்தரை இகழ்.

பாதகம் செய்வோரைக் கண்டால் நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா. --(பாரதி)

வியாழன், நவம்பர் 18, 2010

உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும்?

”உன் பதிவுக்கு அதிகமான பின்னூட்டங்கள் வரணுமா?”என் நண்பன் கேட்டான்.அவர் பதிவர் அல்ல.ஆனால் பல பதிவுகளையும் படிப்பவர்.

”நானும் ’மாங்கு மாங்கு’ன்னு எழுதித்தான் பார்க்கிறேன்.சமீபத்துல நான் எழுதின பல பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் குவியும்னு நினைத்தேன்.ஒண்ணும் இல்லை.வருகையெல்லாம் சுமாரா இருக்கு;ஆனா பின்னூட்டம் வருவதில்லை.சொல்லுப்பா உன் யோசனையை.” நான் சொன்னேன்.

“கண்ணா,யோசனையெல்லாம் ஓசியில் கிடைக்காது. ரெண்டு பெக் வாங்கிக் குடு.சொல்றேன்.”

”மகா பாவி!எனக்கு அந்தப் பழக்கம் கிடையாதுன்னு உனக்குத்தெரியுமில்லே ”

”உன்னை யாருப்பா குடிக்கச் சொன்னது?எனக்கு வாங்கி ஊத்து!”

“சரி,தொலைக்கிறேன்.ஆனால் நட்சத்திர ஓட்டல் எல்லாம் கிடையாது.நமக்கு அந்த பெரிய எழுத்தாளர் அளவுக்கு வசதியோ,வாய்ப்போ கிடையாது”

”தோ பாரு, தி.நகரில் ஓட்டல் அருணா போகலாம்.அங்கதான் பல பெரிய பதிவர்கள் உக்காந்து யோசிக்கிறாங்களாம்.”

“சரி வா, போய்த்தொலைவோம்”

போனோம்.நண்பன் ஆரம்பித்தான்.நான் ஒரு ஸ்ப்ரைட். ”உம் .உன் யோசனையைச் சொல்லு”

“இரப்பா.சுருதி சேரட்டும்.”

ஒரு பெக் முடிந்தது.அடுத்தது வந்தது.

“இப்ப, சொல்லு.”

“இதோ பாரு.நீ நல்லா சுவாரஸ்யமா எழுது.பின்னூட்டம் தன்னால வரும்.”

எனக்கு சுர் ரென்று கோபம் வந்தது.முடியாத விஷயத்தைப் பற்றி இவன் சொல்வதற்கா செலவு?

“நடக்கக் கூடியதா சொல்லு.என்னால முடிஞ்ச அளவுக்குத்தான் எழுத முடியும்.”

”அப்ப ஒண்ணு செய்யேன்.உன் நண்பர்களுக்கெல்லாம் உன் பதிவு பத்திச் சொல்லி அவர்களையெல்லாம் பின்னூட்டச் சொல்லேன்.”

”ஏண்டா,எனக்கு நண்பர்களே இல்லாமப் போகணும்னு நினைக்கறியா?ஒரு ரெண்டு பேரு கிட்ட என் பதிவு பற்றிச் சொல்லிப் படிக்கச் சொன்னேன்.அதக்கப்புறம் அவங்க என்னைப் பார்த்தாலே வேற பக்கமாப் போயிடறாங்க.”

”அப்ப நீயே பல பெயரிலே பின்னூட்டம் போடேன்.”

”போடா.அப்படி எத்தனை பெயரிலே போட முடியும்?”

“முக்கியமான பதிவர்கள் பதிவுக்கெல்லாம் போய்,உன் சுட்டியைக் கொடுத்துப் படித்துப் பின்னூட்டம் போடச் சொல்லிப் பணிவாக் கேட்டுக்கோயேன்.”

“டேய். என் கொலைவெறியைக் கிளப்பாதே”

கிளாசில மிச்சமிருந்ததை வாயில் ஊற்றிக் கொண்டு சொன்னான்.
“கடைசியா பெஸ்ட் யோசனை.”
“என்ன?”

”இந்த சம்பவத்தையே ஒரு பதிவாகப் போட்டு, பிரபல பதிவர்கள் கிட்டயே கேளு,என்ன பண்ணலாம்னு”

இதுதான் நடந்தது..
அவன் சொன்னபடி எழுதி விட்டேன்.

பதிவர்களே.பதிவர்களே,நீங்கள் என்னை எழுத வேண்டாம் என்று சொன்னாலும்,நான் நிறுத்த மாட்டேன். பதிவுக்கடலில் படகாக மிதப்பேன்.கவிழ்ந்து விட மாட்டேன்.நீங்கள் என் படகில் ஏறிப் பயணம் செய்யும் வரை விடமாட்டேன்.

தயவு செய்து சொல்லுங்கள்.

நிறைய பின்னூட்டங்கள் வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

புதன், நவம்பர் 17, 2010

ராசா என்பார்,மந்திரி என்பார்.....

“தாத்தா!”
”என்னடா பேரா?”
”ஒரு கதை சொல்லு தாத்தா”
“என்ன கதைடா வேணும்?
”ராசா ராணிக்கதை சொல்லு தாத்தா”

”அது வேண்டாண்டா.ராசா மந்திரிக் கதை சொல்றேன்.”
”ராசா கதையிலே ராணி இல்லாம இருக்குமா தாத்தா”
”இந்தக் கதையிலே ராணிக்கு எடமில்லடா.இது ராசா
மந்திரிக் கதைதான்”
”ராசாவும் மந்திரியுமா,தாத்தா?”
”இல்லடா!இந்தக் கதைல ராசாதான் மந்திரி!”
”அப்ப மந்திரி யாரு தாத்தா?”
”மந்திரிதான் ராசா.”
“என்ன தாத்தா கொழப்பறே?”
“அடேய்! இது ராசாங்கற மந்திரி பத்தின கதை”
“ம்”
”அவர் தன்னோட இலாகாவிலே ஊழல் பண்ணிட்டாரு,
அவராலே அரசாங்கத்துக்கு கோடிக் கணக்கில நஷ்டம்னு,
சொல்றாங்க.ஆனா அவரு தான் ஒரு தப்பும் பண்ணலைன்னு
சொல்றாரு.அவரைச் சேந்தவங்க அவர் ஒரு தலித்
அப்படிங்கறதால பழி வாங்கறாங்கன்னு சொல்றாங்க”

”தலித்துன்னா என்ன தாத்தா?”
”உம்.நெறய சாதிப் பிரிவுகள் இருக்குல்ல.இதுவும் ஒண்ணு.
மேல் சாதிக்காரங்க முன்னாலே எல்லாம் இவங்களை
மோசமா நடத்தினாங்களாம்.இப்பவும் தங்களுக்குத்தேவைப்பட்ட நேரத்திலே இத ஆயுதமாக் கையிலே எடுத்துக்கிறாங்க சிலர்.”

”தாத்தா! எங்க கிளாசிலே நாப்பது பேர் இருக்கோம்;எல்லாரும் ஒரே சாதியா?”
“இல்லடா!வெவ்வேறு சாதி இருப்பாங்க”
“அதுல நீங்க சொன்ன தலித்துகளும் இருப்பாங்கல்ல?”
“இருப்பாங்க”
“இதுனால எங்களுக்குள்ள சண்டை எதுவும் வரதில்லையே,தாத்தா!ராபர்ட்,இஸ்மாயில்,சீனிவாசன்,
கருப்பையா எல்லாருமே எனக்கு நல்ல ஃபிரண்ட்ஸ்தான்.”

“நீங்க பெரியவங்க ஆனதும் இப்படி இருக்க முடியாது,இருக்க விடமாட்டாங்க அரசியல் வாதிகள்.”
“அரசியல் வியாதிகளா தாத்தா?”
”தெரியாமச் சொன்னாலும் சரியாத்தான் சொன்னே!”
”அப்ப இந்த ராசாவுக்குப் பதிலா வெறே யாரும் வந்தா எல்லாம் நல்லா ஆயிடுமா?வேறே கட்சிக்காரங்க வந்தா எல்லாம் சரியாயிடுமா தாத்தா?”

”ஊஹூம்.ஊழல் ஏதாவது ரூபத்திலே,ஏதாவது அளவிலே இருந்துக்கிட்டேதான் இருக்கும்.பெருந்தலைவர் சொன்ன வார்த்தையிலே சொல்லணும்னா எல்லாம் ஒரே குட்டையிலே ஊறின மட்டைகள்தான்.”

”இதுக்கு முடிவுதான் என்ன தாத்தா”

”நீங்கதான்.உங்க தலைமுறை வந்துதான் எல்லாம் சரி பண்ணணும்.”

(நம்புவோம்.)

செவ்வாய், நவம்பர் 16, 2010

குட்டிக் கவுஜகள்!

புயல் அறிவிப்பால்
கடலுக்குப் போகவில்லை..
தண்ணீர்-
கடலில் மட்டுமல்ல
கஞ்சிக் கலயத்திலும்தான்.

-*-*-*-*-*-*-*-*-*-*-
நாய் விற்ற காசு குலைக்காது
ஆனால்
அக்காசில் வாங்கிய செருப்பு
கடித்தது!

-*-*-*-*-*-*-*-*-*-*-

திங்கள், நவம்பர் 15, 2010

காதல்-திருக்குறள் கதை-பகுதி-2

அந்த நாளுக்குப்பின் குமாருக்கு உலகமே வெறுமையாய்த் தோன்ற ஆரம்பித்தது. ”எங்கெங்கு காணினும்” அவளே தெரிந்தாள்.நோயால் பீடிக்கப் பட்டவன் போல் ஆனான்.எதிலுமே பிடிப்பில்லாத ஒரு நிலையில் இருந்தான்.

ஒரு வாரத்துக்குப் பின்-
ஞாயிறன்று தவிர்க்க முடியாத ஒரு திருமணத்துக்குப் போக நேர்ந்தது.வேண்டா வெறுப்பாகத்தான் சென்றான்.மண்டபத்தில் நுழைந்து,தெரிந்த சிலரிடம் பேசியவன்,மேடைப்பக்கம் நகர்ந்தான்.சென்று கொண்டிருந்தவன் திடீரென்று நின்றான்.அவள்! அவளேதான்!ஒரு வாரமாக அவனைப் பிடித்திருந்த நோய் நீங்கியது போல் உணர்ந்தான்.உள்ளத்தின் வெறுமை நீங்கி மகிச்சி பொங்கியது.

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து,”

(நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன;ஆனால் அணிகலன்கள் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.)

அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.அவன் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது. அவளுடன் பேசிக்கொண்டிருந்த இருவர் அகன்று விடத் தனியாக விடப்பட்ட அவள் திரும்பினாள்.அவள் பார்வை அவன் மீது விழுந்த அதே நேரத்தில் அவன் அவளை நெருங்கி விட்டான்.

”ஹலோ!”
”ஹாய்!”
” நான் குமார்-அஷ்வின் குமார்.சி.டி.எஸ் ஸில் வேலை பார்க்கிறேன்”
“காயத்ரி-டி.சி.எஸ்.
”அன்று நகர் மையத்தில் பார்த்தபின் இவ்வளவு விரைவில் உங்களை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை”
அவள் லேசாகச் சிரித்தாள்.அவள் அழகிய கண்களும் சிரித்தன.
சிரிக்கும்போது அவள் அழகு கூடுகிறது என்று எண்ணினான்.(என்ன அழகு,என்ன அழகு!)

“முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு”

(மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி;முத்தே பல்;இயற்கை மணமே மணம்;வேலே மை உண்ட கண்.)

“பெண் வீட்டார் எனக்குத் தூரத்துச் சொந்தம்”-அவன்.
“பிள்ளை வீட்டார் எனக்குத் தூரத்து சொந்தம்”-அவள்

அவன் சிரித்தவாறு சொன்னான்”தூரத்து உறவினர்கள் வீட்டுத் திருமணத்துக்கு வந்த நாம் பக்கத்தில் வந்து விட்டோம்”.

அதன் பின் பேசினார்கள்,பேசினார்கள்,பேசினார்கள்--.சேர்ந்தே மேடைக்குச் சென்று பரிசுகளைக் கொடுத்தார்கள்;சேர்ந்தே சாப்பிடப் போனார்கள்.உறவினர்களிடம் விடை பெற்றார்கள். மண்டபத்தின் வாசல் வரை சேர்ந்தே வந்தார்கள்.

”மறுபடியும் எப்போது சந்திக்கலாம்?”அவன் கேட்டான்.
“ஏன் சந்திக்க வேண்டும்?’அவள் குறும்பாகக் கேட்டாள்.உடனே அவன் முகம் வாடியதைக் கண்டு சிரித்தவாறே சொன்னாள்”வரும் ஞாயிறன்று ஆர்ட் காலரியில் ஒரு ஓவியக் கண்காட்சி இருக்கிறது.காலை 10 மணிக்கு அங்கு இருப்பேன்."

அவன் சொன்னான்”அன்று அங்கு வருபவர்களுக்கு பிரச்சினைதான்-உயிரில்லாத ஓவியங்களை பார்ப்பதா அல்லது உயிருள்ள ஒவியத்தை ரசிப்பதா என்று”

அவள் அவன் தோளில் செல்லமாகத் தட்டி விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டாள்.

அவன் அவள் தட்டிய இடத்தைத் தடவிக் கொண்டே இருந்தான்.அவள் போவதை பார்த்துக் கொண்டே நின்றான்.
” என்ன மென்மையான தொடுகை!ஒரு பூவால் தட்டியதைப் போல் ஒரு தொடுகை!எவ்வளவு மென்மையானவளாக இருக்கின்றாள் இவள்!”எண்ணினான்.

“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்”
(அனிச்சப்பூவே!நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்!நீ வாழ்க!யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லிய தன்மை உடையவள்.)

ஒரு பெருமூச்சு விட்டான்.அடுத்த ஞாயிறுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

காத்திருப்பதும் ஒரு சுகம்தானே?

(உங்களுக்கும்தான்!)

வெள்ளி, நவம்பர் 12, 2010

காதல்-திருக்குறள் கதை

குமார் மென் பொருள் துறையில் பணி புரியும் ஓர் இளைஞன். சென்னையில் பிரம்மச்சாரி வாழ்க்கை.உடற்பயிற்சி யெல்லாம் செய்து உடலை முறுக்காக வைத்துக் கொண்டிருப்பவன்.கவர்ச்சியானவன்.ஒரு விடுமுறை நாளில் மிகவும் போர் அடிக்கவே ’நகர் மைய’த்துக்குச் சென்று சிறிது வேடிக்கை பார்த்து வரலாம் எனப் புறப்பட்டான். அங்கு நல்ல கூட்டம்,வேடிக்கை பார்க்க வந்தவர்,ஏதாவது வாங்க வந்தவர்,திரைப்படம் பார்க்க வந்தவர் என்று.அங்கு இருக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டே வந்தவனின் பார்வை ஓரிடத்தில் நின்றது.அங்கே ஒரு பெண்கள் கூட்டம்.
அக்கூட்டத்தில் ஒரு பெண் தனித்துத் தெரிந்தாள்.அவள் அழகைப் பார்த்து அவன் பிரமித்து நின்றான்.

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு”
(தெய்வப் பெண்ணோ!மயிலோ!கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ?என் நெஞ்சம் மயங்குகின்றதே)

அவள் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்தான்.தலை முதல் கால் வரை பார்த்தான்.பின் மீண்டும் காலிலிருந்து தலை வரை மெள்ள அவன் பார்வை நகர்ந்தது.நடுவில் நின்றது,பார்த்தான்;பிரமித்தான்!

“கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
(மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் ஆடை,மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது)

அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தபோது,அவளின் பார்வை அவன் பக்கம் திரும்பியது.அவள்கண்களை நேருக்கு நேர் பார்த்த அவன் ஒரு மின்னல் தாக்கியது போல் உணர்ந்தான்.

“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.”
(நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானேதாக்கி வருத்தும் அணங்கு,ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது)

இருவர் கண்களும் சில நொடிகள் கலந்து நின்றன.பின் அவள் தன் பார்வையைத்திருப்பிக் கொண்டாள்.குமாரும் அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்பது கூடாது என்று சற்றே வேறு பக்கம் திரும்பினான்.மீண்டும் பார்வையை அவள் பக்கம் திருப்பினான்.அது வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள்,தன் பார்வையைத் விலக்கினாள்.தலை கவிழ்ந்தாள்.

“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”
(யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்;நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத்தனக்குள் மகிழ்வாள்).
இந்தப் பார்வை விளையாட்டு சிறிது நேரம் தொடர்ந்தது.அவன் அவளுடன் பேச விழைந்து,அவளை நோக்கி நடக்க முற்பட்டபோது,அவள் தன் தோழிகளுடன் அங்கிருந்து,புறப்பட்டு விட்டாள்.அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.சிறிது தூரம் சென்ற பின் அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.மெல்லச் சிரித்தாள்.
பின் அவன் இதயத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

(இடைவேளை!)

திங்கள், நவம்பர் 08, 2010

வாங்க பழகலாம்--ரௌத்திரம்

ரௌத்திரம் பழகென்றான் பாரதி
உண்மைதான்
பழகத்தான் வேண்டும்
பழக்கமில்லாத எதுவும் பழகத்தான் வேண்டும்
சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
கை பழகப் பழகத்தான் சித்திரம் வரும்
நா பழகப் பழகத்தான் செந்தமிழ் வரும்
மனம் பழகப் பழகத்தான் ரௌத்திரம் வரும்
நாமெல்லாம் பழகி விட்டோம்-
ரௌத்திரமல்ல!
சகிப்புத்தன்மை-ஆம்
புரையோடிப் போய் விட்ட சமூக அவலங்களை நாம்
பழகி விட்டோம் சகித்துக்கொள்ள!
சூழ் நிலையின் கைதிகளாய் வாழ்ந்து
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
நரி இடம் போனால் என்ன,
வலம் போனால் நமெக்கென்ன
நம்மைத்தாக்காதவரை என்னும் மனப்பாங்கால்
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
எல்லோரும் காந்தியா என்ன?
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னமும் காட்டுவதற்கு!
நமது நேர்மையில் குறையில்லாத போது
ஒரு கன்னத்தில் அடித்தால்
திருப்பி ஒரு கன்னத்திலேனும்
அடிக்கும் துணிவு வர,
ரௌத்திரம் பழகு!
எளியோரை வலியோர் வாட்டினால்
வலியோரை வாட்ட வராது இன்று தெய்வம்!
எளியோர்க்குத் துணை போக
உடல் வலிமை பெற வேண்டும்
பெற்றாலும் வேண்டும் மன வலிமை
அவ்வலிமை பெற வேண்டி
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!

வாங்க பழகலாம்!!

சனி, நவம்பர் 06, 2010

உதயசூரியனும்,இரட்டை இலையும்!

அம்மா அழைத்தார்
”உடனே வா தோட்டத்துக்கு” என்று
சிறிது தாமதித்தேன்
”வந்து பார்” என்று மீண்டும் அழைப்பு.
கை வேலையெல்லாம் காக்கப் போட்டு விரைந்தேன்.
தோட்டம் சென்றேன்.
ஆஹா! என்ன காட்சி!.
கம்பளம் விரித்தது போல்
தரையெங்கும் இலை மூடல்.
தரையெங்கும் கொட்டிக் கிடந்தது இலை!
நிமிர்ந்து பார்த்தேன்
மொட்டையாய் இலயுதிர்த்து நின்றது மரம்!
ஆயினும் சில நாட்களில்
மீண்டும் இலைகள் துளிர்க்கும்
இதுவன்றோ இயற்கை நியதி?
இருள் பிரிந்தும் பிரியா அக்காலையில்
மீண்டும் மரத்தைப் பார்த்தேன்.
அதோ ஒரிரு இலைகள் அசைகிறதோ?
அவை விழக்காத்திருக்கும் இலைகளா?
அன்றி விழுந்த பின் முளைக்கும் துளிர்களா?
உதித்தான் சூரியன்
மெள்ளப் பரவியது வெளிச்சம்
உதய சூரியனின் ஒளியிலே
பளிச்சென்று தெரிந்தது அந்தத்
துளிர்த்து வந்த இரட்டை இலை!

புதன், நவம்பர் 03, 2010

ஊழிக்கூத்து

பிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி
அண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்
விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்
எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி
நடக்கட்டும் நாடகம்
அடிக்கட்டும் தாரை தப்பட்டை
வெடிக்கட்டும் தரை பிளந்து
துடிக்கட்டும் பிறவா உயிர்
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!


ஒற்றைக் குருசைக் கையில் ஏந்திவா!
நெற்றி நிறையத் திருநீரு பூசி வா!
திருக் கபால மேட்டிலே திருமண் இட்டு வா!
தொப்பி அணிந்து திசை நோக்கித் தொழுது வா!
மனித நேயம் தொலை!
மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!


நாடகமே உலகம்
நாமெல்லாம் நடிகர்கள்
எழுதியவன் யார்?
இயக்குபவன் யார்?
யாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்
நாடகமே கொஞ்ச நேரம்
வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ
பிரிவினையின் உஷ்ணத்தில்
குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்
இல்லாமல் போகட்டும்.
தொடங்கட்டும் ஊழிக் கூத்து!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

மஞ்சள் துண்டு எங்கே?!!

நேற்று முதல் இதே கேள்விதான் ஓடிக்கொண்டிருக்கிறது மனதில்—எங்கே மஞ்சள் துண்டு?
இதற்கான விடையை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.
தங்கை கேட்டாள்”என்னண்ணா ஒரே யோசனை?’
“மஞ்சள் துண்டு எங்கே போச்சுன்னே தெரியலை”.
“போண்ணா,உனக்கு வேற வேலையில்லை”
தங்கை போய் விட்டாள்.
”அம்மா!”-அழைத்தேன்.
என்னடா என்றபடி அம்மா வந்தாள்.
“எங்கேம்மா மஞ்சள் துண்டு?
”உன் கிட்ட ஏதுடா மஞ்சள் துண்டு?”
“அதாம்மா,இங்கே வச்சிருந்தேனே ஒரு துண்டு மஞ்சள்.-கருக்கி முகர்ந்து பார்ப்பதற்காக,அதுதான்”

“அதுவா,நேற்று வெள்ளிக் கிழமை இல்லையா.அடுத்த வீட்டு ராஜி வந்திருந்தாள்.வெற்றிலை பாக்கோடு கொடுக்க உள்ள வேறே குண்டு மஞ்சளே இல்லை.அதுதான் இங்கே இருந்ததை எடுத்துண்டேன்.வெளியில் போகும்போது மறக்காம 50 கிராம் குண்டு மஞ்சள் வாங்கிண்டு வந்துடு.”

இதுதான் மஞ்சள் துண்டு –துண்டு மஞ்சள்-காணாமல் போன சம்பவம்.

செவ்வாய், ஜூன் 29, 2010

பக்கத்து இருக்கையில் பருவப் பெண்!

சில மாதங்களுக்கு முன்,வெளியூர் சென்று திரும்புபோது,பேருந்தில் எனக்குப்
பக்கத்து இருக்கையில் இளைஞன் ஒருவன் வந்து அமர்ந்தான்.பேருந்து புறப்பட்ட அடுத்த நிமிடமே,அவன் தூங்க ஆரம்பித்தான்.ஆழ்ந்த உறக்கத்தில் அவன் சாய்ந்து என் மீது விழ ஆரம்பித்தான்.ஓரிரு முறை அவனைத் தள்ளிவிட்டேன்.ஆனால் மீண்டும் மீண்டும் அவன் மீது சாய ஆரம்பித்தான்.ஒரு முறை அவன் என் மீது சாயும் தருணத்தில் நான் சிறிது முன்னே நகர்ந்து கொள்ள,அவன் எனக்கும் இருக்கையின் சாய்மானப் பலகைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுந்து ,பின் சமாளித்து எழுந்தான்.பின் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் என்னிடம் சொன்னான்”நேத்து ராத்திரி பூரா ரயிலில் தூக்கமே இல்லை.நிக்க இடம் கிடைத்ததே பெரிய விஷயம்.ரயிலிலிருந்து இறங்கி இப்ப என் ஊருக்குப் போயிட்டிருக்கேன்.அதனாலதான் தூங்கி உங்க மேல சாஞ்சுட்டேன் ஸார்.”அவனைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.ஆனால் சம்பந்தமே இல்லாத ஒருவன் தூங்குவதற்கு என் தோளைக் கொடுக்க முடியுமா?

யோசித்தேன்.இவனுக்கு என் பையன் வயதுதான் இருக்கும்.அவனைப்போன்றுதான் இவனும் உடை அணிந்திருக்கிறான்.இதே இடத்தில் என் பையன் இருந்தால் நான் என்ன செய்திருப்பேன்.அவன் சாய்ந்து தூங்குவதற்கு வாகாக என் தோளைக் கொடுத்திருப்பேன்.அவன் தூக்கம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இப்பொதோ?அவனது தூக்கத்தைக் கலைப்பதற்கான வழிகளை நான் முயன்று கொண்டிருக்கிறேன்.ஏன் இப்படி.?—இவன் எனக்கு சம்பந்தமில்லாதவன்,எவனோ ஒருவன் என்கிற என் மனோபாவம்.இவனிலும் நான் என் பையனைக்காண முடிந்தால் என் நடத்தை வேறு விதமாக இருக்கும்..

இது போன்ற நேரங்களில்,சொந்தமில்லாதவர்,சொந்தமானவர் என்பது மட்டுமே அளவு கோல் அல்ல.பக்கத்து இருக்கையில் ஒரு அழகிய இளம்பெண் அமர்ந்தால் துள்ளும் மனது,ஒரு உடல் தளர்ந்த/அழுக்கான முதியவள் அமர்ந்தால் சுருங்கிக் கொள்கிறது.அந்நபரது வயது மற்றும் தோற்றம் இவையும் நமது மன நிலையைத் தீர்மானிக்கின்றன..

எனவே அடிப்படையில் மனோபாவம் மாற வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கும் மனோபாவம் எளிதில் வராது.ஆனால் ஓரளவுக்கு சக மனிதர்களைப் புரிந்துகொள்ள,நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்”

ஞாயிறு, ஜூன் 20, 2010

கணினி கவசம்

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெsடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.
அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.

(இக்கவுஜயை எழுதியவர் என் நண்பர் கவிஞர் பட்டாபிராமன் அவர்கள்.

அவருக்கு என் நன்றி.)

செவ்வாய், ஜூன் 08, 2010

தமிழ்ப்பதிவுலகில் சாதி வாரிக் கணக்கெடுப்பு!!

இப்போதெல்லாம் பல நேரங்களில் பல பதிவுகளில் சாதி பற்றிய பிரச்சினை எழுகிறது.ஒரு பதிவரை அவரது சாதி பற்றிக்கூறித் தாக்கப்படுகிறது.ஒருவரது சாதி உடனடியாகத்தெரியாதபோது,துப்பறியும் வேலையில் இறங்கி அவரது சாதி என்ன என்று கண்டுபிடிக்க நேருகிறது.இதற்காக தேவையற்ற கால விரையம் ஆகிறது.இதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி,தமிழ்ப்பதிவர்கள் மத்தியில் ஒரு சாதிவாரிக் கணெக்கெடுப்பு நடத்துவதுதான்.யார் பார்ப்பான்,யார் பிள்ளை,யார் முதலியார்,யார் வன்னியர்,யார் இஸ்லாமியர்,யார் கிறித்தவர்,யார் தலித் என்பதெல்லாம் கணக்கெடுப்பில் தெரிந்து விடும்.ஒருவரை அவரது சாதியைச் சொல்லித்தாக்க வேண்டுமென்றால்,இக்கணக்கெடுப்புப் பட்டியலைப் பார்த்தால் போதும்.அதன் பின் மிக எளிதாகத்தாக்கத் துவங்கலாம்.

எப்படி இந்த உத்தி?

”சாதிகள் இல்லையடி பாப்பா ”-அய்யா பாரதி,அதெல்லாம் பாப்பாக்களுக்குத்தான்.எங்களை மாதிரிப் பெரியவர்களுக்கு இல்லை!

வெள்ளி, ஜூன் 04, 2010

பருப்புத் தின்னிப் பாப்பானை அடிங்கடா

ஆறாம்படிவம் படித்து விட்டு,அந்தக் கிராமப்புற கல்லூரியில் புகு முக வகுப்பில் சேர்ந்த நான்,அதே கல்லூரியில் கணிதப் பட்டப் படிப்பில் சேர்ந்த பின் கல்லூரியில் ஓரளவு மாணவர்கள் நடுவில் நன்கு அறியப்பட்டவனாக மாறியிருந்தேன்.அதற்குக்காரணம்,நான் படிப்பில் முதன்மையாக இருந்தது மட்டுமல்ல-. விளையாட்டுக்களிலும் நான் காட்டிய ஆர்வம்;நன்கு படிக்கும் மாணவனான நான் கல்லூரியில் நடந்த வேலை நிறுத்தத்திலும் முக்கிய பங்கேற்று ,கண்டன ஊர்வலத்தில் முன்னின்று முழக்கங்கள் எழுப்பியது;ஜூனியர் மாணவர்களிடம் கூட நான் மிக நட்புடன் பழகிய விதம் ஆகிய இவை போன்ற நிகழ்வுகளே.
அக்கல்லூரியில் கிரிக்கட் ஆட்டத்தை அறிமுகப்படுத்தியவனே நான்தான்.நானும் ’ஆலையில்லா ஊருக்கு இலுப்பபூ சக்கரை’தான்.ஆனால் ஹாக்கி ஓரளவுக்கு நன்றாகவே ஆடுவேன்.இரண்டாம் படிவம் முதல் ஐந்தாம் படிவம் வரை(ஏழு முதல் பத்து வரை),ஹாக்கியில் பெயர் பெற்ற கோவில்பட்டியில் படித்தேன்.அது எனக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது.

நிகழ்ச்சிக்கு வருவோம்.கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும்,பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.அதற்காக நான்கைந்து குழுக்கள் அமைக்கப்படும்.அந்த ஆண்டு ஒரு குழுவின் தலைவனாக நான் நியமிக்கப்பட்டேன்.(எனது ஆரஞ்சுக் குழுதான் அந்த ஆண்டு சாம்பியன் குழுவாக வந்தது.)

போட்டிகளில் ஹாக்கியில் என் தலைமையில் என் குழு ஆடியது எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினோம்.மிகவும் கடுமையான போட்டி.ஆட்டத்தில் என் இடம்,வலது கடைசி(right-out,right extreme).நான் பாஸ் செய்த பந்தை வாங்கி,என் அணி ஆட்டக்காரர் ஒரு கோல் போட்டார். எதிர் அணியினரும் ஒரு கோல் போட்டனர்..ஆட்டும் மேலும் கடுமையானது.நான் என் முழுத்திறமையையும் காட்டி ஆடினேன்.நானே பந்தை எடுத்துச் சென்று ஒரு கோல் போட்டேன்.எதிர் அணியினரால் எங்கள் பாதுகாப்பை மீறி கோல் போட முடியவில்லை.ஆட்டத்தில் சிறிது வன்முறை தலையெடுத்தது.அப்போது ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் நடுவிலிருந்து ஒரு உரத்த குரல் எழுந்தது”பருப்புத்தின்னிப் பாப்பானை அடிங்கடா”.சிறிது நேரத்தில் எதிர் அணி ஆட்டக்காரர் ஒருவர் என்னுடன் மோதும் போது,மட்டையால் என் காலில் அடித்தார். அதைப் பொருட்படுத்தாமல் நான் தொடர்ந்து வேகமாக ஆடினேன். வெளியிலிருந்து என் வகுப்புத்தோழனின் குரல் வந்தது. ”சந்துரு,உன் காலைப் பார்” குனிந்து பார்த்தேன்.குருதி வழிந்து கொண்டிருந்தது.ஆட்டம் முடிய சில மணித்துளிகளே மீதம் இருந்ததால்,கைக்குட்டையால் ஒரு கட்டுப் போட்டு விட்டுத் தொடர்ந்து ஆடினேன்.இறுதியில் எங்கள் அணி வென்றது.

