மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன்.
மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்க!இன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்,உங்க மதிய உணவுக்காக.ஒரு பிளாஸ்டிக் டப்பாவில தக்காளி சாதமும்,இன்னொரு டப்பால தயிர் சாதமும் வச்சி,பையில போட்டு ரப்பர் பேண்டால கட்டி வச்சிருக்கேன். ஸ்பூனும் வச்சிருக்கேன்.இந்தாங்க.எடுத்துட்டுப் போங்க..........’என்று சொல்லி விட்டுப் பையை அவன் கையில் கொடுத்தாள்.
அவன் வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
“என்னங்க!மதியம் 2 மணிக்குள்ள சாப்பிட்டுடுங்க.அப்பதான் தக்காளி சாதம் நல்லாருக்கும்” என்று வாசல் வரை வந்து சொல்லி வழி அனுப்பினாள்.
முருகேசன் வெளியே வந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
அவன் கைபேசியில் தகவல்கள் வரத்தொடங்கின.
நேராக ஆரிய பவன்.இட்லி சாம்பார்,வடை.பார்சல் பையை தனது கம்பெனி பைக்குள் வைத்தான்.அதற்குள் முன்னமே ஓர் ஓரமாகத் தனது சாப்பாட்டுப் பையை வைத்திருந்தான்.
அருகில் இருக்கும் மற்றொரு உணவகத்திலிருந்து மற்றொரு பார்சல்.
அதுவும் பைக்குள் புகுந்தது.
அந்த இரண்டையும் கொடுக்க வேண்டிய இடங்களை நோக்கிப் புறப்பட்டான்.
தொடங்கி விட்டது அன்றைய வேலை
ஒட்டல் ஒட்டலாய் ,வீடு வீடாய் ,தொடர்ந்து பயணம்.
இன்று வழக்கத்தை விட ஆர்டர்கள் அதிகம்.
தொடர்ந்து ஓடிக் கொண்டே -ஓட்டிக் கொண்டே இருக்க நேர்ந்தது.
நிற்பதற்கு நேரமில்லாத ஓட்டம்.
குறித்த நேரத்துக்குள் டெலிவரி செயவ்து அவசியம்.
பசித்தது.
மணியைப் பார்த்தான்.
2.10
மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது.
அடுத்த ஆர்டருக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.
வண்டியைச் சாலையோரத்தில் நிறுத்தினான்.
பையைத்திறந்து மனைவி கொடுத்த உணவை எடுத்தான்.
ஸ்பூனால் சாப்பிடத் தொடங்கினான்.
தக்காளி சாதம் நன்றாகவே இருந்தது என எண்ணினான்.
ஆனால் முழுவதும் சாப்பிடாமல் தயிர்சாத டப்பாவை எடுத்துக் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டான்.
நேரம் ஆகி விட்டது..
கைபேசி ஒலித்தது
அடுத்த டெலிவரிக்குப் போக வேண்டும் .
டப்பாக்களைக் கட்டிப் பைக்குள் ஓரமாக வைத்தான்.
புறப்பட்டான்
பாவம் அவனுக்குத் தெரியாது.......
அவனது சாப்பாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு சமூக ஆர்வலர் காணொளியாக எடுத்து விட்டார் என்பது!
டிஸ்கி:இது முழுவதும் கற்பனையே.
தொடரும் தோழர்கள்
உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், டிசம்பர் 13, 2018
புதன், மே 10, 2017
ப.க.பு.மொ. 2....சிபிச் சக்கரவர்த்தி
உப்பரிகையில் அமர்ந்து ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்
சிபி.
இன்னும் சில தொடுகைகளே பாக்கி;ஓவியம் முழுமையடைந்து
விடும்.
அப்போது பயத்துடன் குரல் எழுப்பியவாறே அவர் மடியில்
வந்து விழுந்தது ஒரு வெண் புறா.
அதைத் துரத்தி வந்த பருந்தொன்று மாடத்தின் சுவரில் அமர்ந்தது.
புறாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
சக்கரவர்த்தி சிபி அதைத் தடவிக் கொடுத்தார்.
திங்கள், மே 08, 2017
பழைய கள்,புதிய மொந்தை!-1..அவ்வையும் அதியனும்
”மன்னா!அங்கே பாருங்கள்.”
மந்திரி காட்டிய இடத்தைப் பார்த்தான் அதியமான்.
இருவரும் சில வீரர்களுடன் குதிரையில் சென்று கொண்டிருந்தனர்
“நெல்லி மரம்.இதில் என்ன புதிதாக?”மன்னன் கேட்டான்.
”அதோ உச்சியில் ஒரே ஒரு கனி இருக்கிறது பாருங்கள்.அது
அபூர்வக் கனி.அதை உண்பவர் பல்லாண்டு நோயின்றி வாழலாம்.”
மன்னன் வீரர்களை அனுப்பி அதைப் பறித்து வரச் செய்தான்.
மந்திரி யோசித்தார்”யாருக்குத்தான் நீண்ட நாள் வாழ
ஆசை இல்லை?”
தகவல் கிடைத்தது தமிழ் மூதாட்டி அவ்வையார் காத்திருப்பதாக.
வேகமாகச் சென்றான் ;வணங்கினான்.
”தாங்கள் வந்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது
அவ்வை அவர்களே.”
அவ்வையிடம் கொடுத்து இதைத் தாங்கள் உண்ண வேண்டும்
என்றான்.
அவ்வை யோசித்தார்.சாதாரணக் கனி என்றால் இவ்வளவுக்
கவனமாகக் கொண்டு வந்திருக்க மாட்டான்.கனிவகைகள் பலவற்றை அளித்து உண்ணச் சொல்லும் மன்னன்
ஒரு சிறு நெல்லிக்கனியைத் தருகிறான் என்றால் அதில் ஏதோ சிறப்பு இருக்க வேண்டும்.
கேட்டாள் மன்னனிடம்.
அவன் மழுப்பினான்.
வியந்தாள் அவ்வை மன்னனின் மாண்பு கண்டு.
அந்நேரம் இளவரசன்,சிறுவன் அங்கு வந்தான்
”வணக்கம் அவ்வைப்பாட்டியே”
வணங்கிய பின் தந்தையின் அருகில் சென்று நின்றான்.
சிந்தித்தாள் அவ்வை.
“மன்னா.உன் மகன் மிகுந்த அறிவுக்கூர்மையும் ஆற்றலும்
உள்ளவன்.உனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்று உன்னிலும் சிறப்பாகச் செயலாற்ற வல்லவன்.அவன்
பல்லாண்டு வாழ்ந்து நாடு செழிக்க வேண்டும் இக்கனியை அவன் உண்பதே சாலச் சிறந்தது.”
மந்திரி ஆமோதித்தார்;மன்னனும் ஏற்றுக்கொண்டான்.
கனியை இளவரசன் உண்டான்!
ஞாயிறு, நவம்பர் 29, 2015
விடுமுறை,சிரிமுறை!
ஓர் ஓட்டல்.
அங்கு தோசைக்குத் தொட்டுக் கொள்ள சர்க்கரை
கொடுப்பார்கள்.சர்க்கரை விலை ஏறியதால், இனி கொடுக்க முடியாது எனத் தீர்மானித்து அறிவிப்பு எழுதி வைத்தனர் ”இன்று
முதல் தோசைக்குச் சர்க்கரை கிடையாது”
ராமு சாப்பிட வந்தான்
தோசை ஆர்டர் செய்தான்.
சர்க்கரை கேட்டான்
பலகையைப் பாருங்கள் என்றான் பணியாள்
ஒரு தோசையைச் சாப்பிட்டுவிட்டு ராமு இன்னொரு
தோசை கொண்டு வரச் சொன்னான்.
தோசை வந்தது
சர்க்கரை கேட்டான் ராமு.
கோபம் கொண்ட பணியாள் போர்டில் இருப்பதைப் படித்தாயல்லவா என்றான்
ராமு பொறுமையாகச் சொன்னான்”இன்று முதல்தோசைக்குச்
சர்க்கரை கிடையாது என்று எழுதியிருக்கிறீர்கள்.நான் முதல் தோசைக்குக் கேட்கவில்லையே,இரண்டாவது தோசைக்குத் தானே கேட்கிறேன்!”
இது எப்படி இருக்கு?!
(அந்த நாள் ஞாபகம்:
மதுரை மகால் எதிரே இருந்த
ஒரு சிறிய ஓட்டலில் பொங்கல்,தோசை எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள நாட்டுச் சர்க்கரை
கொடுப்பார்கள்.படித்துப் பாருங்கள் )
விடுமுறை சிரிமுறை கிடக்கட்டும்;இன்று என் அடுமுறை!!(நிச்சயமாகச் சாப்பிடுப வர்களுக்கு அழுமுறை அல்ல!
செவ்வாய், ஜூன் 09, 2015
முருகனுக்கும் சோதனை!
என்ன அண்ணே
?மொட்டையெல்லாம் போட்டிருக்கீங்க?பழனியா?திருப்பதியா?
பழனிதான் வேலுச்சாமி.
நல்ல தரிசனமாண்ணே?
பரவியில்லை
.கூட்டம்தான் பயங்கரம்!
ஏன் அண்ணே,பழனிலேருந்து வந்திருக்கீங்க,முக்கியமான சமாசாரம் கிடையாதா?
திருநீறா?இதோ ,பையிலே வச்சிருக்கேன்.பிடி
இந்தப் பொட்டலத்தை
சரி,குடுங்கண்ணே,நான்கேட்டது வேற!
ஓ!பஞ்சாமிர்தமா?நீ வேற என்ன கேட்கப்போறே.வீட்டுக்கு வா.தரேன்.
சாயந்திரம் நிச்சயம்
வரேண்ணே!
---------------------------
---------------------------
வா வேலுச்சாமி.கரக்டா வந்துட்டயே.இந்தா உனக்காக இந்தக் கிண்னத்தில
எடுத்து
வச்சிருக்கேன்.
.ஒரு செய்தி படிச்சேண்ணே.பழனி பஞ்சாமிருதத்தில உபயோகிக்கற வெல்லம்
தரம் இல்லையாம் அதைப் பரிசோதனக்கு அனுப்பிச்சிருக்காங்களாம்.
ஓ!ஏதோ நூடுல்ஸை தடை பண்னினாங்களே அது மாதிரியா?
ஆமாண்ணே!எனக்கு ஒண்ணு புரியலண்ணே.சனங்க தினம் சாப்பிடற எத்தனியோ
உணவுப் பொருள்களில பயங்கரக் கலப்படம் இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு,என்னிக்கோ ஒரு
நாளைக்கு அதுவும் கொஞ்சமா உள்ளங்கையில போட்டு நக்கப் போற பஞ்சாமிர்தத்துக்கு இப்பப் பரிசோதனை ரொம்ப அவசியமா?தினம்
நிறையப்பேர் ஓட்டல்ல சாப்பிடறாங்க. எல்லா ஓட்டல்லயும் உணவு தரமானதா இருக்காண்ணே.அதுக்குத்
தீவிரமான தரக்கட்டுப்படு அவசியம் இல்லையாண்ணே?அது இருக்கா?அதுவும் பழனி பஞ்சாமிர்தம்னா
அது கோவில்ல மட்டும் செய்யறதில்ல.பல கடைகள் தனியா செய்து விக்கறாங்க.அதுஎல்லாமே தரம் சரியா இல்லையா? இல்லை குறிப்பா ஏதாவதா? பொதுவா
திருப்பதி லட்டு மாதிரி சொல்லிட முடியுமா அண்ணே?
“எப்படியோ போகட்டும் வேலுச்சாமி.”
சரிதாண்ணே.இன்னும் ரெண்டு டப்பா வாங்கிட்டு வந்திருக்கக் கூடாது?தடை
பண்ணிப் போட்டா பெறவு கெடைக்காதில்ல.
ஏதாவது நிகழ்ச்சியைக் கடவுள் வாழ்த்தோடு ஆரம்பிக்கிறமாதிரி,கடவுள்
கிட்டேருந்து தொடங்கிருக்காங்க திண்டுக்கல் உணவுப்பாதுகாப்பு அதிகாரி சாம் இளங்கோ!
நல்லது நடந்தாச் சரி!
வெள்ளி, செப்டம்பர் 19, 2014
பயணங்கள் முடிவதில்லை!
இப்போதெல்லாம் எங்காவது பயணம் போக வேண்டுமென்றால்
மிகவும் அலுப்பாக இருக்கிறது.ரயில்களில்
முன்பதிவு,பஸ்களில் தாறுமாறான கூட்டம் என பயணத்தின் சுவாரஸ்யங்கள்
பொலிவிழந்து விட்டன.ஆனால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் பயணம்
என்பது எவ்வளவு சுவாரஸ்யமாக,மகிழ்ச்சி தருவதாக இருந்தது!
புதன், ஏப்ரல் 16, 2014
பதிவர் சந்திப்பும்,ஆப்பிள் பஜ்ஜியும்!
சென்னையின் முக்கிய அடையாளங்களாகக் கருதப்பட்ட ,இன்று இல்லாமற்போய்
விட்ட சில இடங்கள் பற்றி இன்று” இந்தியாவின் நேரங்கள்”நாளிதழில் ஒரு குறிப்பு படித்தேன்.அதில் சொல்லப்பட்ட இடங்களில் ஒன்று “உட்லாண்ட்ஸ்
டிரைவ் இன்”.என் கல்லூரி வாழ்க்கை தொடங்கி சில ஆண்டுகள் முன் வரையான காலத்தைப் பற்றிய
பல இனிய நினைவுகளைத் தந்து கொண்டிருக்கும்
இடம்.
வியாழன், அக்டோபர் 31, 2013
உணவும் உணவு சார்ந்த இடமும்--உக்காரை!
அந்நாளில்
தீபாவளி என்றால் அம்மா கட்டாயம் செய்யும் பட்சணங்கள் இவைதான்......
லட்டு,மிக்சர்(மொறு
மொறு மிக்சர்!),சில நேரங்களில் மைசூர்பாகும் சேர்ந்து கொள்ளும்.
இவையெல்லாம்
ஜீரணமாக வேண்டாமா(கடலை மாவு ஆச்சே!)?அதற்காகத் தவறாமல் தீபாவளி மருந்து என்றழைக்கப்படும்
லேகியம்.
எங்கள்
வீட்டில் தீபாவளியன்று காலையில் பஜ்ஜி செய்யும் வழக்கம் உண்டு.
அன்று
அமாவாசையாக இருந்தால் வெங்காய பஜ்ஜி கிடையாது!
அம்மா
செய்து வந்த முக்கியமான ஒன்றை விட்டு விட்டு எதையெதையோ பேசிக் கொண் டிருக்கிறேன்!
ஆம்
.ஒக்காரை அல்லது உக்காரை!
இன்று
எத்தனை பேருக்கு அது பற்றித் தெரியும்?
எந்த
இனிப்புக் கடையிலும் அது விற்கப்படுவதில்லை—கிராண்ட் ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்தபவன்,.......இத்யாதி.
ஆனால்
இன்று தேடிப்பிடித்து வாங்கிவிட்டேன் ஒக்காரையை....’சுஸ்வாத்’ தில்.
இன்னும்
சாப்பிட்டுப்பார்க்கவில்லை.
அதற்குள்
இந்த அவசரப் பதிவு!
இந்த
ஆண்டு ஒக்காரையுடன்,மாலாடும் ,மிக்சரும்,தீபாவளி மருந்தும் வாங்கிவிட்டேன்.
மற்ற
வீடுகளிலிருந்து ஏதாவது வரும்போது அவர்களுக்கு நாம் ஏதாவது கொடுக்க வேண்டாமா?
