தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 31, 2011

இசை விழா--செவிக்கும்,வயிற்றுக்கும் உணவு!!

இன்றோடு முடிந்தது இசை விழா.

இரண்டு நாட்களாகத் ’தானே ’ புயலினால்   கச்சேரிக்குப் போக இயலவில்லை.

இன்று சுதா ரகுநாதன், டி.எம்.கிருஷ்ணா-இரு கச்சேரிகள்

இசை விழாவில்  கேட்டவை

23-பிரியா சகோதரிகளின் கச்சேரி -குறுந்தகடு

24.ரஞ்சனி&காயத்ரி-சங்கீத சரவெடி

25.நித்யஸ்ரீ— உரத்த தாலாட்டு.

27.சஞ்சய் சுப்பிரமணியம்-  மன நிறைவு.

31. சுதா ரகுநாதன்- மாருதம்(மலய)

 காண்டீனில் உண்டவை

ரவா பொங்கல்,அவியல்—நல்ல கூட்டணி.

ஆப்பம்,காலிஃப்ளவர் குருமா—ம்ம்ம்ம்…

எலுமிச்சை சேவை சட்னி-திருப்தி

டையமண்ட் மசாலா கார தோசை—ஓகே.

டபுள் டெக்கர் தோசை—பெயரோடு சரி

வெஜ்.வெண்பொங்கல் பாசுமதி—சுவை

ஆந்திரப் பெசரட்டு,அல்லம் பச்சடி—ஏவ்!

கச்சேரி எங்காவது  எப்போதாவது கேட்டுக் கொள்ளலாம்!ஆனால் ஞானாம்பிகா காண்டீனுக்காக ஓராண்டு காத்திருக்க வேண்டும்!

இனி நான் ஃப்ரீ! ஆண்டும் பிறக்கிறது!


நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!



புத்தாண்டு வாழ்த்துகள்!

பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

அனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


ஞாயிறு, டிசம்பர் 25, 2011

ஹாலிடே!ஜாலிடே!!


ஒரு கணவன்,மனைவி  ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஓர் அழகிய பெண் அந்தக் கவனின் அருகில் வந்து”டார்லிங்!நாளை மறக்காமல் வந்து விடுங்கள்” என்று சொல்லி அவன் கன்னத்தில் தட்டிச் சென்றாள்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்குக் கடுங்கோபம் வந்தது. கணனிடம் கேட்டாள்”யார் அந்த மேனா மினுக்கி?”

கணவன் சொன்னான்”அவள் என் சின்ன வீடு!”

மனைவிக்குக் கோபம் அதிகமானது.”இனி உங்களுடன் வாழ்வது கடினம்.நான் விவாக ரத்துக் கோரப்போகிறேன்”

கணவன்  அமைதியாகச் சொன்னான்”உன் இஷ்டம்.ஆனால் அதன் பின்,ஒவ்வொரு ஆண்டும் கோடையில் ஒரு மாதம் ஸ்விட்சர்லாந்தில் மகிழ்ச்சியாகக் கழிக்க முடியாது;BMW காரில் ஜாலியாக ஊர் சுற்ற முடியாது.க்ளப்பில் போய் பெருந் தொகைக்குச்  சீட்டு விளையாட முடியாது .விலை உயர்ந்த உடைகளை வாங்கிக் குவிக்க முடியாது”

மனைவி யோசித்தாள்.அப்போது அவர்கள் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணுடன் அவர்களைக் கடந்து,அவர்களைப் பார்க்காதது போல் சென்றான்.

மனைவி கேட்டாள்”கோபாலுடன் போவது யார் ?மனைவி இல்லையே?”

கணவன் சொன்னான்”அவனுடைய சின்ன வீடு!”

மனைவி சொன்னாள்”அவளை விட நம்ம சின்ன வீடு அழகுதான்!”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சனி, டிசம்பர் 24, 2011

வாழ்க்கைப் பாடங்கள்!


புதிய சமுத்திரங்களை நீங்கள் கண்டு பிடிக்க முடியாது, கரை கண்ணுக்குத்தெரியாமல் மறைவதைக் கண்டு  பயந்தால்!

வாழ்க்கை என்பது உங்கள் மனப்பாங்கைப் பொறுத்ததே!

1.சிப்பாய்: சார் .நம்மை நாலா புறமும் எதிரிகள் சூழ்ந்து விட்டார்கள்!

மேஜர்:ரொம்ப நல்லது.நாம் எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும் தாக்கலாம்!

2.அதிக அன்பு வைப்பது ஆபத்தானது.இழக்கும்போது வலி ஏற்படும். தனிமை என்பது நல்லது.பல விஷயங்களைக் கற்றுத்தரும்.அதை  இழக்கும் போது எல்லாம் கிடைக்கும்!

3.முகத்தின் முன் உண்மையாக இருப்பவர்கள் வாழ்வில் முக்கியமல்ல. உங்கள் முதுகுக்குப் பின்னும் உண்மையாக நடப்பவர்களே முக்கியம்.
                                            
4.ஒரு முட்டைக்கு வெளியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒரு   உயிரை  முடிக்கிறது.ஆனால் உள்ளிருந்து  கொடுக்கப்படும் அழுத்தம்   ஒரு உயிரின் ஆரம்பம். பெரிய விஷயங்கள் உள்ளிருந்துதான் பிறக்கின்றன!

5.தன்முனைப்பின்(ego)) காரணமாக,நேசிக்கும் ஒருவரை இழப்பதை விட,நேசிக்கும் ஒருவரிடம் தன்முனைப்பை இழப்பது சிறந்தது!

6.உறவு ஒளிர்வது மகிழ்ச்சியான நேரங்களில் கை குலுக்குவதால் அல்ல.நெருக்கடியான நேரங்களில் இறுகப் பற்றுவதால்!

7.சுடப்பட்ட  தங்கம் நகையாகிறது.அடிக்கப்பட்ட செம்பு பாத்திரமாகிறது.உடைக்கப்பட்ட கல் சிலையாகிறது.அதுபோல்   வாழ்வில் நீங்கள் பெறும் வலிகள் உங்களை மேலும் மதிப்பு வாய்ந்தவர்களாக்கும்.

