தொடரும் தோழர்கள்

வியாழன், மே 31, 2012

இழுக்க இழுக்க இன்பம்,இறுதிவரை!


புகை யி(ல்)லை என்றார்கள்; ஆனால்
சுருட்டிப் பற்ற வைத்தால்
புகைதான்  வருகிறதே!

இழுக்க  இழுக்க  இன்பம்
இறுதி வரை என்பர்
இறுதியே மிக அருகில்தானே?

பன்னீர் புகையிலை, பான் பராக்
வாயிலிட்டுச் சுவைக்கலாம்
சுருட்டு, பீடி, வெண்சுருட்டு
புகை விட்டு ரசிக்கலாம்
எத்தனை வழிகள்
எமனை விரைந்தழைக்க!

புகையை நீங்கள் விட்டீர்கள்,
ஆனால் அப்புகை உங்களை விடாது
உங்கள் புகையைக் காணாமல்!

புண்பட்டநெஞ்சத்தை
புகைவிட்டு ஆற்றுவாராம்

புகை பட்ட நெஞ்சமே
புண்ணாகிப் போகாதோ?i

ஒரு நாள் மட்டுமேன்?
ஆண்டு முழுவதும்
எதிர்ப்பு தினமாகட்டும்
இப்பொல்லாத புகையிலைக்கு.


சில ஆண்டுகளுக்கு முன்’ பான் பராக்’ பழக்கத்தில் இருந்த ஒரு இளைஞனை அடையார் புற்றுநோய் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்,மதிவளத்துணைக்காக (அறிவுரை,ஆலோசனை,counseling) அங்கு காட்டப்பட்டநோயால்பாதிக்கப்பட்டவர்களின் படங்களைப் பார்த்தபின்,புகையிலையைக் கையால் தொடுவதற்கே அச்சம் வரும்.)


நாமெல்லோரும் சோம்பேறிகள் அல்ல!


”என்னடா?ரவி வரலையா?”
”உனக்குத்தான் தெரியுமே!அவன் மகா சோம்பேறி.தயாராகி வரத்துக்குள்ள விடிஞ்சுடும்” 
நண்பர்கள் பேச்சு.

”இன்று ஞாயிறு.சோம்பேறித்தனமா படுக்கையில் கிடந்து விட்டு லேட்டாத்தான் எந்திரிக்கப் போறேன்”
விடுமுறை நாளில் ஒருவர்.

இவர்கள் சொல்லும் சோம்பேறித்தனம் என்பது என்ன?

எதுவும் செய்யாமல் இருத்தல்,வெட்டித்தனம்,செயலின்மை என்பவை பொருள்கள் எனலாம்.

ஆனால் சித்தர்கள் மொழியில் சோம்பல் என்பதே வேறு
அது வேலையற்று இருப்பது அன்று.

அது எல்லா வேலைகளுக்கும் மேலான வேலை.

அது தூங்காமல் தூங்கும் ஒரு நிலை

மெய்யுணர்வு நிலை.

ஜே.கே. சொல்வது போல் தேர்வுகளற்ற அறிநிலை,விழிப்புணர்வு.

அது செயலற்ற விழிப்புணர்வு நிலை

சித்தர் மொழியில் செத்த சவம் போன்ற நிலை.

திருமூலர் சொல்கிறார்..

“சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
 சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
 சோம்பர் உணர்வு சுருதி முடிந்த இடம்
 சோம்பர் கண்டார்அச் சுருதிக்கண் தூக்கமே”

தன் செயல் அற்றுச் சிவச் செயலாக இருப்பவர் சோம்பர்.அவர்கள் 
இருப்பது, கிடப்பது எல்லாம் இயற்கைத் தூவெளியானசிவ வெளியில்.

வேதங்கள் முடிந்த இடம் நாதாந்தம் ஆகும்(நாதம்+அந்தம்)

அவர்கள் உணர்ச்சி வியாபிக்கும் இடம்  அந்த நாதாந்தம் ஆகும்.அங்கு அவர்கள் பேரின்பமாகிய தூக்க நிலை எய்தி நினைவற்று இருப்பர்.

 சோம்பர் நிலையில் மனத்தின் தூண்டல்கள் எல்லாம் நிலை குத்திப் போகின்றன.

அது சிவயோக நித்திரை என்று குறிக்கப்படும்

நமது புலன்கள் உறங்க உணர்வு விழித்திருக்கும் நிலை.

”பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
 உய்த்தொன்று மாபோல்விழியுந்தன் கண்ணொளி
 அத்தன்மை ஆதல் போல் நந்தி அருள் தரச்
 சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே’----(திருமந்திரம்)

”பித்தம் பிடித்தவன் மருந்து உண்டு  பித்தம் நீங்கி இயல்பாக ஆவான். கண்படலம்(cataract) நீங்கப்  பெற்றவன் தெளிவான பார்வை பெறுவான்
 அது போல் இறைவன் அருளால், உள்ளத்தெளிவு பெற்று இயல்பான செயல்களை விட்டு அச் சிவத்தில் கூடி நின்றேன்.”

இத்தகைய செயலொழிந்த நிலையே சோம்பர் நிலை.

அந்நிலையில் இருப்பவரே சோம்பேறிகள்.

நாமெல்லாம் சோம்பேறிகள் அல்ல.

நாம் செயலற்று  இருந்தால் அது வெட்டித்தனம்;

அங்கு செயலுமில்லை,விழிப்புணர்வுமில்லை!

செவ்வாய், மே 29, 2012

சும்மாவா இருக்கிறீர்கள்?!


ட்ரிங்.ட்ரிங்………
தொலைபேசி.
எடுக்கிறோம்.
மச்சி!என்ன பண்ணிட்டிருக்கே?”நண்பன்
சும்மாதான் இருக்கேன்

நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சொல்-சும்மா

எங்க இந்தப் பக்கம்?”
சும்மா,பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்

என்ன பொருளில் இந்தச் சொல்லை பயன்படுத்துகிறோம்.?

வேலை ஒன்றும் இல்லாமல் ,எதுவும் செய்யாமல் இருப்பது.

ஆனால் சும்மா இருப்பது என்பது அதுவா?

அருணகிரிநாதர் சொல்கிறார்-

”செம்மான் மகளைத் திருடும் திருடன்
 பெம்மான் முருக பிறவான் இறவான்
 சும்மா இரு சொல் அற என்றலுமே
 அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே”

அவருக்கே பொருள் விளங்கவில்லையாம்!

கந்தரனுபூதி பாடியவருக்கே அனுபூதி நிலை என்னவென்று தெரியாதாம்!

சும்மா இரு என்பது அனுபூதிநிலை.

சும்மா என்பது மெய்யுணர்வில் வரும் மௌனம்.

சும்மா என்பது இதயம் பேசுகிற மௌன மொழி.

இறைவனுடன் இரண்டறக் கலக்கும்போது வாய்க்கும் நிலை சும்மா இருத்தல்.

சிவவாக்கியர் சொல்கிறார்-

”செய்ய தெங்கிலே இளநீர்சேர்ந்த காரணங்கள் போல்
 ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோவில் கொண்டனன்
 ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோவில் கொண்டபின்
 வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்பதில்லையே”

சும்மா என்பது பேச்சற்ற பேரின்பத்தின்குறியீடு.
சும்மா என்பது இதயம் பேசுகிற மௌனமொழி.

திருமூலர் சொல்கிறார்
”பெம்மான்,பெருநந்தி, பேச்சு அற்ற பேரின்பத்து
 அம்மான் அடி தந்து,அருட்கடல் ஆடினோம்
 எம்மாயமும் விடுத்து,என்னைக் கரந்திட்டுச்
 சும்மாதிருந்து இடம்சோதனை ஆகுமே.”

--பெருமையுடைய சிவபெருமான் உரையற்று விளங்கும் நிலையில் அப் பெரியோனடி ஞானத்தாலருட்கடலில் மூழ்கினோம்.எல்லாவிதமான மாயா தொடர்புகளையும் கடக்கச் செய்து அவற்றினின்றும் வேறுபடுத்திச் செயல் அற்று இருக்கும்படி செய்வதே சோதனை.

