தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 26, 2013

ஒரு மரம் சிலுவையாகிறது!



ஒரு மலை.

அதன் மீது மூன்று இளம் மரங்கள். 

வளரத் தொடங்கும் காலம்.

வளர்ந்து பெரிய மரங்களான பின் என்னவாக மாறுவோம் எனக் கனவு கண்டன  மூன்றும்.

முதல் மரம் எண்ணியதுநான் மிக அழகிய பெட்டியாவேன் ;என்னுள் தங்கமும் வைரமும் பணமும் நிறைந்திருக்கும்

இரண்டாவது மரம் எண்ணியதுநான் வலுவான கப்பலாவேன்;சமுத்திரத்தில் மன்னர்களைச் சுமந்து செல்வேன்

மூன்றாவது மரம் எண்ணியதுநான் இங்கேயே இருப்பேன்;உலகின் மிகப் பெரிய மரமாய் வளர்வேன்

காலம் ஓடியது

மரங்கள் வளர்ந்து விட்டன

ஒரு நாள் மூன்று மரம் வெட்டிகள் வந்தனர்

முதலாமவன் முதல் மரத்தைத் தேர்ந்தெடுத்து வெட்டினான்

மரம் நினைத்தது “நான் பணப்பெட்டியாகபோகிறேன்.”

இரண்டாவது மரம் வெட்டி இரண்டாவது மரத்தைத் தேர்ந்தெடுத்தான்.
”ஆகா !நாம் கப்பலாகும் காலம் வந்துவிட்ட்து”மரம் மகிழ்ந்தது

மூன்றாவது மரவெட்டி,மூன்றாவது மரத்தை நெருங்கினான்”அய்யகோ!என்னை வெட்டப் போகிறான்”மரம் பயந்தது.

முதல் மரம் தச்சுப் பட்டறையை அடைந்த்து.

அங்கு அது ஒரு மாட்டுத்தீவனம் வைக்கும் பெட்டியானது!

தன் நிலை எண்ணி அழுதது!

இரண்டாவது மரம் பட்டறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு அது ஒரு சிறிய படகாக மாறி சின்ன ஏரியில் மிதக்கத் தொடங்கியது.

மூன்றாவது மரத்தை எடுத்துச் சென்றவன் அதைக் கட்டைகளாகச் செதுக்கி வைத்து விட்டான்

மரம் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து அழுதது!

நாட்கள் நகர்ந்தன.

ஓரிரவு ஒரு பெண் அப்பெட்டியில் ஒரு சிசுவை வைத்தாள்,

இதுவே இவன் தொட்டில் என்றாள்.

மரம் உணர்ந்த்து-உலகின் மிகப் பெரிய பொக்கிஷம் தன்னுள் இருப்பதை!

ஒரு பொன்மாலைப் பொழுது!

ஒரு மனிதரும் அவர் நண்பர்களும் படகில் ஏறினர்.

படகு செல்லும்போது மின்னல் மின்னியது;இடி இடித்தது ;புயல் வந்தது.

படகு தத்தளித்தது.

அந்த மனிதர் வானத்தைப் பார்த்து அமைதி என்றார்!

புயல் அடங்கியது.

படகு உணர்ந்தது,தான் தேவகுமாரனைச் சுமப்பதை!

ஒரு வெள்ளியன்று,சிலர் வந்து  மூன்றாவது மரக் கட்டைகளை எடுத்துச் சென்று ஒரு சிலுவையாக்கினர்.

அச்சிலுவையில் ஒரு மனிதரை அடித்தனர்.

மரம் அழுதது,தன் இழிநிலைக்காக.

ஆனால் ஞாயிறன்று,அம்மனிதர் உயிர்தெழ உலகம் மகிழ்ந்தது.

மரத்துக்கும் மகிழ்ச்சி –இனி தான் தேவனுடன் சேர்த்து எண்ணப்படுவோம் என்பதில்!

ஆம் நன்பர்களே! நீங்கள் எண்னியது நடக்கவில்லை என்று வருந்தவேண்டாம்;அதை விடச் சிறந்த ஒன்றை இறைவன் உங்களுக்காகத் திட்டமிட்டுள்ளான்   என்பதை உணர்ந்து மகிழுங்கள்!


(படித்தேன்;பகிர்ந்தேன்!)



புதன், டிசம்பர் 25, 2013

நல்ல மேய்ப்பர்



ஆடுகள்!

மந்தை மந்தையாய்

ஒன்றோடொன்று நெருக்கியடித்து

ஒன்று போல் சென்றாலும்

எல்லாம் ஒன்றல்ல!

குறும்புக்கார ஆடுகள்

வேலி தாண்டிச் சென்று

மேயத் துடிப்பவை

முட்டி விரட்டுபவை

முன்கோபம் கொண்டவை

சாதுவாய்ச் செல்பவை

சண்டைக்கு நிற்பவை

ஆடுகள் பலவிதம்

எல்லாவற்றையும்

மேய்ப்பன் அறிவான்

அவை அவன் சொல்வதைக்

கேட்பினும்,கேளாதிருப்பினும்

 அவனை நம்பினும்,நம்பாவிடினும்

அவை பத்திரமாயிருக்கும்

மேய்ப்பன் இருக்கிறான்

ஏனெனில்

காப்ப்பது அவன் தொழில்

ஆடுகள் மட்டுமல்ல

மாடுகளும்தான்

இடையனின் குரலுக்கும்

குழலுக்கும் மயங்குபவை

அவன் பார்வையில்

பயமற்றுத் திரிபவை

காப்பவர்

எவராயினும்

காப்பது அவர்  தொழில்

எனவே ஆடுகளும் மாடுகளும்

பாதுகாப்பாய்,பயமற்று!


