தொடரும் தோழர்கள்

திங்கள், ஜனவரி 05, 2015

உ உ சா இ--பண்டிகை உணவு


இன்று திருவாதிரை..

ஆருத்ரா தரிசனம் என்று அழைக் கப்படும்,சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள்.கர்மாவே பெரிது, கடவுள் இல்லைஎன்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. 


ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது.சேந்தனார் பேரைச் சொல்லிக் களி,அதற்குத் துணையாக ஏழு கறிக்கூட்டு நாம் சாப்பிடுகிறோம்!.களியில் கிடக்கும் முந்திரிப் பருப்புகள்,களியில் கொஞ்சம் நெய் ஊற்றிச் சாப்பிட்டால்...ஆகா !

இந்தப் பண்டிகைகள் நிச்சயமாக அவற்றோடு தொடர்புடைய உணவு வகைகளையே  நினைவு படுத்துகின்றன.

அடுத்து  வருகிறது பொங்கல் திருநாள்.நெய் சொட்டச் சொட்டச் சர்க்கரைப் பொங்கல் (ஆமாம்,அது வெல்லப் பொங்கல்தானே,பின் ஏன் சர்க்கரைப் பொங்கல் என்று சொல்கிறோம்?!), மெது வடை.பொழுது போகவில்லை என்றால் கடித்துத் துப்பக் கரும்பு!  

பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று பல வீடுகளில் போளி செய்வார்கள்.அந்தப் பருப்புப் போளியில் நல்ல நெய் ஊற்றிச் சாப்பிட வேண்டுமாம்…( கன்னடக்காரர்கள் சொல்வார்களாம் ஹத்து போளி டப்பா நெய்!) கூடவே ஆமவடை(ஆமை முதுகு போல் இருப்பதாலா?!).பருப்பு வடை மசால் வடை என்றெல்லாம் அழைக்கப்படும் ஒன்று


ராமநவமி!பானகம்,நீர்மோர்,வடைப் பருப்பு எனவித்தியாசமான ஐட்டங்கள்!


ஜன்மாஷ்டமி!குழந்தை கண்ணனின் பேரைச் சொல்லி நொறுக்குவதற்கு முறுக்கு, சீடை, அப்பம் வகையறாக்கள்.வெண்ணை வேறு.எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் வெண்ணையில் சர்க்கரை சேர்த்து உருட்டி விழுங்குவார்கள் குழந்தைக் கண்ணன் சுவைப்பதற்காக,முறுக்கு மாவிலேயே சூப்பி என்று ஒன்று! ....சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!


விநாயகர் சதுர்த்தி...விநாயகருக்கு மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் பிடிக்கும்,எனவே அவர் கையிலேயே மோதகத்தைக் கொடுத்து விட்டோம்!மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலைக் குறிக்கும்!இந்தக் கொழுக்கட்டையிலேயே வெல்லக் கொழுக்கட்டை,உப்புக் கொழுக்கட்டை தவிர சிலர் எள்ளுக் கொழுக்கட்டை வேறு செய்வார்கள்.இத்தோடு பல விதமான பழங்கள் ”கபித்த பலம், ஜம்புபலம்” என்று சொல்வார்கள்.அதாவது விளாம்பழம், நாவல்பழம்.அளவில்லாமல் கொழுக் கட்டை   தின்றால்,இந்தப் பழங்கள் ஜீரணத்துக்கு உதவுமாம்!


விதவிதமான இனிப்புகள் சாப்பிடுவதற்காக இருக்கவே இருக்கிறது தீபாவளி.வெறும் இனிப்பு போதுமா?காரம்,மிக்சர்,காராசேவு,ஓமப்பொடி என்று பலவும்.


கார்த்திகையன்று பொரி..அவல் பொரி,நெல்பொரி என இரண்டு வகைகள்.வெல்லப்பாகில் மூழ்கியவை.பலர் அப்பம்,வடை,அடையும் கூடச் செய்வார்கள்.


இவை தவிர பல சாதாரண விசேட தினங்களில் கண்டிப்பாகப் பாயசம் உண்டு…..சேமியா பாயசம்,அவல் பாயசம்,பால் பாயசம்,காரட் பாயசம்,பாதாம் பாயசம்,கேரளாவின் அடைப் பிரதமன்,சக்கைப் பிரதமன் என்று பெரிய லிஸ்ட்!மெது வடை,மசால் வடைகளும் உண்டு.


ஆனால் அந்த நாளில் அதிக உடல் உழைப்பு இருந்தது,சாப்பிட்டது செரிமானம் ஆயிற்று. 


இந்நாளில் …


மறுநாள் சீரண மாத்திரைகளே துணை!

(நேற்று ஒரு பிறந்தநாள் விழாவில் சாப்பிட்ட சாப்பாடு செரிக்க யுனிஎன்சைம் சாப்பிட வேண்டியதாயிற்று.எனவேதான் இப்பதிவு.)

9 கருத்துகள்:

 1. பண்டிகை என்றாலே கொண்டாட்டமும் அப்புறமும் திண்டாட்டமும் இந்த நாளில் வழக்கமாய் போயிற்று! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. தீபாவளிக்கு சுக்கு மிளகு திப்பிலி எல்லாம் சேர்த்து லேகியம் செய்வார்கள். சாப்பிட்ட பட்சணங்கள் செரிமானம் ஆவதற்கு.

  பதிலளிநீக்கு
 3. ஆருத்ரா தரிசனம்... களி... கூட்டு... எல்லாம் பதிவில்தான் பார்க்கிறோம்...
  இங்கு அதற்கெல்லாம் வேலை இல்லை ஐயா....

  பதிலளிநீக்கு
 4. ம்ம்ம்.... எல்லா பலகாரத்தையும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

  பொதுவாக நல்ல நாட்களில் அப்படி பலகாரம் செய்வது.... அன்றொரு நாளாவது
  இல்லாதவர்களும் கடனை வாங்கியாவது உண்பார்கள் என்ற நல்ல எண்ணத்தில் தான்.
  எப்போதும் சாப்பிடுபவர்கள் இதையெல்லாம் சாப்பிடாமல் இருப்பதே நலம்.

  ஆசையில் சாப்பிட்டுவிட்டால் இரண்டு மூன்று கிலோமீட்டர் நடந்திட வேண்டியது தான்.
  (எனக்கு இன்னும் இந்தப் பிரட்சனை வரவில்லை பித்தன் தாத்தா)

  பதிலளிநீக்கு
 5. யூனிஎன்ஸைம் நல்ல ஜீரண விருத்தி மருந்து. நானும் அதைத்தான் உபயோகிக்கிறேன். "ஸேம் பிளட்"

  பதிலளிநீக்கு
 6. பண்டிகையை நினைவு படுத்தும் சாக்கில் பலகாரங்களையும் உணவுப் பண்டங்களையும் நினைவூட்டிவிட்டீர்கள்! இப்போதெல்லாம் பண்டிகை என்றால் தொ(ல்)லைக்காட்சி தரும் சிறப்பு நிகழ்ச்சிகள் தானே முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
  //கன்னடக்காரர்கள் சொல்வார்களாம் ஹத்து போளி டப்பா நெய்!//
  அது ‘ஹத்து போளி டப்பி நெய்’ என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

  நாக்கில் எச்சில் ஊறவைத்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. சுவையான பலகார வகைகள். அம்மாவின் நினைவு வந்து போனது.

  பதிலளிநீக்கு
 8. எல்லாமே சுவைதான்! தேவை! சீரண மாத்திரை!

  பதிலளிநீக்கு