தொடரும் தோழர்கள்

வெள்ளி, மே 05, 2017

கொழு கொழு கன்னே......

சென்ற இடுகையின் முடிவில் கண்ணனைத் தவிர மற்ற ஆயர்கள் கையில் இருப்பது ஒரு கோலன்றிக் குழல் இல்லை என்று சொல்லியிருந்தேன்.

அது ஒருகதையை நினைவூட்டுகிறது.

குழந்தைகளுக்கான கதை.

படிக்கப் பொறுமை தேவை

கதை முடிவில் கதையின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வேன்
..........
ஒரு ஈ.

அதற்குத் தன் பெயர் மறந்து விட்டது.

அலைந்து திரியும்போது ஒரு கன்றுக்குட்டியைப் பார்த்தது.

அதனிடம் சென்று”கொழு கொழு கன்னே என் பேரென்ன ”என்று கேட்டது

கன்று சொன்னது”எனக்குத் தெரியாது;என் அம்மாவைக் கேள்”

ஈ பசுவிடம் சென்று கேட்டது”கொழு கொழு கன்னே,கன்னுந்தாயே என் பேரென்ன”

அது சொன்னது”எனக்குத் தெரியாது என்னை மேய்க்கும் ஆயனைக் கேள்”

ஈ ஆயனைக் கேட்டது”கொழு கொழு கன்னே கன்னுந்தாயே,தாயை மேய்க்கிற ஆயா,என் பேரென்ன”

ஆயன் சொன்னான்”எனக்குத் தெரியாது.என் கைக் கோலைக் கேளு” (தொடர்பு வந்தாச்சா!)

ஈ கோலைக் கேட்டது”கொழு கொழு கன்னே,கன்னுந்தாயே,தாயை மேய்க்கிற ஆயா,ஆயன் கைக் கோலே,என் பேரென்ன”

கோல் சொன்னது” எனக்குத் தெரியாது.நான் இருந்த மரத்தைக் கேள்”

ஈ மரத்திடம் சென்று..........

(இதற்கு மேல் விளக்கமாக எழுதினால் அடி நிச்சயம்!)

இவ்வாறாக,மரம்,மரத்தில் இருக்கும் கொக்கு,கொக்கு நீராடும் குளம்,குளத்தில் இருக்கும் மீன்,மீன் பிடிக்கும் வலையன்,வலையன் கைச்சட்டி,சட்டி செய்யும் குயவன்,குயவன் மண் எடுக்கும் நிலம்,நிலத்தில் இருக்கும் புல்,புல் தின்னும் குதிரை வரை போகும்.

ஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் திரும்பிச் சொல்ல வேண்டும்.

கடைசியில்குதிரை ஈ ஈ ஈ என்று கனைக்கும்

ஈக்குப் பெயர் தெரியும்.

இதன்  முக்கியத்துவம் நினைவாற்றலை வளர்ப்பது.வரிசை மாறாமல் ஒவ்வொரு முறையும் சொல்லப் பயிற்சி.

ஒரு காலத்தில் கதை கேட்பது குழந்தைகளுக்குப் பிடித்திருந்தது.

அநேகமாக,வீட்டில் இருக்கும் பாட்டிதான் கதை சொல்லி.

கர்ண பரம்பரையாகக் கதைகள் வருவதுண்டு.

சாப்பிடும்போது கதை சொல்லிச் சோறு போடுவது வழக்கமாக இருந்தது.

கதை கேட்டபடி சாப்பிட்டால் இரண்டு பிடி அதிகமாக உள்ளே போகும்.

இன்றைய குழந்தைகள் அந்தச் சுகத்தை இழந்து விட்டார்கள்.

குழந்தைக்குக் கதை சொல்வது போல்,குழந்தைகளுக்குக்காகக் கவிதை எழுதுவதும் விசேடமானது

குழந்தைக் கவிதை என்று சொன்னால் நினைவுக்கு வருபவர்,அழ.வள்ளியப்பா அவர்கள்.

அவரது ஒரு கவிதை

எளிமையான,நல்லது சொல்லும் கவிதை

”பட்டை போடப் போடத்தான்
பள பளக்கும் வைரமே
மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினுமினுக்கும் தங்கமே
அரும்பு விரிய விரியத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே
அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே.

பாரதியும் ஒரு குழந்தைக்கவிஞன்தான் ஒரு கோணத்தில்

ஓடி விளையாடு பாப்பா என்று பாடுபோது அறிவுரைகள் சொல்கிறான்

அடிமைகளாய் வாழ்ந்த காலகட்டம் எனவே அழுத்தமாகச் சொல்கிறான்

”பாதகம் செய்வோரைக் கண்டால்
நீ பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விட்டு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”

குழந்தை மனிதனின் தந்தை என்றான் ஒரு கவிஞன்

மீண்டும் குழந்தைகளுக்காகக் கதைகள் சொல்லப்பட வேண்டும்

Irony of life....அம்மாவுக்கு உணவளிக்கும் போது சில நேரங்களில் இப்போது நான்  தமாசாக ஈக்கதையைச் சொல்கிறேன்...!10 கருத்துகள்:

 1. கதைகள் குழந்தைகள் தயாராயினும் கதை சொல்வதற்கு தாத்தா - பாட்டி வீட்டில் இல்லையே ஐயா.

