தொடரும் தோழர்கள்

இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 17, 2017

இசை

”தன்னில் இசை இல்லாத,ஒருமித்த இனிய ஓசைகளினால் உணர்ச்சிஅடையாத,ஒருமனிதன்,துரோகி,தந்திரக்காரன் ,கெட்டவன்”(செகப்பிரியரின் வெனிஸ் வர்த்தகனிலிருந்து ஒரு மோசமான மொழி பெயர்ப்பு!)

மனித வாழ்க்கையில் இசை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.பிறப்பு முதல் இறப்பு வரை நம் எல்லா விசேடங்களிலும்,இசை கலந்திருக்கிறது.தாலாட்டு முதல் ஒப்பாரி வரை.

இசையே பிடிக்காதவர்கள் மிகச் சிலரே இருப்பர்.சிலருக்கு கர்னாடக இசை,சிலருக்கு இந்துஸ்தானி இசை,சிலருக்கு மேற்கத்திய இசை,சிலருக்கு திரை இசை,சிலருக்கு நாட்டுப் பாடல் என்று ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்.

எனக்குக் கர்னாடக இசை.என் இசை ஆர்வத்துக்குத் தீனி அளித்தவர்கள் இருவர்.

ஒருவர் நண்பர்  பார்த்தசாரதி.என் தளத்தில் அவரது பல படைப்புகள் வெளி வந்துள்ளன.வானொலியிலோ,தொலைக்காட்சியிலோ நல்ல கச்சேரி இருந்தால் உடன் தொலைபேசுவார்.இசை விழா நேரத்தில் அவர் மியூசிக் அகாடமிக்கும் நான் நாரத கான சபாவுக்கும் செல்வது வழக்கம்.தினமும் கண்டிப்பாகக் கச்சேரி  பற்றிய உரையாடல்கள் நிகழும்..

அவர் சென்ற டிசம்பர் மாதம் காலமானார்.

நானும் இப்போதெல்லாம் பல காரணங்களால் கச்சேரி கேட்கும் மன நிலையில் இல்லை.

மற்றவர் எங்கள் வங்கியில் பணி புரிந்து என் போலவே விருப்ப ஓய்வு பெற்றவ பெண்மணி.பணியில் இருந்தபோது பழக்கமில்லை .பின்னாளில்,யாரோ சொல்லி சில ஆலோசனைகளுக்காக என்ன நாடி வந்தார்.நான் சொன்னவை சரியாக நடந்ததால் நம்பிக்கை மிகக் கொண்டார்.

 ஒரு முறை அவராகவே கச்சேரிக்கெல்லாம் போவீர்களா எனக் கேட்டு நாரதகான சபாவில் இசை விழாவின்போது சீசன் டிக்கட் கொடுத்தார்.ஆறாவது வரிசையில் இருக்கை.தொடர்ந்து சில ஆண்டுகள் கொடுத்தார்.பின்னர் என்னால் போக இயலாத நிலை உருவான போது வேண்டாம் எனச் சொல்லி விட்டேன்

 இன்று அவரது பையன் தொலைபேசி,நேற்று மதியம் அவர் மறைந்து விட்டார் என்ற தகவலைச் சொன்னான்

என் இசை ஆர்வத்துக்குத் துணை நின்ற இன்னொருவரும் மறைந்தார்.,

என் காதுகளில் இப்போது ஒலிப்பது முகாரியும்,சுபபந்துவராளியும் மட்டுமே!

செவ்வாய், டிசம்பர் 22, 2015

சீசன் நகைச்சுவை

இது சங்கீத சீசன்

எனவே இந்த சீசனுக்காக இவை....
.............



சபா உறுப்பினர்-:என்ன செயலாளர் சார்! வித்துவானுக்கு இரவு உணவுக்கு என்ன வேணுமாம்?
செயலாளர்: பழம், பால் போதுமாம்!
உறுப்பினர்:  எதுக்கு பழம் பால்?நல்ல புதுப் பாலாவே குடுத்துடலாமே!
!!!!!!!!!!!!
................... 


மாமி-1 :   மாமி!நேத்து என்னால வர முடியலே! நன்னாருந்ததா?

மாமி-2:திவ்யமா இருந்தது.அந்த அசோகா ஹல்வாவும், வாழைப்பூ வடையும் பிரமாதம்!
  மாமி-1:மாமி.நான் காண்டீனைப் பத்திக் கேக்கலே;கச்சேரி பத்திக்கேட்டே.ன்!

...............

நேத்து அந்தச் சகோதரர்கள் கச்சேரி கேட்டீங்களா?

உம்.ஒருத்தர் குரல் கம்மலா இருக்கு.

அதனாலதான் நாலு பேர் காதுல போட்டுக்கறாங்க!

(அரியக்குடி சொன்னதாக நினைவு)

----------
மூன்று ஆண்டுகளாக் கச்சேரிக்குப் போக முடியவில்லை

எவ்வளவு பெரிய இழப்பு.
ஈடு செய்ய முடியாத இழப்பு
மறக்கமுடியாத சில
.........
........
........

