அது ஒரு சிறிய கடற்கரைக் கிராமம்.
அமைதி தவழும் இடம்.
அம் மக்களின் முக்கிய தொழிலே மீன்
பிடிப்பதுதான்.ஆண்கள் கடலுக்குச் செல்வார்கள். தேவையான அளவு மீன்
பிடிப்பார்கள்.தங்கள் உணவுக்கு வேண்டியதை வைத்துக்கொண்டு மீதியை
விற்பார்கள்.அப்பணத்தில் தேவையான பொருட்கள் வாங்குவார்கள்.
வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழித்து வந்தனர்.
ஒரு நாள் நகரத்திலிருந்து ஒருவர்
அங்கு வந்தார்.
அங்கு கிடைக்கும் மீன்களின் தரம்
கண்டு மகிழ்ந்தார்.
மீனவர்களிடம் கேட்டார்”மிக நல்ல
மீன்கள் பெருமளவில் கிடைக்கிறதே! நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”
”எங்களுக்குத் தேவையான மீன்களைப்
பிடிப்போம்.சமைப்போம்; சாப்பிடுவோம்.மனைவி மக்களுடன் இனிமையாகப் பொழுதைக்
கழிப்போம். நண்பர்கள்
கூடி அளவளாவுவோம்.நன்கு உறங்குவோம்.”
வந்தவர் கேட்டார்.”இங்கு அதிக
அளவில் நல்ல நல்ல மீன்கள் இருக்கின்றன. இன்னும் அதிக நேரம் உழைத்து அதிக மீன்களைப்
பிடிக்கலாமே?”
“பிடித்து?”மக்கள்
”உங்கள் நல்ல நேரம்.மேலாண்மைக் கல்வி
பயின்ற நான் இங்கு வந்தது.நல்ல வழி நான் கூறுகிறேன்.
அதிக மீன்களை வெளிச் சந்தையில்
நல்ல விலைக்கு விற்கலாம்.பணத்தைச் சேமிக்கலாம்.நல்ல எந்திரப் படகும்,கருவிகளும்
வாங்கி இன்னும் அதிக மீன் பிடிக்கலாம்.இடைத் தரகர்கள் இன்றி மொத்த வியாபாரம்
செய்து நீங்களே அதிக பொருள் ஈட்டலாம்”
“பிறகு?”
“பதப்படுத்தும் தொழிற்சாலை.மீன் எண்ணை
தயாரிப்பு என்று தொழில் அபிவிருத்தி செய்து பெரிய பணக்காரர்களாக ஆகலாம்.”
“அதன்பின்?”
”பெரிய நகரத்தில் குடியேறி எல்லா வசதிகளுடனும்
வசிக்கலாம்.மேலும் பொருள் ஈட்டலாம்”
“இதற்கெல்லாம் எத்தனை வருடம் ஆகும்?”
”இருபது முப்பது ஆண்டுகள் ஆகலாம்.’
“பிறகு?”
“ ஓய்வெடுக்க வேண்டியதுதான்.
சமுத்திரக்கரையில் ஒரு அழகிய இடத்தை வாங்கி,பெரிய மாளிகை கட்டி, உண்டு,உறங்கி,மனைவி
மக்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழிக்கலாம்”
“அதைத்தானே நாங்கள் இப்போதே செய்து
கொண்டிருக்கிறோம்!” என்றனர் அவர்கள்.
ஆம்! வாழ்க்கையில் எதை நோக்கிப்போக நினைக்கிறீர்களோ,அது
இப்போதே உங்களிடம் இருக்கலாம்.
பணம் மட்டுமே வாழ்க்கையாகாது.
பணம் மட்டுமே வாழ்க்கையாகாது.
வாழ்க்கை உப்பு சப்பற்றுப் போகுமுன்
உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடுங்கள்!
( இணைய வரவு)