தொடரும் தோழர்கள்

கோபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 05, 2012

புதுக் காரின் விலை ரூ.3000!

அந்த விளம்பரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் அந்த மனிதர்.அவரைப் போலவே அதைப் பார்த்தவர்கள் அனைவருமே   ஆச்சரியப்பட்டி ருப்பார்கள் என்று அவர் எண்ணினார். அச்சுப்பிழையாக இருக்குமோ என்றும், ஒரு வேளை இது வெறும் முட்டாளாக்கும் ஒரு வேலையோ என்றும் கூட எண்ணினார்.அப்படி என்ன இருந்தது அந்த விளம்பரத்தில்?

“2011 ஆம் ஆண்டு மாடல் செவர்லே ஸ்பார்க் கார்.3000 கிலோ மீட்டர்களே ஓடியது.ஷோ ரூம்இல் இருப்பது போல் மெருகு குலையாத வண்டி,விற்பனைக்கு.விலை ரூ.3000. உடன் தொடர்பு கொள்ள –தொலை பேசி எண்—xxxxxxxx”

இதுவே  அந்த விளம்பரம்.அவர் யோசித்தார்.பின் பேசித்தான் பார்ப் போமே    என்று தொலை பேசினார்.

“ஹலோ!உங்கள் விளம்பரம் பார்த்தேன்.உண்மையிலேயே புது வண்டியா?”

மறு முனையில் பெண்குரல்”ஆம்”

“மூவாயிரம் கி.மி.தான் ஓடியிருக்கிறதா?

“ஆம்”

”விலை?”

”அதுதான் விளம்பரத்தில் போட்டிருந்தேனே!ரூ.3000.”

”காரில் ஏதும் பிரச்சினையா?”

“ஒன்றும் இல்லை.உண்மையில் நீங்கள் ஒருவர்தான் இதுவரை பேசியவர்.எல்லோரும் இது ஜோக் என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.”

அவர் போய்ப் பார்த்தார் .ஓட்டிப் பார்த்தார்.பிடித்திருந்தது.3000 ரூபாயைக் கொடுத்தார். சாவியை வாங்கிக் கொண்டார்.

பின் கேட்டார்”நீங்கள் இதை 3 லட்சத்துக்கு விற்றிருக்க முடியும்.ஏன் 3000க்கு விற்றீர்கள்?”

அவள் சொன்னாள்”இது என் கணவரின் சென்ற பிறந்த நாளுக்கு நான் பரிசாகக் கொடுத்த கார்.போன மாதம் அவர் வேறு ஒரு பெண்ணோடு ஓடிப் போய் விட்டார்.நேற்று  டார்ஜீலிங்கில் இருந்து அவர் ஒரு தந்தி அனுப்பியிருந்தார்.கையில் பணமில்லாததால் காரை விற்றுப் பணம் அனுப்பச் சொல்லியிருந்தார்.காரை விற்று விட்டேன்.3000 அனுப்பி விடுவேன்!”

இது தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள  அப்பெண் தேர்ந்தெடுத்த வழி.

இவ்வாறு சிலர் செயலில்  தீர்த்துக் கொள்கிறார்கள்
                 சிலர் காத்திருத்தலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்
                 சிலர் பழிதீர்த்துத் தீர்த்துக்கொள்கிறார்கள்.
                 சிலர் சண்டை மூலம் முடிவு கட்டுகிறார்கள்.

ஆனால் இவையெல்லாம் மேலும் பிரச்சினையைத்தான் உருவாக்கும்.

பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த வழி.

உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.

எல்லாம் சரியாகும்.

திங்கள், மே 23, 2011

கோபம் என்னவெல்லாம் செய்யும்?-ஒரு குட்டிக் கதை!

சென்ற பதிவில் கோபம் பற்றி எழுதியிருந்தேன்.

கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஒரு ஜாலியான குட்டிக் கதை, நான் பள்ளி நாட்களில் கேட்டது , என் நினைவுக்கு வருகிறது.

ஓர் ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர்.வறுமை நிறைந்த வாழ்க்கை .

ஒரு நாள் அக்கணவன் அரசரமரத்தடிப் பிள்ளையார் முன் அமர்ந்து தன் நிலை குறித்துப் புலம்பிக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கு ஒரு சாது வந்தார்.அவனைப்பார்த்து என்ன விஷயம் என்று கேட்க அவன் தன் வறுமை நிலையைச் சொன்னான்.

சாது அவனிடம் மூன்று தேங்காய்கள் கொடுத்துச் சொன்னார்”.உனக்கு வேண்டியதைக் கேட்டு ஒரு காயை உடைத்தால்,அது உடனே கிடைக்கும். கவனமாகப் பயன் படுத்து ” என்று.

அவன் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான்.மனைவியிடம் தேங்காய்களைக் காட்டி செய்தியைச் சொன்னான். அவனுக்கு ஒரு பெரிய மாளிகை வேண்டும் என்று ஆசை. எனவே அதுவே முதலில் கேட்கலாம் எனச் சொன்னான்.

