தொடரும் தோழர்கள்

புதன், மே 24, 2017

மந்திர உபதேசம்மந்திரம் உண்டொன்று சொல்வேன்

மறுமையை நீக்கி இம்மைக்குச் சுகம் தரும்

ஐந்தெழுத்தும் ஆறெழுத்தும் எட்டெழுத்தும்

இதற்குப் பின்தான்.

சொல்வதற்கு எளிய மந்திரம்

பிறந்த குழந்தையும் சொல்லும் மந்திரம்

மூன்றெழுத்து மந்திரம்

“அம்மா”.

அழையுங்கள் நாவினிக்கும்

அவளுக்கும் நெஞ்சினிக்கும்.

ஓரன்னையின் பயணம்

இளம் தாய்

குழந்தைகள் கைபிடித்து

வாழ்க்கையெனும் பாதையில்

சில இடங்களில் பாதை கரடு முரடு

சில இடங்களில் முட்கள் அடர்ந்து

எங்காயினும் கால் நோவாமல் அழைத்துச் செல்கிறாள்.

சிகரங்களைக் கண்டு மலைக்காமல்

ஏறி உச்சி காணச் செய்கிறாள்

புயலைக் கண்டு நடுங்காமல்

எதிர்கொள்ளச் செய்கிறாள்.

காலங்கடந்தால்

முதுமையால் தொய்ந்த உடல்           

முன்பு போல் வழி நடத்த இயலாமல்

இப்போது குழந்தைகள் இல்லை

பெரியவர்கள்

வலிமை மிக்கவர்கள்.

தாய்க்கு ஆதாரமாய் நிற்பவர்கள்

ஒரு நாள் அவள் மறைகிறாள்

ஆயினும்

அவள் மறையவில்ல!

நம்மைச் சுற்றியிருக்கும் ஓசைகளில்

நாம் முகர்கின்ற நறு மணங்களில்

நமது சிரிப்பில்

நமது கண்ணீரில்

வாழ்கிறாள்.

அவள் வெறும் நினைவல்ல.

நம்முடன் கலந்திருக்கும் உணர்வு!

(அவள் ஒரு வரம்.இருக்கும்போது அலட்சியம் செய்து இல்லாதபோது ஏங்குபவர்கள்  பலர்.காலம் இன்னும் இருக்கிறது.அவள் காலடி தொழுங்கள்;கர்மினையும்)


செவ்வாய், மே 23, 2017

ரிவால்வர் ரீட்டா!


திருமண மண்டபம்.

உறவினர்களாலும் நண்பர்களாலும் நிறைந்திருக்கிறது.

திருமணமாகாத பல ஆண்களும் பெண்களும்  நமக்கு  ஒரு துணை இங்கு கிடைக்குமா எனக் கண்களை மேய விடுகிறார்கள்

குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

தாலி கட்டும் நேரம் வந்தாச்சு  என்று உரத்த குரல் எழும்புகிறது.

மாப்பிள்ளை தாலியைக் கையில் எடுக்கிறார்.

 சிலர் மேளக்காரரைப் பார்த்து ஒரு விரல்  எழுப்பிப் பயமுறுத்த,,அவர் பயந்து போய் வேக வேகமாகக் கெட்டி மேளம் வாசிக்க தொடங்குகிறார்..

 இதோ மாப்பிள்ளை   தாலி கட்டப் போகிறார்.

”நிறுத்துங்கள்”

கெட்டி மேளச் சத்தத்தையும் மீறி ஒரு பெண்ணின் குரல்...
.
அவள்..

மண மேடை யருகே கையில் துப்பாக்கியுடன்...

அவளை சுற்றி ஆறு பேர் கையில் துப்பாகியுடன்.

எல்லோரும் திகைக்கிறார்கள்.

அந்தப் பெண் பேசுகிறாள்”இதோ இந்த மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கும் முருகன் என்னைக் காதலித்தான்.திருமணம செய்வதாக வாக்களித்தான்
ஆனால் இன்று என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டப் போகிறான்..,அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்”

உடன் நிற்கும் ஆண்களைப் பார்த்துக் கையசைக்கிறாள்.

அவர்களில் நால்வர் பாய்ந்து மேடை மீது ஏறி மாப்பிள்ளையை அமுக்கிப் பிடித்துத் தூக்கி மண்டப வாசலை நோக்கி நடக்கின்றனர் அப்பெண்ணும் மீதி இருவரும் துப்பாக்கியுடன் காவலாக உடன் செல்கின்றனர்.

