தொடரும் தோழர்கள்

திங்கள், டிசம்பர் 01, 2014

உயிர்



உள்ளேவெளியே
உள்ளேவெளியே
உள்ளேவெளியே
ஒரே சீராக
ஒரே வேகத்தில்
உயிரின் இயக்கம்
தாளம் மாறாமல்
இது என்ன தாளம்
எத்தனை அட்சரம்
தகிட தகதிமி
கண்ட சாபுவா
மிஸ்ர சாபுவா
உள்ளேவெளியே
உள்ளே...வெளியே
இது நின்றால்
எல்லாம் முடிந்து விடும்
எப்போது நிற்குமோ
பொண்ணுக்குப்பாடத் தெரியுமா?
பாட்டுக் கத்துக்கறா.
அப்ப நன்னா கத்துவளாக்கும்,
அப்பவே குறும்பான பேச்சு.
பராத்பரா பரமேஸ்வரா,,
ஒகே ஓகே வாசஸ்பதி ஓகே.
தனக்கும் சங்கீதம் தெரியும் எனக் காட்டும் வார்த்தை

கல்யாணம்
பெண்ணும் மாப்பிள்ளையும்
மாலையும் கழுத்துமாய்
ஜோடிப் பொருத்தம் பிரமாதம்
பார்வதி பரமேச்வரா மாதிரி
ஆமாம்
பார்வதி பரமேச்வராதான்
ஆனால் கணேசனும் இல்லை குமரனும் இல்லை

பிடிச்சிருக்கா?
வெட்கத் தலையாட்டல்
நாங்கள்ளாம் புருஷா நிக்கற எடத்திலகூட நிக்க மாட்டோம்
அம்மாவின் வளர்ப்பு.
முதல் ஆணின் தொடுகை.
கூசுகிறது
அணைக்கட்டுமா
வெளக்கைச் சொன்னேன்
அதே குறும்பு,
வாழ்நாள் முழுவதும்
இன்று வரை
தொடர்ந்து

பக்கத்து வீடு
குழந்தை புண்யாகவசனம்
ஏண்டி ஒனக்கு புத்தியே இல்லையா,இவளை ஏண்டி கூப்பிட்டே.மலடி கண்படப் போறது.
வீட்டிற்கு வந்து அடக்க முடியாத அழுகை
ஈஸ்வரா எனக்கு ஏன் இப்படி.
காசி,ராமேஸ்வரம்,கருக்காத்தம்மன்.
எதிலும் பலனில்லை

ஏன்னா,நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிகோங்கோ
எதுக்குடி
குழந்தைக்குத்தான்
அப்ப மட்டும் பொறக்கும்னு என்னடி நிச்சயம் ..சிரிப்பு
ஒண்ணு செய்யலாம்,ரெண்டு பேரும் போய்ப் பரிசோதனை பண்ணிக்குவோம்
ஒன் கிட்ட குறைன்னா நீ சொன்ன படி நான் கல்யாணம் பண்ணிக்கறேன்
என் கிட்ட கொறைன்னா நீ பண்ணிக்குவியா
உளறாதீங்கோ
நீயும் உளறலை நிறுத்து
பின் அந்தப் பேச்சே எடுப்பதில்லை

ஒருவர்க் கொருவர் குழந்தையாய்
ஒரு வாழ்நாள் முழுதும்
அலுக்கவில்லை.
ஆனாலும் குறை குறைதான்
குழந்தை இல்லை.

விசேஷங்களுக்குப் போகாமல்
ஒரு மரவட்டையாய்ச் சுருண்டு
பட்டுப் பூச்சி போல் தன்னைச் சுற்றி ஒரு கூடு கட்டிக் கொண்டு.
சுருங்கி விட்டது உலகம்
அவளும் அவரும்.
யாருக்கும் இடமில்லை

(தொடரும்)







7 கருத்துகள்:

  1. கவிவடிவில் அற்புதமான உணர்வுபூர்வமான
    கதைத்துவக்கம் அதிக ஆவலைத் தூண்டிப் போகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. “உயிர்“ உணர்வின் வெளிப்பாட்டுச் சுறுக்கம்.
    தொடர்கிறேன் பித்தன் ஐயா
    த.ம.3

    பதிலளிநீக்கு
  3. தொடர் கவிதை மனதை தொட்டது . தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. உணர்வுப் பூர்வமான கவிதை ஐயா..
    தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு