தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 24, 2017

நீங்க ஷட்டப் பண்ணுங்க !

நீங்க ஷட்டப் பண்ணுங்க!

என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற  ஒரு உபதேசம்.!

இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று.

எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக்கொண்டே இருப்பவர் பலர்.

பேசும் பேச்சில் சாரம் எதுவுமில்லாமல் வெட்டிப்பேச்சாகப் பேசுபவரைப் பார்த்து என்ன சொல்வது?

நீங்க ஷட்டப் பண்ணுங்க!

வியாழன், ஜூன் 15, 2017

புரட்சித் தலைவர் சொன்னது சரியா?

ஒரு குட்டிக்கதை.

அக்பர்,பீர்பால் கதை

ஒரு நாள் அக்பர் தன் அவையிலிருந்த அறிஞர்களிடம் கேட்டார் ”உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.உங்கள் பதில் மூன்று சொற்களுக்கு மேல் போகக் கூடாது”

யாரும் பதில் சொல்லவில்லை.

அக்பர் பீர்பாலைப் பார்த்தார்.

பீர்பால் சொன்னார்”நான்கு விரற்கடை”

அக்பருக்குப் புரியவில்லை.

பீர்பால் சொன்னார்”கண்ணால் காண்பதெல்லாம் உண்மை;ஆனால் காதால் கேட்பவை உண்மையாகவும் இருக்கலாம்;பொய்யாகவும் இருக்கலாம். பெரும்பாலும் பொய்யே”

அக்பர் கேட்டார்”அதற்கு. ஏன் நான்கு விரற்கடை என்றீர்”

கண்ணுக்கும் காதுக்கும் இடையே உள்ள தூரம் நான்கு விரற்கடைதான் என்றார் பீர்பால்..

இப்போது கேள்வி,பீர்பால் சொன்னது சரியா என்பதே.

ஒரு சொல் வழக்கு உண்டு

“கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்”

புரட்சித் தலைவர் ஒரு படத்தில் பாடுவார்”கண்ணை நம்பாதே.உன்னை ஏமாற்றும்”

ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம்.நம் கண்ணெதிரே நடப்பது எப்படிப் பொய்யாக முடியும்?பார்த்தவர் சொல்லும்போது கண்,காது,மூக்கு வைத்துச் சொல்கையில் அது பொய்யாகலாம்.ஆனால் பார்த்த நிகழ்வு எப்படி பொய்யாக இருக்கும்?


நிகழ்வு பொய்யல்ல;கண்  ஏமாற்றவில்லை.ஏமாற்றியது நம் எண்ணம்.

பார்க்கும் காட்சிக்கு பார்ப்பவர் மனதைப் பொறுத்து வெவ்வேறு பொருள் கற்பிக்கிறார்கள்.நிகழ்வு ஒன்றே;ஆனால் அதைப் புரிந்து கொள்வதைப் பொறுத்து அது உண்மையாகவும் பொய்யாகவும் மாறுகிறது.

பல படங்களில்,கதாநாயகன்,கதாநாயகியை எவருடனோ எங்கேயோ பார்த்து விட்டு ஆராயாமல்  சந்தேகப்படுகிறான்.(ஜெமினி கணேசனுக்குத்தான் அது போன்ற சந்தேகம் பல படங்களில் வந்து விடும்.)..

ஒரு நிகழ்வு.சாலையில் செல்லும் ஒரு பெண் தடுமாறி  விழப் போகிறாள்.அருகில் சென்று கொண்டிருந்த இளைஞன் அவளைப் பிடித்துத்தூக்கி விழாமல் காப்பாற்றுகிறான்..அருகில் நடந்து கொண்டிருந்தவருக்கு நிகழ்வு  விகல்பமாகத் தெரியாது.ஆனால் தொலைவில் இருந்து அவன் அவளைப் பிடித்து அணைத்துத்  தூக்குவதைப் பார்க்கும் சிலர்,நடு ரோட்டில் காதலா என்று தலையில் அடித்துக் கொள்ளலாம்...
.
ஒரு மண விலக்கு வழக்கறிஞரிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது அவர் சொன்னார்”நீதி மன்றங்கள் எப்போதுமே பெண்கள் மீது அதிக பரிவுடன் இருக்கின்றன.ஒரு வழக்கில் கணவன் தன் மனைவி, ஒருவனுடன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டதைப் பார்த்ததாகச் சொல்லும்போது நீதிபதி கேட்டார்,அவர்கள் அறைக்குள் என்ன செய்தார்கள் என்பது உனக்கு எப்படித்தெரியும்?!”

இங்கு கண் பார்த்தும் பயனில்லை...


ஒரு செய்தியை உண்மையென உறுதியாகச்  சொல்ல நாம் ”என் கண்ணால பார்த்தேன் என்கிறோம்.

பிரச்சினை பார்வையில் இல்லை.;பார்த்ததைப் புரிந்து கொள்வதில்தான்

எனவே கண்ணை நம்பாதே என்று  எப்படிச் சொல்வது? கண்ணால் காண்பதும் பொய் என்று எப்படிச் சொல்வது.?

நீங்களே சொல்லுங்கள்
செவ்வாய், ஜூன் 13, 2017

உப்புமா....ஆ ஆ ஆ !
அந்தக்  காலத்துப் பாட்டு ஒன்று..

"உப்புமாவைக் கிண்டிப் பார்ப்போமே
  உல்லாசமாகவே நாம் உப்புமாவை...

  கடுகு மிளகாய்ப் பழம் காயம்      கருவேப்பிலை
  உளுத்தம் பருப்புடனே ஒரு சேர்  நெய்யை விட்டு......உப்புமாவை"


உப்புமா சுவையாக இருக்க வேண்டுமென்றால் சூக்குமம் இதுதான்.."ஒரு சேர் நெய் !"


சேர் என்பது அந்தக்கால அளவை.

8 பலம்= 1 சேர்
5 சேர்=1 வீசை

ஒரு சேர் என்பது இன்றைய 280 கிராமுக்கு இணையானது.

இவ்வளவு நெய்!

ஆனால் ஒன்று நிச்சயம்

உப்புமா சுவையாக இருக்க வேண்டுமென்றால்,கை தாராளமாக இருக்க வேண்டும்...எண்ணை,நெய்யில்!

உப்புமாவில் உள்ளங்கையை வைத்து விட்டு எடுத்துப் பார்த்தால் கையில் நெய் மினுமினுக்க வேண்டும்.

உப்புமா என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது,பலரும் அஞ்சுவது ரவா உப்புமாதான்.

அதிலும் இரண்டு வகை

பம்பாய் ரவை,கோதுமை ரவை என.

இந்த ரவா உப்புமா செய்த பிரச்சினை ஒன்று நினைவுக்கு வருகிறது.

கோவில்பட்டியில் நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.

ஒவ்வொரு ஆண்டும் ஹாக்கி பந்தயம் சிறப்பாக நடை பெறும்.

கலந்து கொள்ளும் அணிகளில் அனைவருக்கும் பிடித்த அணி,தெற்கு ரயில்வே பெரம்பூர்.

ஒரு முறை இறுதிப்போட்டியில் பெரம்பூரும்,லக்ஷ்மி மில்ஸ் அணியும் மோத வேண்டும்.

போட்டியன்று மாலை,பெரம்பூர் அணியினர் ஓட்டலுக்கு சிற்றுண்டி சாப்பிடப் போனார்கள்.

அப்போது அங்கே என் அண்ணாவும் அவர் தோழர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

பெரம்பூர் அணியைப் பார்த்து உற்சாகமான அவர்கள்,உங்களுக்கு வேண்டியதை சாப்பிடுங்கள்,செலவு எங்களது என்று சொல்லி விட்டனர்.

சூடான ரவா உப்புமா மேல் என்ன மோகமோ,அதை வரவழைத்துச் சாப்பிட்டனர்.

உப்புமா நன்றாக இருக்கிறது என்று இன்னும் ஒன்று சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியாகச் சென்றனர்.

மகிழ்ச்சி அதோடு சரி.

அன்றைய ஆட்டத்தில் லக்ஷ்மி மில்ஸ் அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது.


பெரம்பூர்  அணியில் ஓர் அருமையான ஆட்டக்காரர் இருந்தார்.அவர் பெயர் ...கார்!ஆங்கிலோ இந்தியர்)


ரவா உப்புமா தவிர வேறு பல உப்புமாக்களும் உண்டு.அரிசி உப்புமா(அம்மா அந்தக் காலத்தில் வெணகலப் பானையில் செய்வார்கள்.தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் புளிக் கொத்ஸு....ஆகா!)

புளி உப்புமா(புளிமா,பச்சைமாப்பொடி உப்புமா என்று பல பெயர்கள் உண்டு)

அவல் உப்புமா

சேமியா உப்புமா

ரொட்டி உப்புமா

ஜவ்வரிசி உப்புமா(சாபுதானா கிச்சடி)

இவை தவிர முன்பு சில முறை சாப்பிட்ட ஓர் உப்புமா...அரைத்த உப்புமா!

இதன் செய்முறை யாருக்காவது தெரியுமா?.......ஸ்ரீராம்?

இன்று உப்புமா புராணத்தின் காரணம்........

வீட்டில் தோசை மாவு இல்லை

சப்பாத்தி செய்தால் சப்ஜி வேறு செய்ய வேண்டும்

வெளியே வாங்கிச் சாப்பிட மனம் இல்லை.

வேறு வழி.........

ரவா உப்புமா!

ஞாயிறு, ஜூன் 11, 2017

ஹாலிடே,ஹோலிடே!

வழக்கமான ஹாலிடே ஜாலிடே இன்று     ஹாலிடே, ஹோலி(holy)டே  ஆகி விட்டது.

சிரித்தும் மகிழலாம்.,தெய்வீகத்தை நினைத்தும் மகிழலாம்!

அவர்கள் இறைவன் சன்னிதியில் அமர்ந்திருந்தனர்.

எதிரே நின்ற கோலத்தில் பெருமாள்.திருப்பதி பாலாஜி.

அவர்கள் 35 பேர்.அவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு துணை.

அவர்கள் ஓர் அற்புதமான இறை அனுபவத்தில்,இதுவரை கிடைத்திராத  தெய்வீக அனுபவத்தில் திளைத்திருந்தனர்.

சனி, ஜூன் 10, 2017

ஒ.கி.க.ம...முடிச்சாச்சு!

ஒருவனுக்கு வயது 35.

இப்போதுதான் திருமணம்.

ஆனால் பெண் வீட்டில் வயதைக் குறைத்துச் சொல்லியிருப்பான் போலும்.

அந்நிலையில் அப்பெண்ணுக்கு எதிரில் யாராவது அவனுக்கு 35 என்று சொன்னால் கோபம் வருமா,வராதா?!

வரும்.,வருகிறது...

கதாநாயகனுக்கு.

ஒருகாட்சியில் இது காட்டப்படுகிறது.

 மீண்டும் ஒரு காட்சி.

முக்கியமான பேச்சு நடை பெறுகிறது.

கொலைப் பழியை லாரி ஓட்டுனர் ஏற்றுக்கொள்வது பற்றி..

அப்போது அந்த ஓட்டுனர்,35 வயசுல கல்யாணம் முடிச்ச உனக்கு என்று சொல்ல,நாயகனுக்குக் கோபம் வெடித்து வந்து அடிக்கப் போகிறான்.

தலைக்கு மேல்  தொங்கும் கத்தி பெரிதாகத் தெரியவில்லை.,மனைவி  முன் இப்படி வயதைச் சொல்லி விட்டானே என்றே கோபம்!

மனித குணம்    இயல்பாக!

படத்தில் வரும் யாருமே செயற்கையாயில்லை.

இயல்பான நடிப்பு.

எனக்கு ஒரு எண்ணம்.

அனைவரையும் போலிஸ் லாரியில் ஏற்றி அழைத்துச் செல்கையில் பலிக்குக் கொண்டு வந்த ஆட்டை அவிழ்த்து விட அது ஓடுகிறது...

