தொடரும் தோழர்கள்

திங்கள், மே 30, 2011

தூண்டில் மீன்கள்

மீன்!
வலை வீசியும் பிடிக்கலாம்
இல்லை தூண்டில் போட்டும் பிடிக்கலாம்!

மொத்தமாய்ச் சிக்கும் மீன் வலை வீசினால்!
ஒற்றையாய்த் தான் கிடைக்கும் தூண்டிலில்!

மீன் கூட்டத்தில் வலைவீசி ஒரு வீச்சில்
வலை நிறைய அள்ளுகிறான் வலைஞன்!
தூண்டில் வீசி காத்திருக்கிறான் கொக்கு போல்
உறு மீன் வரவுக்காகத் தூண்டில்காரன்!

வலை மீன் செல்கிறது சந்தைக்கு ஏனெனில்
வலைஞனுக்கு அது தொழில்!
தூண்டில் மீன் செல்கிறது வீட்டு அடுப்புக்கு
இல்லையேல் மீண்டும் நீர் நிலைக்கு!
ஏனெனில் அவனுக்கு அது உணவு தேடல்
இன்றேல் பொழுதுபோக்கு.

வலை மீன் விரும்பி வந்து வலையில் விழுவதில்லை!
தூண்டில் மீன் கொக்கி இரைக்காய்த் தானே மாட்டுகிறது!

கடல் மீன்,ஆற்று மீன்,குளத்து மீன்,ஏரி மீன்
என்று எங்கெல்லாம் மீன்?

கடல் மீனைப் பிடிக்கத் தூண்டில் பயனில்லை
மற்ற மீனுக்கு வலையும் வீசலாம்!

வஞ்சிரம்,கொடுவா,வாளை,இறால் என்று
கொஞ்சமா மீன் வகைகள் நீர் நிலையில்!

எல்லா மீனும் உணவாகப் போவதில்லை!

கண்ணாடிப் பெட்டிக்குள் குறுக்கும் நெடுக்குமாய்
என்னாளும் நீந்தி ஓடும் சில மீன்கள்!
சுதந்திரத்தை இழந்த பின்னும் சுதந்திரமாய் இருப்பதாய்!

பெண்களின் கண்களுக்கு உவமையாய்ச் சொல்வர் மீனை
உண்மையில் உவமை சரி ஆனாலும் வேற்றுமை-
மீன் தூண்டிலில் மாட்டும்,
கண் தூண்டில் போடும்!


நட்சத்திரங்களை விண்மீன்கள் என்றுரைப்பர்.
வானப் பெருங்க்கடலில் நீந்துவதாலா?

பெண்ணின் கண்ணுக்கும் விண்மீனுக்கும் ஒப்பிடுவான் செகப்பிரியர்
ரோமியோ சொல்கிறான் ஜூலியட் கண்கள் பற்றி


"வானில் ஜொலிக்கும் இரு விண்மீன்களுக்கு வெறோதோ வேலையாம் ;
அவள் கண்களை தங்களுக்குப் பதிலாய் அங்கு வரச் சொல்கின்றன!
அவ்வாறு கண்கள் அங்கும்,விண்மீன்கள் அவள் முகத்திலும் இருந்தால்?
அவள் கன்னத்தின் ஒளியில் விண்மீன்கள் ஒளியற்றுப் போகும்,
பகலொளியில் விளக்கொளி பயனற்றுப்போவது போல்.
அவள் கண்களால் வான முழுவதும் ஒளி மயமாய்த் தகதகக்க
பறவைகள் குரலெழுப்பும் வானம் வெளுத்ததென்று!"

(ரோமியோவும் ஜூலியட்டும்)


எத்தனையோ சொல்லலாம் இத்தகைய மீன் பற்றி!
அத்தனைக்கும் இடமில்லை இனி நேரமுமில்லை/

ஏதேனும் சொல்வதற்குப் பாரதியே அடி தருவான்
“வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே யிடமிருந்தாற் கூறீரோ? “

புதன், மே 25, 2011

18 + தகவல்கள்!

1) பிறப்பிலிருந்து நமது கண்கள் ஒரே அளவில்தான் இருக்கின்றன!ஆனால் காதுகளும்
மூக்கும் வளர்கின்றன!

2) பூனையின் ஒவ்வொரு காதிலும் 32 தசைகள் உள்ளன!

3) தங்க மீனுக்கு ஞாபக சக்தி அளவு மூன்று நொடிகளே!

4) மீன்களில் சுறா மட்டுமே இரண்டு கண்களையும் சிமிட்டக் கூடியது!

5) நத்தையால் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து உறங்க முடியும்!

6) நெருப்புக் கோழியின் கண் அதன் மூளையை விட அளவில் பெரியது!

7) 1865 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் ஒரு பௌர்ணமி கூட வரவில்லை!

8) கத்தரிக் கோலைக் கண்டு பிடித்தவர் லியனார்டோ டி வின்சி!

9) வேர்க் கடலை டைனமைட் செய்ய உபயோகப் படும் பொருள்களில் ஒன்று!

10) 1932 ஆண்டு நயகாரா நீர் வீழ்ச்சி உறைந்து போய் விட்டது;அந்த அளவு குளிர்!

11) நயகாரா நீர் வீழ்ச்சியைக் கண்டு பிடித்தவர் லூயி ஹென்னெபின்.

12) வாகுவம் க்ளீனரைக் கண்டு பிடித்தவர் ஹ்யூபெர்ட் பூத்


13) ரப்பர் பேண்டுகளை குளிர் பதனப் பெட்டியில் வைத்தால்,அதிக நாள் பயன்படும்!

14) குழந்தைகள் முழங்கால் மூட்டுக் கவசம் இன்றிப் பிறக்கின்றன.2-6 வயதுக்குள்
தான் அது தோன்றுகிறது.

15) பெண்கள் ,ஆண்கள விட இரண்டு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்!

16) ஆஸ்திரேலியாவைக் கண்டு பிடித்தவர் ஜேம்ஸ் குக்.

17) எறும்புகள் தூங்குவதில்லை.

18) மரங்கொத்தி விநாடிக்கு இருபது முறை கொத்தும்.

19) கரப்பு தலையின்றி ஒன்பது நாள் வரை உயிர் வாழும்.

மொத்தம் 19 தகவல்கள்--அதாவது 18+1 !!

செவ்வாய், மே 24, 2011

யார் ஆட்சி?!

இந்தியாவில் இப்போது யார் ஆட்சி?

தெற்கில் அம்மா (ஜெயலலிதா)

கிழக்கில் அக்கா(didi) (மம்தா பேனர்ஜி)

வடக்கிலும் அக்கா(behanji) (மாயாவதி)

தலைநகரில் அத்தை (ஷீலா தீக்‌ஷித்)

நடுவில் அன்னை (மேடம் சோனியா காந்தி)

உச்சியில் பாட்டி (ஜனாதிபதி-ப்ரதிபா பாட்டீல்)

வீட்டில் மனைவி (அவரவர் மனைவியின் பெயர்)

இருந்தும் பலர் சொல்கிறார்கள் “இது ஆண்களின் ராஜ்ஜியம்”

என்ன அநியாயம்?!

(ஒரு கணவனின் புலம்பல்!)

திங்கள், மே 23, 2011

கோபம் என்னவெல்லாம் செய்யும்?-ஒரு குட்டிக் கதை!

சென்ற பதிவில் கோபம் பற்றி எழுதியிருந்தேன்.

கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஒரு ஜாலியான குட்டிக் கதை, நான் பள்ளி நாட்களில் கேட்டது , என் நினைவுக்கு வருகிறது.

ஓர் ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர்.வறுமை நிறைந்த வாழ்க்கை .

ஒரு நாள் அக்கணவன் அரசரமரத்தடிப் பிள்ளையார் முன் அமர்ந்து தன் நிலை குறித்துப் புலம்பிக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கு ஒரு சாது வந்தார்.அவனைப்பார்த்து என்ன விஷயம் என்று கேட்க அவன் தன் வறுமை நிலையைச் சொன்னான்.

சாது அவனிடம் மூன்று தேங்காய்கள் கொடுத்துச் சொன்னார்”.உனக்கு வேண்டியதைக் கேட்டு ஒரு காயை உடைத்தால்,அது உடனே கிடைக்கும். கவனமாகப் பயன் படுத்து ” என்று.

அவன் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான்.மனைவியிடம் தேங்காய்களைக் காட்டி செய்தியைச் சொன்னான். அவனுக்கு ஒரு பெரிய மாளிகை வேண்டும் என்று ஆசை. எனவே அதுவே முதலில் கேட்கலாம் எனச் சொன்னான்.

மனைவிக்கு நகை வேண்டுமென்று ஆசை;எனவே அதுவே முதலில் கேட்க வேண்டும் என்று சொன்னாள்.

இருவருக்கும் விவாதம் வலுத்தது.சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தபோது அவன் அதிகக் கோபமடைந்து,கையில் இருந்த தேங்காயைத் தூக்கிப் போட்டு உடைத்துக் கத்தினான் ”மயிர்தான் கிடைக்கும் போடீ” என்று.

