தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 13, 2018

உண்டி கொடுப்போர்

மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன்.

மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்க!இன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்,உங்க மதிய உணவுக்காக.ஒரு பிளாஸ்டிக் டப்பாவில தக்காளி சாதமும்,இன்னொரு டப்பால தயிர் சாதமும் வச்சி,பையில போட்டு  ரப்பர் பேண்டால கட்டி வச்சிருக்கேன். ஸ்பூனும் வச்சிருக்கேன்.இந்தாங்க.எடுத்துட்டுப் போங்க..........’என்று சொல்லி விட்டுப் பையை அவன் கையில் கொடுத்தாள்.

அவன் வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

“என்னங்க!மதியம் 2 மணிக்குள்ள சாப்பிட்டுடுங்க.அப்பதான் தக்காளி சாதம் நல்லாருக்கும்” என்று வாசல் வரை வந்து சொல்லி வழி அனுப்பினாள்.

முருகேசன் வெளியே வந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

அவன் கைபேசியில் தகவல்கள் வரத்தொடங்கின.

நேராக ஆரிய பவன்.இட்லி சாம்பார்,வடை.பார்சல் பையை தனது கம்பெனி பைக்குள் வைத்தான்.அதற்குள் முன்னமே ஓர் ஓரமாகத் தனது சாப்பாட்டுப் பையை வைத்திருந்தான்.

அருகில் இருக்கும் மற்றொரு உணவகத்திலிருந்து மற்றொரு பார்சல்.

அதுவும் பைக்குள் புகுந்தது.

அந்த இரண்டையும் கொடுக்க வேண்டிய இடங்களை நோக்கிப் புறப்பட்டான்.

தொடங்கி விட்டது அன்றைய வேலை


ஒட்டல் ஒட்டலாய் ,வீடு வீடாய் ,தொடர்ந்து பயணம்.

இன்று வழக்கத்தை விட ஆர்டர்கள் அதிகம்.

தொடர்ந்து ஓடிக் கொண்டே -ஓட்டிக் கொண்டே இருக்க நேர்ந்தது.

நிற்பதற்கு நேரமில்லாத ஓட்டம்.

குறித்த நேரத்துக்குள் டெலிவரி செயவ்து அவசியம்.

பசித்தது.

மணியைப் பார்த்தான்.

2.10

மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது.

அடுத்த ஆர்டருக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.

வண்டியைச் சாலையோரத்தில் நிறுத்தினான்.

பையைத்திறந்து மனைவி கொடுத்த உணவை எடுத்தான்.

ஸ்பூனால் சாப்பிடத் தொடங்கினான்.

தக்காளி சாதம் நன்றாகவே இருந்தது என எண்ணினான்.

ஆனால் முழுவதும் சாப்பிடாமல் தயிர்சாத டப்பாவை எடுத்துக் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டான்.

நேரம் ஆகி விட்டது..

கைபேசி ஒலித்தது

அடுத்த டெலிவரிக்குப் போக வேண்டும் .

டப்பாக்களைக் கட்டிப் பைக்குள் ஓரமாக வைத்தான்.

புறப்பட்டான்

பாவம் அவனுக்குத் தெரியாது.......

அவனது சாப்பாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு சமூக ஆர்வலர் காணொளியாக எடுத்து  விட்டார் என்பது!


டிஸ்கி:இது முழுவதும் கற்பனையே.