தொடரும் தோழர்கள்

சனி, பிப்ரவரி 14, 2009

ஆதலினால் காதல் செய்வீர்!

காதல் பற்றி பாரதி
----------------
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்.நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின்றாரே.

வியாழன், பிப்ரவரி 12, 2009

சூப்பர் ஸ்டார்!

நாள்-31-12-2006
இடம்-பார்க் ஷெராட்டன் ஹோட்டல்,சென்னை
நேரம்-இரவு 9.00 மணி.
நான் என் நண்பர்கள் மூன்று பேருடன் இரவு உணவை முடித்துக் கொண்டு புறப்படத்தயாராகிறேன்.

அந்த நேரத்தில் அந்த முன்னணிக் கதாநாயகர் தன் மனைவி மற்றும் நண்பர்களுடன் தல காட்டுகிறார்.

அவரை முன்பே நண்பனின் மகன் திருமணத்தில் சந்தித்து அறிமுகம் உண்டு.

அவரைப் பார்த்ததும் வழமையான குசலம் விசாரிப்புக்குப் பின் நான் திடீரென்று அவ்ரிடம் சொன்னேன்.

”அடுத்த ஆண்டு நீங்கள்தான் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார்”

அவர் முகத்தில் வியப்பு கலந்த ஒரு மகிழ்ச்சி.

அவர் கேட்டார் “எப்படிச் சொல்கிறீர்கள்?”

என் நண்பர்கள் சொன்னார்கள் “ஸார்,ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர்”

நான் சொன்னேன்”உங்கள் முகத்தையும்,உங்களை நான் சந்தித்திருக்கும் நேரத்தையும் வைத்துக் கூறினேன்”
அவர் அப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் பற்றிப் பேசினோம்.

பின் அவர்களைப் பேச விட்டு விட்டு நான் டாய்லெட்டுக்குப் போய்விட்டேன்.
முடித்து விட்டு வெளியே வந்து பார்த்தால் அவ்ர் எனக்காகத் தனியாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

“நீங்கள் தொழில் முறை சோதிடரா?” அவர் கேள்வி.

“இல்லை.சோதிடம் எனது பொழுதுபோக்கு.நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே நான் பார்க்கிறேன்.
உங்களைப் பார்த்த அந்த வினாடியில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.சொன்னேன்”.-நான்

அவர் என் தொலை பேசி எண்ணைக் கேட்டு வாங்கித்தன் கை பேசியில் சேமித்துக் கொண்டார்.பின் சொன்னார்”நான் விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.”.

ஆனால் அதன் பின் அவரிடமிருந்து தகவல் ஏதுமில்லை.

அடுத்த ஆண்டு முடிவில், முன்பே சூப்பர் ஸ்டார் நடித்த ஒரு படம் மீண்டும் படமாக்கப் பட்டு, இவர் சூப்பர் ஸ்டார் நடித்த பாத்திரத்தில் நடிக்க,அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

என் சோதிடம் பலித்து விட்டதுதானே?

நானும் ஒரு குரு!(நமிதா ஒரு சிஷ்யை?!)

சமீபத்தில் நவயுக குரு ஒருவரின் ஆன்மீக/உடல்நலப் பயிற்சியின் அறிமுக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.முன்பே பயிற்சி பெற்று, பயிற்றுவிக்கும் தகுதி பெற்ற ஒருவர்தான் பொறுப்பேற்றிருந்தார்.சுமார் 30 பேர் வந்திருந்தார்கள்.அதில் சிலர் முன்பே பயிற்சி பெற்றவர்கள்.நிகழ்ச்சி தொடங்கியதும், அவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் அனுபவங்களைக் கூறினர்.ஒருவர்,தனக்கு நீரிழிவு நோய் தீவிரமாக இருந்ததாகவும், பயிற்சிக்குப் பின் இரத்தச் சர்க்கரை அளவு சாதாரணமாகி விட்டதாகவும் கூறினார். மற்றொருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருந்துகள் சாப்பிட்டு வந்ததாகவும்,பயிற்சிக்குப் பின் மாத்திரை சாப்பிடும் தேவையில்லாமல் போய் விட்டதாகவும் சொன்னார். இவ்வாறே மேலும் ஒரிருவர் தங்கள் அனுபவங்களை விவரித்தனர்.

இவற்றையெல்லாம் கேட்கும்போது எனக்கு வேறு ஒரு நினைவு வந்தது.கடற்கரை அல்லது வேறு சில மைதானங்களில் நடைபெறும் ஆன்மீக சுகமளிக்கும் அற்புதக்கூட்டங்கள் பற்றிய நினைப்பு.அங்கு “குருடர்கள் பார்க்கிறார்கள்,ஊமைகள் பேசுகிறார்கள்,முடவர்கள் நடக்கிறார்கள்”என்று விளம்பரம் செய்வார்கள்.கூட்டம் நடத்துபவர் பிரார்த்தனை செய்வார். பின் சிலர் சாட்சிகளாக வந்து தாங்கள் அற்புத சுகமடைந்ததைப் பற்றி விவரிப்பார்கள்.அந்த நினைவுதான் எனக்கு வந்தது.

ஏன் மக்கள் இந்த குருக்களைத் தேடி ஓடுகிறார்கள்?இவர்களிடம் என்ன இருக்கிறது?

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில்,எளிதாக மன அமைதியும் உடல் நலமும் பெறுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடும் மனிதனுக்கு,இந்த குருக்கள் ஒரு நல்ல வழியாகத் தெரிகிறார்கள் .இவர்களது தகுதிகள்-

1.பகவத்கீதை,உபநிடதங்கள்,வேதாந்த நூல்கள் பற்றிய அறிவு.

2.பிராணாயாமம்,யோகா பற்றிய அறிவு.அவற்றில் சில புதிய உத்திகள்.

3.பேச்சுத்திறமை.

நான் என்னையே எடை போட்டுப் பார்க்கிறேன்

1.சின்மயா மிஷனில் பகவத்கீதை,வேத பாராயணம்,சில உபநிடதங்கள்,ஆத்ம போதம்,விவேகசூடாமணி போன்றவற்றை சிறிது கற்றிருக்கிறேன்.

2.ஓரளவுக்குப் பேச்சுத்திறமை இருக்கிறது(வங்கிப் பணியில் அது இல்லாமல் இலக்குகளை எட்ட முடியுமா?)

3.மூச்சுப் பயிற்சி சிறிது செய்ததுண்டு.அதில் நல்ல திறமை பெறவேண்டும்.புதிய முறை ஒன்று துவங்க வேண்டும்.

4.கடைசியாக ஒரு உபரித் திறமை-சோதிடம் பற்றிய என் அறிவு.(ஓரளவுக்கு நல்ல சோதிடனாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறேன். சோதிடம் என் தொழில் அல்ல!)

எனவே,சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது!

(நமிதா ரசிகர்களுக்கு ஒரு வார்த்தை.நமிதா என்னிடம் பயிற்சி பெற்று ஒரு பயிற்சியாளராக மாறி அவரிடம் நீங்கள் பயிற்சி பெறும் காலம் வரலாம்!அந்த பொற்காலத்துக்காகக் காத்திருங்கள்!)

(பழைய வீட்டிலிருந்து-மீள்பதிவு)