ரவா பொங்கல்,அவியல்

ஆப்பம்,காலிஃப்ளவர் குருமா

எலுமிச்சை சேவை சட்னி

டையமண்ட் மசாலா கார தோசை

டபுள் டெக்கர் தோசை

வெஜ்.வெண்பொங்கல் பாசுமதி

ஆந்திரப் பெசரட்டு,அல்லம் பச்சடி
!!!!!!!!!


 



வியாழன், நவம்பர் 05, 2015

தில்லானா மோகனாம்பாள்--கண்டதும்,காணாததும்!

 பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாட்டு எல்லோருக்கும் தெரியும்

அந்தக்கால மணமகள் படத்திலேயே பிரபலமானது அந்தப் பாட்டு.

அதில் ஒரு  வரி “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரங்கொட்டுதடி”

இந்தப்பாட்டை  நாகஸ்வரத்தில் காருகுரிச்சி வாசிக்கும்போது இந்த வரியில் நம்மை அழ  வைத்து விடுவார்!

இந்தப்பாட்டு எந்தப் படத்தில் என்று கேட்டால் உடனே “வியட்நாம் வீடு”  என்பீர்கள்!

இந்த வரிகளை ஆரம்பமாகக் கொண்ட பாட்டு ,அவ்வளவே.

நாகஸ்வரத்தில் மத்ரை சேதுராமன்,பொன்னுசாமி  இதை வாசிக்க ,அதை சிவாஜி குழுவினர்  காட்சியாக்க, பத்மினி பார்த்துக் கண்ணில்  நீர் வழியும் காட்சி தில்லானா மோகனாம்பாள் படத்துக்காக எடுக்கப்பட்டுப் பின் திரைக்கு வராமல் போய் விட்டது

நீங்கள் பார்க்காத அந்தக்காட்சி,  படப்பிடிப்பின் போது......


உன் கண்ணில் நீர் வழிந்தால்........

கிளசரின் கண்ணீர்!

முதல் 50 விநாடிகள் காத்திருங்கள்.




இந்தத் திரைக் காவியத்தில் சம்பந்தப்பட்ட மகா கலைஞர்கள் பலர் இன்று நம்மிடையே இல்லை.யாரைச் சொல்வது,யாரை விடுவது? எனவே சமீபத்தில் மறைந்த அந்த மகத்தான நடிகை,ஜில்ஜில் ரமாமணியை  மட்டும் நினைவு கூர்கிறேன்.


சனி, அக்டோபர் 03, 2015

உண்டென்றால் அது உண்டு!



//வாழ்க்கையின் சூறாவளிகளில் நமக்கு உதவ அவன் இருக்கிறான் என்ற  நம்பிக்கை நமக்கும் வேண்டும்.// ...சென்னை பித்தனின் அந்த மானைப் பாருங்கள் பதிவிலிருந்து.

//அற்புதம் - கடைசி வரியைத் தவிர.

இல்லை. அப்படி இருந்தால் அவளாகவும் இருக்கலாம். இல்லையா?// 
....அப்பதிவில் திரு அப்பாதுரை அவர்களின் கருத்து.

இல்லை-இல்லையா ஆகி விட்டது.
அவனும் அவளும்தானே அர்த்தநாரி? 
இப்படி என் எண்ணச் சிறகுகள் விரிந்தன.அவன்-  அவள்-அது...!அதுவாகக் கூட இருக்கலாம் தானே! நிலம்,நீர்,நெருப்பு,காற்று,அண்டம்-பஞ்சபூதங்கள்!

ஒவ்வொன்றுக்கும் ஒரு தலம் . அதை வர்ணித்து தீக்ஷிதர் கீர்த்தனைகள் பாடியுள்ளார்
                                  ஊர்                      கீர்த்தனை                                         ராகம்
நிலம்           காஞ்சிபுரம்                   ஏகாம்பரநாதம்                               ஆனந்தபைரவி
நீர்               திருவானைக்கா            ஜம்புபதே                          யமுனாகல்யாணி            
நெருப்பு       திருவண்ணாமலை        அருணாசலநாதம்                           சாரங்கா
காற்று          காளஹஸ்தி                  காளஹஸ்தீசம்                               உசேனி
அண்டம்       சிதம்பரம்                     ஆனந்தநடன                                  கேதாரம்

மகாகவி காளிதாசர் சாகுந்தலத்தில் இறை வணக்கத்தை இயற்கைத் தேவதைகளுக்கு அர்ப்பணித்துள்ளர்.

இறைவனைப் போற்றுவதும்,தூற்றுவதும் அவரவர் இன்பதுன்பங்களைப் பொறுத்தே அமையும்

450க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை(நமக்குக் கிடைத்தது வரை) சுந்தரத் தெலுங்கினில் இயற்றிய தியாக ராஜர்.இராமனைக் கண்டித்தும் உள்ளார்போலி பக்தர்களையும், மெய்ய டியார்களையும் சமமாக்குவது உனக்கு மரியாதை அல்ல.என்னை இன்னும் ரட்சிக்காமல் இருப்பது சரிஅல்லஎன்று!

நமது தமிழ்த் தியாகராசர் சிவனும் நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா? நீ இரங்காயெனில்  புகலேது என்றெல்லாம் அவளைக் கேட்டிருக்கிறார்.

நம் கவியரசு அவர்கள் ராமன் எத்தனை ராமனடி என்று நாமாவளி பாடி விட்டு “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்” அவனுக்கென்ன தூங்கி விட்டான்,  அகப்பட்டவன் நானல்லவா”,காலம் செய்த கோலமடி,கடவுள் செய்த குற்றமடி” என்றெல்லாம் பாடியிருக்கிறார்

ஆனால் நோபல் பரிசு பெற்ற பௌதிக விஞ்ஞானி லியான் மேக்ஸ் லெடெர்மேன் தமது புத்தகத்தில்  ஹிக்ஸ் போசனின் கண்டு பிடிப்பைக் ”கடவுளின் அணு”(god’s particle) என்று பெயரிட்டு போசனைக் கௌரவிப்பது மட்டுமல்லாமல் கடவுளையும் ஆராதித்துள்ளார்.


இல்லையென்றால் அது இல்லையென்றாலும், அவன் ,அவள்,அது உண்டென்றால் அது உண்டுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது

......பார்த்தசாரதி  

 டிஸ்கி:உண்டென்று ஏற்றுக் கொண்டால்தானே போற்றுதலும்,தூற்றுதலும்! 

இல்லையென்று சொன்னாலும்,இருந்தா நல்லாருக்கும் என்று சொன்னாலும்,போற்றுதலும் இல்லை தூற்றுதலும் இல்லை அல்லவா? 

வியாழன், ஏப்ரல் 09, 2015

ஓ ‘அதற்கு ஒரு பக்குவம் தேவை’



1961-1964.

நான் பட்டப்படிப்பில் இருந்த காலம் .

எங்கள் தமிழ் விரிவுரையாளர்இவரல்லரோ எழுத்தாளர்என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் பணித்தார்.

நான் ஒரு எழுத்தாளரைப் பற்றி ,அவரது சிறுகதைகள் பற்றியெல்லாம் எழுதி அக் கட்டுரையை  !அதற்கு ஒரு பக்குவம் தேவைஎன்று முடித்திருந்தேன்.

அப்போது விகடனில் ஒவ்வொரு வாரமும் முத்திரைக் கதை ஒன்று பிரசுரமாகி வந்தது. அப்படி வந்த முத்திரைக்கதை ஒன்றின் கடைசி வரியே நான் எழுதியிருந்தது.

அக்கதையின் பெயர்யுகசந்தி

புராதன சிந்தனைகளைப் புறந்தள்ளி.ஒரு புதிய பாதையைக் காட்டும் ஒரு பாட்டியின் கதை.

அந்தக்கால கட்டத்தில் அப்படிப் புரட்சிகரமாக எவரும் சிந்தித்திருக்க முடியாது

கௌரிப்பாட்டியின் மூலமாக அவர் சிந்தித்தார்.
காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்” இதைத்தான் கௌரிப்பாட்டி சொல்கிறாள்.சொல்வது மட்டுமில்லை .செய்கிறாள்

கதை இப்படி முடியும்.
“வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால் ?......
' அதற்கு ஒரு பக்குவம் தேவை ”

பல முத்திரைக்கதைகள் அவர் எழுதினார்.நான் அவர் எழுத்தில் பைத்தியமானேன்.

அவரது “அக்னிப்பிரவேசம்” பெரிய சர்ச்சையைக் கிளப்பிய கதை

பலரது கேள்விகளுக்குப் பதிலே போல்தான் பிறந்தது “சில நேரங்களில் சில மனிதர்கள்”
கம்யூனிஸ்டாக இருந்தவர் காங்கிரஸ்காராக மாறி பீரங்கிப் பேச்சாளர் என்றழைக்கப் பட்ட காலத்தில்,ஐந்து மைல் சைக்கிளில் சென்று அவர் பேச்சைக் கேட்டேன் (உத்தமபாளயம் டு கம்பம்)  

திரைத் துறையிலும் தன் முத்திரை பதித்தவர்.

அவர் இயக்கிய “உன்னைப்போல் ஒருவன்” தேசிய விருது பெற்றது

ஜெயகாந்தன் என்ற எழுத்து இமயத்தின் மறைவு,தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்பாகும்

அவரது ஆன்மா சாந்தியடைப் பிரார்த்திக்கிறேன்.

*************************************************************
அந்தக்கால கட்டத்தில் நான் வசித்த ஊர் உத்தமபாளையம்

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்.

எந்த விழாவாக இருந்தாலும் தவறாமல் என் காதுகளில் விழுந்த ஒரு பாடல் ”இறைவனிடம் கையேந்துங்கள்,அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”

அந்த வெண்கலக்குரல் என்னை வெகுவாக கவர்ந்தது.

நான் அப்பாடலின் ரசிகனானேன்.

அக்குரல் இன்று ஓய்ந்து விட்டது

நாகூர் ஹனீபாவின் மறைவும் ஒரு பேரிழப்பே.

அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்