தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 31, 2013

உணவும் உணவு சார்ந்த இடமும்--உக்காரை!அந்நாளில் தீபாவளி என்றால் அம்மா கட்டாயம் செய்யும் பட்சணங்கள் இவைதான்......

லட்டு,மிக்சர்(மொறு மொறு மிக்சர்!),சில நேரங்களில் மைசூர்பாகும் சேர்ந்து கொள்ளும்.

இவையெல்லாம் ஜீரணமாக வேண்டாமா(கடலை மாவு ஆச்சே!)?அதற்காகத் தவறாமல் தீபாவளி மருந்து என்றழைக்கப்படும் லேகியம்.

எங்கள் வீட்டில் தீபாவளியன்று காலையில் பஜ்ஜி செய்யும் வழக்கம் உண்டு.

அன்று அமாவாசையாக இருந்தால் வெங்காய பஜ்ஜி கிடையாது!

அம்மா செய்து வந்த முக்கியமான ஒன்றை விட்டு விட்டு எதையெதையோ பேசிக் கொண் டிருக்கிறேன்!

ஆம் .ஒக்காரை அல்லது உக்காரை!

இன்று எத்தனை பேருக்கு அது பற்றித் தெரியும்?

எந்த இனிப்புக் கடையிலும் அது விற்கப்படுவதில்லை—கிராண்ட் ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்தபவன்,.......இத்யாதி.

ஆனால் இன்று தேடிப்பிடித்து வாங்கிவிட்டேன் ஒக்காரையை....’சுஸ்வாத்’ தில்.

இன்னும் சாப்பிட்டுப்பார்க்கவில்லை.

அதற்குள் இந்த அவசரப் பதிவு!

இந்த ஆண்டு ஒக்காரையுடன்,மாலாடும் ,மிக்சரும்,தீபாவளி மருந்தும் வாங்கிவிட்டேன்.
மற்ற வீடுகளிலிருந்து ஏதாவது வரும்போது அவர்களுக்கு நாம் ஏதாவது கொடுக்க வேண்டாமா?

இனி உக்காரையின் செய்முறை!//தேவையான பொருள்கள்:
பயத்தம்பருப்பு – 1 கப்
கடலைப்பருப்பு – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
வெல்லம் – 2 கப்
நெய் – 4 தேக்கரண்டி
மு.பருப்பு – 50கிராம்
தேங்காய்
ஏலப்பொடி.
ukkaarai 1
செய்முறை:
 • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து  முடிந்தால் கிரைண்டரில் நன்றாக- மிக நன்றாக இட்லி மாவுப் பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
 • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு, வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து நன்கு ஆறவிடவும்.
 • இட்லிகள் நன்கு ஆறியபின், மிக்ஸியில் இரண்டு இரண்டு இட்லிகளாக உடைத்துப் போட்டு ஒரு சுற்று சுற்றினாலே பொடியாக உதிர்ந்துவிடும். இட்லிகள் நன்கு ஆறியி ருக்க வேண்டியது முக்கியம். (சின்ன வயதில், மிக்ஸியில்லாத காலத்தில் நெய்யைத் தொட்டுக் கொண்டு கை விரல்களால் திரித்துத் திரித்து சிறு கட்டி கூட இல்லாமல் பாட்டி மெனக்கெட்டு உதிர்த்தது நினைவிருக்கிறது.)
 • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து *முற்றிய பாகாகக்* காய்ச்சி ஏலப்பொடி சேர்க்கவும்.
 • பின், அடுப்பை சிம்மில் வைத்து, உதிர்த்த பொடியைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஒன்றாகக் கலக்கும் வரை அடுப்பு எரிந்தால் போதும்.
 • தேங்காயை மிக மிகச் சன்னமாக நறுக்கி கால் கப் எடுத்துக் கொள்ளவும்.
 • நெய்யைச் சூடாக்கி, உடைத்த முந்திரி, தேங்காய்த் துணுக்குகளைப் பொரித்துச் சேர்க்கவும்.
 • ஆறியதும் ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்து ஒரு நான்கு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உதிர் உதிராக இருக்கும்; எடுத்து உபயோகிக்கலாம்.
ukkaarai 2
* இட்லி உதிர்ப்பதற்கு முன் நன்கு ஆறியிருக்க வேண்டும், பாகு மிக முற்றியதாக இருக்க வேண்டும் என்பதும் உதிர் உதிரான நல்ல உக்காரைக்கு மிக முக்கியம்.
ukkaarai 3
சில சாதாரணக் குறிப்புகள்:
* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் உக்காரைக்கு 2 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய உக்காரை காணும்; நல்ல உதிராக வரும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப்பாதி எடுத்துக் கொள்ளலாம்.


