தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 22, 2012

சூரிய புத்திரி!



 டிசம்பர் மாதக் கணையாழி இதழில், என்னுடன் பணிபுரிந்து வந்த,இன்னும் பணியில் இருக்கும் நண்பர் ‘சித்ரூபன்” எழுதிய  சிறுகதையை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன்,

1984 இலிருந்து-88 வரை நான் வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் துணைக் கோட்ட மேலாளராகப் பணிபுரிந்த காலத்தில்,அங்கு இருந்தவர்.அவர் எழுதிய ’சிஏஐஐபி’ என்ற  நாடகத்தை வங்கி மன மகிழ் மன்ற ஆண்டு விழாவில் ரசிகரஞ்சனி சபா அரங்கில் மேடை யேற்றிய போது,நான் அதில் இரு வேடங்களில் நடித்தேன்-

அது பற்றிய என் பதிவைப் படிக்க இங்கு செல்லவும்

இன்று சித்ரூபனும்அந்த அனுபவத்தை நினைவு கூர்ந்தார்

சிறுகதைக்கு அவர் கொடுத் த தலைப்பு—சூரியன்

நான தலைப்பை சிறிது மாற்றி விட்டேன்”சூரிய புத்திரி” என்று!

கதையின் நீளம் கருதி அதை ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளாக வெளியிடுகிறேன்.

இதோ கதை----

வெள்ளைத் தொப்பியணிந்து சோபாவில் அமர்ந்திருந்தேன்.பக்கத்தில் என் தங்கையும் காத்தி ருந்தாள்.எங்களைத் தவிர குறைந்தது பத்து நபர்களாவது இருப்பார்கள்.சிலர் கண்களில் மருந்து விடப்பட்டு,கையில் பஞ்சோடு தலையைப் பின் பக்கம் சாய்த்தபடி உட்கார்ந்தி ருந்தார்கள். சுவரில் ஒரு குழந்தை உதடுகளைக் குவித்து’உஷ்ஷ்ஷ்...’என்றபடி இருந்தது.அந்த அன்புக் கட்டளை யையும்  மீறி எங்கோ வெடியோசை கேட்டது.தீபாவளியின் மிச்ச மீதத்தைத் தீர்த்துக் கட்டும் முயற்சியோ?அந்த சிவகாசிச் சனியன்தான் நேற்று என் தங்கையின் கண்களைப் பதம் பார்த்துவிட்டது.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த டாக்டர் வேகமாகத் தன்னறைக்குள் சென்று மறைந்தார். அறைக்கதவு ’டாக்டர்.ஏ.சுப்ரமோனி எம்.எஸ்;டி.ஓ’ என்றபெயரைத் தாங்கியபடி உள்ளுக்கும் வெளிக்குமாய் அலைந்து நின்றது

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு எங்கள் முறை வந்தது.என் தங்கை என் கையைப் பிடித்துக் கொண்டு பின் தொடர்ந்தாள்.டாக்டர் ஒரு சுழல் நாற்காலியில் அரை வட்டமாக சுற்றிக் கொண்டிருந்தார்.மேசையில் நிறைய லென்ஸ்களும் வெறும் ஃப்ரேம்களும் இருந்தன.சுவரில் நீள அட்டையில் பல எழுத்துக்கள்மேலிருந்து கிழாகக் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கொண்டிருந்தன.

“வாம்மா.இப்படி ஒக்கார்”

அவளுடன் நானும் அமர்ந்தேன்.

“பேரு என்ன?”என்றபடியே பிருஸ்கிருப்ஷன் பேடை தயாராக்கிக் கொண்டார்.

”ரோகிணி” என்றாள் என் தங்கை,கண்களை மூடிய படியே.

டாக்டர் உச்சரித்துக் கண்டே எழுதினார்”ரோ..ஹி..ணி..”

“ரோஹிணி இல்லேடாக்டர்.ரோகிணி.ஆர்ஓஜிஐஎன்இ”

“அப்படியா”புன்னகைத்தபடி என்னைப் பார்த்தார்.

“இப்படித்தான் டாக்டர்,பிடிவாதம்”என்றேன்.

