தொடரும் தோழர்கள்

திங்கள், அக்டோபர் 31, 2011

வாழ்க்கை----!

இலையுதிர்த்து நின்ற மரத்தடியில் இருந்த
         நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்
தலை நிமிர்த்திச் சிரித்தது மரத்தைப்  பார்த்து
          ”விரித்த குடையுடன் நான் நிற்க,மொட்டையாய் நீ” என்று!

மரம் பேசவில்லை;மௌனமாய் அழுதது
          காளானும் கேலி பேசும் தன் நிலைக்காக.
மறவாதே!மீண்டும் துளிர்க்கும் அந்த மரம்
           காளானின் வாழ்வு  எத்தனை நாள்?

……………………………………………………………………..

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

ஒயினும் சிரிப்பும்!


 
இன்று ஞாயிற்றுக்கிழமை.எல்லோரும் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாள்.இப்போது  கருத்தார்ந்த பதிவு எதுவும் போட்டு  மனநிலையைக் கெடுக்கக் கூடாது. எனவே  கழி மகிழ்வான ஒரு குட்டிப் பதிவு!  
............................................................................................................................................


ஒரு ஒயின் தொழிற்சாலையில் வழக்கமாக ஒயினைச் சுவைத்துக் கருத்துச் சொல்லும் நபர் திடீரென்று இறந்து விட்டார்.அந்த வேலைக்கு புதிய நபர் தேர்வு நடை பெற்றது.அழுக்காக உடை அணிந்த  ஒரு குடிகாரனும் வந்திருந்தான்.அவனை எப்படியாவது வெளியே அனுப்ப எண்ணினார் மேலாளர்.ஒரு கோப்பை ஒயின் அவனிடம் கொடுக்கப்பட்டது


“நாசிக்கில் விளையும் திராட்சை.மூன்று வருடம் பழையது.மரப் பீப்பாயில் வைக்கப்பட்டது”அவன் சொன்னான்


இன்னொரு கோப்பை ஒயின் கொடுக்கப்பட்டது.அவன் குடித்தபின் சொன்னான்” உயர்ந்த  ஃபிரான்ஸ் திராட்சை.ஆறு ஆண்டு பழையது”


இவ்வாறு  மேலும்  இரண்டு கோப்பைகளைக்குடித்துச் சரியாகக் கூறினான்.மேலாளர் தன் பெண் செயலரிடம் ரகசியமாக ஏதோ சொல்லி அனுப்பினார்.


ஒரு கோப்பையில் அந்தப்பெண் தனது சிறுநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.குடித்து விட்டு அவன் சொன்னான்.


“25 வயதான பெண்.மூன்று மாதம் கர்ப்பம்.இந்த வேலையை எனக்குக் கொடுக்கவில்லையென்றால்,கர்ப்பத்துக்குக் காரணம் யார் என்பதை எல்லோரிடமும் சொல்லி விடுவேன்”


வேலை அவனுக்குத்தான் கொடுக்கப்பட்டது என்பதை சொல்லவும் வேண்டுமா!
          


சனி, அக்டோபர் 29, 2011

ஹனுமாரும் வடைமாலையும்!


அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல்  ‘ஜிவுஜிவு’  என்று தோற்றமளித்த சூரியன்அவரை மிகவும் கவர்ந்து விட்டது.  மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனைசாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.  வாயுபுத்திரன் அல்லவா அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார்.  வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.  பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.  வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. 

ஆனால், அனுமன் சென்ற வேகத்தில்  ராகு பகவானால் செல்ல முடியவில்லை.  சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.  இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். 

அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.  இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார்.  அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.  அதைதான் உளுந்தினால் ஆன வடை மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். என்வேதான், ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்  உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால்ராகு தோஷம் நிவர்த்தி ஆகி  இடும் என்று கருதப்படுகிறது. 

”அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.”

வெள்ளி, அக்டோபர் 28, 2011

நான்தான் சமையக்காரி அலமேலு!

நான்தான் அலமேலு.வெறும் அலமேலுன்னு சொல்றதை விட சமையக்காரி அலமேலுன்னு சொன்னா எல்லாருக்கும் நன்னாத் தெரியும்.இப்பக் கூட ஆடிட்டர் ஆத்துக்கு,தல தீபாவளிக்கு ஸ்வீட் பண்ணத்தான் போயிண்டிருக்கேன்.    

பொறக்கும் போதே நான் சமையக்காரியாப் பொறக்கலே!காலக் கோளாறு, சமையக்காரி ஆயிட்டேன்.வயத்துப்பொழப்புக்காகக் கரண்டியைக் கையிலெ எடுத்தேன்.முதல்ல ஆத்தில இருந்தவாளுக்குச் சமைச்சுப் போட்டுண்டி ருந்தேன். அப்பறமா ஊருக்கே சமைக்க ஆரம்பிச்சுட்டேன்.


நான்  பொறந்து  வளந்த கதையெல்லாம் இப்ப வேண்டாம்.எங்க அப்பா எனக்கு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணி வச்சார்.ரொம்பப் பெரிய வேலையில இல்லாட்டாலும் ஏதோ சாப்பாட்டுக்கும் கட்டிக்கத் துணிக்கும் கஷ்டப்படாத வாழ்க்கை.ஆனா திடீர்னு ஒரு நாள் அவர் என்னையும் எங்க பிள்ளை நந்துவையும் நிர்க்கதியா விட்டுட்டுக் கண்ணை மூடிட்டார்.


நந்து அப்போ எட்டாங்கிளாஸ் படிச்சிண்டிருந்தான்.அவர் இருக்கும்போது சொல்வார்,”நீ ரொம்ப நன்னாச் சமைக்கறேடீ”ன்னு. அந்தச் சமையல்தான் கைகுடுத்துது.எல்லாராத்து விசேஷத்துக்கும் சமைக்க ஆரம்பிச்சேன். எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. அலமேலுவை நம்பி ஒரு கல்யாணச் சமையலையே குடுக்கலாம்னு சொல்ல ஆரம்பிச்சா!கூடவே அப்பளாம், வடாம் எல்லாம் பண்ணி விக்க ஆரம்பிச்சேன்.ஒரு மாதிரி கஷ்டப்பட்டு நந்துவை பி.காம் படிக்க வச்சேன்.


அவனும் கெட்டிக்காரன்.கஷ்டம் தெரிஞ்சவன். நன்னாப் படிச்சு ஃபர்ஸ்ட் கிளாஸில பாஸ் பண்ணினான்.ஏதோ பரிட்சை எழுதி தில்லி செகரடே ரியட்ல வேலையும் கெடச்சது.நான் அவன்கிட்ட சொல்லிட்டேன் நான் தில்லிக்கெல்லாம் வரமாட்டேன்னு.பாவம் கொழந்த.தனியாய தானே பொங்கிச் சாப்பிட்டிண்டு 5 வருஷம் ஓட்டினான்.எனக்கும் மாசா மாசம் பணம் அனுப்பிசிண்டிருந்தான்.
அப்பறம்தான் எழுதினான் அவன்கூட வேலை பாக்கிற மாலதியை லவ் பண்றதா. நல்ல வேளை,அவா பிராமணாதான்னும் எழுதியிருந்தான்.
 

எதுக்குக் கதையப் பெரிசா வளக்கணும்? கல்யாணம் பண்ணிண்டான். கல்யாணத்துக்கப்புறமும் நான் இங்க,அவா டில்லியிலதான். கொஞ்ச நாள் போச்சு.நந்து என்னைக் கட்டாயப் படுத்திக் கூப்பிட ஆரம்பிச்சான்,அம்மா இங்கயே வந்து இரும்மான்னு.சரி,அவன் இவ்வளவு கூப்பிட்றானே, போய்ப் பாக்கலாமேன்னு போனேன்.


