தொடரும் தோழர்கள்

புதன், ஏப்ரல் 27, 2011

இம்சிக்காத கனவுகள்!

வேடந்தாங்கல் கருனின் “இராத்திரி நேர கனவுகளின் இம்சைகள்” என்ற பதிவைப் படித்ததும் நான் கண்ட கனவுகள் பற்றிய எனது பதிவை இப்போது மீள் பதிவாக வெளியிட ஒரு காரணம் கிடைத்தது என மகிழ்ந்தேன்! இதோ அப்பதிவு!--------

முன்பெல்லாம் எனக்குச் சில கனவுகள் அடிக்கடி வரும்.

ஒரு கனவில் நான் மேலே பறந்து கொண்டிருப்பேன்.தரையிலிருந்து எளிதாக மேலே கிளம்பிப் பறக்க ஆரம்பிப்பேன்.பறந்து கொண்டே பறவைப் பார்வையாய் கீழே இருக்கும் கட்டிடங்களை, மனிதர்களை யெல்லாம் பார்த்துப் பெருமிதம் அடைவேன்,என் திறமை குறித்து.மனிதர்கள் என்னக் காட்டி ஏதோ பேசிக்கொள்வர்.பறப்பது மிக எளிதான செயலாக இருக்கும்.இரண்டு கைகளயும் பக்கவாட்டில் நீட்டித்,துடுப்பு தள்ளுவது போல் முன்னிருந்து பின்னாகத் தள்ளி,காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னேறுவேன்.மேலே செல்ல மேலிருந்து கீழாகவும்,கீழே இறங்கக் கீழிருந்து மேலாகவும் கைகளை அசைத்துப் பறப்பேன்.விழிப்பு வந்த பின்னும் அந்தப் பறக்கும் உணர்ச்சி நீடிக்கும்.பறந்து பார்க்கலாமா என்று யோசிக்க வைக்கும்.அந்தக்கனவு வருவது நின்று பல ஆண்டுகளாகி விட்டது.முன்பு ஏன் வந்தது?பின்னர் ஏன் வருவதில்லை?அந்த வயதிற்கே உரிய,ஆசைகள் காரணமா?வாழ்க்கையில் மேலே மேலே செல்ல வேண்டும் என்ற ஆவல் காரணமா?மற்றவர் செய்யாத எதையாவது செய்ய வேண்டும் என்ற இச்சை காரணமா?வயதான பின்,வாழ்க்கையின் எதார்த்தங்கள் புரிந்த பின், பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தரையில் காலூன்றி நின்ற பின் அக்கனவு நின்று போனதா?எனக்குத் தெரியவில்லை.இன்னொரு கனவு-சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது வழியில் கிழே கிடக்கும் ரூபாய் நாணயத்தை குனிந்து எடுப்பேன்.அப்போது அருகில் இன்னொரு நாணயம் இருக்கும் அதை எடுக்கும் போது இன்னொன்று,இப்படி எடுக்க எடுக்க நாணயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.கனவு கலைந்து விடும்.இக்கனவும் பல ஆண்டுகளுக்கு முன் நின்று போனது.இதன் பொருள் என்ன?அந்த நாட்களில் எனக்குப் பணத்தாசை இருந்தது என்பதா?அப்படியானால்,தங்கக் காசுகள் நிறைந்த ஒரு புதையல் கிடைப்பது போல அல்லவா கனவு வந்திருக்க வேண்டும்?சில்லறைத் தனமான கனவு ஏன்?இப்படியிருக்குமோ?பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும்,அதைச் சிறிது சிறிதாகத்தான் சேர்க்க முடியும் என்ற அறிவும்தான் இக்கனவோ?இப்போது இக் கனவு வராமைக்குக் காரணம்-பணத்துக்கு நான் கொடுக்கும் மிகக் குறைந்த முக்கியத்துவம்?இந்த வயதில் எனக்கு என்ன வேண்டும்? உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இடம் இவை போதாவா?

ஆனால் வரவேண்டிய வயதில் வரவேண்டிய ஒரு கனவு எனக்கு வந்ததே இல்லை.என் வாலிபப் பருவத்தைப் பற்றித்தான் சொல்கிறேன்.என் நண்பர்கள் எல்லாம் தங்கள் கனவில்'அவள் வந்தாள், இவள் வந்தாள்'என்றெல்லாம் சொல்வார்கள் .ஆனால் என் கனவில் ஒரு நாள் கூட ஒரு மாலாவோ, நீலாவோ வந்ததில்லை.நானும் படுக்கப் போகும் முன், எனக்குத் தெரிந்த அழகான பெண்களைப் பற்றி நினைத்துக் கொண்டே படுப்பேன். ஆனாலும் கனவு வந்ததில்லை.ஒரு நாள் ஒரு பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டு, இன்று அவளுடன் கனவில்பேச வேண்டும் என்று அழுத்தமாக நினைத்துக் கொண்டு படுத்தேன்.தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவு வந்து விட்டது.கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)

இதற்கு என்ன காரணம்?இயற்கையிலேயே எனக்குப் பெண்களுடன் பேசுவதில் இருந்த வெட்கம்,பயம்,தயக்கம் இவை காரணமோ?ஆழ்மனத்தில் இருந்த இந்த உணர்வுகள் கனவுகளையும் தடுத்திருக்குமோ?எது எப்படியோ?இந்தத் தயக்கமே எனக்கு, அலுவகத்தில் சக பெண் ஊழியர்களிடம், 'பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்'என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது.காலம் செல்லச் செல்ல அந்தப் பயமும்,தயக்கமும் நீங்கி விட்டன.

இப்போதெல்லாம் பெரும்பாலும் கனவுகளே வருவதில்லை.வந்தாலும் அர்த்தமற்ற, கனவுகள்தான். அவை விழிக்கும்போது நினைவிருப்பதில்லை.

இன்றைய இளைஞர்களைக் கனவு காணச் சொல்கிறார் டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள்-தங்கள் எதிர்காலம் பற்றி,அத்துடன் இணைந்த நாட்டின் எதிர் காலம் பற்றி,ஒரு வளமான,வலிமையான புதிய பாரதம் பற்றி.

கனவுகள் பலிக்கட்டும்.

(மீள் பதிவு)

திங்கள், ஏப்ரல் 25, 2011

வலைப்பதிவுப் பணி அவுட்சோர்ஸிங்க்!!

சில நாட்களாக ஒரு எண்ணம்!

பதிவு வேலையை வெளியாரிடம் ஒப்படைத்தால் என்ன?!(outsourcing)

நானும் பதிவே கதி என்று இருக்கக் கூடாது,பதிவும் நல்ல விதமாகத்தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால்,அவுட்சோர்சிங்க் தான் சிறந்த வழி எனத் தோன்றுகிறது!

எனவே இந்தப் பதிவின் மூலம் இதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறேன்!

விண்ணப்பிவர்களுக்கான அடிப்படைத்தகுதிகள்-

1)தமிழ் நன்கு எழுதப் படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். எழுத்துப் பிழைகள் அனுமதிக்கப் படும்!

2)நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்து அவற்றிலிருந்து பதிவுக்கான செய்தியை உள்வாங்கிக் கொள்ளும் திறன்.

3)பத்திரிகைகளில் வெளியாகும் சுவாரஸ்யமான விஷயங்களை வெட்டி ஒட்டிப் பதிவு எழுதும் திறமை!

4)மொக்கைப் பதிவாக இருந்தாலும் சுண்டியிழுப்பது போல் தலைப்பு வைக்கும் ஆற்றல்!

