கற்பென்பது என்ன?
அது உடல் சம்பந்தப் பட்டதா?உள்ளம் சம்பந்தப்பட்டதா?அல்லது இரண்டுமா?
ஒரு பெண் கற்பிழந்தவள் என்று கூறும் நாம் ஆண் கற்பிழந்து விட்டான் என எப்போதாவது சொல்கிறோமா? ஏன்?
ஆணுக்குக் கற்பு என்பது கிடையாதா?
ஆண் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டாலும் தன் மனைவி மட்டும் கற்புடையவளாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்?
அவள் கற்புடையவள் என்பதை அவன் எப்படித்தீர்மானிக்கிறான்? கன்னித்திரையின் (hymen) தன்மையை வைத்தா?அது மட்டுமே சரியான நிரூபணம் ஆகுமா?
அவனுடன் உடலுறவு கொள்ளும் போதெல்லாம் மனதில் வேறெவனையோ நினைத்துக் கொண்டு அவள் இருப்பாளாகில் அது கற்பாகுமா?
உடலுறவின் விளைவை உடல்ரீதியாகச் சுமந்து வெளிக்காட்டுபவள் அவள் என்பதால்,அத்தகைய இடர்ப்பாடுகள் ஏதும் ஆணுக்கில்லை யென்பதால், கற்பென்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாக்கப் பட்டதா?
ஒரு வன்புணர்வில் ஒரு பெண் தன் பெண்மையை இழந்திருந்தால் அவள் கற்பிழந்தவள் ஆவாளா?
வன்புணர்வென்பது என்ன?
இந்தியக் குற்றவியல் சட்டம் செக்சன் 375 சொல்கிறது—
ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் எதிலாவது உடலுறவு கொண்டால் அது வன்புணர்வு.
1)அவளது விருப்பமில்லாமல்
2) அவளது சம்மதமின்றி
3)அவளுக்கு அவள் விரும்பும் யாருக்கோ இடர் விளைவிப்பதாகச் சொல்லிச் சம்மதம் பெற்று
4)அவள் அவனைத் தன் கணவன் என்ற தவறான நம்பிக்கையில்,,அது அவனுக்குத்தெரிந்தும்,சம்மதம் அளிக்கும்போது
5)அவளது சம்மதம் அவள் மனநிலை சரியில்லாத நேரத்திலோ அல்லது அவளுக்கு ஏதாவது போதை மருந்து கொடுத்து அதன் காரணமாகவோ அவள்நடக்கப்போகும் நிகழ்வின் விளைவுகளை புரிந்து கொள்ளாத நிலையில் பெறப்பட்டால்
6)சம்மதத்துடனோ சம்மதமில்லாமலோ-அவள் பதினாறு வயதுக்கு உட்பட்டவளாக இருந்தால்.
எனவே நிச்சயமாக அப்படி ஒரு நிகழ்வு அவளது கற்பென்று கதைக்கப்படும் விஷயத்துக்குக் களங்கமாகாதுதானே?
பாரதி சொல்வான் ----
ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்; கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே!
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
………..
……..
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே?
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்,கற்பு என்பது நமது கலாசாரத்துக்கு மட்டும் உரியது என்று.
இல்லை!
ஷேக்ஸ்பியரின் ”தி ரேப் ஆஃப் லுக்ரீஸ்” என்ற கவிதையில் .ஒரு பெண் கற்பிழந்ததைப் பற்றிக் கூறுகிறார்—
//she hath lost a dearer thing than life,//
”உயிரை விட மதிப்பு வாய்ந்த ஒன்றை அவள் இழந்து விட்டாள்”
ஆக எங்குமே கற்புக்கு ஒரே அளவுகோல்தான்.
அதைப் பெண்களுக்கு மட்டுமே உரியதாகி விட்டது இந்தச் சமூகம்!