தொடரும் தோழர்கள்

புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 25, 2017

காலா!

ஒரு திரை இசை.

வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்.

"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு" என்று துவங்கும் பாடல்.

அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்!

காரணம்,பாடல் வரிகளா?

பாடிய பாடகியின் குரலா?

படத்தில் ஆடிய மாளவிகாவின் ஆட்டமா?

இருக்கலாம்.

ஆனால் நிச்சயமான காரணம்......

அப்பாடலின் ஒரு வரி!

"நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜனிகாந்தும் கருப்புதான்
 அழகு கருப்புதான்"

இது போதாதா பாடல் ஹிட்டாக....!

சரி,இதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு?

காலா என்றால் இந்தியில் கருப்பு என்று பொருளாம்.

இந்தியில் ஒரு விசித்திரம்.எல்லாவற்றுக்கும் பால் உண்டு....

கண் ஆண் பால்,மூக்கு பெண்பால் என்பது போல்

அது போல் காலா என்பது காலி என்றும் மாறும்,அது குறிக்கும் பொருளைப் பொறுத்து.

அது தவிர க,ச,ட,த,ப என்ற எழுத்துக்களுக்கு நான்கு வர்க்கங்கள்!

 டில்லிக்குப் போன புதிதில் ஒரு முறை அலுவலகத்தில் ஊழியரை அழைத்து ஒரு காலி கோப்பு கொண்டு வரச் சொன்னேன்.

அவர் விழித்து விட்டு அப்படியெல்லாம் கோப்பு கிடையாதே என்றார்

நான் என் தேவையை விளக்கினேன்.

ஓ! காலி கோப்பா என்று சொல்லி விட்டுக் கொண்டு வந்தார்.

என்ன இது குழப்பம் என்கிறீர்களா?

நான் கேட்டது kaaலி கோப்பு.அதாவது கருப்புக் கோப்பு!

அவர் சொன்னது khaali கோப்பு.அதாவது புதிய,எதுவும் கோக்காத கோப்பு.

தவறான உச்சரிப்பின் விளைவு!

இப்போது கருப்புக்கு வருவோம்.

அழகு கருப்புதான் ...பாடல் வரி

உண்மைதான்.

"கருப்பே ஒரு அழகு காந்தலே ஒரு ருசி " என்று சொல்வார்கள்.

உலக அழகி கிளியோபாட்ரா கருப்பு என்று சொல்வோர் உண்டு;இல்லை என்போரும் உண்டு .
காக்கும் கடவுள் திருமாலே கருப்பு நிறம்தான்.

ஆனால் அதைக் கருப்பு என்று சொல்லாமல் பச்சை என்றும்,இராமனை நீல வண்ணன் என்று சொல்வர்.

பச்சை மாமலைபோல் மேனி என்று பாடுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

மையோ,மரகதமோ,மழைமுகிலோ...ஐயோ என்று வர்ணிக்க முடியாமல் தவிக்கிறார் கம்பர்.

திருமால் படுத்துக் கிடப்பதனால் பாற்கடலே பச்சை நிறமாகி விட்டதாம்.

நாமும்தான் தினம் காக்கையைப் பார்க்கிறோம்.

ஆனால் பாரதி பார்க்கும்போது அவனுக்கு ........

காக்கைச் சிறகினிலே நந்தலாலாவின் கருமை நிறம் தோன்றுகிறது.

காலா என்றால் எமனை விளிப்பது.

எவரேனும் எமனை விளிப்பரா?

காலனுக்கும் காலன் உண்டா?

அவன்தான் காலகாலன்.......சிவன்.

 மார்க்கண்டேயன் உயிரைக்கவர்ந்து செல்ல எமன் வந்தபோது,மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்ள சிவன் தோன்றி எமனைக் காலால் உதைத்து சூலத்தை ஓங்குகிறார்

எமன் மன்னிப்பு வேண்டித் தப்பிக்கிறான்

காலனைக் காலால் உதைக்கும் துணிச்சல் சிவனைத்தவிர,இவனுக்கும் இருந்தது

பாரதி!

காலருகே வா உன்னை மிதிக்கிறேன் என்கிறான்.

சாவைக் கண்டு அஞ்சாத அத்துணிவு எல்லோருக்கும் வேண்டும்!

இறுதியாக,ஆனால் முதன்மையான ஒரு செய்தி

காலா என்பது சூப்பர் ஸ்டாரின்,ரஞ்சித் இயக்கும் படத்தின் தலைப்பு.

படம் இமாலய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.



திங்கள், டிசம்பர் 21, 2015

வைகுண்ட ஏகாதசி.



ஏகாதசி என்பது அமாவாசை/பௌர்ணமிக்குப் பின் வரும் 11வது நாள்.(எல்லோருக்கும் தெரிந்த செய்தியைப் பெரிசா எழுத வந்துட்டியா?)மார்கழி மாதத்தில்,வளர் பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவது,வைகுண்ட பலன் தரும் என்பார்கள்(விரதம் என்றால் என்ன?-பட்டினிதான்.! மற்ற சில நியமங்களும் உண்டு.)ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும்.அக்காலத்தில் பெரியவர்கள் சொல்வார்கள்தினம் இரண்டு;வாரம் இரண்டு; மாதம் இரண்டு;வருஷம் இரண்டு என்று.மாதம் இரண்டு என்றால்,இரண்டு ஏகாதசிகளிலும் உண்ணா நோன்பை மேற்கொள்வது. (மற்றவை என்ன என்பது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாதது; எனவே தெரியாவிடில் நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)ஏகாதசிக்கு மறுநாள், துவாதசியன்று காலை சீக்கிரமே உணவு அருந்த வேண்டும்.(பின்னே ஒரு நாள் பட்டினி என்றால் சும்மாவா?)இதைப் பாரணை என்பார்கள்.பட்டினியை விட்டாலும் பாரணையை விடக் கூடாது என்பர்.இதை நான் தவறாமல் கடைப் பிடிக்கிறேன்.பட்டினியை விட்டு விடுகிறேன்;பாரணையை விடுவதில்லை!பாதிப் புண்ணியம் உண்டோ|? துவாதசி அன்று உணவில் அகத்திக் கீரையும், நெல்லிக்காயும்,,சுண்டைக்காயும் இருக்க வேண்டும்.!இதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்க வேண்டும்.


இப்போது வைகுண்ட ஏகாதசிக்கு வருவோம்.ஆண்டு முழுவதும் விரதம் இருக்க முடியா விட்டாலும், வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் அது மூன்று கோடி ஏகாதசி விரதத்துக்கு சமம் என்று சொல்கிறார்கள்.அதனால் இது முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப் படுகிறது.

இத்தினம் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் மிக விசேஷமாக் கொண்டாடப் படுகிறது. இந்நாளில் மிக முக்கியமான நிகழ்ச்சி சொர்க்க வாசல் திறப்புதான்.அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப் பட்டவுடன்,அவ்வழியாகச் செல்வதற்கு மக்கள் வரிசையில் காத்திருப்பர்.மது கைடவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி,அன்று அவ்வாசல் வழியாக வருபவர்களுக்கு, அவர்கள் எப்படிப்பட்ட பாவம் செய்தவர்களாயினும் முக்தி அளிப்பதாக பகவான் வாக்களித்தார். எனவேதான் இச்சொர்க்கவாசல் திறப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இன்று நான் கோவிலுக்குப் போகவில்லை.கூட்டமில்லாத சாதாரண நாட்களில்தான் நான் பெரும்பாலும் கோவிலுக்குச் சென்று அமைதியாக வழி பட்டு விட்டு வருவேன்.

வைகுண்டநாதன் அருளால் எல்லாரும் எல்லா நலமும் பெற்று வாழப் பிரார்த்திக்கிறேன்


(சிறிது மாற்றப்பட்ட மீள் பதிவு)

செவ்வாய், அக்டோபர் 27, 2015

மார்க்கண்டேயன் கிழவனானான்!




வாமதேவரே!”

”யார்! மிருகண்டு முனிவரா? என்னைத் தேடி வந்தது என் பாக்கியம்”

”வாமதேவரே!உங்கள் குமாரி  யாழ்தேவி பூப்படைந்து விட்டாளே;மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?”

“ஆம்! என் தகுதிக்கேற்ற இடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”

“அது விஷயமாகத்தான் வந்தேன். எங்கள் குல அன்பு மணி விளக்கான என் மகன் மார்க்கண்டேயனுக்கு உங்கள் மகளைப் பெண் கேட்டு வந்தேன்”

திகைக்கிறார் வாமதேவர்

“என்ன வாமதேவரே? பதிலே இல்லை”

“மிருகண்டு முனிவரே ! உங்கள் மகன் வரம் பெற்று  மூன்று ஆண்டுகளாயிற்று;இன்னும் எத்தனை காலம் சென்றாலும் அவன் பதினாறு வயதுச் சிறுவனாகவே இருப்பான்!  யாழ்தேவிக்குத்  தற்போது வயது 15.  முப்பது ஆண்டுகள் கழிந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.என் மகளுக்கு 45 வயது;மார்க்கண்டேயனுக்கு அதே 16.கணவன் மனைவியாக எப்படிச் சேர்ந்திருக்க முடியும்?காண்பவர்கள் நகைக்க மாட்டார்களா?”

மிருகண்டு சோர்ந்து போகிறார்.

வாமதேவர் தொடர்கிறார்”தப்பாக நினைக்க வேண்டாம்.உங்கள் மகனுக்குத் திருமணம் செய்யும் ஆசையை விட்டு விடுங்கள்.அவன் என்றும், பிரம்மச்சாரியாய்த்தான் இருக்க முடியும்.ஒரு வேளை உங்களைக் காட்டிலும் சிறந்த மகரிஷியாகவும் ஆகலாம்”
......
......

இப்படித்தான் எங்கும்;நண்பர்கள் விலக,சிறுவர்கள் புறக்கணிக்க,கன்னியர் நகைக்க, வாழ்க்கை நரகமாகிறது 

ஆண்டுகள் ஓடுகின்றன!

இதோ.....





என்றும் பதினாறாய் இளமை வரம் பெற்ற மார்க்கண்டேயன்

அன்றொருநாள் சிவனெதிரே வந்தான்!

மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்த முக்கண்ணன்

இரு கண் திறந்தவனைப் பார்த்தான்.

”மகனே!

”எங்கு வந்தாய் ?என்ன புதுப் பிரச்சினை?”

பணிந்தான் மார்க்கண்டேயன் பரமனை

“என்ன வரம் தந்தீர்?ஏன் தந்தீர் இந்த வரம்?”

பதினாறு வயது இது பரிதாப வயது

சிறுவனும் இல்லை,நான் குமரனும் இல்லை

இங்கும் இல்லை அங்கும் இல்லாத ஒரு சோகம்!

நண்பர்கள் வளர்கிறார்கள்,மணம் புரிகிறார்கள்

தந்தையாகிறார்கள், பாட்டனாகிறார்கள்;

வேடிக்கை பார்த்தபடி நிற்கிறேன் 

நான்!

என்னிலும்   மிக இளையவர் கூட

இன்று குடும்பம் குழந்தை என்று 

நன்கு அழுந்தி விட்டனர் வாழ்க்கையில்.

பலர் இறக்கின்றனர்,பலர் பிறக்கின்றனர்

வாழ்க்கை வட்டம் சுற்றுகிறது

நான் நிற்கிறேன் மையப் புள்ளியாய்!

மாற்றமும் இல்லை,முன்னேற்றமும் இல்லை!

ஓடி விளையாடச் சிறுவர்கள் மறுக்கக்

கூடிக் களித்திடக் கன்னியரும் வெறுக்க

என்ன செய்வேன் நான்?

என்ன பயன் இந்த வாழ்க்கை

சாகா வரம் ஒன்று தந்தீர்

என்றும் பதினாறாக

ஆனால் நானோ செத்துச் செத்துப் பிழைக்கிறேன்

நாள் தோறும்!

வேண்டாம் இந்த வரம்;அல்ல அல்ல சாபம்!

வாழவிடும் என்னை!

சிரித்தான் சிவ பெருமான்

பதினாறு வயதிலேயே

பல்லாண்டு கழித்த பின் வந்ததோ இந்த ஞானம்

பதினாறிலேயே கழிந்த ஆண்டுகள் பத்தேழு!

தந்தேன் அவற்றை உனக்கு.!

……………….

மார்க்கண்டேயன் கிழவனானான்!








செவ்வாய், அக்டோபர் 20, 2015

பத்து எண்றதுக்குள்ளே!


ஆரம்பமாகப் போகிறது

நேரம் நெருங்கி விட்டது

பின்னோக்கி எண்ணத் தொடங்க வேண்டியதுதான்

பத்து
ஒன்பது
எட்டு
..
..
இதுதான் வழக்கம்.

திங்கள், அக்டோபர் 19, 2015

தெறிக்க விடலாமா?......தல!



தெறித்தல் என்ற பதத்தின் பொருள் என்ன?.........

சிதறுதல்; குலைதல்; துள்ளிவிழுதல்; முரிதல்; பிளத்தல்; உடைத்தல்; அறுதல்; வேறுபடுதல்; நீங்குதல்; தவறுதல்; செருக்காயிருத்தல்; பிதுங்குதல்; குறும்புபண்ணுதல்; நரம்புதுடித்துநோவுண்டாக்குதல்; விரலால்சுண்டுதல்; விரலால்உந்துதல்; முற்றுதல்; தாக்கப்பட்டுவெளிப்படுதல்.

திங்கள், ஜனவரி 05, 2015

உ உ சா இ--பண்டிகை உணவு


இன்று திருவாதிரை..

ஆருத்ரா தரிசனம் என்று அழைக் கப்படும்,சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள்.கர்மாவே பெரிது, கடவுள் இல்லைஎன்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. 


ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது.சேந்தனார் பேரைச் சொல்லிக் களி,அதற்குத் துணையாக ஏழு கறிக்கூட்டு நாம் சாப்பிடுகிறோம்!.களியில் கிடக்கும் முந்திரிப் பருப்புகள்,களியில் கொஞ்சம் நெய் ஊற்றிச் சாப்பிட்டால்...ஆகா !

இந்தப் பண்டிகைகள் நிச்சயமாக அவற்றோடு தொடர்புடைய உணவு வகைகளையே  நினைவு படுத்துகின்றன.

அடுத்து  வருகிறது பொங்கல் திருநாள்.நெய் சொட்டச் சொட்டச் சர்க்கரைப் பொங்கல் (ஆமாம்,அது வெல்லப் பொங்கல்தானே,பின் ஏன் சர்க்கரைப் பொங்கல் என்று சொல்கிறோம்?!), மெது வடை.பொழுது போகவில்லை என்றால் கடித்துத் துப்பக் கரும்பு!  

பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று பல வீடுகளில் போளி செய்வார்கள்.அந்தப் பருப்புப் போளியில் நல்ல நெய் ஊற்றிச் சாப்பிட வேண்டுமாம்…( கன்னடக்காரர்கள் சொல்வார்களாம் ஹத்து போளி டப்பா நெய்!) கூடவே ஆமவடை(ஆமை முதுகு போல் இருப்பதாலா?!).பருப்பு வடை மசால் வடை என்றெல்லாம் அழைக்கப்படும் ஒன்று


ராமநவமி!பானகம்,நீர்மோர்,வடைப் பருப்பு எனவித்தியாசமான ஐட்டங்கள்!


ஜன்மாஷ்டமி!குழந்தை கண்ணனின் பேரைச் சொல்லி நொறுக்குவதற்கு முறுக்கு, சீடை, அப்பம் வகையறாக்கள்.வெண்ணை வேறு.எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் வெண்ணையில் சர்க்கரை சேர்த்து உருட்டி விழுங்குவார்கள் குழந்தைக் கண்ணன் சுவைப்பதற்காக,முறுக்கு மாவிலேயே சூப்பி என்று ஒன்று! ....சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!


விநாயகர் சதுர்த்தி...விநாயகருக்கு மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் பிடிக்கும்,எனவே அவர் கையிலேயே மோதகத்தைக் கொடுத்து விட்டோம்!மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலைக் குறிக்கும்!இந்தக் கொழுக்கட்டையிலேயே வெல்லக் கொழுக்கட்டை,உப்புக் கொழுக்கட்டை தவிர சிலர் எள்ளுக் கொழுக்கட்டை வேறு செய்வார்கள்.இத்தோடு பல விதமான பழங்கள் ”கபித்த பலம், ஜம்புபலம்” என்று சொல்வார்கள்.அதாவது விளாம்பழம், நாவல்பழம்.அளவில்லாமல் கொழுக் கட்டை   தின்றால்,இந்தப் பழங்கள் ஜீரணத்துக்கு உதவுமாம்!


விதவிதமான இனிப்புகள் சாப்பிடுவதற்காக இருக்கவே இருக்கிறது தீபாவளி.வெறும் இனிப்பு போதுமா?காரம்,மிக்சர்,காராசேவு,ஓமப்பொடி என்று பலவும்.


கார்த்திகையன்று பொரி..அவல் பொரி,நெல்பொரி என இரண்டு வகைகள்.வெல்லப்பாகில் மூழ்கியவை.பலர் அப்பம்,வடை,அடையும் கூடச் செய்வார்கள்.


இவை தவிர பல சாதாரண விசேட தினங்களில் கண்டிப்பாகப் பாயசம் உண்டு…..சேமியா பாயசம்,அவல் பாயசம்,பால் பாயசம்,காரட் பாயசம்,பாதாம் பாயசம்,கேரளாவின் அடைப் பிரதமன்,சக்கைப் பிரதமன் என்று பெரிய லிஸ்ட்!மெது வடை,மசால் வடைகளும் உண்டு.


ஆனால் அந்த நாளில் அதிக உடல் உழைப்பு இருந்தது,சாப்பிட்டது செரிமானம் ஆயிற்று. 


இந்நாளில் …


மறுநாள் சீரண மாத்திரைகளே துணை!

(நேற்று ஒரு பிறந்தநாள் விழாவில் சாப்பிட்ட சாப்பாடு செரிக்க யுனிஎன்சைம் சாப்பிட வேண்டியதாயிற்று.எனவேதான் இப்பதிவு.)