தொடரும் தோழர்கள்

பண்டிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்டிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 12, 2016

ஆண்டாளின் சமையலறை!




”வைதேகி,வைதேகி”

“ஏன்னா கூப்பாடு போடறேள்”

இன்னிக்கு என்னதேதி

இதைக் கேக்கறதுக்கா கூப்பிட்டேள்

இல்லடி ;ஒனக்கு நெனவிருக்கா பாத்தேன்

இது கூடத்தெரியாதா? 12

 மார்கழி மாசம் என்ன தேதி? 27 டி

அதுக்கென்ன?

இன்னிக்குக் கூடாரவல்லியாச்சே!

தெரியுமே இன்னிக்குச் சக்கரைப் பொங்கல் ஞாபகம் வந்துடுத்தாக்கும்.ஏதாவது ஒரு பண்டிகைன்னு  சொல்லி விதவிதமாத் தின்னுட்டு அஜீர்த்தில அவஸ்தைப் பட வேண்டியது! அன்னிக்கு அப்படித்தான்;அனுமத் ஜெயந்திக்கு உளுந்தவடை பண்ணி னேன்; எத்தனை வடை தின்னேள்னு ஒங்களுக்கும் தெரியாது அந்த அனுமாருக்கும் தெரியாது. அப்பறம் ரெண்டு நாள் பத்தியம்.இன்னிக்குச் சக்கரைப் பொங்கல். கொஞ்சமாத்தான் பண்ணப் போறேன்

அடியே!எவ்வளவு பண்ணாலும் அதை நன்னாப் பண்ணணும்.நெய்யைக் கஞ்சத்தனம் பண்ணாம ஊத்தணும்!அள்ளிச் சாப்பிட்டா நெய் அப்படியே முழங்கை வழியா வழிஞ்சு ஓடணும்!

ஆமா! இன்னிக்கு நெய் ஓடும்;நாளைக்கு டாக்டர் கிட்ட நீங்க ஓடணும்;இந்தக் கொழுப்பு குறைய பத்து நாள் ஓடணும்! அதெல்லாம் அந்தக்காலத்துக்குச் சரின்னா! இப்பல்லாம் மாறிடுத்து;சக்கரை வியாதி,கொலஸ்ட்ரால்னு ஆயிரம் வியாதி.

போங்கோ,போய் மொதல்ல ஸ்நானம் பண்ணிட்டுக் கோவிந்தனைச் சேவிச்சுட்டு வாங்கோ; அப்பறம்தான் காபியே!

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்---




படத்தில் இருப்பது அக்கார அடிசில்! சகோதரி ஜெயஸ்ரீ கோவிந்தராஜனுக்கு நன்றி
எப்படிச் செய்வது? செய்முறை அவர் பதிவில்!








சனி, டிசம்பர் 26, 2015

ஆருத்ரா தரிசனம்.





மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக் கப்படும்,சிவனுக்கு உகந்த நாள்.

பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள். “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர் களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை.

அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

அன்று,சிதம்பரத்தில் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் செய்யப் படும் (கேட்டதுதான்.பார்த்ததில்லை)

எங்கள் வீடுகளில் செய்யப்படும் களியும் ஏழு கறிக்கூட்டும் மிகவும் சுவையானவை. ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது. இனிப்பான களியையும், உப்பு,காரம் நிறைந்த கூட்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது –சுகம்!

செய்முறை தெரிய வேண்டுமா?ஜெயஸ்ரீயைத் தவிர வேறு யாரைக் கேட்க முடியும்?

இன்று திருவாதிரை.தில்லை நடராஜரை வணங்கி எல்லா நலமும் பெறுவோம்.

(மீள்பதிவு)


டிஸ்கி:இந்த ஆண்டு எங்கள் வீட்டில் எந்தப் பண்டிகையும் கிடையாது;வழக்கமாகக் கொடுக்கும் எதிர் வீட்டுக்காரர்களும்  மாற்றலில் போய் விட்டார்கள்;எனவே களி கூட்டு கிடையாது!

திங்கள், ஜனவரி 05, 2015

உ உ சா இ--பண்டிகை உணவு


இன்று திருவாதிரை..

ஆருத்ரா தரிசனம் என்று அழைக் கப்படும்,சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள்.கர்மாவே பெரிது, கடவுள் இல்லைஎன்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. 


ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது.சேந்தனார் பேரைச் சொல்லிக் களி,அதற்குத் துணையாக ஏழு கறிக்கூட்டு நாம் சாப்பிடுகிறோம்!.களியில் கிடக்கும் முந்திரிப் பருப்புகள்,களியில் கொஞ்சம் நெய் ஊற்றிச் சாப்பிட்டால்...ஆகா !

இந்தப் பண்டிகைகள் நிச்சயமாக அவற்றோடு தொடர்புடைய உணவு வகைகளையே  நினைவு படுத்துகின்றன.

