தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 16, 2014

மார்கழிப் பொங்கல்இன்று மார்கழி முதல் நாள்.

தட்சணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி.

கோலம்,பஜனை,பொங்கல் என்று காலை வேளைகள் அழகாகும்,பக்தி மயமாகும், சுவையாகும்.

பஜனை முடிந்து சூடான பொங்கல் சாப்பிட்ட அந்த நாட்களை நினைத்துப் பார்த்து நாக்குச் சப்புக்கொட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

காலையில் சூடான பொங்கல்......!

ஆகா!

காலைக் குளிரில் சூடாகச் சாப்பிடப் பொங்கல் என்றில்லை;இட்லி கிடைத்தாலும் சுகமே.
அந்த நாட்களில்,மயிலை குளத்தருகே ,தெற்கு மாட வீதியில் இப்போது சங்கீதா இருக்கும் இடத்தில்   ஓர் உடுப்பி ஓட்டல் இருந்தது. டேங்க் உடுப்பி என்று அழைப்போம் அதை.அதன் ரூஃப் கார்டனில் மாலை வேளைகளில் நாங்கள் சில நண்பர்கள்  அமர்ந்து காபி சாப்பிடுவது வழக்கம்.அங்கு காலை 5.30க்குச் சென்று பார்த்தீர்கள் என்றால் ஒரு பத்துப் பேராவது மேசைகள் முன் அமர்ந்திருப்பர்.பரிமாறுபவர்,டவரா டம்ளர்களில் காபியை எடுத்து வந்து எல்லார் முன்பும் வைத்து விட்டுப் போவார்.சூடான அந்தக் காஃபி,அமிர்தம்தான்!6 மணிக்கு சூடான இட்லி வந்து விடும்.சூடான இட்லியும் சாம்பாரும்.....நினைத்தாலே நாக்கில் நீர் ஊறுகிறது.

மார்கழிப் பொங்கலில் ஆரம்பித்து இட்லிக்குப் போய் விட்டேன்.மார்கழிக்காலையின் மற்றோர் அம்சம்,கோவில்களில்,வானொலியில் ,தொலைக்காட்சியில் எனப் பல இடங்களிலும்  ஒலிக்கும் திருப்பாவை,திருவெம்பாவை.நான் கோவில்பட்டியில் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோதுதான் எம்.எல்,வி பாடிய திருப்பாவைப் பாடல்கள்  வெளியாயின. செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஒலிபெருக்கி மூலம் வெளிவந்த அந்த இசையில் அனைவரும் மயங்கித்தான் போயினர்,

எம்.எல்.வி அவர்கள் கர்னாடக இசை மேடைகளில் மட்டுமல்ல,திரை இசையிலும் முத்திரை பதித்தவர்.அநேகமாக பலர் அறியாத ஒரு படம்,தாயுள்ளம்,அதில் கொஞ்சு புறாவே என்றொரு பாட்டு.இன்றும் கேட்க இனிமை.

தாயுள்ளம் படத்தில் ஒரு விசேடம் என்னவென்றால்.வில்லன் நடிகர் மனோகர்தான் அதில் கதாநாயகன்,வில்லனாக நடித்தவர் ஆர்.கணேஷ் !ஆம்,காதல் மன்னன் ஜெமினிதான்.

ஜெமினி என்பது ஒரு ராசி.தமிழில் மிதுனம்.இன்றைய சனிப்பெயர்ச்சி அந்த ராசிக்கு நன்மை செய்யும் என்றே சொல்கிறார்கள்.ஆனால் ஒரு கோவிலில் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளில் மிதுனத்தையும் சேர்த்திருக்கிறார்கள்.எது சரியோ?

ஜெமினி ஒரு ராசி;ஜெமினிக்குக் காதல் ராசி!

ராசி என்பது திருமயிலையில் இருக்கும் ஒரு துணிக்கடை.ராதாசில்க்ஸ் என்பதே ராசியாகி விட்டது.

பழமையை இன்றும் போற்றிப் பாதுகாத்து வரும் பகுதி மயிலை.மார்கழியில் கோலம், பஜனை ,பொங்கல் என்று காலை வேளைகள் இன்றும் அழகாக,பக்தியாக,சுவையாகத்தான் இருக்கின்றன.

4 கருத்துகள்:

  1. அழகாக,பக்தியாக,சுவையாக அருமையான பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  2. சுவையான பக்தி இருக்கும் போது ராசி என்ன செய்ய முடியும்...?

    பதிலளிநீக்கு
  3. மார்கழியில் ஆரம்பித்து தொடர் வலை பின்னி ராசியில் முடித்துவிட்டீர்கள். ஒரே பதிவில் பல தகவல்கள்.இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு