தொடரும் தோழர்கள்

சனி, ஜனவரி 25, 2014

masks(முகமூடிகள்)



சிலர் ஆங்கிலக் கவிதையையும் வெளியிட்டிருக்கலாமே என்று கருத்துத் தெரிவித்தபடியால் என் சென்ற பதிவின் ஆங்கில மூலம் இங்கே........


                                                        MASKS

As I  stare out of the window

Colorful masks stare back at me;
Some are happy, a few sad & a few angry!
I speculate about the real face behind this facade…
What are they concealing behind these colorful disguise?
Why do they hide themselves behind these masks?
I wonder…..
What mask am I wearing?
I try to portray a cheerful face camouflaging my sorrows!
Suppressing my dislike & disguising it with affection;
Alas but actually I am one among them. L
Though I know people are cloaking their real faces
I have failed to comprehend the real nature of many;
Is it because I do not want to see their true face
Or is it that I am too much attached to them that I refuse to see it!!
Nevertheless life has been a wonderful teacher….
Educating me to accept people & things as they are!!!
Refusing to acknowledge, leads to misery & loneliness;
Enjoy the masquerades & laugh out…..
Let us all join the drama by wearing our own MASKS!!


முகமூடி வாழ்க்கை!



சன்னல் வழியாகப் பார்க்கிறேன்

என்னைப் பார்க்கும் எண்ணற்ற முகமூடிகளை!

எத்தனை உணர்ச்சிகள்?-மகிழ்ச்சியாய்,கவலையாய் ,

எள்ளலாய்,வெறுப்பாய்.வேதனையாய்......

எண்ணிப்பார்க்கிறேன்..முகமூடிகளுக்குப் பின் உள்ள

முகங்கள் எப்படி இருக்கும்?

முகமூடிகள் எதை மறைக்கின்றன?

முகங்கள் எல்லாம் ஏன்

முகமூடி அணிந்தே இருக்கின்றன?

உள்நோக்கிப் பார்த்தால்

நானும் அப்படித்தானே!

துயரங்களைப் புன்னகையால் மறைத்து

அருவருப்பை அன்பாக மாற்றிக்காட்டி

ஆம்!

நான் மட்டும் வேறா என்ன?

நானும் ஒருவன்தான் இக்கூட்டத்தில்!

உண்மை முகம் ஒருவரும் காட்டுவதில்லை

உணர்கிறேன் இதை நான் உண்மையாய்

ஆனாலும்

அறிய முடியவில்லையே அவர்கள்

உண்மை உள்ளப்போக்கை என்னால்!

உள்ளிருக்கும் முகம் காண விருப்பமில்லையா?

போலி நாடகத்தின் உயிருள்ள பாத்திரமாகப்

போனதை விரும்புவதாலா?

வாழ்க்கை ஒரு நல்ல ஆசான்!

மனிதர்களை,அவர்கள் நடத்தையை

அப்படியே ஏற்றுக்கொள்ளக்

கற்றுக் கொடுத்திருக்கிறது.

இல்லையெனில்

ஏமாற்றமும் துயரும்தான்

என்றுமே மிஞ்சும்!

வாருங்கள்,!

இந்த மாறுவேடப்போட்டியில்

நாமும் நம் முகமூடிகளை அணிந்து

மகிழ்வோம்,சிரிப்போம்

உண்மைகளை மறைத்து!

இதுவே

வாழும் வழி!!!!

( an english poem by Srividhya Hariharan..........my daughter!)








புதன், ஜனவரி 15, 2014

பாதை முடிவதில்லை!



போக வேண்டிய பாதை நீ....ண்டு கிடக்கிறது

வளைந்து நெளிந்து,சில இடங்களில் பிரிந்து

இலக்கற்ற இப்பயணத்தில் செல்வதெங்கே!

கிளைச் சாலைகளின் சந்திப்பில்,யோசனைதான்

எப்பக்கம் செல்வது,எது சிறந்தது என்ற யோசனை

இலக்கேதும் இல்லையெனில் எங்கு சென்றால் என்ன?

எல்லாமே ஒன்றுதான்!எதுவுமே நன்றுதான்!

பாதை ஒன்று போல் எங்கும் இருப்பதில்லை

அழகான வழுக்கிச் செல்லும் சிமிண்ட் சாலை சில தூரம்

அங்கும் இங்கும் குழி நிறைந்த பாதை பல நேரம்

கள்ளும் முள்ளும் கூடக் கலங்க வைக்கும் ஆங்காங்கே

சின்ஞ்சிறு கற்கள்,பென்னம்பெரும் பாறைகள்

அத்தனையும் கடந்து

மகிழ்ந்து,வருந்தி,வலியுடன், உற்சாகமாய்

போய்க் கொண்டுதான் இருக்கிறது பயணம்!

இலக்கின்றி!

கைகோர்த்து உடன் வர ஒருவரும் இல்லாத

வெறும் பயணம்!

பயணப்பாதையில் சந்திப்புகள் அநேகம்

எதிர்ப்பட்டு அறிமுகமாவோர்

உரையாடிச் செல்வோர்

சிறிது தொலைவு உடன் வருவோர்

எத்தனை வித மனிதர்கள்!

யார் வந்தால் என்ன

யார் போனால் என்ன

பாதை எப்படி இருந்தாலும்

பயணிக்கையில் என்ன நடந்தாலும்

பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்!

பயணம் ஒருநாள் முடியும்

பாதை முடிவதில்லை.!


புதன், ஜனவரி 08, 2014

நடு நிசிப் பசி!



பசி!

பயங்கரப் பசி!

இது வரை இந்த மாதிரி ஒரு பசி வந்ததில்லை.

வயிற்றுக்குள் ஏதோ பிறாண்டுவது போல ஓர் உணர்வு.

ஏழு மணி வாக்கில் அம்மா கையில் மோர் சாதம்(தொட்டுக் கொள்ளக் குழம்புடன்) போட்டு, பஜனை மடத்துக்கு அழைத்துப் போனாள்.

அங்கே போய்ச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் தூக்கம் வந்தது.மடத்தின் திண்ணையில் படுத்து தூங்கி விட்டான்;அவனைப் போல் பல சிறுவர்கள்!

“டேய் சேகர்!எழுந்திரு;ஆத்துக்குப் போகலாம்” அம்மா அவனைத் தட்டி எழுப்பிய போது விழித்துக் கொண்டான்.

அவன் பசியும் விழித்துக் கொண்டது.

வயிற்றைத் தடவிக் கொண்டான்.

அம்மாவின் கை பிடித்து வீடு நோக்கி நடக்கும்போது அம்மாவிடம் சொன்னான்”அம்மா, 
பசிக்கிறது”

”வேகமா வா ;பாதி ராத்திரில பசிக்கறதுன்னா என்ன பண்றது.போய்த் தண்ணியைக் குடிச்சிட்டுப் படு”..அம்மா.

வீடு வந்து சேர்ந்தார்கள்.

”படுத்துக்கோ”

முடியவில்லை;காலி வயிறு சங்கடம் செய்தது.

“அம்மா!ரொம்பப் பசிக்கிறது;ஏதாவது குடு”அழ ஆரம்பித்தான்.

அம்மா அவனை அனைத்துக்கொண்டாள்”தூங்கினா சரியாயிடும்”

அழுகை அதிகமாகியது.

அந்தச் சிறு வீட்டை ஒட்டி அதே போல் மற்றொரு வீடு.

நடுவில் மெல்லிய சுவர்.

ஒரு வீட்டில் பேசுவது மறு வீட்டில் கேட்கும்.

பக்கத்து வீட்டிலிருந்து குரல் வந்தது”ராஜம்!குழந்தை ஏன் அழறான்?”

“பசிக்கறதுன்னு அழறான் மாமி”

சில விநாடிகளில் கதவு தட்டப்பட்டது”கதவைத் திற”

மாமி உள்ளே வந்தாள்”சாயங்காலம் தோசைக்கு அரைச்சயே,எடு”

மாமியிடம் எப்போதும் எல்லாம் அதிகாரம்தான்.

அம்மா எடுத்துக் கொடுக்கிறாள்.

”கும்மட்டி அடுப்பை எடு;பற்ற வை”

அம்மா செய்கிறாள்

தோசைக்கல்,எண்ணெய் ஒவ்வொன்றாய் வருகின்றன,

சில நிமிடங்களில் இரண்டு தோசைகள் தயார்.

“இந்தாடா!சாப்பிட்டுட்டுப் படு”

மாமி செல்கிறாள்”கதவைத் தாப்பாள் போட்டுக்கோ”

சிறுவன் வயிறு நிரம்பியதும் நிம்மதியாகத் தூங்க ஆரம்பிக்கிறான்

அம்மா மாவுப் பாத்திரத்தை எடுத்து மூடி வைக்கிறாள்

“காத்தாலே நாலு கொழந்தைகளுக்கும் ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னால.இட்லி வார்த்துக் குடுக்கணும்.கொஞ்சம் மாவு கொறஞ்சு போச்சு.பரவாயில்ல.எனக்கு எதுவும் வேண்டாம்; அவா சாப்பிட்டாப் போறும்”

தனக்குத் தோன்றாததை உடன் தானே வந்து செய்த மாமிக்கு நன்றி கூறிக் கொள்கிறாள்.
..............
............
அந்தச் சிறுவன் யாரென்று நான் சொல்ல வேண்டுமா?!