இன்று மனம் உற்சாகமாக இருக்கிறது.எதையாவது எழுத கை பரபரக்கிறது.இது வரை பலமுறை சொல்லிவிட்டேன்;இன்றும் சொல்கிறேன்;இனியும் சொல்வேன்…..இந்தப் பதிவுலகுக்கு வந்ததால் எனக்குக் கிடைத்த,எனக்கு
மட்டுமல்ல,பதிவர்கள் அனைவருக்குமே கிடைத்த மிகப் பெரிய பேறு முகம்
தெரியாத நட்புகள்;தூரம் அதற்கு ஒரு தடையல்ல; வயதென்பது அங்கு ஒரு பொருட்டல்ல.இந்த 68 வயதுக்காரனுக்கு,இவன் பட்ட மேற்படிப்பு முடித்துப் பணியில்
அமர்ந்த காலத்தில் கூடப் பிறந்தே இராத சிலர் பதிவின் மூலமே நண்பர்கள் ஆகியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் அவர்களில் சிலர் இங்கு வரும்போது தேடி வந்து சந்தித்து உரையாடிச்
செல்வது என்னை நெகிழ வைக்கிறது;புதிய உற்சாகத்தை தருகிறது,இன்று அப்படிப்பட்ட ஒரு நாள்; நன்றி நண்பரே!
………………………………………………………………………………
ஒரு நாய் பற்றிய குட்டிக்கதை படித்தேன்.
அதில் கடைசியில் சொன்ன கருத்து என்னைக்
கவர்ந்த்து.
அது............
ஒரு நாய் நமக்கு ஒரு குருவாக இருந்து
என்ன போதிக்கிறது?!.....
அன்புக்குரியவர்கள் வீட்டுக்கு
வரும்போது ஓடிச் சென்று அவர்களுக்கு
வரவேற்பளியுங்கள்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்;வேறு
ஒன்றாக பாசாங்கு செய்யாதீர்கள்
நீங்கள் தேடுவது ஆழப்புதைந்து
இருந்தாலும் தோண்டி எடுக்காமல் விடாதீர்கள்
அன்புக்குரியவர் கவலை/சோகத்தில்
இருக்கும்போது மௌனமாக அருகில் அமர்ந்து,உங்கள் தொடுகையால் ஆறுதல் கூறுங்கள்.
ஆம்!உண்மையாக அன்பு செலுத்துவது எப்படி
என்று நாய்க்குத் தெரியும்;நமக்கு?!
.......................................................................
பல ஆண்டுகளுக்கு முன் நா.பா.அவர்களின்
“கங்கை இன்னும் வற்றிவிடவில்லை” என்ற சிறுகதை இப்போது நினைவுக்கு வருகிறது.
அதில் ஒரு விபத்தின் காரணமாக ரயில்
ஒன்று மணிக்கணக்கில் ஒரு நிலையத்தில் நின்று விடுகிறது.
அனைவருக்கும் பசி.
எதோ ஒரு நிறுவனம் இலவச உணவுப் பொட்டலம்,ஒருவருக்கு
ஒன்று,வழங்க,அனைவரும் அடித்துப் பிடித்து வாங்குகிறர்கள்.
ஒரு கிராமவாசி பொட்டலம் வாங்கி
வரும்போது ஒரு கர்ப்பிணிப் பெண் பசியுடன்
அவன் கைப் பொட்டலத்தையே பார்த்தவாறு அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான்.
அதை அவளிடம் கொடுத்துச் செல்கிறேன்.
சிறிது நேரத்தில் உணவு வழங்கும் இடத்தில்
ஒரே சப்தம். யாரையோ அனைவரும் அடிக்கிறார்கள்.
அங்கு சென்று பார்த்து வந்தஒருவர்
சொல்கிறார்”யாரோ ஒருத்தன் ஒரு பொட்டலம் வாங்கிவிட்டு மீண்டும்
வாங்கவந்தானாம்,அடித்து விட்டார்கள்!”
இது போன்ற சிலரிடம் மனிதம் இருக்கும் வரை,அதுவே
நம் நாகரிகமாக இருக்கும் வரை கங்கை வற்றாது என முடியும் கதை.
ஆம்!பேரிடர்கள் நேரும் சமயத்தில் இது
போன்று மனிதம் வெளிப்படும்.
தன் குதிரைகள்,கடை எல்லாம் இழந்தபோதும் சில
பயணிகளைக் காட்டுப்பாதையில் அழைத்துச் சென்று காப்பாற்றிய ஒரு மனிதரைப் பற்றி
இன்று படித்தேன்.
நன்றிக்கடனாக அவரைச் சென்னைக்கு அழைத்து
வந்து அவருக்கு மறுவாழ்வு தர முயலும் அந்தப் பயணிகளைப் பற்றியும் படித்தேன்.
கங்கை இன்னும் வற்றிவிடவில்லை!
.................................................................
லிமெரிக்(சிந்துகவி!)எழுதி ரொம்ப நாளாச்சு.இதோ ஒரு லிமெரிக்…………
”பதிவர் சந்திப்புக்குப் போனாரு சூசை
பலரும் பராட்டுவாங்கன்னு ஆசை
போற வரைக்கும் தெரியலை
அவர் பதிவை யாரும் அறியலை
பாவம் தொங்கிப் போச்சு இப்ப அவர் மீசை”
லிமெரிக்கின் நோக்கமே நகைச்சுவைதான் என்பதை
மனதில் கொள்ளுங்கள்!