மனைவிக்கு நகை வேண்டுமென்று ஆசை;எனவே அதுவே முதலில் கேட்க வேண்டும் என்று சொன்னாள்.

இருவருக்கும் விவாதம் வலுத்தது.சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தபோது அவன் அதிகக் கோபமடைந்து,கையில் இருந்த தேங்காயைத் தூக்கிப் போட்டு உடைத்துக் கத்தினான் ”மயிர்தான் கிடைக்கும் போடீ” என்று.

உடனே எங்கு பார்த்தாலும் முடி;அவர்கள் உடலெல்லாம் முடி.வீடு முழுவதும் முடி.என்ன செய்வது.ஒரே வழிதான்.

இன்னொரு தேங்காயை உடைத்துக் கொண்டே சொன்னான்” முடியெல்லாம் போகட்டும்”

உடனே எல்லா முடியும் போய்விட்டது.இருவர் தலையிலும் இருந்த முடியும் போய் வழுக்கைத்தலை ஆகி விட்டது. மீண்டும் பிரச்சினைதான். இப்போது என்ன செய்வது?

மூன்றாவது தேங்காயை உடைத்துக் கொண்டே சொன்னான்”முன்பு இருந்த முடியெல்லாம் வந்து, பின் வந்த முடியெல்லாம் போகட்டும் “ என்று.

நிலைமை முன்பு போலவே ஆயிற்று.

அவர்கள் வறியவர்களாகவே இருந்தனர்.

மூன்று தேங்காய் உடைத்தும் எந்த மாற்றமும் இல்லை.

என்ன காரணம்?

இக்கதை சொல்லும் நீதிகள் என்ன?

உங்கள் கருத்துக்களுக்குக் காத்திருக்கிறேன்.

ஒழுங்காகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போங்கள்(ஓட்டும்தான்).

இல்லையேல் உங்களுக்காக ஒரு தேங்காய் உடைத்து விடுவேன்,ஜாக்கிரதை!!

வெள்ளி, மே 20, 2011

கோபம் கொல்லும்;கோபத்தைக் கொல்லுங்கள்!

பாரதி தன் புதிய ஆத்திசூடியில் சொல்கிறான்,"ரௌத்திரம் பழகு".

கோப்படுவது நல்லதா?இல்லையென்பது பதிலென்றால், பாரதி ஏன் அவ்வாறு சொன்னான்?

பழங்காலக் குரு குலங்களில் போதிக்கப்பட்ட பாடம"ஸத்யம் வத,க்ரோதம் மா குரு"என்பது.இதன் பொருள்"உண்மையே பேசு,கோபம் கொள்ளாதே".

அப்படியானால் கோபம் என்ற உணர்வே தேவையில்லையா?

கோபம் இரண்டு வகை.ஒன்று தேவையற்ற,பலனற்ற கோபம்.நமது சக்தியை வீணாக்கும்,மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கோபம்.

மற்றது நியாயமான கோபம்."சிறுமை கண்டு பொங்குவாய்" என்று பாரதி பாடினானே,அந்தக் கோபம்.

குழந்தையின் நலனுக்காகத் தாய் படும் கோபம்;

மாணவனின் உயர்வு கருதி ஆசிரியர் அடையும் கோபம்.

அலுவலகத்தின் வளர்ச்சிக்காக அதிகாரி கொள்ளும் கோபம்.

சமூக அவலங்களைக் கண்டு எழும் தார்மீகக் கோபம்.

ஆனால் ஆக்க பூர்வமாக இல்லாமல் அழிவு பூர்வமான கோபம் இருக்கிறதே,அது மற்றவர்களுக்கு மட்டுமன்றி,கோபப் படுபவருக்கும் தீமையே விளைவிக்கும்.

ஒரு அறிஞரிடம் அடிமை ஒருவன் இருந்தான்.ஒரு நாள் அவன் கை தவறிச் சூடான தேனீர் நிறைந்த கோப்பையை அறிஞரின் மீது போட்டு விட்டான்.பயந்து போன அடிமை நடுங்கிக் கொண்டே சொன்னான்,"சொர்க்கம் கோபத்தை அடக்குபவரகளுக்கு உரியது".

அறிஞர் சொன்னார்"நான் கோபமடையவில்லையே"

அடிமை மீண்டும் சொன்னான்"சொர்க்கம் தவறு செய்தாரை மன்னிப்பவர்க்கு உரியது."

அறிஞர் சொன்னார்"நான் உன்னை மன்னித்து விட்டேன்."

அடிமை தொடர்ந்தான்,"எல்லாவற்றுக்கும் மேலாக சொர்க்கம் இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்பவர்க்கு உரியது."

அறிஞர் சொன்னார்,"நான் உன்னை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறேன்."

இது நமக்கெல்லாம் பாடம்.

(சுவாமி பித்தானந்தாவின் வெளி வராத உரைகளிலிருந்து!)