5)திரைப்படப் பாடல்கள் பற்றிய அறிவு,நடிகர்கள் பற்றிக் கிசு கிசுக்கள் தெரிந்துகொள்ளுதல்,திரைப்படம் பார்க்காமலே கூட விமரிசிக்கும் திறமை,இவையெல்லாம் அவசியம்!

6)பதிவுக்கு நிறையப் பின்னூட்டங்கள்,வருகைகள்,திரட்டிகளில் வாக்குகள் வரவழைப்பதற்காக,பல பதிவுகளைத் தொடர்தல்,வாக்களித்தல், பின்னூட்டமிடுதல் ஆகியவை திறம்படச் செய்தல்!முக்கியமாக டெம்ப்ளேட் பின்னுட்டங்கள் இடுதல்!
கீழ்க்கண்டவை வேலை முறைமைகள்---

1)ஒப்பந்தம் ஒரு ஆண்டுக்கு மட்டுமே.பணியின் தரத்தைப் பொறுத்து வேலை நீட்டிப்பது அமையும்.

2)குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு 30 பதிவுகள் எழுதப்பட வேண்டும்!

3) ஒரு பதிவுக்கான குறைந்த பட்ச வாக்குகள்,தமிழ் மணத்தில் எட்டும், இண்ட்லியில் 25உம் நிச்சயம் கிடைக்க வேண்டும்.

4)ஒரு மாதத்துக்கான சராசரி வருகைகள்(ஹிட்ஸ்),குறைந்த பட்சம் 6000 இருக்க வேண்டும்!

5)இந்த வலைப் பதிவின் தரத்தைக்(அப்படியொன்று இருக்கிறதா?!) குறைக்கும் படியான இடுகைகள் வெளி வரக் கூடாது!

6)சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

ஒப்பந்த ஊதியம்விவரங்கள்—

1)முறைமைகள் வழுவாமல் செயல் படும் பட்சத்தில், ஒவ்வொரு ஞாயிறன்றும், மயிலை,கையேந்தி பவனில்,இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப் படும்!
(யாரப்பா அங்கே முணு முணுக்கறது,ஞாயிறு கையேந்தி பவன் லீவு என்று)

2)வருகைகள் 6000த்துக்கு மேற்படும் மாதங்களில் ஊக்க போனஸாக,ஒரு ஞாயிறன்று,மயிலை சங்கீதா/சரவணபவன்/கற்பகாம்பாள் மெஸ் எங்காவது,இரவு டிஃபன் சாப்பிட்டுக் கொள்ளலாம்!


3)தமிழ் மணம் ராங்கில் 100க்குள் வந்தால்,பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும்.

விண்ணப்பம் ஏதும் அனுப்பாமலே 31-04-2011 அன்று மாலை 5.00 மணிக்கு மரினா, காந்தி சிலைக்கு அருகில் நடக்கும் நேரடி நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்! அனைவருக்கும் ஒரு பொட்டலம் சுண்டல் வழங்கப்படும்!

வெள்ளி, ஏப்ரல் 22, 2011

பயணமும் எண்ணங்களும்!

சில பயணங்கள் நம் நினவில் தங்கி விடுகின்றன;எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவை நம் நினைவை விட்டு மறைவதில்லை.காரணம் அப்பயணங்களின் போது நமக்கு ஏற்படும் அனுபவங்கள்;நாம் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்கள்.என் வாழ்க்கையில் பல பயணங்கள் என்னால் மறக்க முடியாதவை.ஆனால் இங்கு நான் பகிர்ந்து கொள்ளப் போவது இரு இரயில் பயணங்கள் மட்டுமே.நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களே காரணம்.

முதல் பயண அனுபவம்;அப்போது நான் டில்லியில் பணி புரிந்துவந்தேன்.ஒரு முறை விடுப்பில் சென்னை வந்து கொண்டிருந்தேன் என்னுடன் என் அம்மாவும். எப்போதும் போல் பயணத்தில் சாப்பிடுவதற்காக வீட்டில் செய்து கொண்டு வந்த சப்பாத்தி,புளி, தயிர் சாதங்கள்.காலை உணவு,பின் மதிய உணவு சாப்பிடும் போது கவனித்தேன்.எங்கள் பெட்டியில் பயணம் செய்த ஒருவர் யாருடனும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் வந்ததை. அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.அவர் வேளாங்கண்ணிக்கு வேண்டுதலுக்காகச் செல்வதாகக் கூறினார்.நான் எங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னபோது பணிவாக மறுத்து விட்டார்.

மதிய நேரத்தில் ரயில் நாக்பூரை அடைந்தது.கீழே இறங்கி இரண்டு ஐஸ்கிரீம் வாங்கினேன்.ஒன்றை என் அம்மாவிடம் கொடுத்தேன்.இன்னொன்றைச் சாப்பிடும் முன் அந்த நபரைப் பார்த்தேன்."சாப்பிடுகிறீர்களா " என்று கேட்ட படியே அவரிடம் அதை நீட்டினேன்.அது வரை ஒன்றுமே சாப்பிடாமல் வந்த அவர் அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார்-ஆர்வமாக,அவசரமாக. மீண்டும் ஒர் ஐஸ்கிரீம் வாங்குமுன் ரயில் புறப்பட்டு விட்டது.என் அம்மாவுக்குக் கூட வருத்தம்-அந்த ஐஸ்கிரீமை நான் சாப்பிடவில்லையே என்று.ஆனால்,அந்த ஐஸ்கிரீமைச் சாப்பிட்டிருந்தால்,என் வயிறு மட்டும்தான் குளிர்ந்திருக்கும்;ஆனால் இப்போது என் மனமும் குளிர்ந்து விட்டது.சென்னை வந்து சேர்ந்த பின் என்னருகில் வந்த அவர்"ஐயா,உங்கள் நலனுக்காக நான் மாதாவிடம் பிரார்த்தனை செய்வேன்"எனச் சொல்லிச் சென்றார்.

இந்தப் பயணத்தை எப்படி மறக்க முடியும்?நினைவில் நிற்கும் இன்னொரு பயணமும் இது போல, வித்தியாசமான ஒருவரைப் பற்றியது.இதுவும் விடுப்பில் சென்னை வந்து திரும்பிய ஒரு பயணம்.பூனாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்தேன்.வழக்கம் போல் கட்டுச் சாதம் வகையறாக்கள். நாங்கள் சாப்பிடும்போது எங்களுடன் பயணம் செய்த ஒரு இளம்பெண் எதுவும் சாப்பிடாமல் வந்தாள்.நாங்கள் அளித்த உணவை மறுத்து,அன்று விரதம் என்றும் பழம் தவிர வேறெதுவும் சாப்பிட மாட்டேன் என்றும் கூறினாள்.அன்று முழுவதும் அப்பெண் சாப்பிட்டது ஒரே ஒரு ஆப்பிள் மட்டுமே.கல்லூரியில் 'மாஸ் கம்யூனிகேஷன்' பட்ட மேற்படிப்புப் படிக்கும் ஒரு பெண் ,அவ்வாறு விரதம் இருந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ரயில் காலை 4 மணி அளவில் பூனாவை அடைந்தது.அந்த இருட்டில் அந்தப் பெண்ணைத் தனியாக அனுப்புவது சரியாகத் தோன்றவில்லை.அப்பெண் இருந்த ஹாஸ்டல் எங்கள் வீட்டைத் தாண்டிதான் இருந்தது.எங்களுடன் அப்பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றோம். எங்கள் வீட்டில் விடியும் வரை தங்கி விட்டுப் பின் செல்லலாம் என நான் சொன்னேன்.அந்தப் பெண் எங்களைக் கவலைப்பட வேண்டாமென்றும்,போய்ச் சேர்ந்தவுடன் தொலைபேசுவதாகவும் கூறினாள். சொன்னது போலவே 20 நிமிடங்களில் அவள் ஃபோன் வந்து விட்டது. என்னால் மறக்கமுடியாத பெண் .அதனால் மறக்க முடியாத பயணம்.

"நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யாருக்கும் அஞ்சாதநெறிகளும், திமிர்ந்த ஞானச்செருக்கும்" மட்டுமன்றி நமது அடிப்படை கலாசாரத்தை, நம்பிக்கைகளையும் பேணிக் காக்கும் ஒரு வித்தியாசமான புதுமைப் பெண்.செய்யும் செயல் எதையும் ஈடுபாட்டுடன் செய்யும் அந்தப் பெண்ணுக்குச் சரியான பெயர்தான்

.--"ச்ரத்தா".

புதன், ஏப்ரல் 20, 2011

பெயர்க்காரணம்-தொடர் பதிவு!

பிரபல பதிவர்,நண்பர்,செங்கோவி அவர்கள்(கொட்டைப்புளி மாதிரி இல்லை,உண்மையிலேயே பிரபல பதிவர்) என்னை இத்தொடர் பதிவு எழுதுமாறு பிறப்பித்த கட்டளையைச் சிரமேற்கொண்டு உடனே எழுதிவிட்டேன்!(நம்மையும் ஒரு பதிவர் என்று சிலர் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்!)

”கொழந்தே”

பாட்டி என்னை அழைத்தார்கள்.

இந்தக் குழந்தைக்கு வயது அப்போது பதினெட்டு;கல்லூரி மாணவன்!

அழைத்த இடம் ரயில்வே பிளாட்ஃபாரம்.

குழந்தை அப்போது சீரியசாக அருகில் இருந்த சில இளம் பெண்களை சைட் அடித்துக் கொண்டிருந்தது.பார்வைகளின் உரசிலில் சூடேறிக் கொண்டிருந்த நேரம்!

‘களுக்,களுக்’ அந்த அழைப்பைக்கேட்ட பெண்களின் சிரிப்பு!

போச்சு! எல்லாம் போச்சு!

பாட்டியிடம் அன்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்,இனிமேல் அவ்வாறு அழைக்கக் கூடாது என்று.பாட்டி மட்டுமல்ல என்னை அவ்வாறு அழைத்து வந்த அனைவருக்கும் அதேதான் மெசேஜ்!

இவ்வாறு அந்தப் பெயர் ஒழிந்தது!

பிறந்தபோது பஞ்சாங்கம் பார்த்துப் பெயர் வைத்திருந்தால் என் பெயர் கிருஷ்ணன்,குப்புசாமி,கேசவன்(கேனையன் இல்லை!) ,கோதண்டராமன் என்றிருந்திருக்கும்!

ஆனால் காரணம் ஏதும் இன்றி வைக்கப் பட்ட பெயர் சந்திர சேகரன்.வீட்டில் சேகர்,வெளியில் சந்துரு(எனக்குப் பிடிக்கவேயில்லை!),வடக்கே பணி புரியும்போது சேகர் சாப்.

ஆனால் வலைப் பதிவு தொடங்க எண்ணியதும் புனை பெயர் வைத்துக்கொள்ளும் ஆசை வந்தது.

வலைப் பதிவு தொடங்கும் ’பைத்தியக்காரத்தனமான’ எண்ணம் வந்ததால்-’பித்தன்’

என் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளுக்குக் காரணமான-’சென்னை’

எனவே சென்னை பித்தன்.


சென்னையைச் சேர்ந்த பித்தன்;ஆனால் சென்னையின் மேல் பித்தன் அல்ல!

காதல் பதிவுகள் சில என்னை சென்னைக் காதலனாக்கின!-நன்றி
கக்கு மாணிக்கம்!

கவிதைகள் சில என்னைக் கவிதை பித்தனாக்கின!-நன்றி நாஞ்சில் மனோ!

ஆனால் வேறு பெயர் வைத்தாலும் அதில் சென்னையோ ,பித்தனோ கட்டாயம் நின்றன!

இதுவே சென்னை பித்தனின் கதை!

நண்பரே செங்கோவி,நீங்கள் கொடுத்த பணியைச் செவ்வனே முடித்து விட்டேன் என நீங்கள் சொன்னால்

உங்களுக்கு ஒரு செவ்வணக்கம்!

பிற்சேர்க்கை:-
இது ஒரு தொடர் பதிவென்பதால்,இன்னும் சிலரை அழைப்பது என் கடமையாகிறது!
இதுவரை யாரெல்லாம் எழுதியிருக்கிறார்கள் எனத் தெரியாததால்,இதைப் படிக்கும் நண்பர்கள்,யாரெல்லாம் இப்படி ஒரு பதிவு எழுதவில்லையோ அவர்களுக்கெல்லாம் இது ஒரு திறந்த அழைப்பு!வாருங்கள்!எழுதுங்கள்!ஒரு வரி உங்கள் இயற்பெயர் பற்றியும் எழுதுங்கள்.தெரிந்து கொள்கிறோம்!

திங்கள், ஏப்ரல் 18, 2011

இனியொரு விதி செய்வோம்!

இது ஜெர்மனிக்கு வேலை நிமித்தம் சென்ற ஒருவரது அனுபவம்.

அவர் ஹாம்பர்க் சென்றடைந்தபின் அவரை வரவேற்பதற்காக அவரது சக பணியாளர்கள்- இந்தியர்களே-ஒரு உணவு விடுதியில், விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அவர் அந்த உணவு விடுதியில் அநேக இருக்கைகள் காலியாக இருப்பதைப் பார்த்தார்.

ஒரு மேசையில் ஒரு இளம் இணை அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் முன் மிக எளிமையான,குறைவான உணவே வைக்கப் பட்டிருந்தது.

அதைக் கண்ட அவர் எண்ணினார்”என்ன காதலர்கள் இவர்கள்?ஒரு ஆடம்பரமில்லாத உணவு.அந்த ஆண் மிகக் கஞ்சனாக இருக்க வேண்டும்.அப்பெண் அவனை விட்டுப் போய் விடுவாள்” என்று!

மற்றொரு மேசையில் சில வயதான பெண்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். சிப்பந்தி ஒரு தட்டு உணவைக் கொண்டு வந்து அவர்களுக்கு பகிர்ந்து வழங்க,அவர்கள் அதை மிச்சம் வைக்காமல் உண்டனர்.

அவரும் அவர் நண்பர்களும் மிகப் பசியாக இருக்கவே ,பல உணவு வகைகளைக் கொண்டு வரப் பணித்தனர்.கூட்டம் அதிகமில்லாத காரணத்தால் உணவு விரைவாக வந்தது.அவர்களுக்கு வேறு அலுவல்கள் இருந்த காரணத்தால்,சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விட்டுப் பணம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டனர்.

அவர்கள் மேசை மேல் கிட்டத்தட்ட 30 விழுக்காடு உணவு சாப்பிடப் படாமல் வீணாக்கப் பட்டிருந்தது!

அவர்கள் வெளியேறும்போது,பின்னிருந்து அழைக்கும் குரல் கேட்டது.திரும்பிப் பார்த்தனர்.அந்த வயதானவர்கள்,விடுதி மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்தப் பெண்கள் அத்தனை உணவை இவர்கள் மிச்சம் வைத்துப் போவதைப் பற்றிக் குறை கூறினர்.

நண்பர்கள் கோபம் அடைந்தனர்.ஒருவன் சொன்னான்”நாங்கள் முழு உணவுக்கும்,பணம் கொடுத்து விட்டோம்.நாங்கள் சாப்பிடுவதோ,மிச்சம் வைப்பதோ எங்கள் விருப்பம்,அதைப் பற்றிப் பேச உங்களுக்கு உரிமையில்லை”

அந்தப் பெண்கள் கடுங்கோபம் கொண்டனர்.ஒருத்தி,தனது கைபேசியில் எவரிடமோ பேச விரைவில்,சீருடை அணிந்த ஒருவர் வந்தார்.அவர் சமூகநலத்துறையைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது.

நடந்த நிகழ்ச்சியைக் கேட்டறிந்த அவர்,50 மார்க்குகள் அபராதம் விதிக்க,நண்பர்கள் அதைக் கட்டினர்.

அவர் சொன்னார்”என்ன வேண்டுமோ அதை மட்டும் வாங்குங்கள்.பணம் உங்களுடையது;ஆனால் வழி வகைகளும் வள ஆதாரங்களும்,சமூகத்துக்குச் சொந்தம்.உலகில் எத்தனையோ மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். அதை வீணாக்க உங்களுக்கு உரிமையில்லை”

அவர்கள் கன்னத்திலறைந்தது போல் உணர்ந்தனர்.யோசித்தனர்”பணக்கார நாட்டில் மக்கள் எவ்வாறு பொறுப்புணர்வோடு இருக்கிறார்கள். ஆனால் , வசதியில்லாத நம் நாட்டிலோ? விருந்து என்ற பெயரில் ஆடம்பரமாக எவ்வளவு உணவை வீணடிக்கிறோம்,போலிக் கௌரவத்துக்காக?நாம் மாற வேண்டும்”

மாறுவோமா?!

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

எமதர்மனும்,சிட்டுக் குருவியும்!

ஒரு குட்டிக் கதை!

கருடன் ஒரு சிட்டுக் குருவியினிடம் மிகவும் அன்புடன் இருந்தது.

ஒரு நாள் வைகுண்டத்தின் வாசலில்,கருடன் அக் குருவியிடம் பேசிக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த எமன்,சிட்டுக் குருவியைப் பார்த்துச் சிறிது தயங்கி நின்று விட்டு,வைகுண்டத்துக்குள் சென்று விட்டான்.

கருடன் யோசித்தது”எமன்,குருவியைப் பார்த்துத் தயங்கி நின்றான் என்றால்,நிச்சயம் குருவியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.நான் குருவியைக் காப்பாற்ற வேண்டும்”

பின்னர் கருடன் குருவியைத் தூக்கிக் கொண்டு வெகு தொலைவில் இருக்கும் மலைக் குகையில் விட்டு வந்தது.வைகுண்ட வாயிலில் அமர்ந்து கொண்டது.

எமன் வெளியே வந்தான்.குருவியை காணாமல் திகைத்தான்.கருடனிடம் கேட்டான்”இங்கிருந்த சிட்டுக் குருவி எங்கே?”

கருடன் வெற்றிச் சிரிப்புடன் கூறியது”உங்கள் பார்வையிலிருந்து,குருவியின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து கொண்ட நான் வெகு தொலைவில் உள்ள ஒரு மலைக் குகையில் அதை விட்டு வந்தேன்.இனி என்ன செய்வீர்கள்?”

யமதர்மன் நகைத்தான்”நன்று,நன்று!குருவியை இங்கு பார்த்ததும் நான் திகைத்தேன்.இன்னும் சிறிது நேரத்தில்,தொலைவில் உள்ள மகைக் குகையில் இதன் மரணம் நிகழ வேண்டுமே ,ஆனால் இது இங்கே இருக்கிறதே என்று.ஆனால் சரியான நேரத்தில் குருவி அங்கு சென்று சேர்ந்து விட்டது!நன்றி கருடனாரே!”

கருடன் செயலற்று அமர்ந்தது.

ஆம்,மரணம் என்பது எந்த நேரத்தில் எங்கு எப்படி நடக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப் பட்டு விட்ட ஒன்று.

சின்னக் குயில் சித்ராவின் பேரிழப்பைப் பற்றிப் படித்தபோது இந்தக் கதைதான் நினைவில் வந்தது.

பல ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பொக்கிஷத்தை,வேற்று மண்ணில், ஏதோ ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் பறி கொடுக்க நேர்ந்த அந்தச் சோகத்தை யாரால் அளவிட முடியும்?

எதற்காக அங்கு சென்றார்களோ,அதுவே இன்னும் நிறைவேறாத நிலையில்,இந்த இழப்பு .

அப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் படாமல் இருந்திருந்தால்?

சித்ரா அந்நிகழ்ச்சிக்குப் போகாமலோ அல்லது குடும்பத்துடன் போகாமலோ இருந்திருந்தால்?

நீச்சல் குளம் இல்லாத ஒரு வீட்டில் தங்கியிருந்தால்?

இந்தக் கேள்விகளுக்கு விடைதான் இந்தக் கதை.

தவமிருந்து பெற்ற குழந்தையைப் பறி கொடுத்து விட்டுக் கதறும் அந்தத்தாய்க்கும், தந்தைக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூறுவதை தவிர வேறேன்ன செய்ய முடியும் நம்மால்?

இறைவா!அவர்களுக்கு மன ஆறுதலை,மன அமைதியைக் கொடு!

அவர்களுக்கு எது நல்ல மருந்தாக அமையும் என்பது உனக்குத்தெரியும்.

அந்த வரத்தை விரைவில் அளி!

அது வரை அவர்களுக்காக நாமும் பிரார்த்திப்போம்!

புதன், ஏப்ரல் 13, 2011

தேர்தல்!49(ஓ)!ஓட்டுப் போட்டாச்சு!

”ஏண்டா பேமானி!நீ என்ன பெரிய பருப்பா(பிஸ்தாவா,----------வா)!49(ஓ) விலே ஓட்டுப் போடறே!-----------,வெளில வா,வகுந்துடறேன்”

இப்படி,இது போன்ற,தொலைபேசி அழைப்புகள் எனக்கும் வர ஆரம்பித்திருக்கும்; நான் 49(ஓ) வின் கீழ் ஓட்டுப் போட்டிருந்தால்!

ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால்,காரணம் இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படித்த ஒரு செய்தியே!சரவணகுமார் என்ற ஒருவர் சென்ற தேர்தலில்,அவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்,,49(ஓ) வின் கீழ் வாக்களித்த பின்,அன்றே, பல அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், இந்த முறை வாக்களிக்கப் போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

எனவே 49(ஓ) வை மறந்து விட்டேன்!

வாக்களிக்காமல் இருப்பதில் உடன்பாடில்லை.


காலை 9 மணிக்கெல்லாம் வாக்குச் சாவடி சென்று,45 மணித்துளிகள் வரிசையில் நின்று,வாக்களித்து விட்டு வந்தேன்!

பாருங்கள் அத்தாட்சி!(சத்தியமாக என் விரல்தான்).நான் என் ஜனநாயகக் கடமையைச் செய்துவிட்டேன்! நீங்கள்?

விரலில் அவர்கள் மை வைத்தார்கள்.

நெற்றியில் நானே பட்டையாய் நாமம் போட்டுக் கொண்டேன்.(இதுதானே இன்றைய நிலை)

எல்லா அரசியல் வாதிகளும் சேர்ந்து மக்களுக்குப் போடும் நாமம் வாழ்க!

திங்கள், ஏப்ரல் 11, 2011

நாசமாய்ப் போகட்டும்!

என் நெருங்கிய தோழனின் திருமணம்.சில ஆண்டுகளுக்கு முன் ஒரே ஊரில் பணி புரிந்து வந்தோம்.அந்த ஊரில் பொழுதுபோக்கு, திரைப் படம்தான்.அநேகமாக எல்லாப் படங்களையும் சேர்ந்தே பார்ப்போம்.மற்ற மாலைகளில் நாங்கள் நிம்மதியாய் அமர்ந்து அரட்டை அடிப்பது சிவன் கோவிலின் வெளிப் பிரகாரத்தில்.பின் நான் வேறு ஊருக்குப் போய்விட்டேன்.அவனும் இட மாற்றம் பெற்று விட்டான்.ஆனால் கடிதத் தொடர்பில் இருந்தோம்.அவனுக்குத் திருமணம்;அதுவும் நான் பணி புரிந்து வந்த அதே ஊரில்;பெண் அந்த ஊர்.

ஒரு திருமண மண்டபத்தில் திருமணம்;சென்றேன்.மாப்பிள்ளைக் களையுடன் மண மேடையில் என் நண்பன்.அருகில் சென்று கொஞ்சம் கலாய்த்தேன்.பின் என் பார்வையைச் சுழல விட்டேன்.என் கண்கள் அவன் தாயைத் தேடின.கணவனை இழந்தபின் தன் மகனை வளர்த்து ஆளாக்கிய தாய்;அவன் வீட்டுக்கு நான் செல்லும்போதெல்லாம் தன் மகன் போலவே என்னிடம் அன்பு காட்டும் தாய்.அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்”குமரன்(என் நண்பன்) இவ்வளவு சாதுவாக,சாந்தமாக இருப்பதில் அதிசயம் ஏதுமில்லை என்று.அவர்களைக் காணவில்லை.

அவனிடம் கேட்டேன்,”அம்மா எங்கே?”

”அந்த அறையில் இருக்கிறார்கள்” அவன் சொன்னான்.

அங்கு ஏதோ வேலையாக இருப்பார்கள் என்று நினைத்தேன்.

”பார்த்து விட்டு வருகிறேன்”

அவனிடம் சொல்லி விட்டுப் புறப்பட்டேன்.

அறைக்குள் நுழைந்தேன்.

அவர்கள் அங்கு அமர்ந்திருந்தார்கள்,தனியாக.

வெளியில் இருக்கும் ஆரவாரத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் ஏதும் சம்பந்தமற்றவர்களாக.

வழக்கமாய் அணியும் அதே வெள்ளைச் சேலை.நெற்றியில் திருநீறு.

“வாப்பா,குமரனைப் பார்த்தியா” விசாரித்தார்கள்.

“பார்த்துவிட்டேன் அம்மா!நீங்கள் என்ன இங்கே இருக்கிறீர்கள்”

”நான் அங்கெல்லாம் வரக் கூடாதப்பா” யதார்த்தமாகச் சொன்னர்கள்.

ஒரே மகனின் திருமணம்,அதைக் காண அத்தாய்க்கு உரிமையில்லையா?

மகனுக்குத் திருமணம் என்ற மகிழ்ச்சி முகத்தில் இருந்தாலும் அந்த உள்ளம் அழுது கொண்டுதான் இருந்திருக்கும்,அதைக் காண முடியாத துர்ப்பாக்கியத்தை எண்ணி.

என் கண்களில் கண்ணீர் வந்தது துடைத்துக் கொண்டேன்.

(இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும்,இந்த வயதிலும், இதை எழுதும்போது கண்ணீர் வருவதை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை.)

“போப்பா!இப்ப,தாலி கட்டிடுவான்,போய் அவன் கூட இரு”

வெளியே வந்தேன்.அந்த மண்டபத்தில் நுழைந்தபோது இருந்த மகிழ்ச்சி தொலைந்து போயிருந்தது.ஒரு இயந்திரம் போல்,ஒரு பொய்ச் சிரிப்புடன் மண மேடை அருகில் நின்றேன்.தாலி கட்டியாகி விட்டது.

உறவினர்கள்,மணமக்களுக்குத் திருநீறு வைக்கத் தொடங்கினர்.நான் கொஞ்சம் விலகியே நின்றேன்.
குமரன் அழைத்தான்”சந்திரசேகரன்,திருநீறு வையுங்க!”

என் உள்ளம் ஓலமிட்டது”நீ தாலி கட்டும்போது உன் மீது அட்சதை போட்டு ஆசி வழங்க வேண்டிய தெய்வம் அடுத்த அறையில் ,அதைப் பார்க்கும் பாக்கியம் கூட இல்லாமல் தனித்து இருக்கிறதே,நண்பா!”

உணவருந்தினேன் ;விடை பெற்றுப் புறப்பட்டேன்.

ஒரு தாயைத் தன் ஒரே மகனின் திருமணத்தைப் பார்க்க விடாமல் தடுத்ததுஒரு சமூகத்தின் சடங்குகள்,சம்பிரதாயங்கள்,மூடப் பழக்க வழக்கங்கள் என்றால்-----

அவை நாசமாய்ப் போகட்டும்!

(இது நடந்தது,சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்.இப்போது இதெல்லாம் மாறியிருக்குமா?தெரிந்தால் சொல்லுங்கள்)

வியாழன், ஏப்ரல் 07, 2011

ஞானம் பிறந்தது!

நேற்று வலையில் மேய்ந்து கொண்டிருந்த நேரம்.

என் அம்மா(வயது 92) திடீரென்று கேட்டார்கள்.

“ஏண்டா ஏதோ ஆடிட்டரைப் பார்க்கணும்னு சொல்லிண்டிருந்தயே,பாக்கலியா!”

“போகணும்மா”-நான்.

“ரெண்டு நாள் முன்னாலே சுதா அவளோட ஜாதகத்தைப் பாக்கச் சொன்னாளே, பாத்துட்டயா?”

”பாக்கறேம்மா”

”பழைய சட்டை,பேண்டெல்லாம்,ஏதோ இல்லத்துலே கொடுக்கணும்னு சொன்னியே,குடுக்கலையா?”

”குடுக்கணும்மா”

”என்னவோ போ!கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்,கிழவியைத்தூக்கி மணையில வைன்னு எப்பப் பாத்தாலும்,கம்ப்யூடர் முன்னாலயே உக்காந்திருக்கே!பேசக் கூட ஒனக்கு நேரமில்ல!”
அம்மாவின் பேச்சு என்னை யோசிக்க வைத்தது

ஞானம் பிறந்தது!

புதிய சிந்தனைகளோ,தத்துவங்களோ பிறக்கவில்லை ஞானத்தினால்.என்னைப் பற்றிய சில முடிவுகள் எடுக்க உதவியது ஞானம்!

சிந்தனை பறக்கும்போது, நான் இப்போதெல்லாம் என் நேரத்தை எப்படிச் செலவழிக்கிறேன் என்று யோசித்தேன்!

திகைத்தேன்.

தினம் சராசரி ஆறு மணி நேரம் கணினி முன் அமர்ந்து பொழுது போக்குகிறேன்!

இதன் விளைவு—

முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் படித்து வந்தேன்.அது நின்று விட்டது.

தினமும் ஒரு மனிநேரமாவது நான் கற்றுக்கொண்ட வேத பாடங்களை மீண்டும் திரும்பப் படித்து வந்தேன்;அது இல்லாமல் போயிற்று!

கணினி முன் அமர்ந்தாலும்,பிறர்க்கு உபயோகமாக ammas.com இல் சோதிட ஆலோசனைகள் அளித்து வந்தேன்!அது முழுவதும் நின்று போயிற்று!

நல்ல பாடல்களை தரவிறக்கம் செய்தும்,குறுந்தகடுகள் மூலமும் ரசித்துக் கொண்டிருந்தேன்;அதற்கும் நேரமில்லை!

வலைப் பதிவுப் பழக்கத்தின் அடிமையானதன் விளைவுகள் இவையெல்லாம்!

மூன்று ஆண்டுகளில் 86 இடுகைகள்;ஆனால் இந்த ஆண்டின் மூன்று மாதங்களில் 46 இடுகைகள்!

இந்தப் புள்ளி விவரம் முழுக் கதையையும் சொல்லி விடுகிறது.

ஆனால் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன்.
எந்நேரமும் வீட்டில் இருப்பவன்.பரவாயில்லை!

இன்று பதிவுலகில் இருக்கும் 99 விழுக்காடு பதிவர்கள் இளைஞர்கள்—மாணவர்கள்,பணியில் இருப்பவர்கள்,தொழில் செய்பவர்கள் என்று பலர்.

காலை எழுந்து,கடன்களை முடித்துக் குளித்துச் சாப்பிட்டு விட்டு அலுவலகம் சென்றால் திரும்பி வரும்போது இரவாகி விடும்.வந்து சாப்பிட்டு விட்டுக் கணினி முன் அமர்ந்து விட்டால் நீங்கள் எவ்வளவு நேரம் உங்கள் குடும்பத்துக்காகச் செலவிட முடியும்?

எல்லோரும் அப்படி என்று நான் சொல்லவில்லை.ஆனால் அநேகர் அது போல் இருக்கிறார்கள்!நான் எப்போது வலையைத் திறந்தாலும் பலர் அங்கேயே இருக்கிறார்கள்.

யோசியுங்கள்!

எந்த அளவு தரமான நேரம் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செலவழிக்கிறீர்கள் என்று!

பதிவு எழுத வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.ஆனால் இதில் நேர மேலாண்மை அவசியம் என்று சொல்கிறேன்.

உங்கள் சிந்தனைகளுக்கு ஒரு வடிகால் தேவையே.அது ஒரு அளவுக்குள் இருக்கட்டும்!


எனவே கடுமையான சில முடிவுகளை எடுத்துள்ளேன். அவை:-

வலைப்பதிவில் மேய்வதற்கான அதிக பட்ச நேரம்,தினம் ஒரு மணி!

வாரத்திற்கு ஒரு இடுகை மட்டுமே-இங்கும்,அங்கும்---சில நேரம் குறைவாகவும்!

படிப்பு ,இசை கேட்டல் இவற்றுக்காகவும் தினம் நேரம் ஒதுக்குதல்.

இன்னும் பல சின்னசின்ன முடிவுகள்!

இவை இன்று முதல் அமுலுக்கு வருகின்றன!

சொன்னதைச் செய்வோம்!

செய்வதையே சொல்வோம்! :-) (^_^)

புதன், ஏப்ரல் 06, 2011

10டுல்கர்!!

10டுல்கர்!!உண்மையே!!

அவரது ஜெர்சி எண்-----------------10

அவர் வயது----------------- 37—3+7=10

அவர் உயரம்—--------------5’5”—5+5=10

உலகக் கோப்பை வென்ற தேதி
2-4-2011--------கூட்டுத் தொகை----10

உலகக் கோப்பை வெற்றி
28 ஆண்டுகளுக்குப் பிறகு
2+8=10

உலகக் கோப்பை ஆட்டத்தில்
மட்டையடி வேகம்
அதாவது100 பந்துக்கு ஓட்டங்கள்
91- 9+1=10

உண்மையில் 10டுல்கர்தான்!

(இன்று வந்த மின்னஞ்சல்)

ராதா,காதல் வராதா!

என் நண்பன் ராதாகிருஷ்ணனின் ரயில் காதல் பற்றி முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

http://chennaipithan.blogspot.com/2010/12/blog-post_13.html

அந்நிகழ்ச்சிக்குப் பின் சில காலம் வரை அவன் காதல் கிறுக்கனாகத்தான்

இருந்தான். அப்போது அவன் கிறுக்கிய கவிதைகள் பல.அப்போதெல்லாம் அவனுக்கு

ஆங்கிலத்தில் எழுதுவது எளிதாக இருந்தது.ஆனால் துரதிருஷ்ட வசமாக அக்கவிதைகள்

காணாமல் போய்விட்டன.எதையோ தேடும்போது ஒரு பழைய டைரியிலிருந்து ஒரு

கவிதையின் சில வரிகள் மட்டும் கிடைத்தன.அவன் அனுமதியுடன் அக்கவிதை வரிகள்

உங்கள் பார்வைக்கு---

She came out of the blue
Like a dream that came true

I could not but wonder
How quick did I surrender

How can love be born so quick
It is nature’s most delicate trick


That two winged playboy cupid
Hath made us both so stupid

Oh!cupid!
Worthless son of a worthy goddess
Why is it that you so torment us

Was your love too born at first sight
Binding you both with fetters tight

Was it Psyche who the first sign gave
Or did you look at her with obvious crave

………..
……….
………….(many lines missing)

Thus the world will go on for ever
Loving loving and stopping never.

ராதாகிருஷ்ணனைக் கவிதையைப் பூர்த்தி செய்து கொடுக்கச் சொன்னேன்.மறந்து விட்டது என்று சொல்லி விட்டான்.

அவளை மறக்கவில்லையாம்;அவள் நினைவில் எழுதிய கவிதை மறந்து விட்டதாம்!

இக்கவிதை தமிழில் எப்படி இருக்கும் என யோசித்தேன்.விளைவு கீழே----

மின்னலாய் வந்தவள் தோன்றினாள்
இன்பமாய் நனவான ஒரு கனவு போல்!

வியந்து போகிறேன் இன்று வரை நான்
விழி வீச்சில் வீழ்ந்த தெப்படி என்றுதான்!

காதல் இத்துணை விரைவாய் வந்தது எப்படி
படைப்பின் இனிய ரகசியத்தின் முதற்படி!

சட்டென்று கணை தொடுத்த அக்காமன்
முட்டாள்களாகி விட்டான் இருவரையும்

மன்மதா!

உங்கள் காதலும் சட்டென்று முளைத்ததா?
சங்கிலி கொண்டு இருவரையும் பிணைத்ததா?

தன் காதல் ரதி முதலில் சொன்னாளா
உன் பார்வை அதையவளுக் குணர்த்தியதா?
………
……..
…….
காதலிக்காத மனிதர்களில்லை
காதலில்லாமல் இவ்வுலகமும் இல்லை!

ராதாகிருஷ்ணனின் அழியாத காதலுக்கு அஞ்சலி!

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

’திக்,திக்’ மணித்துளிகள்!!

இது நடந்தது ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்!

அப்போது நான் தலைநகர் தில்லியில் ஒரு முக்கியமான வங்கிக்கிளையில் மூத்த மேலாளராகப் பணி புரிந்து வந்தேன்.

அது ஒரு முதன்மை மேலாளர் (chief manager) கிளை.நான் நிர்வாகத்தைக் கவனிக்கும் மூத்த மேலாளராக இருந்தேன்.

ஒரு நாள்,காலை மணி 11 இருக்கும்.மு.மே.என் அறைக்கு வந்தார்.என்னிடம் சொன்னார்”திரு.x அவர்கள் (அரசின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் நபர்) தனது பாதுகாப்புப் பெட்டகச் சேவைக்காக வருகிறார்.அவர் வந்ததும் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்க வேண்டும்.ஏற்பாடு செய்யுங்கள்”என்று.

நானும் அவர் சொன்ன ஏற்பாடுகளைச் செய்தேன்.

அரை மணி நேரத்தில் சைரன் அலற அவர் வந்தார்.மு.மே .மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார்.அவரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.நான் என் அறையில் சென்று அமர்ந்து விட்டேன்.அங்கிருந்தே கவனித்துக் கொண்டிருந்தேன்!

லாக்கர் அதிகாரி,மு.மே.யின் அறைக்குச் சென்று அந்த வி.ஐ.பி.யை அழைத்துச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து அந்த நபர் திரும்ப மு.மே.யின் அறைக்குள் நுழைந்தார்.சில விநாடிகளில் மு.மே.என்னை அழைத்தார்.நான் அவர் அறைக்குச் சென்றேன்.

மு.மே.பேயறைந்தது போலக் காணப்பட்டார்.சொன்னார்”சாரின் லாக்கரில் அவர் வைத்திருந்த எதுவுமே இல்லையாம்.போலீஸில் புகார் தர வேண்டும் என்று சொல்கிறார்.”குரலில் ஒரு நடுக்கம்.

நான் அந்த நபரைப் பார்த்துக் கேட்டேன்”உங்களுக்கு வேறு வங்கியில் லாக்கர் இருக்கிறதா? ”
அவர் பொறுமையின்றிப் பதிலளித்தார்.” ஆம்.ஆனால் அங்கு நான் இவற்றை வைக்கவில்லை .எனக்கு நிச்சயம் தெரியும்.நேரத்தைக் கடத்தாமல் போலீசை அழையுங்கள்!”

குரலில் அதிகாரம்! திமிர்!

நானே அருகில் இருந்த காவல் நிலையம் சென்றேன்.அந்த அதிகாரிக்கு வங்கிக் கணக்கு உண்டு.எனக்கு நன்கு தெரிந்தவர்.வாருங்கள் என என்னை வரவேற்றார்.

அவரிடம் சொன்னேன்.”திரு.X அவர்கள் வங்கிக்கு வந்திருக்கிறார்கள்.அவர் லாக்கரில் வைத்திருந்த பொருள்களைக் காணவில்லையாம். புகார் கொடுக்க விரும்புகிறார்.அழைக்கிறார், வாருங்கள்”

“கடவுளே இது என்ன பிரச்சினை “ என்று சொன்னபடியே அவர் என்னுடன் வந்தார்.

அந்த நபர் போலீஸ் அதிகாரியிடம் விவரத்தை சொல்லி விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்!

அவர் போனபின்,போலீஸ் அதிகாரி,என்னைப் பரிதாபமாகப் பார்த்து விட்டு மீண்டும் வருவதாகச் சொல்லிச் சென்று விட்டார்.

மு.மே. இது பற்றித்தகவல் தருவதற்கும், ஆலோசனைக்கும்,மண்டல அலுவலகம் சென்று விட்டார்!

30 நிமிடங்கள் கழிந்தன:தொலைபேசி அழைத்தது:எடுத்தேன்!’

”மு.மே இருக்கிறாரா”குரல்

“இல்லை நான் மூத்த மேலாளர் பேசுகிறேன்”

“நான் திரு x அவர்களின் செயலர் பேசுகிறேன்.அவர் லாக்கர் பற்றித் தன் மனைவியிடம் கேட்க ,அவர்,பொருள்கள் மற்றொரு வங்கி லாக்கரில் இருப்ப தாகவும் ,இந்த லாக்கர் கணக்கை முடித்து விடலாம் என்றும் கூறி விட்டார்.எனவே புத்தகத்தை அனுப்பினால் கையொப்பமிட்டுச் சாவியையும் திருப்பி அனுப்பி விடுவார்”

“சரி”

அந்தப் பெரிய மனிதரிடமிருந்து வருத்தம் தெரிவித்து ஒரு வார்த்தை இல்லை!

குறைந்தபட்சம்,தானே செய்தியை வங்கிக்குச் சொல்ல வேண்டும் என்கிற நாகரிகம் இல்லை!

தொலைபேசியை வைத்தேன்!லாக்கர் அதிகாரியைக் கூப்பிட்டு செய்தியைச் சொன்னேன்!வங்கியில் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்!

மு.மே.அவர்களுக்கு தொலைபேசி மூலம் செய்தி சொன்னேன்.

காவல் நிலையம் சென்று செய்தியைச் சொன்னேன்.

காவல் அதிகாரியும் கவலை நீங்கியவராகச் சொன்னார்”இந்தச் செய்திக்காக நான் உங்களுக்குத் தேநீர் தர வேண்டும்.அமருங்கள்.அருந்தி விட்டுப் போகலாம்”

எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும்,அந்த சில மணித்துளிகளை மறக்க முடியுமா?
பெரிய பதவியில் இருந்தும் அடிப்படை மனித நாகரீகம் கூட இல்லாத அவரை மறக்க முடியுமா?

இப்படியும் மனிதர்கள்!

.

திங்கள், ஏப்ரல் 04, 2011

பரல்கள்!

முதலில் ஒரு குட்டிக் கதை;சுவாரஸ்யமான கதை!

அவன் காரில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.

வழியில் ஒரு பெண் வண்டியை நிறுத்தச் சொல்லி,லிஃப்ட் கேட்கிறாள்.

போய்க் கொண்டிருக்கும்போதே அவள் மயக்கமடைகிறாள்.

அவன் அவளை மருத்துவரிடம் எடுத்துச் செல்கிறான்.

பரிசோதனை செய்து விட்டு மருத்துவர் அவனிடம் சொல்கிறார்,”வாழ்த்துகள்.நீங்கள் தந்தையாகப் போகிறீர்கள்!”

அவன் அதிர்ச்சி அடைகிறான்.

”இல்லை இல்லை,இது என் குழந்தையில்லை” என மறுக்கிறான்.

அந்தப் பெண் சொல்கிறாள்”இவர்தான் குழந்தையின் தந்தை”

மேலும் அதிர்ச்சி!

குற்றமற்றவனென நிருபிக்க மரபணு சோதனை செய்யச் சொல்கிறான்.
போலீஸ் வருகிறது.சோதனை நடக்கிறது!

சோதனை முடிவு வருகிறது.அதன் படி அவன் ஒரு தந்தையாகும் தகுதியற்றவன் எனத் தெரிகிறது!

மென்மேலும் அதிர்ச்சி!

எப்படியோ சிக்கலிலிருந்து தப்பியாயிற்று.

திரும்பி வீடு செல்லும்போது யோசிக்கிறான்.

”வீட்டில் காத்திருக்கும் இரண்டு குழந்தைகள்,? ”….

இதுதான் மிகப் பெரிய அதிர்ச்சி!!

வேடிக்கையான கதை;
------------*-----------*-----------
இனி உங்கள் சிந்தனைக்குச் சில சிந்தனைகள்!

1)கோபம் அதிகரிக்கும்போது,நாக்கு,மூளையை விட வேகமாகச் செயல் படுகிறது!

2)கடந்த காலத்தை மாற்ற முடியாது;ஆனால்,நிகழ்காலத்தைப் பாழாக்க முடியும்,எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டு!

3) நேற்று பற்றிய வருத்தங்களும்,நாளை பற்றிய கவலைகளும் இதயத்தை நிரப்பியிருந்தால்,மகிழ்வளிக்கும் இன்று என்பது இல்லாமல் போய் விடும்!

4)எல்லா மனிதரின் புன்னகைக்கும் ஒரே மொழிதான்!

5)யார் மீதாவது கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திலும்,நாம் 60 விநாடிகள் மகிழ்ச்சியை இழக்கிறோம்!

6)எத்தனை பேருக்குப் பிரித்துக் கொடுத்தாலும் குறையாதது—அன்பு!
----------*---------*----------
கிரிக்கெட் பற்றி எதுவும் இல்லையென்றால்,இப்போது எதுவும் முழுமையடையாது அல்லவா?

பைக்கில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்களை,போக்குவரத்துக் காவலர் நிறுத்தி,ஏதோ கேட்பதைப் பார்த்தார் ஒருவர்.இளஞர்கள் எந்த ஆவணங்களையும் எடுத்துக் காட்டாமல் கைபேசியை எடுத்து அழுத்திவிட்டு,அதைக் காவலரிடம் காண்பித்து விட்டுப்பின் சென்றனர்.அவர் ஆவலை அடக்கமுடியாமல் இளைஞர்களைப் பின் தொடர்ந்து சென்று என்ன நடந்தது என்று விசாரிக்க,அவர்கள் சொன்னார்கள்”காவலர்கள்,கிரிக்கெட் ஸ்கோர் கேட்டனர்,கைபேசியில் தகவலைக் காட்டினோம்” என்று!( நன்றி—இந்தியாவின் நேரங்கள்.4-4-2011)

இதுதான் இந்தியா!

சனி, ஏப்ரல் 02, 2011

கிரிக்கெட் கடவுளே,போற்றி!போற்றி!

இன்று மாலை இந்தியாவின் எல்லாத்திரை அரங்குகளும் காலியாக இருக்கும்!

சென்னைக் கடற்கரையில் வெறும் காற்று மட்டும் இருக்கும்;வாங்க மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.

இந்தியர்கள் அனைவரின் பிரார்த்தனைகள் இரண்டு.

1)இந்தியா உலககோப்பையை வெல்ல வேண்டும்

2)அதை விட முக்கியமாக ஆனால் அதற்குத் துணையாக,சச்சின்சதம்-சத சதம்-அடிக்க வேண்டும்!

எல்லோரின் எண்ணமும் நிறைவேறி,கிரிக்கெட் கடவுள் சதமடிக்க,எல்லாம் வல்ல கடவுள் அருள் புரிய வேண்டும்!

பிரார்த்திப்போம்!

சச்சின் பற்றிப் பிரபலங்களின் கருத்து.
“என் மகன் சச்சின் டெண்டுல்கராக வளர வேண்டும் என் விரும்புகிறேன்---லாரா(மே.இ.)

நாங்கள் இந்திய கிரிக்கெட் அணியிடம் தோற்கவில்ல.சச்சின் டெண்டுல்கர் என்ற மனிதரிடம் தோற்றோம்!----மார்க் டெய்லர்(ஆஸ்).

இந்தியாவில் பறக்கும் ஒரு விமானத்தில் சச்சினுடன் சேர்ந்து பயணம் செய்தால்,எங்களுக்கு எந்தக் கெடுதியும் நேராது!---ஹஷீம் அம்லா(தெ.ஆ)

அவருக்கு அந்த ’லெக் க்ளான்ஸ்’ ஆடுவதற்கு,ஒரு கைத்தடி போதும்!--வக்கார் யூனஸ்(பாக்)

உலகில் இரண்டு விதமான பேட்ஸ்மென் இருக்கிறார்கள்—1)சச்சின் டெண்டுல்கர் 2)மற்ற பேட்ஸ்மென்!—ஆண்டி ஃப்லவர்(ஜிம்பா)

நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன்.அவர் இந்தியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் no.4. பேட்ஸ்மேன் ஆக விளையாடுகிறார்!—மேத்யூ ஹேடன்(ஆஸ்தி)

சச்சின் பேட் செய்யும்போது நான் என்னையே பார்க்கிறேன்!—பிராட்மேன்(ஆஸ்தி)

நீங்கள் செய்ய நினைக்கும் குற்றங்களைச் சச்சின் பேட் செய்யும்போது செய்யுங்கள்!ஏனென்றால்,அப்போது கடவுளும்,அந்தபேட்டிங்கைப் பார்ப்பதில்
ஆழ்ந்திருப்பார்!(ஒரு ஆஸ்திரேலிய ரசிகர்)

எனக்குக் கிரிக்கெட் தெரியாது;ஆயினும் நான் சச்சின் ஆட்டத்தைப் பார்க்கிறேன்.அது எனக்குப் பிடிக்கும் என்பதால் அல்ல;அவர் ஆடும்போது என் நாட்டின் உற்பத்தித் திறன் ஏன் 5 விழுக்காடு குறைகிறது என்று அறிந்து கொள்ள!(ஒபாமா)

கிரிக்கெட்டாய நம:
சச்சின் போற்றி போற்றி!

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

தமிழ் மணமும்,ஏப்ரல் முட்டாளும்!

ஓர் இனிய பாடல்,பல ஆண்டுகட்கு முன் படித்தது.என் நினைவில் நின்ற அளவில் எழுதுகிறேன்----

“வஞ்சியேன் என்றவன்றன் ஊருரைத்தான் யானுமவன்

வஞ்சியான் என்றதனால் வாய்நேர்ந்தேன் -வஞ்சியான்

வஞ்சியேன்,வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்

வஞ்சியாய்,வஞ்சியர் கோ”


தலைவி தன் தோழியைப் பார்த்துக் கூறுவதாக அமைந்த பாடல்.

”பெண்ணே!,அவன் என்னைச் சந்தித்தபோது அவன் வஞ்சி நாட்டைச் சேர்ந்தவன் என்று

சொல்வதற்காக,வஞ்சியேன் என்று சொன்னான்.நானும் அவன் வஞ்சிக்க மாட்டேன் என்று

சொல்வதாக எண்ணிச் சம்மதித்தேன்.ஆனால்,வஞ்சியேன் என்று சொல்லிச் சொல்லியே

அந்த வஞ்சி நாட்டுத் தலைவன் என்னை வஞ்சித்து விட்டான்.”


அவளுடன் கலந்து அவளைப் பிரிந்து சென்ற அவன் திரும்ப வராத நிலையில் தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

என்ன சொல் நயம்?.அந்த வஞ்சியேன் என்ற சொல்லில் என்ன சொற்சிலம்பம்? அவன்

தன்னை ஏமாற்றி விட்டுச் சென்று விட்டான் என்பதை எவ்வளவு சுவைபட உரைக்கின்றாள்?

பாடலில் அழகான தமிழ்மணம் கமழ்கிறதல்லவா?!

(தலைப்பின் பாதி நியாயப்படுத்தப் பட்டு விட்டது!)

தலைவன் ,தலைவியைஏப்ரல் 1ஆம் தேதி சந்தித்திருக்க வேண்டும்.அவளிடம் அவன் பொய்

சொல்லாமலே அவளை முட்டாளாகி விட்டான்! அவன் வஞ்சிக்க மாட்டேன் என்று

சொல்லவில்லை,வஞ்சி நாட்டைச் சேர்ந்தவன் என்றுதான் சொன்னான்.தன் சொல் நயத்தில்

அவளை ஏப்ரல் முட்டாளாக்கி விட்டான்!

(தலைப்பின் மறுபாதியும் நியாயப் படுத்தப் பட்டு விட்டதல்லவா?!)

(தமிழ் மணம் பற்றிப் படித்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்களிக்காமல் போகாதீர்கள்!)