8.ஒருவரை நம்பும்போது முழுவதும் நம்புங்கள்.முடிவில் இந்த     இரண்டில் ஒன்று கிடைக்கும்வாழ்க்கையில் ஒரு நல்ல பாடம்;    அல்லது ஒரு நல்ல நட்பு/உறவு!

9.தொலைபேசியைக் கண்டு பிடித்தவர் கிரஹாம் பெல் என்பது தெரியும்.ஆனால்,அவர் தொலைபேசியில் தன் மனைவி,மகளிடம் பேசியதில்லை.ஏன் தெரியுமா?இருவரும் காது கேளாதவர்கள்!
மற்றவர்களுக்காக வாழ்வதே வாழ்க்கை!

10.இறைவன் எங்கும் இருக்கிறான் என்றால் இத்தனை கோவில்கள் எதற்காக?

 காற்று எங்கும் இருக்கிறது;பின் விசிறி எதற்காக?காற்றை நாம் உணர்வதற்கு விசிறி தேவை!

வெள்ளி, டிசம்பர் 23, 2011

யார் புத்திசாலி!


ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார்.அவர் ஒரு பொருளாதார மேதையா 

யிருந்தார்.பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச்  சீர் படுத்த   

அவர் ஆலோசனையை நாடினர்.


ஒருநாள் ஊர்த்தலைவர்  அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் 

சொன்னார்”ஐயா! அறிஞரே!நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே 

பாராட்டுகிறது.ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக 

இருக்கிறானே!தங்கம்,வெள்ளி இவற்றுள்  அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று 

அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான்.வெட்கக்கேடு!”


அறிஞர் மிக வருத்தமடைந்தார்.பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், 

வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”


பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார்”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று 

சொன்னாய்?”
 
பையன் சொன்னான்”தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் 

தங்க நாணயமும்,மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டுஎன்னை

அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு 

வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.


”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி 

இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் 

போய் விடுவேன்.இது ஓராண்டாக நடக்கிறது.தினம் எனக்கு ஒரு வெள்ளி 

நாணயம் கிடைக்கிறது.நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் 

அன்றோடு இந்த  விளையாட்டு நின்று விடும்.எனக்கு நாணயம் கிடைப்பதும் 

நின்று போகும்.எனவேதான்…”


அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக  வேடம் அணிகிறோம்,மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு.ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

வியாழன், டிசம்பர் 22, 2011

மனோவும் பெண்களும்!!

 
தொலைபேசி மணி ஒலிக்கிறது.



மனோ எடுக்கிறார்.



மறு முனையிலிருந்து பெண்குரல்.



“ஹலோ!நீங்கள் என் பசங்களில் ஒருவனுடைய அப்பா”



மனோ திகைக்கிறார்.என்னடா இது பிரச்சினை?



பின் கேட்கிறார்.



“இது யார்,பத்மாவா?”



“இல்லை”



”ஜென்சியா?”



”இல்லை”



”மும்தாஜா?”



“இல்லை”



”நிஷாவா?”



கடைசியில் குரலில் குழப்பத்துடன் பதில் வருகிறது--



“இல்லை சார் .நான்,மாலா.உங்கள் பையனுடைய வகுப்பு ஆசிரியை”



இது எப்படி இருக்கு?



டிஸ்கி:சத்தியமா இது நாஞ்சில்காரர் இல்லீங்க.அவர் ரொம்ப நல்லவர். பச்சைப் புள்ள மாதிரி.



(அவர்  பாட்டுக்கு  அருவாளைத் தூக்கினா நான் என்ன செய்ய?)

புதன், டிசம்பர் 21, 2011

அங்கிள்! இது லேடீஸ் டாய்லெட்!!


இது நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.

கிண்டி ரேஸ் கிளப்பில்,என் நண்பர் ஒருவர் உறுப்பினர்.

அவர் என்னையும் சேர்த்துச் சில நண்பர்களை அங்கு ஒரு நாள் மாலை அழைத்துச் சென்றார்.

உணவின்போது  நடுவில் டாய்லெட் போக விரும்பினேன். வெயிட்டரைக் கேட்ட போது அங்கு அருகில் இருந்த டாய்லெட்டைக்  காட்டினார். சென்றேன். உள்ளே முதலில் கை கழுவும்  இடம்.அதை அடுத்து ஒரு கதவுக்குப்  பின் டாய்லெட்.நான் முடித்துவிட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தால்………!!

வாஷ் பேசின் முன் நின்று கண்ணாடியைப் பார்த்துத் தன் ஒப்பனையைச் சரி செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண்.இளம் பெண் அல்ல. பேரிளம் பெண். நான் திடுக்கிட்டேன்.ஆனால் அந்தப் பெண் பதட்டமின்றி என்னைப் பார்த்துச் சொன்னாள்,அன்கிள்!இது லேடீஸ் டாய்லெட்

நான் நொந்து போனேன்.

தவறாக லேடீஸ் டாய்லெட்டுக்கு வந்து மாட்டிக் கொண்டதற்கு அல்ல.

ஒரு பேரிளம்பெண் என்னைப் பார்த்து ’அன்கிள்’ என்று அழைத்து விட்டாளே என்றுதான்!!ஹா,ஹா,ஹா.

சமீபத்திய நிகழ்ச்சி.
 
சில நேரங்களில் உண்மை நமது முகத்தில் அறைவது போல் வெளிப்படும்.
இது அப்படித்தான்.

இரு நாட்களுக்கு முன்,கச்சேரி கேட்டுவிட்டு,(ஞானாம்பிகாவில் டிஃபனும் சாப்பிட்டு விட்டுத்தான்!) மயிலைக் குளம்  வரை தானியில் வந்து அங்கிருந்து  பேருந்து பிடித்தேன்.பேருந்தில் சரியான கூட்டம்.சீட்டு வாங்கி வீட்டு ஒரு இருக்கையின் அருகே நின்று கொண்டேன். இருக்கையில் அமர்ந்திருந்த நடு வயதுக் காரர் என்னை நிமிர்ந்து பார்த்தார்.”நீங்க உட்காருங்க சார்” எனச் சொல்லியபடியே எழுந்தார்.நான் இருக்கட்டும் என்று  மறுத்தும் அவர் விடவில்லை.கட்டாயப்படுத்தி என்னை  அமர்த்திவிட்டார். இது என் வயதுக்குக் கிடைத்த சலுகை.”நீ வயதானவன்; உன்னால்  நிற்க முடியாது என்று அவர் சொல்லாமல்  சொல்லி விட்டார்.அவரது இந்த சலுகைக்கு நன்றி.அதே நேரம் நான் என்னதான் மனதளவில் இளைஞன் என்று சொல்லிக் கொண்டாலும் உடல் தோற்றம் சலுகைக்குரியவனாக மாற்றி விடுகிறதே!வருத்தம்தான்!!

இந்நிகழ்ச்சியை யு.எஸ்.ஸில் இருக்கும் என் அண்ணன் மகளிடம் சொன்னபோது அவள் சொன்னாள்”உங்கள் முகத்தைப் பார்த்தால்  வயதானவராகத் தெரியவில்லை.ஆனால் தலை முடி தும்பைப்பூவாக வெளுத்து விட்டது.சாயம் பூசினால் சரியாகி விடும்.”

யோசித்தேன்.அப்படிச் சாயம் பூசியாவது என் வயதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?ஏன் வேடம் புனைய வேண்டும்? நான் நானாகவே இருந்து விட்டுப்போகிறேன்.

ஆனால் இந்த வயதில் நான் இளைஞர்களின் களமான பதிவுலகில்  அவர்களுடன் போட்டியிட்டுப் பதிவு எழுதிக் கொண்டிருப்பது நியாயமா? நான் செய்ய வேண்டிய வேறு எவ்வளவோ பணிகள் இருக்கின்றனவே!

எனவே  சில முடிவுகளைக் கட்டாயமாக எடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆண்டு முடிவுக்குள் ஒரு முடிவு எடுத்து விடுவேன்.

பார்க்கலாம்;புத்தாண்டு எப்படிப் பிறக்கிறதென்று?
 ..................................
சென்னை இசை விழா:--

ஸ்ரீராம் கேட்டிருந்தார்,யார் கச்சேரி என்று இரு வரி பகிரலாமே என்று.   
உன்னி,சௌம்யா கச்சேரி பற்றி முன்பே எழுதி விட்டேன்.

19th--கே.ஜே.யேசுதாஸ்------------பெருங்காயம் வைத்த பாண்டம்!
20-----ஓ.எஸ்.தியாகராஜன்---------சாஸ்திரீய சுத்தம்!
21-----மல்லாடி சகோதரர்கள்------சுவையான ஆந்திர நெய்ப்பெசரட்டு!
.....................................................
நபர்-1--சகோதரர்களில் ஒருவரின் குரலில் ஒரு கம்மல் இருக்கிறது.

நபர்-2--அதனால்தான் எல்லோரும் காதுல போட்டுக்கறா!!

.................................................


செவ்வாய், டிசம்பர் 20, 2011

மார்கழிப் பொங்கல்-4-(கோலம்)-கொஞ்சம் இசைவிழாவும்!!

பொங்கலைத் தவிர மார்கழியின் மற்றோர் விசேஷம்-கோலம்.வீட்டு வாசலைத் தெளித்துப் பெருக்கி அழகான பெரிய பெரிய கோலங்களாக வரைந்து,நடுவில் ஒரு பூசணிப்பூவைச் சாணியில் செருகி வைத்த பின் அந்த வாசலே மிக அழகாகி விடும்.இன்று சென்னையில் குடியிருப்புகள் பெருகிப் போனபின், பெரிய கோலங்கள் போட ஏது இடம்.?ஆயினும் மைலாப்பூர் மாதிரி சில இடங்களில்,சில வீடுகளில் இந்தப் பழக்கம் அழியாமல் காப்பாற்றுப்பட்டு வருகிறது.மைலாப்பூர் விழா நடக்கும்நேரத்தில்,மயிலையில் மாட வீதியில் கோலப் போட்டியே நடை பெறும்.அன்று அங்கு சென்று பார்க்க வேண்டும் அந்த அழகை!மாதிரிக்குச் சில கோலங்கள் கீழே--

மாக்கோலம்.விசேஷ நாட்களில் போடுவது.






புள்ளிக் கோலம்.வாசலில் போடும் கோலங்களில் ஒன்று








பூக்கோலம். ஓணத்தின்போது போடப்படுவது.




அந்த அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து,பெரிய கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும் கூட!

இந்தக் கோலம் போடும் கலை மறைந்து வருகிறதோ என எண்ணுகிறேன்.

நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில்,காலையில் படிக்கும் சாக்கில்,சீக்கிரம் எழுந்து,கையில் புத்தகத்துடன் வீட்டு வாசலில் நின்று. அந்தத் தெருவில் எல்லா வீட்டு வாசல்களிலும் போடப்படும் கோலத்தை(கோலத்தை மட்டுமா!) ரசித்ததுண்டு.

இந்நேரம் ஒரு புதுக்கவிதை நினைவுக்கு வருகிறது.கவிதை வரிகளும் நினைவில்லை;எழுதியவர் பெயரும் நினைவில்லை.என் வார்த்தைகளிலேயே அதன் கருத்தைத் தருகிறேன் –

குனிந்து நிமிர்ந்து,பெருக்கிக்
கோலம் போட்டுப் போனாள்!
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு!

(இது வரை மீள் பதிவு)
(மு.மேத்தா அவர்களின் கவிதை என சிவகுமாரன் சொல்லத் தெரிந்து கொண்டேன்)
இன்று---சபாவில் கேட்டது , கச்சேரி மட்டுமல்ல!

மாமி-1 :   மாமி!நேத்து என்னால வர முடியலே!நன்னாருந்ததா?
மாமி-2:திவ்யமா இருந்தது.அந்த அசோகா ஹல்வாவும்,வாழைப்பூ வடையும் பிரமாதம்!
மாமி-1:மாமி.நான் காண்டீனைப் பத்திக் கேக்கலே;கச்சேரி பத்திக்கேட்டே.ன்!
----------------------------------------------


உவ்வே!

இப்போதுதான்  ஒரு ஜோக் படித்தேன்.உடன் அதை உங்களுடன் கண்டிப்பாகப்  பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியதன் விளைவே இந்தக் குறும் பதிவு.

மருத்துவக்கல்லூரியில் உடற்கூறு அமைப்பியல் பற்றி செய்முறைப்பாடம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்து கொண்டிருந்தது.மேசையின் மீது ஒரு இறந்த நாயின் உடல் கிடந்தது.

மருத்துவ விரிவுரையாளர் கூறினார்”மருத்துவர்களாகப் போகும் உங்களுக் கெல்லாம் அருவருப்பு என்பதே இருக்கக் கூடாது.அப்போதுதான் சிறப்பாகச் செயலாற்ற முடியும்”

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் அந்த நாயின் ஆசன வாயில் தன் ஒரு விரலை நுழைத்து எடுத்தார்.பின் விரலை வாயில் வைத்துச் சப்பினார்.பின் அனைவ ரையும்  பார்த்துச்சொன்னார்.”நீங்களும் இது போல் செய்யுங்கள்”அனைவரும் மிகுந்த அருவருப்புடன் அதைச் செய்து முடித்தனர்.சிலருக்கு வாந்தியே வந்து விட்டது.

பின் அவர் சொன்னார்.”அடுத்த மிக முக்கியமான பண்பு எதையும் கூர்ந்து கவனித்தல்.நான் எனது நடு விரலை உள்ளே நுழைத்தேன்.ஆனால் ஆள்காட்டி விரலைச் சப்பினேன்!!”

இது வெறு நகைச்சுவை மட்டுமல்ல;வாழ்க்கையின் தத்துவம்!நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பதின் அவசியத்தை உணர்த்தும் நகைச்சுவை!

சக பதிவர்களே!உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.பதிவெழுத அநேக தகவல்கள் கிடைக்கும்!

திங்கள், டிசம்பர் 19, 2011

சென்னை இசை விழா ஸ்பெசல்!

நேற்று மாலை 4.25 க்கு திருமதி சௌம்யா அவர்களின் கச்சேரி--(4.30 முதல்

ஆறு வரை ராகு காலம்!)



இந்த சீசனில் நிறையக் கச்சேரிகள் செய்வதாலும்,குளிர்காலம் என்பதாலும்

அநேகருக்குச் சில நாட்கள் தொண்டை கொஞ்சம் பிரச்சினை கொடுக்கும்.

நேற்று சௌம்யாவுக்கும் அதே நிலைதான். அதையும் மீறி நன்றாகவே

பாடினார்.மோகன ராகம் (பவனுத) குறிப்பிடும்படி இருந்தது.
------------------------------------------

சபா உறுப்பினர்-:என்ன செயலாளர் சார்! வித்துவானுக்கு இரவு உணவுக்கு

என்ன வேணுமாம்?

செயலாளர்: பழம், பால் போதுமாம்!

உறுப்பினர்:  எதுக்கு பழம் பால்?நல்ல புதுப் பாலாவே குடுத்துடலாம்!

!!!!!!!!!!!!

---------------------------------------
சென்ற பதிவில் காண்டீன் உணவுப் பொருள்களின் விலை பற்றிச் சொல்லி

யிருந்தேன்.

அதற்குத் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சி.

இடை வேளையில் ஒரு வயதான தம்பதி-கணவருக்கு 80 வயது இருக்கலாம்.

காரிடாரின் ஓரமாக நின்று.கொண்டு,மனைவி ஒரு டிஃபன் டப்பாவிலிருந்து

மிளகாய்ப் பொடி எண்ணெய் தடவியை தோசை எடுத்துத்தர,அவர் சாப்பிட்டுக்

கொண்டிருந்தார்.பின் மனைவியும் சாப்பிட்டார்.இருவரும் கொண்டு

வந்திருந்த  பாட்டில் தண்ணீரைக் குடித்தனர்.பின் அடுத்த கச்சேரிக்கு

அரங்குக்குள் சென்று விட்டனர்.வீட்டு உணவு;வயிறும் நிறைந்தது;

உடலுக்கும் நல்லது;காசும் மிச்சம். சபாவுக்கு வந்தது இசையின் மீதுள்ள

ஆசையால்தானே!அதுதானே முக்கியம்!

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

ஹாலிடே!ஜாலிடே!!கடிடே!!

நம்ம கிராமத்துக்கு மின்சாரம் வந்தாச்சு;இனிமே நாமும் பட்டணத்து ஆசாமிகள் போல் அனுபவிக்கலாம்

எதை?

வேறெதை?பவர்கட்டைத்தான்!
.............................................................................

மகாபாரதத்தில் உட்கார்ந்து கொண்டே இருந்தவர் யார்?

’குந்தி’தேவி!
............................................................................

வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?

முட்டையிலிருந்துதான்!
..............................................................................................................


இந்த ரோடு எங்கே போகிறது?

எங்கும் போகவில்லை.நான் பிறந்ததிலிருந்து இங்கேயேதான் இருக்கிறது!
..................................................................................................

ஏன் உன் தலைமுடி உதிர்ந்து விட்டது?

கவலைதான்.

என்ன கவலை?

தலைமுடி உதிர்கிறதே என்ற கவலைதான்.!
..............................................................................................

எதுக்குப்  பசங்க எல்லோரையும் வாசல்ல உட்கார்ந்து தேர்வு எழுத விட்டிருக்காங்க?

என்ட்ரன்ஸ் எக்ஸாமாம்!
...................................................................................................

அரபு நாடுகளில் ஃபோட்டோ எடுத்தா எப்படி இருக்கும்?

ஒரே”ஷேக்கா” இருக்கும்!
.....................................................................................................

அந்தப் பாம்புக்கு என்ன நோயாம்?

வேறென்ன? ’புற்று’ நோயாம்!

 !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




சனி, டிசம்பர் 17, 2011

மார்கழிப் பொங்கல்-3(இசை விழா)

மார்கழி மாதம் என்றால் அதிகாலையில் கோவில் பூசைகளும்,பாசுர ஒலிகளும்,தவிர்க்கவே முடியாத பொங்கலும்(!),குளிரும் மட்டுமில்லை. சென்னையைப் பொறுத்த வரை டிசம்பர் இசைவிழாவும்தான்.நிறைய சபாக்கள் டிசம்பர் தொடக்கத்திலேயே இப்போதெல்லாம் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தாலும், பழமையான பெரிய சபாக்களான மியூசிக் அகாடமி, நாரதகான சபா போன்றவை, டிசம்பர் 15 க்குத்தான் ஆரம்பிக்கின்றன, தங்கள் விழாவை.

ஒரு காலத்தில் சில சபாக்களே இருந்த நிலை மாறி,இன்று நூற்றுக் கணக்கில் சபாக்கள் வந்துவிட்டன.இந்தப் பெருக்கம் சில வருந்தத்தக்க விளைவு களையும் தோற்றுவித்திருக்கிறது.சில புதிய சபாக்கள்,வளரும் இளம் கலைஞர்களுக்கு,வாய்ப்பளிக்கப் பணம் கேட்டிருப்பதாக வரும் செய்திகள்.இது தொடரக்கூடாது.தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இந்த ஆண்டு சில பெரிய பாடகர்கள் தங்கள் கச்சேரிகளைக் குறைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கின்றனர் .இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை.இதன் மூலம் பல வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

ஒரு காலத்தில் சபாக்களில் தமிழ்ப்பாடல்கள் அதிகம் பாடப் படவில்லை. ஆனால் இப்போது நிறையத் தமிழ்ப்பாடல்களையும் கேட்க முடிகிறது. பாபனாசம் சிவன்,கோபாலகிருஷ்ண பாரதி ,பாரதியார், அருணசலக் கவிராயர்,பெரியசாமித்தூரன் ஆகியோரது பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுகின்றன.

இந்த இசை விழாவுக்காகவே,அநேக வெளிநாடு வாழ் தமிழர்கள் சென்னை வந்து பதினைந்து,இருபதுநாட்கள் தங்கி,எல்லா சபாக்களையும் ஒரு சுற்றுச் சுற்றி விட்டுச் செல்கின்றனர்.இரண்டு மாதங்களுக்கு முன்பே நியூ உட்லாண்ட்ஸ்,மற்றும் மயிலை, ஆழ்வார்ப்பேட்டைப் பகுதிகளில் இருக்கும் சேவைக் குடியிருப்புகள் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.

சில சபாக்களில் இருக்கும் உணவகங்களில் சபாக்களின் உள்ளே இருப்பதை விட அதிகமான கூட்டம் இருக்கிறது!விலையெல்லாம் அதிகமாக இருந்தாலும்   யாரும் சாப்பிட யோசிப்பதில்லை.புது உணவு வகைகள் எல்லாம் கிடைப்பது ஒரு காரணமோ?

இன்று இப்பதிவு எழுதக் காரணம் நானும் ஜோதியில் கலந்து விட்டதுதான்! ஆம்;இரண்டு நாட்களாக நாரத கான சபா கச்சேரிக்குப் போக ஆரம்பித்து விட்டேன்.சீசன் டிக்கட்.அடுத்த ஆண்டு 2 ஆம் தேதி வரை தொடரும். காண்டீன்?!--ஒரு காப்பியோடு சரி (ரூபாய்.15/=)

பயப்படாதீர்கள்!கேட்ட கச்சேரிகளைப் பற்றியெல்லாம் எழுதி உங்களைப் போரடிக்க மாட்டேன்!
(இது வரை மீள் பதிவு;இனி)

இன்று!  

 எங்கள் சபாவில் இன்று  மாலை 4.30 க்குத் திரு. உன்னி கிருஷ்ணன்  அவர்களின் இன்னிசை.மறக்க முடியாத காபி ராகம்,கும்பகோணம் டிகிரி காப்பி போல,அழகான லதாங்கியில் ராகம் தானம் பல்லவி என்று கச்சேரி அமர்க்களம்!


காண்டீன் பற்றிச் சொல்லவில்லையென்றால் எப்படி? கச்சேரியில் பாடப்பட்ட எதுகுல காம்போதி போல் இனிப்பாக, மக்மல் பூரி.லதாங்கி ரா.தா.ப. போல், சட்னி வகைகளுடன் தோசை, காபிராகம் போல் சுவையான காப்பி .நான் சாப்பிட்டது இவ்வளவே! ஆனால் பில்?! ----ரூ.95/ ஓய்வுதியத்தில் வாழ்க்கை நடத்தும்  ஒரு முதிய இளைஞனுக்கு,இதெல்லாம் வயிற்றுக்கு இசைந்த தாயிருப்பினும்,பாக்கெட்டுக்கு இசைந்து வருமோ?!ஹா,ஹா!

மார்கழிப் பொங்கல்-2-(பிள்ளையார்)

இன்று மார்கழி முதல் நாள்.எங்கள் பிள்ளையாருக்கு வழக்கம் போல் காலை சிறப்புப் பூசை.இன்று பிரசாதம்-நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல்!

இப்போது நேற்று விட்ட இடத்தில் ஆரம்பிக்கலாம்.

”ஐந்து கரத்தனை”-ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.

அவையாவன-படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல்.

கும்பம்  ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும் 

மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,

அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,

பாசம் ஏந்திய கரம் மறைத்தலையும்,

அபயகரம் அருளலையும் குறிக்கும்.

சிலர் பாசம் ஏந்திய கரம் படைத்தலையும்,மோதக கரம் மறைத்தலையும் உணர்த்தும் என்றும் கூறுவர்.

’யானை முகத்தனை’-விநாயகருக்கு,மனித உடல்,யானைத்தலை. பரமசிவன் கணபதியின் தலையைக் கொய்த பின்,பார்வதியின் வேண்டுகோளுக் கிணங்கி,பூத கணங்களை அனுப்பி,வடக்கே தலை வைத்து உறங்கும் உயிரின் தலையைக் கொய்து வரச் சொல்ல,அது ஒரு யானையின் தலையாக முடிந்தது என்பது ஒரு கதை.”யானை நாதத்திற்தோன்றியதாதல் போலப் பிள்ளையாரும் பர நாதத்திற்தோன்றிப் பிரணவ வடிவினராதலின் கூறினார்” என்பது ஓர் உரை.

காளமேகப் புலவரின் பாட்டொன்றில் இத்தலை பற்றி அவர் எழுதுவதாவது-

“ சங்கரர்க்கு மாறு தலை சண்முகற்கு மாறு தலை
  ஐங்கரர்க்கு மாறு தலை யானதே-சங்கைப்
  பிடித்தோர்க்கு மாறு தலை பித்தா நின் பாதம்
  படித்தோர்க்கு மாறு தலைப் பார்.”

சிவனுக்குத் தலயில் கங்கை ஆறு; முருகனுக்குத் தலைகள் ஆறு.;பிள்ளையார்க்கு மாறிய தலை;.ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதருக்கு,தலைப் பக்கம் ஆறு.;பித்தன் ஆகிய சிவனின் பாதத்தை நினைத்துப் போற்றுபவர்களுக்கு,நிச்சயம் ஆறுதல் கிடைக்கும். இதுவே பாடலின் பொருள்.

’இந்து இளம் பிறை போலும் எயிற்றனை’-பரஞானம்,அபர ஞானம் இரண்டுமே கணபதிக்குத் தந்தங்கள்;ஒரு தந்தம் ஒடித்து எழுதியதால் மற்ற முழு தந்தம் பார்ப்பதற்கு,இளம் பிறை நிலாவைப் போல்,வளைந்து,வெண்மையாய்,ஒளி விடுகிறது.

’நந்தி மகன்றனை’-இங்கு நந்தி என்றது சிவ பெருமானை.பிள்ளையார் சிவனின் முதற் பிள்ளை.

‘ஞானக் கொழுந்தினை’-ஞானத்தின் உச்சம்.தீ எரியும்போது,கொழுந்து விட்டெரியும் தீ என்று சொல்வோம்.அதே போல் விநாயகர் ஞானக் கொழுந்து.சிவன் ஞானமே வடிவானவன் ;அவ்ன் பிள்ளை ஞானக் கொழுந்து என்றுரைப்போரும் உளர்.

‘புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே’- புந்தி என்றது புத்தி.பிள்ளையாரை சிந்தையில் இருத்திப் போற்றுகின்றேன் என்பதாகும்.

வாருங்கள்,நாமும்,விநாயகப்பெருமானைப், ’புந்தியில் வைத்தடி போற்றுவோம்’

(மார்கழி மீள்பதிவு-2)

வெள்ளி, டிசம்பர் 16, 2011

மார்கழிப் பொங்கல்!

       நாளை மார்கழி மாதம் பிறக்கிறது.தட்சிணாயத்தின் கடைசி மாதம். மாதங்களில் நான் மார்கழி(மாஸானாம் மார்கசீர்ஷ:) என்று கீதையில் கண்ணன் சொல்கிறான்.நாளை முதல் கோவில்கள் அதிகாலையில் களை கட்டி விடும்.தனுர்மாத பூசைகள் ஆராதனைகள் நடைபெறும். திருப்பாவை,திருவெம்பாவை ஒலி எங்கும் நிறைந்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாலை குளிருக்கு இதமாகச் சுடசுடப் பொங்கல் கிடைக்கும்!

எங்கள் குடியிருப்பின் நுழை வாயிலிலேயே ஒரு பிள்ளையார் கோவில் அமைத்திருக்கிறோம்.




ஒவ்வொரு கோவிலிலும் பிள்ளயாருக்கு ஒரு பெயர் உண்டல்லவா?எங்கள் குடியிருப்புப் பிள்ளையார் “லட்சுமி கணபதி” என்றழைக்கப் படுகிறார். உண்மையிலேயே குடியிருப்பு வாசிகளுக்கு,லட்சுமி கடாட்சத்தை நல்கி வருபவர்.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தினம் அதிகாலை எங்கள் பிள்ளையாருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

மார்கழி பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே காலனி அறிவிப்புப் பலகையில் அறிவிப்புச் செய்யப்படும்.தினமும் நைவேத்தியப் ப்ரசாதம் செய்பவர்கள்,பெயர்களைப் பதிவு செய்து கொள்வர்.மாதம் முழுவதும், காலையில் சர்க்கரைப் பொங்கல்,வெண்பொங்கல்,கேசரி,சுண்டல் என்று
தினம்   ஒரு  பிரசாதம் கிடைக்கும்.(சர்க்கரைப் பொங்கலில் இனிப்புக் கூடும், குறையும்;வெண்பொங்கலில் உப்புக் கூடும் குறையும் –அதெல்லாம் அவரவர் திறமையைப் பொறுத்தது!,பக்தியைப் பொறுத்ததல்ல!)

இந்த ஆண்டும் பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டு ,நான்கு நாட்களுக்குப் பதிவாகிவிட்டது.பொங்கலுக்காகக் காத்திருக்கும் இவ்வேளையில்,(!),
திருமந்திரத்தின் பாயிரப்பாடலில் பிள்ளையார் பற்றிச் சொல்லப் பட்டிருப் பதை பார்ப்போமா?
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
  இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
  நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
  புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”

பொருள்:ஐந்து கரங்களையுடையவரும்,யானை முகத்தை யுடையவரும், இளம்பிறைச்சந்திரனையொத்த ஒற்றைத் தந்தத்தை உடையவரும், சிவனுடைய குமாரரும்,ஞானச்சிகரமாக விளங்குபவரும் ஆகிய விநாயக் கடவுளது திருவடிகளைச் சித்தத்துள் வைத்து வணங்குகிறேன்.
இப்பாடலின் விளக்கத்தை நாளை,மார்கழி முதல் நாள், பொங்கல் சாப்பிட்டு விட்டுப் பிறகு பார்ப்போம்!! 
(இது ஒரு மீள் பதிவு!)
இந்த ஆண்டு  இப்போதே பத்து நாட்களுக்குப் பெயர் பதிவாகி விட்டது!

செவ்வாய், டிசம்பர் 13, 2011

எனக்குக் காய்ச்சல்!

சாதாரணமாக விடுப்பு வேண்டும் கடிதங்கள் இப்படித்தான் ஆரம்பமாகும்!

"ஆஸ் ஐ ஆம்  சஃபரிங்  ஃப்ரம் ஃபீவர்,......................................................................              ..............................................................”

 ஆம்,எனக்குக் காய்ச்சல் வந்து விட்டது!

ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் வரும் காய்ச்சல்தான்.

நான் விரும்பும் காய்ச்சல்!

ஆம்! சங்கீதக் காய்ச்சல்.

சென்னையில் இசை விழாக்கள் தொடங்கி விட்டன!

ஒரு நண்பரின் தயவால் ஒவ்வோரு ஆண்டும் நாரதகானசபாவுக்கு ஒரு ஓசி சீசன் டிக்கட் வந்து விடுகிறது.

முக்கிய விழாவும் கச்சேரிகளும் 16ஆம் தேதி ஆரம்பம்.முதல் நாள் கதிரி, மறுநாள் உன்னி கிருஷ்ணன் என்று வரிசையாகக் கச்சேரிகள்.

ஆனால் இப்போதே பல இலவச நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து கொண்டி ருக்கின்றன.

காய்ச்சலின் உக்கிரம் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் ,தினமும் பதிவுலக உலா என்பது இயலாத செயல்.

அப்படி ஏதாவது பதிவிட வேண்டும் எனில் இருக்கவே இருக்கிறது ”மீள்பதிவு!”



இந்நிலை 2012,ஜனவரி 1ஆம் தேதி வரையே!

இடைப்பட்ட நாட்களில் தொடர்பில் இருக்க முயல்வேன்!

நன்றி!!

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

ஹாலிடே!ஜாலிடே!!

ஆசிரியர் வகுப்பில் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதப் பணித்தார். தலைப்பு ”உன்னிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால் என்ன செய்வாய்?”

ராமு வெற்றுத் தாளை மடித்துக் கொடுத்தான்.ஆசிரியர் அதைக் கண்டு கோபமடைந்தார்.”ராமு! என்ன இது ?ஒன்றுமே எழுதாமல் கொடுத்திருக்கிறாய்?” என்றார்.

ராமு சொன்னான்”என்னிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால் இப்படித்தான் செய்வேன்”

ஆசிரியர்(சௌந்தர்!)-ராமு,இந்த வரை படத்தில் அமெரிக்கா எங்கிருக் கிறதெனக் காட்டு.

ராமு சரியாகச் சுட்டிக்காட்டுகிறான்.

ஆ:நன்று! மாணவர்களே,அமெரிக்காவைக் கண்டு பிடித்தது யார்?

மாணவர்கள்:ராமு சார்!!

ஆசிரியர்(கருன்!):ஏண்டா லேட்டு?

மாணவன்:வரவழியில் இருந்த போர்ட்தான் காரணம் சார்.

ஆசிரியர்:என்ன போர்ட்?

மாணவன்: மாணவன் படம் போட்டுப் “பள்ளிக்கூடம்!மெள்ளப்போ “என்று எழுதியிருந்தது சார்!

ஆசிரியர்:யாருமே கேட்காவிட்டாலும் பேசிக்கொண்டே  இருக்கும் நபரை என்னவென்று அழைப்போம்?

மாணவன்:ஆசிரியர் சார்.
 ---------------------------------------------------------------------------------------
ஆசிரியர்:ராணி! நாய்  பற்றி நீ எழுதிய கட்டுரையும்  உன் அண்ணன் எழுதிய கட்டுரையும் ஒன்றாக இருக்கிறதே!அதேதானா இது?

ராணி;இல்லை சார்.அதே நாய்!
--------------------------------------------------------------------------------------

சனி, டிசம்பர் 10, 2011

கடவுளுக்குத்தானே தெரியும்?


ஒரு கோவிலில் ஒருவன் கூட்டிப் பெருக்கும் வேலை செய்து வந்தான். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தம் குறைகளைச் சொல்லி வேண்டி விட்டுப்போகிறார்களே,இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு நின்று கொண்டே இருக்கிறாரே கடவுள்,அவருக்கு ஓய்வு வேண்டாமா என எண்ணினான்.


கடவுளிடம் சென்று கள்ளமில்லா மனதோடு சொன்னான்” கடவுளே!  நான் ஒரு நாள் உங்களுக்குப் பதிலாக நின்று கொள்கிறேன்.நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்!”

கடவுளும் புன்சிரிப்புடன் சம்மதித்தார்.”அப்படியே செய்யலாம்.உன்னை என் போல் மாற்றி விடுகிறேன்.நீ இங்கு நின்று கொள்.ஆனால்,ஒரு நிபந்தனை. உன் முன் என்ன நடந்தாலும் நீ குறுக்கிடவோ பேசவோ கூடாது.அப்படிச் செய்தால் எனது திட்டங்கள் மாறிப் போகும்.”

அவன் கடவுளாக நின்று கொண்டான்.

சிறிது நேரத்தில் ஒரு பணக்காரன் வந்தான்.ஒரு கட்டுப் பணத்தை எடுத்து உண்டியலில் போட்டு விட்டு வேண்டிக் கொண்டான்”கடவுளே! நான் உனக்குக் கொடுத்துக்  கொண்டே இருக்கிறேன்.நீயும் என் வியாபாரம் சிறப்பாக நடந்து எனக்கு நல்ல லாபம் கிடைக்க அருள் செய்”   அவன் போகும்போது பணம் நிறைந்த பையை அங்கு விட்டுச் சென்று விட்டான். கடவுளாக நின்றவனால் ஏதும் செய்ய இயலவில்லை!

அதன் பின் ஒரு ஏழை வந்தான்.அவன் தன் பையில் இருந்த ஒரே ஒரு காசை எடுத்து உண்டியலில் போட்டான்.”கடவுளே! எனக்கு எவ்வளவோ செய்ய ஆசை.ஆனால் வசதியில்லை.என் குடும்பம் பசியில் வாடுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என உனக்கே தெரியும் ”என்று சொல்லிக் கண்களை   மூடிப் பிரார்த்தித்துக் கண்களைத் திறந்தான். அந்தப் பணப் பையைப் பார்த்தான்.மிக்க மகிழ்ச்சியோடு அதை எடுத்துக் கொண்டு  கடவுளுக்கு  நன்றி சொல்லிப் புறப்பட்டான்.கடவுளாக நின்றவனும் மகிழ்ந்தான்.

அடுத்ததாக ஒரு மாலுமி வந்தான்.அவன் மறு நாள் கப்பல் பயணம் செல்ல  வேண்டும்.ஆறு மாதம் கழித்துதான் திரும்புவான்.அவன் வணங்கிக்  கொண்டிருக்கும்போதே,பணக்காரன்  போலீஸுடன் வந்தான். மாலுமியைக் கண்டதும் இவன்தான் என் பணத்தை எடுத்திருக்கிறான் என்று சொல்ல போலீஸ் மாலுமியைப் பிடித்துக் கொண்டார்கள்.அவன் இறைவனிடம் முறையிட்டான்,இறைவா நிரபராதியான என்னை ஏன் தண்டிக்கிறாய் என்று.

இதைப் பார்த்தான் கடவுளாக நிற்பவன்:”இவன் தவறு செய்யவில்லை, இதற்கு முன் வந்த ஏழைதான் எடுத்தான் “ என்று சொல்ல ,பணக்காரன். மாலுமி இருவருமே கடவுளுக்கு நன்றி தெரிவித்தனர்.தான் ஒரு நல்ல செயல் செய்தோம்,கடவுள் பாராட்டுவார் என்று அவன் எண்ணினான்.

இரவு கடவுள் வந்ததும் அவரிடம் நடந்தவற்றைச் சொன்னான். கடவுள்சொன்னார்”ஏன் இப்படிச் செய்தாய்?உன்னைப் பேசாமல் இருக்கச் சொன்னேனே?நீ என்ன செய்து விட்டாய்?அந்தப் பணக்காரன் ஏமாற்றிச் சம்பாதிக்கிறான். எனவே அவன் பணம் உன்மையான அந்த ஏழைக்குப் பயன்படட்டும் என நினைத்தேன்.அந்த மாலுமி போகப் போகும் கப்பல் புயலில் மாட்டப் போகிறது.மாலுமியின் உயிருக்கு
ஆபத்து.போலீசிடம் அகப்பட்டிருந்தால் அவன் பிழைத்திருப்பான். பணம் தொலைந்ததில் பணக்காரனின் கர்ம பலன் சிறிது குறைந் திருக்கும்.ஆனால் எல்லா வற்றையும்  நல்லது செய்வதாக எண்ணி நீ மாற்றி விட்டாய்.”

ஆம் கடவுளின் திட்டங்களை யார் அறிவார்?எதை, எப்படி, எப்போது, எங்கு எவருக்குச் செய்ய வேண்டும் எனத் தீர்மானிப்பவர் அவரல்லவா!


வெள்ளி, டிசம்பர் 09, 2011

மறுக்கப்பட்ட சுகங்கள்!

எந்த சுகங்கள்  எல்லாம் எனக்கு மறுக்கப்பட்டன?

தந்தையின் கைவிரல் பற்றிக் கடற்கரை மணலில்
            கால் தோய நடக்கும் சுகம்.

இந்த வயதில்  இனிய துணை உடன் வர
            கோவில் குளம் போகும் சுகம்

சொந்த மக்கள் ,பேரன்,பேத்தி எனக்
            கூட்டுக் குடும்பமாய் வாழும் சுகம்

இந்த சுகமெல்லாம்மறுக்கப் பட்டாலும்
           ஒன்றெனக்குத் தந்தான் இறைவன்

அது சுகமல்ல,வரம்!

முதுமையில்  என்  தாயைக் கவனித்து
           வேண்டியதெல்லாம்  செய்யும் வரம்!

 அது போதும்,இறைவா உனக்கு நன்றி!
          

வியாழன், டிசம்பர் 08, 2011

அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?!

முன்னொரு காலத்தில் ஒரு தீவில் எல்லா மனித உணர்ச்சிகளும் வாழ்ந்து வந்தன.
--மகிழ்ச்சி,வருத்தம்,அறிவு,அன்பு போன்ற அனைத்து உணர்ச்சிகளும்.

ஒரு நாள் அவைகளுக்குத் தெரிய வந்தது அந்தத் தீவு கடலில் மூழ்கப்  போகிறதென்று.

உடனே எல்லாம் படகு கட்டித் தீவை விட்டுப் புறப்பட்டன-அன்பைத்தவிர.

கடைசி நொடி வரை அன்பு அங்கேயே இருக்கத் தீர்மானித்தது.

அந்தத் தீவு கிட்டத்தட்ட மூழ்கி விட்ட  நிலையில்,அன்பும் வெளியேறத் தீர்மானித்தது.

அப்போது பணம் ஒரு அழகிய படகில் சென்று கொண்டிருந்தது. அன்பு அதனிடம் உதவி கேட்டது.

“என் படகில் தங்கம்,வெள்ளி,வைரம் எல்லாம் இருக்கிறது.உனக்கு இடமில்லை” என்று சொல்லிச் சென்று விட்டது.

அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்த வீண் பெருமையை உதவி கேட்டது அன்பு.அது சொன்னது”நீ முழுவதும் நனைந்து போயிருக்கிறாய்.என் படகை நாசப்படுத்தி விடுவாய்”

வருத்தத்தைக் கேட்க அது சொன்னது”எனக்கு அமைதி வேண்டும் .நான் தனியாக இருக்க விரும்புகிறேன்”

மகிழ்ச்சி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது,அன்பு கேட்டதே அதன் காதில் விழவில்லை.

அப்போது ஒரு குரல் கேட்டது “வந்து என் படகில் ஏறிக்கொள்”

ஒரு வயதானவரும் உடன் வேறு சில வயதானவர்களும் படகில் இருந்தனர்.
அன்பு படகில் ஏறிக்கொண்டது.

படகு நல்ல தரையில் நின்றது.

அன்பை அழைத்த அந்த உணர்வு நிற்காமல் போய்விட்டது.

அன்பு அருகில் இருந்த அறிவு என்னும்முதியவரைக் கேட்டது “அது யார்?”

“காலம்” பதில் வந்தது.

“காலம் ஏன் எனக்கு உதவி செய்தது?”

அறிவு ஒரு அறிவார்ந்த பார்வையுடன் சொன்னது ”ஏனென்றால், காலத்துக்குத்தான் தெரியும்,அன்பு எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று”