தொடரும் தோழர்கள்

அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2022

கண்ணன் என்னும் ஆனந்தம்

 

கிருஷ்ணன் என்றாலே ஆனந்தம்தான்.

அது அனுபவித்தால்தான் புரியும்.

கிருஷ்ணா விழிப்புணர்வின்,கிருஷ்ணானுபவத்தின் ஆனந்தமே அலாதி

1993 என நினைவு.

மதுராவில் வங்கி ஆய்வு தொடர்பாக ஒரு மாதம் இருக்க நேர்ந்தது.

சில நாட்களிலேயே நான் என்னுள் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன்.

சாதாரணமாகப் பல நேரங்களில்.தனியாக இருக்கும்போது கூட எதன்/எவர் மீதாவது கோபம்/வெறுப்பு ஆகியவை தோன்றும்.என்ன வாழ்க்கை என்ற சலிப்பு ஏற்படும்.ஆனால் அத்தகைய எதிர்மறை எண்ணங்கள் குறைந்து மனம் ஒரு வித ஆனந்ததில் லயித்தது.இங்கு மகிழ்ச்சி என்று நான் சொல்லவில்லை.அது ஏனோ ஆனந்தம் என்பதே பொருத்தமாக இருக்கிறது.யாரைப் பார்த்தாலும் ஒரு நட்புணர்வு,நல்லெண்ணமே மேலிட்டது.

இதன் விளைவுதான் கிருஷ்ணன் பழகிய பல ஊர்களைப் பார்க்கும் ஆவல் மேலோங்கியது.ஒரு ஞாயிறன்று அதி காலை புறப்பட்டேன்.

 

கோகுல்,கோவர்த்தன், நந்தகாவ், பல்தேவ்,பர்சானா(ராதாவின் பிறப்பிடம்) என்று கண்ணனுடன் தொடர்புடைய பல ஊர்களுக்குச்  சென்று முழுமையான கிருஷ்ணானுபவத்தில் அமிழ்ந்தேன்.

 காலை உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்தாலும்,கண்ணனே என்னை ஆட்கொண்டிருந்ததால் பசியை உணரவில்லை

 

பிற்பகல் 3 மணிக்கு மதுரா திரும்பினேன்.அப்போதுதான் கண்ணன் என்னைப் பசியை உணர வைத்தான்.கோவில் அருகிலேயே ஒரு உணவகம். தரைமீது அமர்ந்து ஒரு பலகை மீது தட்டு வைத்து சுவையான சாப்பாடு.வயிறு புடைக்க உண்டேன்.

கிருஷ்ணானுபவத்தின் மற்றொரு நிகழ்வு எனது “பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்” (http://chennaipithan.blogspot.com/2013/03/blog-post_19.html )என்ற பதிவில்.

 

முடிக்கும்முன்…..

அலமாரியைத் திறந்து சட்டை எடுக்கும்போது,மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சட்டையைப் பார்த்தேன்.எவ்வளவு பிரியமுடன் வாங்கிய சட்டை?எத்தனை முறை விருப்பமாக அணிந்த சட்டை?இப்போது மூலையில்….

 

இதைத்தான் கண்ணன் சொல்கிறான்….

”வாஸாம்ஸீ ஜீர்ணானி யதா விஹாய

          நவாநி கிருஹ்ணாதி நரோபராணி

ததா சரீராணி விஹாய ஜீர்ணானி

           அந்யாநி ஸம்யாதி நவானி தேஹீ”

 

எப்படி மனிதன் நைந்துபோன பழைய உடைகளை நீத்து விட்டு,புதிய உடைகளை அணிகிறானோ,அவ்வாறே ஆத்மா நைந்துபோன பழைய உடல்களை நீத்து விட்டுப் புதிய உடைகளை அணிகிறது

ஆத்மா அழிவற்றது.

கண்ணனை வணங்குகிறேன்.

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

காக்கா முட்டை-கிளியோபாட்ரா !


அண்ணா சாலை, மவுண்ட் ரோடாக இருந்த போது ஒரு பெரிய லேண்ட் மார்க்  சபைஃயர்
அரங்கம். பஸ்ஸில் போகும் போது கூட பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். ஆனந்த்திற்குப்
பிறகு வந்த 70mm அரங்கு. 1964-65ல் சபைஃயர் ஆரம்பிக்கும் முன் நிர்வாகிகள், கிளியோ பாட்ரா, சவுத் பேசிபிக், கேன்கேன் என்ற மூன்று படங்களுள் எதைத் திரையிடுவது என்று பொது மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். கிளியோபாட்ரா பெரும்பான் மையான வாக்குகளை பெற்று முதலில் திரையிடப்பட்டது. (R.K. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலைப் போல) ஆங்கிலத்தில் வெள்ளிவிழா கொண்டாடிய வெகு சில படங்களில் இதுவும் ஒன்று.

அப்பொழுது எனக்கு வயது 15 தான். அடல்ட்ஸ் ஒன்லி படங்களுக்கு வயது வராதவர்கள் நுழைவது எளிதல்ல. டிக்கெட் வாங்கியும் உள்ளே அனுமதிக்கப் படவில்லை .பிறகு, கல்லூரி முடிந்து வேலையில்லாமல் இருந்த போது சபைஃயரில் மீண்டும் ஒரு முறை திரையிடப்பட்ட எகிப்து ராணியை காணச் சென்ற போது கையில் இரண்டு ரூபாய் முப்பத்தைந்து காசுகள் தான் இருந்தது.திருவல்லிக்கேணியிலிருந்து சபைஃயர்க்கு 15 பைசா பஸ் டிக்கெட் கையில் மிஞ்சியது ரூ.2.20/- கீழ் மட்ட டிக்கெட் ரூ.1.80/-. எனக்கு முந்தியவருடன் ரூ.1.80/- டிக்கெட் காலி. அடுத்த வகுப்பு ரூ.2.25/- காசு கையிலிருந்த ரூ.2.20/-ஐ நீட்டினால்ஐந்து காசு எங்கே என்று கேட்டு, கவுண்டரில் இருந்து பணம் வாபஸ். தெரிந்த மூஞ்சிகள் எவும்தென்படவில்லை. “Age cannot wither nor customs stale her infinite variety” என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளை அசைபோட்டுக் கொண்டு நடந்தே வீடு திரும்பினேன்.

1975ல் இன்னொரு முறை அதே திரையரங்கில் கிளியோபாட்ரா திரையிடப்பட்டது. நல்ல வேலையில் இருந்த நான் ரூ.25/- கொடுத்து சோபா சர்கிள் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தேன். சோபா சர்கிள் மனதை சொக்க வைத்தது. மனதில் எதிர்பார்ப் போடு சென்ற என்னை படத்தின் காட்சிகள் திருப்திபடுத்தவில்லை. ரெக்ஸ் ஹாரிஸன் களைப்பாக்கினார்.

ஷேக்ஸ்பியர் என் மனதில் தீட்டிய கிளியோபாட்ராவின் வடிவத்தை எலிசபத் டெய்லர் தனது நடிப்பாற்றலால் வெளிக்கொண்டு வர முடியாத மாதிரி நான் எண்ணினேன். ஆறு மணிக்கு தியேட்டர் சிப்பந்தி வந்து எழுப்பி விட்ட பிறகு அரங்கத்தை விட்டு வெளியேறினேன்,

“கஷ்டப்பட்டு பணம் சேமித்து பிட்சா சாப்பிட்ட காக்கா முட்டை சகோதரர்கள் அனுபவத் தைப் போல”

(அனுபவ ஆக்கம் :நண்பர் பார்த்தசாரதி;)


புதன், ஜூன் 03, 2015

சத்திய சாயி பாபாவும் நானும்,



இது ஒரு சத்தியசோதனை போல்தான்.

