தொடரும் தோழர்கள்

புதன், டிசம்பர் 31, 2014

அவள் பறந்து போனாளே!நீயாய் வந்தாய்
சுகம் துக்கம்
இன்பம் துன்பம்
வரவு செலவு
கவலை தெளிவு
எல்லாம் தந்தாய்.
எதிர்பார்த்தது நடக்காத நேரங்கள்
எதிர்பாராதது நிகழ்ந்த தருணங்கள்
ஆச்சரியங்கள்
ஆனந்தங்கள்
அமைதி
எல்லாமுமே!
இப்போது போகிறாய்
போய் வா என்று சொல்ல இயலாது
போனால் வரமாட்டாய்
ஏனென்றால் நாளை வேறொருத்தி
மீண்டும் ஒரு தொடக்கம்
அனுபவங்கள் புதிதாய்
பலவாய்
ஒரே ஒரு வருத்தம்
ஒவ்வொருத்தி வரும்போதும்
என் வயது கூடுகிறதே?!

நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும்  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 

தமிழ் இளங்கோ!//எனக்குப் பிடித்த நூல் என்ற தலைப்பில் இன்றென்னைப் பேசப் பணித்திருக்கிறார்கள்
பல புதினங்களை நான் படித்திருந்தாலும்,எனக்குப் பிடித்த நூல் என்றால், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் என்று பாரதி பாராட்டிப் பரவசப்பட்ட சிலப்பதிகாரம்தான்.

செவ்வாய், டிசம்பர் 30, 2014

தாம்பத்திய உறவில் எது முக்கியம்?

தாம்பத்திய உறவில் முக்கியமானது எது?
உடனே நீங்கள் சொல்வது,உறவு என்ற சொல்லே அதைச் சொல்லி விடுகிறதே என்றா?
படுக்கையைப் பகிர்ந்து கொள்வது மட்டும் தாம்பத்தியமாகி விடுமா?
இல்லறம் இனிமையானதாகி விடுமா?
இந்த உறவில் மிக முக்கியம்,புரிதல்,விட்டுக் கொடுத்தல்,அனைத்தையும் பகிர்தல்.
இன்பம்- துன்பம்,எழுச்சி-வீழ்ச்சி,வரவு –செலவு என்று எல்லாம் பகிர்ந்து கொள்ளுதல்.
இதைச் சொல்கையில் சமீபத்தில் நான் படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்ட கதைதான்.
ஆனால் அதையும் மீறி அதனுள் இருக்கும் அந்த உன்னதமான தாம்பத்திய உறவின் அழுத்ததைப் பாருங்கள்.
இதோ கதை--------
ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்;
கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மேலும் இருக்கலாம்.
ஒரு மேசையின் முன் அமர்ந்தனர்.
பணியாளிடம் இரண்டு இட்லி,ஒரு வடையுடன் இன்னொரு தட்டும் கொண்டு வரச் சொன்னார்கள்.
இட்லி வடையும் காலித்தட்டும் வந்தன.
கணவன் ஒரு இட்லியையும்,வடையில் பாதியையும் காலித்தட்டில் வைத்து,சாம்பார்,
சட்னியிலும் பாதி ஊற்றி,மனைவி முன் வைத்து விட்டுச் சாப்பிடத்தொடங்கினான்.
அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறே மனைவி அமர்ந்திருந்தாள்,அவ்வப்போது தண்ணீரைக் குடித்தவாறு.
ஓட்டலில்  இருந்த மற்றவர்கள்,இவர்கள் வசதியற்றவர்கள்,எனவே கொஞ்சமாக  வாங்கிப் பகிர்ந்துகொள்கின்றனர் என எண்ணினர்.
ஒரு இளைஞன் அவர்களிடம் வந்து,இன்னொரு தட்டு இட்லி வடை தான் வாங்கித்தருவதாகக் கூற அவர்கள் மறுத்து விட்டனர் ,தாங்கள் எப்போதுமே பகிர்வதே பழக்கம் எனக் கூறி.
கணவன் சாப்பிட்டு முடித்தான்.
கை கழுவப்போனான். 
இளைஞன் மீண்டும் வந்து மனைவியிடம் கேட்டான்”ஏன் நீங்கள் சாப்பிடவேயில்ல?”
அவள் கூறினாள்”பல் செட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!!”
பகிர்தலின் உச்சம்!!!
 
(நன்றி:குட்டன்)

திங்கள், டிசம்பர் 29, 2014

கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்மூன்று பதிவுகளாகமரண வேட்டைஎன்ற தலைப்பில் ஒரு சிறுகதை வெளியிட்டிருந்தேன்.  

பதிவில் கருத்துச் சொன்னவர்கள் தவிர, நண்பர்கள் பலரும் தொலைபேசி மூலம் பாராட்டைத் தெரிவித்தார்கள்

சிலர் ஒரு கருத்துச் சொன்னார்கள்,இக்கதை குறும்படமாக/முழுநீளத் திரைப்படமாக ஆக்க ஏற்றது என்று.

ஒரு  கதையைப் படிக்கும்போது ஏற்படும் தாக்கம் என்பது வேறு. அதே தாக்கம் அக்கதை படமாகும்போது ஏற்படுமா என்பதே கேள்வி.

கதையின் மையமாகச் சொல்லப்பட்ட செய்தி வெறும் கருத்தாக இன்றி,காட்சி மூலம் வெளிப் படுத்தப் படக்கூடியதாக இருத்தல் அவசியம். 

சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம்;ஒரு பக்க வசனத்தில் சொல்லமுடியாத செய்தியை ஒரு சிறு காட்சி மூலம் சொல்லி விடமுடியும்.அவ்வாறு காட்சிப்படுத்த இயலாதென்றால் அதன் தாக்கம் மிக்குறைவாகவே இருக்கும்.

இந்தமரண வாடைஎன்ற கதையில் முக்கியமான,மையக் கருத்து என்ன? 

நாயகனின் அபூர்வத் திறமை;
 
இறக்க இருப்பவரின் அண்மையில் அவன் உணரும் ஒரு வாடை;அதுவே மரண வாடை.   

இந்த வாடையை திரையில் எப்படிச் சொல்வது.வாடையைக் காட்சிப்படுத்த முடியாது.வெறும் வசனத்தின் மூலமே வெளிப்படுத்த முடியும்.அவ்வாறு செய்கையில் அதன் தாக்கம் நீர்த்துப் போகிறது.

இது போன்ற ஒரு பிரச்சினைதான் திரு.கோவி மணிசேகரனுக்கும் ஏற்பட்தாக் கேள்விப் பட்டிருக்கிறேன்.அவரதுதென்னங்கீற்று” நாவலைத் திரைப்படமாக்க வேண்டும் என அவர் விரும்பியபோது ,ஒரு தயாரிப்பாளர்”வயதுக்கு வராத நாயகி என்று திரும்பத் திரும்பச் சொல்கிறீர்களே,அதைத் திரையில் எப்படிக் காட்டுவது ”என்று கேட்டாராம்.(பின்னாளில் அது படமாக்கப்பட்டது,திரு கோவி அவர்களின் இயக்கத்திலேயே)

எனவே மரண வாடைக்கான திரைக்கதை எழுத வேண்டும் என்றால் ஒரு மாற்றம் செய்ய வேண்டும்.இறக்க இருப்போரின் அண்மையில் வாடையை உணராமல்,நாயகனுக்கு ஏதோ  பயங்கர உருவம் தெரிவதாக(மற்றவர்க்குத் தெரியா) மாற்றி அமைக்கலாம்.”டம்” என்ற ஒலியுடன் அந்த உருவம் தோன்றும்போதெல்லாம்,பார்ப்பவர்கள் அதிர்வார்கள்தானே!!

இதைத் தவிர இன்னும் சிறிது சரக்குச் சேர்க்க வேண்டும்.

முறைப்பெண்ணின் மீது கொண்ட நேசம்.அவள் வீட்டில் ஏற்காதது இவற்றை விரிவு படுத்த வேண்டும்.

இந்த அனுபவம் அவனுக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு ஏதாவது ஒரு இறப்புடன் அவனுக்கு ஏற்பட்ட பயங்கர நிகழ்வைக் காரனமாகக் காட்டலாம்.

இப்படி எத்தனையோ செய்யலாம்!

என்ன செய்தாலும் படம் பப்படம்தான்!

ஞாயிறு, டிசம்பர் 28, 2014

ஹாலிடே ஜாலிடே!


ஒரு சிறிய நிகழ்ச்சி.
வடிவேலு பாணியில்!

//வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்..... "ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
 "வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
 "சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
 "சினிமா படத்துல இருந்துதான்"
 "அய்யோ!" என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்//

தமிழ் விக்கிபீடியா விலிருந்து!

சனி, டிசம்பர் 27, 2014

மரண வாடை-3-இறுதிப்பகுதி


நேரம் அதிகமில்லை.

என்ன செய்வதாயினும் விரைந்து செய்ய வேண்டும்.

இந்த மாப்பிள்ளை கவிதாவின் கழுத்தில் தாலி கட்டுவதை எப்படியாவது தடுத்தேயாக வேண்டும்.

எப்படி?....எப்படி?

வெள்ளி, டிசம்பர் 26, 2014

மரண வாடை-பகுதி-2அந்தச் சிறுவனின் மரணம் சங்குவைப் பெரிதும் பாதித்தது.

ஆனால் தான் எந்த வகையிலும் அம்மரணத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது என்பதையும் அவன் உணர்ந்தேயிருந்தான்.

மரணத்தின் வாடை,அது எப்படிப்பட்ட மரணமாயினும் ,தன்னால் உணர முடிவதை ஒரு திறமையாகக் கொள்ள அவனால் முடியவில்லை.

அந்நிகழ்வுக்குப் பின் பல மாதங்களுக்கு அந்த வாடை இல்லை;அதாவது அவனுக்குத் தெரிந்தவர் எவரும் இறக்கவில்லை.

அந்நாட்களில்தான் அவனது முறைப்பெண் கவிதாவுக்குத் திருமணம் முடிவானது.

அவன் கவிதாவை நேசித்தவன்

ஆனால் அவர்கள் வசதி கூடியவர்கள் என்பதால் அவன் நேசம் அவ்வளவில் நின்று போயிற்று.

அதன் பின்னும் அவன் நேசம் மனத்துக்குள் அழுந்திக் கிடந்தது.

அவள் திருமணம் நன்கு நடந்து  அவள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே அவன் மனமாற விரும்பினான்.

திருமண ஏற்பாடுகளில் இயன்ற வரை உதவி செய்தான்

மாப்பிள்ளையை அவன் முன்பே பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.

திருமணத்துக்கு முதல் நாள் பையன் வீட்டார் வந்து சேர்ந்தனர்.

அவர்களை வரவேற்கும் கும்பலில் அவனும்.

மாப்பிள்ளை  வண்டியிலிருந்து இறங்கி நடந்து அவனை நெருங்கினார்.

குப்பென்ற அந்த வாடை,

மறக்க முடியாத அதே வாடை.

மாப்பிள்ளை அவனைக்கடந்து அவர்களுக்கு ஒதுக்கியிருந்த அறைகளின் பக்கம் செல்லலானார்,அந்த வாடையையும் அழைத்துக் கொண்டு.

அவனுக்கு நெஞ்சு அடைப்பது போலிருந்தது..அவசரமாகப் போய்த் தண்ணீர் எடுத்துக் குடித்தான்.

கடவுளே! இது என்ன சோதனை.?மாப்பிள்ளை இறக்கப் போகிறார்.நாளை கிருமணம்.அதன் பின் அவர் இறந்தால் கவிதாவின் வாழ்க்கை என்னாகும்?

கல்யாணத்தை நிச்சயமாகத் தடுத்து நிறுத்த முடியாது.

இந்தக் காரணத்தைச் சொன்னால் யாருமே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

மாறாக இவனது நோக்கத்தின் மீதே சந்தேகம் ஏற்படும்.

என்ன செய்யலாம்?

யோசித்தான்…..

(இறுதிப் பகுதி இனி வரும்)

மரண வாடைமரணத்துக்கு வாடை உண்டா?

இப்போது சில நாட்களாக சங்கு என்ற சங்கரனின் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.

பிண வாடை என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறான்.

நாளிதழ்களில் படித்திருக்கிறான்,பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச,.திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் பிணம் கிடந்ததாக.

மனிதன் என்று இல்லை;எல்லா உயிர்களுமே செத்து அழுகினால் வாடைதான்.

ஆனால் மரணிக்க இருக்கும் ஒருவரிடமிருந்து முன்பாகவே வாடை வருவது சாத்தியமா?

இதுதான் அவனது சந்தேகம்,கேள்வி,குழப்பம்,ஏதோவொன்று!

புதன், டிசம்பர் 17, 2014

நீங்களே சொல்லுங்கள்!
குற்றவாளிக் கூண்டில் அந்தப் பெண்.

சர்க்கார் வக்கீல் இந்தப் பெண் தன் ஒரு வயதுக் குழந்தையை விற்க முயன்ற போது கைது செய்யப்பட்டாள்

நீதிபதி அவளைப் பார்த்தார்.

நீ உன் குழந்தையை விற்க முயன்றது உண்மையா?”

செவ்வாய், டிசம்பர் 16, 2014

மார்கழிப் பொங்கல்இன்று மார்கழி முதல் நாள்.

தட்சணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி.

கோலம்,பஜனை,பொங்கல் என்று காலை வேளைகள் அழகாகும்,பக்தி மயமாகும், சுவையாகும்.

பஜனை முடிந்து சூடான பொங்கல் சாப்பிட்ட அந்த நாட்களை நினைத்துப் பார்த்து நாக்குச் சப்புக்கொட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

வியாழன், டிசம்பர் 11, 2014

இன்றும்,என்றும் வாழ்வான் பாரதி!


//நோயாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்

அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்

அதற்கடுத்த விராமா நுஜனும் போனான்


சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர்புகழு மிராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!--// ( பாரதி)


 ஆம்!

பாரதிக்குச் சாவில்லை!

இன்னும் வாழ்கிறான் நம்முடன்.

காலனைச் சிறுபுல்லென மதித்துக்

காலருகே வந்தால் அவனை மிதிக்கவும்

எண்ணிய வீரனுக்குச் சாவேது?

காலத்தைக் கடந்து அவன் கவிதை வாழும்

உடன் அவனும் வாழ்வான்.

புதன், டிசம்பர் 10, 2014

சிவப்பு விளக்கும் சின்னப் பையனும்சிவகுருநாதனைத் தெரியுமா உங்களுக்கு?

நீங்கள் தவறாமல் வார இதழ்களைப் படிப்பவரா?

சமீபத்திய குமுதம் இதழ்களில் அவனது சில கதைகள் வெளியாகியுள்ளன.

ஆம்.அவன் ஒரு மொட்டு விடும் எழுத்தாளன்

செவ்வாய், டிசம்பர் 09, 2014

உயிர்--கடைசிப் பகுதி

டாக்டர்!எப்படியிருக்கா?

அவங்களுக்கு வாழணுங்கற ஆசையே இல்லைன்னு நெனக்கிறேன்.பாக்கலாம்.

மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறதோ?

சர்மா வந்தாச்சா,

வந்துடுவார்;வர நேரம்தான்.

கனவு போல் காதில்.

ஏன்

சார்

யார்?

வாசலில் ஓர் ஆள்

வெளியிலிருந்து வரும் வெளிச்சத்தில் முகம் தெரியவில்லை

லோகநாத சர்மா வீடு......

இதுதான்

நீங்க யாரு

நெருங்கியதும் ...

ஏன்னா நீங்களா?

இல்லை இது இளைஞன்

அதிர்கிறாள்

எப்படி அவரைப் போலவே?

யார் இந்த இளைஞன்?

அவன் கேட்கிறான்

சித்திதானே

சித்தியா?

தலை சுற்றுகிறது.

அப்படியென்றால் தன்னை மணப்பதற்கு முன் வேறு ஒரு தொடர்பா?

அதன் மூலம் பிறந்தவனா?

ஈஸ்வரா,இவரா இப்படி.

கீழே விழுகிறாள்.

ஆஸ்பத்திரி

சர்மா வந்தாச்சு.

என்ன நடந்தது.

திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா,இஞ்ச நிக்கற இவந்தான் எங்களைக் கூப்பிட்டான் .ஆஸ்பத்திரியில சேத்துட்டு ஒங்களுக்குத் தாக்கல் அனுப்பினோம்—பக்கத்து வீட்டு மாமி.

பார்த்தார் அவனை

திடுக்கிட்டார்

எப்படி என்னை மாதிரியே?

யாருப்பா நீ?

சங்கரராமன் பையன்.

சங்கரராமன்...அவர் உடன் பிறந்த அண்ணன்.பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டு வீட்டினரால் விலக்கி வைக்கப்பட்டவன்

இத்தனை ஆண்டுகளாக அவனைப் பற்றி எதுவும் தெரியாது.

இப்போது...

கேள்விக் குறியோடு அவனைப் பார்த்தார்.

ஆறு மாசத்துக்கு முன்னால அம்மா போயிட்டாங்க.15 நாளைக்கு முன்னால அப்பாவும் காலமாயிட்டார்.சாகறத்துக்கு முன்னால உங்களை பத்திச் சொன்னார்.பாக்க வந்தேன்.
சித்தி என்னைப் பாத்த்து மயங்கி விழுந்துட்டா.பக்கத்து வீட்டில போய்ச் சொன்னேன்.

என்ன நடந்திருக்கும் என்று அவருக்குப் புரிவது போல் இருந்தது

ஐயோ இதோ பாருங்கோ.மாமிக்கு இழுக்கறது 

டாகடர் வந்தார்.

பார்த்தார்.

முயன்று பார்த்தார்.

சாரி.........

போய் விட்டாள்.

உண்மை தெரியாமலே போய் விட்டாள் .