வெளியில் நிற்கும் வேனில் ஏறி போய் விடுகின்றனர்.

எல்லோரது மனத்திலும் ஒரே கேள்வி.....

“யார் இந்த ரிவால்வர் ரீட்டா?”
..................................

எப்போதும் திரைப்படங்களில் முன்பு என்ன நடந்தது என்று(flash-back)
காட்டுவார்கள்.

ரிவால்வர் ரீட்டாவின் பெயர் வள்ளி

அவளுக்கும் முருகனுக்கும் எட்டு ஆண்டுகள் பழக்கம்.

முருகன் பெற்றோருக்குப் பயந்து அவர்கள் பார்த்த பெண்ணை மணக்கச் சம்மதிக்கிறான்

இப்போது மண்டபம்,ரீட்டா கடத்தல்.......

...........................

இந்த சினிமாவில் ஒரு flash-front...............

முருகனின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர்.

மணக்க இருந்த பெண்ணின் பெற்றோருக்கும் முருகனின் பெற்றோருக்கும்
வள்ளியின் தரப்பினருக்கும் பேச்சு வார்த்தை நடக்கிறது.

புகார் திரும்பபெறப் படுகிறது.....

“நிகழும் ஹேவிளம்பி ஆண்டு,வைகாசி மாதம்...நாள் திருவளர் செல்வன் முருகனுக்கும்,திருவளர் செல்வி வள்ளிக்கும் நடைபெற இருக்கும் திருமணத்துக்கு..............................”.

........................................................................................

செய்தி ஆதாரம்...இந்தியாவின் நேரங்கள்


திங்கள், மே 22, 2017

பார்த்து வாங்க வேண்டாமா?!

 சென்ற இடுகையை, “பார்த்து வாங்க வேண்டாமா?!” என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.

தனது பின்னூட்டத்தில் திரு பகவான் ஜி அவர்கள் “பார்த்து வாங்க வேண்டாமா” இதுதான் அடுத்த பதிவின் தலைப்பா எனக் கேட்டிருந்தார்.

கிடைத்தது தலைப்பு!

அதற்குத்தக எழுத வேண்டும்;அவ்வளவே.

இதோ பதிவு!

பகவான் ஜி கடையிலிருந்து வீட்டுக்கு வருகிறார்.

மனைவி கேட்கிறார்”என்ன காய் வாங்கி வந்தீங்க?”

”வெண்டைக்காய் ” பதில்.

பையிலிருப்பதைக்கீழே கொட்டி சோதித்துப் பார்க்கிறார் மனைவி.

“அய்யோ!எல்லாமே முத்தல்.பார்த்து வாங்க வேண்டாமா?

(அப்பா!தொடக்கத்திலேயே தலைப்பு வந்தாச்சு!)

இது ஒரு சிறு உதாரணம்.

எந்தப் பொருளுமே வாங்கும்போது கவனித்து வாங்க வேண்டும்.

அதன் குற்றம்,குறைகளைக் கவனிக்க வேண்டும்.

சட்டம் சொல்கிறது  caveat emptor"

அதாவது ”let the buyer beware”

வாங்குபவர் ஜாக்கிரதையாக இருக்கவும்!

ஒன்றை வாங்கும்போது அது எப்படி இருக்கிற.தோ அப்படியே வாங்குகிறோம்..”as is where is".

நாம அதை  ஏற்றுக்கொண்டு விட்டோம்.

பின்னர் வருந்தி என்ன பயன்.

வாங்கும்போதே.......பார்த்து வாங்க வேண்டாமா?

ஒரு பொருள் வாங்கும்போது விலை  அதிகமாக இருந்தாலும் உத்திரவாதம் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

இல்லையேல்  மறுநாளே அது  வேலை செய்யவில்லை என்றாலும் ஒன்றும் செய்வதற்கில்லை.

இன்னொரு  காட்சி

ஒருவர் மடிக்கணினி வாங்கக் கடைக்குப் போகிறார்.

விலை குறைவாக எதிர்பார்க்கிறார்.

கடைக்காரர் கொஞ்சம் பயன்படுத்தப்பட்ட கணினி ஒன்று நல்ல நிலையில் இருக்கிறது,விலை மலிவு என்று சொல்லிக் கொடுக்கிறார்.

அவரும் மகிழ்ச்சியுடன் வாங்கிப் போகிறார்

ஓரிரு நாட்களில் போலிஸ் வருகிறது

அவர் வாங்கிய கணினி  திருடப் பட்டது என்று கூறி கணினியைக் கைப்பற்றுகிறது.

இவர் என்ன செய்ய முடியும்/

கடைக்காரரைக் கேட்கலாம்.

கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம். வேறு எந்த உரிமையும் இவருக்கு இல்லை.

திருட்டுப் பொருளுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது

அதன் உரிமை பறி கொடுத்தவருக்கு மட்டுமே

வாங்குபவர் ஜாக்கிரதை!

பார்த்து வாங்க வேண்டாமா?

இது போலவே  கிராஸிங் என்று காசோலையில் இரண்டு இனை கோடுகள் போடுவார்கள்

அதில் ஒரு வகை not negotiable crossing.

அத்தகைய காசோலை திருடப்பட்டதாக இருந்தால்,அதை நம்பிக்கையுடன் வாங்கியிருந்தாலும் அதற்கான உரிமை அதைத் திருடியவரிடமிருந்து பெற்றுக் கொண்டவருக்கு இல்லாமல் போகிறது.

இதைப் பற்றி சொல்வார்கள்” இது ஒரு திருடப்பட்ட பேனா அல்லது கைக்கடிகாரம் போன்றது” என்று.

காசு கொடுத்துப் பொருள் வாங்கும்போது வாங்குபவர்  கவனமாக, சாக்கிரதையாக இருத்தல் அவசியம்

இல்லையெனில் பின்னர் கேள்வி எழும்...........

“பார்த்து வாங்க வேண்டாமா?!”

டிஸ்கி: வெண்டைக்காயை நுனியை ஒடித்துப் பார்த்து வாங்க வேண்டும்.....அதற்காகக் கடைக்காரர் நம்  விரலை ஒடிக்காமல் இருந்தால்!
ஞாயிறு, மே 21, 2017

ஹாலிடே,ஜாலிடே!

ராமு அசாத்திய அறிவாளி!

ஒரு முறை நேர்முகத்  தேர்வொன்றுக்குப் போனான்.

தேர்வு நடத்தியவர் சொன்னார்”நான் சொல்லும் வார்த்தைகளுக்கெல்லாம் எதிர்ப்பதம் சொல்லுங்கள்...மேடு இன் இந்தியா”

ராமு “பள்ளம் அவுட் பாகிஸ்தான்”

”குட்!ரொம்ப ஷார்ப்பா இருக்கீங்களே”

ராமு”மோசம்.கொஞ்சம் மொக்கையா இல்லையே”

“போதும்.ரிலாக்ஸ் ஆகிக்கீங்க”

ராமு”பத்தாது.டென்சன் ஆகாதீங்க”

அதிகாரி கோபத்துடன் சொன்னார்

“நீங்க செலெக்ட் ஆகலை”

ராமு சிரித்துக் கொண்டே”நாங்க செலக்ட் ஆகிட்டோம்”

“முட்டாள்!இடத்தைக் காலி பண்ணு.”

ராமு”அறிவாளி! இடத்தை நிரப்பு”

”கடவுளே!காப்பாத்து”

ராமு”சாத்தானே கைவிடு”

:))  :))  :))  :))
சனி, மே 20, 2017

என்ன நடந்தது?...

இன்றைய பதிவுக்கு முன் ஒரு இடைச் செருகல்.

  பதிவு நேற்றே எழுதியிருக்க வேண்டும்.

நேற்று காலை

11  மணி அளவில் வெறுந்தரையில் ஹாயாகப் படுத்தேன். கண்ணாடி  அணிந்தபடி......


பின் அதைக் கழட்டி படுத்தபடியே அருகில் இருந்த நாற்காலி மீது வைத்தேன்.அப்போது ஓர் எண்ணம் “யாராவது  வந்து கவனிக்காமல் உட்கார்ந்தால் என்ன ஆகும்?’

சிறிது நேரம் கழித்து ஒரு தொலை பேசி அழைப்பு.

தொலைபேசியை எடுத்து அருகில் வைத்துக் கொள்ள மறந்திருந்தேன்.

எழுந்தேன்

தொலைபேசியை எடுத்தேன்

பேசிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தேன்

....பட்டக்   .......

சப்தம்

கண்ணாடியில் லென்ஸ் இரண்டும்  தெறித்து வெளியே வந்து விட்டன.

