ஒரு திரை இசை.
வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்.
"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு" என்று துவங்கும் பாடல்.
அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்!
காரணம்,பாடல் வரிகளா?
பாடிய பாடகியின் குரலா?
படத்தில் ஆடிய மாளவிகாவின் ஆட்டமா?
இருக்கலாம்.
ஆனால் நிச்சயமான காரணம்......
அப்பாடலின் ஒரு வரி!
"நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜனிகாந்தும் கருப்புதான்
அழகு கருப்புதான்"
இது போதாதா பாடல் ஹிட்டாக....!
சரி,இதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு?
காலா என்றால் இந்தியில் கருப்பு என்று பொருளாம்.
இந்தியில் ஒரு விசித்திரம்.எல்லாவற்றுக்கும் பால் உண்டு....
கண் ஆண் பால்,மூக்கு பெண்பால் என்பது போல்
அது போல் காலா என்பது காலி என்றும் மாறும்,அது குறிக்கும் பொருளைப் பொறுத்து.
அது தவிர க,ச,ட,த,ப என்ற எழுத்துக்களுக்கு நான்கு வர்க்கங்கள்!
டில்லிக்குப் போன புதிதில் ஒரு முறை அலுவலகத்தில் ஊழியரை அழைத்து ஒரு காலி கோப்பு கொண்டு வரச் சொன்னேன்.
அவர் விழித்து விட்டு அப்படியெல்லாம் கோப்பு கிடையாதே என்றார்
நான் என் தேவையை விளக்கினேன்.
ஓ! காலி கோப்பா என்று சொல்லி விட்டுக் கொண்டு வந்தார்.
என்ன இது குழப்பம் என்கிறீர்களா?
நான் கேட்டது kaaலி கோப்பு.அதாவது கருப்புக் கோப்பு!
அவர் சொன்னது khaali கோப்பு.அதாவது புதிய,எதுவும் கோக்காத கோப்பு.
தவறான உச்சரிப்பின் விளைவு!
இப்போது கருப்புக்கு வருவோம்.
அழகு கருப்புதான் ...பாடல் வரி
உண்மைதான்.
"கருப்பே ஒரு அழகு காந்தலே ஒரு ருசி " என்று சொல்வார்கள்.
உலக அழகி கிளியோபாட்ரா கருப்பு என்று சொல்வோர் உண்டு;இல்லை என்போரும் உண்டு .
காக்கும் கடவுள் திருமாலே கருப்பு நிறம்தான்.
ஆனால் அதைக் கருப்பு என்று சொல்லாமல் பச்சை என்றும்,இராமனை நீல வண்ணன் என்று சொல்வர்.
பச்சை மாமலைபோல் மேனி என்று பாடுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
மையோ,மரகதமோ,மழைமுகிலோ...ஐயோ என்று வர்ணிக்க முடியாமல் தவிக்கிறார் கம்பர்.
திருமால் படுத்துக் கிடப்பதனால் பாற்கடலே பச்சை நிறமாகி விட்டதாம்.
நாமும்தான் தினம் காக்கையைப் பார்க்கிறோம்.
ஆனால் பாரதி பார்க்கும்போது அவனுக்கு ........
காக்கைச் சிறகினிலே நந்தலாலாவின் கருமை நிறம் தோன்றுகிறது.
காலா என்றால் எமனை விளிப்பது.
எவரேனும் எமனை விளிப்பரா?
காலனுக்கும் காலன் உண்டா?
அவன்தான் காலகாலன்.......சிவன்.
மார்க்கண்டேயன் உயிரைக்கவர்ந்து செல்ல எமன் வந்தபோது,மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்ள சிவன் தோன்றி எமனைக் காலால் உதைத்து சூலத்தை ஓங்குகிறார்
எமன் மன்னிப்பு வேண்டித் தப்பிக்கிறான்
காலனைக் காலால் உதைக்கும் துணிச்சல் சிவனைத்தவிர,இவனுக்கும் இருந்தது
பாரதி!
காலருகே வா உன்னை மிதிக்கிறேன் என்கிறான்.
சாவைக் கண்டு அஞ்சாத அத்துணிவு எல்லோருக்கும் வேண்டும்!
இறுதியாக,ஆனால் முதன்மையான ஒரு செய்தி
காலா என்பது சூப்பர் ஸ்டாரின்,ரஞ்சித் இயக்கும் படத்தின் தலைப்பு.
படம் இமாலய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.