( எனது இடைச்செருகல்:மீனாக்ஷி அம்மாளின் “சமைத்துப் பார்” புத்தகத்தில் துவரம் பருப்பும் சேர்க்கச் சொல்லியிருக்கிறார்கள்)

சந்தோஷமான குறிப்புகள்:
* இந்த உக்காரை மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது. முக்கியமாக, செய்தவுடனே (பக்கி மாதிரி ) சாப்பிடுவதைவிட ஒருநாள் கழித்துச் சாப்பிட்டால் சுவை மிகுதியாக இருக்கும். (புளியோதரை மாதிரி.)
* எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.//இந்தச் செய்முறை,படங்களுடன், திருமதி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களின் ”தாளிக்கும் ஓசை “ வலைப்பூவிலிருந்து எடுத்தது.மிகச் சிறப்பான சமையல் குறிப்புகள் நிறைந்த வலைப்பூ!
இவரது வெங்காய சாம்பார் செய்முறையை முன்பு ஒரு முறை நான் வெளியிட்ட போது, யு. எஸ் ஸில் சிலர் செய்து பார்த்து,அதன் பெருமை யு.எஸ். முழுவதும் பரவி விட்டதாம்!

நன்றி JG!

டிஸ்கி:வாங்கிய உக்காரை டேஸ்ட் ரொம்ப சுமார்!
 

11 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  தீபாவளிக்கு அழகான சமையல் விளக்கம் அருமை வாழ்த்துக்கள் ஐயா

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  -

  பதிலளிநீக்கு
 2. suvaiyaana kurippu sir. enakku theriyum ukkaarai patri... en appavukku mikavum pidithathu intha ukkaarai. appa ammaavin thalai deepavalikku paatti ukkaarai seydhu thaan appaavukku thandhaarkalam.....:))

  moondru paruppum thaan engal veetil upayokkipaarkal...

  deepavali wishes sir..

  பதிலளிநீக்கு
 3. ரசனையான விளக்கம் ஐயா... இதுவரை செய்ததில்லை... செய்முறைக்கு நன்றி...

  இனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. சமையல் விளக்கம் அனைத்தும் அருமை அய்யா. ரசனை.
  தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 5. இதுவரைக் கேள்விப்படாத பெயர் .செய்முறையைப் பார்த்தாச்சு
  இது போதும் கலக்கிட வேண்டியது தான் (நான் சொன்னது வயிற்றையாக்கும் :))) )
  சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி .இனிய தீபாவளி வாழ்த்துக்களும் ஐயா ..

  பதிலளிநீக்கு
 6. உக்காரை பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். சாப்பாட்டுப் பிரியர்களுக்காக அக்கறையுடன் உக்காரை பற்றிய செய்முறை குறிப்பு தந்தமைக்கு நன்றி!
  உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. உக்காரை! புதிதாக கேள்விப்படுகிறேன்.. செய்முறை மிகவும் எளிமையாகவும் விளக்கமாகவும் இருப்பதால் வீட்டம்மாவிடம் சொல்லி செய்ய வேண்டும். சுகர் ப்ரீயாக!!

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அருமை

  உங்களுக்கு என் இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. உக்காரை பேரை கேட்டிருக்கேன். ஆனா செய்முறையை இன்னிக்குதான் பார்க்குறேன்

  பதிலளிநீக்கு
 10. இந்த உக்காரை மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது. முக்கியமாக, செய்தவுடனே (பக்கி மாதிரி ) சாப்பிடுவதைவிட ஒருநாள் கழித்துச் சாப்பிட்டால் சுவை மிகுதியாக இருக்கும். (புளியோதரை மாதிரி.)
  * எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.// :)


  தீபாவளி நல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. உக்காரை கேள்வி பட்டு இருக்கேன்! உண்டதில்லை! செய்முறையோடு விளக்கியமைக்கு நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு