எங்கள் காலனியில்,அண்டை வீட்டில் குடியிருக்கும் நண்பர்;பெயர் முக்கியமென்றால் அவரை ராமன் என்றழைப்போம்.கணவன்,மனைவி இருவரும் வேலை பார்க்கிறார்கள். இருவருக்கும் சேர்ந்து மாத வருமானம்50000/60000 இருக்கலாம். அவர்களுக்கு இரண்டு பெண்கள்.பெரியவள் பி.காம் தேர்வு எழுதியிருக்கிறாள்;சின்னவள் +2 தேர்வு எழுதியிருக்கிறாள்.
இரண்டு நாட்களுக்கு முன் ராமன் என்னைக் காண வந்தார்.என்னிடம் சொன்னார் ”சார்,சந்திராவுக்கு(பெரியவள்) கோயம்புத்தூரில் எம்.பி.ஏ.யில் இடம்வாங்கி விட்டேன். மொத்தம் 8.5 லட்சம் ஃபீஸ்.இன்று 6 லட்சத்துக்கு டிராஃப்ட் எடுத்துக் கொண்டு கோவை போகிறோம்.நாளை பணத்தைச் செலுத்தி விட்டு,மறு நாள் காலை திரும்பி விடுவோம். உங்களைத் தவிர வேறு யாரிடமும் நான் சொல்லவில்லை .”
அவர் சென்ற பின் அம்மா கேட்டார்கள்”ராமன் என்ன சொன்னார்?”
ராமன் சொன்ன விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன்.அவர்கள் சிறிது நேரம் ஒன்று பேசவில்லை.
பின் சொன்னார்கள்”இப்படி 8.5 லட்சம் செலவழித்து வெளியூர் அனுப்பிப் படிக்க வைக்க வேண்டுமா?நாலு வருஷம் முன்னால்தான்,கஷ்டப்பட்டு இந்த ஃப்ளாட்டை வாங்கி யிருக்கிறார்கள்.இன்னும் கடனே கட்டி முடியவில்லை என்று நினைக்கிறேன்.இன்னும் நாலைந்து வருஷம் போனால் சந்திராவுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும்.அவளை விடப் படித்த மாப்பிள்ளையாக இல்லாவிட்டாலும் அவளுக்கு இணையாகப் படித்த மாப்பிள்ளை யாவது பார்க்க வேண்டும்.அவ்வளவு படித்து நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளை என்றால்,வரதட்சிணை இல்லாவிட்டாலும் கூடக் கல்யாணச்செலவே 6/7 லட்சம் ஆகி விடுமே. இப்போதெல்லாம் நல்ல மண்டபம் வேண்டுமென்றால் அதற்கே 2 லட்சம் ஆகி விடும் போலிருக்கிறதே?அப்போது பணத்துக்கு எங்கே போவது?”
நான் சொன்னேன்.”நன்றாகப் படிக்கிற பெண்.அவள் படிப்பை பி.காம் உடன் நிறுத்தச் சொல்கிறீர்களா?”
”இல்லை.சென்னையிலேயே எம்.காம் படிக்கட்டும்.கூடவே வேறு ஏதாவது படிக்கட்டும்
அதிக பட்சம் 1 அல்லது ஒன்றரை லட்சம் ஆகலாமா? மீதிப் பணம் அவள் கல்யாணத் துக்குப் பயன் படுமே? மாப்பிள்ளை தேடுவதும் அவ்வளவு சிரமமாக இருக்காது. அதோடு இன்னொரு பெண் வேறு இருக்கிறாளே?”அம்மா சொன்னார்கள்.
’’அப்படியென்றால் பெண்கள் இது போன்ற பெரிய படிப்புப் படிக்கக் கூடாது என்கிறீர்களா?”நான்
”நான் அப்படிச் சொல்லவில்லை.அவர்கள் நம்மைப் போல் மிடில் க்ளாஸ்.இருவரும் கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் தேடிச் சேமிக்கிறார்கள்.மிகவும் சிக்கனமாக இருக்கிறார்கள். சேமிப்பெல்லாம் இப்படிப் போய்விட்டால் நாளைக்குக் கல்யாணத்துக்கு என்ன செய்வார்கள்?அவர்களே வசதி அதிகமானவர்களாக இருந்தால் கவலையில்லை அந்தப் பெண்ணுக்கு ஸ்காலர்ஷிப்பும் ஏதும் கிடைக்காது.இதையெல்லாம் உத்தேசித்து தான் சொல்கிறேன்.”அம்மா
“ அவள் படித்து வேலை பார்த்துப் பணம் சேர்க்க மாட்டாளா?”நான்.
“நடக்கலாம்.நடக்காமலும் போகலாம்.அதை நம்பி பெற்றோர் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.”
ஒரு தாயின் அனுபவ பூர்வமான வார்த்தைகள்.
என் அம்மா பிற்போக்கானவர்களல்ல.முற்போக்கான சிந்தனைகள் உள்ளவர்கள் தான்.பெண்கள் படிக்க வேண்டாம் என்று நினைப்பவர் அல்ல.
பலர் அவர்களை ’மாடர்ன் மாமி’ என்று அழைப்பார்கள் அவர்களின் இந்த வார்த்தைகளில்,பொருளாதாரமும் கலந்து இருக்கிறது.வாழ்க்கையின் யதார்த்தம் கலந்திருக்கிறது.
32 ஆவது வயதில் தன் கணவனை இழந்து,ஐந்து குழந்தைகளுடன் (பெரியவன் 16 வயது,கடைசி பையன் 5 வயது,நடுவில் 3 பெண்கள்)நிர்க்கதியாய் நின்ற நிலையிலும் மன உறுதியுடன் அவர்களை வளர்த்து ஆளாக்கித் தன் கடமைகளைச் செவ்வனே முடித்த தாய்க்குத்தானே புரியும் வாழ்க்கையின் யதார்த்தம்.
என்னால் அவர்களுடன் உடன் படவும் முடியவில்லை,அவர்கள் கருத்தை ஒதுக்கித்தள்ளவும் இயலவில்லை.
நான் குழப்பத்தில் இருக்கிறேன்!