தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மே 26, 2013

டி.எம்.எஸ்ஸும் நானும்!



1954 ஆம் ஆண்டு.

நான் சாத்தூரில் ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.

என் அண்ணா கோவில்பட்டியில் பணி புரிந்து வந்தார்.

வார இறுதியில் அவர் சாத்தூர் வருவார்.அப்படி வந்தபோது ஒரு முறை” ‘கூண்டுக் கிளி’ என்று ஒரு படம்.அதில் ஒரு பாட்டு,”கொஞ்சும் கிளியான பெண்ணை” என்று.யாரோ டி.எம் சௌந்திர ராஜனோ,சி.ஆர்,சௌந்திரராஜனோ பாடியிருக்கிறார்.பிரமாதமாக இருக்கிறது” என்று சொன்னார்.

(அப்போது சி.ஆர்.சௌந்திர்ராஜன் என்பவர் தென்னாட்டுக் கண்டசாலா என அழைக்கப்பட்ட ஒருவர்).

எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது .என் தாத்தா வீட்டிற்குச் சென்று தான் ரேடியோ சிலோன் கேட்பேன்.அப்படி அந்தப்பாடலை மட்டுமன்றி அதே நேரத்தில் வெளி வந்த டி.எம்.எஸ்ஸை ஒரு தூக்குத் தூக்கி விட்ட தூக்குத்தூக்கி படப் பாடல்களையும் கேட்டு ரசித்தேன்.அப்போதேல்லாம் நான் அதிகம் கத்திக்கொண்டிருக்கும் பாடல்”ஏறாத மலைதனிலே” என்ற பாடல்தான்.

லட்சக்கணக்கான அவரது ரசிகர்களில் நானும் ஒருவன் ஆனேன்.

(அந்த வயதில் பாட்டுக்கு முன்னால் அறிவிப்பில் டி.எம்.சௌந்திரராஜன் கோஷ்டியார் என்றோ, டி.வி.ரத்தினம் கோஷ்டியார் என்றோ சொல்லும்போதெல்லாம் ஒவ்வொரு பாடகரும் ஒரு தனி கோஷ்டி வைத்திருப்பார்கள் போலும் என எண்ணிக் கொள்வேன்!)

தமிழ்த் திரையுலகில் அவர் ஒரு சகாப்தம்.

பலர் அவரது வாழ்க்கை வரலாறு பற்றி அவர் பெயர் சிறப்பு பற்றி அவரது பாடல்கள் பற்றி யெல்லாம் எழுதி விட்ட நிலையில்,நான்புதிதாக எதையும் எழுதுவதற்கில்லை.

ஆனால் நான் முருகனிடத்தில் பக்தி கொள்ள முக்கியக் காரணமானவர் அவர்தான் என்பதை மறுக்க முடியாது.

அவரது முருக பக்திப்பாடல்களை கேட்கும்போதேல்லாம்,அன்று முதல் இன்று வரை என் மெய் சிலிர்க்கும் ,கண்கள் பனிக்கும்.

எத்தனையோ புதிய பின்னணிப் பாடகர்கள் வந்து விட்டார்கள்;வந்து கொண்டிருக்கிறார்கள்; வருவார்கள்.

ஆனால் டி.எம்.எஸ்ஸின் அந்த ’கணீர்’க்குரல் இன்று வரை எவருக்கும் இல்லை;இனி இருக்கப் போவதும் இல்லை.

அவர் உடல் மறைந்தது.

ஆனால் அவர் குரலுக்கு அழிவில்லை.

இன்றும், என்றும் அது நம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

வாழ்க அவர் புகழ்!