  முதியோர் இல்லம் போகவேண்டும்

  பதிலளிநீக்கு
 2. கேட்ட கதைகளே என்றாலும் தங்கள் மூலம் கேட்பதிலுள்ள சுகமே தனியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. குழந்தைகளுக்காகக் கதைகள் சொல்லப்பட வேண்டும்
  உண்மைதான் ஐயா
  ஆனால் சொல்வதற்குத்தான் ஆட்கள் இல்லை

  பதிலளிநீக்கு
 4. மனமார்ந்த நன்றி. என் பேத்திகளுக்கு சொல்ல உங்கள் தளத்தில் நிறைய பொக்கிஷங்கள் கிடைக்கும் போல இருக்கிறதே.

  //(இதற்கு மேல் விளக்கமாக எழுதினால் அடி நிச்சயம்!)//

  இல்லை. இல்லை. மாலை போட்டு பாராட்ட என்னைப்போல் சிலர் தயாராகத்தான் இருப்பார்கள். அவர்களுக்காக முழுதும் பதியுங்கள்

  பதிலளிநீக்கு
 5. குழந்தைப் பாடல், குழந்தைக் கவிதை, குழந்தைக் கதை எழுதுவோர் அருமை!

  சிறந்த படைப்பு

  பதிலளிநீக்கு
 6. சுவாரஸ்யமான பதிவு. நினைவுகளை மீட்டும் பதிவு. காக்கை வடை சுட்ட கதை, குருவி ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் மொள்ளும் கதை, முயல் ஆமை முயலாமைக் கதை போன்றவை சிரஞ்சீவிக் கதைகள்.

  பதிலளிநீக்கு
 7. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
  இக்கதையின் மூலமாக பல செய்திகள் உணரப்படுகின்றன ஐயா. நினைவாற்றல், ஆர்வம், ஈடுபாடு, மரியாதை உள்ளிட்ட பலவற்றை இவ்வகை கதைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

  பதிலளிநீக்கு
 8. சொல்றதுக்கும் பாட்டி இல்லை ,படிக்கிறதுக்கும் வாண்டுமாமா ,முயல் ,அணில் ,கோகுலம் ,முத்து காமிக்ஸ் (இரும்பு கை மாயாவியை மறக்க முடியுமா ),அம்புலிமாமா போன்ற சிறுவர் இதழ்களும் இன்றில்லையே :)

  பதிலளிநீக்கு
 9. கதைகள் கேட்டபடி குழந்தைகள் சாப்பிட்ட காலம் போய் இப்போது IPad ஐ பார்த்துக்கொண்டே அல்லவா சாப்பிடுகிறார்கள். ‘மீண்டும் குழந்தைகளுக்காகக் கதைகள் சொல்லப்பட வேண்டும்’. என்ற தங்களின் கருத்து ஏற்புடையதே

  பதிலளிநீக்கு
 10. ரசித்து வாசித்தோம் சார். அருமையான பதிவு. கதைகள் சொல்லப்பட வேண்டும்..

  கீதா: இந்த ஈ கதையை நான் சிறு வயதில் கேட்டு சொல்லியிருக்கிறேன்...நல்ல நினைவாற்றலை வளர்க்கும் ஒன்று. என் மகனுக்கும் சொல்லியிருக்கிறேன். என் மகன் வரை கதை சொல்லும் பழக்கம் இருந்தது. இனி வரும் அடுத்த தலைமுறைக்கும் நான் சொல்ல ரெடியாக இருக்கிறேன். இறைவன் அதற்கான என் ஆயூளைத் தர வேண்டும்!!! ஆயுள் மட்டுமல்ல நினைவாற்றலையும்!!! என்றும் வேண்டிக் கொள்வதுண்டு. எத்தனை கதைகள் கேட்டதுண்டு. இந்த ஈ கதையை நாங்கள் குழந்தைப் பருவத்தில் கொஞ்சம் வளர்ந்த பிறகு வட்டமாக உட்கார்ந்து கொண்டு விளையாடுவது உண்டு....முதலில் கேட்பவள் ஈ...அடுத்து இருப்பவள் கன்றுகுட்டி இப்படிச் செல்லும்....யார் இடையில் எதையேனும் விட்டு விடுகிறார்களோ அவர் அவுட். இப்படி...நல்ல பதிவு சார்

  பதிலளிநீக்கு