எழுதுவது என்று வந்து விட்டால் எல்லாம் எழுத வேண்டியதுதான்.

சாமியார்கள் பற்றிய என் அனுபவங்களை எழுதிய பின் என் மீதான உங்கள் பார்வை  இதைப் படித்த பின் மாறலாம்.ஆனால் உண்மையான அனுபவங்களைப் பகிர்வது என்று வந்தபின்   சிலவற்றை மறைக்க முடியுமா?

அனுபவங்கள் மாறுபட்டவை.

மனிதர்க்கு மனிதர் மாறக்கூடியவை.

இங்கு எனது இரு வித்தியாசமான அனுபவங்களைப் பகிர்கிறேன்.

வியாழன், மே 28, 2015

லாட்ஜில் ஒரு ரெய்டு!



”டக் டக் டக்”

கதவு தட்டப்பட்டது

மீண்டும்..மீண்டும்..

நாராயணனுக்கு விழிப்பு வந்து விட்டது.

கடிகாரத்தைப் பார்த்தான்.

மணி 12.10

இந்த நேரத்தில் யார்?

அந்த லாட்ஜில் வழக்கமாக நடக்கும் அந்த செயல்களை அறிந்திருந்தாலும்,பார்த்திருந்தாலும் இன்று வரை அதனால் அவர்களுக்குப் பாதிப்பு இல்லை.

இப்போது ஏதாவது?

கதவு மீண்டும்...

அறைத் தோழனும் எழுந்து விட்டான்.

நாணா கதவைத் திறந்தான்

உள்ளே நுழைந்தவர் ஒரு போலிஸ் அதிகாரி.

”நீங்கள்தான் சந்திரசேகரனா?”கேட்டார்

“இல்லை.நான் நாராயணன்.”

” அவர்தானா” என்றார் தோழனைக்காட்டி

”அவர் வெங்கட்ராமன்,சந்திரசேகரன் ஊருக்குப் போயிருக்கிறார்”

அந்த அதிகாரி அறிமுகம் செய்து கொண்டார்”நான் வேணுகோபால்,ஐ.பி.எஸ்.உதவிக் கண் காணிப்பாளர்.சந்திரசேகரன் அவர் நண்பரிடம் சொன்ன தகவலின் அடிப்படையில்தான் இன்று ரெய்டு வந்தோம்.மிக மோசமான லாட்ஜ் ஆக இருக்கிறதே,இங்கு ஏன் வசிக்கிறீர்கள்?விரைவில் எங்காவது மாறிப் போய்விடுங்கள்.சந்திரசேகரன் வந்ததும் சொல்லுங்கள்”

அவர் போய் விட்டார்.நண்பர்கள் இருவரும் பயத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.
என்ன பண்னித் தொலைத்திருக்கிறான் இந்தச் சந்துரு.?பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கூடாதோ?வேண்டாத வம்பு.

ஒரு ஃப்ளாஷ் பேக்.....

சில நாட்களுக்கு முன்.

சந்திரசேகரனின் வகுப்புத்தோழனான குமார் ஐபிஎஸ்,அந்த ஊரில் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சியில் இருந்தவன்,அவனைப் பார்க்க வந்தான்.அப்போது சந்திரசேகரன் அவனிடம் அந்த லாட்ஜில் தடையின்றி நடக்கும் தொழில் பற்றிக் கூறி விட்டான்

அவன்  உதவிக்கண்காணிப்பாளரிடம் சொல்ல அதன் விளைவே இந்த ரெய்டு.

இப்போது,அறைக்குள்ளிருந்தவாறு பார்த்தார்கள் நண்பர்கள்.

சில பெண்களையும் ஆண்களையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

கதவைச் சாத்திக் கொண்டு படுத்த இருவருக்கும் உறக்கமே வரவில்லை.

மறுநாள் காலை.காலை 5 மணியளவில் ஊரிலிருந்து திரும்பி லாட்ஜை அடைந்தான் சந்திரசேகரன்.

அவனைப் பார்த்ததும் வரவேற்பு மேசையில் இருந்த மேலாளர் சொன்னார்”சார். உங்களுக் கெல்லாம்  இந்த லாட்ஜ் சரிப்படாது.சீக்கிரம் காலி பண்ணிடுங்க”அவர் சொற்களில் ஒரு மரியாதை,பயம்,வெறுப்பு எல்லாம் கலந்திருப்பதாகத் தோன்றியது

“என்ன சார் திடீர்னு?”

”போயிடுங்க.ரெண்டு பேருக்கும் பிரச்சினையில்லை.உங்க அறைத்தோழர்கள் கிட்ட சொல்லணும்னு இருந்தேன்.நீங்க வந்துட்டீங்க. அவங்க கிட்ட சொல்லுங்க.”

அதற்கு மேல் பேச அவர் விருப்படவில்லை என்பது தெரிந்தது.

அறையை அடைந்தான் சேகர்.கதவைத் தட்டினான்.

திறந்த நண்பர்கள் நடந்ததையெல்லாம் கூறினார்கள்.

அன்று மாலை ஊரெங்கும் சுற்றி ஒரு வீட்டு மாடியில் இருந்த ,வாடகை அதிகமான ,அறையை முடிவு செய்தனர்.

இரு நாட்களில் அங்கு மாறினர்.

அதன் பின் சுவாரஸ்யமான காட்சிகள் காணக்கிடைக்கவில்லை!

(நிகழ்வுகள் அனைத்தும் உண்மை.காவல்துறை அதிகார்களின் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.பயிற்சியில் இருந்த அதிகாரி,நேர்மையின் இலக்கணமானவர், பிற்காலத்தில் மிக உயர்ந்த பதவியை அடைந்தார்)

புதன், மார்ச் 25, 2015

கொலம்பஸ்.கொலம்பஸ்,விட்டாச்சு லீவு!



//அக்கரையில் தாயாய் என்னைப்பெற்றவள்!
இக்கரையில் என்னைத் தாயாய்ப் பெற்றவள்!
தலைமுறைப் புரிதல்களுக்கிடையில்
தடுமாறுகின்றன உறவுகள்!
கரைகளை இணைக்கும்
கவின்மிகுபாலமாய் இடையில் நான்!

நேற்று பாலமாயிருந்தவள்தான்
இன்று அக்கரையேகியுள்ளாள்…
ஏனோ அதை மறந்துபோனாள்!
இன்று இக்கரையானவளே
நாளை பாலமாகுவாள்…
பாவம் அதை அவள் அறியாள்!

இற்றுப்போகா வரம்பெற்றுவந்த பாலங்களால்
இறுக்கமாகும் இடைவெளிகள் யாவும்
இன்னும் பல தலைமுறைகள் கடந்தும்!//


இன்று முகநூலில் நான் படித்து ரசித்த திருமதி கீதா மதிவாணன் அவர்களின் கவிதை.
இரு தலைமுறைகளின் இடைவெளி நிரப்ப இடையில் உள்ள தலைமுறை பாலமாவதைப் பற்றி எழுதியிருக்கிறார்.

வெள்ளி, அக்டோபர் 04, 2013

உதிரிப் பூக்கள்.!



1966-67 என்று நினைவு.
பட்டமேற்படிப்பு முடித்துவிட்டு தற்காலிகமாக திருச்சியில் பணி புரிந்து வந்த நேரம்.
வாரநாட்களில் திருச்சி.சனி,ஞாயிறுகளில் என் அண்ணா பணிபுரிந்து வந்த,குடும்பத்துடன் வசித்த, கரூர்.
அந்தச் சமயத்தில்தான் ஒரு படம் வெளியானது.
ஒரு நடிகை அதில் அறிமுகம் செய்யப்பட்டார்.
சுவரொட்டிகளில் அவரது படத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்;
எனக்குத் தெரிந்த முகமாக இருந்தது.
உறுதி செய்து கொள்வதற்காகப் படத்துக்குப் போனேன்.
அதே அழகிய பெண்தான்.
என் விவேகானந்தா கல்லூரி விடுதி வாழ்க்கை நாட்களில் பல நாட்கள்,மயிலை கபாலி கோவிலில் என்னைக் கவர்ந்த அதே பெண்தான்.
சமீபத்தில் அப்படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்ததும் கபாலி கோவில் நாட்கள் நினைவுக்கு வந்தன!
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
.....................................................
இன்று ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
கேரளாவில் அவரது ஒரு  அனுபவத்தைப் பற்றிச் சொன்னார்
ஒரு முறை ஒரு பலாப்பழம் வாங்கி அதை பேருந்து நிறுத்தகம் வரை எடுத்து வர ஒருவனைக் கேட்டார்.அவன் 4 ரூபாய் கூலி கேட்டான்
நண்பர் சம்மதிக்க அவன் எடுத்து வந்தவன்,பாதி தூரம் வந்ததும்,மிகக் கனமாக இருப்பதால் தூக்க முடியவில்லை எனவும்.இன்னும் இரண்ரு ரூபாய் வேண்டும் எனவும் கேட்க, அவர் சம்மதித்தார்.
சிறிது தூரம் சென்றது,மிகவும் கஷ்டமாக இருப்பதால் கடைசி வரை எடுத்து வர இன்னும் 4 ரூபாய் வேண்டும் என கேட்டானாம்.
நண்பர் சொன்னார்”சக்கை விலையே பத்து ரூபாய்தான்;அதனால் நீயே அதை வச்சுக்கோ!”
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சக்கை என்று அவர் சொன்னதும் நான் குமரி மாவட்டத்தில் சில மாதங்கள் பணி புரிந்த ஒரு ஊர் நினைவுக்கு வந்தது.
முளகுமூடு என்பது ஊரின் பெயர்.
அந்த ஊர் பலாப்பழம் மிகப் பிரசித்தம்.
அங்கு நான் இருந்ததே ஒன்பது மாதங்கள்தான்.
மிக முயற்சி எடுத்து வேறு ஊருக்கு மாறுதல் பெற்றுச் சென்று விட்டேன்.
நகரவாழ்க்கைக்குப் பழகிப்போன ஒருவனுக்குக் கிராமம் எப்படிப் பிடிக்கும்?
ஆனால் யோசித்துப் பார்க்கையில் அந்தச் சூழலும் அமைதியும் வேறு எங்கு கிடைக்கும்?!
.............................................................
லிமெரிக் எழுதி ரொம்ப நாளாச்சு! இதோ ஒரு லிமெரிக்!
.......................................................
அழகான பொண்ணு அந்த ராணி
அவன் முன்னால் நின்னா நாணி
அவ கையில ஒரு தூக்கு வாளி
அதில் நெறைய பருப்புப் போளி
சொன்னா அவ நீதான் செய்யணும் போணி!
.............................

செவ்வாய், மார்ச் 26, 2013

ஒரு நாடகம் தொடங்குகிறது!



முன்பெல்லாம் நாடகம் தொடங்குமுன் திரைக்குப் பின் பூசை முடிந்து ஒரு பாட்டுப் பாடுவார்கள். அந்தப் பாட்டு முடிந்தவுடன் ஒரு மணி அடிக்க ,திரை தூக்கப்பட்டு முதல் காட்சி துவங்கும். இப்போதெல்லாம் அந்த வழக்கம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நான் சிவகாசி பள்ளியில் நடித்து,மன்னிக்கவும், படித்துக் கொண்டிருந்தபோது பள்ளி நாடகங்களில் நடித்திருக்கிறேன்.அந்த அனுபவம் பற்றி அறிய இந்தப் பதிவைப் பாருங்கள்!

எங்கள் நாடகம் தொடங்குமுன் பாடப்படும் பாடல் இன்னும் மறக்கவில்லை.தமிழ்மொழியின் சிறப்பைக்கூறும் அழகான பாடல்;அதன் காரணமாகவே என் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்

இதோ அந்தப் பாடல்........

”கன்னித் தமிழ் மொழியே!கலையுலகம் அதிர
முரசெழும் ஒலியே-(கன்னி---)

குறுமுனி அருள் தமிழ்க் குமரி என் தாயே
குறள் மறையால் உலகாள்பவள் நீயே!
கொடுமையாவும் நீங்க,சாந்த குணமும் யாவும் ஓங்க,வா,வா-(கன்னி--)

பண்ணியல் நாடகப் பரவசமருளே,
பலகலையிலுமுயர் நவரசப் பொருளே
பரத கதகளி மணிப்புரியும் பாராளுமோர் வகை செய்யும்-

கன்னித் தமிழ் மொழியே!கன்னித் தமிழ் மொழியே!கன்னித் தமிழ் மொழியே!”

இதைப் பாடியே இணைத்திருப்பேன்!

அவ்வாறு செய்யாததற்கு இரு காரணங்கள்......

1)பாடலைப் பாடி எப்படி இணைப்பது என்று எனக்குத் தெரியாது.

2)உங்களுக்குத் துன்பம் தர நான் விரும்பவில்லை!



சரிதானே!!.......:))

திங்கள், மார்ச் 25, 2013

வாழ்க்கை கேள்வித்தாளா?கழிப்பறைத்தாளா?



”நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்” இதற்கு வழி என்ன? கேட்டேன்

ஞானி சொன்னார்”உன் கேள்வியில் இருக்கும் ”நான்” என்பதை எடுத்து விடு!அடுத்து  நீ சொன்ன ”விருப்பம்”என்பதை எடுத்து விடு.எஞ்சியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பது மட்டும்தான்!”

ஆம்!முதலில் அகந்தை அகல வேண்டும்;பின் ஆசை அகல வேண்டும்;மகிழ்ச்சி தானே வரும்!  

......................................................................
 

தேவைப்படும்போது மட்டுமே பிறர் நம்மைப் பற்றி நினைக்கிறார்களே என வருத்தப் பட வேண்டாம்;இருட்டில் இருக்கும் போது ஒரு மெழுகுவர்த்தியின் நினைவு வருவது போல் அது எனப் பெருமை அடையுங்கள்

....................................................................
 
சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில் உபயோகித்தோம்.பெரியவர்களாக ஆனபின் பேனா உபயோகிக்கிறோம்.ஏன் தெரியுமா? 

சிறுவயதில் செய்யும் தவறுகளை அழிக்க முடியும். 

ஆனால் வயதான பின்னரோ?!

..................................................................
 
நேற்று என்பது குப்பைத் தாள்
இன்று என்பது செய்தித் தாள்;
நாளை என்பது கேள்வித்தாள்
கவனமாகப் படியுங்கள்.
சிந்தித்து விடை அளியுங்கள்
இல்லையென்றால் வாழ்க்கை
கழிப்பறைத் தாளாகி விடும்!

................................................................
 
பிறந்த நாள் என்பது என்ன?
வாழ்க்கையில் ஒரே ஒரு நாள்,
நீங்கள் அழுதபோது
உங்கள் தாய் சிரித்த நாள்!—(டாக்டர் அப்துல் கலாம்)

.....................................................................
ஒருவரால் கவரப்படுவதற்கு ஒரு மணித்துளி போதும்
ஒருவரைப் பிடிக்க ஒரு மணி நேரம் போதும்
ஒருவரைக் காதலிக்க ஒரு நாள் போதும்
ஒருவரை மறக்க ஒரு வாழ்நாள் போதாது!