தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 09, 2016

இப்படியும் நடக்குமா?!



அந்தப் பாம்பு இரைதேடி அலைந்து களைத்துப்போயிருந்தது.

ஊர்ந்து ஊர்ந்து உடலெல்லாம் வலியெடுத்திருந்தது.

இப்போது அதற்கு மறைவாகப் படுக்க ஓர் இடம் தேவை   
  .
எதிரிகள் கண்ணில் படாத ஒரு மறைவிடம்.

குறிப்பாக இந்த மனிதர்கள் கண்ணில் பட்டு விடக்கூடாது.

இந்தப்பாம்பு தீமை செய்யுமா என்று கூட யோசிக்காமல் அடித்து நார் நாராக உரித்து விடுவர்.

தேடி அலைந்தது.

கூரை மேலிருந்து கிழே பார்த்தது.

ஒரு துளை தென்பட்டது.

அதோ ஒரு துவாரம்.அப்பா!அதனுள் சென்று ஓய்ந்து படுத்து விடலாம்.

உடலை வளைத்துச் சுருக்கிக் கீழே பாய்ந்தது,நேராக அந்த ஓட்டைக்குள்!

உள்ளே நுழைந்த மறுகணம்  துளை மூடியது.மேலும் கீழுமாகக்கூர்மையான ஆயுதம் வந்து அதை நறுக்கியது

பாம்பு தலை வெட்டுண்டு இறந்தது.

எமன் வாயில் விழுவதென்பது இதுதானோ?!

செய்தி: இந்தூர் அருகே ஓர் ஊரில் வாயைத்திறந்தபடி உறங்கிக் கொண்டிருந்த ஒரு வாலிபரின் வாயில் கூரையிலிருந்து பாம்பு விழுந்தது.தூக்கத்திலேயே வாலிபர் அதைக் கடித்துத்தலையைத் துண்டித்து விட்டார்.சிறிது நேரம் சென்று அறைக்குள் வந்த அவர் அம்மா அவர் வாயில் ரத்தத்தையும்,கீழே கிடக்கும் பாம்பின் துடிக்கும் உடலையும் பார்த்துக் கத்திய பின்பே விழித்துக் கொண்டார்!பின்னர் மருத்துவ உதவி இத்யாதி,இத்யாதி.......

பாம்புக்கு நேரம் சரியில்லை!

உண்மை சில நேரங்களில் புனைவை விட விசித்திரமானது!