எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது.ஆனால் எனக்கு ஒரு(!) கனவு இருந்ததில்லை.பல கனவுகள்?
1)என் வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது வெவ்வேறு வயதில் நடந்த நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நான் சென்றிருக்கக்கூடிய பாதைகளின் சாத்தியங்களைக் காட்டுகின்றன.
என் 7 வயதில் சாத்தூரில் பொதுத்தேர்தலின் போது கையில் மெகா போனுடன் வீதி வீதியாகச் சென்று காங்கிரஸ் கட்சிக்காகத் தொண்டர்களுடன் சேர்ந்து பிரசா ரம் செய்தேன் .நாடாளுமன்றத்துக்கு திரு.காமராஜ் அவ்ர்களும் சட்டப் பேரவைக்கு திரு.எஸ்.ஆர்.நாயுடு அவர்களும் போட்டியிட்டனர் .வெற்றி ஊர்வலத்தில் திரு.நாயுடு அவர்களுடன் மகிழ்வுந்தில் அருகில் அமர்ந்து சென்றேன்.சில தெருக்கள் சென்றபின் தொண்டர்கள் என்னை இறக்கி ஹோட்டலுக்கு அழைத்து சென்று மைசூர்பாகும் தோசையும் வாங்கித்தந்தனர்.நான் இறங்கு முன் திரு.நாயுடு அவர்கள் என்னை அன்புடன் தட்டிக்கொடுத்தார்.
அன்று முதல் அந்தத்தொடர்புகள் விடாமல் ஒரு அரசியல் அஸ்திவாரம் எனக்கு அமைத்துத் த்ரப்பட்டிருந்தால் நான் என்னவாயிருப்பேன்?-அமைச்சர்?ஏன் அவ்வாறு நடக்கவில்லை?இழப்பு யாருக்கு???
2)சிவகாசியில் பள்ளியில் படிக்கும்போது பள்ளி நாடகங்களில் கதாநாயகனாக(ராஜபார்ட்)நடித்தேன்.மறக்கமுடியாத வேடம் ராஜ ராஜ நரேந்திரன்.நடிப்பின் காரணமாகவே தமிழ் ஆசிரியருக்கும் பள்ளி மேலாளருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தேன்.பள்ளி வளாகத்தில் நடக்கும் கண்காட்சியிலும் நாடகத்தில் நடித்தேன்.எல்லோரும் என்னை “குட்டி நடிகர் திலகம்” என்றே அழைத்து வந்தனர்.வங்கியில் பயிற்சியில் இருந்த போது நண்பர் ஒருவர் ,ஒரு பிரபல நடிகர் ஒருவரின் பெயரைக்கூறி அவரெல்லாம் நடிக்கும்போது நீ ஏன் நடிக்கக்கூடாது என்று கேட்டார்.இவ்வாறு பலநேரங்களில்,பல விதங்களில் எனக்குள் ஒரு ஆசை எழுப்பப்பட்டது.திரைத்துறையில் புகுந்திருந்தால் பெரிய நடிகனாயிருப்பேனோ? அவ்வாறு ஏன் நடக்கவில்லை?இழப்பு யாருக்கு????
3)பட்டமேற்படிப்புக்குப்பின் சிறிது காலம் வருமான வரித்துறையில் பணியாற்றி வந்த போது ஐ.ஏ.எஸ் படிப்பதில் தீவிரமாக இருந்தேன்.நன்கு தயார் செய்து கொண்டு இருந்தேன்.அந்த நேரத்தில் வங்கிப்பணிக்கான அழைப்பு வந்தது.செல்ல வேண்டாம் என்று எண்ணினேன்.என் அண்ணாஅவர்களும் ஆமோதித்தார்.ஆனால் போக வேண்டிய நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பாக வங்கிப்பணிக்குச்செல்லும்படி என் அண்ணா அறிவுரைத்தார்.அவரும் ஒரு வங்கி அதிகாரிதான்.வங்கியில் சேர்ந்து விட்டேன்.ஐ.ஏ.எஸ் அதோடு முடிந்தது. ஏன் எண்ணப்படி நடக்கவில்லை?இழப்பு யாருக்கு?????
முதல் கேள்விகளுக்கு விடை1.குடும்ப சூழ்நிலை2.Risk(த்மிழ் என்ன) எடுக்கத்துணியாத நடுத்தர வர்க்க மனோ பாவம்(சுருக்கமாக விதி என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாமா)
இரண்டாவது கேள்விகளுக்கான விடை;-இழப்பு அரசியலுக்கு,திரைப்படத்துறைக்கு,அரசுப்பணிக்கு என்று சொல்வேன் என எண்ணினீர்களா?இல்லை எனக்குத்தான்.
இதைப்படித்து விட்டு நான் வாழ்க்கையில் திருப்தியின்றி இருந்திருக்கிறேன் என்று எண்ண வேண்டாம்.
என் பணியிலும் நான் மகிழ்வுடன்தான் இருந்தேன்.இது வரை வாழ்க்கையை முழுமையாகவே வாழ்ந்திருக்கிறேன்.
எல்லாம் இறைவன் செயல்.
(பழைய வீட்டிலிருந்து)