தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 29, 2010

பக்கத்து இருக்கையில் பருவப் பெண்!

சில மாதங்களுக்கு முன்,வெளியூர் சென்று திரும்புபோது,பேருந்தில் எனக்குப்
பக்கத்து இருக்கையில் இளைஞன் ஒருவன் வந்து அமர்ந்தான்.பேருந்து புறப்பட்ட அடுத்த நிமிடமே,அவன் தூங்க ஆரம்பித்தான்.ஆழ்ந்த உறக்கத்தில் அவன் சாய்ந்து என் மீது விழ ஆரம்பித்தான்.ஓரிரு முறை அவனைத் தள்ளிவிட்டேன்.ஆனால் மீண்டும் மீண்டும் அவன் மீது சாய ஆரம்பித்தான்.ஒரு முறை அவன் என் மீது சாயும் தருணத்தில் நான் சிறிது முன்னே நகர்ந்து கொள்ள,அவன் எனக்கும் இருக்கையின் சாய்மானப் பலகைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுந்து ,பின் சமாளித்து எழுந்தான்.பின் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் என்னிடம் சொன்னான்”நேத்து ராத்திரி பூரா ரயிலில் தூக்கமே இல்லை.நிக்க இடம் கிடைத்ததே பெரிய விஷயம்.ரயிலிலிருந்து இறங்கி இப்ப என் ஊருக்குப் போயிட்டிருக்கேன்.அதனாலதான் தூங்கி உங்க மேல சாஞ்சுட்டேன் ஸார்.”அவனைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.ஆனால் சம்பந்தமே இல்லாத ஒருவன் தூங்குவதற்கு என் தோளைக் கொடுக்க முடியுமா?

யோசித்தேன்.இவனுக்கு என் பையன் வயதுதான் இருக்கும்.அவனைப்போன்றுதான் இவனும் உடை அணிந்திருக்கிறான்.இதே இடத்தில் என் பையன் இருந்தால் நான் என்ன செய்திருப்பேன்.அவன் சாய்ந்து தூங்குவதற்கு வாகாக என் தோளைக் கொடுத்திருப்பேன்.அவன் தூக்கம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இப்பொதோ?அவனது தூக்கத்தைக் கலைப்பதற்கான வழிகளை நான் முயன்று கொண்டிருக்கிறேன்.ஏன் இப்படி.?—இவன் எனக்கு சம்பந்தமில்லாதவன்,எவனோ ஒருவன் என்கிற என் மனோபாவம்.இவனிலும் நான் என் பையனைக்காண முடிந்தால் என் நடத்தை வேறு விதமாக இருக்கும்..

இது போன்ற நேரங்களில்,சொந்தமில்லாதவர்,சொந்தமானவர் என்பது மட்டுமே அளவு கோல் அல்ல.பக்கத்து இருக்கையில் ஒரு அழகிய இளம்பெண் அமர்ந்தால் துள்ளும் மனது,ஒரு உடல் தளர்ந்த/அழுக்கான முதியவள் அமர்ந்தால் சுருங்கிக் கொள்கிறது.அந்நபரது வயது மற்றும் தோற்றம் இவையும் நமது மன நிலையைத் தீர்மானிக்கின்றன..

எனவே அடிப்படையில் மனோபாவம் மாற வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கும் மனோபாவம் எளிதில் வராது.ஆனால் ஓரளவுக்கு சக மனிதர்களைப் புரிந்துகொள்ள,நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்”

ஞாயிறு, ஜூன் 20, 2010

கணினி கவசம்

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெsடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.
அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.

(இக்கவுஜயை எழுதியவர் என் நண்பர் கவிஞர் பட்டாபிராமன் அவர்கள்.

அவருக்கு என் நன்றி.)

செவ்வாய், ஜூன் 08, 2010

தமிழ்ப்பதிவுலகில் சாதி வாரிக் கணக்கெடுப்பு!!

இப்போதெல்லாம் பல நேரங்களில் பல பதிவுகளில் சாதி பற்றிய பிரச்சினை எழுகிறது.ஒரு பதிவரை அவரது சாதி பற்றிக்கூறித் தாக்கப்படுகிறது.ஒருவரது சாதி உடனடியாகத்தெரியாதபோது,துப்பறியும் வேலையில் இறங்கி அவரது சாதி என்ன என்று கண்டுபிடிக்க நேருகிறது.இதற்காக தேவையற்ற கால விரையம் ஆகிறது.இதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி,தமிழ்ப்பதிவர்கள் மத்தியில் ஒரு சாதிவாரிக் கணெக்கெடுப்பு நடத்துவதுதான்.யார் பார்ப்பான்,யார் பிள்ளை,யார் முதலியார்,யார் வன்னியர்,யார் இஸ்லாமியர்,யார் கிறித்தவர்,யார் தலித் என்பதெல்லாம் கணக்கெடுப்பில் தெரிந்து விடும்.ஒருவரை அவரது சாதியைச் சொல்லித்தாக்க வேண்டுமென்றால்,இக்கணக்கெடுப்புப் பட்டியலைப் பார்த்தால் போதும்.அதன் பின் மிக எளிதாகத்தாக்கத் துவங்கலாம்.

எப்படி இந்த உத்தி?

”சாதிகள் இல்லையடி பாப்பா ”-அய்யா பாரதி,அதெல்லாம் பாப்பாக்களுக்குத்தான்.எங்களை மாதிரிப் பெரியவர்களுக்கு இல்லை!

வெள்ளி, ஜூன் 04, 2010

பருப்புத் தின்னிப் பாப்பானை அடிங்கடா

ஆறாம்படிவம் படித்து விட்டு,அந்தக் கிராமப்புற கல்லூரியில் புகு முக வகுப்பில் சேர்ந்த நான்,அதே கல்லூரியில் கணிதப் பட்டப் படிப்பில் சேர்ந்த பின் கல்லூரியில் ஓரளவு மாணவர்கள் நடுவில் நன்கு அறியப்பட்டவனாக மாறியிருந்தேன்.அதற்குக்காரணம்,நான் படிப்பில் முதன்மையாக இருந்தது மட்டுமல்ல-. விளையாட்டுக்களிலும் நான் காட்டிய ஆர்வம்;நன்கு படிக்கும் மாணவனான நான் கல்லூரியில் நடந்த வேலை நிறுத்தத்திலும் முக்கிய பங்கேற்று ,கண்டன ஊர்வலத்தில் முன்னின்று முழக்கங்கள் எழுப்பியது;ஜூனியர் மாணவர்களிடம் கூட நான் மிக நட்புடன் பழகிய விதம் ஆகிய இவை போன்ற நிகழ்வுகளே.
அக்கல்லூரியில் கிரிக்கட் ஆட்டத்தை அறிமுகப்படுத்தியவனே நான்தான்.நானும் ’ஆலையில்லா ஊருக்கு இலுப்பபூ சக்கரை’தான்.ஆனால் ஹாக்கி ஓரளவுக்கு நன்றாகவே ஆடுவேன்.இரண்டாம் படிவம் முதல் ஐந்தாம் படிவம் வரை(ஏழு முதல் பத்து வரை),ஹாக்கியில் பெயர் பெற்ற கோவில்பட்டியில் படித்தேன்.அது எனக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது.

நிகழ்ச்சிக்கு வருவோம்.கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும்,பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.அதற்காக நான்கைந்து குழுக்கள் அமைக்கப்படும்.அந்த ஆண்டு ஒரு குழுவின் தலைவனாக நான் நியமிக்கப்பட்டேன்.(எனது ஆரஞ்சுக் குழுதான் அந்த ஆண்டு சாம்பியன் குழுவாக வந்தது.)

போட்டிகளில் ஹாக்கியில் என் தலைமையில் என் குழு ஆடியது எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினோம்.மிகவும் கடுமையான போட்டி.ஆட்டத்தில் என் இடம்,வலது கடைசி(right-out,right extreme).நான் பாஸ் செய்த பந்தை வாங்கி,என் அணி ஆட்டக்காரர் ஒரு கோல் போட்டார். எதிர் அணியினரும் ஒரு கோல் போட்டனர்..ஆட்டும் மேலும் கடுமையானது.நான் என் முழுத்திறமையையும் காட்டி ஆடினேன்.நானே பந்தை எடுத்துச் சென்று ஒரு கோல் போட்டேன்.எதிர் அணியினரால் எங்கள் பாதுகாப்பை மீறி கோல் போட முடியவில்லை.ஆட்டத்தில் சிறிது வன்முறை தலையெடுத்தது.அப்போது ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் நடுவிலிருந்து ஒரு உரத்த குரல் எழுந்தது”பருப்புத்தின்னிப் பாப்பானை அடிங்கடா”.சிறிது நேரத்தில் எதிர் அணி ஆட்டக்காரர் ஒருவர் என்னுடன் மோதும் போது,மட்டையால் என் காலில் அடித்தார். அதைப் பொருட்படுத்தாமல் நான் தொடர்ந்து வேகமாக ஆடினேன். வெளியிலிருந்து என் வகுப்புத்தோழனின் குரல் வந்தது. ”சந்துரு,உன் காலைப் பார்” குனிந்து பார்த்தேன்.குருதி வழிந்து கொண்டிருந்தது.ஆட்டம் முடிய சில மணித்துளிகளே மீதம் இருந்ததால்,கைக்குட்டையால் ஒரு கட்டுப் போட்டு விட்டுத் தொடர்ந்து ஆடினேன்.இறுதியில் எங்கள் அணி வென்றது.

ஆட்டத்தின் நடுவில் என்னை அடிக்கச் சொல்லிக் குரல் கொடுத்த மாணவரை நான் நன்கு அறிவேன்.எனக்கு ஜூனியர்.என்னிடம் பலமுறை உரையாடி யிருக்கிறார்.மிகுந்த மரியாதையுடன் பழகுவார்.அவரிடமிருந்து ஏன் அப்படி ஒரு வன்ம வெளிப்பாடு? அவர் வேறு அணியைச் சேர்ந்தவர் என்பதாலா?ஆழ் மனத்தில் எப்போதும் அத்தகைய உணர்வு இருந்ததா?இதுகாறும் அவர் பாராட்டிய நட்பெல்லாம் வேடமா?அவரை எந்த விதத்திலும் நான் காயப்படுத்தாதபோது என் மேல் ஏன் அந்த வெறுப்பு?ஒரு ’பார்ப்பான்’ வெற்றி பெறுவதைப் பொறுக்க முடியவில்லையா?விளையாட்டுப் போட்டியில் ’சாதி’ எங்கு வந்தது?இன்று வரை விடை தெரியாத கேள்விகள்.

இந்த நிலை இன்றும் எல்லா நிலைகளிலும் தொடர்கிறது.நம்முடன் இருக்கும்போது தெரியாத ஒருவரின் சாதி,அவர் நம்மை விட்டு விலகி எதிர்அணிக்குச் சென்றால்,சட்டைக்குள் நெளியும் அவர் பூணூலின் மூலமாகத்தெரிந்து விடுகிறது. வலைப்பதிவுலகிலும் இந்நிலை தொடர்கிறது. இரண்டு பதிவர்களிடையே பிரச்சினை மூளும்போது,வேறு சில பதிவர்கள் சாதி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர்.’அவன் பார்ப்பான்’ அவன் ’வன்னியன்’ என்றெல்லாம் எழுதப்படுகிறது.பிரச்சினைய முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதில்,ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.

கருத்தை,கருத்தால் எதிர் கொள்வதை விடுத்துத் தனி மனித்தாக்குதல்கள் தொடங்கி விடுகின்றன.

இந்த நிலை மாற வேண்டும்.நாமெல்லாம் ஒரே சாதி- பதிவர் சாதி.

எதிர்க்க வேண்டும் என்றால் ஒருவரால் சொல்லப்பட்ட கருத்தைக் கடுமையாக எதிர்த்து வாதம் செய்வோம்.சாதியை நடுவில் இழுக்க வேண்டாம்.

இதுவே இந்தப் “பருப்புத்தின்னிப் பாப்பானின்” வேண்டுகோள்.

(என் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டின் என் சாதி பற்றிப் பேசாமல்,எதிர் வாதத்தை முன் வைக்க வேண்டுகிறேன். நான் என்றுமே என் சாதி குறித்துப் பெருமையோ. சிலரின் காழ்ப்புணர்ச்சி கண்டு சிறுமையோ கொண்டதில்லை.)