தொடரும் தோழர்கள்

நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2015

மீசையும் பாம்புச் சட்டையும்!



நட்பு என்பது என்ன?

எப்போதும் ஒன்றாய்த் திரிவது?

ஒருவர் இன்பமும் ,துன்பமும் தனதாய் மற்றவர் உணர்வது?

தேவையாகும்போது கேளாமலே உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவது?

வெறும் மகிழ்ச்சியான பேச்சோடு நிற்காமல்,செய்யும் தவற்றையும் சுட்டிக்காட்டி வழி நடத்துவது?

இவையெல்லாம்தான்

ஆனால் இன்னமும் உண்டு.

உரிமை எடுத்துக் கொண்டு சீண்டிப் பார்ப்பது.

அந்நேரங்களிலும் கோபமடையாமல் அதில் உள்ள நகைச்சுவையை ரசித்துச் சிரிப்பது.

கேளுங்கள் ஒருவரின் கதையை.

இவர் சென்னைக் கல்லூரி ஒன்றில் பட்ட மேற்படிப்பில் சேர்ந்தார்.

விடுதி வாழ்க்கை.

முதல் ஆண்டு மாணவர்களுக்குத் தனி அறை கிடையாது.

பழைய விடுதி என்றழைக்கப்பட்ட கட்டிடத்தில் ஒரு பெரிய அறை .அதில் இவருடன் இன்னும் மூன்று பேர்.  ஒருவர் மட்டும் பொருளாதார மாணவர்.

அவர் பெயர் கருப்பையா.

அவருக்கு ஒரு பழக்கம்.எப்போதும் மீசையைத் தடவிக் கொண்டே இருப்பார்.

நம்மவருக்கு ஒரு ஆசை.இவர் மீசை இல்லை என்றால் என்ன செய்வார் பார்க்கலாம் என்று.

ஓரிரவு

கருப்பையா மீசையுடன் படுத்து உறங்கச் சென்றார்

காலை எழுந்தார் .

மீசையைத்தடவிப் பார்த்தால் ஒரு பக்கம் மட்டுமே மீசை இருந்தது.

கண்ணாடியை எடுத்துப் பார்த்தார்.

ஒரு பக்க மீசையுடனான முகத்தை!

எதுவும் பேசவில்லை.

சவர அலகை எடுத்தார்

மீதி மீசையையும் மழித்தார்.

நம்மவருக்கு உறுத்தியது.

“கருப்பையா,என்ன ஒன்றுமே கேட்கவில்லை?”

“ஏன் கேட்க வேண்டும்?உம்மைத் தவிர யாரையா இதையெல்லாம் செய்வார்கள்?” என்று சிரித்தவாறே சொன்னார்.

அது நட்பு!

இதே மாணவர்.

இரண்டாம் ஆண்டு.

தனியறை.

அதே மாடியிலேயே முதல்அறையில் இருந்தார் ஒரு மிகவும் சாதுவான மாணவர்,

பெயர் சீனிவாசமூர்த்தி

ஒரு நாள்.நம்மவர் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகையில் ஒரு பாம்புச் சட்டையைக் கண்டார்.

மின்னல் போல் ஓர் எண்ணம்.

அதை எடுத்தார்.

அறை நோக்கி நடந்தார்‘ 

சீனிவாசமூர்த்தியின் அறை பூட்டியிருந்தது.

சாளரம் வழியாக அப்பாம்புச் சட்டையை உள்ளே போய் விட்டுப் போய் விட்டார்.

சீ.மூர்த்தி வந்து கதைவைத் திறந்தார்

பாம்புச் சட்டையைப் பார்த்தார்.

அஞ்சிப் பின் வாங்கினார்.

கூட்டம் கூடியது.

விடுதி வேலைக்காரர் வந்து அதை எடுத்துப் பார்த்து விட்டு  “ஈரமாக இருக்கிறது;இப்போதுதான் கழட்டியிருக்க வேண்டும்” என்று கூறி விட்டு அறையெல்லாம் தேடி விட்டுப் பின்,பொதுக் குளியலறைகள்  பக்கமும் போய்ப் பார்த்தார்.

சீ.மூர்த்தி அறைக்குள் போகவே மறுத்து விட்டார்.

காப்பாளரிடம் சென்று கூறி வேறு ஏற்பாடு செய்ய வேண்டப்போவதாகச் சொன்னார்.

நம்மவருக்குக் கொஞ்சம் நடுக்கம்!

அவரைத் தன் அழைக்கு  அழைத்துச் சென்று,தனியாக நடந்ததைக் கூறி வருத்தப்பட்டார்.

சீ.மூர்த்தி எதுவும் சொல்லாமல் தன் அறைக்குப்போய் விட்டார்.

மறுநாள் காலை.

நம்மவர் அறைக்கதவு தட்டப்பட்டது

திறந்தார்

சீ.மூர்த்தி!

சிரித்த முகத்துடன்.”ஆனாலும் உமக்குக் குசும்பு அதிகம்.எதில் விளையாடுவது என்றில்லையா” என்று கேட்டார்

இன்று வரை நட்பு தொடர்கிறது!

காரணம் புரிந்து கொள்ளுதல்.நம்மவர் குறும்புக்காரர் என்றாலும் நண்பர்கட்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது அவர்களுக்குத் தெரியும். 


அது நட்பு! 

இணையக் கோப்பெருஞ் சோழர்களுக்கு இப்பிசிராந்தையின்,இனிய நட்பு நாள் வாழ்த்துகள்!




செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

நட்பின் உச்சம்



அவன் காத்திருந்தான்.
நண்பனின் சமாதியருகில்……
அவனது இழப்புக்காக வருந்தி…
அவன் மீண்டு(ம்) வருவானோ என்ற ஒரு ஆசையில்……
வேறெந்த நினைவுமின்றிப் படுத்திருந்தான்.

ஐந்தாண்டுகளுக்கு முன்……
அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து…
உண்ணச் சரியான உணவு கிட்டாமல்..
மழை வெயிலிலிருந்து காத்துக்கொள்ள ஒரு இடம் கிடைக்காமல்…
அனைவராலும் விரட்டப்பட்டு அலைந்திருந்த வேளையில்…
அவன் இவனை ஆதரித்தான்…
இருக்க இடம் தந்தான்…
உண்ண உணவு தந்தான்…
நண்பனாய் ஏற்று அரவணைத்தான்…

பத்து நாட்களுக்கு முன்..
ஒரு லாரி மோதியதில் அவன்,இறந்து விட்டான் என இங்கு மண்ணுக்குள் புதைக்கப் பட்டிருக்கிறான்.

அன்று முதல்,..
இவன் அவ்விடம் விட்டு அகலவில்லை .
உணவு,தண்ணீர் எல்லாம் துறந்து அங்கேயே கிடக்கிறான்.
பத்து நாட்களில் மெலிந்து விட்டான்….
இவனுக்கு இன்னும் எத்தனை நாட்களோ.....

யாரோ சமூக சேவகர்கள் வந்து பார்த்தனர்.
அவனை அழைத்துச் செல்ல முயன்றனர்.
அவன் நகர மறுத்து விட்டான்.
அருகில் இருந்த மக்களிடம் கேட்டனர்.

அவர்கள் சொன்னார்கள்,அங்கு புதைக்கப்பட்டிருப்பவன்  ராணி என்னும் பெண்ணின் ஒரே மகனான18 வயது குமார் எனவும் இவன் அவனது நண்பனான ராமு எனவும்.

தொலைவில் இருந்த குமாரின் வீட்டுக்குச் சென்றனர்.

ராணியைக்கண்டனர்.

அவள் அழுதவாறு சொன்னாள்,மகன் இறந்து 10 நாட்கள் ஆகி விட்டன;அன்று முதல் ராமுவையும் காணோம் என.

அவளை அழைத்துக் கொண்டு சமாதிக்கு வந்தனர்.

அவளைக் கண்ட ராமு,உணவின்றிச் சோர்ந்திருந்த உடலே ஒரு பாரமாய் ஓடி வந்து அவள் காலடியில் படுத்துக் கொண்டான்.

அவள் அவனை அள்ளி எடுத்தாள்.

தன்னுடன் அழைத்துச் சென்றாள்.

அப்போது அவன் காதோடு சொன்னாள்”இனி உன் பெயர் ராமு இல்லை;குமார்

·  செய்தி:18 வயது பாஸ்கர் என்பனின் இறப்புக்குப் பின்  அவன் வளர்த்த டாமிஎன்னும் நாய் பதினைந்து நாட்களாக சமாதிஅருகிலேயே நகர மறுத்து படுத்துக் கிடந்து பின் பாஸ்கரின் தாய் வந்ததும் அவளுடன் சென்றது,,,,”இந்தியாவின் நேரங்கள்-26-08-2014”

வியாழன், செப்டம்பர் 01, 2011

உயிர்களிடத்து அன்பு வேண்டும்-கதை

ஒரு மனிதன் தன் நாயுடன் ஒரு நீண்ட சாலையில் நடந்து கொண்டிருந்தான்.

அழகிய இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே சென்று கொண்டிருந்தான்.

திடீரென அவன் உணர்ந்தான்,தான் இறந்துவிட்டோம் என்பதை!

தன் இறப்பும்,அதற்கு முன்பே நிகழ்ந்த அவன் நாயின் இறப்பும் அவனுக்கு நினைவு வந்தது.

அந்தச் சாலை எங்கு போகிறதோ எனச் சிந்தித்தான்.

கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் ஒரு பக்கத்தில் உயரமான சலவைகல்லாலான மதிற்சுவரைக் கண்டான்.

சிறிது தூரத்தில் மலை மேல் அந்த மதிற்சுவரில் அழகிய நுழைவாயில் ஒன்றைக் கண்டான்.

அருகில் சென்று பார்த்தபோது, அந்த வாயிலின் கதவில் ரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருப்பதையும்,,அந்த வாயிலை நோக்கிச் செல்லும் பாதை தங்கத்தால் போடப் பட்டிருப்பதையும் கண்டான்.

அந்த வாயிலை நோக்கித் தன் நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.அருகில் செல்லும்போது அந்த வாயிலின் உள்ளே ஒரு மனிதன் தங்க மேசையின் முன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

அருகில் சென்ற அவன் அந்த மனிதனிடம் கேட்டான்” இந்த இடத்தின் பெயர் என்ன?”

அந்த மனிதன் சொன்னான்”சொர்க்கம்”

அவன் கேட்டான்”குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”

”நிச்சயமாக!உள்ளே வாருங்கள் குளிர்ந்த நீர் வரவழைக்கிறேன்”சொல்லியவாறே அவன் கதவைத் திறக்கலானான்!

வழிப்போக்கன் தன் நாயைக் காட்டிக் கேட்டான்”என் நண்பனும் என்னோடு வரலாம் அல்லவா?”

”மன்னிக்கவும்!நாய்களுக்கு இங்கு அனுமதி இல்லை”

வழிப் போக்கன் யோசித்தான்.பின் தன் வந்த பாதையில் சாலையை நோக்கி நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.

நீண்ட தூரம் நடந்தபின் மற்றொரு வாயிலைக் கண்டான்.துருப்பிடித்த கதவு.அதை நோக்கி ஒரு மண்பாதை சென்று கொண்டிருந்தது.

அந்த வாயிலை அவன் நெருங்கியதும் ஒரு மனிதன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

அவனிடம் கேட்டான்”குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?”

”உள்ளே ஒரு குழாய் இருக்கிறது,வாருங்கள் ”

“நாயைக் காட்டிக் கேட்டான் “என் தோழனுக்கும் நீர் வேண்டும்”

அந்த மனிதன் சொன்னான்”குழாயடியில் ஒரு குவளை இருக்கிறது.எடுத்துக் கொள்ளலாம்”

அவன் உள்ளே சென்றான்.குழாயையும் குவளையையும் கண்டான்.தண்ணீர் எடுத்து நாய்க்கும் கொடுத்துத் தானும் அருந்தினான்.

தாகம் தீர்ந்தது.

மரத்தடி மனிதனை அணுகிக் கேட்டான்”இந்த இடத்தின் பெயர் என்ன?”

அவன் சொன்னான் “சொர்க்கம் என்றழைக்கப் படுகிறது”

வழிப் போக்கன் திகைத்தான்,

“குழப்பமாயிருக்கிறதே!நான் வரும் வழியில் ஒருவர் வேறு இடத்தையும் சொர்க்கம் என்று சொன்னாரே!”

ஓ!இந்த ரத்தினக்கல் பதித்த கதவுள்ள இடத்தைச் சொல்கிறீர்களா?

அது---நரகம்!!”

”அப்படியென்றால் சுவர்க்கம் என்று அவர்கள் சொல்லிக் கொள்வது உங்களுக்கு எரிச்சலாக இல்லையா?”

”இல்லை .மாறாக மகிழ்ச்சியடைகிறோம்-தங்கள் தாகம் தீர்க்கத் தங்கள் உயிர் நண்பர்களைத் தியாகம் செய்யும் மனிதர்களை இனம் கண்டு நிறுத்துவதற்காக!”

“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை”


செவ்வாய், மே 10, 2011

இது நட்பா,காதலா?-தொடர்ச்சி

காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு வெகு நேரம் முன்பாகவே விமான நிலையம் சென்று தவிப்புடன் காத்திருந்தேன்.விமானம் தரையிறங்கிய அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் வெளி வரும் மனிதர்களைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதோ,அவள் வந்துவிட்டாள்.அவள்தான். இடைப்பட்ட காலம் அவள் உடலைச் சிறிது சதைப் பிடிப்பாக்கியிருந்தது. அதனால் அவள் அழகு கூடியிருந்ததே தவிரக் குறையவில்லை. அவள் நடையில் நளினமும், கம்பீரமும் கலந்து இருந்தது.எவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு நளினம்,எவரையும் மரியாதையுடன் நோக்கவைக்கும் ஒரு கம்பீரம்.அவளும் என்னைப் பார்த்து விட்டாள்.அங்கிருந்தே என்னைப் பார்த்துக் கையசைத்தாள்.

”ஹாய்,கிருஷ்” என்றபடியே என்னை நெருங்கி என் கையைப் பிடித்தாள்.எனக்கு அவளது முதல் தொடுகை நினைவுக்கு வந்தது.”ஹலோ,மேரி” என்றபடியே அவள் கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டேன்.இருவரும் என் மகிழ்வுந்தை!(கார்) நோக்கி நடந்தோம்.

கார் புறப்பட்டதும் அவள் கேட்டாள்”இப்போது எங்கே போகிறோம்,கிருஷ்?”

“என் வீட்டுக்கு.ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதை விட அதிக வசதியை உனக்கு நான் செய்து தருகிறேன்”சிரித்துக் கொண்டே சொன்னேன்.

”உன் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் ஒரு இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை.”-மேரி

” யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை.வந்து பார்.”என் பதில்.காரில் சென்று கொண்டிருக்கும்போதே நான் கேட்டேன்”மேரி,மிஸ்டர்.மேரி என்ன செய்கிறார்?”

அவள் சிரித்தாள்”நான் இன்னும் மிஸ்தான்”

” ஏன் மேரி?”-அவள் பதிலளித்தாள்”சில கேள்விகளுக்குப் பதில் கிடையாது அன்பு நண்பரே.அது சரி, உங்கள் மறுபாதி என்ன செய்கிறார்?குழந்தைகள்?”

“பொறு,பொறு.வீட்டுக்குப் போனதும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.”

வீட்டை அடையும் வரை என் குடும்பம் பற்றிய அவளது கேள்விகளுக்குப்பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினேன்.அவள் ஜெ.என்.யு.டில்லியில் பணி புரிவதையும் ஒரு கருத்தரங்குக்காக சென்னை வந்திருப்பதையும் அறிந்து கொண்டேன்.நான் வங்கிப்பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று தற்போது ஒரு”தொழில்துறை-வங்கிக்கடன்” ஆலோசகனாக இருப்பதையும் பற்றிக் கூறினேன்.

என் குடியிருப்பை அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு என் “ஃப்ளாட்”டை அடைந்து பூட்டிய கதவைத் திறக்க சாவியை எடுத்தபோது அவள் கேட்டாள்”என்ன, கிருஷ்,வீட்டில் யாரும் இல்லையா?”

உள்ளே நுழைந்துகொண்டே சொன்னேன்”இல்லை மேரி.இப்போது நான் மட்டும்தான்”

“அப்படியென்றால்–?”

” இல்லை,மேரி.நீ நினைப்பது போலில்லை.அவள் இப்போது இல்லை பத்தாண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டாள்.என் இரு பையன்களும் பிலானியில் படிக்கிறார்கள்.எனவே இப்போது நான் தனி.”

அவள் என் தோளில் கை வைத்து ஆறுதலாக அழுத்தினாள்,”வருந்துகிறேன், கிருஷ்.”

"விடு மேரி .எல்லாம் பழைய கதை.”

அவளை அவளுக்கென்று ஒதுக்கிய அறைக்கு அழைத்துச்சென்றேன்.”இது உன் அறை.எல்லா வசதிகளும் உள்ளது”.

“சரி கிருஷ்.நான் என்னைச் சிறிது புதிப்பித்துக் கொண்டு புறப்படுகிறேன்.”

” நான் உன்னை அங்கு கொண்டு சேர்க்கிறேன். நீ இங்கு இருக்கும் வரை நான்தான் உனக்கு வாகன ஓட்டுனர்.”

சிறிது நேரத்தில் அவள் புறப்பட்டாள். பல்கலைக்கழக வளாகத்தில் அவளை இறக்கி விட்டேன்.”கிருஷ்,மாலை சந்திப்போம்.நிறையப் பேசலாம் ”

வீட்டுக்குத் திரும்பினேன்.எந்த வேலையிலும் கவனம் செல்லவில்லை.மாலையின் வருகைக்காகக் காத்திருந்தேன்.

மாலை 6 மணி அளவில் மேரியிடமிருந்து ஃபோன் வந்தது.இன்னும் அரை மணி நேரத்தில் புறப்படப்போவதாகத் தெரிவித்தாள்.நான் அங்கு சென்று அவளைஅழைத்து வருவதாகக் கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றேன்.அரங்கின் வாசலிலே மேரி நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி ஐந்தாறு பேர் நின்று அவளுடன் பேசிக் கொண்டிருந்தனர்.என்னைக் கண்டதும் மேரி அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.அவர்கள் மறுநாள் அவளது உரைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினர்.நான் மேரியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.காஃபி அருந்தி விட்டுப் பல விஷயங்கள் பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம். இரவு உணவுக்காக வெளியே சென்றோம்.அவள் விருப்பப்படி சுவையான தென்னிந்திய உணவு கிடைக்கும் உணவகத்துக்குச் சென்றோம். மேரிக்கு அந்த உணவு மிகவும் பிடித்திருந்தது.

வீடு திரும்பிய பின் சிறிது நேரம் வரவேற்பறையில் சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.அவளிடம் நான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்கத் தயங்கிக் கொண்டே இருந்தேன்.திடீரென்று மேரி கூறினாள்”பால்கனியில் அமர்ந்து பேசுவோமே, கிருஷ்”

பால்கனிக்கு வந்தோம்.அவள் விருப்பப் படித் தரையில் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்துகொண்டோம். அவள் கண்கள் எங்கோ தொலைவானத்தில் லயித்திருந்தன . ”இப்படித்தான் நாங்கள் குடும்பமாக பால்கனியில் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம்.அது ஒரு காலம்,கிருஷ்”-அவள் சொன்னாள்

நான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவள் கடந்தகால நினைவுகளில் சஞ்சரிப்பதைப் புரிந்து கொண்டேன் . இதுதான் சரியான நேரம்;கேட்டு விடலாம்

“மேரி,உன்னிடம் ஒன்றுகேட்கவேண்டும். கேட்கலாமா?”

”உம்”எங்கோ லயித்தபடி மேரி.

“திடீரென்று என் தொடர்பை ஏன் துண்டித்தாய் மேரி.?”

அவள் நிகழ் காலத்துக்கு வந்தாள்.என்னையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் சிறிது கலங்கியிருப்பது போல் தோன்றியது.பின் சொன்னாள்

”மன்னித்துவிடு,கிருஷ்.இதை நீ கேட்டு விடுவாயோ எனப் பயந்திருந்தேன்.கட்டாயம் கேட்க வேண்டுமே எனத் தவித்திருந்தேன். கேட்டால் எப்படிப் பதில் சொல்வது எனத் திகைத்திருந்தேன்.அந்த நேரத்தில், ஒரு அதீத சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது அதற்கு மாற்றாக எனக்கு ஒரு துணை தேவைப்பட்டிருக்கிறது-காற்றில் ஆடும் கொடிக்கு ஒரு கொம்பு தேவைப் படுவது போல்.உன்னிடம் நான் எதிர் பார்த்திருந்தது அதுவாகத்தான் இருக்க வேண்டும்.நமது நட்பு வேறு விதமாக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.அந்த நிலையில் உன் கடிதம் எனக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.அது கோபமாக மாறி உன் தொடர்பைத் துண்டிக்கக் காரணமாகி விட்டது.காலம் செல்லச் செல்ல என் கோபம் அர்த்தமற்றது என்பதை உணர்ந்தேன்.நீ எப்போதுமே ஒரு மிக நல்ல நண்பனாகத்தான் இருந்திருக்கிறாய்.தவறு என்னுடையதுதான்.”

நான் அவளை இடை மறித்தேன்.”போதும் மேரி.நடந்ததைப் பற்றி இனிப் பேச வேண்டாம். இந்தக் கணம் நம் நட்பின் கணம்.அதற்காக வாழ்வோம்”

” நன்றி கிருஷ்.மனம் லேசாகி விட்டது.இந்தக் கணத்துக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.” பின் கேட்டாள் ”உன் மடியில் தலை வைத்துச் சிறிது நேரம் படுத்துக் கொள்ளட்டுமா,கிருஷ்?”.ஒரு குழந்தை போலக் கெஞ்சலாக அவ்ள் கேட்டது என்னை நெகிழ வைத்தது.

”செய் ,மேரி”

அவள் என் மடியில் தலை வைத்து உடலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.ஒரு தாயின் மடியில் படுத்துறங்கும் குழந்தை போல உறங்கும் அவள் முகத்தையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தால் ஒரு பெண்ணால்,எத்தனைவயதானவளாக இருந்தாலும்,ஒரு ஆணின் மடியில் தலை வைத்துச் சலனமின்றி உறங்க முடியும்?இது நட்பின் மிக உன்னத நிலை.
அரை மணி நேரம் சென்று அவள் கண் விழித்தாள்.பரபரப்புடன் கேட்டாள்”நீண்ட நேரம் தூங்கி விட்டேனா?என்னை எழுப்பியிருக்கலாமே கிருஷ்?”

” எழுப்ப மனம் வரவில்லை மேரி”

“சரி,நான் என் அறைக்குப் போகிறேன்.நாளைய உரையை சிறிது மெருகேற்ற வேண்டும்.நீ போய் உறங்கு”மேரி தன் அறைக்குச் சென்றாள்.நானும் உறங்கச் சென்றேன்.

மறு நாள் காலையில் அவளை பல்கலைக் கழகத்தில் விட்டு வந்தேன்.மதியம் இரண்டு மணிக்கு,முன்பே பேசிவைத்தபடித் தயாராக இருந்த அவளது பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.காத்துக் கொண்டிருந்த மேரியை அழைத்துக் கொண்டு விமானநிலையம் சென்றேன்.அவள் உள்ளே செல்லும் முன் அவளிடம் சொன்னேன்”அடிக்கடி தொடர்பு கொள்,மேரி.நானும் உன்னிடம் தொலை பேசுகிறேன். ”

அவள் முகத்தில் சிறிது சோகம் தெரிந்தது.”கிருஷ், கடைசி நேரத்தில் சொல்லலாம் என்றுதான் இது வரை சொல்லவில்லை.அடுத்த வாரம் நான் அமெரிக்கா செல்கிறேன்.என் துறையில் பிரபலமான இரு பேராசிரியர்கள் ஒரு ஆராய்ச்சியில் அவர்களுடன் இணைந்து பணி புரிய என்னை அழைத்திருக்கின்றனர்.இது மிகப் பெரிய கவுரவம்.இதற்குத் தகுதி உள்ளவளாக நான் செயல்பட வேண்டும்.அங்கு சென்ற பின் என் முழுக் கவனமும் ஆராய்ச்சியில்தான் இருக்க வேண்டும்.உண்ணவும்,உறங்கவும் கூட மிகக் குறைந்த நேரமே எடுத்துக்கொள்ள வேண்டும்,அந்நிலையில் அடிக்கடி தொலை பேசுவதோ,மின்னஞ்சல் அனுப்புவதோ இயலாமல் போகும்.ஆனால் எப்போதும் என் நினைவில் நீ இருப்பாய்.என் வாழ்க்கையில் கடைசி வரை ஒரே நட்பு,உறவு எல்லாமே நீதான்,கிருஷ்”

நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.சமாளித்துக் கொண்டுசொன்னேன்”வாழ்த்துகள்,மேரி.நீ உன் பணியில் வெற்றி பெற்றுப் பேரும் புகழுடன் தாயகம் திரும்ப நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.நாம் மீண்டும் சந்திக்கும் அந்த நன்னாளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பேன்.”

மேரி என்னை லேசாக அணைத்துப் பின் என் கையைக் குலுக்கி விட்டு உள்ளே சென்று மறைந்தாள்.

நான் கனத்த மனத்துடன் என் காரை நோக்கி நடந்தேன்.

காத்திருப்பேன் என் நண்பிக்காக;பிரார்த்துக் கொண்டிருப்பேன் அவள் நலனுக்காக!

(இது சாதாரண முடிவு.முடிவில் ஒரு ”ட்விஸ்ட்’ கொடுத்து அசாதாரணமாக்கினால்!
கிழே வருகிறது.பிடிக்காதவர்கள் மன்னியுங்கள்)

–x–x–x–x-x–x
இரண்டாவது முடிவு ஒன்று வைத்திருந்தேன்.

ஆனால் நண்பர்கள் பலரும் அது தேவையற்றது,கிறுக்குத்தனமானது,சினிமாத்தனமான ஒரு சோகம் என்றெல்லாம் சொல்லவே,அந்த முடிவை நீக்கிவிட்டேன்-எனக்கும் அது போன்றே தோன்றியதாலும்.

இதில் ஒரு சௌகரியம்--இந்தக்கதையை மீண்டும் தொடரும் ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது!

பார்க்கலாம்.

மேரி திரும்பி வரலாம்;ஒரு வேளை ராதாகிருஷ்ணன் அமெரிக்கா போய் அவளைச் சந்திக்கலாம்.

எப்படியும் அந்த நட்பு நிச்சயம் தொடரும்!

திங்கள், மே 09, 2011

இது நட்பா,காதலா?

(இது ஒரு பழைய கதை!வித்தியாசமான காதல் கதை.ஆண் பெண் நட்பு காதலாகத்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை உடைக்கும் கதை.நீளம் சிறிது அதிகம்.பொறுமையாகப் படித்துக் கருத்துக் கூறுங்கள்)
---x---x----
தொலைபேசி மணி ஒலித்தது.எடுத்தேன்,”ஹரி ஓம்,ராதாகிருஷ்ணன் பேசுகிறேன்”. மறுமுனையிலிருந்து குரல்”ஹாய்,கிருஷ்!என்ன இது ஹரி ஓம் எல்லாம்?யாரென்று தெரிகிறதா?’

என் கடவுளே!இது அவள்தான்.என் வாழ்க்கையில் என்னைக் கிருஷ் என்று அழைத்திருக்கும் ஒரே நபர்.இத்தனை ஆண்டுகளுக்குப் பின்!மேரி! மேரியேதான்.

”மேரி!என்ன சுகமான அதிர்ச்சி!அன்று போலவே இன்றும் உன் குரல் இனிமையாகவே இருக்கிறது.எங்கே இருக்கிறாய்?எப்படி இருக்கிறாய்? திடீரென்று என்ன தொலை பேசுகிறாய்?”

” மெள்ள, மெள்ள,கிருஷ்!எல்லாக்கேள்விகளுக்கும் இப்போதே பதில் சொல்லி விட்டால் நாளை நேரில் பேசுவதற்கு ஒன்றும் இருக்காது.”

” நேரில்?நீ சென்னை வருகிறாயா?உண்மையாகவா”

“ஆம்.நாளை காலை டில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருகிறேன்.காலை 10.30க்கு விமானம் தரையிறங்கும்.விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் செல்ல வருவாயா?”

“நிச்சயமாக.மகிழ்ச்சி என்னுடையது.”

“கிருஷ்!நான் இரண்டு நாள் தங்குவதற்கு ஏதாவது நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்து விடு”

“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.நீ வா”

இருவரும் தற்காலிக விடை பெற்றுக் கொண்டோம்.

தொலைபேசியை வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்தேன்.என் மனம் கடந்த காலத்துக்குச் சென்றது.அந்த நாட்கள்………….

அந்த வங்கியில் அதிகாரியாக நியமனம் பெற்று அன்று எங்கள் பயிற்சி ஆரம்பம். ஓராண்டுப் பயிற்சியில் முதல் இரண்டு மாதங்கள் தலைமை அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள்.பயிற்சி இயக்குனரிடம் என் வருகையை அறிவிக்க, அவர் வகுப்புகள் நடக்க இருக்கும் ‘போர்டு’ அறைக்கு என்னைப் போகச் சொன்னார்.கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.ஏ.சி யின் குளிர் என்னைத் தாக்கியது.வெளியே மழை விடாது கொட்டிக் கொண்டிருக்கும்போது இது வேறா?உள்ளே ஒரு மேசையில் வங்கி பற்றிய துண்டுப் பிரசுரங்களை அடுக்கிக் கொண்டிருந்த பெண் திரும்பி என்னைப் பார்த்தாள். இயல்பான புன்னகையுடன் என்னை நோக்கி வந்தாள்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.” நான் மேரி தாமஸ்.” குலுக்குவதற்காகக் கையை நீட்டினாள்.

கையைப் பற்றிக் குலுக்கியவாறே சொன்னேன் ”நான் ராதாகிருஷ்ணன்.” -முதல் முதலாக ஒரு பெண்ணின் கை பற்றிக் குலுக்கும் அனுபவம்.என்ன மென்மையான கரம்!

“நீங்கள் பெங்களூரா?பார்த்த முகமாகத் தெரிகிறது”-அவள் கேட்டாள்.

”இல்லையில்லை.நான் மெட்ராஸைச்சேர்ந்தவன்.இன்று வரை பெங்களூர் சென்றதேயில்லை”-என் பதில்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மற்றவர்கள் வரத்துவங்கினர்.அறிமுகப் படலம் ஆரம்பமாயிற்று.20 பேரில் எட்டுப் பேர் தமிழர்கள்.

சிறிது நேரம் சென்று பயிற்சி இயக்குனர் வந்து எங்களையெல்லாம் இருக்கையில் அமரச்சொன்னார்.பெரிய மேசையைச்சுற்றி இருபது இருக்கைகள்.இடது புறம் முதல் இருக்கையில் சுகுணா என்ற தமிழ்ப் பெண்.அடுத்து மேரி.அவள் அமர்ந்து என்னைப் பார்த்தாள்.நான் சிறிதே தயங்கும் போது ஆந்திர நண்பர் ஒருவர் அமர்ந்து விட்டார்.மேரியின் உதடுகளில் ஒரு புன்முறுவல்-என் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்த்து என நினைத்தேன்.அடுத்த இருக்கையில் நான்.

ஆரம்ப விழா,பின் வகுப்புகள் தொடங்கின.நான் இடையிடையே கேட்ட கேள்விகள் பாராட்டப்பட்டன.ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்த மேரியின் முகத்தில் வியந்து பாராட்டும் ஒரு பாவனை.-அது மேலும் எனக்கு ஊக்கம் அளிப்பதாயிருந்தது.அன்று மாலை வகுப்புகள் முடிந்த பின் மேரி சொன்னாள்”நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திரு க்கிறீர்கள்,மிஸ்டர்.ராதாகிருஷ்ணன்.ஓ! ஒவ்வொரு முறையும் உங்களை முழுப்பெயரில் அழைப்பது கஷ்டமாயிருக்கிறது.”

நான் சொன்னேன்”சுருக்கமாக ராதா என்று அழையுங்களேன் மிஸ்.தாமஸ்.என் நண்பர்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள்”

“எனக்குப்பிடிக்கவில்லை.ஒரு பெண்ணை அழைப்பது போல் இருக்கிறது .உங்களை ‘கிருஷ்’என்று அழைக்கிறேன்.ஆனால் இந்த மிஸ் தாமஸ் எல்லாம் வேண்டாம்.நீங்கள் என்னை வெறும் மேரி என்றுதான் அழைக்க வேண்டும்”

நான் குறும்பாகச்சொன்னேன்”சரி,வெறும் மேரி”.அவள் ’குபீர்’ என்று சிரித்துப் பின் சொன்னாள் “நீங்கள் மிகவும் குறும்புக்காரர்”

” சரி,மேரி,நண்பர்களுக்குள் என்ன மரியாதை?இந்த நீங்கள்,நாங்கள் எல்லாம் வேண்டாமே.”அவள்சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்.(ஆங்கிலத்தில் நீ,நீங்கள் என்பதற்கு வேறுபாடு இல்லாவிட்டாலும் பேசுகின்ற தொனியில் அதைப் புரிந்து கொள்ளலாம்.)

ஆக,முதல் நாளே நாங்கள் நெருங்கிவிட்டோம்.மறு நாள் முதல்,வகுப்பு தொடங்குமுன்,இடை வேளையில் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம்.எங்களுக்கு நடுவில் அமர்ந்த நபர் பின்னால் சாய்ந்து உட்கார்ந்தால் முன்னே சென்றும்,அவர் முன்னால் சாய்ந்தால் நாங்கள் பின் சென்றும் பேசிக் கொண்டிருப்போம் .சில மாலைகளில் அருகில் உள்ள ஒரு குன்றின் மீது அமர்ந்தபடி நேரம் போவது தெரியாமல் பேசுவோம். திடீரென்று வரும் மழையில் நனைந்த படித்திரும்புவோம்.

எங்களுக்குப் பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது-எங்கள் இளமைப் பருவம்,கல்வி,கல்லூரி வாழ்க்கை,குடும்பம் இப்படி.சில சமயம் என் தமிழ் நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள்.நான் அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளுவேன்.ஏதோ சில காரணங்களால் நாங்கள் ஒருவர் பால் மற்றவர் அதிகமாக ஈர்க்கப்பட்டோம்.

ஒரு நாள் அவள் கேட்டாள்”யாரையாவது காதலித்திருக்கிறாயா,கிருஷ்?”

அப்போதுதான் நான் அவளிடம் என் ரயில் காதல் பற்றிச் சொன்னேன். கேட்டுவிட்டு அவள் சொன்னாள்”அந்தப் பெண் உன்னை மிகவும் பாதித்திருக்கிறாள் என்று உணர்கிறேன்.ஏன் கிருஷ் அவளைத் தேடுவதற்கான எந்த முயற்சியும் நீ எடுக்கவில்லை?திருச்சியில் அவளைத் தேடிப் பார்த்திருக்கலாமில்லையா?”
நான் சொன்னேன்”பயம்,மேரி.என் நடுத்தர வர்க்கத் தற்காப்பு மனப்பாங்கு. வாழ்க்கை பற்றிய பயம்.”

அவள் முகத்தில் லேசாகக் கோபம் தோன்றியது.”இந்த விஷயத்தில் உன் நடத்தை எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது”.

நிலைமையைச் சரியாக்க நான் வினவினேன்”நீ எப்படி மேரி?ஏதாவது காதல்?’”

சிறிது இறுக்கம் தளர்ந்தவளாய் அவள் பதிலளித்தாள்.”இல்லை.இன்றுவரை என் கற்பனை ராஜகுமாரனை நான் சந்திக்கவில்லை.”

நான் அவளைக் கூர்ந்து பார்த்தேன்.அந்தப் பளிங்கு முகத்தில் பொய்மை இல்லை;கள்ளம் இல்லை.

நடுவில் ஒரு நாள் எங்களுடன் பயிற்சியில் இருந்த கிறிஸ்தவ நண்பர் ஒருவருக்குத் திருமணம்.அருகில் இருந்த ஓர் ஊர் மாதா கோவிலில் மாலை திருமணம்;பின் ஓட்டலில் வரவேற்பு.மேரிக்கு வேறு அலுவல் இருந்த காரணத்தால் வர இயலவில்லை.எனக்கு ஏமாற்றந்தான்.நாங்கள் ஆண்கள் மட்டும் சென்றோம்.அந்தக் கலாசாரமே புதிதாக இருந்தது.திருமணம் முடிந்த பின் மணப்பெண்ணின் கையில் எல்லோரும் முத்தமிட்டோம்!பின் வரவேற்பில் ஆண் பெண் எல்லோரும் கட்டிப் பிடித்து ஆடினார்கள்.நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.பல வித பானங்கள்,சைவ-அசைவ விருந்து(பஃபே) என்று எல்லாமே எனக்குப் புதிதான அனுபவங்கள்.

மறுநாள் மேரி கேட்டாள்”எப்படி இருந்தது கிருஷ், திருமணம்?”

“எனக்கு ஒரு கலாசார அதிர்ச்சி.எல்லாமே ஒரு புதிய அனுபவம்”-நான் .

” நடனம் இருந்ததா? நீ நடனமாடினாயா”

நான் சிரித்தேன்.”நானா?நடனமா?நடக்கவே முடியாது.நடனத்தைப் பொருத்தவரை நான் ஒரு பூஜ்யம்.”

” நான் கற்றுத்தரட்டுமா?”ஆர்வமாய்க் கேட்டாள்

“அய்யய்யோ!ஆளை விடு.என்னால் முடியாது”.அவள் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றத்தின் சாயல் பரவி மறைந்ததோ?நான் அவளை ஏமாற்றி விட்டேனோ?தெரியவில்லை.

பயிற்சிக்காலம் முடிந்து புறப்படும் நாள் வந்தது.எல்லோரும் மற்றவர்களிடம் விடை பெற்றுக் கொண்டோம்.நானும் மேரியும் ஒன்றும் பேசாமலே அலுவலக வாசல் வரை நடந்து வந்தோம்.அங்கு நின்றோம்.நான் மேரியின் கைகளைப்பற்றிக்கொண்டு சொன்னேன்”இந்தப் பயிற்சிக் காலத்தை இனிமையாக்கியது உன் தூய நட்புதான் மேரி.அந்த நினைவுகளுடனே பிரிகிறேன்.தொடர்பில் இருப்போம்.மீண்டும் சந்திப்போம்”ஒரு மெலிதான சோகம் என்னுள் பரவியிருந்தது.மேரியின் அழகிய கண்கள் கலங்கியிருந்தன.”சென்று வருகிறேன்,கிருஷ்.இறைவன் நமக்குத் துணையிருக்கட்டும்.”

பிரிந்தோம்.எங்கள் கடிதப் போக்குவரத்து தொடர்ந்து நடந்தது.எங்கள் அலுவலக வேலையின் பளு,எங்கள் இன்ப நிகழ்வுகள் ,சோகங்கள் எல்லவற்றையும் கடிதங்களில் பகிர்ந்து கொண்டோம்.

ஒரு நாள் அந்தக் கடிதம் வந்தது-விமானப்படையில் பணி புரிந்து வந்த அவள் அண்ணன் ஒரு ‘மிக்’விமான விபத்தில் இறந்த செய்தியைத்தாங்கி.அவள் மிகவும் உடைந்து போயிருந்தாள்.அவள் அண்ணனை மிகவும் நேசித்தவள்.அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ஒரு கடிதம் எழுத நீண்ட நேரம் யோசித்தேன்.பல எண்ணங்கள் என்னுள் அலை மோதின.
கடைசியில் எழுதினேன்”அன்பு மேரி.இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்புதான்.உன் அண்ணன் இடத்தில் நான் இருக்கிறேன்.உன் வாழ்நாள் முழுதும் உனக்கு ஒரு அண்ணனாக நான் இருப்பேன்.”

அவளிடமிருந்து பதில் வரவில்லை.மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை.அவள் பணி புரிந்த வங்கிக் கிளைக்கு தொலை பேசினேன். அவளை அழைப்பதாக யாரோ சொன்னார்கள்.பல நிமிடக் காத்திருப்புக்குப் பின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவளுடன் தொடர்பு கொள்ள நான் செய்த முயற்சிகள் அனத்தும் பலனற்றுப் போயின.பெங்களுர் சென்று அவளைப் பார்க்க முடியாமல் என்னுள் ஏதோ ஒரு உணர்வு.(குற்ற உணர்ச்சி?)

எங்கள் தொடர்பு அற்றுப் போயிற்று .

சில மாதங்களுக்குப்பின் ஒரு பயிற்சிக்காகத் தலைமை அலுவலகம் சென்ற போது பெங்களூரிலிருந்து வந்த சில நண்பர்கள்,மேரி பணியிலிருந்து விலகி வேறு பணிக்காக டில்லி சென்று விட்டதாகத் தெரிவித்தனர். அவ்வப்போது மேரியின் நினைவு வரும்.ஒரு பெண்ணால் நல்லதொரு நட்பை இவ்வாறு திடீரென்று வெட்ட முடியுமா என்று யோசிக்கும் அதே நேரத்தில் நான்தான் அந்நட்பை/உறவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனோ என்ற எண்ணமும் வரும்.

அந்த மேரிதான் நாளை வருகிறாள்.இத்தனை நாட்களுக்குப்பின் சென்னைக்கு வரும் வாய்ப்பு வந்ததும் என் நினைவு அவளுக்கு வந்திருக்கிறது. சென்னை மண்டல அலுவலகத்திலிருந்து என் விலாசத்தை,தொலைபேசி எண்ணை அறிந்து கொண்டிருப்பாள்.
அன்றிரவு எனக்குச் சரியான உறக்கமில்லை.இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மேரியைச் சந்திக்கப் போகிறேன்.எப்படியிருப்பாள்?எப்படிப் பழகுவாள்?இப்படிப் பல எண்ணங்கள் என் நெஞ்சில் அலை மோதி உறக்கம் வராமல் செய்தன.

(தொடரும்)