அடுத்து  வருகிறது பொங்கல் திருநாள்.நெய் சொட்டச் சொட்டச் சர்க்கரைப் பொங்கல் (ஆமாம்,அது வெல்லப் பொங்கல்தானே,பின் ஏன் சர்க்கரைப் பொங்கல் என்று சொல்கிறோம்?!), மெது வடை.பொழுது போகவில்லை என்றால் கடித்துத் துப்பக் கரும்பு!  

பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று பல வீடுகளில் போளி செய்வார்கள்.அந்தப் பருப்புப் போளியில் நல்ல நெய் ஊற்றிச் சாப்பிட வேண்டுமாம்…( கன்னடக்காரர்கள் சொல்வார்களாம் ஹத்து போளி டப்பா நெய்!) கூடவே ஆமவடை(ஆமை முதுகு போல் இருப்பதாலா?!).பருப்பு வடை மசால் வடை என்றெல்லாம் அழைக்கப்படும் ஒன்று


ராமநவமி!பானகம்,நீர்மோர்,வடைப் பருப்பு எனவித்தியாசமான ஐட்டங்கள்!


ஜன்மாஷ்டமி!குழந்தை கண்ணனின் பேரைச் சொல்லி நொறுக்குவதற்கு முறுக்கு, சீடை, அப்பம் வகையறாக்கள்.வெண்ணை வேறு.எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் வெண்ணையில் சர்க்கரை சேர்த்து உருட்டி விழுங்குவார்கள் குழந்தைக் கண்ணன் சுவைப்பதற்காக,முறுக்கு மாவிலேயே சூப்பி என்று ஒன்று! ....சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!


விநாயகர் சதுர்த்தி...விநாயகருக்கு மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் பிடிக்கும்,எனவே அவர் கையிலேயே மோதகத்தைக் கொடுத்து விட்டோம்!மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலைக் குறிக்கும்!இந்தக் கொழுக்கட்டையிலேயே வெல்லக் கொழுக்கட்டை,உப்புக் கொழுக்கட்டை தவிர சிலர் எள்ளுக் கொழுக்கட்டை வேறு செய்வார்கள்.இத்தோடு பல விதமான பழங்கள் ”கபித்த பலம், ஜம்புபலம்” என்று சொல்வார்கள்.அதாவது விளாம்பழம், நாவல்பழம்.அளவில்லாமல் கொழுக் கட்டை   தின்றால்,இந்தப் பழங்கள் ஜீரணத்துக்கு உதவுமாம்!


விதவிதமான இனிப்புகள் சாப்பிடுவதற்காக இருக்கவே இருக்கிறது தீபாவளி.வெறும் இனிப்பு போதுமா?காரம்,மிக்சர்,காராசேவு,ஓமப்பொடி என்று பலவும்.


கார்த்திகையன்று பொரி..அவல் பொரி,நெல்பொரி என இரண்டு வகைகள்.வெல்லப்பாகில் மூழ்கியவை.பலர் அப்பம்,வடை,அடையும் கூடச் செய்வார்கள்.


இவை தவிர பல சாதாரண விசேட தினங்களில் கண்டிப்பாகப் பாயசம் உண்டு…..சேமியா பாயசம்,அவல் பாயசம்,பால் பாயசம்,காரட் பாயசம்,பாதாம் பாயசம்,கேரளாவின் அடைப் பிரதமன்,சக்கைப் பிரதமன் என்று பெரிய லிஸ்ட்!மெது வடை,மசால் வடைகளும் உண்டு.


ஆனால் அந்த நாளில் அதிக உடல் உழைப்பு இருந்தது,சாப்பிட்டது செரிமானம் ஆயிற்று. 


இந்நாளில் …


மறுநாள் சீரண மாத்திரைகளே துணை!

(நேற்று ஒரு பிறந்தநாள் விழாவில் சாப்பிட்ட சாப்பாடு செரிக்க யுனிஎன்சைம் சாப்பிட வேண்டியதாயிற்று.எனவேதான் இப்பதிவு.)

புதன், அக்டோபர் 23, 2013

கர்வா சௌத்



நேற்று கர்வா சௌத் என்னும் பண்டிகை.

 இது வட இந்தியாவில் இந்து மற்றும் சீக்கிய சமயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் ஓர் வருடாந்தர பண்டிகை ஆகும். இந்த நாளில் காலை (சூரிய உதயம்) முதல் மாலை (நிலவு உதயம்) வரை இப்பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல் நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர். இந்த உண்ணா நோன்பு உத்தராகாண்ட், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு, அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொண்டாடப் படுகிறது. வட இந்திய நாட்காட்டியில் கார்த்திகை மாதத்தில் (தமிழ் ஐப்பசி) முழு நிலவு கழிந்த நான்காம் நாள் கொண்டாடப்படுகிறது. அண்மைக்காலங்களில் இந்த விழா இந்தித் திரைப் படங்களின் தாக்கத்தால் திருமணமாகாத பெண்களும் தங்கள் காதலர்கள்/ கணவராக வரித்தவர்களின் நலனுக்காக கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர்.

அன்று மாலை  விரதம் இருந்த பெண்கள் நிலவை சல்லடை வழியே பார்ப்பது ஒரு சடங்காகும்.

இது பற்றிய ஒரு கேலிச் சித்திரம்-முக நூலில் கண்டது...................


                  கர்வா சௌத் அன்று!                                                       மற்ற நாட்களில்!!





வியாழன், மார்ச் 14, 2013

ஒன்பதுல குருவும் காரடையார் நோன்பும்!



ஒன்பதுல குரு எப்படி என நண்பர் கேட்டார்.

நன்றாகத்தான் இருக்கிறது என்றேன்.

லக்னத்துக்கு ஒன்பதில் குரு இருந்தால்,பொதுப்பலன்கள் இவைதாம்-சட்ட அறிவு,தத்துவ ஞானம் சிறப்பாக இருக்கும்.ஒன்பதில் இருக்கும் குருவை சுபக்கிரகங்கள் பார்த்தால் அநேக நிலம் வீடு வாங்கும் யோகம் இருக்கும்.உடன்பிறப்புகளிடம் அன்புடன் இருப்பார்.செல்வமும் புகழும் சேரும்.சந்திரனும் செவ்வாயும் குருவை வசீகரிக்குமானால்,ராணுவ உயர் அதிகாரி யாகலாம். சூரியனும் சுக்கிரனும் குருவோடு இணையுமானால்,நன்னடத்தை இல்லாமல் இருப்பார்.

இதாங்க ஒன்பதுல குரு!
………………………………………
இன்று காரடையார் நோன்பு எனும் பண்டிகை.

இது பற்றி ஏற்கனவே வை.கோ அவர்களும் இராஜராஜேஸ்வரி அவர்களும் எழுதி விட்டார் கள்.எனக்கு இப் பண்டிகையில் மிகப் பிடித்த விஷயம் இன்று செய்யப்படும் வெல்ல அடையும் உப்பு அடையும்தான்.வெண்ணையுடன் சேர்த்து அடை சாப்பிடும் சுகமே தனி!

நோன்புக்கான நேரம் எது?மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில்,மாசி மாதத்திலேயே செய்ய வேண்டும்.
 இன்று மாலை 3.25 முதல் 3.45 வரை என்று சிலர் சொல்கிறார்கள்

 4.30 முதல் 4.55க்குள் என்று சிலர் கூறுகிறார்கள்.

ஏன் இந்த நேர வேறுபாடு.?

பஞ்சாங்கங்களே காரணம்.

திருக்கணிதம்,வாக்கியம் என்று இரண்டு வகைகள் உள்ளன.

வாக்கியப்பஞ்சாங்கப்படி(பாம்புப் பஞ்சாங்கம் )பங்குனி பிறக்கும் நேரம் இன்றுசூரிய உதயத்தி லிருந்து 24.20 நாழிகைகளுக்கு.(மீன ரவி 24.20 என்று போட்டிருக்கும்)

ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்;இரண்டரை நாழிகைகள் ஒரு மணி..

அப்படியென்றால். சூரிய உதயத்திலிருந்து 9மணி44 நிமிடத்துக்கு மாதம் பிறக்கிறது..

சூரிய உதயம் ஆறு மணிக்கு எனக் கொண்டால் மாலை 3.44 க்கு மாதம் பிறக்கிறது

எனவே மாதம் பிறக்கும் முன் கடைசி 15 அல்லது இருபது நிமிடங்கள் எனக் கொண்டால் 3.24 முதல் 3.44 வரை நோன்பு நேரம்!

ஆனால் திருக்கணிதப் பஞ்சாங்கத்தில் (மடம்) பங்குனி பிறக்கும் நேரமாகப் போட்டிருப்பது 26.21  நாழிகைகள்.அதாவது  2நாழிகை வித்தியாசம்;48 நிமிடங்கள்.எனவே நோன்பு நேரமும் மாறி விடுகிறது.

சரியான சூரிய உதய நேரத்தை எடுத்துக் கொண்டால் நேரம் இன்னும் 15 நிமிடங்கள் மாறிவிடும்.

அவரவர் எப்போதும்  அனுசரிக்கும் பஞ்சாங்கப்படி செய்து கொள்ளாலாம்!குடும்பப் புரோகிதர் சொல்வதைச் செய்யுங்கள்!

எத்தனை மணிக்கு செய்தாலும்,எனக்கு வர வேண்டிய இடங்களிலிருந்து அடை வந்தால் சரி(வெண்ணையுடன்)!