என் மனங்கனிந்த இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

செவ்வாய், டிசம்பர் 17, 2013

மார்கழி பீடை மாதமா?



மார்கழி பிறந்து விட்டது.

வழக்கம் போல் எங்கள் குடியிருப்பின் காவல் தெய்வமான லக்ஷ்மிகணபதிக்குக் காலை பூஜைக்கான பிரசாதம் செய்ய,குடியிருப்போர் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.



நானும் ஒரு நாள் பூஜையை ஏற்றுப் பிரசாதம் செய்ய எண்ணியுள்ளேன்.

வெண்பொங்கல் செய்ய உத்தேசம்!

மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று கூறுவார்கள்.

ஆனால் கீதாச்சாரியன்,”மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்என்று சொல்கிறான்.

அப்படியெனில் அது எப்படிப் பீடை மாதமாகும்?

கேள்வி எழுகிறது.

உங்களுக்குத் தலைவலிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பையனை அழைத்துச் சொல்கிறீர்கள்மருந்துக்கடைக்குப் போய்த் தலைவலி மாத்திரை வாங்கி வாஎன்று.

பையனும் கடைக்குச் சென்று தலைவலி மாத்திரை கேட்டுக் கடைக்கார் மாத்திரை கொடுக்கிறார்,

தைப் போட்டுக்கொண்டபின் உங்கள் வலி நீங்குகிறது.

தலைவலி மாத்திரை என்றால் என்ன?

தலைவலியை உண்டாக்கும் மாத்திரையா?

அல்ல.மாறாகத் தலைவலியை நீக்கும் மாத்திரை.

அதையே தலைவலி மாத்திரை என்கிறோம்.

அதே போல்,பீடை மாதம் என்றால்,பீடை ஏற்படுத்தும் மாதமல்ல;பீடையை நீக்கும் மாதம்!

மாதம் முழுவதும்,காலை எழுந்து நீராடி,திருப்பாவை மூலம் கண்ணனையும், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மூலம் சிவபிரானையும் போற்றி மகிழ்ந்து அதன் மூலம் நம் பீடைகள் நீங்கப் பெறவேண்டும்.

இம்மாதத்தை சூன்யமாதம் என்றும் சொல்வர்.

சூன்யம் என்றால் பூஜ்யம்.

பூஜ்யனான இறைவனை அதிகாலை தொழும் மாதம் ஆதலால்,பூஜ்ய மாதம்!

இம்மாதம் தட்சிணாயனத்தின் கடைசி மாதம்.

ஒரு ஆண்டு என்பதை,தேவர்களின் ஒரு நாள் எனக் கொண்டால்,மார்கழி மாதம் என்பது அதிகாலைப் பொழுதாகும்.

இரவும் விடியலும் சந்திக்கும் வேளை!

எனவேதான் அதிகாலை இறைவனை வணங்க வேண்டும்.

நாளை ஆருத்ரா தரிசனம்.

களி கூட்டுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.

செவ்வாய், டிசம்பர் 03, 2013

குறை ஒன்றும் இல்லை!



இதோ ஒருவர்!
பார்வைக் குறைபாட்டுடன் பிறந்தவர்.
படுத்து விடவில்லை சோர்ந்து.
படித்தார்,பட்டங்கள் பெற்றார்
பணி புரிகிறார் இன்று
படிப்பிப்பவரா!
இவருக்குக்
குறை ஒன்றும் இல்லை!

மற்றொருர்!
மண்ணில் விழும்போதே
மடங்கிய கால்கள்
ஓடும் வாழ்க்கையில்
நடக்கவே முடியாதவர்
கால்களின் வலு கையில்
தொழிற்கூடத்தில் பணி
தொய்வின்றிச் செய்கிறார்
இவருக்குக் குறை ஒன்றும் இல்லை

கேளுங்கள் இவர் பற்றி
கேட்க இயலாதவர்
பேச்சும் இல்லாதவர்
இவர் வரையும் ஓவியங்கள்
உயிர் பெற்று உலவுமே
கவிஞன் சொன்னது போல்
தீ வரைந்தால் விரல் சுடும்
பூ வரைந்தால் மணம் மிகும்
இவருக்குக்
குறை ஒன்றும் இல்லை

இவன் உடல் ஊனமற்றவன்
வசதியானவன்
ஆனால்
பிறர் வாழப் பொறுக்காதவன்
அழுக்காறு அவா வெகுளி
 எல்லாம் நிறைந்தவன்
தீங்கு செய்வதே வாடிக்கையானவன்
இவனுக்கு குறை உண்டு!
இவன் மன ஊனம்!


உடல் ஊனம் ஒரு ஊனமல்ல
மனம் ஊனமானால்?!


சாதிக்கும்,சாதிக்கத் துடிக்கும்,வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி களுக்குச் சமர்ப்பணம்.