அவர்கள் பிடித்து வந்த ஆடுவிடுதலை ஆகிறது

அவர்கள்போலீஸால் பிடித்துச் செல்லப் படுகின்றனர்

அவர்கள் கருணை மனு என்ன ஆகும்?!

என்னஒரு முரண் நகை.

இங்கேயே படத்தை முடித்திருக்கலாம் என்பதே என் எண்ணம்.

ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பின் என்று,அவர்கள் விடுதலை இத்யாதிகளைக் காட்டுவது ஒரு சமரசமாகத் தோன்றுகிறது.

நல்ல படம்.

புதன், ஜூன் 07, 2017

ஒரு கிடாயின் கருணை மனு..-1

முதலிரவு

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் கணவன்.

ஆனால்,மனைவியோ வந்து படுத்துவுடன் தூங்கி விடுகிறாள்.

பெருத்த ஏமாற்றம் கணவனுக்கு.

மறுநாள்..

சனி, ஜூன் 03, 2017

சல்மான் கானைத் தாக்கிய நக்மா!

என்னங்க!ஒண்ணு சொல்றேன் செய்றீங்களா?

என்ன சொல்லு.

இந்தத் தாடிய எடுத்திடுங்க.

ஏன்?

இடைஞ்சலா இருக்குதுங்க! அது மட்டுமில்லாம பாக்கவும் நல்லா இல்ல.வயசான மாதிரி இருக்கு.

வியாழன், ஜூன் 01, 2017

கடுகு!

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் என்று சிலர் பாடுவது கேட்கிறது.

இதே வேலையாப் போச்சு என்று சலித்துக் கொள்வது மனக் கண்ணில் தெரிகிறது.

ஆனாலும் ஏமாறத்தான் போகிறீர்கள்.

புதன், மே 31, 2017

இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை!

புகை யி(ல்)லை என்றார்கள்; ஆனால்
சுருட்டிப் பற்ற வைத்தால்
புகைதான்  வருகிறதே!

இழுக்க  இழுக்க  இன்பம்
இறுதி வரை என்பர்
இறுதியே மிக அருகில்தானே?

பன்னீர் புகையிலை, பான் பராக்
வாயிலிட்டுச் சுவைக்கலாம்
சுருட்டு, பீடி, வெண்சுருட்டு
புகை விட்டு ரசிக்கலாம்
எத்தனை வழிகள்
எமனை விரைந்தழைக்க!

புகையை நீங்கள் விட்டீர்கள்,
ஆனால் அப்புகை உங்களை விடாது
உங்கள் புகையைக் காணாமல்!

புண்பட்டநெஞ்சத்தை
புகைவிட்டு ஆற்றுவாராம்

புகை பட்ட நெஞ்சமே
புண்ணாகிப் போகாதோ?i

இன்று
ஒரு நாள் மட்டுமேன்?
ஆண்டு முழுவதும்
எதிர்ப்பு தினமாகட்டும்
இப்பொல்லாத புகையிலைக்கு.

(மீள் பதிவு)

ஞாயிறு, மே 28, 2017

ஹாலிடே ஜாலிடே

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.

அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது.

அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா?”

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா?என்ன நினைத்தாய்?”

அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.

அவனுக்கு அவமானமாகி விட்டது.

அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.

சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.

சொன்னாள்”நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி.உங்கள் மன நிலையைப் பார்க்க 
எண்ணி அவ்வாறு செய்தேன்”

இளைஞன் உரக்கச் சொன்னான்”என்ன?ஓர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா?மிக அதிகம்”

இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.  

அவள் குறுகிப் போனாள்.

அவன் சொன்னான்”நான் ஒரு வழக்கறிஞர்.யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்!”

நன்றி:  பதிவர் குட்டன்.

சனி, மே 27, 2017

நடந்ததும் நடக்காததும்!

நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி.

குஜராத்தி படங்களில் வில்லனாக நடிக்கும் ஃபெரோஸ் வோரா,தன் மகள் இரண்டு முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞனை மணக்க விரும்பியபோது,தடையேதும் சொல்லாமல்,மணம் செய்வித்ததோடு,மீண்டும் ஒரு முறை சிறுநீரகம் தேவைப்பட்டால் தன் சிறுநீரகத்தைத் தருவதாக வாக்கும் அளித்தார்.சமீபத்தில் மருமகனின் சிறு நீரகம் பழுதடைந்தபோது,வாக்களித்தபடி தன் சிறுநீரகத்தைக் கொடுத்துக் காப்பாற்றினார்.இது செய்தி.

இதுவே உண்மையான நிகழ்வு;அதன் முடிவு.

இதை ஆதாரமாகக் கொண்டு பிறந்ததே நேற்றைய கற்பனை.இப்படியும் நடக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடு. எனவே அது முடிவு இரண்டு.

மூன்று முடிவுகள் என்று நேற்று சொல்லி விட்டதால் இன்னொரு முடிவையும் தேடி எடுக்க வேண்டியதாகி விட்டது.இதோ மூன்றாவது..........

தன்  பெண்ணின் விருப்பத்தை அறிந்த ராமனாதன் தடையேதும் சொல்லாமல் திருமணத்துக்குச் சம்மதித்தார்.உங்கள் அன்புக்குக் குறுக்கே எதுவும் நிற்க முடியாது.கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்லதே செய்வான் என்று கூறிவிட்டார்.

திருமணம் நடந்தது.அவர்கள் வாழ்க்கை இன்பமயமாகத்தான் இருந்தது.ராமனாதனுக்கு மருமகனை மிகவும் பிடித்துப் போனது.ஒரு முறை பேசும்போது சொன்னார்”அப்படி நடக்க வேண்டாம்.ஆனால் ஒரு வேளை மீண்டும் ஒரு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்பட்டால்,கவலைப் பட வேண்டாம்.என்னுடைய சிறுநீரகத்தைத் தருகிறேன்.நம் இருவர் ரத்தமும் ஒரே பிரிவுதான்”

மாதங்கள் கடந்தன.

வாழ்க்கை அப்படியே இருக்குமா என்ன?

அசோக்குக்கு மீண்டும் பிரச்சினை

மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட வேண்டும்.

கவிதா தந்தை முன்பு சொன்னதை நினைவு கூர்ந்து,அசோக்கிடமும் சொன்னாள்.

ஆனால் ராமனாதன் அது பற்றி எதுவும் பேசவில்லை..

மருத்துவரைச் சந்திக்கும்போது உடன் சென்றார் ஆனால் தான் தருவது பற்றி  வாயைத் திறக்கவில்லை.

கவிதாவுக்குப் பெரும் ஏமாற்றம்.

அவள் தர முன் வந்தும் அது சேரவில்லை.

கொடையாளி கிடைக்க சிறிது தாமதம் ஆயிற்று

அது வரை டயாலிசிஸ் செய்யப்பட்டது.

கவிதா தந்தையைத் தவிர்க்கத் தொடங்கினாள்

கொடையாளி கிடைத்து அறுவையும் நடந்தது.

எதற்குமே தந்தையின் உதவியை நாடவில்லை.

எல்லாம் சுபமாக முடிந்தபின் மருத்துவரிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது கவிதா சொன்னாள்”அன்பு,பாசம் இல்தெலாம் வெறும் வார்த்தைகள் என்பதை அப்பா எனக்கு உணர்த்தி விட்டார்.முன்பு தானாகவே தான் சிறுநீரகம் அளிப்பதாகச் சொன்னவர்,தேவைப் பட்டபோது நழுவி விட்டார்.என்ன உலகம்.எல்லாமே வேஷம்”

மருத்துவர்,அவர்கள் குடும்ப நண்பரும் கூட.