சும்மா இருத்தல் என்பது மிகக் கடினமான ஒரு செயல்.

எனவே சும்மா இருக்கிறேன் என்று சொன்னால் நாம் வேறு நிலைக்குப் போனவர்கள் ஆகிறோம்.

நாம் சொல்லும் சும்மா என்பது பொருளற்ற சும்மா

வேலையின்றி அமர்ந்திருந்தாலும் மனம் ஊர் மேயப் போகிறது.

அவ்வாறன்றி,

உண்மையில் சும்மா இருத்தல் நிலைக்கு முயல்வோமா இனி?

டிஸ்கி:பதிவு மாறிப்போச்சோ?!சொக்கா!


திங்கள், மே 28, 2012

என்ன பரிசு வேண்டும்?!--பிங்க்பாங்க் பந்து!


இது பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை கீழ்ப்பாக்கம் மருத்தவக் கல்லூரியில் படித்து வந்த என் அக்கா மகள் சொன்ன ஒரு கதைதான்.(இப்போது அவள் யு.எஸ்ஸில் ஒரு ஆன்காலஜிஸ்ட்). இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் அவதாரம் எடுத்து மின்ஞ் சலில் வந்திருக்கும் இக்கதையை(!) உங்களுடன் பகிராமல் இருப்பது மிகப் 'பெரிய குற்றம் 'என்று தோன்றியதால், அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு குழந்தைக்கு அதன் பிறந்தநாளன்று உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று அப்பாகேட்க எனக்கு ஒரு சிவப்புபிங்க்பாங்க்பந்து வேண்டும் என்று சொல்ல ,தந்தை வாங்கிக் கொடுத்தார்

அடுத்த பிறந்த நாளன்றும் சிவப்புபிங்க்பாங்க் பந்து வேண்டும் எனக் கேட்க தந்தை வாங்கிக் கொடுத்தார்

பத்தாவது பிறந்தநாளின் போதும்   அவன் கேட்டபடியே சிவப்பு பிங்க்பாங்க் பந்து பரிசாக் கிடைத்தது. 15 ஆவது பிறந்த நாளன்றும் அவன் சிவப்பு பிங்க் பாங்க் பந்து வேண்டும் எனக் கேட்க தந்தை வாங்கித் தந்தார்.

தேர்வில் வெற்றி பெற்ற பின்

தந்தை:மகனே என்ன பரிசு வேண்டும்?
மகன்:சிவப்பு பிங்க்பாங்க் பந்து.

…….
திருமணத்தின் போது

தந்தை:மகனே ,என்ன பரிசு வேண்டும்?
மகன்:சிவப்பு பிங்க்பாங்க் பந்து!

இப்படி வாழ்நாள் முழுவதும் மனைவி மக்கள் எல்லோரிடமும் அவன் கேட்ட பரிசு ’சிவப்பு பிங்க்பாங் பந்து!’

கடைசியாக அவன் மரணப் படுக்கையில் இருக்கையில் உறவினர்கள் கடைசி ஆசை என்னவென்று கேட்க அவன் சொன்னான்”ஒரு சிவப்பு பிங்க்பாங்க் பந்து.”

பந்தைக் கொடுத்தபின் அவனது மகன் கேட்டான்”அப்பா!எப்போதும் பரிசாக சிவப்பு பிங்க்பாங்க் பந்தே கேட்டீர்களே,ஏன்?”

அவன் சொன்னான்”அது வந்து மகனே எனக்கு……………….”

பேசிக்கொண்டிருக்கும்போதே உயிர் பிரிந்து விட்டது!

ஹா,ஹா,ஹா!!

சனி, மே 26, 2012

பீர் குடிக்க ஆசையா?!

பெட்ரோல் விலை உயர்வுக்குப் பின்பெட்ரோலும் பீரும் ஒரே விலை என்று யாரோ சொன்னார்கள்!

எங்காவது செல்ல வேண்டுமா?
உங்கள் முன் இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளன!


                                    நீங்கள் ஒரு பாட்டில் பீர் குடித்து விட்டு நடந்து செல்லலாம்!


   அல்லது--------------உங்கள் வண்டிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் குடிக்கக்  கொடுத்து                           விட்டு வண்டியில் செல்லலாம்!


  அதனால்தான் சொல்கிறார்கள்!
    குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்கள் என்று!!

வெள்ளி, மே 25, 2012

ஒரு வரலாறு (தொடர்)--ராஜியின் மேற்படிப்பு

“ஏண்டி,ராஜி !வெளியூருக்குப் போய் படிக்கப் போறயாமே?   எங்களையெல்லாம் விட்டுட்டுப் போகப் போறியாடி?”ராஜியின் தோழி கேட்டாள்.


“ஆமாண்டி,ராதா.இனிமே இந்த ஊரிலே பசங்களோட சேர்ந்து படிக்க வேண்டான்னு அப்பா சொல்லிட்டா. வெளியூர்ல கர்ள்ஸ் ஸ்கூல்ல படிக்கலாம்னு சொல்லிட்டா”   -ராஜி

“எந்த ஊருக்குடீ போகப்போறே.”

“ரெண்டு எடம் சொல்லியிருக்கா.ஒண்ணு கடலூர்; இன்னொண்ணு மெட்ராஸ்”

“நீதான் படிப்பிலே கெட்டிக்காரியாச்சே.போயி பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய ஆளா வாடி”

இதுதான் அவள் தான் பிறந்து 13 வயது வரை வளர்ந்து , மூன்றாம் படிவம் வரை (8ஆம் வகுப்பு) படித்து முடித்த அந்த சாத்தூர் மண்ணை விட்டுத் தொலை தூரமான மதராசுக்கு வர நேர்ந்த காரணம்.

அவள் மூன்றாம் படிவம் படித்துத் தேறியபோது அவளுக்கு வயது 13.உயர் நிலைப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராக இருந்த அவளது தந்தை தன் பெண்ணுக்கும் உயர் கல்வி அளிக்கவேண்டும் என்று ஆசைப் பட்டார்.படித்து முடித்த வரை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த ஓரிரு பெண்களில் அவளும் ஒருத்தி.ஆனால் இப்போது பெரியவளாகும் நேரம் வந்து விட்டது.பையன்களுடன் சேர்ந்து படிக்க வைக்க முடியாது.

சாத்தூரிலோ,பெண்கள் உயர்நிலைப்பள்ளி கிடையாது. அவளது தந்தைக்குத் தெரிந்து,சென்னை மாகாணத்தில் இரு நல்ல பெண்கள் உயர் நிலைப்பள்ளிகள் இருந்தன. ஒன்று கடலூர் NT என்று அழைக்கப்பட்ட திருப்பாப் புலியூரில்  (திருப்பாதிரிப்புலியூர்). மற்றது மதராஸ் மைலாப்பூரில் இருந்த நேஷனல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி.(இப்போது லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி)


ஒரு நல்ல நாளில் அவள் தன் அம்மா மற்றும் அத்தை யுடன்  கடலூர் புறப்பட்டாள். அத்திம்பேர் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில்,ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார்.கடலூரில் பள்ளியில் இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே ஒரு வீடும் பார்த்து ஏற்பாடு செய்து விட்டார்கள்,அவளும் அவள் அம்மாவும் தங்குவதற்கு.

அவர்கள் கடலூரை அடைந்தனார்.வேறு பள்ளியிலிருந்து வருவதால் அவளுக்கு ஒரு தகுதித்தேர்வு வைத்தனர் அப்பள்ளியில்.எட்டு வரை தமிழ் மீடியத்திலே படித்த அவளால் அந்த ஆங்கில மீடியப் பள்ளியின் தேர்வில் நன்றாக எழுத முடியவில்லை. முடிவு—அவளை மூன்றாம் படிவத்துக்கே எடுத்துக் கொள்ள முடியும் என்று சொல்லி விட்டனர். ஏமாற்றம்தான்.

அவள் தந்தைக்குச் செய்தி போயிற்று.அவர் தன் தம்பியிடம் ரூ.200/= பணம் கொடுத்து மெட்ராஸ் சென்று மைலாப்பூர் பள்ளியில் முயற்சி செய்யச் சொன்னார். அவரும் மெட்ராஸ் சென்றார்.பள்ளியின் முதல்வரை-ஒரு ஆங்கிலேயப் பெண்மணி- பார்த்தார்.பழைய பள்ளியின் T.C யைக் காட்டினார்.எந்தவிதமான மறுப்பும் இன்றி, ராஜியைப் பார்க்காமலே அவளுக்கு நான்காம் படிவத்தில் இடம் தரப் பட்டது.


அவள் சித்தப்பா,பள்ளியில் ஒரு டெர்ம் சம்பளம் கட்டினார். மைலாப்பூர் அப்ரஹாம் முதலித் தெருவிலே, பள்ளிக்கு மிக அருகிலே ஒரு வீடு பிடித்தார்.அவளுக்காக ஒரு சிறிய புத்தக அலமாரி,ஒரு நாற்காலி எல்லாம் வாங்கிப் போட்டார்.எல்லாம் ரூ.200/க்குள்! கடலூருக்குத் தகவல் சென்றது.

இதோ ராஜி மெட்ராஸ் புறப்படப் போகிறாள்.

(தொடரும்)

வியாழன், மே 24, 2012

பாம்பும் நானும்-ஒரு தேடல்!


என்னுள் ஒரு தேடல்
எப்போதும் நிகழ்கிறது!
கைக்குழந்தையாய்த்
தாயின் மார் தேடல்
நடக்கும் பருவத்தில்
தாயின் மடி தேடல்
கல்லூரி மாணவனாய்
கலர் தேடல்
படித்து முடித்த பின்
வேலை தேடல்
தொடர்ந்த காலத்தில்
மனைவி தேடல்
வயது ஏறும்போது
பணம் தேடல்
வயதானபின்
அமைதி தேடல்.
இதெல்லாம் வெளித்தேடல்

எனக்குள்ளே ஒரு தேடல்
எப்போதும் நிகழ்கிறது!

கீரிகள் ஐந்தடக்கி
பார்வையை உட்குவித்து
கீழ்நோக்கிப் பார்க்கையிலே
படுத்திருக்கும் பாம்பொன்று
படமெடுத்து எழுகிறது!

பார்வையின் உஷ்ணத்தில்
பாம்பு மேலேறுகையில்
கீரிகள் கட்டவிழ்க்க
பார்வை கலைந்து விட
பாம்பு றங்கப்  போகிறது!

என்று முடியும் என் தேடல்?
என்று பாம்பு ஆறடி கடந்து
தாமரை மலரடையும்?

அன்று முடியுமா என்தேடல்?!

டிஸ்கி:கவிதையின் முதல் பாதி நான் எழுதியது,பின் பாதி “நமக்குத் தொழில் பேச்சு” பதிவின் உரிமையாளர் மதுரை சொக்கன் எழுதியது! ஹி,ஹி!!


புதன், மே 23, 2012

மணவாழ்வின் இன்பங்கள்!


என்னடி காலங்கார்த்தால ஒரு ஓரமா நின்னுண்டிருக்கே?”

”மூணு நாள் எனக்கு ரெஸ்ட்டுன்னா.சமையலறை உங்க ராஜ்யம்தான்”

“ஏண்டி எனக்கு ஒரு எழவும் தெரியாதேடி.தோ பாரு.நான் ஓட்டல்ல சாப்பிட்டுட்டு,உனக்கும் ஏதாவது வாங்கிக் குடுத்துடறேன்.”

”வேண்டான்னா.வயத்துக்கும் ஒத்துக்காது.பர்ஸுக்கும் ஒத்துக்காது”

“அப்போ நீயே சமையல் பண்ணிடு பரவாயில்ல.”

“ஐயோ!மகா பாவம்னா.எங்காத்துலெல்லாம் அந்த வழக்கமே கிடையாது. பாருங்கோ!நான் சொல்லித்தரேன் .நீங்களே பண்ணிடுங்கோ.போய் மொதல்ல பல் தேய்ச்சிட்டு வாங்கோ.””