இனிமேல் என்னத்த பாத்து,என்னத எழுதி.............

மாலை கடைக்குச் சென்று சரி செய்யும் வரை.

.மாலை முதல் வேலையாக டைடன் சென்று  சரிசெய்தேன்.

அதன் பின்னரே பழங்கள் வாங்கச் சென்றேன்.

பார்த்து வாங்க வேண்டாமா!


வியாழன், மே 18, 2017

எய்தவன்!

ஒரு பழமொழி....

எய்தவன்  இருக்க அம்பை நோவானேன்?

எந்த அம்பும் தானாகவே வில்லிலிருந்து புறப்பட்டு வந்து தாக்காது

வில்லில் நாணேற்றி அம்பை வைத்து எய்வதற்கு ஒருவன் தேவை.

அவன் எங்கு குறி பார்த்து எய்கிறானோ அங்கு சென்று தாக்கும் அந்த அம்பின் மீது குற்றமிலை.

அம்பினால் தாக்கியவன் மீதே குற்றம்.

புதன், மே 17, 2017

இசை

”தன்னில் இசை இல்லாத,ஒருமித்த இனிய ஓசைகளினால் உணர்ச்சிஅடையாத,ஒருமனிதன்,துரோகி,தந்திரக்காரன் ,கெட்டவன்”(செகப்பிரியரின் வெனிஸ் வர்த்தகனிலிருந்து ஒரு மோசமான மொழி பெயர்ப்பு!)

மனித வாழ்க்கையில் இசை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.பிறப்பு முதல் இறப்பு வரை நம் எல்லா விசேடங்களிலும்,இசை கலந்திருக்கிறது.தாலாட்டு முதல் ஒப்பாரி வரை.

இசையே பிடிக்காதவர்கள் மிகச் சிலரே இருப்பர்.சிலருக்கு கர்னாடக இசை,சிலருக்கு இந்துஸ்தானி இசை,சிலருக்கு மேற்கத்திய இசை,சிலருக்கு திரை இசை,சிலருக்கு நாட்டுப் பாடல் என்று ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்.

எனக்குக் கர்னாடக இசை.என் இசை ஆர்வத்துக்குத் தீனி அளித்தவர்கள் இருவர்.

ஒருவர் நண்பர்  பார்த்தசாரதி.என் தளத்தில் அவரது பல படைப்புகள் வெளி வந்துள்ளன.வானொலியிலோ,தொலைக்காட்சியிலோ நல்ல கச்சேரி இருந்தால் உடன் தொலைபேசுவார்.இசை விழா நேரத்தில் அவர் மியூசிக் அகாடமிக்கும் நான் நாரத கான சபாவுக்கும் செல்வது வழக்கம்.தினமும் கண்டிப்பாகக் கச்சேரி  பற்றிய உரையாடல்கள் நிகழும்..

அவர் சென்ற டிசம்பர் மாதம் காலமானார்.

நானும் இப்போதெல்லாம் பல காரணங்களால் கச்சேரி கேட்கும் மன நிலையில் இல்லை.

மற்றவர் எங்கள் வங்கியில் பணி புரிந்து என் போலவே விருப்ப ஓய்வு பெற்றவ பெண்மணி.பணியில் இருந்தபோது பழக்கமில்லை .பின்னாளில்,யாரோ சொல்லி சில ஆலோசனைகளுக்காக என்ன நாடி வந்தார்.நான் சொன்னவை சரியாக நடந்ததால் நம்பிக்கை மிகக் கொண்டார்.

 ஒரு முறை அவராகவே கச்சேரிக்கெல்லாம் போவீர்களா எனக் கேட்டு நாரதகான சபாவில் இசை விழாவின்போது சீசன் டிக்கட் கொடுத்தார்.ஆறாவது வரிசையில் இருக்கை.தொடர்ந்து சில ஆண்டுகள் கொடுத்தார்.பின்னர் என்னால் போக இயலாத நிலை உருவான போது வேண்டாம் எனச் சொல்லி விட்டேன்

 இன்று அவரது பையன் தொலைபேசி,நேற்று மதியம் அவர் மறைந்து விட்டார் என்ற தகவலைச் சொன்னான்

என் இசை ஆர்வத்துக்குத் துணை நின்ற இன்னொருவரும் மறைந்தார்.,

என் காதுகளில் இப்போது ஒலிப்பது முகாரியும்,சுபபந்துவராளியும் மட்டுமே!