“பேர் விஷயத்தில் பிடிவாதமா இருக்கறது தப்பில்லே..என் பேரை சுப்பிரமணின்னு யாராவது எழுதினா எனக்கும் பிடிக்காது”என்று சொல்லி விட்டு”என்னாச்சு,சொல்லுங்க..”என்றபடி ஒரு டார்ச்சால் ரோகிணியின் கண்களைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்



“நேத்து பட்டாசு வெடிக்கும்போது கண்லே நெருப்புபொறி பட்டுடுத்து” என்றேன்

“தீபாவளி சமயத்துல இந்த மாதிரி கேஸ் வரது சகஜம்தான்…இது சம்திங் சீரியஸ்..”அறை விளக்கைஅணைத்துவிட்டு இருட்டில் மெல்லிய ஒளிக்கற்றைஅவள் கண்களில் செலுத்திப் பரிசோதித்தார்.

மீண்டும் விளக்கைப்போட்டு”..ப்யூபில் ரொம்ப அஃபெக்ட் ஆயிருக்கு..” என்று சொல்லி ப்ரேமுடன் கூடிய கிரீடம் மாதிரி ஒன்றை அணிந்துகொண்டு மீண்டும் அவள் கண்களை மிக அருகில் வெளிச்சம் பாய்ச்சி உற்று நோக்கி உதட்டைப் பிதுக்கினார்.

“குணப்படுத்தலாம்.ஒரு சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும்..”என்றவாறே கிரீடத்தைக் கழற்றி மேசை மேல் வைத்தார்.

“நான் பழையபடி சூரியனைப் பார்க்க முடியுமா டாக்டர்?”என்று கேட்டாள் ரோகிணி.

“யு மீன் த சன்?”என்றார் வியப்புடன்.

“ஆமா டாக்டர்”

“சூரியனை எதுக்கம்மா நீ பாக்கணும்?..உன் கண்ணு ரொம்படேமேஜ் ஆயிருக்கு.. பிரகாசமா, கூச வைக்கிற எதையுமே நீ பாக்கக்கூடாது..”

“சூரியனைப் பாக்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது டாக்டர்” என்று சொல்லி என் கைகளை அழுத்தினாள்

டாக்டர் குழப்பத்துடன் என்னைப் பார்த்தார்.

நான் விவரிக்க ஆரம்பித்தேன்.

(தொடரும்)

வெள்ளி, டிசம்பர் 21, 2012

ஓடும் ரயிலில் ஓர் அபத்த நாடகம்!



வாழ்க்கையின் பல நிகழ்வுகள் அபத்தமானவையே.

நிகழும் அந்தக் கணத்தில் அவை சாதாரணமாகத் தோன்றும் .

ஆனால் யோசித்துப் பார்க்கையில் அதில் உள்ள அபத்தம் புரியும்.

இதுதான் இருத்தலியல் என்பதா என்பது எனக்குத் தெரியாது!

பின் வரும் கதை வாழ்க்கையின் அந்த அபத்தத்தை வெளிக்காட்டுகிறது.

கதை---

ரயிலில் வழக்கம் போல் கூட்டம்.

அந்த s-2 கோச் வாசலில் டி.டி,இ யைச் சுற்றிக் கூட்டம் .

ஏதாவது படுக்கை கிடைக்காதா என முயலும் கூட்டம்.அவர் சொல்லி விட்டார்,எந்த வாய்ப்பும் இல்லை என்று.

அப்படியும் இருவர் வண்டி புறப்பட்டதும் அந்தப் பெட்டியில்
 ஏறி விட்டனர்.

டி.டி.இ யிடம் கெஞ்சிக் கூத்தாடி,கதவருகில் யாருக்கும் தொந்தரவின்றி இருப்பதாகவும், ஏதாவது  இருக்கை ரத்தானால் தங்களுக்குக் கொடுக்கும்படியும் சொல்லி அனுமதி வாங்கி விட்டனர்.

ரயில் சென்று கொண்டே இருந்தது.

இரண்டு மணி நேரம் கடந்திருக்கும்.

திடீரென்று ஒரு அழுகுரல்.

பலர் பெட்டி நடு நோக்கி விரைந்தனர்.

படுக்கை 25,26 இல் ஒரு தம்பதி பயணம் செய்தனர்.

அந்தக் கணவன் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார்.