ஆட்டத்தின் நடுவில் என்னை அடிக்கச் சொல்லிக் குரல் கொடுத்த மாணவரை நான் நன்கு அறிவேன்.எனக்கு ஜூனியர்.என்னிடம் பலமுறை உரையாடி யிருக்கிறார்.மிகுந்த மரியாதையுடன் பழகுவார்.அவரிடமிருந்து ஏன் அப்படி ஒரு வன்ம வெளிப்பாடு? அவர் வேறு அணியைச் சேர்ந்தவர் என்பதாலா?ஆழ் மனத்தில் எப்போதும் அத்தகைய உணர்வு இருந்ததா?இதுகாறும் அவர் பாராட்டிய நட்பெல்லாம் வேடமா?அவரை எந்த விதத்திலும் நான் காயப்படுத்தாதபோது என் மேல் ஏன் அந்த வெறுப்பு?ஒரு ’பார்ப்பான்’ வெற்றி பெறுவதைப் பொறுக்க முடியவில்லையா?விளையாட்டுப் போட்டியில் ’சாதி’ எங்கு வந்தது?இன்று வரை விடை தெரியாத கேள்விகள்.

இந்த நிலை இன்றும் எல்லா நிலைகளிலும் தொடர்கிறது.நம்முடன் இருக்கும்போது தெரியாத ஒருவரின் சாதி,அவர் நம்மை விட்டு விலகி எதிர்அணிக்குச் சென்றால்,சட்டைக்குள் நெளியும் அவர் பூணூலின் மூலமாகத்தெரிந்து விடுகிறது. வலைப்பதிவுலகிலும் இந்நிலை தொடர்கிறது. இரண்டு பதிவர்களிடையே பிரச்சினை மூளும்போது,வேறு சில பதிவர்கள் சாதி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர்.’அவன் பார்ப்பான்’ அவன் ’வன்னியன்’ என்றெல்லாம் எழுதப்படுகிறது.பிரச்சினைய முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதில்,ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.

கருத்தை,கருத்தால் எதிர் கொள்வதை விடுத்துத் தனி மனித்தாக்குதல்கள் தொடங்கி விடுகின்றன.

இந்த நிலை மாற வேண்டும்.நாமெல்லாம் ஒரே சாதி- பதிவர் சாதி.

எதிர்க்க வேண்டும் என்றால் ஒருவரால் சொல்லப்பட்ட கருத்தைக் கடுமையாக எதிர்த்து வாதம் செய்வோம்.சாதியை நடுவில் இழுக்க வேண்டாம்.

இதுவே இந்தப் “பருப்புத்தின்னிப் பாப்பானின்” வேண்டுகோள்.

(என் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டின் என் சாதி பற்றிப் பேசாமல்,எதிர் வாதத்தை முன் வைக்க வேண்டுகிறேன். நான் என்றுமே என் சாதி குறித்துப் பெருமையோ. சிலரின் காழ்ப்புணர்ச்சி கண்டு சிறுமையோ கொண்டதில்லை.)

புதன், மே 12, 2010

சிங்கமொன்று புறப்பட்டதே!

கும்பகர்ணத் தூக்கம் கலைந்தது!
ஏனிந்த நீண்ட உறக்கம்?
சாக்குகளோ,சமாளிப்புகளோ இன்றிச் சொன்னால்
--சோம்பேறித்தனம்,கற்பனை வறட்சி,விளக்கவியலாத
மனச்சோர்வு,எச்செயலிலும் பிடிப்பற்ற நிலை-அவ்வளவே!
சில நண்பர்கள் இடித்துரைக்க
இன்று எழுந்துவிட்டேன்- உங்கள் தலையெழுத்து!
மாதம் ஒரு இடுகையாவது எழுத எண்ணம்.
என்னையும் உங்களையும் இறைவன் காப்பாற்றட்டும்!!