தொடரும் தோழர்கள்

நீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 10, 2015

மந்திரத் தண்ணீர்!



ஒரு கிராமத்தில் ஒரு சாமியார் இருந்தார்.அவர் இந்தச் சாமியைப்போல  பித்தனாக இல்லாமல் பெரிய ஞானியாக இருந்தார்.பல ஊர்களிலிருந்தும் மக்கள் தங்கள் பிரச்சனைகளோடு வந்தனர்;அவர் அதற்கான தீர்வை எடுத்துரைத்தார்.

ஒரு நாள் ஒரு பெண் வந்தாள்.அவள் மாமியார் எப்போதும் சண்டை பிடித்துக் கொண்டே இருப்பதாகவும்,அது தனக்கு எரிச்சலையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றது என்று சொன்னாள்.சாமியார் அவளிடம் ஒரு சிறிய சீசாவில் தண்ணீர் கொடுத்துச் சொன்னார்இது மந்திரத்தண்ணீர்.எப்போது சண்டை தொடங்கினாலும்,இதில் கொஞ்சம் உன் வாயில் ஊற்றிக்கொண்டு,விழுங்காமல் உன் மாமியார் சத்தம் போட்டு முடியும் வரை இரு.பின்னர் விழுங்கி விடு.”

அதைப் பெற்றுக் கொண்டு அவள் போய்விட்டாள்.

சிலநாட்கள் சென்றன.அந்தப் பெண் மீண்டும் வந்தாள்.சாமியாரிடம் சொன்னாள் சாமி!அந்தத்தண்ணீரின் மகிமையே மகிமை.நீங்கள் சொன்ன படியே செய்தேன். இப்போது என் மாமியாருடனனான சண்டை வெகுவாகக் குறைந்து விட்டது சாமியார் சிரித்துக்கொண்டார்.சண்டையைக் குறைத்தது தண்ணீர்தான்;ஆனால் மகிமையால் அல்ல.அவள் வாயைத்திறக்க முடியாமல் அது செய்ததனால்!சிறிது பொறுமை பெரிய பலன்களைக் கொடுக்கும்.

இது தெரிந்திருந்தாலும் நம்மால் பொறுமை காக்க முடிவதில்லை.எந்த நிகழ்வுக்கும் உடன் எதிர்ச் செயலாற்றி விடுகிறோம் .

உங்கள் எல்லோருக்கும் சகாதேவனைத் தெரியும்.நடிகர் ஈ.ஆர்.சகாதேவன் அல்ல; பாண்டவர்களில் கடைசியான சகாதேவன்.அவன் சோதிட சாத்திர விற்பன்னன்.நடக்க இருப்பதை முன்கூட்டியே அறியும் வல்லமை பெற்றவன்.அவன் நடக்கப்போகும் நிகழ்வுகளை எடுத்துரைத்திருந்தால்,பாஞ்சாலி ஐவருக்கும் மனைவியாக இருக்க நேர்ந்திராது.சூதாட்டம் இல்லை.துகிலுரிதல் இல்லை.வனவாசம் இல்லை.பாரதப் போர் இல்லை.ஆனால் அவன் சொல்லவில்லை.ஏன் ?அவனாகவே முன்வந்து ஏதாவது வருவதுரைத்தால் அவன் தலை சிதறும் என்பது விதி.அது போல் நமக்கும் சாபம் ஏதாவது இருந்தால் பொறுமை காப்போமோ என்னவோ.?

சாபம் ஏதுமின்றியே பொறுமையாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.பல நேரங்களில் மந்திரத் தண்ணீர் இல்லாமலே வாயை மூடிக் கொண்டிருக்கப் பழகுங்கள்.வள்ளுவர் சொல்கிறார்

 ”யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்  பட்டு.”

எனவே யோசித்துப் பேசுங்கள்

கோபம் வரும்போது பேச்சைத் தள்ளிப் போடுங்கள்.

நலமோடு வாழுங்கள்

(ஸ்வாமி பித்தானந்தவின் உரையிலிருந்து)


செவ்வாய், ஏப்ரல் 21, 2015

பெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா?



ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களின்  சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் .நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே

வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விடை சொன்னால்தான் திருமணம் எனச் சொல்லி யிருந்தாள்.கேள்விஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்”.

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை.கடைசியாக  சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்அவள் சொன்னாள்விடை சொல்கிறேன்.  அதனால்அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்”

 அவன் சொன்னான் “என்ன கேட்டாலும் தருகிறேன்”

அவள் சொன்னாள்”தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் மற்ற மன்னனிடம் சொல்லி அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது;இவனுக்கு நாடும் கிடைத்தது.

கிழவியிடம் வந்தான்  வேண்டியதைக்கேள் என்றான்.

அவள் கேட்டாள்”நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்

அவள் சொன்னாள்.”நாம் தனியாக இருக்கும் போது கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;தனியே இருக்கும்போது அழகிய பெண்ணாக இருந்தால் வெளியே செல்கையில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன்.எது உன் விருப்பம்?”

அவன் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீதான் எடுக்க வேண்டும்”

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!”

ஆம்!

பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல் படுங்கள்!

(சுகி சிவம் சொல்லக்கேட்டது)

வியாழன், ஜனவரி 08, 2015

வினை விதைத்தவனும்,தினை விதைத்தவனும்!i



ஒரு மன்னன் இருந்தான்

அவனுக்கு வாரிசு இல்லை.

வயதான காலத்தில்  தனக்குப் பின் நாட்டை ஆளத் தகுதியான ஒருவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினான்

அந்நாட்டிலிருந்த சிறுவர்கள் அனைவரையும் அழைத்து வரச் செய்தான்

அவர்களிடம் சொன்னான்”எனக்கு வயதாகி விட்டது.உங்களில் ஒருவனை நான் அடுத்த மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்போகிறேன்.”

சிறுவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்

மன்னன் தொடர்ந்தான்”நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தரப்போகிறேன்.அது மிக விசேடமானது.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,அதை ஒரு தொட்டியில் ஊன்றித் தினம் தண்ணீர் ஊற்றிக் கவனமாக வளர்த்து ஓராண்டுக்குப் பிறகு நீங்கள் வளர்த்த செடியுடன் வரவேண்டும் .நான் அதைப் பார்த்து முடிவெடுப்பேன்.”

எல்லாச் சிறுவர்களும் ஆளுக்கு ஒரு விதையுடன் திரும்பினர்

அவர்களில் ராமுவும் ஒருவன்

அவன் ஆர்வத்துடன் அந்த விதையைத் தொட்டி மண்ணில் ஊன்றித் தினம் தண்ணீர் ஊற்றி வரலானான் .பத்துநாட்களுக்குப் பின் பல சிறுவர்கள் அவர்கள் செடி முளைக்கத் தொடங்கி விட்டதைப் பற்றி பெருமை பேசினர்.ஆனால் ராமுவின் தொட்டியில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.நாட்கள் மாதங்கள் ஆயின.மற்றச் சிறுவர்கள் ஆகா ஓகோ என்றெல்லாம் சொல்கையில் ராமுவின் தொட்டியில் எதுவும் முளைக்கவில்ல.

ஓராண்டு சென்றது.எல்லாச்சிறுவர்களும் தத்தம் தொட்டியை,அழகிய செடியுடன் கூடிய தொட்டியை எடுத்துச் செல்ல,ராமு மட்டும் காலித்தொட்டியை எடுத்துச் சென்றான். அவனுக்குப்  போக மனமில்லைதான்,ஆனால் மன்னன் கட்டளையை மீற முடியாது. தன்முயற்சி பலனற்றுப் போனது தெரிந்து மன்னன் கோபித்தாலும் உண்மையைத் தெரிவிப்பது கடமை என எண்ணினான்.

அனைவரும் அரண்மனையில் குழுமியிருக்க.மன்னன் பார்வையிட்டவாறு வந்தான்..அவன் பார்வை ராமுவின் தொட்டி மீது விழுந்தது.ராமுவை அழைத்தான்.ராமு பயந்து கொண்டே சென்று மன்னனிடன் நடந்ததைச் சொன்னான்.

மன்னன் அறிவித்தான்”இதோ இந்தச் சிறுவன்தான் இந்நாட்டு அடுத்த மன்னன்.உங்கள் அனைவருக்கும் ஓராண்டுக்கு முன் ஒரு விதையைக் கொடுத்தேன்.அது முளைக்க முடியாத வேக வைத்த விதை.இவனைத்தவிர அனைவரும் என்னை திருப்திப்படுத்த பொய்யான தொட்டிகளைக் கொண்டு வந்தீர்கள்.ஆனால் இச்சிறுவன் மட்டுமே உண்மையைச் சொல்ல முன் வந்தான்.நேர்மை இருக்கிறது இவனிடம்.எனவே இவனே எதிர்கால மன்னன்."

ஆம்.எதை விதைக்கிறோமோ அதுதான் முளைக்கும்

நேர்மையை விதையுங்கள்.நம்பிக்கையை அறுவடை செய்யுங்கள்

கடின உழைப்பை விதையுங்கள்;வெற்றியை அறுவடை செய்யுங்கள்

நல்லதை விதையுங்கள்;நல்லது கிடைக்கும்

தீயதை விதையுங்கள்;தீயதே கிடைக்கும்

இன்றைக்கு விதைப்பதின் பயன் ஒருநாள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!


(எங்கோ படித்த கதை)

செவ்வாய், ஜூன் 11, 2013

அவள் என்னை ஏமாற்றினாளா?



இது ஒரு குட்டிப் பதிவு

ஒரு சிறுவனும் சிறுமியும் விளயாடிக் கொண்டிருந்தனர்.

சிறுவனிடம் அழகான கோலிக் குண்டுகள் இருந்தன.

சிறுமியிடம் இனிய மிட்டாய்கள் இருந்தன.

சிறுவன் சொன்னான்”நீ உன்னிடம் இருக்கும் எல்லா மிட்டாய்களையும் எனக்குக் கொடுத்தால் நான் என்னிடம் இருக்கும் எல்லாக் கோலிகுண்டு          களையும் உனக்குத் தருவேன்”

சிறுமி ஒப்புக் கொண்டாள்.

சிறுவன் அவளுக்குத் தெரியாமல் மிக அழகிய கோலிக்குண்டு ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு,மீதியைக் கொடுத்தான்.

ஆனால் சிறுமி தன்னிடம் இருந்த எல்லா மிட்டாய்களையும் அவனுக்குக் கொடுத்தாள்.

அன்றிரவு சிறுமி வழக்கம் போல் நிம்மதியாக உறங்கிப் போனாள்.

ஆனால் சிறுவனோ தான் கோலியை மறைத்தது போல் அவளும் மிட்டாய்களை மறைத்திருப்பாளோ என்ற எண்ணத்திலேயே தூக்கம் இழந்தான்.

ஆம்!உறவுகளும் அப்படித்தான்.

பரஸ்பர உறவுகளில் நாம் நூறு விழுக்காடு உண்மையாக இல்லையெனில், நமக்கு மற்றவரும்  நூறு விழுக்காடு உண்மையானவர்களாக இருந்தனரா என்ற சந்தேகம் அரித்துக் கொண்டிருக்கும்.

நம்மைப் போல் அவர்களும் ஏதேனும் மறைத்திருப்பரோ என்ற எண்ணமே உறவைப் பாழ்படுத்தி விடும்.

இதைப் புரிந்து நடந்தால் உறவுகள் மேம்படும்.



திங்கள், மே 23, 2011

கோபம் என்னவெல்லாம் செய்யும்?-ஒரு குட்டிக் கதை!

சென்ற பதிவில் கோபம் பற்றி எழுதியிருந்தேன்.

கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஒரு ஜாலியான குட்டிக் கதை, நான் பள்ளி நாட்களில் கேட்டது , என் நினைவுக்கு வருகிறது.

ஓர் ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர்.வறுமை நிறைந்த வாழ்க்கை .

ஒரு நாள் அக்கணவன் அரசரமரத்தடிப் பிள்ளையார் முன் அமர்ந்து தன் நிலை குறித்துப் புலம்பிக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கு ஒரு சாது வந்தார்.அவனைப்பார்த்து என்ன விஷயம் என்று கேட்க அவன் தன் வறுமை நிலையைச் சொன்னான்.

சாது அவனிடம் மூன்று தேங்காய்கள் கொடுத்துச் சொன்னார்”.உனக்கு வேண்டியதைக் கேட்டு ஒரு காயை உடைத்தால்,அது உடனே கிடைக்கும். கவனமாகப் பயன் படுத்து ” என்று.

அவன் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான்.மனைவியிடம் தேங்காய்களைக் காட்டி செய்தியைச் சொன்னான். அவனுக்கு ஒரு பெரிய மாளிகை வேண்டும் என்று ஆசை. எனவே அதுவே முதலில் கேட்கலாம் எனச் சொன்னான்.

மனைவிக்கு நகை வேண்டுமென்று ஆசை;எனவே அதுவே முதலில் கேட்க வேண்டும் என்று சொன்னாள்.

இருவருக்கும் விவாதம் வலுத்தது.சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தபோது அவன் அதிகக் கோபமடைந்து,கையில் இருந்த தேங்காயைத் தூக்கிப் போட்டு உடைத்துக் கத்தினான் ”மயிர்தான் கிடைக்கும் போடீ” என்று.

உடனே எங்கு பார்த்தாலும் முடி;அவர்கள் உடலெல்லாம் முடி.வீடு முழுவதும் முடி.என்ன செய்வது.ஒரே வழிதான்.

இன்னொரு தேங்காயை உடைத்துக் கொண்டே சொன்னான்” முடியெல்லாம் போகட்டும்”

உடனே எல்லா முடியும் போய்விட்டது.இருவர் தலையிலும் இருந்த முடியும் போய் வழுக்கைத்தலை ஆகி விட்டது. மீண்டும் பிரச்சினைதான். இப்போது என்ன செய்வது?

மூன்றாவது தேங்காயை உடைத்துக் கொண்டே சொன்னான்”முன்பு இருந்த முடியெல்லாம் வந்து, பின் வந்த முடியெல்லாம் போகட்டும் “ என்று.

நிலைமை முன்பு போலவே ஆயிற்று.

அவர்கள் வறியவர்களாகவே இருந்தனர்.

மூன்று தேங்காய் உடைத்தும் எந்த மாற்றமும் இல்லை.

என்ன காரணம்?

இக்கதை சொல்லும் நீதிகள் என்ன?

உங்கள் கருத்துக்களுக்குக் காத்திருக்கிறேன்.

ஒழுங்காகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போங்கள்(ஓட்டும்தான்).

இல்லையேல் உங்களுக்காக ஒரு தேங்காய் உடைத்து விடுவேன்,ஜாக்கிரதை!!