“எனக்கு அடுப்பே பத்த வைக்கத் தெரியாதேடி!”

”ஆமா!என்ன பெரிய வெறகடுப்பா இல்லை கரியடுப்பா? கேஸ் அடுப்புதானே. குமிழைத்திருகினா தானே வேற பத்திக்கும்”

”சரி நான் ரெடி.என்ன செய்யணும் சொல்லு.”

ஒரு வழியாக இன்ஸ்டண்ட் காஃபி தயாரித்து குடித்து முடிக்கிறார்கள்.

“ சிரமப்பட வேண்டாம்னா.குக்கர்ல சாதம் மட்டும்  பண்ணிடுங்கோ.பருப்புப் பொடி இருக்கு. தயிர் இருக்கு நன்னாச் சாப்பிடலாம்”

”சரி சொல்லு”

”அந்தச் சின்ன டம்ளர்ல 2 டம்ளர் அரிசி எடுத்துப் பாத்திரத்தில போட்டுக் களைஞ்சுடுங்கோ."

”சரி’

”அடுப்பில குக்கர வைச்சு,அரிசில ஒண்ணுக்கு மூணு தண்ணி விட்டு குக்கர்ல வச்சு மூடில கேஸ்கட்டைப் போட்டு மூடிடுங்கோ”

”ஆச்சு”

"இப்போ நீராவி நன்னா வெளியே வந்தப்பறம் வெயிட்டைப் போடுங்கோ”

...........

“என்னடி!பத்து நிமிஷமாச்சு,ஸ்டீமே வரல்லையே.”

” அடக் கடவுளே!குக்கர்ல தண்ணி விட்டேளா ?”

“நீ சொல்லவே இல்லையே!”

திறந்து காய்ந்து போன குக்கரில் சுர்ரென்று தண்ணீர் விட்டு மூடிஒரு வழியாய் விசில் சப்தக் கணக்குக்குப் பின்,அடுப்பு அணைக்கப் படுகிறது.

“போய் வேற வேலையைப் பாருங்கோ.இருபது நிமிஷம் கழிச்சுத் திறக்கலாம்”

திறந்து பார்க்கும்போது அதிர்ச்சி.

“என்னடி ?சாதம் இப்படி இருக்கு?!”

”ஐயய்யோ!எவ்வளவு தண்ணி விட்டேள்?”

”நீதான் சொன்னயே,மூணு டம்ளர்”

”கஷ்டம்!ஒண்ணுக்கு மூணு சொன்னேன்.ரெண்டு டம்ளர் அரிசிக்கு ஆறு டம்ளர் தண்னி விடணும்.மறுபடியும் தண்னி விட்டு குக்கர்ல வையுங்கோ.எப்படி வரதோ சாப்பிட்டுக்கலாம்.”

சாதம் ஒரு மாதிரித் தயாராகி.அவனும் சாப்பிட்டு அவளுக்கும் வைத்து விட்டு அலுவலகம் புறப்படுகிறான்.


“ஏன்னா!வரும்போது ஒரு பாக்கெட் தாயார் இட்லி மாவு வாங்கிண்டு வந்துடுங்கோ.ராத்திரி இட்லி வார்த்துடலாம் .ரொம்ப ஈசி.”

இது வேறயா! (மனசுக்குள்)

மாலை!

மணி அடிக்க அவள் வந்து கதவைத் திறக்கும்போதே கேட்கிறாள்”தாயாரோடு வந்தேளா?’

வெளியே பார்க்கிறாள்.அவனுக்குப் பின் அவள் அம்மா நிற்கிறாள்!

“நீ சொன்ன படியே தாயாரோடு வந்துட்டேன்.ஃபோன் பண்ணினேன்.30 கி.மீதானே வந்துட்டா!இனிமே எங்கம்மா  தில்லிலேருந்து வர வரைக்கும் ஒவ்வொரு மாசமும் உங்கம்மா வர வேண்டியதுதான்”

வெட்கப்பட்டபடியே அவள் அம்மா சொல்கிறாள்”அதுக்கு அவசியமே இல்லாமப் பண்ணிடுங்கோ மாப்பிள்ளே!”