”சார்!நான் தினம் உங்க ரூம் ஜன்னலைக் கடந்துபோகும் போது பார்க்கிறேன், கணினி முன்னால உட்கார்ந்து ஏதோ தட்டிட்டே
இருக்கிங்களே?என்ன செய்றீங்க?” பக்கத்து ஃப்ளாட்காரரின் கேள்வி.
”வலைப்பதிவில் எழுதிட்டிருப்பேன்’
என் பதில்.
”எப்பவும் அதே வேலையா
இருக்கீங்களே?நிறைய வருமானம் வருமோ? நிறைய
சம்பாதிச்சிருப்பீங்களே?” அவர்.
எதிலுமே பணத்தைத் தேடும் சராசரி மனிதர்.
அவருக்குத் தெரியாது நான் என்ன சம்பாதித்திருக்கிறேன்
என்று.
ஆம்
.விலை மதிப்பில்லாத ஒன்றைச் சம்பாதித்திருக்கிறேன்.ஒன்று அல்ல;பல.
என்ன அது?
நட்பு.
எதையும் எதிர்பார்க்காத நட்பு.
இந்தியா மட்டுமன்றி உலகம் முழுதும் விரிந்து
கிடக்கும் நட்பு.
வயது வேறுபாட்டைக் கடந்த நட்பு.
அகத்தியனின் பார்க்காமலே காதல்
போல்,இது எழுத்து மூலமாக மட்டுமே பார்த்துப் பழகிய நட்பு.
முன்பெல்லாம் பேனா நண்பர்கள் என்று
கடிதத்தொடர்பின் மூலம் நண்பர்களாவார்கள்.
இப்போது கடிதம் எழுதுவது என்பது ஒரு
அரிய கலையாகி விட்டது.
நான் வலைப்பதிவு
தொடங்கும்போது,இப்படி நண்பர்கள் பலர் கிடைப்பார்கள் என நினைக்கவேயில்லை.
இல்லத் திருமண நிகழ்ச்சிக்குத் தொலைபேசியில்
அழைத்துப் பின் அழைப்பிதழும் அனுப்பிய இதுவரை சந்திக்காத நண்பர்.
என்னில் பாதி வயதுக்கும் குறைவாக
இருப்பினும் என்னையும் ஒரு யூத் பதிவராக ஏற்றுக் கொண்டு,கடற்கரைச்
சந்திப்புக்கும்,நாடகங்களுக்கும் அழைக்கும் ஒரு நண்பர்.
வெளியூரிலிருந்து சென்னை வந்த நாளில்,நண்பருடன்
என்னை வந்து சந்திக்கும் நண்பர்.
சந்தித்துச் சென்றபின் என்னைப் பற்றி ஒரு பதிவே எழுதி என்னைப் பெருமைப்படுத்திய நண்பர்.
பிரபல எழுத்தாள நண்பர்களைச்
சந்திக்க வரும்போது என்னையும் சந்தித்து உரையாடிச் சென்ற ஒரு நண்பர்
தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு
கொண்டு உற்சாகம் தரும் கவி நண்பர்.
வெளிநாட்டிலிருந்து ஒரு வேலையாகச் சில நாட்களே வந்திருக்கும்போது, குறைந்த நேரமே கிடைத்தாலும் அதில் என்னை
வந்து(நண்பருடன்) சந்தித்து கலகலப்பாக உரையாடிய நண்பர்.
இப்படி இன்னும் எத்தனையோ முகம்
தெரியாத இனிய நட்புகள்.சந்தித்தவை சில;சந்திக்காதவை பல.
ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்புக்
கொள்ளலாம் என்பதற்கு சிறந்த உதாரணம்-கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் நட்பு. அன்று,
புரவலரும், புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்
கொள்ளவில்லை, பேசிக் கொள்ள வில்லை என்றாலும் இன்றும் பேசப்படும் ஒரு அரிய நட்புக்கு இலக்கணம்
வகுத்துச் சென்று விட்டார்கள்.
இன்று இந்தப் பிசிராந்தைக்குப்
பல கோப்பெருஞ்சோழர்கள் கிடைத்திருக் கிறார்கள்.
இந்த நட்பை நினைக்கும்போதே மனம்
நெகிழ்ந்து போகிறேன்.
இத்தகைய நட்புகள் கிடைக்க வழி
வகுத்த இப் பதிவுலகை வாழ்த்துகிறேன்.
வாழ்க நட்பு.