உடனே எங்கு பார்த்தாலும் முடி;அவர்கள் உடலெல்லாம் முடி.வீடு முழுவதும் முடி.என்ன செய்வது.ஒரே வழிதான்.

இன்னொரு தேங்காயை உடைத்துக் கொண்டே சொன்னான்” முடியெல்லாம் போகட்டும்”

உடனே எல்லா முடியும் போய்விட்டது.இருவர் தலையிலும் இருந்த முடியும் போய் வழுக்கைத்தலை ஆகி விட்டது. மீண்டும் பிரச்சினைதான். இப்போது என்ன செய்வது?

மூன்றாவது தேங்காயை உடைத்துக் கொண்டே சொன்னான்”முன்பு இருந்த முடியெல்லாம் வந்து, பின் வந்த முடியெல்லாம் போகட்டும் “ என்று.

நிலைமை முன்பு போலவே ஆயிற்று.

அவர்கள் வறியவர்களாகவே இருந்தனர்.

மூன்று தேங்காய் உடைத்தும் எந்த மாற்றமும் இல்லை.

என்ன காரணம்?

இக்கதை சொல்லும் நீதிகள் என்ன?

உங்கள் கருத்துக்களுக்குக் காத்திருக்கிறேன்.

ஒழுங்காகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போங்கள்(ஓட்டும்தான்).

இல்லையேல் உங்களுக்காக ஒரு தேங்காய் உடைத்து விடுவேன்,ஜாக்கிரதை!!

வெள்ளி, மே 20, 2011

கோபம் கொல்லும்;கோபத்தைக் கொல்லுங்கள்!

பாரதி தன் புதிய ஆத்திசூடியில் சொல்கிறான்,"ரௌத்திரம் பழகு".

கோப்படுவது நல்லதா?இல்லையென்பது பதிலென்றால், பாரதி ஏன் அவ்வாறு சொன்னான்?

பழங்காலக் குரு குலங்களில் போதிக்கப்பட்ட பாடம"ஸத்யம் வத,க்ரோதம் மா குரு"என்பது.இதன் பொருள்"உண்மையே பேசு,கோபம் கொள்ளாதே".

அப்படியானால் கோபம் என்ற உணர்வே தேவையில்லையா?

கோபம் இரண்டு வகை.ஒன்று தேவையற்ற,பலனற்ற கோபம்.நமது சக்தியை வீணாக்கும்,மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கோபம்.

மற்றது நியாயமான கோபம்."சிறுமை கண்டு பொங்குவாய்" என்று பாரதி பாடினானே,அந்தக் கோபம்.

குழந்தையின் நலனுக்காகத் தாய் படும் கோபம்;

மாணவனின் உயர்வு கருதி ஆசிரியர் அடையும் கோபம்.

அலுவலகத்தின் வளர்ச்சிக்காக அதிகாரி கொள்ளும் கோபம்.

சமூக அவலங்களைக் கண்டு எழும் தார்மீகக் கோபம்.

ஆனால் ஆக்க பூர்வமாக இல்லாமல் அழிவு பூர்வமான கோபம் இருக்கிறதே,அது மற்றவர்களுக்கு மட்டுமன்றி,கோபப் படுபவருக்கும் தீமையே விளைவிக்கும்.

ஒரு அறிஞரிடம் அடிமை ஒருவன் இருந்தான்.ஒரு நாள் அவன் கை தவறிச் சூடான தேனீர் நிறைந்த கோப்பையை அறிஞரின் மீது போட்டு விட்டான்.பயந்து போன அடிமை நடுங்கிக் கொண்டே சொன்னான்,"சொர்க்கம் கோபத்தை அடக்குபவரகளுக்கு உரியது".

அறிஞர் சொன்னார்"நான் கோபமடையவில்லையே"

அடிமை மீண்டும் சொன்னான்"சொர்க்கம் தவறு செய்தாரை மன்னிப்பவர்க்கு உரியது."

அறிஞர் சொன்னார்"நான் உன்னை மன்னித்து விட்டேன்."

அடிமை தொடர்ந்தான்,"எல்லாவற்றுக்கும் மேலாக சொர்க்கம் இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்பவர்க்கு உரியது."

அறிஞர் சொன்னார்,"நான் உன்னை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறேன்."

இது நமக்கெல்லாம் பாடம்.

(சுவாமி பித்தானந்தாவின் வெளி வராத உரைகளிலிருந்து!)

செவ்வாய், மே 17, 2011

வெற்றி ஊர்வலம் போகிறது!

தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளருடன்,திறந்த மகிழ்வுந்தில் அமர்ந்து,வெற்றி ஊர்வலம் போன அனுபவம் உங்களுக்குண்டா?

இருந்தால் நீங்கள் என்னோடு சேர்ந்தவர்!

இது நடந்தது 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில்.

அப்போது எனக்கு 7வயது முடிந்து 8ஆம் வயது நடந்துகொண்டிருந்தது.

சாத்தூரில் வசித்து வந்தேன்.

அந்த ஆண்டு நடந்த தேர்தலில் சட்டசபைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் திரு.எஸ்.ராமசாமி நாயுடு அவர்களும்,பாராளு மன்றத்துக்குத் திரு. காமராசர் அவர்களும், அபேட்சகர்கள்(அந்நாளில்,சட்டப் பேரவை, நாடாளுமன்றம், வேட்பாளர் என்ற சொல் வழக்குகள் கிடையாது!)

எதிர்க்கட்சி என்று எதுவும் கிடையாது.எதிர்த்து நின்றவர்கள் சுயேட்சை அபேட்சகர்கள்.

என்.ஆர்.கே.கே.ராஜரத்தினம் என்ற தொழிலதிபர்,கூஜா சின்னத்திலும், பா.ராஜாமணி என்பவர் பூ சின்னத்திலும் எதிர்த்துப் போட்டியிட்டனர்.

கான்கிரஸ் கட்சியின் சின்னம்-ரெட்டைக் காளை!

இது எப்படி நடந்ததோ தெரியாது!நாங்கள் வசித்த பகுதியில் இருந்த காங்கிரஸைச் சேர்ந்த இளைஞர்கள்,என்னைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தினர்.

விளையாட்டாக ஆரம்பித்தார்களோ என்னவோ,தெரியாது.ஆனால் எனது பிரசாரம் மக்களின் ஆதரவைப் பெறவே என்னையே தினமும் முக்கியப் பிரசாரகனாக ஆக்கி விட்டனர்.

கையில் மெகாஃபோனுடன், தினம் தெருத்தெருவாகச் சென்று.”vote for congress, எஸ்.ஆர்.நாயுடுவுக்கு ஓட்டுப் போடுங்கள்,உங்கள் ஓட்டு ரெட்டைக் காளைக்கே”
என்ற கோஷங்களுடன் என் பிரசாரம் சூடு பிடித்தது!

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,ராஜரத்தினத்துக்காக, காங்கிரஸை எதிர்த்து,என் அண்ணன்,என்னை விட 11 வயது மூத்தவர், தேர்தல் பணியில் ஈடுபட்டார்.

சாத்தூரின் எல்லா வீதிகளிலும் நான் அறியப்பட்ட ஒரு முகமானேன்!

“ஹெட் மாஸ்டர் பேரனைப் பாரு எப்படிப் பேசுது” என்று எல்லோரும் வியந்தனர்!

காங்கிரஸ் வென்றது.

திரு எஸ்..ஆர்.நாயுடு அவர்கள் திறந்த காரில் சாத்தூர் வீதிகளில் வெற்றி ஊர்வலம் புறப்பட்டார். அங்கிருந்த தொண்டர்கள் சிலர் அவரிடம் என்னைப் பற்றிச் சொல்ல அவர் என்னையும் காரில் ஏற்றி விடச் சொன்னார்.

காரில் அவர் அருகில் நான் அமர்த்தி வைக்கப் பட்டேன்! வழியில் போடப்பட்ட மாலைகளில் சிலவற்றை அவர் என் கழுத்தில் அணிவித்தார்!

மக்கள் சில இடங்களில் அவருக்குக் குளிர் பானங்கள் வழங்கும்போது எனக்கும் வழங்கினார்கள்!திருஷ்டி கழித்தார்கள்!

காரில் போகும் போதே எனக்கு உறக்கம் வர ஆரம்பித்தது!

சில தெருக்களைக் கடந்த பின் அவர் தொண்டர்களை அழைத்து ஏதோ சொல்ல,அவர்கள் என்னைக் காரினின்றும் இறக்கினார்கள்.சில தொண்டர்கள் என்னை மணி சங்கர் பவன் என்ற ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, இனிப்பு(மைசூர்பாகு),மற்றும் தோசையெல்லாம் வாங்கிக் கொடுத்தனர்.

இரவு வைப்பாற்று மணலில் நடந்த விருந்துக்கு நான் செல்ல இயலவில்லை!

மறக்க முடியுமா அந்த வெற்றி ஊர்வலத்தை!

சனி, மே 14, 2011

ஜெய பேரிகை கொட்டடா!கொட்டடா!

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
பலர் கவலை ஏதுமின்றி இருப்பார்!
- - - -
இந்நாளில் என் பழைய கவிதைகள் இரண்டை மீள் பதிவாக அளிப்பது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்!
- - - - - - - - - - - -

இதோ அவை!

உதயசூரியனும்,இரட்டை இலையும்! (06-11-2010 தேதியிட்ட பதிவு)
- - - - - - - - - - - - - - -
அம்மா அழைத்தார்
”உடனே வா தோட்டத்துக்கு” என்று
சிறிது தாமதித்தேன்
”வந்து பார்” என்று மீண்டும் அழைப்பு.
கை வேலையெல்லாம் காக்கப் போட்டு விரைந்தேன்.
தோட்டம் சென்றேன்.
ஆஹா! என்ன காட்சி!.
கம்பளம் விரித்தது போல்
தரையெங்கும் இலை மூடல்.
தரையெங்கும் கொட்டிக் கிடந்தது இலை!
நிமிர்ந்து பார்த்தேன்
மொட்டையாய் இலயுதிர்த்து நின்றது மரம்!
ஆயினும் சில நாட்களில்
மீண்டும் இலைகள் துளிர்க்கும்
இதுவன்றோ இயற்கை நியதி?
இருள் பிரிந்தும் பிரியா அக்காலையில்
மீண்டும் மரத்தைப் பார்த்தேன்.
அதோ ஒரிரு இலைகள் அசைகிறதோ?
அவை விழக்காத்திருக்கும் இலைகளா?
அன்றி விழுந்த பின் முளைக்கும் துளிர்களா?
உதித்தான் சூரியன்
மெள்ளப் பரவியது வெளிச்சம்
உதய சூரியனின் ஒளியிலே
பளிச்சென்று தெரிந்தது அந்தத்
துளிர்த்து வந்த இரட்டை இலை!
சூரியாஸ்தமனம்!(கவிதை) (01-03-2011 தேதியிட்ட பதிவு)
- - - - - - - - - - - - -
”அடிவானத் தேயங்கு பரிதிக் கோளம்
…………..
………….
பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
என்னடீயிந்த வன்னத்தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
----------------------(பாஞ்சாலி சபதம்)

ஆம் அய்யா பாரதி அத்தனையும் சரி
மலை வாயில் சூரியன் விழும் நேரம் வந்தாச்சு!

மெல்ல மறைகின்றான் கதிரவன் அங்கே!!

படர் முகில் வடிவங்கள் என்ன என்ன அவற்றின்
சுடர் விடும் வண்ணங்கள் என்ன என்ன!
சிவந்த வானத்தில் கரு நிற முகில்கள்!

சிவப்பும் கருப்பும் என்னவொரு கலவை!

மஞ்சள் வண்ணத்தில் துண்டு துண்டாய்
பஞ்சுப் பொதி போன்ற மேகங்கள்

அதோ ஒரு மேகம்!மாம்பழம் போல் தோற்றம்!
சிறுத்தை பாய்வது போல் மற்றுமொரு மேகம்!

மறைகின்ற சூரியனை தடுக்கவா முடியும்
வெறும் கை கொண்டு நிலைமையை மாற்றவா முடியும்!

சுட்டெரிக்கும் சூரியன் மறைந்திடுவான்

கொட்டு முரசே! குளிர்ந்த நிலவொளியில்

பாலகர்கள் பம்பரம் விளையாட தீப்பந்த ஒளியினிலே

அம்மா பரிமாற

இரட்டை இலை போட்டு நிலாச் சோறு நடக்குதென்று!

- - - - - - - - -
எனது 12-05-2011 தேதியிட்ட பதிவில் நான் சொன்னது-
//முடிவுகள் அறிவிக்கும் தினத்தன்று கோசார நிலைமை----ராசி நாதன் சூரியன் ராசிக்கு 9 இல் உச்சம்;ராசிக்கு யோகன் செவ்வாய்,ராசிக்கு 9 ஆம் வீடாகிய சொந்த மேஷத்தில்,ராசிக்குத் தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன்,ராசிக்கு 9 இல்,(தர்ம கர்மாதிபதி யோகம்),ராசிக்குத் தன லாபாதிபதியாகிய புதன்,ராசிக்கு 9 இல்,அனைத்துக்கும் மேலாக,ராசிக்குப் பஞ்சமன் குரு 9 இல்.;வேறென்ன வேண்டும்,வெற்றியை அளிக்க!//

//.எனவே ஆட்சி அமைப்பது நிச்சயம் //

கேப்டனுடன் கூட்டு சேர்ந்ததனால் இந்த இமாலய வெற்றி சாத்தியமாயிற்று!

எனவே கருப்பு ராகுவின் பலம் நிச்சயம் துணை செய்திருக்கிறது!
அம்மாவுக்கு வாழ்த்துகள்!

மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்திருக்கிறார்கள்-உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து!

அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்!

மீண்டும் வாழ்த்துகள்!

வியாழன், மே 12, 2011

தேர்தல் முடிவுகள்-ஜெ என்ன ஆவார்?

இது ஒரு மாதத்துக்கு முன்பே எழுதிச் சேமித்து வைத்த பதிவு.

வெளியிடலாமா,வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் இன்றே கடைசி வாய்ப்பு என்பதால் வெளியிடுகிறேன்.

கணிப்புப் பலிக்கா விட்டால் கவலையில்லை-நான் ஒன்றும் பிரபல சோதிடன் இல்லை!

பலித்தால் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்,நானும் ஒரு சோதிடன் என்று!

இதோ கணிப்பு!

செல்வி ஜெயலலிதாவின் ஜாதகம்-
---------------------------------------------

லக்னம்-மிதுனம்.

நட்சத்திரம்-மகம்,3ஆம் பாதம்.

ராசி- சிம்மம்

2இல் சனி,3இல் சந்திரன்,செவ்வாய்,5இல் கேது,7இல் குரு,9இல் சூரியன்,புதன்,10இல் சுக்ரன்,11இல் ராகு.

நடப்பு ராகு தசை,சந்திர புக்தி-29-07-2011.

தசா நாதன் ராகு சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் நிற்கிறார்.

புக்தி நாதன் சந்திரன் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் நிற்கிறார்.

ராகு தசை 16-08-2012 இல் முடிந்து குரு தசை ஆரம்பமாகிறது.

குரு கேதுவின் மூல நட்சத்திர சாரம் பெற்றுள்ளார்.

கோசாரத்தில் சனி ராசிக்கு 2 இல்,--ஏழரை ஆண்டுச் சனியின் கடைசிப் பகுதியில் நிற்கிறார்.

குரு ராசிக்கு 8 இல் நிற்கிறார்.

தசா நாதன், கறுப்பு நிற ராகு ,உபஜய ஸ்தானத்தில், 10 இல் உச்சமடைந்த 5.12 அதிபதியான சுக்கிரனின் சாரத்தில் நிற்பது நன்மையே.லக்னாதிபதியான புதனுக்கும் ராகுவுக்கும் ஒத்துப் போகும்.


புக்திநாதன் சந்திரன் ,முயற்சி ஸ்தானமாகிய 3 இல் ,5இல் நின்ற கேதுவின் சாரம் பெற்றிருக்கிறார்.கேதுவுக்கு இடம் தந்த சுக்கிரன்,10 இல் உச்சம்.

தசா நாதன் ராகு,புக்திநாதன் சந்திரனையும்,தனக்கு இடம் தந்த செவ்வாயையும் பார்க்கிறார்.எனவே செவ்வாயின் முழுப் பலன்களையும் தானே எடுத்துக் கொண்டு ஜாதகிக்கு அளிப்பார்.

தசா நாதன் ராகுவையும்,புக்தி நாதன் சந்திரனையும் 7 இல் சொந்த வீட்டில் நின்ற
குரு பார்க்கிறார்.

தேர்தல் நடக்கும் நேரம் குரு கோசார ரீதியில் ராசிக்கு 8இல் இருப்பது நன்மையல்ல.பல தடங்கல்கள்,இடைஞ்சல்களுக்குக் காரணமாகும்.ஆனால்,வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதிக்கு முன்பே,
மே 8 ஆம் தேதி கோசாரத்தில் குரு மேஷத்துக்கு நகர்ந்து நன்மை தரும் இடத்துக்குப் போகிறார்.

முடிவுகள் அறிவிக்கும் தினத்தன்று கோசார நிலைமை----ராசி நாதன் சூரியன் ராசிக்கு 9 இல் உச்சம்;ராசிக்கு யோகன் செவ்வாய்,ராசிக்கு 9 ஆம் வீடாகிய சொந்த மேஷத்தில்,ராசிக்குத் தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன்,ராசிக்கு 9 இல்,(தர்ம கர்மாதிபதி யோகம்),ராசிக்குத் தன லாபாதிபதியாகிய புதன்,ராசிக்கு 9 இல்,அனைத்துக்கும் மேலாக,ராசிக்குப் பஞ்சமன் குரு 9 இல்.;வேறென்ன வேண்டும்,வெற்றியை அளிக்க!

தேர்தல் தினத்தன்று குரு அனுகூலமாக இல்லை.எனவே ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றாலும்,கருப்பு ராகுவின் பலம் தேவைப் படும் என நினைக்கிறேன்.

அடுத்த தசாநாதனான குரு கேது சாரமே பெற்றிருப்பதால்.கேதுப் ப்ரீதி அவசியமாகிறது.

அவசியம் காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும்.

செவ்வாய், மே 10, 2011

இது நட்பா,காதலா?-தொடர்ச்சி

காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு வெகு நேரம் முன்பாகவே விமான நிலையம் சென்று தவிப்புடன் காத்திருந்தேன்.விமானம் தரையிறங்கிய அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் வெளி வரும் மனிதர்களைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதோ,அவள் வந்துவிட்டாள்.அவள்தான். இடைப்பட்ட காலம் அவள் உடலைச் சிறிது சதைப் பிடிப்பாக்கியிருந்தது. அதனால் அவள் அழகு கூடியிருந்ததே தவிரக் குறையவில்லை. அவள் நடையில் நளினமும், கம்பீரமும் கலந்து இருந்தது.எவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு நளினம்,எவரையும் மரியாதையுடன் நோக்கவைக்கும் ஒரு கம்பீரம்.அவளும் என்னைப் பார்த்து விட்டாள்.அங்கிருந்தே என்னைப் பார்த்துக் கையசைத்தாள்.

”ஹாய்,கிருஷ்” என்றபடியே என்னை நெருங்கி என் கையைப் பிடித்தாள்.எனக்கு அவளது முதல் தொடுகை நினைவுக்கு வந்தது.”ஹலோ,மேரி” என்றபடியே அவள் கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டேன்.இருவரும் என் மகிழ்வுந்தை!(கார்) நோக்கி நடந்தோம்.

கார் புறப்பட்டதும் அவள் கேட்டாள்”இப்போது எங்கே போகிறோம்,கிருஷ்?”

“என் வீட்டுக்கு.ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதை விட அதிக வசதியை உனக்கு நான் செய்து தருகிறேன்”சிரித்துக் கொண்டே சொன்னேன்.

”உன் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் ஒரு இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை.”-மேரி

” யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை.வந்து பார்.”என் பதில்.காரில் சென்று கொண்டிருக்கும்போதே நான் கேட்டேன்”மேரி,மிஸ்டர்.மேரி என்ன செய்கிறார்?”

அவள் சிரித்தாள்”நான் இன்னும் மிஸ்தான்”

” ஏன் மேரி?”-அவள் பதிலளித்தாள்”சில கேள்விகளுக்குப் பதில் கிடையாது அன்பு நண்பரே.அது சரி, உங்கள் மறுபாதி என்ன செய்கிறார்?குழந்தைகள்?”

“பொறு,பொறு.வீட்டுக்குப் போனதும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.”

வீட்டை அடையும் வரை என் குடும்பம் பற்றிய அவளது கேள்விகளுக்குப்பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினேன்.அவள் ஜெ.என்.யு.டில்லியில் பணி புரிவதையும் ஒரு கருத்தரங்குக்காக சென்னை வந்திருப்பதையும் அறிந்து கொண்டேன்.நான் வங்கிப்பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று தற்போது ஒரு”தொழில்துறை-வங்கிக்கடன்” ஆலோசகனாக இருப்பதையும் பற்றிக் கூறினேன்.

என் குடியிருப்பை அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு என் “ஃப்ளாட்”டை அடைந்து பூட்டிய கதவைத் திறக்க சாவியை எடுத்தபோது அவள் கேட்டாள்”என்ன, கிருஷ்,வீட்டில் யாரும் இல்லையா?”

உள்ளே நுழைந்துகொண்டே சொன்னேன்”இல்லை மேரி.இப்போது நான் மட்டும்தான்”

“அப்படியென்றால்–?”

” இல்லை,மேரி.நீ நினைப்பது போலில்லை.அவள் இப்போது இல்லை பத்தாண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டாள்.என் இரு பையன்களும் பிலானியில் படிக்கிறார்கள்.எனவே இப்போது நான் தனி.”

அவள் என் தோளில் கை வைத்து ஆறுதலாக அழுத்தினாள்,”வருந்துகிறேன், கிருஷ்.”

"விடு மேரி .எல்லாம் பழைய கதை.”

அவளை அவளுக்கென்று ஒதுக்கிய அறைக்கு அழைத்துச்சென்றேன்.”இது உன் அறை.எல்லா வசதிகளும் உள்ளது”.

“சரி கிருஷ்.நான் என்னைச் சிறிது புதிப்பித்துக் கொண்டு புறப்படுகிறேன்.”

” நான் உன்னை அங்கு கொண்டு சேர்க்கிறேன். நீ இங்கு இருக்கும் வரை நான்தான் உனக்கு வாகன ஓட்டுனர்.”

சிறிது நேரத்தில் அவள் புறப்பட்டாள். பல்கலைக்கழக வளாகத்தில் அவளை இறக்கி விட்டேன்.”கிருஷ்,மாலை சந்திப்போம்.நிறையப் பேசலாம் ”

வீட்டுக்குத் திரும்பினேன்.எந்த வேலையிலும் கவனம் செல்லவில்லை.மாலையின் வருகைக்காகக் காத்திருந்தேன்.

மாலை 6 மணி அளவில் மேரியிடமிருந்து ஃபோன் வந்தது.இன்னும் அரை மணி நேரத்தில் புறப்படப்போவதாகத் தெரிவித்தாள்.நான் அங்கு சென்று அவளைஅழைத்து வருவதாகக் கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றேன்.அரங்கின் வாசலிலே மேரி நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி ஐந்தாறு பேர் நின்று அவளுடன் பேசிக் கொண்டிருந்தனர்.என்னைக் கண்டதும் மேரி அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.அவர்கள் மறுநாள் அவளது உரைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினர்.நான் மேரியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.காஃபி அருந்தி விட்டுப் பல விஷயங்கள் பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம். இரவு உணவுக்காக வெளியே சென்றோம்.அவள் விருப்பப்படி சுவையான தென்னிந்திய உணவு கிடைக்கும் உணவகத்துக்குச் சென்றோம். மேரிக்கு அந்த உணவு மிகவும் பிடித்திருந்தது.

வீடு திரும்பிய பின் சிறிது நேரம் வரவேற்பறையில் சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.அவளிடம் நான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்கத் தயங்கிக் கொண்டே இருந்தேன்.திடீரென்று மேரி கூறினாள்”பால்கனியில் அமர்ந்து பேசுவோமே, கிருஷ்”

பால்கனிக்கு வந்தோம்.அவள் விருப்பப் படித் தரையில் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்துகொண்டோம். அவள் கண்கள் எங்கோ தொலைவானத்தில் லயித்திருந்தன . ”இப்படித்தான் நாங்கள் குடும்பமாக பால்கனியில் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம்.அது ஒரு காலம்,கிருஷ்”-அவள் சொன்னாள்

நான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவள் கடந்தகால நினைவுகளில் சஞ்சரிப்பதைப் புரிந்து கொண்டேன் . இதுதான் சரியான நேரம்;கேட்டு விடலாம்

“மேரி,உன்னிடம் ஒன்றுகேட்கவேண்டும். கேட்கலாமா?”

”உம்”எங்கோ லயித்தபடி மேரி.

“திடீரென்று என் தொடர்பை ஏன் துண்டித்தாய் மேரி.?”

அவள் நிகழ் காலத்துக்கு வந்தாள்.என்னையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் சிறிது கலங்கியிருப்பது போல் தோன்றியது.பின் சொன்னாள்

”மன்னித்துவிடு,கிருஷ்.இதை நீ கேட்டு விடுவாயோ எனப் பயந்திருந்தேன்.கட்டாயம் கேட்க வேண்டுமே எனத் தவித்திருந்தேன். கேட்டால் எப்படிப் பதில் சொல்வது எனத் திகைத்திருந்தேன்.அந்த நேரத்தில், ஒரு அதீத சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது அதற்கு மாற்றாக எனக்கு ஒரு துணை தேவைப்பட்டிருக்கிறது-காற்றில் ஆடும் கொடிக்கு ஒரு கொம்பு தேவைப் படுவது போல்.உன்னிடம் நான் எதிர் பார்த்திருந்தது அதுவாகத்தான் இருக்க வேண்டும்.நமது நட்பு வேறு விதமாக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.அந்த நிலையில் உன் கடிதம் எனக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.அது கோபமாக மாறி உன் தொடர்பைத் துண்டிக்கக் காரணமாகி விட்டது.காலம் செல்லச் செல்ல என் கோபம் அர்த்தமற்றது என்பதை உணர்ந்தேன்.நீ எப்போதுமே ஒரு மிக நல்ல நண்பனாகத்தான் இருந்திருக்கிறாய்.தவறு என்னுடையதுதான்.”

நான் அவளை இடை மறித்தேன்.”போதும் மேரி.நடந்ததைப் பற்றி இனிப் பேச வேண்டாம். இந்தக் கணம் நம் நட்பின் கணம்.அதற்காக வாழ்வோம்”

” நன்றி கிருஷ்.மனம் லேசாகி விட்டது.இந்தக் கணத்துக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.” பின் கேட்டாள் ”உன் மடியில் தலை வைத்துச் சிறிது நேரம் படுத்துக் கொள்ளட்டுமா,கிருஷ்?”.ஒரு குழந்தை போலக் கெஞ்சலாக அவ்ள் கேட்டது என்னை நெகிழ வைத்தது.

”செய் ,மேரி”

அவள் என் மடியில் தலை வைத்து உடலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.ஒரு தாயின் மடியில் படுத்துறங்கும் குழந்தை போல உறங்கும் அவள் முகத்தையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தால் ஒரு பெண்ணால்,எத்தனைவயதானவளாக இருந்தாலும்,ஒரு ஆணின் மடியில் தலை வைத்துச் சலனமின்றி உறங்க முடியும்?இது நட்பின் மிக உன்னத நிலை.
அரை மணி நேரம் சென்று அவள் கண் விழித்தாள்.பரபரப்புடன் கேட்டாள்”நீண்ட நேரம் தூங்கி விட்டேனா?என்னை எழுப்பியிருக்கலாமே கிருஷ்?”

” எழுப்ப மனம் வரவில்லை மேரி”

“சரி,நான் என் அறைக்குப் போகிறேன்.நாளைய உரையை சிறிது மெருகேற்ற வேண்டும்.நீ போய் உறங்கு”மேரி தன் அறைக்குச் சென்றாள்.நானும் உறங்கச் சென்றேன்.

மறு நாள் காலையில் அவளை பல்கலைக் கழகத்தில் விட்டு வந்தேன்.மதியம் இரண்டு மணிக்கு,முன்பே பேசிவைத்தபடித் தயாராக இருந்த அவளது பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.காத்துக் கொண்டிருந்த மேரியை அழைத்துக் கொண்டு விமானநிலையம் சென்றேன்.அவள் உள்ளே செல்லும் முன் அவளிடம் சொன்னேன்”அடிக்கடி தொடர்பு கொள்,மேரி.நானும் உன்னிடம் தொலை பேசுகிறேன். ”

அவள் முகத்தில் சிறிது சோகம் தெரிந்தது.”கிருஷ், கடைசி நேரத்தில் சொல்லலாம் என்றுதான் இது வரை சொல்லவில்லை.அடுத்த வாரம் நான் அமெரிக்கா செல்கிறேன்.என் துறையில் பிரபலமான இரு பேராசிரியர்கள் ஒரு ஆராய்ச்சியில் அவர்களுடன் இணைந்து பணி புரிய என்னை அழைத்திருக்கின்றனர்.இது மிகப் பெரிய கவுரவம்.இதற்குத் தகுதி உள்ளவளாக நான் செயல்பட வேண்டும்.அங்கு சென்ற பின் என் முழுக் கவனமும் ஆராய்ச்சியில்தான் இருக்க வேண்டும்.உண்ணவும்,உறங்கவும் கூட மிகக் குறைந்த நேரமே எடுத்துக்கொள்ள வேண்டும்,அந்நிலையில் அடிக்கடி தொலை பேசுவதோ,மின்னஞ்சல் அனுப்புவதோ இயலாமல் போகும்.ஆனால் எப்போதும் என் நினைவில் நீ இருப்பாய்.என் வாழ்க்கையில் கடைசி வரை ஒரே நட்பு,உறவு எல்லாமே நீதான்,கிருஷ்”

நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.சமாளித்துக் கொண்டுசொன்னேன்”வாழ்த்துகள்,மேரி.நீ உன் பணியில் வெற்றி பெற்றுப் பேரும் புகழுடன் தாயகம் திரும்ப நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.நாம் மீண்டும் சந்திக்கும் அந்த நன்னாளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பேன்.”

மேரி என்னை லேசாக அணைத்துப் பின் என் கையைக் குலுக்கி விட்டு உள்ளே சென்று மறைந்தாள்.

நான் கனத்த மனத்துடன் என் காரை நோக்கி நடந்தேன்.

காத்திருப்பேன் என் நண்பிக்காக;பிரார்த்துக் கொண்டிருப்பேன் அவள் நலனுக்காக!

(இது சாதாரண முடிவு.முடிவில் ஒரு ”ட்விஸ்ட்’ கொடுத்து அசாதாரணமாக்கினால்!
கிழே வருகிறது.பிடிக்காதவர்கள் மன்னியுங்கள்)

–x–x–x–x-x–x
இரண்டாவது முடிவு ஒன்று வைத்திருந்தேன்.

ஆனால் நண்பர்கள் பலரும் அது தேவையற்றது,கிறுக்குத்தனமானது,சினிமாத்தனமான ஒரு சோகம் என்றெல்லாம் சொல்லவே,அந்த முடிவை நீக்கிவிட்டேன்-எனக்கும் அது போன்றே தோன்றியதாலும்.

இதில் ஒரு சௌகரியம்--இந்தக்கதையை மீண்டும் தொடரும் ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது!

பார்க்கலாம்.

மேரி திரும்பி வரலாம்;ஒரு வேளை ராதாகிருஷ்ணன் அமெரிக்கா போய் அவளைச் சந்திக்கலாம்.

எப்படியும் அந்த நட்பு நிச்சயம் தொடரும்!

திங்கள், மே 09, 2011

இது நட்பா,காதலா?

(இது ஒரு பழைய கதை!வித்தியாசமான காதல் கதை.ஆண் பெண் நட்பு காதலாகத்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை உடைக்கும் கதை.நீளம் சிறிது அதிகம்.பொறுமையாகப் படித்துக் கருத்துக் கூறுங்கள்)
---x---x----
தொலைபேசி மணி ஒலித்தது.எடுத்தேன்,”ஹரி ஓம்,ராதாகிருஷ்ணன் பேசுகிறேன்”. மறுமுனையிலிருந்து குரல்”ஹாய்,கிருஷ்!என்ன இது ஹரி ஓம் எல்லாம்?யாரென்று தெரிகிறதா?’

என் கடவுளே!இது அவள்தான்.என் வாழ்க்கையில் என்னைக் கிருஷ் என்று அழைத்திருக்கும் ஒரே நபர்.இத்தனை ஆண்டுகளுக்குப் பின்!மேரி! மேரியேதான்.

”மேரி!என்ன சுகமான அதிர்ச்சி!அன்று போலவே இன்றும் உன் குரல் இனிமையாகவே இருக்கிறது.எங்கே இருக்கிறாய்?எப்படி இருக்கிறாய்? திடீரென்று என்ன தொலை பேசுகிறாய்?”

” மெள்ள, மெள்ள,கிருஷ்!எல்லாக்கேள்விகளுக்கும் இப்போதே பதில் சொல்லி விட்டால் நாளை நேரில் பேசுவதற்கு ஒன்றும் இருக்காது.”

” நேரில்?நீ சென்னை வருகிறாயா?உண்மையாகவா”

“ஆம்.நாளை காலை டில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருகிறேன்.காலை 10.30க்கு விமானம் தரையிறங்கும்.விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் செல்ல வருவாயா?”

“நிச்சயமாக.மகிழ்ச்சி என்னுடையது.”

“கிருஷ்!நான் இரண்டு நாள் தங்குவதற்கு ஏதாவது நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்து விடு”

“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.நீ வா”

இருவரும் தற்காலிக விடை பெற்றுக் கொண்டோம்.

தொலைபேசியை வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்தேன்.என் மனம் கடந்த காலத்துக்குச் சென்றது.அந்த நாட்கள்………….

அந்த வங்கியில் அதிகாரியாக நியமனம் பெற்று அன்று எங்கள் பயிற்சி ஆரம்பம். ஓராண்டுப் பயிற்சியில் முதல் இரண்டு மாதங்கள் தலைமை அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள்.பயிற்சி இயக்குனரிடம் என் வருகையை அறிவிக்க, அவர் வகுப்புகள் நடக்க இருக்கும் ‘போர்டு’ அறைக்கு என்னைப் போகச் சொன்னார்.கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.ஏ.சி யின் குளிர் என்னைத் தாக்கியது.வெளியே மழை விடாது கொட்டிக் கொண்டிருக்கும்போது இது வேறா?உள்ளே ஒரு மேசையில் வங்கி பற்றிய துண்டுப் பிரசுரங்களை அடுக்கிக் கொண்டிருந்த பெண் திரும்பி என்னைப் பார்த்தாள். இயல்பான புன்னகையுடன் என்னை நோக்கி வந்தாள்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.” நான் மேரி தாமஸ்.” குலுக்குவதற்காகக் கையை நீட்டினாள்.

கையைப் பற்றிக் குலுக்கியவாறே சொன்னேன் ”நான் ராதாகிருஷ்ணன்.” -முதல் முதலாக ஒரு பெண்ணின் கை பற்றிக் குலுக்கும் அனுபவம்.என்ன மென்மையான கரம்!

“நீங்கள் பெங்களூரா?பார்த்த முகமாகத் தெரிகிறது”-அவள் கேட்டாள்.

”இல்லையில்லை.நான் மெட்ராஸைச்சேர்ந்தவன்.இன்று வரை பெங்களூர் சென்றதேயில்லை”-என் பதில்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மற்றவர்கள் வரத்துவங்கினர்.அறிமுகப் படலம் ஆரம்பமாயிற்று.20 பேரில் எட்டுப் பேர் தமிழர்கள்.

சிறிது நேரம் சென்று பயிற்சி இயக்குனர் வந்து எங்களையெல்லாம் இருக்கையில் அமரச்சொன்னார்.பெரிய மேசையைச்சுற்றி இருபது இருக்கைகள்.இடது புறம் முதல் இருக்கையில் சுகுணா என்ற தமிழ்ப் பெண்.அடுத்து மேரி.அவள் அமர்ந்து என்னைப் பார்த்தாள்.நான் சிறிதே தயங்கும் போது ஆந்திர நண்பர் ஒருவர் அமர்ந்து விட்டார்.மேரியின் உதடுகளில் ஒரு புன்முறுவல்-என் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்த்து என நினைத்தேன்.அடுத்த இருக்கையில் நான்.

ஆரம்ப விழா,பின் வகுப்புகள் தொடங்கின.நான் இடையிடையே கேட்ட கேள்விகள் பாராட்டப்பட்டன.ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்த மேரியின் முகத்தில் வியந்து பாராட்டும் ஒரு பாவனை.-அது மேலும் எனக்கு ஊக்கம் அளிப்பதாயிருந்தது.அன்று மாலை வகுப்புகள் முடிந்த பின் மேரி சொன்னாள்”நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திரு க்கிறீர்கள்,மிஸ்டர்.ராதாகிருஷ்ணன்.ஓ! ஒவ்வொரு முறையும் உங்களை முழுப்பெயரில் அழைப்பது கஷ்டமாயிருக்கிறது.”

நான் சொன்னேன்”சுருக்கமாக ராதா என்று அழையுங்களேன் மிஸ்.தாமஸ்.என் நண்பர்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள்”

“எனக்குப்பிடிக்கவில்லை.ஒரு பெண்ணை அழைப்பது போல் இருக்கிறது .உங்களை ‘கிருஷ்’என்று அழைக்கிறேன்.ஆனால் இந்த மிஸ் தாமஸ் எல்லாம் வேண்டாம்.நீங்கள் என்னை வெறும் மேரி என்றுதான் அழைக்க வேண்டும்”

நான் குறும்பாகச்சொன்னேன்”சரி,வெறும் மேரி”.அவள் ’குபீர்’ என்று சிரித்துப் பின் சொன்னாள் “நீங்கள் மிகவும் குறும்புக்காரர்”

” சரி,மேரி,நண்பர்களுக்குள் என்ன மரியாதை?இந்த நீங்கள்,நாங்கள் எல்லாம் வேண்டாமே.”அவள்சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்.(ஆங்கிலத்தில் நீ,நீங்கள் என்பதற்கு வேறுபாடு இல்லாவிட்டாலும் பேசுகின்ற தொனியில் அதைப் புரிந்து கொள்ளலாம்.)

ஆக,முதல் நாளே நாங்கள் நெருங்கிவிட்டோம்.மறு நாள் முதல்,வகுப்பு தொடங்குமுன்,இடை வேளையில் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம்.எங்களுக்கு நடுவில் அமர்ந்த நபர் பின்னால் சாய்ந்து உட்கார்ந்தால் முன்னே சென்றும்,அவர் முன்னால் சாய்ந்தால் நாங்கள் பின் சென்றும் பேசிக் கொண்டிருப்போம் .சில மாலைகளில் அருகில் உள்ள ஒரு குன்றின் மீது அமர்ந்தபடி நேரம் போவது தெரியாமல் பேசுவோம். திடீரென்று வரும் மழையில் நனைந்த படித்திரும்புவோம்.

எங்களுக்குப் பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது-எங்கள் இளமைப் பருவம்,கல்வி,கல்லூரி வாழ்க்கை,குடும்பம் இப்படி.சில சமயம் என் தமிழ் நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள்.நான் அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளுவேன்.ஏதோ சில காரணங்களால் நாங்கள் ஒருவர் பால் மற்றவர் அதிகமாக ஈர்க்கப்பட்டோம்.

ஒரு நாள் அவள் கேட்டாள்”யாரையாவது காதலித்திருக்கிறாயா,கிருஷ்?”

அப்போதுதான் நான் அவளிடம் என் ரயில் காதல் பற்றிச் சொன்னேன். கேட்டுவிட்டு அவள் சொன்னாள்”அந்தப் பெண் உன்னை மிகவும் பாதித்திருக்கிறாள் என்று உணர்கிறேன்.ஏன் கிருஷ் அவளைத் தேடுவதற்கான எந்த முயற்சியும் நீ எடுக்கவில்லை?திருச்சியில் அவளைத் தேடிப் பார்த்திருக்கலாமில்லையா?”
நான் சொன்னேன்”பயம்,மேரி.என் நடுத்தர வர்க்கத் தற்காப்பு மனப்பாங்கு. வாழ்க்கை பற்றிய பயம்.”

அவள் முகத்தில் லேசாகக் கோபம் தோன்றியது.”இந்த விஷயத்தில் உன் நடத்தை எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது”.

நிலைமையைச் சரியாக்க நான் வினவினேன்”நீ எப்படி மேரி?ஏதாவது காதல்?’”

சிறிது இறுக்கம் தளர்ந்தவளாய் அவள் பதிலளித்தாள்.”இல்லை.இன்றுவரை என் கற்பனை ராஜகுமாரனை நான் சந்திக்கவில்லை.”

நான் அவளைக் கூர்ந்து பார்த்தேன்.அந்தப் பளிங்கு முகத்தில் பொய்மை இல்லை;கள்ளம் இல்லை.

நடுவில் ஒரு நாள் எங்களுடன் பயிற்சியில் இருந்த கிறிஸ்தவ நண்பர் ஒருவருக்குத் திருமணம்.அருகில் இருந்த ஓர் ஊர் மாதா கோவிலில் மாலை திருமணம்;பின் ஓட்டலில் வரவேற்பு.மேரிக்கு வேறு அலுவல் இருந்த காரணத்தால் வர இயலவில்லை.எனக்கு ஏமாற்றந்தான்.நாங்கள் ஆண்கள் மட்டும் சென்றோம்.அந்தக் கலாசாரமே புதிதாக இருந்தது.திருமணம் முடிந்த பின் மணப்பெண்ணின் கையில் எல்லோரும் முத்தமிட்டோம்!பின் வரவேற்பில் ஆண் பெண் எல்லோரும் கட்டிப் பிடித்து ஆடினார்கள்.நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.பல வித பானங்கள்,சைவ-அசைவ விருந்து(பஃபே) என்று எல்லாமே எனக்குப் புதிதான அனுபவங்கள்.

மறுநாள் மேரி கேட்டாள்”எப்படி இருந்தது கிருஷ், திருமணம்?”

“எனக்கு ஒரு கலாசார அதிர்ச்சி.எல்லாமே ஒரு புதிய அனுபவம்”-நான் .

” நடனம் இருந்ததா? நீ நடனமாடினாயா”

நான் சிரித்தேன்.”நானா?நடனமா?நடக்கவே முடியாது.நடனத்தைப் பொருத்தவரை நான் ஒரு பூஜ்யம்.”

” நான் கற்றுத்தரட்டுமா?”ஆர்வமாய்க் கேட்டாள்

“அய்யய்யோ!ஆளை விடு.என்னால் முடியாது”.அவள் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றத்தின் சாயல் பரவி மறைந்ததோ?நான் அவளை ஏமாற்றி விட்டேனோ?தெரியவில்லை.

பயிற்சிக்காலம் முடிந்து புறப்படும் நாள் வந்தது.எல்லோரும் மற்றவர்களிடம் விடை பெற்றுக் கொண்டோம்.நானும் மேரியும் ஒன்றும் பேசாமலே அலுவலக வாசல் வரை நடந்து வந்தோம்.அங்கு நின்றோம்.நான் மேரியின் கைகளைப்பற்றிக்கொண்டு சொன்னேன்”இந்தப் பயிற்சிக் காலத்தை இனிமையாக்கியது உன் தூய நட்புதான் மேரி.அந்த நினைவுகளுடனே பிரிகிறேன்.தொடர்பில் இருப்போம்.மீண்டும் சந்திப்போம்”ஒரு மெலிதான சோகம் என்னுள் பரவியிருந்தது.மேரியின் அழகிய கண்கள் கலங்கியிருந்தன.”சென்று வருகிறேன்,கிருஷ்.இறைவன் நமக்குத் துணையிருக்கட்டும்.”

பிரிந்தோம்.எங்கள் கடிதப் போக்குவரத்து தொடர்ந்து நடந்தது.எங்கள் அலுவலக வேலையின் பளு,எங்கள் இன்ப நிகழ்வுகள் ,சோகங்கள் எல்லவற்றையும் கடிதங்களில் பகிர்ந்து கொண்டோம்.

ஒரு நாள் அந்தக் கடிதம் வந்தது-விமானப்படையில் பணி புரிந்து வந்த அவள் அண்ணன் ஒரு ‘மிக்’விமான விபத்தில் இறந்த செய்தியைத்தாங்கி.அவள் மிகவும் உடைந்து போயிருந்தாள்.அவள் அண்ணனை மிகவும் நேசித்தவள்.அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ஒரு கடிதம் எழுத நீண்ட நேரம் யோசித்தேன்.பல எண்ணங்கள் என்னுள் அலை மோதின.
கடைசியில் எழுதினேன்”அன்பு மேரி.இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்புதான்.உன் அண்ணன் இடத்தில் நான் இருக்கிறேன்.உன் வாழ்நாள் முழுதும் உனக்கு ஒரு அண்ணனாக நான் இருப்பேன்.”

அவளிடமிருந்து பதில் வரவில்லை.மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை.அவள் பணி புரிந்த வங்கிக் கிளைக்கு தொலை பேசினேன். அவளை அழைப்பதாக யாரோ சொன்னார்கள்.பல நிமிடக் காத்திருப்புக்குப் பின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவளுடன் தொடர்பு கொள்ள நான் செய்த முயற்சிகள் அனத்தும் பலனற்றுப் போயின.பெங்களுர் சென்று அவளைப் பார்க்க முடியாமல் என்னுள் ஏதோ ஒரு உணர்வு.(குற்ற உணர்ச்சி?)

எங்கள் தொடர்பு அற்றுப் போயிற்று .

சில மாதங்களுக்குப்பின் ஒரு பயிற்சிக்காகத் தலைமை அலுவலகம் சென்ற போது பெங்களூரிலிருந்து வந்த சில நண்பர்கள்,மேரி பணியிலிருந்து விலகி வேறு பணிக்காக டில்லி சென்று விட்டதாகத் தெரிவித்தனர். அவ்வப்போது மேரியின் நினைவு வரும்.ஒரு பெண்ணால் நல்லதொரு நட்பை இவ்வாறு திடீரென்று வெட்ட முடியுமா என்று யோசிக்கும் அதே நேரத்தில் நான்தான் அந்நட்பை/உறவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனோ என்ற எண்ணமும் வரும்.

அந்த மேரிதான் நாளை வருகிறாள்.இத்தனை நாட்களுக்குப்பின் சென்னைக்கு வரும் வாய்ப்பு வந்ததும் என் நினைவு அவளுக்கு வந்திருக்கிறது. சென்னை மண்டல அலுவலகத்திலிருந்து என் விலாசத்தை,தொலைபேசி எண்ணை அறிந்து கொண்டிருப்பாள்.
அன்றிரவு எனக்குச் சரியான உறக்கமில்லை.இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மேரியைச் சந்திக்கப் போகிறேன்.எப்படியிருப்பாள்?எப்படிப் பழகுவாள்?இப்படிப் பல எண்ணங்கள் என் நெஞ்சில் அலை மோதி உறக்கம் வராமல் செய்தன.

(தொடரும்)

வெள்ளி, மே 06, 2011

அட்சய திரிதியையன்று ஆயிரத்தில் ஒருவன்!

இன்று அக்ஷய திரிதியை!

”என்ன சார்,காலையில் ரெண்டு பாக்கெட் பால் வாங்கிட்டு வந்தீங்க போல?”

”ஆமாம் சார்,பாயசம் செய்யத்தான்!”

“வீட்டில ஏதும் விசேஷமா? நிறைய மல்லிப்பூவெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க?”

”வீட்டில இல்லை சார்,நாட்டிலேயே விசேஷம்தான்.இன்னிக்கு அட்சய திரிதியை!”

“ஓகோ!அதுதான் பால் ,பாயசம்,மல்லிப்பூவெல்லாமா!இன்னும் ஏதோ பாக்கி இருக்கு போலிருக்கே?”

”அதுக்குத்தான் மனைவியோடு நகைக் கடைக்குப் போகப் போகிறேன்.அவளுக்கு நகை வாங்க.”

”தங்க நகைதானே?”

”இல்லை.பிளாட்டினம் நகை.அதுதான் ரொம்ப நல்லதுன்னு டி.வி யில் சொன்னாங்க!”

“வெண்மை நல்லது என்றால் வெள்ளி வாங்கலாமே?”

“விலை மதிப்பில்லாத பிளாட்டினம்தான் நல்லதாம்”

“என்ன வாங்கப் போறீங்க?”

“ஒரு சங்கிலியும்,பெண்டண்ட்டும்.அதுதான் ஒரு நடிகையும் வாங்கினாங்களாம்”

சில ஆண்டுகளாக இப்படித்தான் மக்கள் முட்டாளாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிளாட்டினம் வாங்குவது நல்லது என்றால் ,யாருக்கு நல்லது? இன்று நகை வாங்கினால் மென்மேலும் நகை வந்து சேரும் என்ற ஒரு நம்பிக்கையைச் சில ஆண்டுகளாகக் கிளப்பி விட்டு இலாபம் காண்பவர்களுக்கு நல்லதுதான்!

க்ஷயம் என்ற வட மொழிச் சொல்லுக்கு ,வடமொழி-தமிழ் அகராதியில் பொருள்-அழிவு,நஷ்டம்,வீழ்ச்சி,குறைதல்.

அக்ஷயம் என்பது அதற்கு எதிரான பொருளைத்தரும்.-அதாவது குறையாதது அல்லது வளர்வது.

எனவே இந்த நாளில் செய்யப்படும் எதுவும் வளரும் என்ற நம்பிக்கை!

முன்பெல்லாம்,இந்நாளில் தானம் செய்து வந்தார்கள்;அதிலும் அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும் என நம்பி அவ்வாறே செய்தார்கள்.அதனால் கிடைக்கும் புண்ணியம் பல மடங்காகப் பெருகும் என்பதே நம்பிக்கை!

அந்த நம்பிக்கையிலாவது சில பசித்த வயிறுகளுக்கு நல்லது நடந்தது.தானம் செய்தவர்களுக்கும் ஒரு மன நிறைவு இருந்தது.

ஆனால் இன்றோ!

உங்களுக்குப் பாவ புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாவிடினும்,கொடுக்கின்ற அந்த மகிழ்ச்சிக்காக,சில பசித்த வயிறுகள் நிறையும்,அந்த முகங்கள் மலரும்,அந்த மனங்கள் வாழ்த்தும் என்ற காரணத்துக்காக இந்த ஒரு நாளிலாவது, நகைக் கடையில் வரிசையில் நின்று செலவழிக்கும் பணத்தில் ஒரு அற்பமான பகுதியில்,தானம் செய்து மகிழ்ச்சியைப் பரப்பலாமே!

இந்த தானத்தை நகைக்கடைக்காரர்களே கொஞ்சம் பெரிய அளவில் செய்யலாமே!
இன்றைய விற்பனையில் இரண்டு விழுக்காட்டுக்குக் குறையாமல் அன்ன தானத்திற்கு எனத் தீர்மானித்து கடைக்கு அருகில் ஒரு மண்டபத்தில் அன்ன தானம் செய்யலாமே! கடையில் ஒரு அறிவிப்புப் பலகையில் இதை வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் காண வைத்தால் ஒரு விளம்பரமும் ஆகுமே!

பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கு ஒரு கடவுள் படம் போட்ட அட்டையின் பின்புறம், அவர்கள் பில் தொகையின் 2 % தொகையைக்குறிப்பிட்டு,”இது இன்று உங்கள் புண்ணியக் கணக்கு” என்று அச்சிட்டுக் கொடுக்கலாமே!

அப்படியெல்லாம் நடந்தால்----வியாபாரத்துக்கு வியாபாரம்,விளம்பரத்துக்கு விளம்பரம், புண்ணியத்துக்குப் புண்ணியம்!

கொஞ்சமாவது நல்லது நடக்கட்டுமே!டிஸ்கி -- அட்சய திரிதியை பற்றிப் பல பதிவுகள் வந்து விட்டன.எண்ணிப் பார்த்தால் ஒரு ஆயிரம் பதிவுகள் இருக்குமா?!

அந்த ஆயிரத்தில் இதுவும் ஒன்று.

எனவே நான் ஆயிரத்தில் ஒருவன்!!

புதன், மே 04, 2011

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்!

எங்கள் காலனியில்,அண்டை வீட்டில் குடியிருக்கும் நண்பர்;பெயர் முக்கியமென்றால் அவரை ராமன் என்றழைப்போம்.கணவன்,மனைவி இருவரும் வேலை பார்க்கிறார்கள். இருவருக்கும் சேர்ந்து மாத வருமானம்50000/60000 இருக்கலாம். அவர்களுக்கு இரண்டு பெண்கள்.பெரியவள் பி.காம் தேர்வு எழுதியிருக்கிறாள்;சின்னவள் +2 தேர்வு எழுதியிருக்கிறாள்.

இரண்டு நாட்களுக்கு முன் ராமன் என்னைக் காண வந்தார்.என்னிடம் சொன்னார் ”சார்,சந்திராவுக்கு(பெரியவள்) கோயம்புத்தூரில் எம்.பி.ஏ.யில் இடம்வாங்கி விட்டேன். மொத்தம் 8.5 லட்சம் ஃபீஸ்.இன்று 6 லட்சத்துக்கு டிராஃப்ட் எடுத்துக் கொண்டு கோவை போகிறோம்.நாளை பணத்தைச் செலுத்தி விட்டு,மறு நாள் காலை திரும்பி விடுவோம். உங்களைத் தவிர வேறு யாரிடமும் நான் சொல்லவில்லை .”

அவர் சென்ற பின் அம்மா கேட்டார்கள்”ராமன் என்ன சொன்னார்?”

ராமன் சொன்ன விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன்.அவர்கள் சிறிது நேரம் ஒன்று பேசவில்லை.

பின் சொன்னார்கள்”இப்படி 8.5 லட்சம் செலவழித்து வெளியூர் அனுப்பிப் படிக்க வைக்க வேண்டுமா?நாலு வருஷம் முன்னால்தான்,கஷ்டப்பட்டு இந்த ஃப்ளாட்டை வாங்கி யிருக்கிறார்கள்.இன்னும் கடனே கட்டி முடியவில்லை என்று நினைக்கிறேன்.இன்னும் நாலைந்து வருஷம் போனால் சந்திராவுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும்.அவளை விடப் படித்த மாப்பிள்ளையாக இல்லாவிட்டாலும் அவளுக்கு இணையாகப் படித்த மாப்பிள்ளை யாவது பார்க்க வேண்டும்.அவ்வளவு படித்து நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளை என்றால்,வரதட்சிணை இல்லாவிட்டாலும் கூடக் கல்யாணச்செலவே 6/7 லட்சம் ஆகி விடுமே. இப்போதெல்லாம் நல்ல மண்டபம் வேண்டுமென்றால் அதற்கே 2 லட்சம் ஆகி விடும் போலிருக்கிறதே?அப்போது பணத்துக்கு எங்கே போவது?”

நான் சொன்னேன்.”நன்றாகப் படிக்கிற பெண்.அவள் படிப்பை பி.காம் உடன் நிறுத்தச் சொல்கிறீர்களா?”

”இல்லை.சென்னையிலேயே எம்.காம் படிக்கட்டும்.கூடவே வேறு ஏதாவது படிக்கட்டும்
அதிக பட்சம் 1 அல்லது ஒன்றரை லட்சம் ஆகலாமா? மீதிப் பணம் அவள் கல்யாணத் துக்குப் பயன் படுமே? மாப்பிள்ளை தேடுவதும் அவ்வளவு சிரமமாக இருக்காது. அதோடு இன்னொரு பெண் வேறு இருக்கிறாளே?”அம்மா சொன்னார்கள்.

’’அப்படியென்றால் பெண்கள் இது போன்ற பெரிய படிப்புப் படிக்கக் கூடாது என்கிறீர்களா?”நான்


”நான் அப்படிச் சொல்லவில்லை.அவர்கள் நம்மைப் போல் மிடில் க்ளாஸ்.இருவரும் கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் தேடிச் சேமிக்கிறார்கள்.மிகவும் சிக்கனமாக இருக்கிறார்கள். சேமிப்பெல்லாம் இப்படிப் போய்விட்டால் நாளைக்குக் கல்யாணத்துக்கு என்ன செய்வார்கள்?அவர்களே வசதி அதிகமானவர்களாக இருந்தால் கவலையில்லை அந்தப் பெண்ணுக்கு ஸ்காலர்ஷிப்பும் ஏதும் கிடைக்காது.இதையெல்லாம் உத்தேசித்து தான் சொல்கிறேன்.”அம்மா

“ அவள் படித்து வேலை பார்த்துப் பணம் சேர்க்க மாட்டாளா?”நான்.

“நடக்கலாம்.நடக்காமலும் போகலாம்.அதை நம்பி பெற்றோர் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.”

ஒரு தாயின் அனுபவ பூர்வமான வார்த்தைகள்.

என் அம்மா பிற்போக்கானவர்களல்ல.முற்போக்கான சிந்தனைகள் உள்ளவர்கள் தான்.பெண்கள் படிக்க வேண்டாம் என்று நினைப்பவர் அல்ல.
பலர் அவர்களை ’மாடர்ன் மாமி’ என்று அழைப்பார்கள் அவர்களின் இந்த வார்த்தைகளில்,பொருளாதாரமும் கலந்து இருக்கிறது.வாழ்க்கையின் யதார்த்தம் கலந்திருக்கிறது.

32 ஆவது வயதில் தன் கணவனை இழந்து,ஐந்து குழந்தைகளுடன் (பெரியவன் 16 வயது,கடைசி பையன் 5 வயது,நடுவில் 3 பெண்கள்)நிர்க்கதியாய் நின்ற நிலையிலும் மன உறுதியுடன் அவர்களை வளர்த்து ஆளாக்கித் தன் கடமைகளைச் செவ்வனே முடித்த தாய்க்குத்தானே புரியும் வாழ்க்கையின் யதார்த்தம்.

என்னால் அவர்களுடன் உடன் படவும் முடியவில்லை,அவர்கள் கருத்தை ஒதுக்கித்தள்ளவும் இயலவில்லை.

நான் குழப்பத்தில் இருக்கிறேன்!

திங்கள், மே 02, 2011

குழைக்கின்ற கவரியின்றிக் கொற்ற வெண் குடையுமின்றி!

எனது 11-04-2011 தேதியிட்ட ”நாசமாய்ப் போகட்டும்” என்ற பதிவில்,கைம்பெண் என்ற காரணத்தால் ஒரு தாய்க்கு அவள் மகனின் திருமணத்தைக் காணும் உரிமையில்லாமல் போன அவலம் பற்றி எழுதியிருந்தேன்.

அதைத் தொடர்ந்த ஒரு சிந்தனையின் விளைவான ஒரு பதிவு.

சிறிது இலக்கியம் சார்ந்த ஒரு பதிவு!கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல், ஒரு வினாவை என்னுள் எழுப்பியது.

அந்தக் காலத்தில்.மகாராணிகளுக்குத் தங்கள் மகனின் பட்டாபிஷேகத்தைப் பார்க்கும் உரிமை மறுக்கப் பட்டதா?கவனிக்கவும்,இங்கு அவள் சுமங்கலிதான்.

இந்த ஐயத்தை எழுப்பிய பாடல் இதோ----

“குழைக்கின்ற கவரியின்றிக் கொற்ற வெண் குடையுமின்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின்னிரங்கியேக
மழைக் குன்றமனையான் மௌலி கவித்தனன் வருமென்றென்று
தழைக்கின்ற உள்ளத்தன்னாள் முன்னொரு தமியன் சென்றான்!”

இராமன்,தந்தையின் முடிவுகளைக் கைகேயி மூலம் கேட்டு,விவரத்தைக் கோசலையிடம் சொல்லி,அவர்கள் ஆசி பெற்றுக் கானகம் போக எண்ணிக் கோசலையின் அந்தப் புரத்துக்கு வருகிறான்.

அவன் பட்டம் சூட்டிய பின் வந்திருந்தால்,அவனுக்கு முன் கவரி வீசி ஒருவர், பின்னிருந்து வெண் கொற்றக் குடையை ஏந்தி ஒருவர் எனப் பரிவாரம் சூழ வந்திருப்பான்.ஆனால் இப்போதோ!கவரிவீசும் ஆளுக்குப் பதிலாக,விதி முன்னே அழைத்துச் செல்கிறது. வெண்கொற்றக் குடைக்குப் பதிலாக அறம் பின்னால் அழுதுகொண்டே செல்கிறது. பரிவாரங்கள் ஏதும் இன்றித் தனி மனிதனாக அந்த மேக மலை போன்ற இராமன்,அரச மகுடத்துடன் அவன் வருவான் என்று காத்திருக்கும் கோசலை முன் செல்கிறான்.

இந்தப் பாடல் என்ன உணர்த்துகிறது?பட்டம் சூடி அரசனாக இராமன் தன்னைக் காண வருவான் எனக் கோசலை தன் அந்தப்புரத்தில் காத்திருந்தாள்.அதாவது பட்டாபிஷேகத்தைக் காண அவள் செல்லவில்லை,செல்ல அவளுக்கு உரிமையில்லை என்பதுதானே!?

இது வெறும் கவி நயத்துக்காகக் கம்பன் எழுதியதா?அல்லது உண்மையிலேயே, இராணிக்குத் தன் மகனின் பட்டாபிஷேகத்தைப் பார்க்கும் உரிமை மறுக்கப் பட்டதா—இராணியாயிருப்பினும் அவள் பெண் என்ற காரணத்தால்?

வரலாற்று அறிஞர்களால் ,அக்கால நடை முறை என்ன என்பதைக் கூற இயலும்!

தமிழ் அறிஞர்களால் இது சம்பந்தமாக இலக்கிய மேற்கோள்களுடன் விளக்கம் தர முடியும்!

பணிவன்புடன் வேண்டி,எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன்!