பலரும் பலயோசனைகள் சொன்னார்கள். கடைசியில் அந்தத் தம்பதி அடுத்த நிலையத்தில் இறங்கி,வாடகைக் கார் பிடித்து ஊர் திரும்புவது என முடிவாயிற்று.

அடுத்த நிலையம் வந்தது .

அவர்கள் இறங்கினர்.

பெட்டியில் ஒரு கனத்த மௌனம்!

வண்டி புறப்பட்டது

காத்திருந்த அந்த இருவரும்  டி.டி.இ யை அணுகினர்.

“சார்,ரெண்டு பெர்த் காலியாயிருக்கே!எங்களுக்குக் கொடுங்களேன்!”
 ................................................................................................

வியாழன், டிசம்பர் 20, 2012

தற்கொலை ஒரு தீர்வாகுமா?



இன்று மதியம்.

கணினி முன் அமர்ந்து,carnaticradio.com இல் கர்நாடக இசை  கேட்டுக்கொண்டிருந்தேன்.

தொலைபேசி மணி ஒலித்தது.

பேசியவர் என்னுடன் வங்கியில் பணி புரிந்தவர்.

அவர் கணவர் ஒரு பத்திரிகையில் பொறுப்பில் இருப்பவர்.

அவர் சொன்ன திடுக்கிடும் செய்தி---நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் அவர்கள் கோட்டூர்புரம் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் என்பது.

நான் அந்த நிமிடத்தில் செயலற்றுப் போனேன்.

கர்னாடக இசையில் மட்டுமன்றித் திரை இசையில் ஒரு தனி இடத்தைப் பிடித்துக்கொண்ட நித்யஸ்ரீயின் வாழ்வில் இப்படி ஒரு இடியா?

பின்னரே தொலைக்காட்சியில் செய்தி கசிய ஆரம்பித்தது.

சிறிது நேரம் சென்ற பின் அடுத்த இடி.

நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுக் காப்பாற்றப் பட்டார்.

அவரது இரண்டு பெண் குழந்தைகளுக்கும்,மற்ற குடும்பத்தவர்க்கும் இதெல்லாம் எத்தகைய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்?

ஆறாத மனக்காயத்தை அளித்திருக்கும்?

என்ன சொல்வதென்று எனக்குத்தெரியவில்லை.

நித்யஸ்ரீக்கும்,அக்குழந்தைகளுக்கும்,இத்துயரத்திலிருந்தும் ,இந்த அதிர்ச்சியிலிருந்தும் மீளும் சக்தியை இறைவன்தான் அளிக்க வேண்டும்.

இனி நான் எழுதப்போவது,குறிப்பாக இந்தத்  தற்கொலையைப் பற்றி அல்ல.

பொதுவாக தற்கொலை என்ற செயலைப் பற்றி.

சிலர் சொல்கிறார்கள் தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் அல்ல ;அதற்கு மன உறுதி வேண்டும் என்று.

ஒப்புக்கொள்கிறேன்;ஆனால் தற்கொலை செய்து கொள்வதில் மட்டுமே இருக்கிறது அந்த மன உறுதி.

பிரச்சினைகளை எதிர்கொள்வதில் இருக்கும் கோழைத்தனத்தில் பிறந்த மன உறுதி.

நிதானமாக யோசித்துச் செயல்பட்டால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாதா?

தற்கொலை என்னும் முடிவு ஒரு கண நேரத்தில் எடுக்கப் படும்,விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காத, உணர்ச்சி மயமான முடிவு.

அந்தக்கடைசி நொடிகளில்,உயிர் பிரியும் நேரத்தில் ஐயோ அவசரப்பட்டு விட்டோமே என்ற எண்ணம் நிச்சயமாகத் தோன்றும் என்றே எண்ணுகிறேன்.

ஆனால் காலம் கடந்து விடுகிறது.

எனவே கடவுளிடம் ஒரு வேண்டுகோள்—

தற்கொலைக்கு முயலும் ஒவ்வொருவருக்கும்,அந்தக் கடைசி நேரத்தில் ,அவர்கள் வருந்தும் அந்தக் கணத்தில் ,பிழைக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்;

அவர்கள் மீண்டும் அந்த தற்றைச் செய்ய மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.