தொடரும் தோழர்கள்

வியாழன், ஜனவரி 27, 2011

இன்னும் மறக்கவில்லை!

சாந்தோம் கடற்கரையின்
சாயங்கால நெருக்கங்கள்
இன்னும் மறக்கவில்லை!

கபாலி கோவில் பிரகாரத்தின்
கண்பேசும் பாஷைகள்
இன்னும் மறக்கவில்லை!

புளூ டயமண்ட் குளிர் இருட்டின்
உன் உஷ்ண ஸ்பரிசங்கள்
இன்னும் மறக்கவில்லை!

எல்பின்ஸ்டன் ஜஃபார்கோவின்
உன் எச்சில் பீச்மெல்பா
இன்னும் மறக்கவில்லை!

ஆனால்,

நிச்சயமாய் மறந்தது ஒன்று உண்டு—

இரக்கமே இல்லாமல் நீ எறிந்த வார்த்தைகள்
“என்னை மறந்து விடுங்கள்”

அதை மறந்ததனால்தான் உன்னை
இன்னும் மறக்கவில்லை,இன்னும் மறக்கவில்லை!

இன்று--
சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
ஆனால்?
அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?..

சிறு குறிப்பு:-1)சாந்தோம் கடற்கரை-சிறிய,கூட்டமில்லாத இனிய கடற்கரை.படகு மறைவுகளும் உண்டு.இன்று அங்கு ஏதோ குப்பம் வந்து விட்டது.
2)புளூ டயமண்ட் தியேட்டர்-சஃபைர்,எமரால்டுடன் சேர்ந்த மூன்றாவது தியேட்டர்.நாள் முழுவதும் படம் ஓடும்.எப்போது வேண்டுமானாலும் உள்ளே போகலாம்;எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்.இதை விட வேறென்ன வேண்டும்!
3)நியூ எல்ஃபின்ஸ்டன்- அண்ணா சாலையில் இருந்தது;ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும்.இங்கிருந்த ஜஃபார்கோ ஐஸ்க்ரீம் பார்லரில் பீச் மெல்பா அலாதி சுவை!அதுவும், ”பணிமொழிவாலெயிறு ஊறிய நீருடன்” சேர்ந்தால்?!

(பி.கு.நண்பர் கக்கு மாணிக்கம் அவர்கள் சென்னை பித்தனை மாற்றி சென்னை காதலனாக்கி விட்டார்.சென்னையின் காதலனாக மட்டும் இல்லாமல் அக்காலச் சென்னையில் ஒரு காதலனாகவும் இருதிருந்தால்?இன்றில்லாமல் போய்விட்ட சில இடங்களையும் என்றுமே இல்லாத காதலியையும் இணைத்துப் பார்க்கிறது இக்கவிதை.)

ஞாயிறு, ஜனவரி 23, 2011

மயிலை சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் அறிவிப்பு!

மயிலை சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் நேற்று அறிவிக்கப் பட்டார்.அனைத்திந்திய அண்ணா,பெரியார்,காமராஜ் ,ராஜாஜி, நேரு,ஆரிய,திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மயிலை சட்டமன்றத்தொகுதி வேட்பாளராக திரு.சென்னை பித்தன் அவர்கள் போட்டியிடுவார் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து,டுபாகூர் டைம்ஸ் நிருபர்,திரு.பித்தன் அவர்களைப் பேட்டி காணச் சென்றார்.அங்கே,வீட்டு வாசலில்,கூட்டமாகப் பலர் காத்திருந்தனர்.அருகில் நின்றவரிடம் விசாரிக்க அவர் சொன்னார் ”நாங்கள் எல்லோரும் தமிழ்ப் பதிவர்கள்.திரு சென்னை பித்தன் அவர்களும் ஒரு தீவிரமான பதிவர் எனவே அவர்களை வாழ்த்தி, எங்கள் ஆதரவை அவருக்குத் தெரிவிப்பதற்காகக் குழுமியிருக்கிறோம்” என்று .நிருபர் யோசித்தார்;தினம்,தினம் பெருகி வரும் தமிழ்ப் பதிவர் எண்ணிக்கையைப் பற்றி அவர் அறிவார்!! அத்தனை பதிவர்களும் ஆதரவு தெரிவித்தால் சென்னை பித்தன் வெல்வது எளிது என்று தீர்மானித்தார்!!

அப்போது வீட்டின் உள்ளிருந்து வந்த ஒருவர் சொன்னார் ”பதிவர்களுக்கெல்லாம் காலை உணவுக்கு ஐயா ஏற்பாடு செய்திருக்கிறார்.அனைவரையும் உணவருந்த அழைக்கிறேன்” என்று.உடனே நிருபர் தவிர மீதி அனைவரும் சென்று விட்டனர். நிருபருக்கும் பசிதான்.போகலாமா என யோசித்தார்.ஆனால் கடமை முக்கியம் என்பதால்,பேட்டிக்குப் பின் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம் என்று இருந்து விட்டார்.மற்றொருவர் வெளி வந்து ,இவரை யாரென்று கேட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே,ஒரு குளுகுளு அறையில்,மாலைக் குவியலின் நடுவே பித்தன் அமர்ந்திருந்தார்.பச்சை,வெள்ளை,சிவப்பு,கருப்பு,மஞ்சள்,ஆகிய வண்ணங்களில் கரை போட்ட வேட்டி;வெண்மையான கதர் சட்டை; தோளிலும்,வேட்டி போன்றே பல வண்ணக் கரை போட்ட மேல் துண்டு.

”நான் டுபாகூர் டைம்ஸ்.நிருபர்”
“மகிழ்ச்சி;அமருங்கள்”
“நீங்கள் மயிலைத்தொகுதியில் போட்டியிடுவதுபற்றி......”
“கட்சி மேலிடத்தின் கட்டளை”
"மேலிடம் என்றால்...?”
”நான்,என் மகள்,மகன் அடங்கிய ஒரு குழு இருக்கிறது”
“கட்சி பற்றி நான் முன்னால் கேள்விப் பட்டதில்லையே?”
”.புதிய கட்சிதான், ஆனால் புதுமை நிறைந்தகட்சி.”
“உறுப்பினர்கள்......”
“சேர்க்கை நாடு முழுவதும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்”
”கட்சியின் கொள்கை.......”
“கட்சியின் பெயரிலேயே இருக்கிறது.நேருவின் சோசலிஸம், காமராஜின் ஜனநாயக சோசலிஸம் ,ராஜாஜியின் தாராள மயமாக்கல்,பெரியார்,அண்ணாவின் சுயமரியாதை கொள்கைகள் எல்லாம் சேர்ந்தது எங்கள் கொள்கை.கொள்கை விளக்கக் கையேடு ஒன்று தயாராகிகொண்டிருக்கிறது..’அநேகாபெராயிஸம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். எதிர் கால இந்தியாவின் சுபிட்சத்துக்கான கொள்கை இதுதான்.வேறொன்றில்லை!”

“!!!!!!!!!!!!!!!”

”உடனடித்திட்டங்கள் ஏதாவது........”

”எனது முதல் முயற்சி, என் தலைமையில்,தமிழ்ப் பதிவர் வாரியம் ஒன்று அமைப்பது.பதிவர்களுக்கு வீடு கட்டித்தர அரசு முன் வர வேண்டும்.அதில் மூத்த பதிவர்களுக்கு முன்னுரிமை-மூத்த என்றால் பதிவுலகில் அல்ல,வயதில்.(அப்போதுதானே எனக்கு நல்லது!)

“நல்ல திட்டம்தான்!வேறுதிட்டங்கள்.....?”


“பல உள்ளன.பதிவர்களுக்கு இலவசக் கணினி வழங்குவது,சிறந்த பதிவுகளுக்கு(என்புகழ் பாடும்) பரிசளிப்பது,பதிவர்களுக்கு மேலவையில் ஒரு இடம் ஒதுக்குவது இப்படிப்பல.”

”புரட்சிகரமாகச் சிந்திக்கிறீர்கள்”
“எனக்குப் பாராட்டே பிடிக்காது. பதிவுலகக் கவிஞர் மாதவன் என்பவர்(உண்மையில் அப்படி யாரும் இல்லை என நம்புகிறேன் -செ.பி.)ஒருவர் என்னைப் பாராட்டி ஒரு
பாட்டெழுதியுள்ளார்.இதோ பாருங்கள்”
நிருபர் பார்க்கிறார்
ஆதவன்
--------
நீ ஆதவன்
அறிவில் ஆதவன்
அழகில் ஆதவன்
ஆற்றலில் ஆதவன்
ஈகையில் ஆதவன்
எழுத்தறிவில் ஆதவன்
உயர்வில் ஆதவன்
கருணையில் ஆதவன்
புத்தியில் ஆதவன்.
உன் அருள் பெற்ற நான்
ஒரு மா தவன்!”
நிருபர் வார்த்தைகளைச் சேர்த்துப் படித்துப் பார்க்கிறார்-அறிவில்லாதவன்................என்று.--சிரிப்பு வருகின்றது.
நிருபர் சொன்னார்”கவிதை பொருத்தமாகத்தான் இருக்கிறது!”

அப்போது பதிவர்களெல்லாம் காலை உணவு முடித்து விட்டு வரவும்,பேட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று பித்தன் அவர்கள் கூற,நிருபர் புறப்பட்டார்
“அப்ப நானும் டிஃபன் சாப்பிட்டு விட்டுப் புறப்படுகிறேன்”
பதிவர்களை உணவுக்கு அழைத்துச் சென்றவர் சொன்னார் ”டிஃபனா?எல்லாம் காலியாகி விட்டதே!”

நிருபர் ஏமாற்றத்துடன் புறப்பட்டார்.

வெள்ளி, ஜனவரி 21, 2011

எது நாடு?

வள்ளுவர் ஒரு முறை ஒரு அரசனைக் காணச் சென்றிந்தார்.அரசன் அவரை வரவேற்று நன்கு உபசரித்தான்.அவர் தன்னைப் பற்றியும் தன் நாட்டைப் பற்றியும் உயர்வாக நினைக்க வேண்டும்,பேச வேண்டும் என்று மன்னன் எண்ணினான்.நாட்டைச் சுற்றிப் பார்க்கலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.தேரில் சென்றபோது,பல இடங்களில்,அன்னதானச் சத்திரம் என்றெழுதிய கட்டிடங்கள் காணப்பட்டன.மக்கள் வரிசையில் உள்ளே சென்று கொண்டும்,பலர் வெளியே வந்துகொண்டும் இருந்தனர்.

மன்னன் சொன்னான்”திருவள்ளுவரே! இவைதாம் அன்னதானச் சத்திரங்கள்.மக்களில் யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து இலவசமாக உணவருந்திச் செல்லலாம்.தினமும் ஏராளமான மக்கள் வந்து உணவருந்துகின்றனர்”.

வழியில் பல இடங்களில் ’மருத்துவ மனை’ என்றெழுதப்பட்ட கட்டிடங்கள் இருந்தன.மன்னன் சொன்னான்”இவையெல்லாம் இலவச மருத்துவ மனைகள்.மக்களுக்கு இங்கு எல்லா வித சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப் படுகின்றன!தினமும் ஏராளமான மக்கள் வந்து பயனடைகின்றனர்”

மன்னன் வள்ளுவரைத் தன் படை அணிவகுப்புக்கும்,ஆயுதச் சாலைக்கும் அழைத்துச் சென்றான்.அவற்றைக் காட்டிச் சொன்னான் ”பாருங்கள் என் படைகளை.கணக்கற்ற தேர்,யானை,குதிரை,காலாட்கள் நிறைந்த படைகள்.இதோ,எத்தனை விதமான நவீன ஆயுதங்கள், பாருங்கள்.”

நாட்டைச் சுற்றிப் பார்த்தபின் மன்னன் கேட்டான்”வள்ளுவரே,என் நாட்டில் பசியென்று வந்தவர் எல்லோருக்கும் இலவச உணவு அளிக்கப் படுகிறது;பிணியால் வருந்துபவர்க்கு,இலவச மருந்து,சிகிச்சை அளிக்கப் படுகிறது.பகைவர்களை நடுங்கச் செய்யும் படை இருக்கிறது.நாட்டின் சிறப்புக்கு வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்?”

வள்ளுவர் சிரித்தார்.பின் சொன்னார்,”மன்னா!உன் நாட்டில் அன்னதான சத்திரங்கள் உள்ளன.இது எதைக் காட்டுகிறது?பசித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தானே?இலவச மருத்துவ மனைகள் உள்ளன.இது எதைக் காட்டுகிறது?பிணி அதிகம் இருக்கிறது என்பதைத்தானே!ஒப்பற்ற படைகளும்,படைக் கலங்களும் உன்னிடம் உள்ளன.அப்படியென்றால்,உனக்குப் பகைவர் உள்ளனர் என்றுதானே பொருள்?இது எப்படி நல்ல நாடாகும்?

”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”
(மிக்க பசியும்,ஓயாத நோயும் அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடை பெறுவதே நாடாகும்).

மன்னன் தலைகுனிந்தான்.

(பி.கு.இறுதியாக இன்றைய நிலையை இணைத்து,ஒப்பிட்டுச் சில வரிகள் எழுத எண்ணியிருந்தேன்,ஆனால் எழுதவில்லை. ஏனெனில், சொல்ல நினைத்ததை சொல்லாமலே புரிந்து கொள்பவர்களல்லவா நீங்கள் ! அதுவும்,சொன்னதை விட சொல்லாத சொல்லுக்குப் பொருள் அதிகம்தானே! )

செவ்வாய், ஜனவரி 18, 2011

சீச்சீ,சிறியர் செய்கை செய்தான்!

”கோயிற் பூசை செய்வோர்-சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன்-வீட்டை
வைத்தி ழத்தல் போலும்,
ஆயிரங்க ளான-நீதி
யவையு ணர்ந்த தருமன்
தேயம் வைத்தி ழந்தான்-சிச்சீ
சிறியர் செய்கை செய்தான்.”

”நாட்டு மாந்த ரெல்லாம்-தம்போல்
நரர்க ளென்று கருதார்
ஆட்டு மந்தை யாமென்-றுலகை
அரச ரெண்ணி விட்டார்.”

(பாரதியின் பாஞ்சாலி சபதம்-அடிமைச்சருக்கம்)
நாட்டின் முடி சூடிய மன்னன் தருமன்.அவனுக்கே அவனது நாட்டின் மீது இருக்கும் உரிமை ஒரு கோவிற் பூசாரி,ஒரு வீட்டு வாசற்காவலன் போன்றதுதான்.நாட்டைப் பணயமாக வைக்க எந்த உரிமையும் இல்லை.அது மிகவும் சிறியவர் செயல்,இழிந்த செயல்;எனவே சிச்சீ என்கிறான் பாரதி.

ஆனால்,இன்றைய,மக்களால்,மக்களுக்காக நடத்தப் படும் மக்களாட்சியில் என்ன நடக்கிறது?


முடிசூடா மன்னர்கள்,ராசாக்கள்,நாட்டுக்கு,நாட்டு அரசுக்கு,நாட்டு மக்களுக்கு, லட்சக்கணக்கான கோடிகள் இழப்பை ஏற்படுத்துகின்றனர்,சுய லாபத்துக்காக!
அதை மேலும் சில மன்னர்கள் நியாயப் படுத்துகின்றனர்!
எதனால்?
பாரதி அழகாகச் சொல்கிறான் பாருங்கள்-
“”நாட்டு மாந்த ரெல்லாம்-தம்போல்
நரர்க ளென்று கருதார்
ஆட்டு மந்தை யாமென்-றுலகை
அரச ரெண்ணி விட்டார்.”

அய்யா பாரதி! தருமன் செயலைப் பொறுக்க முடியாமல்,’சிச்சீ” என்ற நீ,இன்று இங்கு இருந்தால் என்ன சொல்வாய் அய்யா?

வெள்ளி, ஜனவரி 14, 2011

விலைமாதருடன் உறவு!

பல மாதங்களுக்கு முன் படித்ததொரு செய்தி!

முப்பது வயதான ஒரு ஆண்,தன் மனைவியை உடலுறவுக்கு அழைத்து,அவள் மறுக்கவே,ஸ்கிப்பிங்க் கயிற்றால் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு,உயிரற்ற அந்த உடலுடன் உறவு கொண்டுள்ளான்.

என்ன ஒரு வக்கிரம்?

மன நல மருத்துவர்கள் சொல்கிறார்கள் இது ஒரு விதமான மன நோய் என்று.அதற்கான ஆங்கிலப் பெயர்-'necrophilia'.

ஆனால் வள்ளுவர் இது போன்ற ஒரு செயலை ஒரு உவமையாக உபயோகப்படுத்தி,வேறு ஒரு செயலை இதனுடன் ஒப்பிடுகிறார்--

“பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.”

பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யான தழுவுதல்,இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

வள்ளுவர் உபயோகிக்கும் சொற்களைப் பாருங்கள்-

பொருட்பெண்டிர்-பொருளுக்காக தங்களையே விலையாக்கும் பெண்கள்;விலை மாது என்று சொல்வதன் சரியான தமிழ்ப் பதம்

பொய்ம்மை முயக்கம்-ஆடவருடன் கூடும் போது அவள் கட்டித் தழுவும் தழுவலானது,செற்கையானது.
ஆடவரை மகிழச்செய்ய அவள் காட்டும் உணர்ச்சி வெளிப்பாடுகள்-உச்சத்தைதொடுவதாகக் காட்டும் உணர்ச்சிகள்,பொய்யானவை,நடிப்பு.

ஏதில் பிணம் –தொடர்பு இல்லாத, முன்பேஅறியாதபிணம்-
தெரிந்தவர்களாக,உறவினர்களாக இருந்தால் பிணத்தைக் கட்டிப் பிடித்து அழுவது நடக்கக் கூடியதே.;அந்த உணர்ச்சி வேறாக இருந்தாலும்.ஆனால் தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைக் கட்டிப் பிடிப்பது என்பது,அருவருப்பு ஏற்படுத்தும் ஒரு செயல். பொருட்பெண்டிர் முயக்கமும் அது போன்றதே.பிணத்துக்கும் உனர்ச்சிகள் இல்லை1

ரத்தினச் சுருக்கமாகப் பொட்டில் அறைந்தது போல் சொல்லி விட்டார் அல்லவா?

செவ்வாய், ஜனவரி 11, 2011

கூடாரவல்லி!(நெய்ப்பொங்கல்)

இன்று மார்கழி 27 ஆம் நாள்.திருப்பாவை 27ஆம் பாடல்”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்று தொடங்குகிறது.எனவே இன்று வைணவர்களுக்கு ஒரு நல்ல நாள்.இன்று கூடார வல்லி என்று அழைக்கப் படுகிறது.இன்று அவர்கள் இல்லங்களில் கட்டாயம் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள்.அதற்கும் காரணம் இருக்கிறது.மேலே குறிப்பிட்ட பாடலில் ஒரு வரி”பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார” என்பது.’பாற்சோறு மூட ஊற்றிய நெய் முழங்கை வழியாக வழியும்படி’ என்பது பொருள்.எனவேதான் இன்று சர்க்கரைப் பொங்கலின் அவசியம்.

ஆனால் பாட்டில் கூறியது போல் இன்று நெய் வழிய சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது என்பது நடக்காது.இன்றைய விலை வாசியில் கட்டுப்படியாகாது என்பது ஒரு புறம் இருக்க,நமது உடல் நிலையும் அதற்கு இடம் கொடுப்பதில்லை. பெரும்பானமையானவர்களுக்குச் சர்க்கரை வியாதி;சர்க்கரைப் பொங்கலை வளைத்துக்கொண்டு சாப்பிட முடியாது.அது தவிர ,உயர் ரத்த அழுத்தம்,கொலஸ்டரால் எல்லாம்.’நெய் பெய்து முழங்கை வழி வார’ எனபதை நினைத்துகூடப் பார்க்க முடியாது.சம்பிரதாயத்துக்கு ஏதோ இனிப்பு குறைந்த,நெய்யில்லாத பொஙல் சாப்பிட வேண்டியதுதான்.

ஆனால் இன்று எனக்குக் கிடைத்த பொங்கல் அப்படிச் சம்பிரதாயப் பொங்கல் அல்ல.நல்ல ,இனிப்பான,நெய் சொட்டும் சர்க்கரைப் பொங்கல்!(சாப்பாடு ராமா!வந்துட்டியா?இந்த மார்கழி மாதம் முழுவதும் பொங்கலை விடமாட்டியே!.).அண்டை வீட்டில் வசிக்கும் வைணவர்கள் கொடுத்தது.(இரக்கப் பட்டுக் கொடுத்தது!);.இப்படி யாராவது இந்தமாதிரி விசேட நாட்களில், பொங்கல். களி, போளி, நோன்புஅடை என்று கொடுத்தால்தான் உண்டு. இல்லாவிடில் நமக்கு என்றுமுள்ளதுதான்!-குக்கரில் சாதம் மட்டும் வைத்துவிட்டுக்,கேட்டரர் கொண்டு வரும் பொரியல்,கூட்டு,சாம்பார்,ரசம்தான்!
.!

ஒன்று நிச்சயம்.உணவு பற்றி இப்படியெல்லாம் எழுதுவது,just for fun!
உண்பதற்காக வாழ்வது என்ற நிலையை நான் கடந்து விட்டேன்.இப்போது வாழ்வதற்காக உண்கிறேன்!

வள்ளுவர் அழகாகச் சொல்வார்-
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு”
கூடாரவல்லித்திருநாள் வாழ்த்துகள்!

வெள்ளி, ஜனவரி 07, 2011

பரல்கள்--(ஒபாமா,காமராசர்,தி.மு.க.)

ஜப்பானின் பிரதமர் மோரி அவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்திக்கும்போது அவருடன் ஆரம்பத்தில் ஓரிரு வார்த்தைகளாவது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக அவருக்குப் பயிற்சியளிக்கப் பட்டது.பயிற்சியளித்த மொழிபெயர்ப்பாளர்கள் அவரிடம் கூறினர்”நீங்கள் ஒபாமாவைச் சந்தித்ததும் ’எப்படியிருக்கிறீரகள்(how are you) என்று கேளுங்கள்.அதற்கு அவர் ‘நான் நன்றாக இருக்கிறேன்;நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்’ என்றுதான் சொல்வார்.உடனே நீங்கள்”நானும்தான்” என்று சொல்ல வேண்டும்.அதற்குப் பின் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ” என்று.

ஆனால்,சந்திப்பின் போது மோரி,ஒபாமாவைப் பார்த்துத் தவறுதலாக ”நீங்கள் யார்?”(who are you) என்று கேட்டு விட்டார்.ஒபாமா சிறிது திகைத்துப் பின் ”நான் மிச்செல்லின் கணவன்” என்று நகைச்சுவையாகக் கூறி நகைத்தார்.
உடனெ மோரி”நானும்தான்” என்று கூறி நகைக்க ஒபாமா பேச்சு மூச்சற்றுப் போனார்!


------------------------
இதைச்சொல்லும்போது திரு.காமராசர் பற்றிச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

சில வெளிநாட்டுத் தலைவர்கள் சென்னை வந்தபோது”who is the chief minister?” என்று கேட்க,திரு காமராசர்” I is the chief minister “என்று சொன்னதாக ஒரு செய்தி உண்டு.என் நண்பன் ஒருவன் இதையே சிறிது நீட்டி,”are you?” என்று அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்க,காமராசர் அவர்கள்” I are” என்று சொன்னதாகச் சொல்வான்!

ஆனால் ஆங்கிலம் தெரியாத காமராசர் ஒரு சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார்.மிகச் சிறந்த அமைச்சர்களைக் கொண்ட ஒரு அமைச்சரவை அவர் கீழ் இயங்கியது.அவர், தேர்தலின் போது,மக்கள் நல்லாட்சிக்குத்தான் முக்கியத்துவம்
அளிப்பார்கள் என்று எண்ணியதுதான் தவறு.

ஆனால்,வார்த்தை ஜாலங்களிலும்,அடுக்கு மொழிகளிலும் மயங்கிய தமிழக மக்கள்,அவரைத் தூக்கி எறிந்து விட்டு, தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தினர்.
ஜெயகாந்தனின் வார்த்தைகளில்”நாப்பறை கொட்டி நாடாள வந்து விட்டனர்”
சூரியன் உதித்து விட்டான்.
ஆனால் இன்னும் விடியவில்லை!

----------------------
கவுஜ(ஹைக்கூ மன்னிக்க)

தொலைந்து போயிற்று
அதுவும் ஆனந்தமே
இதயம்!

---------------------------

ஞாயிறு, ஜனவரி 02, 2011

மீண்டும் ஒரு காதல் கதை!

"என்னங்க,கொஞ்சம் பாத்துங்க;நேத்து ரொம்ப வலிச்சுருச்சுங்க"
"ஏண்டா,கண்ணம்மா,நேத்தே சொல்லலை.ரொம்ப வலிச்சுதா?சொல்லிருந்தா பாத்துச் செஞ்சிருப்பேன் இல்ல?"
"எப்படிங்க?எவ்வளவு பிரியத்தோட நீங்க வந்து செய்யறீங்க?இந்த மாதிரிப் புருஷன் கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்."
"சரிடா,இன்னிக்கும் வலிச்சா சொல்லு.பேசாம இருந்திடாதே"
------
------"ஆ!வலிக்குதுங்க."
"இரு,இரு,இங்கதானே,------இப்ப எப்படி இருக்கு?"
"ஹம்மா--இதம்மா இருக்குங்க"
"இன்னிக்கு இன்னும் ரெண்டு தடவை செஞ்சுடலாம்."
கீழே விழுந்ததால் சுளுக்கிய தன் மனைவியின் காலைத் தன் மடியில் வைத்து அன்புடன் எண்ணை தடவி நீவிக் கொண்டிருந்த கணவன்,அவள் காலை மெதுவாகக் கீழே வைத்துவிட்டுக் கை கழுவ எழுந்தான்.
"காதல் என்பது ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளுதல்; ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல்.சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.ஒருவருக்காக ஒருவர் வாழ்தல்"

"உடம்பொடு உயிரிடைஎன்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு"----(குறள்)

(இது தலைப்பு மாற்றப்பட்ட மீள்பதிவு)