தொடரும் தோழர்கள்

பதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

’திக்,திக்’ மணித்துளிகள்!!

இது நடந்தது ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்!

அப்போது நான் தலைநகர் தில்லியில் ஒரு முக்கியமான வங்கிக்கிளையில் மூத்த மேலாளராகப் பணி புரிந்து வந்தேன்.

அது ஒரு முதன்மை மேலாளர் (chief manager) கிளை.நான் நிர்வாகத்தைக் கவனிக்கும் மூத்த மேலாளராக இருந்தேன்.

ஒரு நாள்,காலை மணி 11 இருக்கும்.மு.மே.என் அறைக்கு வந்தார்.என்னிடம் சொன்னார்”திரு.x அவர்கள் (அரசின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் நபர்) தனது பாதுகாப்புப் பெட்டகச் சேவைக்காக வருகிறார்.அவர் வந்ததும் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்க வேண்டும்.ஏற்பாடு செய்யுங்கள்”என்று.

நானும் அவர் சொன்ன ஏற்பாடுகளைச் செய்தேன்.

அரை மணி நேரத்தில் சைரன் அலற அவர் வந்தார்.மு.மே .மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார்.அவரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.நான் என் அறையில் சென்று அமர்ந்து விட்டேன்.அங்கிருந்தே கவனித்துக் கொண்டிருந்தேன்!

லாக்கர் அதிகாரி,மு.மே.யின் அறைக்குச் சென்று அந்த வி.ஐ.பி.யை அழைத்துச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து அந்த நபர் திரும்ப மு.மே.யின் அறைக்குள் நுழைந்தார்.சில விநாடிகளில் மு.மே.என்னை அழைத்தார்.நான் அவர் அறைக்குச் சென்றேன்.

மு.மே.பேயறைந்தது போலக் காணப்பட்டார்.சொன்னார்”சாரின் லாக்கரில் அவர் வைத்திருந்த எதுவுமே இல்லையாம்.போலீஸில் புகார் தர வேண்டும் என்று சொல்கிறார்.”குரலில் ஒரு நடுக்கம்.

நான் அந்த நபரைப் பார்த்துக் கேட்டேன்”உங்களுக்கு வேறு வங்கியில் லாக்கர் இருக்கிறதா? ”
அவர் பொறுமையின்றிப் பதிலளித்தார்.” ஆம்.ஆனால் அங்கு நான் இவற்றை வைக்கவில்லை .எனக்கு நிச்சயம் தெரியும்.நேரத்தைக் கடத்தாமல் போலீசை அழையுங்கள்!”

குரலில் அதிகாரம்! திமிர்!

நானே அருகில் இருந்த காவல் நிலையம் சென்றேன்.அந்த அதிகாரிக்கு வங்கிக் கணக்கு உண்டு.எனக்கு நன்கு தெரிந்தவர்.வாருங்கள் என என்னை வரவேற்றார்.

அவரிடம் சொன்னேன்.”திரு.X அவர்கள் வங்கிக்கு வந்திருக்கிறார்கள்.அவர் லாக்கரில் வைத்திருந்த பொருள்களைக் காணவில்லையாம். புகார் கொடுக்க விரும்புகிறார்.அழைக்கிறார், வாருங்கள்”

“கடவுளே இது என்ன பிரச்சினை “ என்று சொன்னபடியே அவர் என்னுடன் வந்தார்.

அந்த நபர் போலீஸ் அதிகாரியிடம் விவரத்தை சொல்லி விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்!

அவர் போனபின்,போலீஸ் அதிகாரி,என்னைப் பரிதாபமாகப் பார்த்து விட்டு மீண்டும் வருவதாகச் சொல்லிச் சென்று விட்டார்.

மு.மே. இது பற்றித்தகவல் தருவதற்கும், ஆலோசனைக்கும்,மண்டல அலுவலகம் சென்று விட்டார்!

30 நிமிடங்கள் கழிந்தன:தொலைபேசி அழைத்தது:எடுத்தேன்!’

”மு.மே இருக்கிறாரா”குரல்

“இல்லை நான் மூத்த மேலாளர் பேசுகிறேன்”

“நான் திரு x அவர்களின் செயலர் பேசுகிறேன்.அவர் லாக்கர் பற்றித் தன் மனைவியிடம் கேட்க ,அவர்,பொருள்கள் மற்றொரு வங்கி லாக்கரில் இருப்ப தாகவும் ,இந்த லாக்கர் கணக்கை முடித்து விடலாம் என்றும் கூறி விட்டார்.எனவே புத்தகத்தை அனுப்பினால் கையொப்பமிட்டுச் சாவியையும் திருப்பி அனுப்பி விடுவார்”

“சரி”

அந்தப் பெரிய மனிதரிடமிருந்து வருத்தம் தெரிவித்து ஒரு வார்த்தை இல்லை!

குறைந்தபட்சம்,தானே செய்தியை வங்கிக்குச் சொல்ல வேண்டும் என்கிற நாகரிகம் இல்லை!

தொலைபேசியை வைத்தேன்!லாக்கர் அதிகாரியைக் கூப்பிட்டு செய்தியைச் சொன்னேன்!வங்கியில் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்!

மு.மே.அவர்களுக்கு தொலைபேசி மூலம் செய்தி சொன்னேன்.

காவல் நிலையம் சென்று செய்தியைச் சொன்னேன்.

காவல் அதிகாரியும் கவலை நீங்கியவராகச் சொன்னார்”இந்தச் செய்திக்காக நான் உங்களுக்குத் தேநீர் தர வேண்டும்.அமருங்கள்.அருந்தி விட்டுப் போகலாம்”

எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும்,அந்த சில மணித்துளிகளை மறக்க முடியுமா?
பெரிய பதவியில் இருந்தும் அடிப்படை மனித நாகரீகம் கூட இல்லாத அவரை மறக்க முடியுமா?

இப்படியும் மனிதர்கள்!

.