தொடரும் தோழர்கள்
செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், மே 23, 2017
ரிவால்வர் ரீட்டா!
திருமண மண்டபம்.
உறவினர்களாலும் நண்பர்களாலும் நிறைந்திருக்கிறது.
திருமணமாகாத பல ஆண்களும் பெண்களும் நமக்கு ஒரு துணை இங்கு கிடைக்குமா எனக் கண்களை மேய விடுகிறார்கள்
குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
தாலி கட்டும் நேரம் வந்தாச்சு என்று உரத்த குரல் எழும்புகிறது.
மாப்பிள்ளை தாலியைக் கையில் எடுக்கிறார்.
சிலர் மேளக்காரரைப் பார்த்து ஒரு விரல் எழுப்பிப் பயமுறுத்த,,அவர் பயந்து போய் வேக வேகமாகக் கெட்டி மேளம் வாசிக்க தொடங்குகிறார்..
இதோ மாப்பிள்ளை தாலி கட்டப் போகிறார்.
”நிறுத்துங்கள்”
கெட்டி மேளச் சத்தத்தையும் மீறி ஒரு பெண்ணின் குரல்...
.
அவள்..
மண மேடை யருகே கையில் துப்பாக்கியுடன்...
அவளை சுற்றி ஆறு பேர் கையில் துப்பாகியுடன்.
எல்லோரும் திகைக்கிறார்கள்.
அந்தப் பெண் பேசுகிறாள்”இதோ இந்த மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கும் முருகன் என்னைக் காதலித்தான்.திருமணம செய்வதாக வாக்களித்தான்
ஆனால் இன்று என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டப் போகிறான்..,அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்”
உடன் நிற்கும் ஆண்களைப் பார்த்துக் கையசைக்கிறாள்.
அவர்களில் நால்வர் பாய்ந்து மேடை மீது ஏறி மாப்பிள்ளையை அமுக்கிப் பிடித்துத் தூக்கி மண்டப வாசலை நோக்கி நடக்கின்றனர் அப்பெண்ணும் மீதி இருவரும் துப்பாக்கியுடன் காவலாக உடன் செல்கின்றனர்.
வெளியில் நிற்கும் வேனில் ஏறி போய் விடுகின்றனர்.
எல்லோரது மனத்திலும் ஒரே கேள்வி.....
“யார் இந்த ரிவால்வர் ரீட்டா?”
..................................
எப்போதும் திரைப்படங்களில் முன்பு என்ன நடந்தது என்று(flash-back)
காட்டுவார்கள்.
ரிவால்வர் ரீட்டாவின் பெயர் வள்ளி
அவளுக்கும் முருகனுக்கும் எட்டு ஆண்டுகள் பழக்கம்.
முருகன் பெற்றோருக்குப் பயந்து அவர்கள் பார்த்த பெண்ணை மணக்கச் சம்மதிக்கிறான்
இப்போது மண்டபம்,ரீட்டா கடத்தல்.......
...........................
இந்த சினிமாவில் ஒரு flash-front...............
முருகனின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர்.
மணக்க இருந்த பெண்ணின் பெற்றோருக்கும் முருகனின் பெற்றோருக்கும்
வள்ளியின் தரப்பினருக்கும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
புகார் திரும்பபெறப் படுகிறது.....
“நிகழும் ஹேவிளம்பி ஆண்டு,வைகாசி மாதம்...நாள் திருவளர் செல்வன் முருகனுக்கும்,திருவளர் செல்வி வள்ளிக்கும் நடைபெற இருக்கும் திருமணத்துக்கு..............................”.
........................................................................................
செய்தி ஆதாரம்...இந்தியாவின் நேரங்கள்
சனி, ஆகஸ்ட் 13, 2016
மரண அழைப்பு!
அன்பு
நண்பரே/நண்பியே,
என்
மிக நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நீங்கள் என்பதால் இந்த அழைப்பு உங்களுக்கு
அனுப்பப் படுகிறது.
இந்த
வார இறுதியை நான் உங்களுடன் கழிக்க விரும்புகிறேன்.எனது பண்ணை வீட்டில் வரும் சனி,ஞாயிறு
ஆகிய நாட்களில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்,.முப்பது நண்பர்களை அழைத்திருக்கிறேன்
.இரண்டு நாட்களும் உல்லாசமாகக் கழிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வார இறுதி
விழாவுக்கு எந்த உடைக்கட்டுப்பாடும் இல்லை. உங்களுக்கு விருப்பமான,வசதியான எந்த உடையும்
அணியலாம்.பாட விரும்புபவர்கள் பாடலாம்.ஆட்டத்தில் நாட்டம் உள்ளவர்கள் ஆடலாம்.. நடிக்கத்தெரிந்தவர்கள்நடிக்கலாம்..ஆம்,ஒரே
நோக்கம், கவலைகள் மறந்து அனைவரும்,நானும்தான், மகிழ்ச்சியாக இவ்விரு நாட்களைக் கழிக்க
வேண்டும் என்பதுதான். .சுதந்திரமான சந்திப்பு.எந்த விதமான கட்டுப் பாடுகளும்,விதிகளும்
இல்லை.ஓ,மறந்து விட்டேன்.மிக முக்கியமான விதி ஒன்று உண்டு.,யாரும் கண்ணீர் சிந்தக்கூடாது,எந்த
சமயத்திலும்.
வாருங்கள்.ஒரு
மகிழ்வான வார இறுதியைக் கழிக்க உதவுங்கள்
அன்புடன்
பெட்ஸி.
................................................................................
அழைப்புக்
கிடைத்த அனைவரும் வார இறுதியில் குழுமினர்.சிலர் வயலின்,சிலர் கிடார்,என வாத்தியங்கள்.ஒரு
வெண்ட்ரிலாக்கிஸ்ட் அவரது பொம்மையுடன். .அனைவரையும் ராதா வரவேற்றாள்.கைகுலுக்கினர்,கட்டித்
தழுவினர்,கையில், கன்னத்தில் முத்தமிட்டனர்.
மகிழ்ச்சியான
வார இறுதி தொடங்கிற்று.,ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம். ராதாவுக்கு மிகவும் பிடித்த உணவு
சிலர் கொண்டு வந்திருந்தனர்.அவளுக்குப் பிடித்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மது
வகைகள்,வித விதமான உணவு எல்லாம் பரிமாறப்பட்டன.
இரண்டு
நாட்கள் முடிவுக்கு வந்தன.குறிப்பிட்ட நேரம் வந்தது.ஆம் நேரமும் முன் கூட்டியே அவளால்
திட்டமிடப்பட்டு விட்டது.
“நண்பர்களே!என்
அழைப்பை ஏற்று என்னை வழியனுப்ப வந்த நீங்கள்
அனைவரும் மிகவும்தைரியசாலிகள்.என் மகிழ்ச்சியே
முக்கியம் என நினைப் பவர்கள்.உங்களுக்கு என் நன்றி.இப்போதுவிடை
பெறும் நேரம் வந்து விட்டது ” என்றாள் ராதா.
ஒவ்வொருவராக வந்து அவளிடம் விடை பெற்றுச்
சென்றனர்.
அறையில்
ராதாவும்,அவளது செவிலியும் மட்டும்.
செவிலி சக்கர நாற்காலியை அந்த அறைக்கு தள்ளிச் சென்றாள்.
சட்ட
பூர்வமான அனுமதியுடன்,மருத்துவர் கொடுத்த மருந்துகளை, ராதாவுக்குக் கொடுத்தாள்.அவற்றை
மலர்ந்த முகத்துடன் சாப்பிட்ட ராதா செவிலியின் கையைக் குலுக்கினாள்.செவிலி பொங்கி வந்த
கண்னீரை அடக்கிக்கொண்டாள், பெரும் முயற்சியுடன்.
ராதா
துயிலில் ஆழ்ந்தாள்.
குணமாக்க
முடியாத நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தவளுக்கு இனித் துன்பம் இல்லை.
ஆம்!மீளாத்துயில்
(கதையல்ல
நிஜம்.டைம்ஸ் ஆஃப் இந்தியா 13-08-2016)
வெள்ளி, டிசம்பர் 11, 2015
கேள்வி கேட்ட குஷ்பு!
இது
குஷ்புவின் கதை!
கதை
என்றால் முழுக் கதை அல்ல.
ஒரு
நிகழ்வு;சுவாரஸ்யமான நிகழ்வு.
அவ்வளவே.
ஆனால்
இது குஷ்பு என்னும் புதுமைப் பெண்ணை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்வு.
அவளது
நண்பிகள் அவளிடம் வந்து சொன்னார்கள்,மாப்பிள்ளை ஓம்வீருக்கு புரோகிதர் சொன்ன
மந்திரங்களையே சரியாகத் திருப்பிச் சொல்லத் தெரிய வில்லை என்று
ஆம்;குஷ்புவுக்குக்
கல்யாணம்
மாப்பிள்ளை
ஒரு பட்டதாரி என்றுதான் சொல்லியிருந்தான்.
அவனுக்கா
மந்திரங்களைத் திருப்பிச் சொல்லத் தெரியவில்லை?
குஷ்பு
யோசித்தாள்
அவனிடம்
சென்றாள்.
சுற்றியிருந்த
உறவினர்களிடம் சொன்னாள்,தான் மாப்பிள்ளையைச் சில கேள்விகள் கேட்க விரும்புவதாக.
அவனிடம்
சில நாணயங்களைக் கொடுத்துக் கூட்டுத்தொகை
எவ்வளவு எனக் கேட்டாள்.
அவன்
நாணயங்களைக் கையில் வைத்தபடி விழித்தான்.
அடுத்து
அவனிடம் தனது சாமர்த்தியக் கைபேசியைக் கொடுத்து அதைப் பயன்படுத்தச் சொன்னாள்.
அவன்
பரிதாபமாக விழித்தான்.
குஷ்பு
தெரிந்து கொண்டாள்,அவன் படிப்பு பற்றிப் பொய் சொல்லியிருப்பதை.
கல்யாணம்
நின்றது.
புதுமைப்
பெண் குஷ்பு.
முழுப்
பெயர் குஷ்பு சக்சேனா!
(டைம்ஸ்
ஆஃப் இந்தியா,சென்னை,10-12-2015)
0
செவ்வாய், ஜூன் 02, 2015
மயான மனிதர்கள்
”அப்பா என்ன குளிர்.எலும்பையும் ஊடுருவிக்கொண்டு
உள்ளே போகிறதே”.
யூசுபுக்குக் குளிர் தாங்க முடியவில்லை.ஜமீலாவைப் பார்த்தான்.அவளும் குளிரில் நடுங்கிக் கொண்டுதான் இருந்தாள்.அவள் மட்டும் என்ன தெய்வப் பிறவியா,குளிர் தாக்காமல் இருக்க.படுப்பதற்கு படுக்கையில்லை.போர்த்திக்கொள்ள ஒரு துணியில்லை.சற்று தூரத்தில் எரியும் நெருப்பின் ஒளி தவிர வேறு வெளிச்சம் இல்லாத காரிருள்.அந்த நெருப்பின் அருகில் சென்று குளிர்காயலாம்தான் .
யூசுபுக்குக் குளிர் தாங்க முடியவில்லை.ஜமீலாவைப் பார்த்தான்.அவளும் குளிரில் நடுங்கிக் கொண்டுதான் இருந்தாள்.அவள் மட்டும் என்ன தெய்வப் பிறவியா,குளிர் தாக்காமல் இருக்க.படுப்பதற்கு படுக்கையில்லை.போர்த்திக்கொள்ள ஒரு துணியில்லை.சற்று தூரத்தில் எரியும் நெருப்பின் ஒளி தவிர வேறு வெளிச்சம் இல்லாத காரிருள்.அந்த நெருப்பின் அருகில் சென்று குளிர்காயலாம்தான் .
ஆனால் பயமாக இருக்கிறது,எரியும் பிணத்தின்
அருகே போய் எப்படி அமர்வது,அதுவும் ஒரு பெண்ணுடன்,ஏற்கனவே இந்த இருட்டும்,மரங்களும்
விளையாடும் நிழல்களும் அச்சமூட் டுகின்றன.இந்த 75 வயதில் இப்படி ஒரு அவல நிலையா என
மனம் அழுதது.தனக்கு மட்டுமா? 65 வயது ஜமீலாவுக்கும்தானே.?அங்கு வந்து இரண்டு நாட்களாகி
விட்டன. சரியான உணவில்லை. நல்ல தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை.இன்னும் எத்தனை நாள் தாக்குப்
பிடிக்க முடியும் இந்த வயோதிகர்களால்?
ஜமிலாவின் மகள் சமீபத்தில் இறந்தபோது,ஆதரவற்ற ஜமீலாவுக்கு யூசுப்தான் ஆறுதல்
வார்த்தைகள் சொல்லி ஆதரவாக இருந்தான்.அவள் உடைந்து கதறுகையில் அவளை லேசாக அணைத்து தேற்றினான்.அங்குதான்
ஆரம்பமானது பிரச்சனையே,
அவர்களை அந்நிலையில் பார்த்த சிலர்.நிகழ்ச்சிக்குக்
கண் காது மூக்கு எல்லாம் வைத்து, யூசுபுக்கும் ஜமீலாவுக்கும் தகாத உறவு இருப்பதாகவும்
அதை எதிர்த்த அவள் மகளை அவர்கள் கொன்று விட்டதாகவும் கதை பரப்பி, வதந்தி பஞ்சாயத்துக்கும் கொண்டு போகப்பட்டது.
அன்று….யூசுப் தன் குடிசையில் அமர்ந்திருந்தபோது
ஒரு ஆள் வந்து அவனைப் பஞ்சாயத்தில் அழைப்பதாகக் கூறினான்.யூசுப் போகும்போது பஞ்சாயத்துக்
கூடியிருந்தது.கிராமத்தவர் அனைவரும் கூடியிருந்தனர்.ஜமீலாவும் நின்றிருந்தாள்.பஞ்சாயத்து
தன் தீர்ப்பைக் கூறியது…. யூசுப்பும் ஜமீலாவும் பஞ்சாயத்து முன் மணக்க வேண்டும்.அதன்
பின் அவர்கள் கிராமத் திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.மயானத்தில்தான் வாழ வேண்டும்.ஊருக்குள்
வரக் கூடாது.
அவர்கள் சுடுகாட்டுக்கு விரட்டப்பட்டனர்.
இப்போது இங்கே தவித்துக் கொண்டிருக்கிறார்கள்
எத்தனை நாள் இப்படி வாழ முடியும்.?
அவர்கள்முடிவு சாவைத் தவிர வேறில்லை.
இப்படியே பசி தாகம்,குளிர் இவற்றால் வாடி
மெலிந்து ஒரு நாள் சாகலாம்.
அல்லது அதோ எரியும் நெருப்பில் விழுந்து
மாய்த்துக் கொள்ளலாம்.......
சாவுக்கே பயமில்லை என்றானபின் பிணத்துக்கென்ன பயம்?!
சாவுக்கே பயமில்லை என்றானபின் பிணத்துக்கென்ன பயம்?!
என்ன செய்யப் போகிறார்கள்?
(இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியின் அடிப்படையில் புனையப்பட்டது)
(இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியின் அடிப்படையில் புனையப்பட்டது)
சனி, மே 30, 2015
வயசுக்கு வந்தா....?!
”குமுதா!.இன்னைக்குத்தேதி ஒண்ணு.16ஆம்தேதி
திங்கட்கிழமை சுமன் பிறந்தநாள் .அந்த விழாவை அன்னைக்கு வச்சுக்கலாம்.”
”ஏங்க? நீங்க ரொம்பப் பிடிவாதமா நடத்தியே
தீருவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கறீங்க. யோசிச்சுச் செய்யுங்க.”
”இதோ பாரு.நான் முன்னாலயே சொல்லிட்டேன்.நல்லா
யோசிச்சுத்தான் முடிவு பண்ணி யிருக்கேன்.நம்ம வீட்டில ரொம்ப நாளா எதுவும் விழாவே நடக்கலே.இது
ஒரு வாய்ப்பு. ரொம்பச் சிறப்பா நடத்தப் போறேன்.சும்மா எதையாவது
சொல்லிட்டிருக்காம,சந்தோசமா ஏற்பாடுகளைக் கவனி”
“அதோ சுமன் வந்துட்டாங்க”
”டேய் சுமன் உன் பிறந்த நாள் அன்னிக்கு விழாவை
வச்சிருக்கேன்.இன்னைக்கே அழைப்பிதழ் அச்சடிக்கணும்.நீ ஒன்னோட நண்பர்களையெல்லாம்
கண்டிப்பா கூப்பிடு. ரொம்பச் சிறப்பா நடத்திடலாம். வா,சையத் பாக்கருக்குப் போய்
உனக்கு நல்ல சூட் தைக்கக் குடுத்துடலாம். அப்படியே ராஜசேகரைப் பார்த்துச் சாப்பாட்டுக்கும்
சொல்லிடலாம்.இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டதே இல்லன்னு எல்லாரும் சொல்லணும். நம்ம
அய்யாசாமி கிட்ட மத்த ஏற்பாடுகளையெல்லாம் செய்யச் சொல்லிடலாம்””
சூடு பிடிக்கிறது
சூட் தைக்கக் கொடுத்தாகி விட்டது.
அழைப்பிதழ் வந்ததும் சுமார் 250
பேருக்கு-,நண்பர்கள்,உறவினர்கள் –அழைப்பிதழ் வைக்கப்பட்டது.
டின்னர் மெனு தீர்மானிக்கப் பட்டது.
அனைத்தும் வேகமாக நடந்தேறியது.
அந்த நாளும் வந்தது.
மாலை மணி 5.
அந்த அரங்கில் அனைவரும்
குழுமியிருந்தனர்.
சுமனின் அப்பா கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு “என்ன
இன்னும் மாணிக்கத்தைக் காணோமே” என்று சொல்லி முடிக்கவும் யாரோ மாணிக்கம் வந்தாச்சு
என்றனர்.
மாணிக்கம் என்ற அந்த நபர் உள்ளே
வந்தார்.
“ வா மாணிக்கம்,டேய் சுமன் அந்த பலகையில
உட்கார்.மாணிக்கம் புதுசா பிளேடு எடுத்து அவனோட அந்த இளம் தாடி மீசையை வழிச்சிடு!”
நடந்தது.
”சுமன்.போய் குளிச்சிட்டு புது சூட்டைப்
போட்டுக்கிட்டு வா”
மாணிக்கத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.
சுமன் வந்ததும் மாலை அணிவிக்கப்பட்டது.
சுமன் கேக் வெட்டினான்
பாட்டு நடனம் என்று ஒரே கொண்டாட்டம்.
“டின்னர் தயார்.போய்ச் சாப்பிடுங்க.”
கொத்துக் கொத்தாகக் கூட்டம் சாப்பாட்டுக்
கூடத்தை நோக்கி நகர்கிறது.
விழா இனிதே நிறைவேறுகிறது
ஆம் இது சுமன் என்ற பையன் வயதுக்கு வந்த
விழா.!
*******************************************************************
செய்தி:-:தாணே-இது போன்ற முன்பு நடந்திராத
விழா ஒன்று,ஒரு பையன் வயதுக்கு வந்ததற்காகஅவனது 17 ஆவது பிறந்ததினத்தில் அவனுக்கு
முதல் முகச் சவரம் செய்து விருந்துடன்
கொண்டாடப்பட்டது-
--இந்தியாவின் நேரங்கள்-30-05-2015
‘
‘
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)