அவர் சொன்னார்”கவிதா.நீ நினைப்பது தவறு.சில மாதங்களுக்கு முன் உன் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக இங்கு தங்கியிருந்தபோதுதான் அது தெரிய வந்தது.அவரது ஒரு சிறுநீரகம் முழுதும் செயலிழந்து போயிருந்தது.இருந்தும் இப்போது அவர் என்னிடம் அவர் உயிர் போனாலும் பரவாயில்லை மாப்பிள்ளையைக் காப்பாற்றும் வாய்ப்பைக் கொடு என்று கேட்டார்.ஒருவரைக் கொன்று ஒருவரைப் பிழைக்க வைக்க மாடோம் என்று சொல்லி நான் ஆறுதல் சொன்னேன்.அவர் மிக மனமுடைந்து போயிருக்கிறார்.”

நாற்காலியில் அமர்ந்தபடியே முகத்தைப் பொத்தியவாறு உடைந்து அழலானாள் கவிதா.


வெள்ளி, மே 26, 2017

என்னதான் நடக்கும்...?

”அப்பா”

பெண்ணின் குரல் கேட்டுப் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே இறக்கிப் பார்த்தார் ராமனாதன்.

அவர் பெண் கவிதா.

“என்னம்மா”

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்

“அப்பா!அசோக்கும் நானும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டொம்”

“என்னம்மா சொல்றே?இது ஏன் நடக்கக் கூடாதுங்கறதைப் பத்தி அன்னிக்கு அவ்வளவு நேரம் பேசினேனே.இன்னும் மனசு மாறலியா.”

“மாறாதுப்பா’

வியாழன், மே 25, 2017

காலா!

ஒரு திரை இசை.

வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்.

"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு" என்று துவங்கும் பாடல்.

அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்!

காரணம்,பாடல் வரிகளா?

பாடிய பாடகியின் குரலா?

படத்தில் ஆடிய மாளவிகாவின் ஆட்டமா?

இருக்கலாம்.

ஆனால் நிச்சயமான காரணம்......

அப்பாடலின் ஒரு வரி!

"நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜனிகாந்தும் கருப்புதான்
 அழகு கருப்புதான்"

இது போதாதா பாடல் ஹிட்டாக....!

சரி,இதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு?

காலா என்றால் இந்தியில் கருப்பு என்று பொருளாம்.

இந்தியில் ஒரு விசித்திரம்.எல்லாவற்றுக்கும் பால் உண்டு....

கண் ஆண் பால்,மூக்கு பெண்பால் என்பது போல்

அது போல் காலா என்பது காலி என்றும் மாறும்,அது குறிக்கும் பொருளைப் பொறுத்து.

அது தவிர க,ச,ட,த,ப என்ற எழுத்துக்களுக்கு நான்கு வர்க்கங்கள்!

 டில்லிக்குப் போன புதிதில் ஒரு முறை அலுவலகத்தில் ஊழியரை அழைத்து ஒரு காலி கோப்பு கொண்டு வரச் சொன்னேன்.

அவர் விழித்து விட்டு அப்படியெல்லாம் கோப்பு கிடையாதே என்றார்

நான் என் தேவையை விளக்கினேன்.

ஓ! காலி கோப்பா என்று சொல்லி விட்டுக் கொண்டு வந்தார்.

என்ன இது குழப்பம் என்கிறீர்களா?

நான் கேட்டது kaaலி கோப்பு.அதாவது கருப்புக் கோப்பு!

அவர் சொன்னது khaali கோப்பு.அதாவது புதிய,எதுவும் கோக்காத கோப்பு.

தவறான உச்சரிப்பின் விளைவு!

இப்போது கருப்புக்கு வருவோம்.

அழகு கருப்புதான் ...பாடல் வரி

உண்மைதான்.

"கருப்பே ஒரு அழகு காந்தலே ஒரு ருசி " என்று சொல்வார்கள்.

உலக அழகி கிளியோபாட்ரா கருப்பு என்று சொல்வோர் உண்டு;இல்லை என்போரும் உண்டு .
காக்கும் கடவுள் திருமாலே கருப்பு நிறம்தான்.

ஆனால் அதைக் கருப்பு என்று சொல்லாமல் பச்சை என்றும்,இராமனை நீல வண்ணன் என்று சொல்வர்.

பச்சை மாமலைபோல் மேனி என்று பாடுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

மையோ,மரகதமோ,மழைமுகிலோ...ஐயோ என்று வர்ணிக்க முடியாமல் தவிக்கிறார் கம்பர்.

திருமால் படுத்துக் கிடப்பதனால் பாற்கடலே பச்சை நிறமாகி விட்டதாம்.

நாமும்தான் தினம் காக்கையைப் பார்க்கிறோம்.

ஆனால் பாரதி பார்க்கும்போது அவனுக்கு ........

காக்கைச் சிறகினிலே நந்தலாலாவின் கருமை நிறம் தோன்றுகிறது.

காலா என்றால் எமனை விளிப்பது.

எவரேனும் எமனை விளிப்பரா?

காலனுக்கும் காலன் உண்டா?

அவன்தான் காலகாலன்.......சிவன்.

 மார்க்கண்டேயன் உயிரைக்கவர்ந்து செல்ல எமன் வந்தபோது,மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்ள சிவன் தோன்றி எமனைக் காலால் உதைத்து சூலத்தை ஓங்குகிறார்

எமன் மன்னிப்பு வேண்டித் தப்பிக்கிறான்

காலனைக் காலால் உதைக்கும் துணிச்சல் சிவனைத்தவிர,இவனுக்கும் இருந்தது

பாரதி!

காலருகே வா உன்னை மிதிக்கிறேன் என்கிறான்.

சாவைக் கண்டு அஞ்சாத அத்துணிவு எல்லோருக்கும் வேண்டும்!

இறுதியாக,ஆனால் முதன்மையான ஒரு செய்தி

காலா என்பது சூப்பர் ஸ்டாரின்,ரஞ்சித் இயக்கும் படத்தின் தலைப்பு.

படம் இமாலய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.புதன், மே 24, 2017

மந்திர உபதேசம்மந்திரம் உண்டொன்று சொல்வேன்

மறுமையை நீக்கி இம்மைக்குச் சுகம் தரும்

ஐந்தெழுத்தும் ஆறெழுத்தும் எட்டெழுத்தும்

இதற்குப் பின்தான்.

சொல்வதற்கு எளிய மந்திரம்

பிறந்த குழந்தையும் சொல்லும் மந்திரம்

மூன்றெழுத்து மந்திரம்

“அம்மா”.

அழையுங்கள் நாவினிக்கும்

அவளுக்கும் நெஞ்சினிக்கும்.

ஓரன்னையின் பயணம்

இளம் தாய்

குழந்தைகள் கைபிடித்து

வாழ்க்கையெனும் பாதையில்

சில இடங்களில் பாதை கரடு முரடு

சில இடங்களில் முட்கள் அடர்ந்து

எங்காயினும் கால் நோவாமல் அழைத்துச் செல்கிறாள்.

சிகரங்களைக் கண்டு மலைக்காமல்

ஏறி உச்சி காணச் செய்கிறாள்

புயலைக் கண்டு நடுங்காமல்

எதிர்கொள்ளச் செய்கிறாள்.

காலங்கடந்தால்

முதுமையால் தொய்ந்த உடல்           

முன்பு போல் வழி நடத்த இயலாமல்

இப்போது குழந்தைகள் இல்லை

பெரியவர்கள்

வலிமை மிக்கவர்கள்.

தாய்க்கு ஆதாரமாய் நிற்பவர்கள்

ஒரு நாள் அவள் மறைகிறாள்

ஆயினும்

அவள் மறையவில்ல!

நம்மைச் சுற்றியிருக்கும் ஓசைகளில்

நாம் முகர்கின்ற நறு மணங்களில்

நமது சிரிப்பில்

நமது கண்ணீரில்

வாழ்கிறாள்.

அவள் வெறும் நினைவல்ல.

நம்முடன் கலந்திருக்கும் உணர்வு!

(அவள் ஒரு வரம்.இருக்கும்போது அலட்சியம் செய்து இல்லாதபோது ஏங்குபவர்கள்  பலர்.காலம் இன்னும் இருக்கிறது.அவள் காலடி தொழுங்கள்;கர்மினையும்)