போய் ரெண்டுநாள் கழிச்சு நந்து சொன்னான் அம்மா இவளுக்கு உன் சமையல் எல்லாம் நன்னாச் சொல்லிக் கொடுன்னு.நானும் அவ சமைக்கும்போது கூடவே இருந்து பாத்துச் சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சென்.ஒரு வாரம் கழிச்சுப்பாத்தா,சமையல் பூரா நாந்தான் செய்யறேன்;அவ சமையலறைப் பக்கம் வரதையே விட்டுட்டா! ரெண்டு பேரும் கார்த்தால 8 மணிக்குப் புறப்பட்டுடுவா.அதுக்குள்ள டிஃபன் பண்ணிகுடுத்துச் சமையல் பண்ணி பாக்சில போட்டு, மத்தியானம் இட்லிக்கு அரைச்சு வச்சு,ராத்திரிக்கு டிஃபன் பண்ணி வக்கணும் ,அவா ராத்திரி வந்தா டி.வி முன்னால ஒக்காந்துடுவா!


மத்தியானம் அக்கம் பக்கத்தில நம்ம பாஷைல பேசவும் ஆளில்ல. எங்கேயும் வெளிலயும் போக முடியல.ஒரே ஜெயில்தான்.


ஒரு மாசம் ஆச்சு.ஒரு நாள் அவ சொன்னா,இந்த மாசம் எண்ணெய், பருப்பெல்லாம் நிறைய ஆயிருக்கே.ஏன் இப்படி.இனிமே  கொஞ்சம் பாத்துச் செலவழியுங்கோன்னு.அவன் அதைக் கேட்டுண்டு இடிச்ச புளியாட்டம் நிக்கறான்.



இன்னொரு நாள்,கை தவறிப் பாலைக் கொட்டிட்டேன்.அதுக்குக் கன்னா பின்னான்னு ராட்சசி மாதிரி சத்தம்போட்டா.எனக்குப் பொறுப்பே இல்லையாம்.அப்பவும் அவன் மலங்க மலங்க முழிச்சிண்டு நிக்கறான்.ஒரு வார்த்தை பேசலை.


அப்பத்தான் முடிவு பண்னினேன்.ஊருக்குப் போயிட வேண்டியது தான்னு.நல்ல வேளையா குளிர் ஆரம்பிக்கவே அதைச் சாக்கா வச்சு ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிப் புறப்பட்டுட்டேன்.


ஊருக்கு வந்து சேர்ந்ததுமே வக்கீலாத்து மாமி சொல்றா,என் வயத்தில பாலை வார்த்தேடி,பெண்ணு பிரசவத்துக்கு வரா, ஒண்டியா என்ன பண்றதுன்னு தவிச்சுண்டிருந்தேன்னு. அவ்வளோ சந்தோஷம் அவாளுக்கு!
ஆச்சு.இப்பத்தீபாவளி வந்துடுத்து ,வேலை சரியா இருக்கு,ஆனா சந்தோஷமா இருக்கு.


எங்கயோ பாஷை தெரியாத ஊர்ல,யாரிட்டயும் பேச முடியாம, வெளில வாசல்ல போக முடியாம வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடந்து  சம்பளம் இல்லாத
சமையக்காரியா இருக்கறதை விட,மனுஷாளோட பேசிண்டு, கோவில் குளம்னு போயிண்டு, நாலு பேருக்கு ஒத்தாசையா இருந்து நாலு காசு சம்பாதிச்சுண்டு
சமையக்காரியா இருக்கறது மேல்தானே!

என்ன சொல்றேள்?

வியாழன், அக்டோபர் 27, 2011

பொன்மொழிகள்-25

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.












புதன், அக்டோபர் 26, 2011

தீபாவளி நல் வாழ்த்துகள்


இன்று தீபாவளி;நரகாசுரனைக் கொன்ற நாள்

ஒன்று கேட்பேன் நான் இந்நாளில், சொல்லுங்கள்

நம்முள்ளிருக்கும் நரகாசுரன்களைக் கொன்றோமா?

பேராசை,சினம்,கடும்பற்று,முறையற்ற காமம்,

உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் பொல்லாத

அசுரர்களைக் கொன்றொழிக்க வேண்டாமா?


அதற்கெல்லாம் நாளாகும்,இன்று தீபாவளி,

அதிகாலை குளிப்போம்,புதுத்துணி அணிவோம்

அதிரசம் புசிப்போம், ஆட்டம்பாம் வெடிப்போம்

அதன்பின் என்ன செய்ய?


முட்டாள் பெட்டி முன் முழுநாளும் அமர்ந்து

தட்டாமல் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

கொறிப்பதற்குப் பலகாரம் குறைவில்லை

சிறுத்தை,சிங்கம் ,அது இது அவன் இவன் எனப்

பார்ப்பதற்குப் படங்களுக்கும் குறைவில்லை!

யார் வந்தால் என்ன வாழ்த்துச் சொல்ல?

வெறுமிடைஞ்சல் ,கழுத்தறுப்பு, ரம்பம் என்றே

வெறுத்து ஒதுக்குவோம்,படத்தில் மூழ்குவோம்!

இதற்கு மேல் இன்பம் வேறென்ன வேண்டும்?!


தீபாவளி நல்வாழ்த்துகள்!

செவ்வாய், அக்டோபர் 25, 2011

வாழ்த்துங்கள் உறவுகளே!


இன்று காலை முதல் தொலைபேசி அழைப்பு திருவண்ணாமலையில் இருக்கும் என் அக்காவிடமிருந்து.

பின் சென்னையில் இருக்கும் உறவினர்கள்,நண்பர்கள்,துபாய்,தோஹா என்று பல இடங்களிருந்தும்,தொலைபேசி அழைப்புகள்.

எல்லாம் இன்று பிறந்த இந்தக் குழந்தைக்கு வாழ்த்துச் சொல்ல!

1944 இல் இந்நாளில் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த இந்தக் குழந்தைக்கு இன்று 67 ஆண்டுகள் முடிந்து விட்டன.

எப்போதும் நான் சொல்லும் அதே சொற்கள்தான்--

உடலுக்கு வயது 67;உள்ளத்துக்கு வயது 27தான்!

இறைவன் அருளும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என்னுடனிருந்து என்னை வழி நடத்தட்டும்

miles to go before i sleep!


திங்கள், அக்டோபர் 24, 2011

ஜாலியா ஒரு வலைப்பூ மாலை--கவுஜ!

நேற்று இரவு மெட்ராஸ் பவன் ஸ்பெசல் மீல்ஸ்

சோற்றைத் தின்ற பின் வெளியே வந்து நான்

நடக்கத்தொடங்கினேன் என் ராஜபாட்டையில்

நண்பர்கள் சிலரைச் சந்திக்க எண்ணி!

வந்தார் எதிரே நண்பர் நாஞ்சில் மனோ

சொந்தமாய்க்கேட்டேன் நண்பா நலமா?

சொன்னார் அவர் “நலமே நான் நலமே

அன்பு உலகம் இது எனக்கென்ன குறை?”

இந்த இனிய சொற்களை கேட்ட பின்

என் மனம் சிட்டுக்குருவியாய்ப் பறந்தது.

செல்லும் வழியில் பார்த்தேன் ஒரு போஸ்டர்

“எல்லோரும் விரும்பும் மேஜிக் ஷோ” என்று

பார்க்க விரும்பினேன் அம் மாய உலகம்

ஆர்வமிருப்பினும் நேரமில்லை!

மேலும் சென்ற பின் பார்த்தேன் ஆங்கோர்

சோலை நடுவே வசந்த மண்டபம்.

முன்னேகோவில் இதன் பிரகாரத்தில்தான்

என் காதல் பயிருக்கு நாற்று நடப்பட்டது!

எங்கெங்கோ போய்த் தேடினாலும் இந்தச்

செங்கோவில் போல் ஆகுமா அது?

பக்தைகள் பலர் எதிரே வந்தனர்

அத்தனை பேரும் அம்பாளடியாள்கள்

Kavithaigal படைக்க மனம் துடிக்குது

கற்பனை ஏனோ வறண்டு கிடக்குது.

இல்லம் திரும்பினேன்,தம்பி சொன்னான்

நல்ல வேலை கிடைத்தது என்று-அட்ராசக்க!



ஞாயிறு, அக்டோபர் 23, 2011

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு !!!

இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்.அதை அப்படியே தருகிறேன்.சொல்லப்பட்டிருப்பது எந்த அளவு உண்மை என எனக்குத்தெரியாது.மேலும் தகவல்கள்,விவரங்கள் இருந்தால் நீங்கள் சொல்லலாம்.

quote

//" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரணங்களுக்காக
பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைஅளித்தது.




இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.



ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.


அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.



இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்

திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.//

unquote.

சனி, அக்டோபர் 22, 2011

கற்புக் கற்பென்று............

கற்பென்பது என்ன?

அது உடல் சம்பந்தப் பட்டதா?உள்ளம் சம்பந்தப்பட்டதா?அல்லது இரண்டுமா?

ஒரு பெண் கற்பிழந்தவள் என்று கூறும் நாம் ஆண் கற்பிழந்து விட்டான் என எப்போதாவது சொல்கிறோமா? ஏன்?

ஆணுக்குக் கற்பு என்பது கிடையாதா?

ஆண் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டாலும் தன் மனைவி மட்டும் கற்புடையவளாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்?

அவள் கற்புடையவள் என்பதை அவன் எப்படித்தீர்மானிக்கிறான்? கன்னித்திரையின் (hymen) தன்மையை வைத்தா?அது மட்டுமே சரியான நிரூபணம் ஆகுமா?

அவனுடன் உடலுறவு கொள்ளும் போதெல்லாம் மனதில் வேறெவனையோ நினைத்துக் கொண்டு அவள் இருப்பாளாகில் அது கற்பாகுமா?

உடலுறவின் விளைவை உடல்ரீதியாகச் சுமந்து வெளிக்காட்டுபவள் அவள் என்பதால்,அத்தகைய இடர்ப்பாடுகள் ஏதும் ஆணுக்கில்லை யென்பதால், கற்பென்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாக்கப் பட்டதா?

ஒரு வன்புணர்வில் ஒரு பெண் தன் பெண்மையை இழந்திருந்தால் அவள் கற்பிழந்தவள் ஆவாளா?

வன்புணர்வென்பது என்ன?

இந்தியக் குற்றவியல் சட்டம் செக்சன் 375 சொல்கிறது—

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் எதிலாவது உடலுறவு கொண்டால் அது வன்புணர்வு.

1)அவளது விருப்பமில்லாமல்

2) அவளது சம்மதமின்றி

3)அவளுக்கு அவள் விரும்பும் யாருக்கோ இடர் விளைவிப்பதாகச் சொல்லிச் சம்மதம் பெற்று

4)அவள் அவனைத் தன் கணவன் என்ற தவறான நம்பிக்கையில்,,அது அவனுக்குத்தெரிந்தும்,சம்மதம் அளிக்கும்போது

5)அவளது சம்மதம் அவள் மனநிலை சரியில்லாத நேரத்திலோ அல்லது அவளுக்கு ஏதாவது போதை மருந்து கொடுத்து அதன் காரணமாகவோ அவள்நடக்கப்போகும் நிகழ்வின் விளைவுகளை புரிந்து கொள்ளாத நிலையில் பெறப்பட்டால்

6)சம்மதத்துடனோ சம்மதமில்லாமலோ-அவள் பதினாறு வயதுக்கு உட்பட்டவளாக இருந்தால்.

எனவே நிச்சயமாக அப்படி ஒரு நிகழ்வு அவளது கற்பென்று கதைக்கப்படும் விஷயத்துக்குக் களங்கமாகாதுதானே?

பாரதி சொல்வான் ----

ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்; கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே!

ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?

………..

……..

காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே?

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்,கற்பு என்பது நமது கலாசாரத்துக்கு மட்டும் உரியது என்று.

இல்லை!

ஷேக்ஸ்பியரின் ”தி ரேப் ஆஃப் லுக்ரீஸ்” என்ற கவிதையில் .ஒரு பெண் கற்பிழந்ததைப் பற்றிக் கூறுகிறார்—

//she hath lost a dearer thing than life,//

”உயிரை விட மதிப்பு வாய்ந்த ஒன்றை அவள் இழந்து விட்டாள்”

ஆக எங்குமே கற்புக்கு ஒரே அளவுகோல்தான்.

அதைப் பெண்களுக்கு மட்டுமே உரியதாகி விட்டது இந்தச் சமூகம்!