இனி
உக்காரையின் செய்முறை!
//தேவையான பொருள்கள்:
பயத்தம்பருப்பு – 1 கப்
கடலைப்பருப்பு – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
வெல்லம் – 2 கப்
நெய் – 4 தேக்கரண்டி
மு.பருப்பு – 50கிராம்
தேங்காய்
ஏலப்பொடி.
செய்முறை:
- பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து முடிந்தால் கிரைண்டரில் நன்றாக- மிக நன்றாக இட்லி மாவுப் பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு, வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து நன்கு ஆறவிடவும்.
- இட்லிகள் நன்கு ஆறியபின், மிக்ஸியில் இரண்டு இரண்டு இட்லிகளாக உடைத்துப் போட்டு ஒரு சுற்று சுற்றினாலே பொடியாக உதிர்ந்துவிடும். இட்லிகள் நன்கு ஆறியி ருக்க வேண்டியது முக்கியம். (சின்ன வயதில், மிக்ஸியில்லாத காலத்தில் நெய்யைத் தொட்டுக் கொண்டு கை விரல்களால் திரித்துத் திரித்து சிறு கட்டி கூட இல்லாமல் பாட்டி மெனக்கெட்டு உதிர்த்தது நினைவிருக்கிறது.)
- வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து *முற்றிய பாகாகக்* காய்ச்சி ஏலப்பொடி சேர்க்கவும்.
- பின், அடுப்பை சிம்மில் வைத்து, உதிர்த்த பொடியைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஒன்றாகக் கலக்கும் வரை அடுப்பு எரிந்தால் போதும்.
- தேங்காயை மிக மிகச் சன்னமாக நறுக்கி கால் கப் எடுத்துக் கொள்ளவும்.
- நெய்யைச் சூடாக்கி, உடைத்த முந்திரி, தேங்காய்த் துணுக்குகளைப் பொரித்துச் சேர்க்கவும்.
- ஆறியதும் ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்து ஒரு நான்கு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உதிர் உதிராக இருக்கும்; எடுத்து உபயோகிக்கலாம்.
* இட்லி உதிர்ப்பதற்கு முன் நன்கு ஆறியிருக்க வேண்டும், பாகு மிக முற்றியதாக இருக்க வேண்டும் என்பதும் உதிர் உதிரான நல்ல உக்காரைக்கு மிக முக்கியம்.
சில சாதாரணக் குறிப்புகள்:
* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் உக்காரைக்கு 2 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய உக்காரை காணும்; நல்ல உதிராக வரும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப்பாதி எடுத்துக் கொள்ளலாம்.
( எனது இடைச்செருகல்:மீனாக்ஷி
அம்மாளின் “சமைத்துப் பார்” புத்தகத்தில் துவரம் பருப்பும் சேர்க்கச்
சொல்லியிருக்கிறார்கள்)
சந்தோஷமான குறிப்புகள்:
* இந்த உக்காரை மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது. முக்கியமாக, செய்தவுடனே (பக்கி மாதிரி ) சாப்பிடுவதைவிட ஒருநாள் கழித்துச் சாப்பிட்டால் சுவை மிகுதியாக இருக்கும். (புளியோதரை மாதிரி.)
* எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.//
இந்தச் செய்முறை,படங்களுடன்,
திருமதி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களின் ”தாளிக்கும் ஓசை “ வலைப்பூவிலிருந்து
எடுத்தது.மிகச் சிறப்பான சமையல் குறிப்புகள் நிறைந்த வலைப்பூ!
இவரது வெங்காய சாம்பார் செய்முறையை முன்பு ஒரு முறை நான் வெளியிட்ட போது, யு. எஸ் ஸில் சிலர் செய்து பார்த்து,அதன் பெருமை யு.எஸ். முழுவதும் பரவி விட்டதாம்!
நன்றி JG!
டிஸ்கி:வாங்கிய உக்காரை டேஸ்ட் ரொம்ப சுமார்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)